Sunday, October 1, 2017

குளித்தலை நவீன தேசிய நீர்வழிச் சாலை ஆலோசனைக் கூட்டம்: கவிஞர் தணிகை

குளித்தலை நவீன தேசிய நீர்வழிச் சாலை ஆலோசனைக் கூட்டம்: கவிஞர் தணிகை


விடியல் குகன் வேண்டுகோளுக்கு இணங்கி சேலம் மாவட்டத்திலிருந்து வழக்கறிஞர் மணி வண்ணன்,திரு அண்ணாதுரை, திரு சந்திரகுமார் ஆகியோருடன் குளித்தலையில் 30.09.17ல் நடைபெற்ற நவீன தேசிய நீர்வழிச்சாலை ஆலோசனைக் கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு சுமார் 4.15 மணியளவில் சென்று சேர்ந்தோம்.

பொறியாளர் ஏ.சி.காமராஜ் பி.ஈ அவர்கள் அந்தக்  கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கவுரையாற்றுவார் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வே முதன்மையாகவும் நிர்வாகிகள் தங்களது ஐயப்பாடுகளை அவர்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்றும் இருந்ததால் நான் என்னுடன் எந்தவித ஆலோசனைக் குறிப்புகளையும் எடுத்துச் செல்லவில்லை. மாறாக எனது நூலில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த நதி நீர் இணைப்பு பற்றிய கவிதையை க் கூட படித்துக் காட்டவில்லை, மேலும் கங்கை காவிரி இணைப்பு காலத்தின் கட்டாயம் என்ற சிறு கட்டுரைத் தொகுப்பையும் எடுத்துச் செல்லவில்லை ஏன் எனில் எதையும் எடுத்துச் சொல்லப்போவதில்லை என்றே எண்ணியிருந்தேன் மேலும் அவர்களிடம் இருந்து கேட்டுக் கொண்டு வரவே சென்றேன். அங்கு தோழர் போஸ் என்றவர் பாட முயன்ற மனுசங்கடா நாங்க மனுசங்கடா பாடலை எழுதிய இன்குலாப் என்கிற சாகுல் அமீது என்ற கவிஞர் தலைமையில் நான் கவிதை பாடிய கவியரங்கம் பற்றிய குறிப்பைக் கூடக் குறிப்பிடவில்லை.
அந்தக் காலத்தில் கிளியிடம் உயிர் இருக்கிறது அதற்கு ஏழு கடல் ஏழுமலை தாண்டி செல்ல வேண்டும் என்று கதை சொல்வார்களே அது போல முதல்வர்  நிகழ்வு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கருப்பூர் பொறியயல் கல்லூரிக் கூட்ட ஜனநெரிசல், வாகன முடக்கம், சலசலப்புகள் யாவற்றையும் மீறி மீதி ஒரு ரூபாய் சில்லறை தராத நடத்துனர், ஆகியோருடன் சேலம் பேருந்து நிலையம் அடையும் முன்னே வழக்கறிஞர் மணிவண்ணன் அவருடைய காரில் தான் செல்வதாக ஏற்பாடு என்னை பழைய பேருந்து நிலையம் வள்ளுவர் சிலை அருகே வந்து விடச் சொன்னார்.

அதுவே டவுன் பஸ்ஸில் ஏறி செல்வது பெரும் முயற்சியாக இருந்த காரணம் ஏது எனில் அது போன்ற பேருந்து பயணங்களில் நிறைய பணம் பர்ஸ் எல்லாம் இழந்திருக்கிறேன் என்பதால் கூட்ட நெரிசல் அவ்வளவாக ஒப்புவது இல்லாத எனக்கு கூட்டத்தை மேடையில் நின்று வழி நடத்துவதாயிருந்தால் பிடித்துப் போன எனக்கு ஜனஞ்சேராதவன் என்ற பழியும் உண்டு. தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற சாதியைச் சேர்ந்தவன் என்பதால்.

சரி விடுங்கள் காரில் குறித்த நேரத்துக்கு சென்று விட்டோம். நண்பர் விடியல் குகனைப் பார்த்ததும் பட்ட பயணக் கஷ்டம் பறந்து போனது. வரவேண்டிய பொறியாளர் ஏ.சி.காமராஜ் அவர்கள் மதுரையிலிருந்து வந்தவர்  தெரிந்தோ தெரியாமலோ குளித்தலைக்கு வராமல் திருச்சி வரை சென்று 2 மணி நேரம் தாமதாமக வந்து சேர்ந்தார் குளித்தலைக் கூட்டத்துக்கு.

வயது 80க்கும் மேல் ஆகியிருந்தும் உற்சாகம் குன்றாமல் பொதுச்சேவையில் ஈடுபடுவதற்கு அவரை வாழ்த்தினேன். எனது "முன்னோரின் முன் மொழிகளும் தணிகையின் மணி மொழிகளும்" நூலைச் சந்திப்பின் நினைவுப்பரிசாக அளித்தேன். அவர் என்னை எழுதச் சொல்லி எனது கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டார். எனது அறிமுகத்துடன் கலாம் எனக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்து வியந்தார்.

 அவர் வருவதற்கு முன்பே அனைவரும் பேசுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டனர் எப்போதும் எனக்கு நேரம் சரியாக கிடைக்காது. அன்று முதலிலேயே எனது பேரை அழைத்து மேடையிலும் அமரச் செய்தனர். பேசவும் சொன்னார்கள். நண்பர் விடியல் குகன் அவர்கள் அந்த நிகழ்வு நடந்த கிராமியம் என்னும் தன்னார்வ நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் என்னை நன்றாகப் பேசுவார் என்று அறிமுகப்படுத்தி வைத்துவிட்டார்.

நான் அனைவருக்கும் வழி விட்டு சில மணித்துளிகள் மட்டும் பேசிவிட்டு ஏ.சி காமராஜ் அவர்களின் திட்ட விளக்கவுரையை உங்களைப் போலவே நானும் கவனிக்க வந்துள்ளேன் ஒரு எழுதப்படாத சிறு கரும்பலகையாக என் மூளையும் மனமும் இருக்கிறது. இளமையும், புத்துணர்வும், அறியாத இது என்ன அது எப்படி எனக் கேட்டறியும் குழந்தை மனப்பான்மையுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
அனைவரும் அவரவர் கருத்துகளை அவரவர் அறிந்தவரை பகிர்ந்து கொண்டனர்.எதிர்பார்த்த அளவு பொறியாளர் ஏதும் அதிகம் பேசவில்லை. ஏற்கெனவே அவரது ஒளிக்காட்சியில் கண்ட மேலை நாட்டில் குளியலறையில் வரும் நீரே 99.5% தூய்மையானது என்ற தகவலைத் தந்தார். மேலும் மதுரையில் ஒரு குளம் தூர் வாரப்பட்டு பயன்படுதலையும், அதற்கு அரசுப்பணியாளரின் ஒத்துழையாமையும் அனுமதி பெறுவதில் இருந்த சிக்கலையும் சொல்லி கடைசியில் மாவட்ட ஆட்சியர் அந்தப் பணியில் இணைந்து செய்தமையும் குறிப்பிட்டார்.

மற்றபடி நாசா போன்றா உச்ச அறிவியல் தகவல்களின் படி நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் அமைந்தமை பற்றி தனியே கலந்துரையாடும்போது குறிப்பிட்டார்.அவரது சுருக்கமான உரை முடிந்ததும் ஒரு கலந்துரையாடல் , நேரம் ஒதுக்கப்படும் என்று இருந்த எமக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வண்ணம் நன்றியுரை செய்து கூட்டத்தை முடித்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் மடிபவரல்லவே நாம். நேரம் கொடுக்கவில்லை எனில் நேரத்தை நாமே எடுத்துக் கொள்ள வேண்டியவரல்லவா நாம்...

ஒரு நண்பர் இந்தத் திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் அவ்வளவு சுபமாக அமையாதே எனக் கேட்டார் அதெல்லாம் எப்படி என...இல்லை இல்லை அதெல்லாம் கிடைக்கும் என்றார் பதிலாக....ஆனால் களப்பணியிலேயே காலமெல்லாம் கழித்துக் கொண்டிருக்கும் எம் போன்றோருக்கு அந்த பதில் உடன்பாடாய் இல்லை.

அடுத்து பங்கு, முதலீடு என்ற பேச்சுகள் உலாவின...அவை எம்மட்டில் அவர்களுக்கு பயனளிக்கும் என்று அறிய முடியவில்லை.

நான் எனது பங்குக்கு அவரை அவரது முயற்சியை பாராட்டிவிட்டு நன்றி சொல்லி வணக்கம் தெரிவித்து விட்டு அந்தக் கே ( நேரு காலத்திய காமராஜ் ப்ளான்) பிளான் போல இந்த கே பிளானும் வெற்றி பெற வாழ்த்தி விட்டு எனது சந்தேகமாய்: இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் இதன் கட்டுப்பாடு, நிர்வாகம் ஆகியவை எவரிடம் எங்கு இருக்கும், என்றும், நதி நீர் இணைப்பு மற்றும் நீர்வழிச்சாலை வேறுபாடு பற்றிய தெளிவான கருத்துகள் இன்னும் கிராமங்களை எட்டவில்லை அதை எப்படி செய்வீர் என்றும்,மோடி ,நிதின் கட்காரி எல்லாம் எந்நிலையில் இருக்கிறார் என்றும், மாநிலம் அல்லது மத்திய அரசு அதை எப்படி நிர்வாகம் செய்யப்போகிறது இப்போது உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காதது போலவா என்றும், இதை ஒரு பேரியக்கமாக மாற்ற வேண்டிய அவசியம் உண்டு அதற்கு நமது காந்தியார் போன்ற பணியினைக் குறிப்பிட்டேன். இது நடந்தால் உண்மையிலேயே இது ஒரு இந்தியாவுக்கு இரண்டாம் பொருளாதாரச் சுதந்திரத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் பரவலாகக் குறிப்பிட்டேன்.

மத்திய அரசுதான் இதன் கட்டுப்பாட்டு நிர்வாகம் என்ற ஒரு சென்னை இளைஞரின் கருத்து கிடைத்தாலும், பொறியாளர் இந்த திட்டத்தின் நாயகரிடம் இருந்து சந்தேகங்களை விளக்கும் வண்ணம் நேரடியான பதில் ஏதும் வரவில்லை.

எது எப்படி ஆயினும் அரசு என்னும் எந்திரம் இயக்கப்படாதவரை அது மக்களுக்கான மாறுதலைக் கொண்டுவரும் சக்தியாக மாறாதிருக்கும்போது அவற்றை யாவற்றையும் தூக்கி எறியப்படாமல் இருக்கும் வரை இந்தப் பெரியவர் மீதமாகும் விரயமாகும் நீரைத்தான் நாம் நீர்வழிச்சாலையில் ஏற்படுத்தி எங்கு தேவைப்படுகிறதோ அங்கு கிரிட் நீர்வழிச்சாலையாக பயன்படுத்தப் போகிறோம் என்றெல்லாம் சொல்லி வருவது வெற்றி பெறும் திட்டமாக இல்லை. மேலும் அதற்காக இந்த நல்ல முயற்சிக்கு நாம் துணையாக இருக்க வேண்டும் என எண்ணும் நண்பர்களுடன் நான் என்னால் முடிந்தளவு ஒத்துழைக்காமலும் இருக்கப் போவதில்லை.

காலப்போக்கில் குறைகள் நிவர்த்தி செய்யப்படலாம்....

ஆனால் கருத்தொருமித்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

இதை விட மிக உயரமான மலை எல்லாம் கடந்து உலக அறிவியல் ஐரோப்பாவிலும்  அமெரிக்காவிலும் மிசிசிப்பி நதியையும் இணைத்திருக்கிறது என்ற செய்திகளை எல்லாம் நாம் கடந்ததுண்டு. தக்க ஆதாரங்களுடன் மறுபடியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்

மேதா பட்கர் இன்றும் கூட மோடியை நதி நீர் இணைப்பு குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் அது பெரும்பாலும் பெரு முதலாளிகளுக்கே பயன்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளதும் அதனால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு இந்த அரசு ஏதும் மறுவாழ்வு ஆதாரங்களை செய்து கொடுக்காமல் ஏமாற்றுவது பற்றியதுமான அதிருப்தியையே தெரியப்படுத்தி உள்ளார். அது எனக்கும் சரியானதாகவே படுகிறது. அதாவது திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் ஆனால் பெருவாரியான ஏழைகள் பாதிக்கப்படாமல் அதனால் பாதிக்கப்படும் ஏழை எளியோர் வாழ்வாதரங்களுக்கு நாம் உத்தரவாதம் செய்தாகவேண்டும் மேலும் பெருமுதலாளிகளின் கைகளில் இந்தத் திட்டத்தின் பலன் தேசிய நெடுஞ்சாலை டோல் கேட் வசூல் போல ஆகிவிடவும் கூடாது. இதில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டியதும் அவசியம்தான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment