Tuesday, October 10, 2017

விசால் சாக்கோவும் கவாலி சிவாவும் நைட் வாட்ச்மேன் ராஜனும்: கவிஞர் தணிகை

விசால் சாக்கோவும் கவாலி சிவாவும் நைட் வாட்ச்மேன் ராஜனும்: கவிஞர் தணிகை


Related image

மனிதருள் எத்தனை கதைகள் ஒவ்வொருவருள்ளும் தேங்கிக் கிடக்கின்றன.நாம் எவரையும் திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டே இருக்கிறோம் காலம் அனைத்தையும் விழுங்கி நிற்க. இன்று ஒரு நாளுக்குள் தான் எப்படிப் பட்ட மனிதர்களின் அனுபவக் கதைகள். எல்லாம் உண்மை.

1. விசால் சாக்கோ என்னிடம் முகமலர்ந்து சிரித்துப் பேசும் ஒரு மருத்துவராக வேண்டிய மாணவர் 4 ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருப்பவர் தமது இருசக்கர வாகனத்தில் ஞாயிறு அன்று தேவாலயத் தொழுகை முடித்து திரும்பி வரும்போது   சேலம் கோவை நெடுஞ்சாலை மேம்பாலம்  மேல் அவரின் ஒரு நண்பரைப் பார்த்து திடீரென சடன் பிரேக்கை போட்டு நிற்க, பின்னால் வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தால் மோதி தள்ளப்பட்டு ஒரு கால் தக்க வைக்க முடியுமா முடியாதா என்ற 48 மணி நேரக் கெடுவில் இருக்கிறார்
இவர் ஊர் கேரளாவில். இப்போது இருப்பதோ கோவையில் மருத்துவ மனையில்.

இவர் தமது நீளமான ஒரு பால் பேப்பர் நோட்டை எனது டேபிள் அடியில் வைத்து விட்டு மதிய உணவுக்கு சென்று வருகையில் அந்த நோட்டை அவருக்கு எளிதில் கிடைக்காத வண்ணம் கொடுக்காமல் நான் விளையாட்டு காட்டி இருக்கிறேன். அவரை விசால் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவரா, நடிகர் சங்க செயலாளரா என்று கேலி பேசியிருக்கிறேன்.

இவர் ஏற்கெனவே இரண்டு ஆண்டுக்கும் மேல் பாதியில் படிப்பை விட்டு விட்டு இடையிலிருந்து மறுபடியும் சேர்ந்து படிப்பை தொடர்வதாகவும் செய்தி சொல்லக் கேட்டேன். படிக்கப் பிடிக்க வில்லை எனில் இளையவர்களை வற்புறுத்தவும் கூடாது. இனி மறுபடியும் இவர் படிப்பில் இவர் தேறி வரும் வரை ஒரு இடைவெளி...
இவரே செய்த தவறுக்கு வேறு யார் பொறுப்பாக முடியும் என்று இவரது சக மாணவர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

2. காலையில் எனது பள்ளியில் உடன் படித்த ராஜனைப் பார்த்தேன். இன்னும் நல்ல இளமையாக இருப்பது போல இருந்தான். எல்லாமே இந்தக்காலத்தில் முடிக்கு சாயம் போட்டுக் கொள்கிறார்கள். நான் அப்படி இல்லாததால் அதைச் சொல்ல வேண்டியதிருக்கிறது.

நைட் வாட்ச்மேன் பணியா என்றேன்...இல்லை இல்லை என்னைப் போல் 3 பேர் இருக்கிறோம். சரக்குந்து வாகனங்களை நிறுத்தும் செட் அது. வண்டி எத்தனை மணி நேரம் இருக்கிறது, எப்போது வந்தது, செல்கிறது என்று கணக்கெல்லாம் எழுதி வைக்க வேண்டும் அவ்வளவுதான் . சம்பளம் மாதமொன்றுக்கு 5000 ரூபாய் என்றார்.இவர் என்றுமே அமைதியான நல்ல பையன். என்ன செய்வது மகன் வேறு இறந்து விட்டான் 2014ல் சென்னையில் வேலையில் இருந்தவன் இதே போல தீபாவளியில் வீட்டுக்கு எல்லாம் வாங்கிக் கொண்டு சென்னையிலிருந்தே இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தவன் ஒரு விபத்தில் உயிர் விட்டு விட்டான். சுமார் 350க்கும்  மேலான கி.மீ தூரத்தை இருசக்கர வாகனத்தில் கடக்கும் துணிச்சல் மரணமாகியது... பேருந்து, ரயில் எல்லாமே நிரம்பி வழிய அனுமதிச் சீட்டு கிடைக்காததால் பயணம் ஒரேயடியாக இரு சக்கர வாகனத்துடன் நடந்து முடிந்த சோகம் இன்னும் செய்தியாக ....

3. ஆந்திராவின் கவாலி சிவாவை இப்போது மறுபடியும் பார்ப்பது 3ஆம் முறை என்று நினைக்கிறேன். மேட்டூர் வரும் பயணிகள் இரயிலில் இருவரும் சேலத்திலிருந்து வருபவர்களாக இருந்தோம். அவர் மேட்டூர் ஆர். எஸ். பகுதியில் பணியும் பணிக்காக கொடுத்த இருப்பிடத்திலும் வாழ்ந்து வரும் எம்.டெக். படித்தவர். மாத ஊதியம் முப்பதாயிரத்துக்கும் மேல் வருகிறது என்கிறார்.

ஒரு கோடியானாலும் மனதில் நிம்மதி இல்லாமல் சம்பாதித்து என்ன ஆகிவிடப்போகிறது என்கிறார். படிக்கும்போதே சூலூர்பேட்டையிலிருந்து ஒரு எம்.எஸ்.சி பிஸிக்ஸ் படித்த பெண்ணுடன் காதலாம். மணந்தால் அவரையேதான் மணப்பது என்று வீட்டில் சொன்ன கேட்ட நல்ல பெண்களை இருவரை மறுத்துவிட்டு ஒற்றைக்கால் தவமாக கொக்கு நிற்பது போல நின்று செய்து கொண்டாராம். ஆனால் இப்போது இந்த 11 மாதத்திலேயே அவருடன் வாழ்வது நரகம் என்றாகிவிட்டதாம்.

பெற்றோர் சொன்ன சொல்லைக் கேட்காமல் இந்த என் விருப்பப்படியான திருமணம் மிகப் பெரும் நிம்மதி அழிவு சக்தியாகிவிட்டது. 5 மாத கரு வேறு மனைவி வயிற்றில் மனைவியின் பெற்றோர்களே தமது பெண் சொல்வதற்குத்தான் என்னை தோப்புகரணம் போடவேண்டும் என்கிறார்கள். நான் சொல்வதை ஏதும் அவர்கள் பெண் கேட்கக் கூடாது என்றும் என்னை அவர்கள் வீட்டில் மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள், வேலைக்காரனை விட கீழாக மிதிக்கிறார்கள். படுப்பதற்கும் கூட ஒரு பாய் கூட கொடுக்க மாட்டேன் என்றும் அதைச் செய், இதைச் செய் என்று அவர்களது மகனுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் நான் அங்கிருக்கும் வரை என்னையே அவமானப்படுத்துகிறார்கள்.

அவர்கள் வட்டி லேவா தேவி செய்பவர்கள்.சாதாரணமாகப் பேசினாலே ஒரு மைல் கேட்கும். சண்டை என்றால் கேட்கவே வேண்டாம். எனது பெற்றோர் கூலி வேலைக்குப் போய் என்னை இந்த அளவு படிக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒர் ஆயிரம் ரூபாயை அனுப்பக் கூடாது என்கிறாள் மனைவி. மேலும் வங்கிக் கணக்கில் இருக்கும் மாத ஊதியப் பணத்தின் சேமிப்பு ரூபாய் 70000  தம்பிக்கு கல்யாணம் கொடுத்து விடு, கழுத்துச் செயின் போடு என்கிறாள். அதே என் தம்பிக்கு ஒரு விசேசம் என்றால் போகக் கூடாது உங்கள் வீட்டாருடன் பேசவே கூடாது என்கிறாள்.

Image result for many stories


புத்திபேதலித்து என் பெற்றோரை உறவுகளை மதிக்காமல் இந்தத் திருமணம் செய்து கொண்டதால் எவருமே எனக்கு ஒத்துழைப்பு இல்லை. இதை எல்லாம் தெரிந்து கொண்ட மாமனார், மாமியார்,மைத்துனர்,மனைவி, எல்லாம் சேர்ந்து கொண்டு என்னை படாத பாடு படுத்துகிறார்கள். இது எங்கு என்னை கொண்டுபோய் நிறுத்துமோ கடவுளே என தெலுங்கிலும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலும், சிறிது தமிழிலும் கலந்து பேசி எனது மாலையை கொஞ்சம் நடைப்பயிற்சி செய்வதையும் நடைமேடையில் தடுத்து தொடர் வண்டி மேட்டூர் வரும் வரை பேசித் தீர்த்தார். மனைவியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்துள்ளாரம். இனி என்ன நடக்கிறதோ நடக்குமோ? என்று ...பேதலிப்பு. இந்திய நாட்டு சட்டங்கள் எல்லாம் பெண்ணுக்கே சாதகமாக இருக்கிறதோ, என் போன்ற ஏழைக் குடும்பத்துக்கு அவை உதவாதோ?  என்று எல்லாம் சொன்னார்.

மாதக் கணக்கில் பெரும் செலவு செய்து மளிகை பொருட்களை எல்லாம் வாங்கி அவர்கள் அப்பா வீட்டுக்கு கொண்டு போய்க் கொடுத்து விடுகிறாள். அவர்கள் பெற்றோர் இருக்கும் வரை என்னால் வாழ முடியாது அவளுடன் இவளும் என்னை வாட்டி வதைக்கிறாள்.

எங்களுடையது காதல் திருமணம். என்றால் காதல் கோட்டை போல அதிகபட்சம் 3 ஆண்டுமே போனில் பேசியே கல்லூரிக்காலத்திலிருந்து வந்த காதல் இது இப்போது இந்தக் காதல் எவ்வளவுக் கொடுமையானது எனத் தெரிந்து கொண்டேன். வீட்டில் பெற்றோர் சொல்லியதைக் கேளாமல் மாபெரும் சேற்றுக் குழியில் விழுந்து விட்டேன் என்னை யாரால் எப்படி மீட்க முடியும் என ஒரே ஒப்பாரி... அவருக்கு என்னால் முடிந்த ஆறுதல் தர முயன்றேன். எனினும் அவர்கள் வரதட்சணை வழக்கில் உன்னை உள்ளே தள்ளி மிரட்டலாம், உன் பெற்றோர்களும் அதற்கு உடந்தை என்றும் சொல்லலாம், இலஞ்ச ஊழல் போலி போலீஸ்களும் பகலில் திரியும் வௌவால்கள் எனப்படும் நபர்களும் உன்னை நீதிமன்றம் இட்டுச் செல்லலாம் மேலும் உனது வேலையில் வருவாயில் பாதி கேட்டு வழக்கு தொடுத்து உனது வேலைக்கும் வேட்டு வைக்கலாம் எச்சரிக்கையாக இரு, மேலும் நல்ல வார்த்தைகளை சொல்லி ஆறுதல் படுத்தினேன்.

எனக்கு அவளுக்கு, அவள் வயிற்றில் வளரும் என் சிசுவுக்கு செய்வது பற்றி கவலை இல்லை. ஆனால் பாதி சம்பளம் எல்லாம்கேட்டு ரெயில்வே பணிக்கு வேட்டு வைத்தால் நான் வேலையே வேண்டாம் என விட்டு விட்டு எனது பெற்றோர்களைப் போல கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வேன்.  எனக்கு அது போதும் அவள் வேண்டுமானால் வேலையை பெற்றுக் கொள்ளட்டும் ஆனால் அதற்கு இரயில்வேயில் இடம் இல்லை. எனது குழந்தையை கருச்சிதைவு செய்துவிட்டால் அவளுக்கு ஒரு பைசாக் கூட கொடுக்க மாட்டேன் என்ற கதை எல்லாம்சொன்னார் அந்த 29 வயது இளைஞர். அவருக்கு எப்படி நல் ஆறுதல் தருவது நல் வழி காட்டுவது என பெரிதும் பாதிப்படைந்தேன்.

இப்போது இன்றைய காலை முதல் மாலை வரை என்னுள் நடந்த பாதிப்புகளை எல்லாம் வேலை நேரம் போனதே தெரியவில்லை... அதை தவிர மீதி நேரத்தில் உழன்ற செக்கிலிட்ட எண்ண அலைகள் யாவற்றையும் உங்களிடம் இட்டு விட்டு உறங்க முயன்று நாளை பணிக்கு அதிகாலை எழ விரும்புகிறேன்.

அனைவர்க்கு இயற்கை நல் வாழ்வை அமைத்து தரட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: