Saturday, October 21, 2017

சே குவாராவின் இறுதி நிமிடங்கள் : கிளையர் பூபையர், கார்டியன்

சேகுவாரா தன்னுடைய இறுதி நாள்களையும், நிமிடங்களையும் கழித்த இடங்களுக்கு கிளையர் பூபையர் என்பவர்  பயணித்து எழுதியுள்ள, கார்டியன் இதழில் வெளியான,  அனுபவக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு வடிவம் 
பத்திரிக்கை.காம் இதழில் (சே குவாராவின் 50 ஆவது நினைவு தினமான 9 அக்டோபர் 2017இல் வெளியானது).  
அதன் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.


தென் பொலிவியா. வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள், புனிதத்தலமாக மாறிய பள்ளி வகுப்பு. இந்த பள்ளி வகுப்பில்தான் உலகின் மிகப்புகழ் பெற்ற புரட்சிக்காரரான எர்னெஸ்டோ சே குவாரா 50 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் கொல்லப்பட்டார்.

அப்போது 39 வயதான, அந்த அர்ஜென்டைனா நாட்டுப் புரட்சிக்காரர் 9 அக்டோபர் 1967இல் கொல்லப்பட்ட அந்த அறை தற்போது படங்களாலும், கொடிகளாலும், செய்திகளாலும், கொடிகளாலும், வாகன உரிமங்களாலும் அஞ்சலி செலுத்த வருகின்ற பார்வையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்து லா ஹிகேரா என்ற அந்த கிராமத்திற்கு வருவோர் அதனை ஒரு யாத்திரைத் தலமாகக் கருதுகிறார்கள். (லா ஹிகேரா அருங்காட்சியகம், 8.00 மணி முதல் நடுப்பகல், மதியம் 2.00 முதல் 6.00 வரை, கட்டணம் 1 பவுண்டு).

பொலிவியப் படையினரால் சேகுவாரா பிடிக்கப்பட்ட இடத்திற்கு ரோலி கலார்சா மெனீசீஸ் என்ற பெயருடைய வழிகாட்டியுடன் நான் கிளம்பினேன். ரோலியின் தந்தை ஒரு செவிலியர் ஆவார். அவர் சமைபடா என்னுமிடத்தில் சேகுவாராவின் ஆஸ்துமாவிற்காக மருந்து கிடைக்க உதவியவர்.

லா ஹிகேராவின் வடக்கே மூன்று கிமீ தொலைவில் தொடர்ந்து கியூபிராடா டெல் சூரா பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது. அங்கிருந்து பனை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருந்த பகுதியின் வழியாக சுமார் ஒரு கிமீ நடந்து சென்றோம். அப்பகுதிதான் சேயின் தோழர்கள் அக்காலகட்டத்தில் ஒளிந்திருந்த இடமாகும். அங்கே ஒரு நினைவிடமும், பொலிவியப்படைகளால் பிடிக்கப்பட்டபோது காயப்பட்டிருந்த சே ஒளிந்திருந்த அத்தி மரமும் அங்கே இருந்தன. அவ்விடத்தில் ரோலி சில கோகோ இலைகளை சிதறவிட்டார். “சே குவாராவிற்கு நன்றி கூறுவதற்காக அவருடைய ஆன்மாவிற்கு நான் இந்த கோகோ இலைகளை அர்ப்பணிக்கிறேன்,” என்றார் அவர்.  “சே தனித்த குணமுடையவர்; அவருடைய முயற்சி தோல்வியே, இருந்தபோதிலும் அவர் தன் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். நான் இங்கிருக்கும்போது என் மனதில் ஒரு அநீதி உணர்வு கிளர்ந்தெழுகிறது. சே குவாராவின் தோழர்களை எதிர்த்து நின்றவர்கள் 500 பேர்.”
அப்பள்ளத்தாக்கினைக் கடந்து நாங்கள் உயர்ந்த இடத்தில் 17 வீடுகள் அமைந்திருந்த இடத்திற்குச் சென்றோம். சேகுவாரா பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பாதையிலேயே இப்போது நாங்கள் சென்றோம்.  அங்குள்ள அனைத்துக் கட்டடங்களிலும சேகுவாராவின் முகங்கள் காணப்படுகின்றன. வண்ணமடிக்கப்பட்ட அவ்விடத்தில் 70 வயதான இர்மா ரோசடா என்ற பெண்மணியை அவருடைய எஸ்ட்ரெல்லா ஸ்டோரில் சந்தித்தேன். அமெரிக்க உளவுப்படையால் தேடப்பட்டு, அப்பள்ளியின் அறையில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் இருந்த சேகுவாராவிற்கு கடலை சூப்பினை எடுத்துச் செல்லும்படி அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டவர் இந்த இர்மா. மதியம் 1.10 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  “அப்பப்பா. எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. செம்மறியாட்டினைப் போல பெரிய தாடி வைத்திருந்ததால் அவரை முழுதாகப் பார்க்க முடியவில்லை.”


1966இல் சேகுவாரா மாறுவேடத்தில் பொலிவியா வந்தபோது அங்கிருந்த ஒரு விடுதியில் அறை எண்.504இல் தங்கினார். தற்போதும்கூட விடுதியில் கேட்டால் அவர் தங்கியிருந்த அறையைக் காட்டுவார்கள். அனைவருடைய ஆதரவைப் பெறவும், போராளிகளைத் திரட்டவும் பொலிவியாவின் தென் பகுதயில் அவரும் அவருடைய கொரில்லாக்களும் அங்கு தங்கியிருந்து ஆயத்தம் ஆயினர்.

அவர் கொல்லப்பட்ட 50ஆம் ஆண்டினை ஒட்டி அதிகமான சேயின் ஆதரவாளர்கள் வருவாளர்கள் என்று அப்பகுதியிலுள்ள இரு விடுதிகள் எதிர்பார்க்கின்றன. அப்போது ககாட்சிகளும், விவாதங்களும் அங்கு நடத்தப்படவுள்ளன. அந்த இடங்களைப் பார்க்கச் செல்வோருக்கு உதவி செய்ய வழிகாட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேகுவாராவின் உடல் லா ஹிகேராவிற்கு வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள வல்லேகிராண்டேயிலுள்ள மருத்துவ மனைக்கு ஹெலிகாப்டர் வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. அது ஒரு சிறிய நகரம். அங்கு சேகுவாராவின் இறுதிப்பயணத் தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அப்பகுதியில் சே தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று இடங்கள் பார்க்கப்பட வேண்டியனவாகும்.  அங்குள்ள மருத்துவ மனை இன்னும் செயல்பட்டுவருகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை அப்பகுதிக்கு வழிகாட்டியோடு செல்லும் வகையில் வசதிகள் உள்ளன. 

அங்கிருந்த வழிகாட்டிகளில் ஒருவரான லியோ லினோ எங்களுடன் சேர்ந்துகொண்டார். வல்லேகிராண்டே மருத்துவ மனையின் பின் பகுதியில்தான் அடையாளம் காட்டப்படுவதற்காகவும் உலக ஊடகங்களின் பார்வைக்காகவும் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.  அங்குள்ள சுவரிலும், கழுவுமிடத்திலும் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கு மெழுகுவர்த்தியினை ஏற்றி வைப்பதாகக் கூறுகின்றனர். தம் நோய் இவ்விடத்தில் குணமடைந்துவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். உயிரற்ற கண்கள் அந்த அறையில் உள்ளோரைக் கவனிப்பது போல இருக்கும் நிலை சே குவாரா உயிரோடு இருப்பதைப் போன்ற அதிசயத்தை அம்மக்களிடம் ஏற்படுத்துகிறது.  அதுவே மக்களின் இதுபோன்ற நம்பிக்கைக்குக் காரணமாகும். அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தவர் பொலிவிய புகைப்பட நிபுணர் பிரெட்டி அல்போர்ட்டா என்பவராவார். 1968இல் கலை விமர்சகர் ஜான் பெர்கரின் இதனை இத்தாலிய நாட்டு ஓவியக்கலைஞரான ஆண்டிரியா மென்டேக்னா வரைந்த மரணித்த இயேசு என்ற ஓவியத்தோடு ஒப்பிடுகிறார்.

50 வருடங்களுக்கு முன் சேகுவாரா இறந்தபோதிலும் பொலிவியாவில் தற்போது அவருடைய பெயர் புனர்வாழ்வு பெற்றுள்ளது எனலாம். அனைவருமே சேகுவாராவை கதாநாயகராகப் பார்க்காவிட்டாலும்கூட வல்லேகிராண்டேயில் ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் அவரை நினைவுகூறும் வகையில் பல நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படுகிறது.  ஒரு நிகழ்வில் கியூபாவின் முதல் துணை ஜனாதிபதியான மீகேல் டயஸ் கேனலும் கியூபாவில் தற்போது வாழும் சேகுவாராவின் நான்கு குழந்தைகளும் கலந்துகொள்வர்.  

எங்கள் பயணத்தில் மருத்துவமனையின் முன்னாள் பிணவறையாக இருந்த இடத்திற்கு நாங்கள் நுழையும்போது ரோலி, “இங்குதான் அவர்கள் சேகுவாராவின் கைகளைத் துண்டித்தனர்” என்று முணுமுணுத்தார். கைரேகை அச்சுக்காக ஒரு மருத்துவரால் சேகுவாராவின் கைகள் வெட்டப்பட்டன. பின்னர் அவை காணாமல் போய்விட்டன. பிணவறையிலிருந்து நாங்கள் திறந்த வெளிக்கு வந்தோம். சேகுவாராவின் பொலிவியா முகாமின்போது இறந்த தோழர்களுக்காக நடப்பட்டிருந்த நினைவுக் கற்களைக் கண்டோம். 1967இல் சேகுவாராவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், விமான ஓடுதளத்தை அடுத்துள்ள இடத்தில் கடந்த அக்டோபரில், சேகுவாரா அருங்காட்சியம் என்ற புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
அந்த அருங்காட்சியகத்தில் சேகுவாரா மற்றும் அவருடைய போராட்டங்களைப் பற்றிய புகைப்படங்கள், போஸ்டர்கள், ஓவியங்கள் காணப்படுகின்றன. அதற்கு அருகில் அவருடைய உடல் இருந்த இடத்தில் கட்டப்பட்ட அடையாளப்படுத்தப்படாத கல்லறையில், 1990கள் வரை தோண்டியெடுக்கப்படாத இடத்தில், நினைவுக்கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

ரோலியிடம் நான் சேகுவாராவின் பொலிவியச் சோதனை தோற்றதற்கான காரணத்தைக் கேட்டபோது அவர்  “உள்ளூர் மக்கள் கொரில்லாக்களுக்கு உணவு வகைகளை விற்கப் பயந்தனர்.  டாலரைக் கண்டும் அவர்கள் பயந்தனர். தவிரவும் கொரில்லா எதிர்ப்பு உத்திகளுக்காக பொலிவிய படை வீரர்களுக்குப் பயிற்சி தருவதற்காக அமெரிக்கா ரால்ப் ஷெல்ட்டன் என்ற மேஜரை அனுப்பிவைத்திருந்தது.
அவர்கள் பயிற்சி பெற்ற இரண்டு வாரத்திற்குப் பின்னர் சேகுவாரா பிடிக்கப்பட்டார். பொலிவியத் தலைவர்களிடமிருந்து சேகுவாராவைக் கொல்வதற்கான ஆணை வந்தது. அவரைக் கொல்வதற்கான குறியீடு “அப்பாவிற்கு காலை வணக்கம் சொல்” என்பதாகும்.
50 வருடங்களுக்கு முன் சே இறந்தாலும் அவருடைய இருப்பை தக்க வைத்துள்ளார் ஈவா மொரேல்ஸ். சேயின் பெயர் பொலிவியாவில் எங்கும் உச்சரிக்கப்படுகிறது. : “சே, எப்போதையும்விட இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே உணரப்படுகிறார்.”

இக்கட்டுரையின் மூலக் கட்டுரை :
Revoilutionary road : On the trail of Che Guevara's last days in Bolivia, Claire Boobbyer, Guardian   

சே குவாராவின் 50ஆவது நினைவு தினத்தன்று தி இந்து இதழில் வெளியான என் மொழிபெயர்ப்புக் கட்டுரை :
என்றென்றும் நாயகன் சே குவாரா, லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ், கார்டியன்

4 comments: