Tuesday, February 23, 2016

உறங்கா இரவின் ஒரு துணைப் பாடல்,

உறங்கா இரவின் ஒரு துணைப் பாடல்,
தனிப்பாடல்
வாலும் நூலும்
அறுந்த பட்டமென
அப்படியே கீழே கிடக்கிறேன்.

மேல் காற்று அடித்துக் கொண்டுதான்
இருக்கிறது
ஆனாலும்
மேல் எழும்பவில்லை

காலம்
54 ஆண்டுகளாய்
வளர்த்(ந்)து வந்த
காலம்
கீழே அழுந்தியபடி கிடக்கிறது
அழுத்தியபடி கிடக்கிறது

மணிகள் கடக்கின்றன
விழிகள் சுரக்கின்றன

இன்னும் மூன்றில் ஒரு பங்கு
பறக்க வேண்டும்
பின் ஒரேயடியாக இறக்க வேண்டும்

ஒரேயடியாக எல்லாவற்றையும்
மறக்க வேண்டும்

ஆம் உண்மைதான்
முடியாத கதையை
யாரும் விரும்புவதில்லை

சாகாவரம் என்பது சாபம்தான்

விடியா(த) பொழுது என்று எதுவுமில்லை

விடியாத பொழுதை
ஒரு நொடி கூட விடாமல்
அளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எல்லாத் துளிகளையும்
வாழ்ந்து முடிப்பதற்கு

கரைந்து தீர்ப்பதற்கு
கரைத்து விடுவதற்கு!
  - கவிஞர் தணிகை.


மறுபடியும் பூக்கும் வரைThursday, February 18, 2016

தெறி(த்தூ!)...இன்று
நடக்கிற பாதையில்
மதுப்புட்டிகளும்
மனித நாகரீகமும்
சில்லுகளாக உடைந்து
கிடக்கின்றன...
 ‍ ‍கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை

Thursday, February 11, 2016

பரிசோதனை.

தரித்திர நராயணன்களும் சரித்திர நயகர்களும்
என்றும்
என்னுள் இருக்கிறார்கள்

என்றாலும் நான் நானாகவெ இருக்கிறேன்

புழுதிக் கால்களும் மூத்திர நெடியும்
அழுக்காடை உடலும்
சகித்துக் கொள்ளவண்டிய துர்நாற்றமும்
இன்னும் தொடரஆயிரமாயிர்ம் ஆண்டுக்ளுக்கு முன்
தமிழ் எழுதிய
கந்தையனாலும் கசக்கிக் கட்டு
கூழானாலும் குளித்துக் குடி

இன்னும் மனிதகுலத்திட‌ம்
சென்று சேரவேயில்லை‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

‍மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

பரிசோதனை.

Thursday, February 4, 2016

இன்னும் 20மாதங்களில் உலகின் மிக உயரமான கடிகார கோபுரம் இன்போஸிஸ் மைசூரில்: கவிஞர் தணிகை

இன்னும் 20மாதங்களில் உலகின் மிக உயரமான கடிகார கோபுரம் இன்போஸிஸ் மைசூரில்: கவிஞர் தணிகை.

மிக அரிய செய்தியை பகிர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் நமது மறுபடியும் பூக்கும் தளமும்  பெருமை கொள்கிறது.

உலகிலேயே மிக உயரமான தனித்து நிற்கும் கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் தனித்து நிற்கும் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
சுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் கடிகாரக் கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.
லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரக் கோபுரம் 96 மீட்டர் உயரமே உடையது என்ற நிலையில், இந்தக் கோபுரமே உலகின் மிக உயரமான தனித்து நிற்கும் பெரிய கடிகார கோபுரமாக அமையயும்.
எனினும் பிக் பென் கடிகாரத்தின் மணியோசை போன்று இந்த கடிகாரமும் ஒலி எழுப்புமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உலகம் முழுவதும் பெரும்பாலான மணிக் கூண்டுகளில் இயந்திரக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கோபுரத்தில் டிஜிட்டல் கடிகாரம் பொறுத்தப்படவுள்ளது என அந்த நிறுவனம் கூறுகிறது.
கோபுரத்தின் உச்சியில் எடையை குறைக்கும் ஒரு நடவடிக்கை இது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு பிரிவின் துணைத் தலைவர் ராமதாஸ் காமத் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
"உலகிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் பயிற்சி அமைப்பு இங்கே இருப்பதால், உலகிலேயே மிகப் பெரிய கடிகாரக் கோபுரத்தை இங்கே அமைக்க விரும்பினோம். இவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் இங்கிருக்கும்போது, குறிப்பிடத்தக்க வகையில் ஒரு கடிகாரக் கோபுரம் இருக்க வேண்டுமென்றும் விரும்பினோம். உலகம் முழுவதும் முக்கியமான பல்கலைக்கழகங்களில் அப்படித்தான் இருக்கிறது" என்றார் ராமதாஸ் காமத்.
கோதிக் பாணியில் கட்டப்படவிருக்கும் இந்தக் கோபுரம் 19 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் கூட்ட அறைகள், நூலகம், பார்வையாளர் மாடம் போன்றவையும் அமைந்திருக்கும்.
உலகின் மிகப் பெரிய பணியாளர் பயிற்சி மையம் இங்கே இருப்பதால், மிகப் பெரிய கடிகார கோபுரத்தையும் இங்கே அமைக்க விரும்பியதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
சுமார் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கோபுரம், 20 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி பகுதியாக இந்தக் கோபுரம் செய்யப்பட்டு, மைசூருவில் பொறுத்தப்படவுள்ளது.
"பாரம்பரியக் கட்டடக் கலையும் தொழில்நுட்பமும் இணைந்த கலவை அது. மேலும் டிஜிடல் கடிகாரத்தைப் பொறுத்துவதால், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அந்தக் கடிகாரத்தில் தெரியச் செய்ய முடியும். ஒரு கடிகாரத்தின் அகலம் என்பது சுமார் ஒன்பதரை மீட்டராக இருக்கும் நிலையில், சாதாரண கடிகாரமாக இருந்தால் எடை மிக அதிகமாக இருக்கும்" என்கிறார் ராமதாஸ் காமத்.
மைசூரில் 10,000 அறைகளுடன் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸின் பயிற்சி மையம் உலகின் மிகப் பெரிய தொழில்துறை பயிற்சி மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


நன்றி
வெப்துனியா
பிபிசி தமிழ்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத்தின் இறுதிச் சுற்று: கவிஞர் தணிகை

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத்தின் இறுதிச் சுற்று: கவிஞர் தணிகை
அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் போல சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத் பேர் கறுப்பு, வெள்ளை சிவப்பில் போஸ்டர்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது பற்றி முதல் சர்ச்சை

இவர் அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்கிறது என்று செய்தி ஊடகங்களில் பதிந்தது இரண்டாம் சர்ச்சை

இவர் உருவத்தைப் பார்த்தாலே இவர் வைத்திருக்கும் விபூதியும் அதனடியில் இருக்கும் சிவப்பும் நெற்றியில் ஒரு கட்சிக்காரரைப் போல இருப்பதை அறிய முடியும்.
இவரைப் போல எந்த மாவட்ட ஆட்சித் தலைவருமே (In their busy schedule) சினிமா பார்த்து சிக்கியது கிடையாது. இறுதிச் சுற்று இவருக்கு சேலம் மாவட்டமாக இருக்கும் என நம்பலாம். ஏன் எனில் இவர் ஆத்தூர் சென்று பயணியர் விடுதியில் தமது வாகனத்தை நிறுத்தி விட்டு, ஆத்தூர் நகராட்சி ஆணையர் இராமகிருஷ்ணன் என்பவரும் இருந்திருக்கிறார்.

இவர் அடையாளம் காட்டியதால்  காலைக்கதிர் நிருபர் தமிழ் செல்வன் என்பவர் தமது செல்பேசியுடன் ஒரு சாலையோரக் கடையில் காத்திருந்து இந்த செய்தியை பரப்ப முனைந்திருப்பதைக் கண்டு "நான் கலக்டர்டா,எங்கிட்டேயாடா, என மிகவும் கீழ்த் தரமான வீதிச் சண்டைக்காரர் போல மற்றவர் செல்பேசியை கொடு என பேசிக் கொண்டிருக்க இவர் அந்த நிருபரை அடித்து பிடுங்கி விட்டதாகவும், அதன் பின் அந்த நிருபர் எவ்வளவோ முயன்றும் அந்த செல்பேசி இவர் கைக்கு கிடக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மானக் கேடு என்ன வெனில் இவர் ஆளும் கட்சிக்காரர்களின் அரவணைப்பில் எப்போதும் இருப்பதால் இவரை எவரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் நடந்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் மிகவும் பிரபலமான சிறந்த நிர்வாகிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களாக கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்திருக்கிறது அதற்கு இந்நாளில் இப்படியும் ஒரு ஆட்சித் தலைவர்

கருப்பன், எம்.எஃப்.பாருக்கி போன்ற சேலத்துக்கு நிறைய நன்மைகள் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நல்ல பேரை உருவாக்கி மாவட்டத்துக்கும் நல்லது செய்தார்கள்.

இந்த முறை இந்த  மாவட்ட ஆட்சித் தலைவர் வந்த புதிதில் செல்பேசி  எண் எல்லாம் கொடுத்து சிறப்பாக பணி செய்வதாக பாவ்லா காட்டி விட்டார். அனைவரும் நம்பினோம். இவர் ஒரு நல்முகமாக விளங்குவார் என. ஆனால் இவ்வளவு கீழ்த் தரமான மாவட்ட ஆட்சித் தலைவரை பெற்றதற்காக சேலம் மாவட்டத்தில் மரியாதை உள்ள ஒவ்வொரு மனிதரும் வெட்கப்படுகிறோம்.

 தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தனிமனிதருக்கும் அகம் புறம் என வாழ்வு இருவகை.இதில் இவர் நினைத்திருந்தால் இறுதிச் சுற்று திரைப்படத்தை இவருக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் பங்களாவில் தனிப்பட்ட முறையில் பார்த்து களித்திருந்தால் இப்படி சந்தி, நாடு, ஏடு ஊடகம் யாவும் சிரித்திருக்காது

அப்படியே பொது இடத்துக்கு வந்தால் இவர் போன்றவர் எல்லாம் ஒரு பந்தா காட்டுவார் பாருங்கள் 24 மணியும் போதாது போல...அனைவரும் ,மெய் வாய் பொத்தி காத்திருக்கவேண்டும்...இவர்களை தரிசிக்க‌

இங்கிலாந்தின் அதே முறைகளில் இன்னும் இந்த நாடு கலெக்டர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த முறை எல்லாம் இனி தேவையில்லை. இந்த அமைப்பு நிர்வாக முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் நாட்டில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

இந்த ஊழல் மன்னர்களும், மந்திரி கட்சிப் பிரமுகர்களும் இணைந்துதான் நாட்டை கொள்ளை அடித்து வருகிறார்கள். அதில் இன்று நாட்டில் தமிழக அரசு சொல்லி இருக்கும் இலஞ்ச ஊழல் செய்வாரை அரசு அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என்பது இந்த ஆட்சிகளின் உச்சம், எல்லாம் எச்சம்.

இந்த மாவட்ட ஆட்சித் தலைவர்  ஒரு பத்திரிகையாளரின் செல்பேசியை பிடுங்கிக் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை திரும்பவும் கொடுக்காத இழி செயலை நமது தளம் வன்மையாக  கண்டிக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செய்தி ஆதாரம்:
webdunia
Nakkeeran publication
One India Tamil.

ரோஜா பார்க்ஸ் பிறந்த நாளில் ஆய்த எழுத்தாய் பெங்களூரு செய்தி: கவிஞர் தணிகை

ரோஜா பார்க்ஸ் பிறந்த நாளில் ஆய்த எழுத்தாய் பெங்களூரு செய்தி: கவிஞர் தணிகை
பேருந்தில் கருப்பு இனத்தவர் அமர்வதற்கு முடியாதிருந்த நிலையை அமெரிக்காவில் மாற்றிய ரோஜா பார்க்ஸ் பிறந்த தினத்தில் டான் ஜானியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைப் பற்றி அறிய நேர்ந்தது இதை எழுத வைக்கிறது.

Rosa Parks


Montgomery Bus that made Rosa Parks notable


விபத்து என்பது தவிர்க்கப்பட வேண்டியதுதான். அந்த பெங்களூருக்கு அருகே சோழன‍ஹள்ளியில் முதலில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தம்பதியரில் மனவியை கார் மோதி இறக்கச் செய்த  அந்த வெளி நாட்டு இளைஞர் மேல் நடத்திய தாக்குதல் கூட சற்று செரித்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் அதன் பிறகு அந்த வழியே சென்ற அது போன்ற நாட்டு இன மக்கள் மேல் எல்லாம் வன்முறைக் கட்டவிழ்ந்து போனதுதான் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது.

காங்கிரஸ் அரசு, பி.ஜே.பி அரசு என்ற பாகுபாடின்றி சேரும் கூட்டம் காவல் துரைகள் பார்த்த்துக் கொண்டிருக்கவே அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கிடும் முயற்சியில் துகிலுரியவும், அந்தக் காரில் வந்த அனைவரையும் அடித்துத் தாக்கவும், அந்தப் பெண்ணை பேருந்தில் ஏற விடாமல் கீழ் இறக்கி அடித்ததும்,

காக்க சென்ற அந்த நாட்டு இளைஞர் ஒருவரையும், அந்த பெண்ணுக்கு தம் சட்டையை வழங்க முயன்ற அந்த உள்ளூர் இளைஞர்  ஒருவரையும் அடித்ததும், அதன் பின் உள்ளூர் வாசிகள் 4 பேர் இவர்களை எல்லாம் காத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என சம்வங்கள்.

உள்ளூர் காவல்துறை இவர்கள் புகாரை பதியாதபோது, இவர்கள் டான் ஜானிய தூதரகமும், மேலும் பல கல்லூரி இளைஞர்களும் அழுத்தம் கொடுத்து காவல் துறை ஆணையர் அலுவலகத்தை அணுகி புகார் அளித்ததும் என செய்திகள் வளர்ந்தபடியே இருக்க ஏற்கெனவே விபத்து நடந்த கார் எரிக்கப்பட்டும் விட்டது, அந்தக் காரை  ஓட்டி வந்த இளைஞர் ஒரு வேனில் பின் பக்கம் ஏறி தப்பித்து சென்றதும் பெங்களூரு,மற்றும் கர்நாடக மக்களின் ஒழுக்கத்தை வாகன விதிகளை, அரசின் பால் அவர்களுக்கு உள்ளக்கட்டுப் பாட்டையும் நன்கு விளக்குகிறது.


காட்டுத் தர்பார் நடக்கிறது. காவல்துறை வேடிக்கை பார்த்திருக்கிறது.கர்நாடக மக்கள் இன்னும் கர்நாடகமாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் சான்றுகள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் காவிரி நீரை தமிழகத்துக்கு அரசு ஆணைப்படி அணை மதகை திறந்து விட அனுமதிக்கவே மாட்டோம் என பல முறை இவர்கள் அரசை ஆட்டியதையும் வரலாறு கண்டிருக்கிறது.வேண்டுமென்றே எவரும் காரை ஏற்றி கொல்ல மாட்டார்கள். ஆனாலும் ஒரு நாட்டிலிருந்து வந்து இன்னொரு நாட்டில் வாழும் குடிகள் எவருமே உள்ளூர் மக்களை விட உள் நாட்டு மக்களை எல்லாம் விட மிகுந்த கவனமும், எச்சரிக்கையும், உயிர்கள்பால் அக்கறையும் கொண்டு வாழ‌வேண்டிய நிர்பந்தம் அவரவர் நாட்டின் பெயரோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. காந்தியின் தென் ஆப்பிரிக்க வரலாறு இதற்கு கட்டியம் கூறும் அடிப்படை.

ரோஜா பார்க்ஸ் என்னும் அமெரிக்க கறுப்பு இன மங்கையின் பெரும் போராட்டமும் அநீதிக்கு எதிரான‌ அதன் விளைவுகளும் சரித்திரமாயின. அது போல போராட்ட முறைகளுக்கு ஒரு வடிவமைப்பு, ஒழுங்கமைவு, ஒருங்கிணைப்பு அவசியம் அப்படி இருந்தால் அது என்றுமே திகழும் மறக்க முடியா சரித்திரமாக நினைவிற் கொள்ளப்படும். விபத்தே இல்லாமல் ஒரு விபத்துமே நடக்காமல் இனி வாகன போக்குவரத்து யாவும் நடக்க வேண்டும் அதற்கான போராட்டம் முறைமைகள், நியதிகள், விதிகள் ஆகியவற்றை எல்லாம் எல்லா மக்களும் கைக்கொண்டு எதிர்காலச் சாதனைகள் புரிய வேண்டும்.

அவ்வாறில்லாமல் இது போன்ற கூட்டம் தம் விருப்பம் போல செயல்பட்டால் அங்கு அரசு ஒன்று இருப்பதே இல்லாதிருப்பது போன்றதே. அது எந்த கட்சி, எந்த மாநில ,எந்த ஆட்சி செய்யும் அரசாக இருந்தாலும் ஒன்றுதான்.

தமிழகத்தில் அம்மா சிறை சென்ற நிகழ்வின் போதும்,ஊழல் வழக்கில் தேர்தலில் நிற்க முடியாதிருந்தபோதும், ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் வெடித்து சிதறடிக்கப்பட்ட போதும் இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்த போதும், இது போன்ற வன்முறைகள் நிகழ்ந்து சட்ட ஒழுங்கு முறைகள் கேலிக்கிடமாகின.

இந்நிலையில் நாட்டின் மத்தியில் ஆளும் கட்சி தேர்தல் காலத்திய தமிழகத்தில் காலூன்ற நிறையத் திட்டமிட்டு வருகிறது. கூட்டணி முயற்சி, பிரதம மந்திரி மோடியின் பொதுக்கூட்டம், அமித் ஷாவின் திட்டங்கள் என்றெல்லாம், ஆனாலும் பிரதமரின் மேல் பூந்தொட்டி வீசப்படுவதும், கறுப்புக் கொடி காட்டும் நிகழ்வுகளும் மத்திய ஆளும்கட்சி மேல் இந்த 2 ஆண்டுக்குள்ளாகவே ஏற்பட்டுள்ள அதிருப்தியை நன்கு வெளிப்படுத்துகிறது.

கோவை பிரதமர் வந்து சென்றிருக்கிறார். கோவையில் பி.ஜே.பி பேர் எப்போதும் இருக்கிறது, ஒரு காலத்தில் அத்வானி வந்து சென்ற போது குண்டுகள் வெடித்தன. அதை இன்னும் எவரும் மறந்திருக்க முடியாது.

சேலம் செங்குந்தர் மாநாட்டில் பி.ஜே.பியின்  ‍ஹெச்.ராஜா தாம் இந்த இனத்தவர் என்று சொல்லி மேடையில் பேசியிருப்பதாக மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் சொல்கிறார்கள். எனவே பாரதிய ஜனதாக் கட்சி இந்த முறை தேர்தல் கூட்டணி வியூகத்தோடு, தமிழக மண்ணில் கால் பதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருப்பதைக் காட்டுகிறது.
இத்தோடு இலஞ்ச ஊழல் பற்றிய செய்தி ஒன்றும் இழையோடுகிறது அது: தமிழகத்தில் இலஞ்ச ஊழல் செய்த அரசு அலுவலரை அரசின் ஆலோசனைக்குப் பிறகுதான் சட்ட நடைமுறைக்குட் படுத்த வேண்டும் என தமிழக அரசு சொல்ல, நாளை இது பற்றிய வழக்கின் முறையிடல் நீதிமன்றத்தில் .

தமிழ் நாட்டு அரசு இப்படி சொல்லும் நேரத்தில் மும்பை உயர் நீதி மன்றம் அடிப்படைத் தேவைகளுக்கு எல்லாம் இலஞ்சம் கொடுக்க வேண்டுமா? சரியான மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், இலஞ்ச ஊழலை ஒழிக்காவிட்டால் அரசுக்கு வரி செலுத்துவதை எல்லாம் ஒருங்கிணைந்து மக்கள் சேர்ந்து நிறுத்திப் போராட வேண்டும் என்ற நீதியின் குரல் ஒலித்திருக்கிறது.

இவை யாவுமே ஒன்றுடன் ஒன்று சாராத தனி விஷியங்களாக வெளித் தெரிந்த போதிலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் பின்னிப் பிணைந்தவை. அரசு இலஞ்ச ஊழல் இல்லாமல் இருந்தால் மட்டுமே வாகனப் போக்குவரத்து விபத்தின்றி நடக்க முடியும். அரசு ஒரு முன்மாதிரியாக இருந்தால் மட்டுமே மக்கள் அனைவரும் அவ்வாறு நடக்க முனைவர். அரசு எனில் ஆட்சி புரிவோர், பணி செய்வார், மக்கள் பிரதிநிதிகள் ,நீதிமன்றங்கள் யாவுமே. ஆக ஆட்சி,கட்சி சார்ந்தும், நிர்வாகம் ஊழல்,இலஞ்சம் சார்ந்தும் இருக்கும் வரை சாதனைகள் நிகழ் வாய்ப்பில்லை. இது போன்ற பரபரப்பூட்டும் நாட்டின் அமைதிக்கான‌ சோதனைகள்தான்.கட்சி ஆட்சி நிர்வாகம் ஒழுங்கமைந்தால் மட்டுமே விபத்துகள் தவிர்க்கப்படும்.

ஆக இன்று உங்களோடு பேச வேண்டும் என இந்த முக்கூறான விஷியங்கள் .ஒன்று போராட்ட முறைகள் நியாயமாக நெறியுடன் மக்கள் சக்தி இணைந்து போரட்டமானால் சரித்திரமாகும் இதற்கு ரோஜா பார்க்ஸ்.

இந்தியாவில் தறிகெட்ட கூட்டம் சட்ட ஒழுங்கமைவுக்கு இணங்காமல் ஆர்ப்பரித்து காட்டு மிராண்டியாய் மாற பெங்களூரு போன்ற, சம்பவங்கள்,

இலஞ்ச ஊழல் செயல்பாடுகளில் அரசு தமிழ் நாடு அரசு போன்றவை  இலஞ்ச ஊழலுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்க ,மும்பை நீதிமன்ற நீதிபதிகள் போராட்டக்காரராய் வரி கொடா இயக்கம் கூட இலஞ்ச ஊழல் ஒழிப்புக்காக செய்யலாம் என்கிறார்கள்.

இதையே சாதரண மனிதர்கள் சொன்னால் அவர்கள் நாட்டின் எதிரிகளாய் கருதப்பட்டிருப்பர்.

ஆக நேற்று ,இன்று நாளை என ரோஜா பார்க்ஸ் சம்பவமும் சரித்திரமும்,இன்றைய காலத்தில் தமிழக பாரதிய ஜனதா,தேர்தல்,அரசின் ஊழல் சார்ந்த ஆதரவு ,பேரம்.... நாளை செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டலாக மும்பை நீதி மன்ற நீதிபதிகளின்  குரல்கள்....

நாமும், நமது பதிவும் நாளைய வாழ்வை நோக்கியும், நேற்றைய ரோஜா பார்க்ஸ், தென் ஆப்பிரிக்க மகாத்மா காந்தியின் பாதையிலும் பயணம் செய்யவுமே விரும்புகின்றன. இன்றைய பெங்களூரு நிகழ்வு, இன்றைய தமிழக ஆட்சி முறைகள் பால் விலகியே இருக்க வழி காட்டவே பதிவு செய்யப்படுகின்றன.

இன்றைய பதிவு சற்று  திணறலானதே ஏன் எனில் இது ஆய்த எழுத்து போன்றது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Tuesday, February 2, 2016

தமிழகத் தேர்தல் காலம் சாதிகள் கனாக் காணும்: கவிஞர் தணிகை

தமிழகத் தேர்தல் காலம் சாதிகள் கனாக் காணும்: கவிஞர் தணிகை
கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் அம்பேத்கார் பேர் இருக்கும் வரை தலித்களுக்கு யாரும் தீங்கு செய்ய முடியாது என மோடி பேச்சு.சேலத்தில் 19 வது செங்குந்தர் மாநில மாநாடு மற்றும் செங்குந்தர் நெசவாளர் எழுச்சிப் பேரணி

இரு நெருங்கிய சொந்தங்கள் ஜனவரி.31ல் சேலம் போஸ்மைதானத்தில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டிற்கு ஒருங்கிணைப்புப் பணிகள் செய்தனர்.கோவை மாவட்டத்திலிருந்தும், சேலம் மாவட்டத்திலிருந்தும் எனை அழைத்தனர்.சாதிமத பேதங்களற்று வளர்ந்ததால் என்னால் வர முடியாது என மறுதலித்து விட்டேன்.

உங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைக்கலாமே என்றனர்.அதற்கும் மறுத்துவிட்டேன். நாம் கொள்கைகளை கடைப்பிடிப் பிடிப்பதில் காமராசரையும், ஜீவானந்தம் போன்றவர்களையும் பின் பற்ற வேண்டும்.

ஆனால் இந்த மாநாட்டின் மாநில அளவில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர் ஒருவர் சிறிது காலத்திற்கும் முன் நாட்டின் மிகப்பெரிய விருதுகள் பெற்ற கவிஞர் கூட தமது சாதிய முன்னேற்றச் சங்கத்தில் ஆர்வமுடையவராய் ஈடுபடும்போது நீங்களும் கலந்து கொள்ளலாமே அதற்கு உரிய அந்தஸ்தை அளிக்கிறோம் என்றார்.
இல்லை விட்டு விடுங்கள், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின் தங்கிய மக்களுக்காக பணிபுரிந்தவர் என்ற பெருமை எனக்குண்டு. யாம் வளர்ந்த விதம் அப்படி, சாதி ஒழியுமா ஒழியாதா என்ற பட்டி மண்டபங்களுக்கு நடுவராக இருந்து நடத்தியிருக்கிறேன். எனவே சாதி மதம் போன்ற வேறுபாடுகள் எம் வாழ்வில் இல்லை என்றும் மறுத்து விட்டு எம்மிடம் பைபிள், குரான்,கீதை மூன்றுமே உண்டு.

எனது தனி நிலையை இப்படியே விட்டு விட்டு உள்ள நிலைமைக்கு வருவோம். செங்குந்தர் மாநாட்டிற்கு சுமார் ஒரு இலட்சம் முதல் ஒன்னரை இலட்சம் கூட்டம் இருந்ததாம். பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டனராம்.

தொகுதிகள் கேட்டதாகவும் இல்லையெனிலும், இவ்வளவு பெரிய கூட்டம் எம்மிடம் உண்டு அதற்கு எத்தனை கோடிகள் புரளும் ,எமது வாக்குகளின் வங்கி உங்கள் பக்கம் சாய என்ற பேரம் எல்லாம் நடக்கும் எனவேதான் தேர்தலுக்கும் முன் இது போன்ற மாநாட்டு மக்கள்தொகை சேர்க்கைக் காட்சிகள்.

இப்படித்தான் பல கட்சிகளிடமும் சாதி சார்ந்த அமைப்புகள் தங்களது சாலிடாரிட்டி, மெஜாரிட்டி, கூட்டத்தை காட்டி பேரம் பேசும். இது தேர்தல் வழக்கம் இது இந்த தேர்தலைப் பொறுத்த அளவில் மிக அதிகம் அளவுக்கு அதிகம் என்றே சொல்லலாம்.

ஏற்கெனவே கோவையில் சார்ந்திருக்கும் கொங்கு வேளாளர் முன்னனி,ஏன் சாதி அமைப்புகளைச் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள்,பாட்டாளி மக்கள் கட்சி,இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதல்லாமல் எல்லாக் கட்சிகளிலுமே அந்த அந்த பிரதேசங்களைச் சார்ந்து எங்கெங்கே எந்த சாதி மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த சாதி சார்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முனைவது...

இதல்லாமல்,தலித் வாக்குகள் என்பது, சிறுபான்மை இனம் என்று கிறித்தவர்,முகமதியர் வாக்குகளைப் பெற முனைவது , நாடார்சமுதாயம்,மண்ணுடையார் சமுதாயம், தேவர் சமுதாயம் , நாயக்கர், நாயுடுகள், ரெட்டியார், வன்னியர், செட்டியார்,பார்ப்பனர் என எல்லாம் எக்கசக்கமாக பிரிந்து கிடக்கிற மனித இனத்தில் எமைப்போன்றோர் எல்லாம் கடலில் மிதந்திடும் தூசுகள்.
சாதியும் ஒழியவில்லை, ஒரு சாதி அமைப்பினர் அவர்களைச் சார்ந்தவரையே தமது பக்கத்தில் குடி அமர்த்த தலைப்படுகின்றனர்.

இதெல்லாம் தேர்தலில் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.ஆனால் இது சாதி இரண்டொழிய வேறில்லை என்ற தமிழ் சொல்லிய மனித இனத்தின் மாண்பு சொல்லிய மண்ணின் வளத்துடன் உள்ள பூமி.இன்னும் எத்தனை காட்சிகளோ இந்த தேர்தல் முடிவதற்குள் சாமி..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: இன்றும் எங்கள் பகுதியில் எந்த பணியையும் மேற்கொள்ளும் அளவில் மின்சாரம் பகற்பொழுதில் இல்லை. எனவே இது ஒரு நள்ளிரவுப் பதிவாகி விட்டது.

Monday, February 1, 2016

தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேக் கொசுவும் பழகருப்பையா விசுவும்:கவிஞர் தணிகை.

தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேக் கொசுவும் பழகருப்பையா விசுவும்:
தந்தி TV யின் ரங்கராஜ் பாண்டே எனும் கொசுவுக்குத் தந்தி  Tv தலைமை ஆசிரியர் எனப் பதவி . இவர் நிறைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளைப் பார்த்து பேட்டி, கேள்வி பதில், நேரடி விவாதம், போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஏன் எனில் பிரண்ணாய் ராய், ராஜ் தீப் சார் தேசாய், இன்னும் நிறைய பெண்மணிகள் யாவருமே இவரை விட வல்லமையுடன் நிகழ்ச்சிகளைக் கொடுக்கின்றனர்.

இவர் பிபிசி BBC போன்ற உலகின் மாபெரும் செய்தி ஊடகங்களையும் பார்த்து கற்றுத் தேற வேண்டிய நிலை அவசியம். கேள்வியாளர்கள் அதிகம் பேசாமல், கேள்வியுடன் நின்று, பதில் தருவாரைத்தான் நல்ல ஊடகங்கள் ஒருமுகப்படுத்தும், ஏன் சில ஊடகங்களில் கேள்வியாளர் முகமே தேவைக்கு அதிகாமக காணொளிக்கு வராது
ஊடகங்களில் உள்ள‌ எவருமே கேட்ட கேள்விக்கு பதில் வரும் முன் விருந்தினரை, பேட்டியாளரை கடித்து கடித்து விழுங்க யத்தனிப்பதில்லை.இவருடைய அல்லது தந்தி தொலைக்காட்சியின் அரசு சார்புடைய அல்லது அ.இ.அ.தி.மு.க கருத்து சார்புடைய ஒளிபரப்புகளை எந்த வித தடையுமின்றி ஒளிபரப்பிக் கொள்ளலாம் ஆனால் அதற்காக விருந்தினரை வரவழைத்து அவர்களைப் பேச விடாமல் அவர்கள் கருத்தை தெரிவிக்கவே வாய்ப்பளிக்காமல் ஊடகம் கையில் இருக்கிறது என்கிற திமிரில் மக்களுக்கும் எதிரில் அமர்ந்திருப்பார்க்கும் தமது கருத்து திணிப்பை செய்வதில் இவர் ஏதோ சாதிப்பதாக மகிழ்வடைவது தெரிகிறது.

பழ கருப்பையாவைப் பொறுத்தவரையில் 73 வயது மிக்க முதியவர். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர். சுதந்திரப் போரில் ஈடுபட்டவர். உண்மை எல்லாக் கட்சிகளுக்கும் மாறுபவர்தான். தமது திறமையை நம்புபவர். தவறில்லை இவர் அமைச்சர் பதவியே கூட எதிர்பார்த்து ஏமாந்திருந்தாலும்.

இவரின் தற்காலத்தில் பல சம்பவங்கள் ஊடகங்களில் எதிரொலிக்கின்றன. துக்ளக் விழாவில் இவர் கலந்து கொண்டு பேசியதிலிருந்தே தந்தி டிவிக்கு அளித்த கேள்விக்கென்ன பதில் நிகழ்வு வரை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் இவரின் கருத்துகளை கவனித்த பிறகுதான் இந்த அஞ்சல் இடப்படுகிறது இன்று மின்சாரம் எங்கள் ஊரில் பகற்பொழுதில் இல்லாததால் இப்போது வெளியிடப்படுகிறது.

இவர் தந்தி ஸ்டுடியோவிலிருந்து வெளியேறிய பிறகு பாண்டேக் கொசு அது விருப்பத்திற்கு சில கருத்துகளை பதிவு செய்தது அதில் சில: பொதுவுடைமைக் கட்சிகள் இலஞ்ச ஊழலில் குறைவாக செய்தால் இவர் அது போன்ற கட்சியில் இருந்திருக்கலாம், மதுவிலக்கை அமல் படுத்தவே முடியாது, என்றெல்லாம்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தவே முடியாது என்பது அறிவார்ந்தவர் யாவரும் அறிவார். ஆனால் அதற்காக அரசே மதுவை  அரசுடைமையாக விற்பது சரியா என்பதும் அரசு அதை தடைப்படுத்தினால் குடும்பங்க‌ள் சீரழிவதிலிருந்து காப்பாற்றப்படுமே என சமுதாய ஆர்வலர்கள் பிரதிநிதித்துவம் எழுத்தாக பேச்சாக கருத்து தெரிவிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

திருட்டை ஒழிக்க முடியவில்லை என்பதற்காக அரசே திருட்டை அங்கீகாரம் செய்து தொழிலாக்கிக் கொள்ளலாமே? பொய் பேசுவதை மனிதகுலம் மாற்றிக் கொள்ள வில்லை அதையும் அரசு மொழியாக அங்கீர்கரித்துக் கொள்ளலாமே எதற்கு சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அரசின் மொழியாக கொண்டிருக்க வேண்டும்? அடக் கொலை கொள்ளையைக் கூட அங்கீகரித்துக் கொள்ளட்டுமே அரசு, புகையை அனுமதிப்பது போல.

எந்தக் கட்சியுமே சரியில்லைதான். சரியிருக்கும் கட்சிகளுக்கு மக்களுக்கு ஆதரவில்லைதான். எனவே பழ கருப்பைய்யா போன்றோர் முயற்சி செய்து வருவது தவறில்லைதான். வாக்களிப்பு முறையும், தேர்தல் முறையும் துர்ந்து போனதுதான். எனவே துறைமுகம் தொகுதியில் இவர் வென்றதும் கட்சி பாகுபாடுகளுடன் எல்லா தவறான முறைகளும் அதிலும் இருக்கும்தான்.

இவர்கள் செய்தால் சமரசம், ஜெ, அம்மா செய்தால் ஊழலா? என இவர் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். அரசு விளம்பர வருவாய் நிறைய பெறுகிற நிலை இந்த டீவிக்கு இருக்கும் என எண்ணுகிறேன்.

சமரசம் என்பதில் ஆரம்பித்து ஊழலின் சிகரமாய் ஆகிவிட்டது இந்த ஆட்சி, இதன் மையம் அம்மா என தெளிவாகத் தெரியும்போது அதை எதிர்த்து அனைவருமே கருத்து சொல்லலாம் அதற்காக இவர்கள் கல்லால் அடிப்பார்களா?

சமரசமே செய்து கொள்ளாமலிருந்தால் எதுவுமே செய்ய வழியில்லை. ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து கூட வாழ முடியாது. இருவர் இணைந்து ஒரு இடத்துக்கு ஒரு நாளும் செல்ல முடியாது.

ஆனால் அதற்காக நாட்டை கொள்ளை அடித்து நீதியை விலைக்கு வாங்கி, எந்த நிர்வாகமும் செய்யாமல், செய்யும் எல்லாவற்றுக்கும் அம்மா பேர் என வைத்துக் கொண்டு, அரசை அவர்கள் காலடியில் போட்டு மிதித்தபடி, எதிர் கருத்து கொண்டாரை வன்முறை கொண்டு அழிக்க நினைக்கும் ஆட்சியை எவரால் பாராட்ட முடியும்?

அம்மா, எந்த அறிவுடையாரையும் தம் அருகே அனுமதியார், எந்தப் பெரிய பதவியையும் தர மாட்டார். அதெல்லாம் அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் காலத்தோடு போய்விட்டது.இதை யாவரும் அறிவர்.

எனவே பழ கருப்பையா நீக்கப்பட்டதில் எந்த வித புது செய்தியும் இல்லை. விசுவும் அந்த கட்சியில் இருந்து விலகி கூடாரம் காலி என நினைக்கும் பொருட்டு மத்திய ஆளும் கட்சியில் சேர்ந்திருக்கிறார் புத்தி சாலித்தனமாக.சோ அதை துக்ளக் விழாவில் மறைமுகமாக குறிப்பிட்டார்,பழ.கருப்பையா அ.இ.அ.தி.மு.கவில் இருக்கிறார், இருக்கிறார் என தொனி மாற்றி இரண்டு முறை..விளைவு இவரின் மந்திரிகள் பற்றியும் ஆட்சி,நிர்வாகம் பற்றிய அப்பட்டமான பேச்சு இவரை அந்த ஆளும் கட்சி விட்டு வைக்கவில்லை.

 விசு புத்திசாலித்தானமாக மாநில ஆளும் கட்சி மண்ணைக் கவ்வும் இந்தத் தேர்தலில் இன்னும் மத்திய ஆளும் கட்சிக்கு 3 ஆண்டுக்கும் மேல் இருக்கிறது என அந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

இவர் சன் தொலைக்காட்சி அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தியவர், கடந்தத் தேர்தலில் ஜெயாவுக்கும் , அ.இ.அ.தி.முகவுக்கும் மாறியவர். (இரகசிய பரிவர்த்தனை இருந்ததாகவும் கேள்வி) இவரை பாண்டே நேர்முகம் காணலாமே.

இவரின் அரட்டை அரங்கத்தில் பேசி, கடிதத் தொடர்பில் இருந்தவர் என்ற முறையில் சொல்கிறேன் இதே விசுவே தம்மை மீறிப் பேசுவார் என நிறைய முறை எம்மை விட தகுதிக் குறைவான நபர்களையே தேர்வு செய்து கொள்வார். மேலும், இவரது தேர்வில் 3ஆம் சுற்றில் எவருமே தேர்வு செய்வாருடன் விவாதம் செய்யக் கூடாது , மேலும் நடிப்புக்காகவாவது எளிமையுடன் கிழிந்த சட்டை கூட போட்டுக் கொண்டு வந்து பேர் பெற்று உள் நுழையலாம், மேலும் நன்றாக பேசுவாரின் கருத்தை எடுத்துக் கொண்டு இவர்களுக்குப் பிடித்த மற்ற ஒரு நபரை உருவாக்கி அவருடன் உடனிருந்து கூர்ந்து அவரது கருத்துகளை அப்படியே காப்பி அடிக்கச் சொல்லி, ஒரிஜினலாக பேசுவாரை கழட்டி விட்டு காப்பி அடிப்பாரை வைத்துக் கொள்வார்
விசு, ஜெ. இவர்கள் போன்றவர்க்கு எல்லாம் அறிவு படைத்தார் தேவையில்லை சில கைப்பாவைகள் தான் தேவை. எனவே பழ கருப்பைய்யா அங்கு இவ்வளவு நாள் குப்பை கொட்டியதே பெரும் கறை.

இந்த‌ நாட்டில் எல்லாரையும் விலக்க ஆரம்பித்தால் எங்களைப்போன்று செல்லாக் காசாக இருந்து போக வேண்டியதுதான். ஏன் எனில் சசிபெருமாள் போன்றோரை உருவாக்கிய எம் இயக்கம் பற்றி எவருமே அறியார். அவரின் இறுதியாத்திரையை வைகோவும் தொல் திருமாவும் நடத்தி அரசியல் செய்தார்கள் . அவர்கள் குடும்பமும் கடைசிக் காலத்தில் அருள் போன்றோரும் இணைந்து போராடினர் உண்மைதான்.

ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலான இயக்க முறைகளில் அவரை உருவாக்கிய இயக்கம் எங்களுடைய ,நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம் , தமிழக இலட்சியக் குடும்பங்கள் எனும் இயக்கம் இதெல்லாம் எவருக்குத்தான் தெரியும்?

இதில் நிறுவனராய் இருந்த சிற்பி.கொ.வேலாயுதம், சமரசம் செய்துகொள்ளும் போக்கில் இருந்தபோதும் கடைசிக்கட்டத்தில் சமரசமே செய்யாத போக்கில் என் போன்றோர் தனியாகி இருக்கிறோம்.

 சசி பெருமாளே சமரசம் செய்து கொண்டு அன்றாடம்  ஊடகத்தில் வர வேண்டி குடிகாரர்களின் காலில் விழுந்ததும், பிச்சை எடுத்துப் போராட்ட முறைகளை கொச்சைப்படுத்தியதும், செல்பேசி கோபுரத்தில் ஏறியதும் எமது இயக்க முறைகளால் அவ்வப்போது இடித்துரைக்கப்பட்டதே.

எனினும் இந்த நாட்டில் இன்னும் எந்த உண்மைக்கும் மதிப்பில்லை. கண்ணதாசன் கருணாநிதி இருவருமே தேர்தல் பணி புரிந்தபோதும் கருணாநிதி கொடுத்து மேடையில் அறிஞர் அண்ணாவிடம் போட்டுக்கொண்ட மோதிரத்துக்கு ஒரு மதிப்பு வந்தது . கண்ணதாசனை அவர் தமது குயுக்தியால் அன்று வெற்றி கண்டார்.

ஆனால் கலைஞர் கருணாநிதியை பழ கருப்பையா தோலுரித்து காண்பித்து துக்ளக் 46 ஆம் ஆண்டு விழாவில் பேசி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, வீட்டின் மேல், காரின் மேல் கல் வீசப்பட்ட போதும் கலைஞர் கருணாந்தி அதை கண்டனம் செய்து பழகருப்பையாவுக்கு ஆதரவாக நிற்கிறார்.

விஜய்காந்த் போன்றோரை பாண்டே போன்றோர் பேட்டி எடுக்கட்டுமே நிலை எப்படி இருக்கும் என கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இந்த பாண்டே போன்றோர் ஜெவின் அரசுக்கு துதி பாடியாக இருந்து கொண்டு, தங்களது ஊடகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த இல்லாத அசிங்கங்களை எல்லாம் எடுத்து அப்பிக் கொள்கிறார்.

இவர் சொல்வது போல அனைவருமே செயல்பட்டால் எந்தக் கட்சியிலுமே எவருமே இருக்க வழியில்லை. ஆனால் இங்கு நடப்பது மக்களுக்கான ஆட்சியோ, மக்களுக்கான கட்சியோ அல்ல.
நேர்மையாய் உண்மையாய் பாடுபடுவார் வெளிச்சத்துக்கே வராமல் சென்று சேர்வது இன்றல்ல தியாகிகள் சுதந்திரப்போரின் போதிருந்து இருந்து வரும் நிகழ்வுதான்.

சிக்கு எடுக்க முடியாத சிக்கலில் ஆட்சியும் கட்சியும், மக்களும் இருக்கிறார்கள். உண்மைதான் பெரும்பாலும் வாக்குகள் விலை பேசப் படுகின்றன பணம், மது, சாதி, மதம், பதவி, ஆட்சிக்கு வந்த பின் செய்து தருகிறோம் இந்தப் பணி என ஏதாவது ஒரு விலைக்கு வாக்குகள் வாங்கப்படுகின்றன விற்கப்படுகின்றன. இதை ரங்கராஜ் பாண்டே போன்ற கொசுக்கள் அறிந்தும் அறியாதது போல தங்களது சுய நல ஏகபோக வாழ்வுக்காக மறைக்கின்றன என்பதுதான் உண்மை.

சொல்லில் வருவது பாதி .நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.