Sunday, December 31, 2023

சட்டையை உரிக்கிறேன்:/எல்லா இடங்களிலும் (என்) தெய்வம்: கவிஞர் தணிகை

 சட்டையை உரிக்கிறேன்:/எல்லா இடங்களிலும் (என்) தெய்வம்: கவிஞர் தணிகை



திருப்பதியில் : விளையாட்டுப் பையனாகவே இருக்கிறீயேடா?...


பழநீ: செல்வம் சேரும்...வேறொரு வாய் வழி வந்த வார்த்தைகள்...5 ரூபாய் இனாம், அவ்வளவுதானா? மேலும் ஒரு 5 ரூபாய் கொடுத்தது...


திருவண்ணாமலை: இப்படி வர்ரதா இருந்தா வராத....நல்ல அறிவுரை பிறரைப் போல தாமும் நினைத்து சட்டையைக் கழட்டி விட்டு நீண்ட வரிசையில் நின்றபடி அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்த போது...

திருவரங்கத்தில்: மூதாட்டி சிறுவனாக இருந்தவனை இஞ்சினியர் ஆவான், என வாழ்த்தி யாசகம் பெற்றார். ஆனான்.


மாரியம்மன் கோயில்: போயிடு, போடா, போயிடுடா...அதன் பின் அங்கிருந்து அகன்று சென்ற பின் அடிதடிக் கைலப்பு. சிக்கல் தவிர்க்கப் பட்டது...


காளியம்மன் கோயில்: அவனை விட்டுடு தொந்தரவு பண்ணாதே...அண்டை வீட்டுக்காரனை தப்பிக்க வைக்க என்னிடம் வேண்டல் அல்லது கோரிக்கை அல்லது அது அவர்கள் சார்பான ஆவியா?!


முனியப்பன் கோயில்: அடுத்தவர் வாயிலிருந்து வரும் வார்த்தை முன் தெரிந்தது மேலும் நிறைய சிக்கல்களின் போதெல்லாம் விடுவிப்பு...


 வீட்டுள் நிறைய :


இரவில் வெளியே படுத்துக்கிட்டா  சரியாகிடும்...இல்லை செய்ய வில்லை திருடன் தனியாக வெளியில் வீட்டில் இருந்து தொடர்பின்றி இருந்த சிறு அறைக்குள் சென்று தேடல் செய்திருக்கிறான்...எல்லாம் கலைத்து போட்டு பூட்டை உடைத்து...இன்ன பிற....


தேர்தல்லியா நிக்கற முதல்ல அம்மா புட்டுக்கிட்டு போப் போறா பாரு அதை முதல்ல பாரு...இப்படி நிறைய அவள் இறந்தாள் தவிர்க்கவே முடியா சோகம்...நீண்ட...


அடுத்த ஆண்டு அவ இருக்க மாட்டா...அவ(ள்) இல்லைதான் அது அம்மா


40 ஆண்டு கால தியான வாழ்வு


ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் பின் இந்த மூன்றாம் கண், ஆன்மா விழிப்பு, தியான வழி ஒளி: 


"காதுகள்' எம்.வி. வெங்கட் ராம்  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் ஆனால் அந்த நூல் அவரது அனுபவப் பூர்வமான தொல்லைகளை விளக்கி இருக்கும் நுட்பம்...ஆனால் கூச்சமின்றி எப்படித்தான் பதிவு செய்தாரோ அவரக் கேட்க வேண்டும் அது அவரது சுய சரிதைதான்.


ஏனென்றால் தியானத்தில் நிறைய கவிதைகளை, வார்த்தைகள் இழப்பதாக கால நீட்டுதல் இருக்க...


மகாத்மாவும் தனது உள் குரலுக்கு மதிப்பளித்தார் என்கிற குறிப்புகள் உண்டு


ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி எல்லாம் பேசியதாக படித்ததாக நினைவில் இல்லை

ரமண மஹரிஷி: இவர் ஒருவர் தாம் நானறிந்த வரையில் ஞானிகளில் "நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்றவர்.


உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

திருமூலர்: 

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...



நேரம் காலம் எல்லாம் கவனிக்கப் பட வேண்டியதாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியதாக...


நவ கிரகங்களை எல்லாம் ஆசான் ஜீ  இறையின் புழுக்கை என்கிறார்


பேரண்டம் பெருவெளி பிரபஞ்ச நோக்கு என்ற பார்வையில் அது சரியாகவும் இருக்கக் கூடும்.


ஒன்று எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது

இரண்டு அது நமது ஆன்மாவாக இருப்பது


மூன்று இந்த வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு: நம்முள்ளிருந்தும், வெளியிலிருந்தும் கிடைப்பதை தெரிந்து கொண்டதாக சொல்ல முடியும் என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த  மருத்துவ நண்பரிடம்... ஆனால் அவரும் நானும் பார்த்து கிட்டத் தட்ட 26 ஆண்டுக்கும் மேலாகி விட்டது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




THE RAILWAY MEN

 ரெயில்வே மென்: கவிஞர் தணிகை



நவம்பர் 18. 2023ல் சுமார் 50 முதல் 65 நிமிடங்கள் ஓடும்படியான 4 பகுதிகளாக வெளிக் காட்டப் பட்டுள்ள நல்ல தொடர் சினிமா இந்த ரெயில்வே மென். ரயில்வே மனிதர்கள்.


தப்பும் தவறுமாக ரயில்வே இருக்கும். இந்தியாவின் ஏன் உலகிலேயேக் கூட பெரிய ரயில்வேத் துறை இந்தியாவுடையது. இதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அற்புதப் பணியை உயிர்களை ஆயிரக்கணக்கில் காத்த பதிவை நம்மையும் பார்க்க வைத்து உணர வைத்திருக்கிறார்கள்.


மாதவன் ஜுஹி ஜாவ்லா  தவிர பெரும்பாலும் நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள். காரணம் இந்தித் தொடரின் மொழிபெயர்ப்புதான் இது.


ஆனால் ஹாலிவுட் ஸ்டைலில் இதயத்தைப் பிழிந்து விடுகிறது. அழுது கொண்டே கைத் தட்டியபடி பார்க்க வேண்டியதாக இருக்கும் இந்த மினி சீரியல் ஒரு வெப் தொடராக வந்திருப்பதை ஒரே நாளில் விடாமல் பார்த்து முடித்துவிட்டுத் தான் மூச்சு விட்டேன். காரணம்: போபாலில் 1984ல் நடந்த யூனியன் கார்பைட் வாயுக் கசிவின் போது வெளிப்பட்ட பெருந்துயரம்.


உண்மையிலேயே எடுக்கப் பட்டதுதானா? இல்லை அந்தக் காலக் கட்டத்தை அப்படியே எடுத்து நம் முன் தந்துள்ளார்களா என எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது காட்சி அமைப்புகள்


ரெயில்வே நிலையத்தின் தலைவராக வரும் உண்மைப் பாத்திரம் உண்மையிலேயே இறந்ததாகக் கருதி அதன் பின் பிணவறையில் இருந்து 3 மணி நேரத்துக்கும் மேலான பிறகு உயிர் பெற்றதான நிகழ்வு அவர் செய்த புண்ணியத்துக்கு பிராயச் சித்தமானது என நம்மிடம் ஒரு எண்ணம் எழ வைக்கிறது.


எக்ஸ்பிரஸ் திருடனாக இருந்தவர் எப்படி இவரைப் பார்த்து இவரது செயல்பாட்டைப் பார்த்து மனந்த் திருந்துகிறார் என்பதும்


யூனியன் கார்பைட் நிறுவனத்தில் பணி புரியும் அந்த முக்கியப் பணியாளர் எப்படி தமது உயிரையும் பொருட்படுத்தாமல் 5 ஆம் வாயு உளையை தொடர்பிலிருந்து விபத்து நேராமல் துண்டிக்கச் செய்து அதன் பின் இறக்கிறார் என்பது,


இப்படி நடந்தே தீரும் என்ற நிலையை உலகுக்கு வெளிப்படுத்தி அதைப் பற்றி எவருமே அக்கறை கொள்ளாத போதும் கடமையை அபாயத்தை முன் கூட்டியே வெளியிட்ட‌ பத்திரிக்கையாளர் எப்படி அந்த பெரும் இடரிலிருந்து உயிர் பிழைத்து முடிந்தவரை பிறரைக் காப்பாற்றி இந்தக் கோவிட் 19ல் கொரானாத் தாக்கி உயிரிழந்தார் என்பது இவை மட்டுமல்ல‌


ரெயில்வே ஊழியர்களை எப்படி மாதவன் ஒருமுகப் படுத்தி இந்த இடரில் மேலும் உயிர்கள் பழியாவதை தடுக்கிறார் மேலும் அந்த முகமதியரியாஸ் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் செயல்பாட்டாளர் ரெயில்வே நிலையத் தலைவருக்கு எப்படி உறுதுணையாக செயல்பட்டு உயிர் இழக்கிறார்


இதனிடையே இந்து சீக்கியக் கலவரத்தில் பிரதமர் இந்திராவின் துப்பாக்கிச் சூட்டிற்கு பழி வாங்க வாளெடுத்து சீக்கியரைக் கொல்லப் புறப்படும் வெறியர் கூட்டம் அதனிடையே சிக்கும் 2 சீக்கியர்


இப்படி எந்த இடத்திலும் தொய்வில்லாத ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற உணர்வு. இந்த தொடருக்கு நாட்டின் உயரிய விருதை வழங்க எல்லாத் தகுதிகளும் இருக்கிற திரைப்படம்.


தொலைத் தொடர்பு இணைப்புத் துண்டாகி இருக்கும் போபால் ரயில் நிலையத்தின் வழி வரும் விரைவு தொடர்வண்டிகளை அதை உரிய வழியில் மட்டுமே அணுகத் தூண்டும் கதை அமைப்பு அதை அமலாக்கும் ரெயில்வே மனிதர்கள்... சொல்ல மொழியில்லை பாராட்ட அளவு தேவையில்லை.


சிறந்த அனுபவத்தை அளித்திருக்கிறது  இந்த தொடர் பகுதிகள்.இந்திய சினிமாவில் இப்படியும் செய்யலாம் என்று முயன்றுள்ளனர்.

அனைவரும் காண வேண்டும்.

ஈரத் துணி முகக் கவசம் தான் எண்ணிறந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. அழுகிய முட்டைக் கோஸ் நாற்றம் நுரையீரலை கண்களை எப்படி பாதிக்கிறது என்ற கொடூரங்கள்...என்ன விஞ்ஞானமோ எழவோ என்று பார்க்கும்போதே சபிக்கத் தோன்றுகிறது

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

p.s:அமெரிக்க நீதி இன்னும் கிடைக்கவில்லையாமே...இந்தியாவில் இதெல்லாம் சகஜம் என்கின்றனர் ஐரோப்பியர். அதிலும் ஒரு நல்ல அறிவியல் அறிஞர் தென்படுகிறார் அவரையும் செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.15 ஆயிரம் குடும்பங்களுக்கு கொள்ளி வைத்த அந்த மீத்தேன் ஐசோடப்புக் கசிவுக்கு அந்த இந்தியாவில் நடந்த ஜப்பான்  ஹிரோஷிமா, நாகசாகிக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்?

இறுகப் பற்று:இந்தக் காலத்துக்குத் தேவையான திரைப்படம்: கவிஞர் தணிகை

 இறுகப் பற்று:இந்தக் காலத்துக்குத் தேவையான திரைப்படம்: கவிஞர் தணிகை



நிறைய சோகங்களும் சம்பவங்களும் நிறைந்த 2023 ஆம் ஆண்டில் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் "இறுகப் பற்று" என்ற காலத்துக்குத் தேவையான ஓரு படம் அக்டோபர் 6ல் வெளிவந்துள்ளது..


நிறைய பேர் கவனித்திருக்கவும் வாய்ப்பு குறைவே.


ஆனால் காதல் திருமணம், சேர்ந்து வாழ்தல், பிரிதல்,விவாகரத்து போன்ற இளைஞர்களின் பிரச்சனையில் சத்தமின்றி அணுகி இருப்பது மட்டுமின்றி  நல்ல தீர்வையும் முன் வைத்துள்ளது.உடனடியாக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடிப்பதைத் தவிர்த்து அவரவர்க்கு உண்டான கால அவகாசத்தை வழங்கினாலே போதும் குடும்பங்கள் பரிமளிக்கும் என்ற செய்தியை எளிமையாக இழையோட விட்டிருக்கும் படம்.


விக்ரம் பிரபு, ஸ்ரத்தா , விதார்த், மனோ பாலா போன்ற தெரிந்த முகங்களுடன் அதிகம் இது வரை பதியாத முகங்களுடன் இந்தப் படத்தை முன் வைத்துள்ளனர். யுவராஜ் தயாளன் இயக்குனர் சற்றும் தொய்வின்றி படத்தை கொண்டு சென்றுள்ளார்.


இரண்டு ஜோடிகளின் வாழ்வுப் பிரச்சனைக்குள் புகும் மன இயல் வல்லுனர் ஒருவரின் வாழ்விலும் அதே பிரச்சனை எவ்விதம் ஊடுருவிச் செல்கிறது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நைஸாக ஏற்றி படத்தை பார்க்க வைத்துள்ளனர். ஆக 3 ஜோடிகளின் வாழ்வின் தடுமாற்றம் மற்றும் தடம் மாற்றம்.


எனக்கென்னவோ நம் வயது போன்றோர் பார்ப்பதை விட இன்றையக் காலக் கட்டத்தில் உள்ள தம்பதிகள் அவசியம் பார்க்க வேண்டும் அது விவாக ரத்து நீதிமன்ற வழக்கு, வாழ்வின் நற் தருணங்களை இழக்காதிருத்தல் ஆகியவற்றுக்கு பெரிதும் உதவும் என்றே தோன்றுகிறது.


ஆர்வத்தை அதன் ருசியைக் குறைக்காதிருக்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முடிந்தால் ஒரு முறை பாருங்கள் இளையோரைப் பார்க்கச் சொல்லுங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, December 21, 2023

பூக்கள் பூக்கள் தேனீக்கள்: கவிஞர் சு. தணிகை



1. ஊர் ரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்


2.வீடு ரண்டு பட்டா பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு(ம்)


3.சுற்றுப் புறத் தூய்மை யாவருக்கும் மேன்மை


4.பொது நல வாதி வெகு ஜன விரோதி


5.இரு பிறவி நல்ல சொல்லாடல் சுளுந்தீ இரா.முத்து நாகு


6.(ஜே.என்.1) J N.1மூன்றாம் கோவிட் அலை2023/ 2024 ஆரம்பம்


7.குரங்கு Mpox அம்மையும் பரவல்...உலக சுகாதார நிறுவனம்WHO


8.மேற்கத்திய நாடுகளைப் பின் பற்றினால் உன் 3 ஆம் தலைமுறை அழியும்

                                  விவேகானந்தா

9.க்ளின் சிம்மன்ஸ் 22 வயதில் சிறை 48 ஆண்டுக்குப் பின் நிரபராதி

                            இது அமெரிக்க நீதி.

10.நம்பகமான மனிதர்கள் இல்லை எழுத்துகள் இருக்கின்றன.


                                                                       மறுபடியும் பூக்கும் வரை

                                                                       கவிஞர் சு. தணிகை






Tuesday, December 12, 2023

பூலோகம் ஆனந்தத்தின் பிள்ளை. கவிஞர் தணிகை

 

               பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

 


கூவும் குயில்கள் இன்னும் இருக்கின்றன

பாயும் நதிகளும் இன்னும் இருக்கின்றன

தாவும் குரங்குகள் வாழ்வு தடம் மாறிய போதும்

தாயும் சேயும் தற்கொலை விழையும் போதும்

 

மேலை நாடுகளின் வியாபார யுக்தியும் யுத்தமும்

கீழைக் காற்றில் விசிறிடும் நச்சும் புகையும்

தாழை மலர்களில் வாசம் செயும் நாகமும்

காலை எழும் நட்புச் சொற்களும் கதிரும் இன்னும்...

 

மலைகள் பெயர்ந்த போதும் பூமியின் எடை ஒன்றே

மழை வீச்சு தாறுமாறானபோதும் புவி வெப்பச் சூழல்

பிழைகளாய் பிரிந்த போதும் அச்சும் சுழலும் ஒன்றே

குழந்தைகள் செல்பேசியில் குழந்தை மனங்கொண்டார்

                                   சொல் பேச்சினில்.

 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிரிவினைகள் மறந்து இங்கு கூடிடலாம் ஒன்று

சீர் பிரித்து சீர் சேர்த்து செய்த கவி ஒன்று

 

நன்று செய்வோர் நானிலத்தில் அரிய மலர்ச் செண்டு

ஒன்று இணையும் பூவாய் நாருடன் சொற்கற்கண்டு

தமிழ் மொழியுடன் உலகு விரிந்த சரித்திரம் கண்டு

மொழியும் சொல்லில் அண்டப் பெருவெளி முடியா நூற்கண்டு

 

அரசியல் சித்து விளையாடல் அறியோம் நாம்...தொண்டில்

அரிசியியல் கொண்டு ஆட்டுவிப்போர் பின் தாம் அழியோம்

நல்வினை தீவினை இரண்டின் ஆட்சி மாட்சிமை நின்று

நல்வினையும் தியாகமுமே சிறந்த நகை செய்வோம் என்றும்

 

இலட்சங்களால் கோடிகள் சேர்த்துக் கொள்வார் வென்று

தேர்தலில் வெற்றி ஒன்றே பெற்றிடுவார் நின்று

இலட்சியத்தில் தடுமாறி தியாக தீபம் ஏற்றிக் கொண்டு

வாழ்ந்து மறைவர் விடுதலைப் போராளிகள் நினைவுடனே

                   அடையாளம் தெரியாது சென்று....

 

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை உண்மைதான்

பூலோகம் ஆனந்தத்தின் பிள்ளை.

மறுபடியும் பூக்கும் 

கவிஞர் தணிகை


 

Wednesday, December 6, 2023

க்கூ...(ல்): கவிஞர் சு. தணிகை

 க்கூ...(ல்): கவிஞர் சு. தணிகை



ஆயிரம் காக்கைக்கு ஒரே ஒரு கல்

இலஞ்சம்


உடல் முழுக்க ஆடை

கொசுக்கள்


முழுப் பக்கம், ஒரு பக்கம், இரு பக்கம் , பல பக்கம்

குண்டூசிமுனையிலிருந்து....


தெரு தவறாமல் மருந்துக் கடை

ஒரே மதுக் கடை


புகை நீ புகையை விடு மேலே மேலே...

புகைந்து போ(க)


கருத்துகளைப் படிக்காமல் காலமெலாம் களித்திடு

எலிப் பொறி


பொய்களின் பின் பயணம் தொடர்

மெய் தொடர்வதறியாது...


கரு உருவாக இலட்சங்கள்

கலை(க்க) ஆயிரத்தில்


பொம்மை மிஞ்சும் உருவங்கள்

உரு வெளி


பர வெளியில் மழைத் துளி உயிர்த் துளி

வெள்ளக் காட்டுத் தீ...


  மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் சு. தணிகை


Monday, December 4, 2023

அறிவியலின் ஐந்து கீறல்கள் இயற்கையின் ஐந்து கூறுகள்: கவிஞர் தணிகை

 அறிவியலின் ஐந்து கீறல்கள் இயற்கையின் ஐந்து கூறுகள்: கவிஞர் தணிகை



1. செயற்கைச் சூரியன்: ஜப்பான் ஐரோப்பிய யூனியன் இணைந்து ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து ஆய்வு நடத்தி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் போவதாக செய்தி. சூரியனில் இப்படித்தான் ஹீலியம் வாயு உருவாகி எரிந்து வருவதாகவும் இது வரை புவியில் அணுக்களை பிளவு படுத்தியே அறிவியல் செயல்பாடுகள் இருந்ததாகவும் இதுவே அணுக்களை இணைத்துச் செய்யும்( First) ஆய்வு என்பதும் குறிப்பிடத் தக்கது.2024 அக்டோபர் வரை நமது சூரிய மண்டலத்தின் மையமான சூரிய எரிதலின் உச்சம் நிகழும் என்று அறிவியல் கணித்துள்ளது.


2. இப்போது விண்ணில் புவியை வலம் வந்து கொண்டிருக்கும் பழசாகிப் போன விண்வெளி ஆய்வுக் கூடத்தை இழுத்து செயல்படாமல் பசிபிக் கடலில் தள்ளும் முயற்சிக்கு பல ட்ரில்லியன் யூ. எஸ் டாலர் (சுமார் 6 முதல் 9 வரை யூ.எஸ் ட்ரில்லியன் டாலர்கள்) செலவாகும்  அதற்கான முயற்சிகளை யூ.எஸ்ஸின் நாசா செய்து வருவதாகவும் அமெரிக்கன் விண்வெளித் துறையான நாசா அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக புதிய ஆய்வுக் கூடம் அமைக்கவும் ஏற்பாடுகள் உள்ளன.

3. 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சூரிய மண்டலத்தை கண்டறிந்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி. அதில் 6 கிரகங்கள் புவியை விட இரண்டு மடங்கு பெரிதாக உள்ளதாகவும், நமது சூரிய மண்டலத்தில் நடந்தது போன்ற இடித்தல், சிதறல் போன்ற நடவடிக்கை ஏதுமின்றி இவை உருவாகி உள்ளதால் கிரகங்களைப் பற்றி அதன் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்புகள் நன்கமைந்துள்ளன என்றும் நாசா செய்தி.


(நினைவுக்கு: ஒளியின் வேகம் சுமார் 3இலட்சம் கி.மீ /1,86,000 மைல்கள் ஒரு நொடிக்கு அது போல ஒளி ஓராண்டு பயணம் செய்யும் தொலைவையே அறிவியல் ஒர் ஒளியாண்டு என்று கணக்கிடுகிறது.)


4.2021 செவ்வாயில் இறக்கிய ஹெலிகாப்டர் மாடலை அடிப்படையாக வைத்து புவியில் இறங்கும் ஹெலிகாப்டர் விசையையும் மேம்படுத்த நாசா ஆராய்ச்சி


5. செவ்வாயில் உள்ள நீரிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்க சீனா செய்யும் முயற்சிக்கு நாசா ஒத்துழைப்பு செய்யும் என்றும், விண்வெளியில் தாவர வளர்ச்சி பற்றி ஆய்வுகள் உள்ளன என்றும் செய்திகள் உள்ளன.


பி.கு: நாசாவைச் சார்ந்த செய்திகளே இவை என ஏன் என்று கேட்கிறீர்களா? என்ன தான் இருந்தாலும்(US) நாசா,ஜப்பான், ரசியா,ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, சீனா, நமது இஸ்ரோ ஆகியவற்றில் எப்போதுமே நாசாவே முன் நிற்பதால் அதை சொல்வதன்றி வேறு வழியில்லை.

மிக்ஜாம் புயல், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் என்று செய்தி ஊடகங்கள் அசை போட்டுக் கொண்டிருக்க இதெல்லாம் எங்கே கவனிக்க நேரம் என்கிறீர்களா? 

என்ன தான் அறிவியல் கீறல்கள் மனித முயற்சிகள் இருந்த போதும், ஆகாயம், நெருப்பு, காற்று,நிலம் , நீர் இந்த  இயற்கையின் ஐந்து கூறுகள் அடிப்படையை எவ்வித மனித முயற்சிகளும் நெருங்கவும் முடியாது எப்போதுமே நாயகம் இவை மட்டுமே...


அறிவியல் அவசியம்தான் இயற்கை அதை விட பெரும் அதிசயம் அல்லவா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


டிசம்பர் 4 1997 என்றதொரு நாள் என் வாழ்வில் வந்து இன்றுடன் 26 ஆண்டுகள்  அந்த அர்ப்பணிப்புக்கான‌ பதிவு இது. இரு வேறு துருவங்கள் இருப்பதால்தாம் புவி சுழல் புவி பயணம்... தன்னைத் தானே 24 மணி நேரத்துள் சுழற்றிக் கொண்டு மணிக்கு 67,000 மைல்கள் வேகத்தில் செல்லும் புவியில் நமது இருப்பே நமக்குத் தெரிவதில்லை. இல்லாதது பற்றி ஏங்கிக் கொண்டு இருப்பதை போற்ற மறந்து நிற்கிறோம்.