Wednesday, June 22, 2022

திரௌபதி முர்மு இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: கவிஞர் தணிகை

 திரௌபதி முர்மு இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: கவிஞர் தணிகை



கலாம் கலாம் என்று ஒரு நதி நீர் இணைப்புக் கவிதையில் நிறைய கலாம்கள் வரும்படி இராமமூர்த்தி நகர் நிம்ஸ் எனப்படும் நியூ இண்டியா மெட்ரிக் பள்ளியில் கவிதை பொழிந்தேன்...இப்போது இல்லாத பொறியாளர் தெய்வத் திரு மணிகூட அதற்காக எனை மேடையிலேயே முத்தமிட்டார். அவ்வளவு நல்ல கவிதை அது...அதன் மறு செய்தி பார்வையில் சென்னையில் ஒரு கல்லூரிக்கு வகுப்பு எடுக்க வந்திருந்த கலாமுக்கு இஜட் ப்ளஸ் பாதுகாப்பு என்றும் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பேயி கலாமை குடியரசுத் தலைவராக முன் மொழிந்ததாக செய்தி.


நமக்கெல்லாம் அளவிலா மகிழ்வு. அப்போதும் ஒரு மூத்த நண்பர் இல்லை இது சரியில்லை, துணைக் குடியரசுத் தலைவர் என்று ஆன பின் தாம் நேரடியாக குடியரசுத் தலைவர் என்று நியமிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.


காங்கிரஸ் வி.வி. கிரி போன்றோர் குடியரசுத் தலைவராக தேர்வின் போது சில சொதப்பல் வேலைகளை அந்தக் காலத்தில் இந்திரா பிரதமராக இருந்தபோது செய்த‌தாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.


எனைப் பொறுத்தவரை பா.ஜ.க‌ இது வரை நியமித்த குடியரசுத் தலைவர் என்ற வரையில் அந்தப் பொறுப்பை மிகத் திறமையாக கையாள்கிறது என்றே நினைக்கிறேன். கலாம், பிரணாப் முகர்ஜிக்கு மாற்றான நிலை வரும்போதே திரௌபதி முர்மு பெயர் பரிசீலனை செய்யும் நிலையில் இருந்ததாக செய்திகள் இருக்கின்றன. ஆனால் மாண்புமிகு இராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப் பட்டார்.


இப்போது மாண்பு மிகு திருமதி. திரௌபதி முர்முவுக்கு இந்த வாய்ப்பு.


இவர் நமது தமிழகத்தில் இருந்து ஆளுனராக வலம் வரும் தமிழிசையை விட வயதில் மூத்தவர், மேலும் மிகவும் பின் தங்கிய பழங்குடியினத்தில் இருந்து வந்திருக்கிறார். எனவே தமிழிசை பெயரை இவரது பெயர் முந்தி இருக்கிறது. தமிழிசை என்னதான் ஆனாலும் அரசியல் முன்னிலையில் இருந்த குடும்பம் மேலும் மருத்துவக் குடும்பம். ஆனால் திரௌபதி முர்மு சாந்தல் (சாந்தால்) என்னும் பழங்குடி அல்லது ஆதிவாசி மரபை சார்ந்திருந்ததும் ஒரிஸ்ஸாவின் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் இருந்து பிறந்தவர் என்பதும் ஒரு மிகப் பெரும் வாய்ப்பாகி விட்டது.


துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் பேரும் அடிபட்டது...ஆனால் அது நடக்கவில்லை.

மகன்கள் , கணவர் இல்லாத திரௌபதி முர்மு ஒரு பட்டதாரி, பேரூராட்சி கவுன்சிலராக இருந்து துணைப் பஞ்சாயத்து தலைவர், சட்டமன்றப் பிரதி நிதியாக‌  இரு முறை தேர்வு செய்யப் பட்டு, மாநில மந்திரியாகி அதன் பின் ஜார்கண்ட் ஆளுனராகி இருந்து இப்போது இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.பா.ஜ.கவில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு மற்றும் நல்ல சட்டமன்றப் பிரதிநிதி போன்ற விருதுகளும் பெற்றுள்ளார்.ரெய்ரங்பூர் என்ற அரவிந்தாஸ்மரத்தில் ஊதியமின்றி கல்வி கற்பித்திருக்கிறார் சேவை செய்திருக்கிறார்., மேலும் 1979 முதல் 1983 வரை ஒரிஸ்ஸா மாநில அரசில் இளநிலை உதவியாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.


எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு திருப்தி, மகிழ்வு. ஏன் எனில் நான் ஒரிஸ்ஸா , ம.பி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆதிவாசி பழங்குடியினர்க்கா என்னால் முடிந்த சேவை செய்தவன் அதற்காக அங்கெல்லாம் சென்று வாழ்ந்து வந்தவன். எனவே அவர்கள் எல்லாம் எவ்வளவு கடினமாக முயன்று மேல் எழும்ப வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.


நான் ஒரிஸ்ஸாவில் 1985  என நினைக்கிறேன் கோராபுட் மாவட்டத்தில் பணிச் சேவை செய்ய , எனது நண்பர்கள் புல்பாணி, மயூர்பஞ்ச் ஆகியவற்றில் இருந்தனர். அப்போது ஒரிஸ்ஸா சத்தீஸ்கர் எனப் பிரியாமல் பிஹார் ஜார்கண்ட் எனப் பிரியாமலும் இருந்த காலம்.


கோயா, கோன்ட்ஸ், சாந்தல் தோடா, தொதுவா, படுகா, பனையா, இருளா இப்படி இந்தியாவில் சுமார் 480 பழங்குடியின மரபுகள் உண்டு. அதில் தனி மொழிகளே இருக்கும் பெரும் பிரிவுகளும் உண்டு. இந்த சாந்தல் இனப் பழங்குடியினத்தார் ஒரிஸ்ஸா, ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம்,சத்தீஸ்கர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.


இவர்களின் பிரதிநிதியாக படித்து வளர்ந்தவர் இந்தியக் குடியரசுத் தலைவராக வாய்ப்பு பெற்றவராகி இருக்கும்  திரௌபதி முர்முவுக்கு இந்த நேரம் கட்சி பேதமின்றி பாகுபாடின்றி அனைவரும் ஆதரித்து அதுவும் தேர்வு செய்வது நல்லது அதிலும் ஒரு மனதாக ஆதரிப்பது இந்தியாவின் மேன்மையை பறைசாற்றும்.


 சுஷீல் குமார் ஷிண்டே கூட காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார் ஒருமுறை அவரும் பின் தங்கிய வகுப்பிலிருந்து மிகவும் முன்னேற்றம் பெற்றவர் அவரை எமது நண்பர் சுபாஷ்சந்திரன் தமது நிழலற்ற பயணம் என்ற புத்தகம் வழியே பறை சாற்றி இருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


குடியரசுத் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப் தானே யார் இருந்தால் என்ன பிரதிபா பாடீல் சினிமா பார்ப்பதற்கென்றே ராஸ்ட்ரபதி பவனத்தில் தொழில் நுட்ப வல்லமையுடன் தியேட்டர் எல்லாம் ஏற்படுத்திக் கொண்டு( செய்தியாக படித்ததுதான்) மக்கள் பணத்தை பாழாக்கவில்லையா என்றெல்லாம் கேள்விகளும் எழாமல் இல்லை...


கலாம் மக்கள் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். தமிழர்களுக்கென்று ஒரு தனி இடம் ஏற்படுத்தி இருந்தார்.

இந்த அம்மா கூட பழங்குடியனர்க்கு ஒரு மிகச் சிறந்த வாழ் நிலை நினைவலைகளை ஏற்படுத்தி தர வாய்ப்புகள் உள்ளன‌



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: இதைப் படிக்கும் எமது அன்பர்கள் அவரவரது பதில் கருத்துகளை

மறுபடியும் பூக்கும் என்ற வலைப் பூவில் நேரடியாக வழங்கலாம்.




Tuesday, June 21, 2022

பாலகிருஷ்ணன் குழுவினர்: கவிஞர் தணிகை

 பாலகிருஷ்ணன் குழுவினர்: கவிஞர் தணிகை



கடவுளும் கழிப்பறை சுத்திகரிப்பு தொழிலாளியும் ஒரே நேரத்தில் தம் முன் வந்தால் முதலில் சுத்திகரிப்பு தொழிலாளியை வணங்குவேன் அவர் தம் கரங்களுக்கு முத்தமிடுவேன் என்று சொன்னாராம் அன்னை தெரஸா


அது போல நான் 6 ஆண்டுகள் பணிச்சேவை செய்த கல்லூரியில் முதலில் ஆரம்ப கட்டத்தில் சரியான நபர்களே வாய்க்கவில்லை. ஏன் எனில் கல்லூரிக்கு வரும் பொதுமக்களாகிய பல் மருத்துவத்துக்கு வரும் வயது வித்தியாச வேறுபாடுள்ள பல்வேறுபட்ட நோயாளிகள், பயன்படுத்தும் நிலை என்பதால் முன் இருந்த எவருமே அதை ஈடுகட்டி சிறப்பாக அவரவரது பணிகளைச் செய்ய வில்லை செய்ய முடியவில்லை . இது பெரிய பிரச்சனையாகவே இருந்தது ஆரம்பக் கட்டக் காலங்களில். (குழந்தைகள், சிறுவர்கள்,ஆண்கள் , பெண்கள், வயது முதிர்ந்தோர் , ஊனமுற்றோர் இப்படி எல்லா வகையானவர்களும் உண்டு) அந்த பொதுக்கழிப்பறைகளின் தூய்மை பொறுப்பு மேற்பார்வை வேறு என்னிடம் விடப்பட்டிருந்தது பொது உறவு அலுவலர் என்ற முறையில் எல்லா பணிகளிலும் மூக்கை நுழைக்கும் பொறுப்பு என்னிடம் இருந்தது. அதற்கு தலைமை எனக்கு வசதி வாய்ப்புகளை பொறுப்புகளை வழங்கி சுதந்திரமான செயல்படும் நபராக வைத்திருந்தது.


அதில் எனக்கு சீராகிய ஒரு பணி பற்றி நிறைவு. அது சில ஆண்டுகளுக்கும் முன் பாலகிருஷ்ணன், செல்வராஜ்,சதீஷ், தங்க பொண்ணு என்ற நால்வர் குழுவாக‌ வந்து அந்த பணியில் இணைந்தனர். அனைவருமே தங்கள் பணியில் கவனம் செலுத்தினர். கழிவறை சுத்திகரிப்பு பணியாளர் என்று சொல்லாதீர்கள், ஹவுஸ்கீப்பிங் எனச் சொல்லுங்கள் என தங்களது விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் என்னிடம் வந்து எழுதிச் செல்லும் எல்லா விண்ணப்பங்களிலும் குறிப்பிடச் சொன்னார்கள் இந்தக் குழுவினர்.


மேலும் கல்லூரியில் இருக்கும் எல்லாக் கழிவறை தூய்மை மட்டுமல்ல, வேறு பணிகள் ஏதும் சொன்னாலும் கல்லூரி அவர்களை ஓய்வு நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் பயன்பட்டனர். அதிலும் முக்கியமாக பாலகிருஷ்ணன் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


ஏன் எனில் யானை போன்ற தோற்றம்,அந்தளவு உடல் பலமுள்ளவரும் கூட. ஆடி அசைந்து செல்லும் இரட்டை நாடி சரீரம் (உடல் வாகு) . பெரும் பாரமான பொருள்களை இடம் நகர்த்த இவரை அடிக்கடி கல்லூரிப் பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். சலிக்காமல் செய்வார்.


மேலும் ஏதாவது ஒரு பணியை குறிப்பிட்டு சொல்லி விட்டால் அதைச் செய்த பின் வந்து செய்து முடித்ததைக் குறிப்பிட்டு நம்மிடன் சொல்லி விடுவார்.


என்னிடம் மிக மரியாதையுடன் அனைவரும் நடந்து கொள்வார் என்ற போதிலும் இந்த பாலகிருஷ்ணன் போன்றவர்கள் மிகவும் நேசத்துடன் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


அவரவர் ஏற்றுக் கொள்ளும்  செயல்பணிகளில் செயல்படுவதில் ஒரு ஒழுங்கமைவு வந்து விட்டாலே யாவும் சிறக்கும் சீராகும் என்பதற்கு பாலகிருஷ்ணன் குழுவினர் ஒரு சான்று...


பொது உடமை கொள்கை உள்ள நாடுகளில் எல்லாம் இது போன்ற உடல் சார்ந்த பணிகளும், தூய்மை பணியாளர்களுக்கும் முன்னுரிமை, ஊதியத்தில் மற்றவர்களை விட அதிக சிறப்பு என்று கேள்விப்பட்டதுண்டு...

பி.கு: தங்களது வீடுகளில் அவரவர் இந்தப் பணிகளை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர்க்கு  கற்றுக் கொடுப்பதில் கற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை, செய்யும் தொழிலில் இழுக்கு என்பது ஏதுமில்லை. அவரவர் இடங்களை அவரவர் தூய்மை செய்து கொள்ளாமல் அடுத்தவரை அதைச் செய்ய நிர்பந்திப்பதும் கூட மனித குல வரலாற்றுக்கு சிறப்பு சேர்க்காத செயல்பாடுதான். சீனா ஜப்பான் போன்ற மிக முன்னேறிய நாடுகளில் இது போன்ற பணிகளில் அதிக கவனத்தை மக்களும், நாடும் அதன் அரசும் கொண்டிருப்பதாக கட்டியம் கூறும் சான்றுகள் உள்ளன.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: தமிழில் கொடிகட்டிப் பறந்த நடிகை இலட்சுமியின் மகள் ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் தமது ஏழ்மை தீர்க்க(Toilet Cleaning) அந்தப் பணியச் செய்யக் கூட விரும்புகிறேன் சரியான ஊதியம் இருந்தால் என்று சில நாட்களுக்கும் முன் தான் தமது நிலை பற்றி கொடுத்த செய்தியை காண நேர்ந்தது தொலைக்காட்சி தொடர்தாம் தமக்கு முக்கியம் என்றும் சினிமா சோறு போடவில்லை, இப்போது சோப் மற்றும் தூய்மை பொருட்களை வீடு வீடாக விற்று வருவதாகம் படிக்க நேர்ந்தது.





Saturday, June 18, 2022

பாஷா: கவிஞர் தணிகை

 பாஷா: கவிஞர் தணிகை

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

என்ற அந்த பாஷா பற்றியது அல்ல இது...

ஆனாலும் அது போல இந்த பாஷாவுக்கும் நிறைய ப்ளாஸ்பேக் எல்லாம் உண்டு

எனவே அதை வைத்தே கிண்டலும் கேலியுமாக அடிக்கடி பேசிக் கொள்வோம்...



 கல்லூரி பணிக்காலத்தில் மற்றொரு நண்பர் அல்லது தோழர் பாஷா.பாஷா என்றால் சக்கரவர்த்தி...இந்த பாஷாவின் முழுப் பெயர் மறந்து விட்டது. இப்படியே அழைத்து விளித்து கூப்பிட்டு பழக்கமாகி விட்டது.முழுப்பெயரைக் கூட கேட்டுவிட்டு இந்தப் பதிவுக்குள் போகலாமா என்ற எண்ணம் பாவம் அவர் தூக்கத்தை நாம் ஏன் கலைக்க வேண்டும் என விட்டு விட்டேன். எப்போதும் எனது அழைப்புக்கு அது எந்த நேரமானாலும் பொறுப்பாக பதில் அளிப்பவர் அது செல்பேசியானாலும் நேரிடையானாலும்.


  எனது 5 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாஷா என்றிருந்தார், அவருக்கும் எனக்கும் எந்தவித பிடிப்பும் இல்லை ஏன் எனில் அவர் அப்படித்தான் எதிலும் பட்டுக் கொள்ள மாட்டார். அவரது மகன் கூட ஏதோ காதல் தோல்வியில் பல்லாண்டுகளுக்கு முன்பு காலமாகி இருந்ததை கேள்விப்பட்டேன். ஆனால் இந்த பாஷா அப்படி இல்லை எல்லா கோணங்களிலும் பயணிப்பவர்.எல்லோருடனும் கலந்து பழகுபவர் தம்மால் ஆன நன்மையை செய்ய நினைப்பவர்,மேலும் எல்லோருடனும் ஒரு உரிமையும் எடுத்துக் கொள்பவர் அவர்களுக்கு தம்மால் ஆன உதவியும் செய்ய நினைப்பவர் அதற்காக சிந்திப்பவர்.அவருடைய மனத்தாங்கலை குறை நிறைகளை என்னுடன் எப்போதும் மனந்திறந்து வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்.


இவரை அவன் இவன் என்று நான் அழைக்குமளவு எனக்கு நெருக்கம். எனது தம்பி (போன்றவர்)

இவருக்கு மதப் பிடிப்பு எல்லாம் அறவே இல்லை என்பதை எங்கள் அறிமுக சந்திப்பிலேயே சொல்லி விட்டார். அல்லாஹு அக்பர், மாஷா அல்லா, இன்ஸா அல்லா என்றால் என்ன பாஷா என்ற விளையாட்டாக கேட்ட‌போதும் (ஏன் எனில் என்னிடமே குரான் தர்ஜமா உள்ளது ஒரு புறம் அரபி, மறு புறம் தமிழ் மொழிபெயர்ப்புடன், அதை நான் வாங்க நிறைய பட்டிருக்கிறேன் அதெல்லாம் வேறு) இவரது வாழ்க்கைத் துணைவியாரைக் கேட்டுச் சொல்லுமளவுதான் இவருக்கு கடவுள் பிடிப்பு. ஆனால் இயற்கைக்கு மாறு செய்யாத உள்ளம். மேலும் இவரைப் பற்றி நான் ஏன் பதிவு செய்ய அவசியம் என்றால் ஏறத்தாழ 80 சதவீதம் இறப்பின் விளிம்பு வரை கோவிட் 19ன் போது பயணம் சென்று வந்தவர். அப்போதும் அங்கிருந்தோரை உற்சாகமாகத் தேற்றி தானும் தேறி வந்து விட்டவர். இப்போதும் கழுத்தில் பெல்ட் போட வேண்டிய இன்னும் என்னன்னவோ உடல் சார்ந்த பிரச்சனை எல்லாம் நிறைய‌ உண்டு இருந்த போதும் மிகவும் துணிச்சலாக வாழ்க்கையை எதிர் கொண்டு வாழ்ந்து வருபவர். 


இரண்டு பெண்குழந்தைகள் இவருக்கு. 

இவரும் நானும் கிறித்தவ, முகமதிய, இந்து மத நண்பர்கள் 5 பேருக்கு மிகாமல் ஒரு இந்திய மத ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கப் பயணம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டோம். ஆனால் திட்டமிட்டதோடு சரி....பைக் பிரியர். இவரது இரு சக்கர வாகன பயணத்தை பெரும்பாலும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு நான் கடிந்து கொண்டதுண்டு.



பாகிஸ்தான் ஏன் இன்னும் கிரே பட்டியலில் பிரான்ஸின் எப்.ஏ.டி.எப் வைத்துள்ளது?

இந்தியா அமைதியாக வாழும் சூழலில் உள்ள நாடுகளின் பட்டியலில் ஏன் இன்னும் 135 ஆம் இடத்தில் இருகிறது?

 எலன் மாஸ்க், பில்கேட்ஸ் ISRO, NASA, ASTRONOMY,SKY LAB இப்படி எந்தக் கருப்பொருளில் வேண்டுமானால் இவருடன் உரையாடலாம். அவ்வளவு சமூக அக்கறை. தெரிந்தவரை பகிர்ந்து கொள்வார். மொத்தத்தில் பாஷா நல்லவர்.


மனிதர்கள் தாம் முக்கியம் உயிர்கள் தாம் முக்கியம்

மதங்கள் அல்ல, சாதிப் பிரிவினைகள் அல்ல நிறவேற்றுமை அல்ல வறுமை ஒழிப்பு மனித மேம்பாடு அவசியம் அவற்றுக்கு மதங்கள் உதவட்டும்...எனக்கும் கூட  மாற்று மதக்காரர்களுடன் பழக பேச மிகவும் ஆசை உண்டு சிறு வயது முதலே நினைவு தெரிந்தது முதலே ஏன் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே  குழந்தை திரேசா என்ற பள்ளி ஆசிரியையுடன் நட்பு கொண்டதில் இருந்தே சொல்லலாம்...

 அவர்கள் வாழ்வின் முறை பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் உண்டு. எனவேதான் மதங்களைக் கடந்தவன் என்ற முறையில் பைபிள், குரான், கீதை எல்லாம் நூலாக வைத்துக் கொண்டு அதை துய்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


நன்றி பாஷா!

நீ சொன்ன ஆப்பென் APPEN செயலி சென்று என்னால் பணி புரியவே முடியவே இல்லை...உள்ளே நுழைந்ததோடு சரி.ஒன்று அதற்கான ஓய்வு அல்லது மனநிலை இல்லை,இரண்டு அது அவ்வளவு எளிதாகவும் இல்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Friday, June 17, 2022

சந்திரன் எலக்ட்ரீஷியன்: கவிஞர் தணிகை

 சந்திரன் எலக்ட்ரீஷியன்: கவிஞர் தணிகை



அந்தக் கல்லூரியில் ப்ளம்பராக பணியில் சேர்ந்து மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே பணி புரிந்து வருகிறார் சந்திரன். கல்லூரி இல்லாத காலத்தே அந்த நெடுஞ்சாலை எப்படி ஒரு விபத்து சாலையாக இருந்தது அது எப்படி ஒரு மனிதர் சந்தடியே இல்லாத காடாக இருந்தது அது பற்றிய அனுபவங்கள் எல்லாம் அவர் பகிர்ந்ததால் என் போன்றோர் தெரிந்து கொண்டது உண்டு.

 கல்லூரியில் பிறர்களின் பிணக்கு தர மத்தியஸ்தராய் இருந்து நாட்டாமை செய்யுமளவு நல்ல பக்குவம் உள்ளவர். இவர் ஒரு நிலக்கிழார் கூட இவர்கள் சகோதரர்கள் எல்லாம் சேர்ந்து விவசாயமும் பார்க்கின்றனர். அத்துடன் இவர் விசைத்தறித் தொழிலையும் நடத்தி வருகிறார். எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இவர் ஒரு சிறு குறு முதலாளி. ஆனால் அந்தக் கல்லூரியில் இவர் தற்போதும் மின் பணியாளராக பணி செய்து வருகிறார். ஆனால் படிப்பறிவு அல்லது தொழில் நுட்பம் எல்லாம் படித்து இவர் ப்ளம்பராகவோ, அல்லது மின் பணியாளாராகவோ இல்லை எல்லாம் அனுபவம் கற்றுத் தந்த பாடம். நல்ல அனுபவம் நல்ல முறை சார்ந்த கல்வியை விட அதிகம் பொருள் பொதிந்ததாய் மாறி விடுகிறது சிலரிடம்



கல்லூரி நிர்வாகத்தை ஒரு மாற்று குறைத்துப் பேசினாலும் அதை ஈடுகட்டி பேசுவார். விட்டுத் தர மாட்டார். இவரிடம் மிக அதிகமாக பணம் எப்போதும் புழங்கிய நாட்கள் உண்டு. அப்போது மாணவர்களுக்கு அகால நேரத்தில் ஏதாவது விபத்து போன்றவை நேர்ந்தாலும் கூட கல்லூரி நிர்வாக இவரைப் பணிக்கும் . தம் கைப்பணத்தில் இருந்து செலவளித்து விட்டு பிறகு பெற்றுக் கொள்வார்


எனக்கும் கூட கல்லூரி வளாகத்தில் இருக்கும் போது திடீர் செலவு ஏதாவது ஏற்பட்டது எனில் : சந்திரன் இவ்வளவு வேண்டும் என்று கேட்டவுடன் தமது சொந்தப் பாக்கெட் பையில் இருந்து எடுப்பது போல இவரிடமிருந்து கிடைக்கும். அதை தவறாமல் மறு நாள் நான் வீட்டில் இருந்து செல்லும்போது முதல் வேலையாய் அவரைப் பார்த்து கொடுத்து விடுவேன் என்பது வேறு...


ஏன் இவரைப் பற்றி இந்தப் பதிவு எனில் இவர் ஒரு நாள் கல்லூரி வரும்போது அரியானூர் என்ற  ஒரு இணைப்புச் சாலை கூடும் வழியில் மற்றொரு இருசக்கர வாகனசாரியால் இடித்து வீழ்த்தப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்து பிழைத்து தேறி இப்போது நல்ல கடவுள் கொடுத்த வரத்தால் நன்றாகவே இருக்கிறார். மரணத்தின் விளிம்பைக் கண்டவர்கள் பெரும்பாலும் வாழ்வின் தருணங்களை உணர்ந்து கொள்கின்றனர், அடுத்தவர்க்கு தங்களால் முடிந்த உதவியையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். வாழ்க்கைச் சுருக்கம் என்ன என்று தெரிந்து கொள்கின்றனர்.


சந்திரன் எனது நல் நண்பர்

எப்போதும் அவருக்கும் எனக்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வந்தது

எனக்காக அவரும் சிந்தனை செய்து நான் அந்தக் கல்லூரியில் இன்னும் அதிக காலம் இருக்க வேண்டும் என நினைத்தவர்களுள் இவர் முக்கியமானவர்



நன்றி சந்திரன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Wednesday, June 15, 2022

பனிமேதாஸ்: கவிஞர் தணிகை

 பனிமேதாஸ்: கவிஞர் தணிகை



சேலம் குகை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இவரைச் சந்தித்தேன். காட்சிக்கு எளியவர். இவருக்குக் கீழ் 3 உதவி தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். இவருக்கு மிகவும் தாமதமாக நல்லாசிரியர் விருது கிடைத்தது.


பிரதிபயன் கருதாது யார் என்று தெரியாதார்க்கு நாம் செய்யும் உதவியே உதவி. அப்படி உதவியவர்தாம் இவர். முதல் சந்திப்பில் அறிமுகப் படுத்திக் கொண்டேன் . அது ஒரு காலை பிரார்த்தனை நேரம். பள்ளியின் சுமார் 4200 மாணவர்கள். மேடையேற்றப் பட்டோம். எனது பேச்சை வெகுவாக இரசித்தனர். ஒரு சிறுவன் வந்து எனது கைகளைப் பற்றிக் கொண்டு என்ன பேசீனீங்க, எனக்கு சொல்லுங்கள் என்றான். 


ஏன் நீ கவனிக்க வில்லையா?

இல்லை நான் லேட்டாக வந்தேன்...

ஏற்கெனவே இருந்தவர்களைக் கேட்டுக் கொள்ளேன் என்றதற்கு

நீங்கள் சொல்லுங்கள் என்றான்...



தடை இல்லாமல் மாணவரிடையே பேச அனுமதித்தார் எனக்கும் அப்துல்கலாம் மாமனிதர்க்கும் இருந்த சிறு தொடர்பு மந்திரமாக வேலை செய்தது.எப்போது கேட்டாலும் எங்கள் கல்லூரி சார்பாக முகாம் செய்ய ஒத்துழைத்தார். தன்னால் முடிந்தவரை நான் கேட்டதை செய்து கொடுத்தார்.


 இதைப் பற்றி இவர் பற்றி ஏன் நான் சொல்ல வேண்டும் சொல்கிறேன் எனில் உள்ளூர் ஒரு பள்ளியில் 3 நாள் முகாம் ஏற்பாடு செய்து விட்டு இரண்டு நாளில் முகாமை முடித்து 3 ஆம் நாளில் நடத்த விடாது முக்கியமாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்க்கு சென்று சேர வேண்டிய கல்வி கேள்வியை  தமது சுய விருப்பு வெறுப்புக்காக தடுத்த பள்ளி முதல்வர்களை நான் கண்டதுண்டு, 

மேலும் தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100 என்ற ஒரு சிறு மாணவச் செல்வங்களுக்கு பயன்பட்ட சிறு நூலை தமிழ் கூறும் நல் உலகெலாம் பரப்ப வேண்டும் என்று எல்லா பள்ளிகளையும் அணுகிய போது அந்தந்த தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் எப்படி இருந்தனர் என்றெல்லாம் பார்த்த அனுபவம் உண்டு. எனவேதான் இவர் பற்றி நான் சொல்ல அவசியமாகிறது.


சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பல்லாயிரம் பேருக்கு சென்று சேரவேண்டிய பொதுநலத்தை தடுக்க நினைப்பாரை எல்லாம் நமது பூமி ஆசிரியராக வைத்திருக்கிறது ஆனால் இந்த மனிதர் பனி மேதாஸ் ஒரு பணி மேதாவி...


இவர் அந்தப் பள்ளிக்குள் இணைத்துக் கொண்ட போது சுமார் 1200 பள்ளி மாணவர்கள் என்று இருந்ததை இவரது காலத்துள் 4000 மாணவர்களுக்கும் மேல் என்று மாற்றி காட்டி இருந்தார். இவர் இப்போது பணி ஓய்வில் இருக்கிறார்.. மேலும் எனக்கும் அவருக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்தே வருகிறது. மாவட்டத்தில் பெரிய பள்ளி அத்துடன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அதிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ள பள்ளி.


இவர் போன்றோர் தம் வேலையை வேலையாகச் செய்யாமல் சேவை என்று செய்வதால் தாம் செய்ததால் தாம் இந்த பூமி இன்னும் தமது அச்சு மாறாமல் சுழன்று கொண்டிருக்கிறது... நான் சந்தித்ததில் மிகவும் பொறுப்பான மனிதர்களில் இவரும் ஒருவர்.


நாளையே சாவது போல சில காரியங்களைச் செய்ய வேண்டும்

நாள் எல்லாம் நிற்பது போல அந்தக் காரியம் இருக்க வேண்டும் எனச் சொல்லும் காந்தியம்


அதன் அடிப்படையிலேயே இவரைப் பற்றிச் சொல்ல பல நாட்களாக எண்ணி இருந்து இன்று சொல்லி இருக்கிறேன்

இது போல இவர் போல எனது சிந்தையில் இடம் பெற்ற சிலர் பற்றி முடியும் போது இன்னும் சொல்வேன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, June 13, 2022

காந்திய தத்துவத்திற்கு வேளை வந்து விட்டது: கவிஞர் தணிகை

 காந்திய தத்துவத்திற்கு வேளை வந்து விட்டது: கவிஞர் தணிகை



சண்டையிட்டாலும் சகோதரரன்றோ என்றார் பாரதி...

அது இப்படி மதச் சண்டை போடுவது பற்றி அல்ல...

சிதம்பரம் கோவில் கணக்கு வழக்கு தமிழக பிரச்சனை ஆனால் உச்ச நீதிமன்ற பிரச்சனை

அதே போல அல்லா பெரியவரா, சிவலிங்கம் பெரிதா, யேசு தேவகுமாரனின் தேவன் பெரியவரா

என்ற கேள்வி எல்லாம் விடுத்து

வறுமை பிணி அகற்ற‌

உலகெலாம் நீர்ப்பஞ்சம் தவிர்க்க‌

நிற வேற்றுமை தவிர்க்க‌

ஆண்டான் அடிமை வேற்றுமை தவிர்க்க‌

பொருளாதார சமன் வளர 

இப்படி ஏராளமான பணிகள் பிணி தீர்க்க மனிதகுலத்திடம் இருக்க...

உலகு உக்ரைன் ரஷியா பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இன்றி

எரிபொருள் விலை ஏற்றம் எல்லா பொருட்களின் விலையேற்றம் பற்றி எல்லாம் சிந்தையை வைக்காமல் இருக்கும் நிலையில் வீடுகள் இடிப்பு, உயிர்கள் பறிப்பு இப்படியே போனால் உலகு என்ன ஆவது?



சமரசம்: சமன் செய்து கொள்ளும் பாங்கு

சமயோசிதம்: உரிய நேரத்தில் புத்தி கூர்மையுடன் செயல்படுதல்

சாத்வீகம் என்றால் வன்முறையற்ற போராட்ட குணம் பற்றல்


இதைப் பற்றி எல்லாம் காந்தியம் , வள்ளலார் வழிகள், வள்ளுவம் எல்லாம் சொல்லியதே... ஆனால் இவை பற்றி எல்லாம் எவரும் பேசுவதாகக் காணோம்.எல்லாருக்கும் ஒரு பயம் எங்கே இது பற்றி நாம் எழுதினால் பேசினால் நமக்கு வம்பு வழக்கு வந்து விடுமோ என்று...


இந்தியக் குடிமக்களுக்கு என்று ஒரு குறைந்த பட்ச ஒழுக்க வரை முறைகள் தேவைதான். அது சட்டமா நீதியா எப்படி இருந்தாலும் அதை அனைவரும் சமமாக கடைப்பிடிக்கும் பாங்கு இருக்கிறதா என்பதுதான் அதை அமல்படுத்துவதுதான் சிறந்த ஆளுமையாக இருக்க முடியும்.


கிறித்தவத்துக்கும், முகமதியத்துக்கும் உலகெங்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது உரிய நேரத்தில் அவர்களை எல்லாம் பிணைத்து எதிரொலிக்கிறது பிரதிபலிக்கிறது அது தெரஸா வந்த வழியில் சமூகப் பணியாய் சமுதாயப் பிணி தீர்க்க பயன்படுவதாக இருக்கும் வரை மனித குலத்திற்கு நல்லது.

இறை இணையற்றவர் என்ற கருத்து எல்லா மதங்களிலுமே உள்ளதுதான், ஏன் கடவுள் மறுப்பு சிந்தனை என்பதும் அவர்களே உலக மக்கள் தொகையில் அதிகம் என்றும் கூட புள்ளி விவரங்கள் உள்ளன‌


சில மதங்களில் ஒரு சில குருமார்கள் மட்டுமே வந்தனர்.

இந்து மதம்  நிறைய குருமார்களைக் கொண்ட மதம்... இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சித்பவானந்தர், சாந்தானந்தர். சச்சிதானந்தர், அரவிந்தர், ஜெ.கெ, ரஜனிஷ், ஆதிசங்கரர், இராமானுஜர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...மேலும் கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களும் இருக்கின்றனர் மத அடிப்படையில் இருந்து கொண்டே...

எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்பதெற்கெல்லாம் இடமே இல்லை அப்படி நினைத்தால் அது விவேகானந்தர் சர்வ சமய ஆராய்ச்சிக் கழகத்தில் சிகாகோவில் பேசிய பேச்சிடையே சொல்லிய கிணற்றுத் தவளை கதை தரும் விடையே அதற்கான பொருத்தமான பதிலாகும்.



எனவே ..ரஹ்மான் சிவலிங்கத்தை அவமதித்து பொது ஊடகத்தில் பேசியதாகவும், நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் எதிர்வினையாற்றியதாகவும் அதற்கான பாதிப்புகள் உலகெலாம் பரவி வருவதாகவும் இருக்கும் செய்திகள் அதனால் ஏற்படும் வேதனைகள் உலகத்தின் மனிதகுலத்திற்கு நல்லதல்ல....இதில் யாரை தண்டிக்க வேண்டும் யாரைக் கண்டிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை...யார் தவறு செய்திருந்தாலும் தவறு தவறுதான் அரசு உரிய பார்வையில் கடமையாற்ற கடன் பட்டிருப்பதுதான்.


பிற உயிர்களை எல்லாம் கூட

 காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் பார்க்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம், என்பதுவும்,

 வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்றதுவும்,

 தனி மனிதர்க்குணவில்லையெனில் ஜகம் அழிந்து போகட்டும்(ஜகத்தை அழித்திடுவோம்: காட்டை அழித்து விளைநிலமாக்குவது அல்லது உலகை அழித்து விடுவதான பார்வை கூட அங்கு அதிகம்தான்....) என்ற பார்வையும் தான் ஆன்மிகத்தின் அருகே மனித குலத்தை இட்டுச் செல்லும்



அல்லாமல்

சகோதரர்களை அழித்து வரும் அச்சுறுத்தி வரும் போராட்டங்கள் எந்தப் பக்கம் என்றாலும் யாவும் நிறுத்தப் பட வேண்டும். கண்ணுக்கு கண், ஊனுக்கு ஊன் என்றால் உலகே சுடுகாடாகிடும் என்ற காந்தியத்தின் வாக்கு நினைவு கொள்ள வேண்டும். காந்தியை தேசப்பிதா என்று சொல்லி விட்டு அதற்கு மாறாக செயல்படுவது பொருந்தாது.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: இது பற்றி உலகின் எல்லா தலைவர்களும், எல்லா மதகுருமார்களும் பேச வேண்டும் மனித குல ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் செயலாற்ற வேண்டும் ( பாடுபட வேண்டிய அளவு பெரிதல்ல ஆனால் செயலாற்ற வேண்டியது என்று அதற்காகவே சொன்னேன்...வறுமை ஒழிப்பே பாடுபட வேண்டியது)

Saturday, June 11, 2022

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வெற்றித் திட்டமா? கவிஞர் தணிகை

 1. சுமார் 30 கோடி பேருக்கும் மேல் பயனடைந்து பணி புரிந்து வருவதாக குறிப்புகள் உள்ளன‌

2.  ஆண்டுக்கு 100 நாள் வேலை  என்பது 150 நாட்களுக்கும் கூட அதிகப் படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது( ஆதாரங்கள் இருப்பதாக தேடல் நடத்தவில்லை)

3. மாநிலத்துக்கு மாநிலம் சுமார் 220 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை கூட வழங்கப் படுகிறது நாள் கூலி.

4. நரசிம்ம ராவ் பிரதமராக 1991ல் ஆரம்பித்த இந்த திட்டம் சட்டமாகவே 2005ல் ஆனதாக குறிப்பு உள்ளது.

5. 731 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டு வருவதாகவும் அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன‌




ஆனால் இந்த திட்டத்தில்


1. போலித்தனமாக பெயர்கள் சேர்க்கப் பட்டு பணம் கையாடப் படுவதாகவும் செய்திகள் உள்ளன‌

2. விவசாயம் இந்த திட்டத்தால் பாதிக்கப் படுவதாக  உழவுத் தொழில் புரிவோர் ஒரே கருத்தை சொல்லி வருகின்றனர்


3. இந்த திட்டத்தால் பெரும் பயன்கள் ஏதுமில்லை பணி புரிவோர் பெரும்பாலும் வேலை செய்வதாக நடித்து வருகின்றனர் உண்மையான குறித்த  நேரம், உழைப்பு இதில் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் நிறைய பொது நலத் திட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் சாட்சியங்கள் இருக்கின்றன புள்ளி விவரங்களாக புகைப்படங்களாக...




4. சில ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இந்த திட்டத்தை விவசாயத் தொழிலுடன் இணைத்து செய்ய முற்படும்போது (நில உடமையாளர்கள் கொடுக்கும் ஊதியம், பங்கு, போன்றவற்றுடன்) ஏரி, சாலை, நீர்த் தேக்கம் பணிகளில் எங்களுக்கு இந்தளவு கடின பணி இல்லை எனவே இந்தப் பணிக்கு வர மாட்டோம் என மறுக்கப் பட்டு இந்தக் கூட்டுறவு விவசாய முன்னேற்றப் பணிகளுக்கு வருவதில் இதன் பணியாளர்கள் ஆர்வம் காட்டாமல் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் செய்திகள் இருக்கின்றன‌

5. இதில் பணி புரிய வயது வரம்பு இல்லை 18 வயதுக்கும் மேல் எந்த வயதில் இருந்தாலும் அனுமதிக்கப் படுவர்

ராஜஸ்தானில் 105 பெரியவர் பணி புரியும் தகுதி இருக்கிறது என்று அனுமதிக்கப் பட்டிருக்கிற செய்தி இருக்கிறது.



நண்பா


முன்னால் இல்லை இல்லை மேனாள் நீதிபதி என்ற முறையில்


இந்த திட்டம் பற்றி உள் ஆய்வை நடத்தி மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை தரலாமே...

சத்துணவுத் திட்டம் என்னதான் மேல் கீழ் மட்ட தவறுகள் இருந்த போதும் பெரும்பாலும் பிள்ளைகளுக்கு உணவு போய்ச் சேர்கிறது என்பது போல‌

இதில் பல குறைபாடுகள் நிகழ்ந்த போதும் ஏழைகளுக்கு பணம் சேர்கிறது என்ற நோக்கத்தில் எடுத்துக் கொள்வதா?

அல்லது சரியான உழைப்பை வழிப்படுத்தாமல் ஏமாற்றுகிற உணர்வை அரசே ஊட்டி விட்டு வாக்கு வங்கிக்காக பணம் தருவதாக கொள்வதா?


முடிவாக நான் மேலோட்டமாக அணுகி உள்ளேன். நீங்கள் ஆர்வமுடையோர் இது பற்றி நன்றாக ஆய்வு செய்து புள்ளி விவரங்களுடன் தெளிவு படுத்துவதை வரவேற்கிறேன்.மதுவும் அரசு வருவாயும் நுகர்வோர் உடல் நலக் கேடும் தெளிவாகத் தெரிகிறது ஆனால் இது போன்றத் திட்டங்களில் இன்னும் தெளிவு தேவைப்படுகிறது...


ஒரு பொறியிலிருந்து அக்கினிக் குஞ்சாய் புறப்படு...


உச்ச நீதி மன்றம், சிதம்பரம் நடராஜர் கோவில்,தீட்சிதர்கள், கணக்கு காண்பிக்க மறுப்பு, தமிழக அரசு,அமைச்சர் சேகர் பாபு. இதைப்பற்றிய நினைவை எல்லாம் உதறி விட்டு  ஒரு பதிவு...



நன்றி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: தமிழ் நாட்டில் விவசாயத் தொழிலுக்கு ஆள் கிடைக்க மாட்டேன் எனச் சொல்லப் படுகிற கூக்குரல் கேட்டதால் இந்தப் பதிவு.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வெற்றித் திட்டமா? கவிஞர் தணிகை

Friday, June 10, 2022

நான் ஏன் எழுதுவதை மறுத்து வருகிறேன்?: கவிஞர் தணிகை




ஏன் இந்த இடைவெளி எதற்கு இந்த இடவெளி....


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே: தாயுமானவர்.



எழுத ஏராளமான சம்பவங்களும் நிகழ்வுகளும் காலப் போக்கில் நடந்தேறி வருகின்றன உலகிலும், ஊரிலும், நட்பிலும் உறவிலும் வீட்டிலும் அரசு அலுவலகங்களிலும் குணம் மாறாத அலுவலர்களிடமும்.கால் போன போக்கில் எல்லாவற்றையும் எழுதி விட முடியாது, முடிவதில்லை. அப்படி எழுதும் எழுத்துகளால் என்ன என்ன விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்ற காரணம் கருதியே அந்த எழுத்துகளும், எண்ணங்களும் பின்னுக்குத் தள்ளப் பட்டு காலம் முன்னேறி சென்று விடுகிறது.


முன்பெல்லாம் எல்லாவற்றையும் எழுதி விடுவேன்... ஆனால் இப்போதோ எழுதும் முன் அதை வெளியிடும் முன் பதிவு செய்யும் முன் பல முறை யோசித்தே தள்ளி விடுகிறேன்.


பெரியார் போல எழுதாதே, அறிஞர் அண்ணா போல எழுது என்று ஒரு கலைஞர் கூறினார்


எழுத்து அதைப் படிப்பாரிடம் என்ன எப்படி விளைவு ஏற்படுத்தும் என முன் கூட்டியே தெரிந்த தொலைநோக்குடன் எழுதுங்கள் என்றார் ஒரு பேராசிரியர் நண்பர்.



கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ?....பாரதி

யாரிடம் குறையில்லை யாரிடம் நிறையில்லை...என்று பார்த்தால்...

எல்லோரிடமுமே குறை நிறைகள் காணப்படுகின்றன. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..

தவறே செய்யாதார் யார்? மகாத்மாக்கள் கூட தங்கள் தவறுகளிலிருந்து மீண்டவர்களே...

தவறு குறைவாகச் செய்பவர், அதிகமாகச் செய்பவர் என்று வேண்டுமானால் கணிப்பு செய்து கொள்ளலாம். நாடும், அரசும், மக்களும் அலுவலகங்களும், அலுவலர்களும் அனைவரையும் தவறு செய்யவே குற்றம் இழைக்கவே நிர்பந்திக்கிறார்கள்.


கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் கூட ஏற்றுக் கொள்ள முடியாமை, பரந்த மனப்பான்மை இல்லாமல் தற்பெருமையும், குறுங்குழுவாதமுமான மனிதர்கள்... எனவே... உலகின் போக்கு சற்றும் வளையாதது அது நாய் வாலாகவே என்றும்...

ஒரு தனி மனிதரைக் கூட ஒரு அறப்பணிக்குள் முழுதாக கொணர்வது என்பது கேள்விக்குறிதான். அவராக மாறினால் அன்றி...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...பட்டுக் கோட்டை



குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்

மிகை நாடி மிக்க கொளல்...


ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால், எழுதினால் இன்னொருவர் கோபித்துக் கொள்வாரே என்ற தயக்கம் அதனால் அவரால் ஒருவேளை வந்து சேரவேண்டிய கிடைக்க வேண்டிய பயன், பலன் கிடைக்காமல் அவர் தடுத்து விடுவாரோ என்ற தயக்கம்


உண்மையை அப்படியே எழுதினாலே வம்பு வந்து சேருமே என்ற தயக்கம்


நடந்த சோகத்தை அப்படியே எழுதினால் அதிலும் ஏதாவது முரண், காயம் விளைந்திடுமோ என்ற தயக்கம்

இலஞ்ச இலாவண்ய ஊழலைப் பற்றி எழுதினால் இவனுக்கு இதைத் தவிர வேலை இல்லை என்ற எதிர்ப்பு

மது, போதை, புகை பற்றி எழுதினால் அரசும் அதன் நுகர்வோரிடம் வந்து சேரும் எதிர்ப்பு,40 ஆண்டுக்கும் மேலாக எழுதி, பேசி என்ன கிழித்து விட்டோம் என்ற தோல்வி மனப்பாங்கு,

உக்ரேன், ரஷியா போர், இந்து மத சிவலிங்கம், முகமதிய முகமது நபி இப்படி உலகளாவிய பிரச்சனை,

உணவுக் கலப்படம் சிறு பெண் வன்புணர்ச்சி, கற்பழிப்பை விடக் கொடுமையானது அது பற்றி எனக்கு ஏதாவது கருத்தளியுங்கள் என்ற நண்பரின் வேண்டல், அமெரிக்க மைனர்களின் துப்பாக்கி கலாச்சாரம், நல்ல சினிமா...நல்ல புத்தகம், நற்பணிகள்.....



நண்பா எனது தொடுதிரைக் கைபேசியை நாளுக்கொரு முறை உள்ளக வைப்பை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்துக்கு உள்ளாக்கி உள்ளாய் அத்தனை குழுக்கள், அத்தனை உள்ளீடுகள்... பதிவேற்றமே இல்லாமல் போனாலும் 80 முதல் 90 சதம் அவை செயலி முடுக்கம் செயல் முடக்கத்தில்...




தற்புகழ்ச்சிக்காக எழுதல், தம் திறம் போற்றி எழுதல், பேசுதல் பொருள் பலமே வாழ்க்கை என்ற பேச்சு, எழுதல்

தமை வெளிப்படுத்திக் கொள்ள எழுதல், பேசல், இதை எல்லாம் விட்டு விட்டு


சிறிது காலமாக நான் சந்தித்த நல்ல நண்பர்கள் சிலர் பற்றி அவர்கள் வாழும்போதே சொல்லி விட நினைத்தவாறே இருக்கிறேன் எழுதாமல்...எழுத வேண்டுமே என்று நினைத்தபடியே...


சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும்

புத்தரும் யேசுவும் உத்தமராம் காந்தியும் 

எத்தனையோ உண்மைகளை எழுதி 

எழுதி வைச்சாங்க...


எல்லாந்தான் படிச்சீங்க‌

என்ன பண்ணிக் கிழிச்சீங்க...

மறுபடியும் அதே பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.


இராமலிங்க வள்ளலார், வள்ளுவர் இப்படி யார் வந்த போதும்

அது 

கடைவிரித்தேன் கொள்வாரில்லை

கடையை கட்டிக் கொண்டேன் என்பதே.. 

கடைசிச் செய்தியாக...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



பி.கு: விக்ரம், டான், நயன் தாரா விக்னேஷ் சிவன் நாட்டு நடப்பின் தலைப்புச் செய்திகள்...


https://www.youtube.com/watch?v=zFZ_rxpx14k