Tuesday, October 25, 2022

பட்டாசு சத்தத்திடையே ஒரு பசு மரத்தாணி: கவிஞர் தணிகை

 பட்டாசு சத்தத்திடையே ஒரு பசு மரத்தாணி: கவிஞர் தணிகை



யானைப் போர் குன்றேறி பார்த்தது போல உயரமான இடத்தில் இருந்து நேற்று மாலை வாண/ வான வேடிக்கை பட்டாசு வெடிப்புகளை ஆபத்தின்றி அழகாக செலவின்றி  இரசித்தேன்.என்னதான் முயன்றாலும் மனிதம் இயற்கையை வெல்ல முடியுமா?


பனிக்காலம் ஆரம்பித்து விட்டது.பாஸ்பரஸ், பொட்டாஷ்,சல்பர் இப்படி இரசாயனக் கலவையால் ஏற்பட்ட நச்சுப் புகைக் கூட்டம் மேல் ஏற முடியாமல் புவியின் மிகக் குறைந்த உயரத்திலேயே சுவாசத்துக்கு இடையூறானது.முகக் கவசம் அணிவது அவசியமானது. தலைக்கு தொப்பி கண்ணுக்கு கண்ணாடி எல்லாமே தேவைதான். தெருவெங்கும் சாலை எங்கும் ஒரே குப்பை. அதில் வேறு அமாவாசை எலுமிச்சைகளும், இப்போதுதான் சாலைகளில் ஆயுத பூஜைக்கு உடைத்த பூசணிக்காய்களின் நினைவு துடைத்து எறியும் முன்பே அடுத்த அலை...


கடந்த ஈராண்டாக கோவிட் 19 காரணமாக கொண்டாட தடையில் இருந்ததாலோ ஒரே வேடிக்கை மயம். பொருளாதாரக் கரிகள் நிறைய இந்த ஆண்டு பெருத்து விட்டன.என்னதான் அரசு காலை 6 மணி முதல் 7 வரை மாலை அல்லது இரவு 7 மணி முதல் 8 மணி வரை என்று எச்சரித்த போதும் அவரவர் விருப்பப் படி கொண்டாட்டம்.


இடையே குடும்பத்து உறுப்பினர் இறந்து போன குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்ற நினைவும்...


என்ன செய்வது சிறு பிள்ளைகளை இதற்காக எல்லாம் கால நேரம் அனுசரிகாமல் வெடிக்கிறார் என்று கூர்ம சிறார் பள்ளிகளுக்கு கொண்டு சென்று அடைக்கவா முடியும்? பெரியவர்களே தங்கள் சுற்று வீட்டு இடங்களை விட்டு விட்டு வெளியில் சிறு நீர் கழிப்பதும், நாயை வெளிக்கு போகச் செய்வதுமான நாடாயிற்றே இது?


சட்டம் நீதி ஒழுங்கு யாவும் கடைப்பிடிக்காத நாட்டுக் கூட்டம் நம்ம கூட்டம் அதைக் கண்டுங்காணாது போய்க் கொண்டிருக்க வேண்டிய நிலை அரசுக்கு....


பறவைக் கூட்டமும், வீட்டு விலங்குகளும் இறகு விரிக்காமல் வாலை ஒட்ட சுருக்கிக் கொண்டன.


பெரியார் கூட ரஷியா சென்று இந்த சனியனைப் பார்த்து வாங்கி வந்து இங்கே பயன் படுத்தியதாகக் கேள்வி.


தொன்று தொட்டு நமைத் தொடரும் பழக்கத்தை எல்லாம் தொடரவேண்டிய நிர்பந்தம் இந்த அறிவியல் யுகத்துக்கு உலகுக்கு உண்டா? அதில் நமது நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் என்ன செய்து வருகிறோம்? தத்துவ அறிஞர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியது போல எல்லாமே கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் சென்று கொண்டிருக்கிறது...சிந்திப்போம்.


இனி அமெரிக்க ஐக்கிய குடியரசில் கூட நியூ யார்க் போன்ற நகரில் தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் அரசு விடுமுறை .


தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட இந்த தொழிலுக்கு மடைமாற்றம் செய்து இந்த தொழிலாளர்களுக்கு வேறு தொழிலுக்கு மாற்றி விட்டு விடாதிருப்பது...அவரது சராசரி அரசையே பிரதிபலிக்கிறது அல்லாமல் அவர் பட்டாசு விற்பனைக்கு மஹாராஷ்ட்ரா மும்பையில் பட்டாசு விற்பனை வேண்டி கோரிக்கை விட்டிருந்ததும் கவனிக்கப் பட வேண்டியதாயிற்று...


மது விற்பனை பல கோடிகள் எகிறி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லி இருக்கின்றன‌


அந்தக் காலத்தில் போக்குவரத்து , தொடர்பு இடைவெளி இருந்த காரணத்தால் வாண வெடிகள் இறந்தார் வீடுகளில் சவம் எடுக்கும் போதும், அல்லது காரணங்களோடு வெடிக்கப் பட்டன...


தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கம் என்பதால் நாம் அனைத்தையுமே தொடரத்தான் வேண்டுமா?


நானும் ஒன்றும் யோக்யனல்ல...சிறு வயதில் ஏங்கி,இராணுவ வீரரான எனது மாமா எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத‌ T.M. கணேசன் தாரமங்களத்தில்  சின்னப்பம்பட்டியில் வாங்கி வந்த திரி சிறியதாக இருக்கும் யானை வெடிகளை வெடித்து அனுபவித்தவன் தான்... பட்டுத் திருந்தியவன் தான்...


ஆனால் அவை யாவும் காலக் கல்வியால் ஒதுக்கித் தள்ளப் பட்டு புரிதல், அறிதல் உணர்தல் நிகழ்ந்து எங்களது குடும்பம் இதில் இருந்து மீண்டு விட்டது...


இனிப்புகள், புதுத் துணி, பட்டாசு இவை யாவும் பழக்கம்...இல்லாதார் இருப்பாரைப் பார்த்து ஏங்க...அல்லது கடன் வாங்கி கடன்காரராகி...எல்லாம் வியாபார உத்திகள்...அதில் சினிமா வேறு ஒரு கேடு...தீபாவளி சினிமாக்கள் காலம் என்பது நல்ல வேளை மலையேறிவிட்டது...பண்டிகை இனாம் வேறு...நிரம்பி வழிந்த கடைகளுக்கான கூட்டம் போய் இனி மருத்துவ மனைகள் நிரம்பி வழியும்...


மேலும் கண்ணன் காலம் முடிந்து இன்று முதல் கந்தன் காலமாம் ... மாமனைப் போன்றே தாய் மாமனைப் போன்ற சாயல் கந்தனுக்கும் உண்டாம்... ஆண்டெல்லாம் திருவிழா காண்பது எல்லாம் வியா பாரமாக‌ பரமாக இல்லாமல் இருந்தால் சரி...


அடுத்து அறுவடைத் திருநாள்/ பொங்கல் ....திருவிழாக்கள் அவசியம்தான் ஆனால் அதில் கூட ஒரு நியதி வரையறை இருக்க வேண்டியதும் அவசியம்தான்...


நரகாசுரன் வதை பற்றியோ, பகவத்கீதை போர் முனை அறிவுரை போன்று நம்முள் எழும் தீய எண்ணங்களை நீக்கத்தான் என்பது பற்றியோ நான் இங்கு எதையுமே சொல்ல முனையவில்லை...


கடன் வாங்கும் திருவிழாக்கள் வேண்டாமே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


இராமலிங்க வள்ளல் சொல்வது போல பசிதீர்த்தலும், ஜீவகாருண்ய ஒழுக்கமுமே நற்வழிகாட்டும் சமய நெறிகளாகட்டும்.




Friday, October 21, 2022

பழைய 5 ரூ தாளுக்கு 2 இலட்சம் இந்த செய்தி உண்மையா? கவிஞர் தணிகை.

இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் உள்ளதா? இலட்சக் கணக்கில் பணம் பெறலாம்




 பழைய 5 ரூ தாளுக்கு 2 இலட்சம் இந்த செய்தி உண்மையா? 


19.10.2022  தேதியில்  01.14 P.M ல் வெளி வந்து அது மறுபடியும்புதுப்பிக்கப் பட்ட செய்தியாக‌  20.10.2022 08.33 P.M  மணியிலும்தினமணியில் வந்த செய்தி இது.

இது போலியா? உண்மையா? வதந்தியா?

இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் உள்ளதா? இலட்சக் கணக்கில் பணம் பெறலாம் என்ற தலைப்பில் வந்துள்ள செய்தி இது.

அதாவது ட்ராக்டர் வயலில் உழுது கொண்டிருக்கும் படத்துடனான இந்திய 5 ரூபாய்த் தாள் "786" என்ற தொடரில் இருந்தால் அதற்கு குறைந்த பட்சம் ரூ.35,000 முதல் அதிக பட்சம் ரூ.2,00,000 வரை பெற முடியும் என அதிலும் நம்பகமான சில இணைய தளங்கள் வழியே பெற முடியும் எனச் செய்தி வந்திருக்கிறது

மத்திய ரிசர்வ் வங்கியின் சில அரிய வகை நோட்டுகளுக்கு இப்படி தொகை தருவதாக சில தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதாக செய்தி தெரிவிக்கிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அது போன்ற இணைய தளங்கள் எவை?

நண்பர்கள் தெரியப் படுத்தவும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


செய்தி: தினமணி


 19.10.2022 தேதியில் தினமணியில் வந்த செய்தி இது.

இது போலியா? உண்மையா? வதந்தியா?


அப்படி இருக்கும் பட்சத்தில் அது போன்ற இணைய தளங்கள் எவை?

நண்பர்கள் தெரியப் படுத்தவும்.


Thursday, October 20, 2022

ஏன் இந்த மனிதர் மதம் கொண்டு அலைகிறார்கள்? கவிஞர் தணிகை

 ஏன் இந்த மனிதர் மதம் கொண்டு அலைகிறார்கள்? கவிஞர் தணிகை



தான், நான், கர்வம், ஆணவம், தலைக்கனம் இப்படி சில வேண்டாத  வார்த்தைகள் சில நேரம் ஒவ்வொரு நல்லவரிடமும் கூட. பல நேரம் நிறைய தராதரம் இல்லா மனிதரிடமும், எல்லா நேரமும் மதம் கொண்டு அலைவாரிடமும் திரிவாரிடமும். 


காரணம், பொருள் இன்றி நிற்கும் மேகம் மோதிக் கொள்கிறது அடேங்கப்பா எவ்வளவு பெரும் சக்தி, பொழிகிறது, தீப் பற்றுகிறது, இடி மின்னலாய் புவி நோக்கி இறங்குகிறது இடை சிக்கும் எந்த பருப்பொருளும், உயிரானாலும் தீய்ந்து போய் சிதைந்து போய், உருக்குலைந்து போக வேண்டியதுதான்... கோப மழை, புயல் , எரிமலை, நிலநடுக்கம்,இப்படி எண்ணிறந்த இயக்கங்கள் நிலம், நீர் நெருப்பு, காற்று ஆகாயம் சார்ந்து... இவை எல்லாம் பார்த்தும் இந்த மனிதம் தமை பெரும் சக்தியாய் எண்ணுவதில் நிறைய கேள்விகள்...விவேகானந்தா கூட ஒரு இடத்தில் இயற்கையை வெல்லும் ஆற்றல் மனிதர்க்குண்டு என்பார் ஆனால் அது எது வரை எந்த எல்லை வரை என்பதுதான் கேள்வி...


கண்ணால் காண முடியும் சிற்றுயிர்கள் அதன் இயக்கம், பசி, இனப்பெருக்கம்,ஏன் கண்ணால் காணமுடியாமலும்...


உணர்தல் ஒன்றுதான்...


மற்றபடி எல்லாவற்றையும் கடவுளாக பார்க்கும் பார்வை,கடவுள் இணையற்றவர், உனைப் போல் பிறரையும் நேசி, பிற உயிர்களையும் நேசி, உன் வினை உனைப் பற்றும், ஊழ் வினை, மரணம்,மரணமிலாப் பெரு வாழ்வு, மரணத்துக்கும் பின் உயிர் உலாவல்,இயற்கையை அழிக்காதே...இப்படி உயிர்களுக்கான தலையாய உயிரான மனிதத்துக்கு தேவையான தத்துவங்கள்....


அவை யாவுமே அவரவர் தனிப்பட்டு எண்ணிக் கொள்ள... தனியுரிமை,சுதந்திரம் தலையீடு, பொது இடங்கள்...இப்படி பாகுபடுத்தி வகைப்படுத்திக் கொள்ள வேண்டியது வளர்ச்சிதான்...மானசீகமானவை இதில் நிறைய...


மனிதம் வணங்கக் கற்றுக் கொண்டது...சிரிக்கிறது, சிந்திக்கிறது, அது நிறைய உயிரிகளிடம் இல்லை...


மற்றபடி இங்கே வணங்குதலுக்குண்டானவை யாவுமே குறியீடுதான், அடையாளம் தான், கடவுள் எனச் சொல்லும்  ஒரு வார்த்தை நமது பெயர்களைப் போல்தான்... ஆனால் அந்தப் பெயர் மட்டுமே நாம் அல்ல என்பது போல...அந்தப் பெயர் ஒன்றே அதான் ஆழம், அகலம், உயரம், யாவுமானவற்றை எல்லாம் விளக்கி விடமுடியாது விளக்கப் படுவதுமில்லை... யாவுமே வாழ்வில் வளமாக்கிக் கொள்ள வேண்டியது...


இது போல நிறைய விடைக்குள் கொண்டு வர முடியா நிறைய கேள்விகள் நிறைய நிறைய உண்டு...இந்தப் புதிர்கள் இந்தக் காலம் வரை விடுவிக்கப் படாமல்தான் போய்க் கொண்டு இருக்கிறது...நாமும் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்...


இல்லை என்ற கருத்தும் உலக மக்கள் தொகையில் அதிகம் உள்ளாரிடம் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன‌


சந்திப்போம், சிந்திப்போம்!

சேர்ந்து சிந்திப்பது பெரியதுதான், தனிப்பட்ட தேடல் சிறு பறவை விண்ணை வலம் வர ஆசைப்படுவது போன்றதுதான்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, October 14, 2022

ஞானம்;மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,அஞ்ஞானம்: கவிஞர் தணிகை

 ஞானம்;மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,அஞ்ஞானம்: கவிஞர் தணிகை















ஞானம்: பேரறிவு, பேராற்றலை இதை விஸ்டம் என்ற ஆங்கில சொல் குறிக்கிறது

          பொதுவாக எல்லாத் துறைகளிலுமே கரை காணமுடியா அறிவும் அதை மேலும் மேலும் பெருக்கிக்

          கொள்வாரையும் ஞானி எனச் சொல்லலாம்.

           ஆனால் அப்படி எல்லாத் துறைகளிலுமே பேரறிவு படைத்த மனிதர் உண்டா?


மெய்ஞ்ஞானம்: மெய் என்றால் 1. உடல் 2. உண்மை என்ற பொருள் உண்டு தமிழில்

                 உடலைக் கடந்து பார்க்கும் அறிவாற்றலை கட உள் மெய்ஞ்ஞானிகள் பெறுகின்றார்

                 உடல், உயிர்கள், உலகு, பிரபஞ்சம், பற்றி எல்லாம் மெய்ஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.


விஞ்ஞானம்: விஞ்ஞானிகள் உலகுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வண்ணம் தமது

              கண்டுபிடிப்புகளை அர்ப்பணிக்கின்றனர்.அவர்கள் சொல் செயல் எண்ணமெல்லாம் அந்த ஒரு

              பொருள் பற்றியே சிந்தித்து கருமமே கண்ணாகி உடல் பொருள் ஆவி யாவற்றையும் அதற்காக‌

              செலவு செய்து மானிடத்துக்கு சேவயாற்றுகின்றனர்.


              கேட்டுக் கொண்டே இருப்பதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை, பதில் ஏற்கெனவே இருக்கிறது

              அதற்கான சரியான கேள்வி கேட்கப்படும்போதே அதற்குண்டான‌ பதில் கிடைக்கும் என்கிறார்கள்

              அறிவியல் ஞானிகள்.


              கூகுள் தேடலில் கூட எவராவது பதிவு செய்து வைத்திருந்தாலும் நாம் கேட்கும் சரியான கேள்வி

              இருந்தால் மட்டுமே அதற்குரிய பதில் கிடைப்பதை நாம் கவனிக்கலாம்.


அஞ்ஞானம்: பொதுவாகவே சரியான தேவையான அறிவைப் பெறுமுன்பே அதைப்பற்றி தாம் எல்லாம் 

              தெரிந்ததாக எண்ணிக் கொண்டு அதைப் பற்றி பிதற்றுவது உளறுவது...அனேகமாக இந்த‌

              பிரிவில் தாம் நாம் பெரும்பாலும் இருக்கிறோம் என எண்ணுகிறோம்...


ஏன் எனில்: இராமலிங்க வள்ளலார் போன்றவர்கள் கூட நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருள்வாய் அருட்பெருஞ்சோதி என்று சொல்லியதைக் கவனிக்கும் போது அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Wednesday, October 12, 2022

விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் சொல்லொணா விந்தைகள்: கவிஞர் தணிகை

 விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் சொல்லொணா விந்தைகள்: கவிஞர் தணிகை



உங்கள் நேரம் மிக முக்கியம். சுருக்கமாக... பபுள் நெபுலா...பபுள்: வாயுக் குமிழ்

நாற்பது இலட்சம் ஆண்டுகள் பழையதான 7,100 ஒளியாண்டு தொலைவில் ஒரு நெபுலா வாயுக் கோளத்தை நாசா விண்வெளியகம் தமது ஹப்புள் தொலை நோக்கி வழியாக கண்டறிந்துள்ளது அரிய செய்தி என்றால் அது நமது சூரிய விண்மீனை விட 45 மடங்கு பெரியது என்றும் சுமார் ஒன்றிலிருந்து இரண்டு கோடி ஆண்டுகளில் அது சூப்பர் நோவாவாக மாறி விடும் என்பது விண்ணியல் அறிவியலில் ஒரு விந்தை. இது நேற்றைய செய்தி.


தவளையின் சத்தத்திற்கும் மழை வருவதற்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? நான் தொடர்ந்து வருகிறேன் சுமார் குறைந்தது 8 மணி நேரத்திலிருந்து 24 மணிக்குள் மழை வந்தே விடுகிறது. இப்போது வானிலை ஆய்வு மையங்களும் சரியாகவே கணித்து சொல்கின்றன அது வேறு.


நுணலுந்தன் வாயால் கெடும்...பழமொழி, குறள் கூட இருப்பதாக நினைவு. ஆனால் பாம்புக்கு காது கேட்காது என்கிற அறிவியல் தவளையின் சத்தம் இனைவிழைச்சிக்காகவே தமது கலவிக்காக பெண் தவளைகளை மழைக்காலத்தில் கார்காலத்தில் அழைப்பதே இந்த சத்தம் என்கிறது... அதற்கும் மழைக்கும் தொடர்பில்லை என்கிறது


பல்லிகள் கூட இனவிழைச்சிக்கே கத்துவதாக செய்தி...ஆனால் இவை மனித வாழ்வில் சிலவற்றை முன் கூட்டியே கட்டியங் கூறுகின்றன என்பதை மறுக்க முடியவில்லை...



தோகை விரித்தாடும் மயில் கூட அப்படித்தான்...இணையை அழைக்கத்தான்...மேகம் கண்டல்ல...


நிறைய அறிவியலில் புலப்படா அல்லது இன்னும் அறிவியலில் அறியப் படா இயற்கை உயிரி நிகழ்வுகள் பூமியில்  நிறைய  உண்டு...மறுபடியும் தலைப்பைச் சொல்லி முடிக்க வேண்டியதாகிறது....விண்ணில் மட்டுமல்ல மண்ணிலும் எண்ணிலடங்கா விந்தைகள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, October 6, 2022

உலகம் விரைவாக‌ அழிகிறதா? அதன் ஆயுள் குறைகிறதா? கவிஞர் தணிகை

 உலகம் அழிகிறதா? அதன் ஆயுள் குறைகிறதா? கவிஞர் தணிகை



உலகம் அழிகிறதா? மனித மாண்புகள் குறைகிறதே என படிக்கும் உங்களுக்கு எல்லாம் கனமில்லா ஒரு லேசான சிறு பதிவு செய்ய அவா. அதைப் பற்றி சில நாட்களாகவே எண்ண ஓட்டம்.


கடந்த செவ்வாய் அதாவது 04.010.2022 சூரியனில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வெடிப்பின் மின்காந்தப் புயல் அல்லது அதன் விளைவலைகள் விண்வெளியில் பூமி சார்ந்தவற்றை பாதிக்கவும் கூடும் என்ற ஒரு அறிவியல் செய்தி.... அதை பின்னுக்குத் தள்ளி விட்டது.


ஆனால் அது பற்றி எல்லாம் நான் எழுதவே எண்ணவில்லை

எதற்காக எழுதுகிறீர்? என்ற ஒரு கேள்வியை சந்தித்துள்ளேன்.


செயற்கை கருவூட்டல் வழியே இரட்டை குழந்தை பிறப்பு அதிகம் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் உள்ளன‌

செயற்கை கருவூட்டல் அறிவியியலில் ஒரு விந்தையான மிக்க இலாபமுடைய வியாபாரம்

ஏன் செயற்கை பிரசவம் கூட....


எல்.ஜி.பி.டி( LGBT) ஓரின சேர்க்கை திருமண நிகழ்வுகளுக்கு நிறைய நாடுகளில் சட்டமும் நீதியும் அங்கீகாரம் அனுமதி அளித்து அதற்கான வெளிப்படையான மக்கள் திரள்வு ஆங்காங்கே நடந்தபடி இருக்கின்றன.

ஒரு தாயின் வயிற்றில் பிரசவத்தின் போது வெளிப்பட்ட இரட்டை குழந்தைகள் இரண்டும் இரு வேறு தந்தைகளுடையது என அறிவியிலில் டி.என்.ஏ D.N.A மூலக்கூறு இயல் ஆவணப் படுத்த அறிவியல் முன்னேறி இருக்க அந்த  தாயும் மகிழ்வுடன் ஒரே பெற்றவரே அதை வளர்க்க சம்மதித்திருக்கிறார் என கூறுகிறார்

பெற்றோர் என்றால் தமிழில் தாய், தந்தை என்றே பொருள். ஆனால் ஆங்கிலத்தில் "சிங்கிள் பேரன்ட்" SINGLE PARENT என்ற ஒரு சொற்றொடர் பிரபலமாகி விட்டது.


இன்ஸ்டன்ட் லிவிங் INSTANT LIVING என்ற ஆங்கில வார்த்தை அதை விட பிரபலம்.லிவிங் டுகெதர் LIVING TOGETHER என்ற வார்த்தையை இது வேகமாக கடந்து பிரபலமடைந்து வருகிறது. ஆக  பொறுப்புகளை ஏற்கும் மனப்பக்குவம் குறைந்து வருகிற தலைமுறையை புவி சந்தித்து வருகிறது. ஒத்துப் போகா எண்ணங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டு முந்திச் செல்ல முயல்கின்றன.


அறிவியல் மிகா காலத்தில் மருத்துவ செறிவின்மை காரணமாக இறப்புகள் நிறைய நிகழ்ந்தன என்பது உண்மைதான்...

ஆனால் இரசாயன கலப்பில்லா உணவு கிடைத்தது. முறையாக வாழ்ந்த மனிதர் நெடுங்காலம் வாழ்ந்தனர்.

இயற்கையை மனிதம் அதிகம் நேசித்தது.


இரவு பகல் பாகுபாட்டில் இரண்டறக் கலந்திருந்தது.


24 மணி சுழற்சி, இரவையும் பகலாக்கும் தற்கால வளர்ச்சி...


என்னதான் காமத்தேடல் வேட்டைகள் இரைகள் இருந்த போதும் தந்தை எவர் என்ற அடையாளம் இயற்கையோடு தொடர்புடையதாகவே இருந்தது பெண் ஆண் உறவு ஒன்றுக்கொன்று தேவை என்றுதான் உலகம் மனிதம் உயிர்கள் இருந்தன....


அடிப்படை தொலைந்து வருகிறது... 


ஆனாலும் நேற்று சென்ற நள்ளிரவிலும் நல்ல மழை ஒரு உழவு அல்லது ஒரு வள்ளம் ( நாலு படி அளவு ) அல்லது எங்கள் உரல் கல் குழி எல்லாம் நிரம்பி வழியுமளவு நல்ல மழை பெய்துள்ளது நேற்று கூட கிராமம் சார்ந்த மனிதர் மழையைக் காணோம் என்று சொன்ன போது... இயற்கை அது அப்படியேதான் ...நிலம், நீர்,நெருப்பு, காற்று , ஆகாயம் யாவும்...


மனித குல வரலாறில் பெண் வழிச் சமுதாயமே முன்னர் தோன்றியதாக வரலாறு சொல்கிறது.

அழியும் போது சுழற்சி முறையில்  அதே போல வந்து விடுமோ என்னவோ?


தம் வீட்டு சுவர், புல் பூண்டை விட மற்ற உயிர்கள் மனித உயிர் உட்பட யாவுமே தாழ்வே, அவை பற்றி கவலை கொள்ள ஏதுமில்லை என்ற போக்கு, தமது எல்லையைக் காத்துக் கொண்டு பொது இடங்களை ஆக்ரமிக்கும் போக்கு அவற்றை அழிக்கும்  அதன் ஆர்வம்...சுருக்கமாகச் சொன்னால் சுயநலம் மற்றும் பொதுநலத்துடன் இயையா போக்கு



மொத்தத்தில் நோபெல் இன்னும் இன்றும் வழங்கப்பட்டிருக்கும் காலக் கட்டத்தில் குடும்பம் என்ற அமைப்பில் இருந்து மனிதம் வெளியேறி வருவதை கட்டுகள் வெட்டி எறியப் படுவதை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது...


வட்டம் நல்லதாக இருந்த போதும் அதை விட்டு வெளியேறித் துடித்து வரும் இன்றைய தலைமுறை எதைத் தேடி என்ன செய்யப் போகிறது என்று தெரியாமல் தமது விதைகளை விதைப்பது அவசியம் என்ற நோக்கம் ஏதும் ,(எல்லாம் ) இல்லாமல் பயணம் செல்ல ஆரம்பித்து விட்டது. அதற்கேற்ற படியான அரசியல், ஆட்சி, கட்சி,விலைவாசி, பொருளாதாரம் இப்படி எல்லாத் துறைகளுமே ....


பொய்களை நம்பும் போக்கு...மெய்களை விட்டுத் தள்ளும் போக்கும்


சொர்க்கம் என்பது மாயை, பொய் பிம்பம் என்று சொன்ன விவேகானந்தரும், கவலையற்றிருத்தலே முக்தி கவலைப்படுதலே நரகம் என்ற பாரதியின் தத்துவங்கள்  பிழையாகாது. ஆனால் இவை தவறாக பொருள் கொள்ளுமளவு இவர்கள் அதைப் பற்றி படித்து அறிந்தவர்களாகவுமில்லை...புதுமைப் பித்தன், மகாத்மா,கலாம், தெரஸா  இப்படி இவர் போல எதையும் செய்து விடவும் முடியாது என்பதை ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள்கிறேன்.


என்னால் இந்தப் பதிவு எதற்கு என்று கேள்விகள் எனக்குள்ளேயே...இருப்பினும் கால்தடத்தை பதிக்கிறேன். காலத்தைப் பதிவு செய்துள்ளேன் என் சிறு நகக் கீறலாக...


எந்த துறையிலுமே மிக சிறப்பான சாதனை புரிந்ததாக தெரியவில்லை...ஆனால் அவற்றை எல்லாம் தொட்டிருக்கிறேன் என்ற சிறு நிம்மதி, ஒரு தொடு புரிதல்,  எனக்குள் இருக்கிறது, இலக்கியம், அரசியல், ஆன்மீகம்(தியானம்) , குடும்பம், பொருளாதாரம், அறிவியல், அன்றாட வாழ்க்கை , சேவை அதன் பொறுப்புகள் இப்படி...

வணக்கங்களும் நன்றிகளும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை