Sunday, September 27, 2026

மனிதர்கள் செய்வது தானே?

 ஆடுகள் என்ன தவறு செய்தன?

மாடுகள் என்ன தவறு செய்தன‌

பன்றிகள் என்ன தவறு செய்தன?

(ஆர்15) R15 தான் என்ன தவறு செய்தது?

எல்லா தவறுகளும் மனிதர்கள் செய்தவை தாமே?



நண்பர்களின் ஆண்டு கூட்டு சந்திப்பு நிகழ்வை முடித்து விட்டு (1978VHS) நடைப்பயிற்சிக்கு சென்றேன், நேற்றைய தினம் , போகும் போது எல்லாம் அதனதன் மார்க்கத்தில் நன்றாகவே இருந்தன.

வீடு திரும்புகையில் கோம்பூரான் காடு குடி இருப்பு அருகே பள்ளி மற்றும் கோயில் இருக்கும் இடத்தில் ஒரே களேபரம். ஊரருகே இவ்வளவு வேகமாகவா செல்வார்கள் என மக்கள் அந்த வாகன ஓட்டியை நிந்தித்தபடி இருந்தனர்.


உஷா, பவர் 2.O பழனி போன்ற தன்னார்வலர்கள் ஏதோ தங்களால் ஆன உதவியை செய்ய முயற்சித்தபடி இருந்தனர்.


என்ன என ஊன்றிப் பார்த்தால், ஒரு செம்மறி ஆடு காலை நீட்டி விரைத்தபடி இறந்து கிடக்க, இன்னொரு செம்மறி ஆடு உயிர்  ஊசலாட்டம் கொண்டு இழுத்தபடி கிடக்க, மற்றொரு செம்மறி ஆடு மூக்கு உடைபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட இருப்பிடம் கொண்டு சேர்க்கப் பட்டிருந்தது.


ஆர்15 வாகனத்தில் போதையில் வந்த இளைஞர் ஒருவர் சாலையில் குறுக்கே வந்த ஆடுகளை தட்டி தூக்கி எறிந்து விட்டார். செம்மறி ஆடுகளின் உரிமையாளர் வயதான பெண் ஓலமிட்டபடி சிலர் சுற்றி வளைத்து ஆறுதல் படுத்தியும் அடக்க முடியமால அழுது கொண்டிருந்தார்.


இன்று ஞாயிறு எனவே இறந்த ஆட்டை விற்றுக் கொள்ளும்படி காவல்துறை சொல்லி இருப்பதாகவும்  கசாப்புக்கடைக்காரர்கள் மூவரை தொடர்பு கொண்டிருப்பதாகவும் பழனி தகவல் தந்தார்.


சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று சத்தமிட்டபடி சென்று கொண்டிருந்தது என்ன என விசாரிக்க அந்த இளைஞர் கோம்பூரான் காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தவரை மேட்டூர் பொது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகத் தகவல்.


ஆக இந்த சம்பவம், பெரிதும் எனை சிந்திக்க வைக்க, வாய் இல்லா அறிவு குறைந்த ஜீவன்கள் என்ன பாவம் செய்தன? இப்படி எல்லாம் இறப்பதற்கு? எப்படியும் அதன் முடிவு கசாப்புக்கடைக்காரர்களுக்குப் போவதுதானே அதனால் என்ன என்ற விவாதப் போக்கை நீக்கிப் பார்க்க பாவமாகத் தெரிந்தன.


இப்படி சாலை விபத்தில் ஆர்15 ஓட்டி வந்த போதையிலிருந்த இளைஞரால் வேகத்தில் அடித்து வீழ்த்தப்பட்டிருந்த ஆடுகள் உரிமையாளருக்கு  பெரும் துன்பத்தை விளைவித்துள்ளன.



ஏற்கெனவே ஒரு முறை கறைவை மாடு ஒன்று இப்படித்தான் காலாவதியான மாத்திரை மருந்துகள், குளிர்பானங்கள்,பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்களைத் தின்று விட்டு இறந்து கிடந்தது இப்பகுதியில் சற்றுத் தள்ளி சுடுகாட்டருகே... இதை யார் கொட்டினார்கள் என்பதெல்லாம் அப்போது பேசப்பட்டதோடு சரி...


பைபிளில்  ஆவி அதன் மேல் ஏவப்பட்ட பன்றிக்குட்டிகளை கடலில் தள்ளி யேசு அவற்றை மூழ்கடித்து இறப்பித்ததான அற்புதங்கள் உண்டு...


ஆர்.15 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பள்ளி, கோவில் , ஊர் அருகே கூட வேகம் குறையாமல் முடுக்கிவிடப் பட்டதற்கு அதன் தயாரிப்பு மாடல் காரணமா? ஒட்டி வந்த இளைஞர் காரணமா? அரசு நடத்தி வரும் அரசாங்க மது பானக் கடை விற்பனை காரணமா? அதை வாங்கி குடித்து விட்டு வண்டி ஓட்டி வந்த அந்த இளைஞர் காரணமா என்றெல்லாம் மக்கள் சிந்தித்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.


எல்லாத் தவறுகளும் மனிதர்கள் செய்வது தாமே?....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


மனிதர்கள் செய்வது தானே?


பி.கு. : இது ஒரு உண்மைச் சம்பவத்தால் எழுந்த நினைவு அலைப் பதிவு

         யாரையும் எதையும் குற்றம் காண எழுதப்பட்டதல்ல...எச்சரிக்கை         சாலைகளில் அவசியம் என்பதே இதன்                         முக்கியத்துவம்.

Monday, September 21, 2026

புற்று நோய்க்கான போலி மருந்து விற்பனை::கவிஞர் தணிகை

 அன்பர்களே, நண்பர்களே, தோழர்களே தோழியரே:கவிஞர் தணிகை



90 மருத்துவ மனைகள்,6 மாநிலங்கள்,5 வருடங்களாக, போலி புற்று நோய் மருந்து விநியோகச் செய்தி...


இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா...


இந்த செய்தியைக் கண்டவுடன் பலரிடமும் வாய் வழியே சொல்லி சொல்லி மாய்ந்து போனேன். ப்யூஸ் மானுஸ் காணொளியே வெளியிட்டிருக்கிறார்.


மலிவு விலையிலான மருந்து, காலாவதியான மருந்து, போலியான மருந்து இவற்றை எடுத்து மறு உறையில் இட்டு புற்று நோய்க்கான மருந்து என பாதிக்கு பாதி விலையில் அதாவது 50 சதவீத கட்டணச் சலுகையில் 90 பிரபல மருத்துவமனைகளுக்கு 6 மாநிலங்களில் விநியோகம் செய்த ஒரு வலைப்பின்னல் போலி மருந்துக்கம்பெனி பிடிபட்டதாகவும் அதன் தலைமையை இன்னும் தேடி வருவதாகவும் ஒரு செய்தியை ஆங்கில செய்தி ஒன்று தெரிவித்திருந்தது.


இதன் பாதிப்புகள் எவ்வளவு வீச்சில் இருந்திருக்கும் என்பதற்கான தரவுகள் தெரியவில்லை. எத்தனை குடும்பங்கள் நிர்மூலமாயின, பயன்படுத்திய‌ எத்தனை  உயிர்கள் போயின என்பதெல்லாம் நமக்கு செய்திகளாக வரவில்லை. ஆனால் எங்கு பார்த்தாலும் இப்போது புற்று நோயால் பாதிக்கும் நோயாளிகள் பெருகி வருகிறார்கள் என்னும் நிலையில் இது போன்ற ஒரு அட்டூழியம் 5 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.


இது பற்றி எங்கு எவ்வளவு சொன்னாலும், எனக்கு வலி தீரவே இல்லை, எனவே உங்களுடனும் ஒரு பதிவை வைத்து விட்டேன். தனி மனித தற்கொலை பற்றிய பதிவு ஒரு குடும்பத்தையே பாதிக்கிறது என்று இருக்கையில் இது எத்தனை குடும்பங்களை பாதித்திருக்குமோ....


கடவுளே...இந்த மனிதர்களை விட கேவலமான உயிர்கள் வேறு இல்லைதானே?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

மறுபடியும் ஒரு கறுப்புப் பக்கம்: கவிஞர் தணிகை

 மறுபடியும் ஒரு கறுப்புப் பக்கம்: கவிஞர் தணிகை



10 மாதப் பெண் குழந்தை, நல்லதொரு வாழ்வின் துணை, நல்ல பெற்றோர் தூரம் தொலையில், பணி நிமித்தம் மாநிலத்தின் தலைநகரில், கை நிறைய அல்ல அல்ல செல் நிறைய சம்பளம்,உதவி வேண்டிய நிலையில் சிறிது காலம் முன்னே விபத்துக்குள்ளான மூத்த சகோதரன்...ஏற்கெனவே வெளிநாட்டில் எல்லாம் பணி செய்த பெருமை


இப்படி இவற்றை அனைத்தையும் விட்டு விட்டு ஒரு இளைஞர் இரண்டு மூன்று பக்கங்களை எழுதி வைத்துவிட்டு தமது தோழர்களை எல்லாம் ஒரு முறை கடைசியாகப் பார்த்து விட்டு தமது இருப்பிடத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக காலையில் ஒரு காது வழிச் செய்தி...


என்ன ஏது எப்படி எதற்கு என்பதெல்லாம் தெரியவில்லை, காவல் நிலைய வழக்குடன், மருத்துவமனை பிரேதப் பரிசோதனையுடன் 460 கி.மீ தொலைவிற்கு அந்த உடல் செல்ல வேண்டியதாகிறது. செத்தும் கொடுத்தாண்டி சீதக்காதி என்ற பழமொழி உண்டு,ஆனால் இறந்தும் இருப்பார்க்கு இப்படி எல்லாம் இந்த இளைஞர்கள் தொல்லை கொடுக்குமளவு என்ன துன்பம் இவர்களை எல்லாம் வாட்டுகிறது?


எல்லா தரப்புக்குமே இவர் போன்றோரால் எத்தனை துன்பம்? சொந்தக் குழந்தை இனி யாரை அப்பா என்றழைக்க முடியும்? அப்பா இல்லாக் குறையை அந்தக் குழந்தைக்கு கொடுக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. அந்த இளம் பெண்ணுக்கு விதவை என்ற ஒரு வேண்டாத துக்கத்தை தர என்ன தார்மீகப் பொறுப்பு இருக்கிறது? என்ன ஒரு மன நிலை இது? காவல் துறைக்கு வேறு வேலைகளே இல்லையா? நாட்டையும், வீட்டையும் அவர்களும் காக்க வேண்டுமே...இப்படி எல்லாம் செய்வாரோடு அவர்கள் அவலப்பட வேண்டியதெல்லாம் இல்லாமல் போக வேண்டும் இந்த நாட்டில்...


நிறைய நேரங்களில், நிறைய இடங்களில் நாம் குறிப்பிட்டதுண்டு, பிரபஞ்சத்தில் இந்த நீலக்கிரகத்தில் தவிர‌ உயிர்கள் இன்னும் வேறெங்கும் இருப்பதாக உறுதியாக கண்டறியப்படவில்லை...


இது போன்று மன நிலை குன்றும் போதெல்லாம் எங்களைப் போன்றோரை எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் வாழ்வில் நிலைக்க...வாழ்வு நிலைக்க...


நமது உலகு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நமக்கான உலகை நாம் செய்வோம் சலனப்படாதீர்கள் அன்பர்களே...வாழ்க வளர்க...வாருங்கள் பேசுவோம் குழப்பமான எண்ணங்கள் தெளிவடைய...


தெய்வா மக்கள் நல ஆலோசனை மையம்

தொடர்புக்கு: 8015584566


Thursday, September 10, 2026

தாரமங்கலம் மாரப்பன் கணேசன்: கவிஞர் தணிகை

 தாரமங்கலம் மாரப்பன் கணேசன்: கவிஞர் தணிகை




 வ‌சந்தம் அது ஒரு வசந்தம் எந்நாளும் வாசம் வீசும் சுகந்தம்

டி.எம்.ஜி T.M.G என்று மரியாதையுடன் பிரபலமாக அழைக்கப்படும் T.M.கணேசன் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதை விட எந்தவிதக் கெட்ட பழக்கமும் இல்லா இந்திய‌ இராணுவ வீரர் என்பதே சரியாக இருக்கும்.


இளமையில் படிப்பு மேல் ஆர்வம் இல்லை. ஆசிரியர்கள் சித்ரவதை செய்வதாக உணர்ந்த சிறுவன் அடிக்கடி பள்ளியை விட்டு தாரமங்கலத்தில் உள்ள பிரபலமான கைலாய நாதர் ஆலயத்தில் அமர்ந்திருந்து விட்டு பள்ளி விடும் நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவது வழக்கம். (இந்தக் கதை எல்லாம் அவர் வாயிலிருந்தே "மாமா நீங்க எப்படி மிலிட்டிரிக்கு போனீங்க என்று கேட்டதற்கான பதிலில் இருந்து")


வீட்டுக்கு இது பற்றி எல்லாம் தெரிய வர தந்தையை இளமையிலேயே இழந்தவராதலால் இவரது மாமா அந்த ஊரின் பெரிய மனிதரான T.P.அண்ணாமலை முதலியார் என்பவர் இவரைத் தத்துப் பிள்ளையாக வளர்த்திருக்கிறார்.இவர் அந்த ஊரின் செங்குந்தர் பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். நிறைய சொத்து காடு கழனி தோட்டம், மளிகை இப்படி...


என்னடா கணேசா பள்ளிக்கூடம் போகாம இப்படிப்  பண்றே , என்ற சொல் பொறாமல் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டு இராணுவ வீரரான கதை எல்லாம் வேறு.  அடியேன் சிறுவனாக இருந்து பார்க்கும் நிலையில்: ஆள் 6 அடிக்கும் மேல் நல்ல உயரம்,அழகு. நல்ல பலசாலியானத் தோற்றம், வசீகரமான முகம், சுருள் முடி.இது போன்று ஆட்களைப் பார்ப்பது அரிது என்றபடிதான் இருந்தார்.


எங்களுடைய ஒன்று விட்ட சித்தப்பாS.S பெருமாள் என்பவர் நிறைய பொது காரியங்களில் முன் நிற்பவர், எங்கள் வீட்டுப் பெண்களுக்கு முன் நின்று திருமணம் செய்து வைத்தார். அதில் ஒன்று...இவருடைய மணமும்.


ஒரு நாள் சித்தப்பா வீட்டுக்கு வரும்போது மதிய உணவு வேளை. அவருடன் ஒருவர் வருகிறார். இருவருக்கும் எனது மூத்த சகோதரி மல்லிகேஸ்வரி உணவு பரிமாறுகிறார். பெண்ணைப் பிடித்துவிட்டது. அவரையே மணமுடிப்பேன் எனத் தெரிவித்து மணம் நடைபெறுகிறது.சோதிடம் எல்லாம் பார்த்து செய்தார்களா என்று நினவில்லை. அவர்களுக்குM.G.R எம்.ஜி.ஆர் அதாவது மாரப்பன் கணேசன் இராஜ்குமார் என்னும் மகனும் , ஹேமலதா பழனிவேல்(நல்லாசிரியர் விருது பெற்ற பழனிவேல்தாம்) என்னும் மகளும் இன்று ஐம்பதை விஞ்சிய வயதில் பேரன் பேத்தி எடுத்த நிலையில் வளமாக வாழ்ந்து வருகிறார்கள்.


ஏன் இந்த மனிதரை காலத்தின் முன் பதிய வைக்க வேண்டுமெனில், அவ்வளவும் நல்லெண்ணம், பெருமுயற்சி, எடுத்த காரியத்தில் பெரும் ஈடுபாடு,ஈடு செய்ய முடியா கடின உழைப்பு என்பதற்காகத்தான்.


இராணுவ வீரராக இருந்த காலத்தில் ஜமால் பூர், காஷ்மீர், பட்டன்கோட் இப்படிப் பட்ட இடங்களில் இருப்பதாகச் சொல்வார் கடிதம் எழுதுவார்  சகோதரியை அழைத்துச் சென்ற காலமும் உண்டு, வீட்டில் விட்டுச் சென்ற காலமும் உண்டு. அவர் வந்தால் சுருக்கமாகச் சொன்னால் எங்கள் வீட்டில் திருவிழாதான்.விதவிதமான தின்பண்டங்கள் எல்லாம் செய்து அவரது நண்பர்களுக்கு என்று எடுத்துச் செல்வார், அதில் எங்களுக்கும் ருசிக்க வாய்ப்பிருக்கும்.அசைவ விருந்துகள், வரும்போது பெட்டி பெட்டியாக அங்கு வாங்கி சேர்த்து வைத்திருந்த கேண்டீன் பொருள்கள், காஷ்மீரிலிருந்து வந்த போது ஒரு பெட்டி நிறைய காஷ்மீர் ஆப்பிள்கள், தேயிலை பெரிதாக இருக்கும் தேநீர் போடும்போது இலை சுருங்கி இருப்பது விரியும். தூள் அல்ல இலை.அவ்வளவு மணம் தரம்.


ஒருவாறாக 16 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்து முடித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரராக வெளிவந்தவர்க்கு சேலம் இரும்பு உருக்கு ஆலையில் பணிக்கு வாய்ப்பு. நிராகரித்து விட்டு வளர்ப்புத் தந்தை காட்டிய கடையில் ஒரு உணவகம் ஆரம்பிக்கிறார்.அதன் பேர் அண்ணா ஹோட்டல்.( வளர்ப்புத் தந்தை வாழ வைத்த அண்ணாமலை மற்றும் அறிஞர் அண்ணா என்ற பேர்களை இருவாறாக குறிக்கும்).


அடியேன் எப்போதுமே ஒரு எழுத்தாளனாகவே இருக்கிறேன். அப்போது சிறுவனாக இருந்த போதும் அவரை அவரது வாழ்வை உற்று கவனித்திருக்கிறேன். படு சுறுசுறுப்பு சுமார் 10 பேருக்கும் மேல் அவரிடம் பணியில் இருந்தாலும் இவரே எவராவது பணிக்கு வரவில்லையெனில் அந்தப் பணியை தயக்கமின்றி கூச்சமின்றிச் செய்வார், இலை எடுப்பதிலிருந்து, டீ போடுவதிலிருந்து சப்ளை எல்லாமே ஆல் இன் ஆல்,பள்ளிக்கு என்.எஸ்.எஸ் மற்ற நிகழ்வுக்கெல்லாம் இங்கிருந்துதான் உணவு விநியோகம் நடக்கும்.காலையில் தயிர் வடை,சுண்டல் , மசால் வடை, பஜ்ஜி எல்லாம் ஓரிரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து போகும், டிபன், சாப்பாடு, இரவு வரை தொடரும்.


காலையில் டீ போடுவார் வரவில்லையெனில் சைக்கிள் எடுத்துக் கொண்டு அந்த விடியற்காலையில் அவனுக்கு என்ன ஆயிற்று எனப் பறப்பார், பிறகு இவரே போடுவார் பாய்லர் காலம். தாரமங்கலத்தில் காலையில் சொம்பும் டம்ளர் கையுமாக எல்லாக் குடும்பத்திலிருந்தும் தறி நெய்யும் குடும்பத்தார் அனைவருமே டீக்கு வருவார்கள். டீக்கு ஒரே கூட்டமாக இருக்கும். அங்கேயே தேநீர், காப்பி வாங்கி குடிப்பாரும் உண்டு. 


நாயர் குக் உணவு தயாரிப்பாளர், அவருடன் எங்கள் சகோதரியும் மன்றாடுவார், எல்லா வித உணவுகளும் அவ்வளவு தூய்மையுடன் , தரத்துடன் இருக்கும், கல்லுக் காட்டுக்காரக் கூட்டம் என்று ஒன்று உண்டு அது தை மாதம் தருவாயில் கர்நாடகாவிலிருந்து சொந்ந்த ஊருக்குத் திரும்பும் அவர்களுக்கு எல்லாம் இந்த உணவகமே மருந்து விருந்து எல்லாம். சகோதரியின் கைப்பக்குவத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு உண்டு. அது உரிய நேரத்தில் வருவார்க்கு கிடைக்கும் இல்லையேல் தீர்ந்திருக்கும். அண்ணா ஹோட்டலின் சுவை ஊரறிந்தது பேரறிந்தது.


எனது பள்ளிப் பிராயம்  . உதவிக்காக‌ வெள்ளிக் கிழமை மாலை அங்கு சென்று திங்கள் காலை எல்லாம் கூட திரும்பி வந்து பள்ளி சென்றதுண்டு. பள்ளித் தேர்வு விடுமுறைக் காலங்களில், தந்தை விடமாட்டார் ஆடி ஓடிப் பாடி சுற்றித் திரிய ...அங்கே சென்றால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்குமே என அங்கே செல்லப் பணித்து விடுவார்கள் எம் குடும்பத்தார். அதிக காலம் இருந்தால்  சகோதரியும் மாமனும் துணி மணியுடன் அனுப்பி வைப்பார்கள்...ஓ! அந்த நாட்கள் கண்ணீர் வரவழைக்கும் நினைக்கும்போதே...அப்போது அதன் வண்ணம் தெரியவில்லை, இப்போது எண்ணம் தெரிகிறது.



குதிரை மாதிரி ஒரு அல்சேசன் நாய் அதற்கு கறி வாங்கி சமைத்துப் போடுவார் தம் கையாலேயே.சேலம் வியாபார நிமித்தம் சென்று வரும்போது ஹென்றி உல்சியில் கேக் பிரட், மல்கோவா மாம்பழம் என வாங்கி வருவார், இப்போதும் கிடைக்கிறது என்றாலும் அந்த ருசியில்லை. மனிதர் எல்லாவற்றிலும் உச்சம் தொட்டவர் அன்பு காட்டுவதிலும் பிறர்க்கு செய்வதிலும் மனம் கோணாமல், வருடத்தில் ஓரிரு முறையாவது கெடா விருந்து என 2 அல்லது 4 கெடாய்களை வெட்டி கறி விருந்து கொடுப்பார் அனைவரையும் அழைத்து குல தெய்வம், சாமி, மாரியம்மன் பண்டிகை விருந்து என...

ஒரு கட்டத்தில் ஹோட்டல்  நடத்தியதைக் கை விட்டு மளிகைக்கு மாறிவிட்டார்கள்...காடு, தோட்டம், தொளசம்பட்டி சாலையில் நாகர் கோயில் எல்லாம் இவர்களுடையது. ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒழுக்கத்துடன் இருந்தால் என்னவெல்லாம் எப்படி எல்லாம் வாழ முடியும் என்பதற்கு இவர் வாழ்வு ஒரு எடுத்துக் காட்டு, கார், வீடுகள், நிலம் தோட்டம் இப்படி யாவும் உண்டு. இவர்களின் சந்ததியினர் எல்லாம் நன்கு வாழ செழுமை செய்து விடுகிறார்கள். இவரின் அன்பு மகன் M.G.R எம்.ஜி.ஆர்(எம்.ஜி.ராஜ்குமார்) அவர்களும் எனது அக்கா பையன் எனது கைகளில் தவழ்ந்தவர் அவருடைய கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.


எனக்கும் கூட திருமணம் தமது செலவில் பண்ணி வைக்க வந்து கேட்டார் மாமா, போங்க ஒங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க என் வேலையை நான் பார்த்துக்கிறேன் என முகத்தில் அறைந்தாற்போல பேசிவிட்டு அதற்காக இன்னும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் பாருங்கள் அந்த மனிதர் எப்படிப்பட்ட நல்லவராய் இருந்திருப்பார் என.... நமக்கு யார் யார் எதற்கு எதற்கு பேசுகிறார்கள் என்பதே புரிவதில்லையே.


அவர் இல்லாது போயினும் அந்த மனிதரின் மணம் இன்னும் என்னுள், என்றும் என்னுள் வீசியபடியே இருக்கும், இருக்கிறது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Wednesday, September 9, 2026

இசை பேசியது: கவிஞர் தணிகை

 அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை: கவிஞர் தணிகை



இசை பேசியது

அந்த கறுப்புப் பூனையும் நானும் விழித்தபடி இரை தேடிக் கொண்டிருந்தோம்

உலகெலாம் ஒரு குடையின் கீழ் வந்திருந்தது

உறக்கம் வர்ல கனா வந்தது


எல்லாமே நல்லாய்ட்ட மாதிரி

எல்லோருமே நல்லவங்க ஆயிட்டாங்க‌

இனிமேல் கெட்டதே நடக்காது,

எல்லோருக்குமே நல்லது நடக்குது

 

உலகிலெங்குமே பசியே இல்ல,

 தண்ணீ(ர்) எல்லாத்துக்கும் எல்லோருக்கும் கெடைக்குது

விலைவாசியா அப்படீன்னா?

இலஞ்ச ஊழல் ஏதுமில்ல‌

கேட்டதெல்லாம் கெடைக்குது

வரியா அப்படி ஏதுமில்லையே!


அட அமெரிக்காக்காரங்க கூட ஈரானை நட்பு கொண்டாடறாங்க‌

உக்ரேனும் புடினும் ஒன்னாய்ட்டாங்க‌

அல்லாவும் ஜீஸசும் சிவ கிருஷ்ணனும் விநாயக முருகனும் ஒன்னாய்ட்டாங்க‌

ஒரே உருவாத் தெரியறாங்க!


நாத்திகம் ஆத்திகம் எல்லாமே ஒன்னாய்டுச்சி

பூமியே போதும். நிலா, செவ்வாய் எல்லாம் எதுக்கு...சோதிடம் அதுக்கு

ஒடம்பு ந‌ல்லாய்டுச்சி, அல்சர் அதிகாலை வயிற்று காந்தள் கூட இல்ல‌


கொசுக்களை எல்லாம் ஒழிக்கனும் வாங்க சேரலாம்

சினிமா, மது போதை எல்லாம் போயிடுச்சி

காத்து, தண்ணி, நிலம், ஆகாசம், நெருப்பு எல்லாமே தூய்மை ஆயிடுச்சி

70 வயதுக்கும் மேலானா கூட சுஜாதா  கேட்ட மாதிரி வெளிக்கு எல்லாம் நல்லா போவுது


இனி இங்க எப்பவுமே தீமை இல்ல‌

தீய சக்தி என்பதே இல்லை

பிறந்த குழந்தையாட்டம் எல்லாமே ஆயிட்டாங்க‌

சிதைந்த வழியெலாம் சித்திரமா பூ பூத்து ஒளியாச்சு,

சிந்தை தெளிவாச்சி


நேபாள, பீகார், அஸ்ஸாம் வெள்ளம் எல்லாம் இனி பாதிக்காது

தமிழ் முனை வரை ஒரே பாசனம், இந்திய நதியெல்லாம் இணைஞ்சிடிச்சி

3 ஆம் வகுப்பு குழந்தை  தப்பில்லாம தமிழ் எழுதுது, பேசுது

உச்சரிப்பில் சிகரம் போகுதுங்க‌

வள்ளுவரும் பாரதியும்  இராமலிங்கரும் , அவ்வையும் இனி தேவையே இல்லை

தமிழும் காந்தியும் இன்னா செய்யாமை  சொல்ல வேண்டியதில்லை


சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானியரும்

புத்தரும் யேசுவும்

உத்தமராம் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வைச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க‌

என்ன பண்ணிக் கிழிச்சீங்க...

என்ற பட்டுக் கோட்டையின் சிந்தை தெறிப்புக்கு எல்லாம் அவசியம் இல்ல‌


எல்லாம் படிச்சாச்சு, படிச்சி முடிச்சாச்சி,

பண்ணிப் பண்ணிக் கிழிச்சாச்சி

இனி எலாம் ஏகாந்தம், 

படிக்க ஏதும் பாக்கி இல்ல!

SHUT DOWN 

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Wednesday, September 2, 2026

உயிரின் வேகம்: கவிஞர் தணிகை

 உயிரின் வேகம்: கவிஞர் தணிகை



நேற்றைய தொடர்ச்சி இன்று இன்றின் தொடர்ச்சி நாளை நாளையின் தொடர்ச்சி..

இப்படியாக காலம் நகர்ந்து செல்கிறது நிறைய கூட்டிக் கொண்டு நிறைய விட்டு விட்டு


இதில் பழையது புதியது என்றேதுமில்லை, இதில் பழையது புதியது என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது...


உயிர்கள் அணுக்கள் புதுப்பித்தல் துவங்கி பழைய அணுக்கள் இறப்பது முதல், இரவு பகல் மாறுவது வரை


உயிர்கள் பழையதாகி பசி தாகம் தீர்த்து வளர்ந்து இயல்பாக மறைவது இயற்கை


ஆனால் ...


விபத்துகள் தாம் எத்தனை எத்தனை எப்படி எப்படி எவ்வளவோ?


ஒரு இளைஞர் எந்தவித இடையூறும் இல்லாத காலியான சாலையில் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று சரியாக சொல்ல வாய்ப்பின்றி சாலையின் வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்தார் இது ஒரு அண்மைச் செய்தி எங்கள் பக்கத்தில்...


சில காலத்திற்கும் முன், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை கியரிலேயே விட்டு விட்டு தந்தை இருந்திருக்கிறார். ஒரு ஏழெட்டு வயது சிறுமி அதில் ஏறி சாவி அப்படியே இருப்பதைக் கூடத் தெரியாமல் கியரை முறுக்கி அந்த வண்டி அவர்கள் வீட்டு சுவற்றிலேயே ஸ்டேண்ட் எடுபட்டு மோதி மண்டையில் அடிபட்டு இறந்தார். இதுவும் எங்கழ்ள் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்த செய்தி...


இப்படி உயிரின் வேகம் கடல் அலையின் வேகத்தோடு, ஆறுகளின் அடங்காமையின் வடிவத்தோடு, மலையாக இறுகிய பனிப்பாறைகள், பனிக் குன்றுகள், பனி மலைகள் உருகுதலோடு, எரிமலை வெடிப்புகளோடு, நிலநடுக்கத்தோடு, சுனாமிகளோடு,காட்டுத் தீ வடிவத்தோடு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


அதில் நீங்களும் உங்களைச் சார்ந்தோரும் நலத்தோடு வாழ எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.எனவேதான் பெரியோர்கள் பிள்ளைகளை அதைச் செய்ய வேண்டாம் இதைச் செய்ய வேண்டாம் அப்படி இருக்க வேண்டாம் இப்படி இருக்க வேண்டாம் என கட்டுப்படுத்துவது மட்டுப்படுத்துவது எல்லாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Monday, August 31, 2026

கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை

 கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை



செரித்துக் கொள்ள முடியா இரு மரணங்கள்:


அவர் ஒரு சமூகத்தில் முக்கியமான நபர்,ஒரு பேரூராட்சியின் உதவிப் பெருந்தலைவராகவும் இருந்தவர், கம்பீரமான தோற்றம். அதற்குத் தக்க பெயர் போரில் மன்னன் என...அவர் ஒரு ட்ராக்டர் வண்டி வீட்டில் அதற்குண்டான கூடாரத்தில் நிறுத்தி இருந்தார் .அதற்கு இயக்கத்தில் பிரச்சனை எனவே அதை முன் நாளில் வந்து ஒரு பழுது பார்ப்பவர் பார்த்துப் போய் இருக்கிறார்.


மறு நாள் காலை இவர் அந்த வாகனத்தை சோதித்துப் பார்க்க முயல அது கியரில் இருந்து ஓட ஆரம்பித்து இவரை இவரது வாகன அறையின் சுவற்றிலேயே தேய்த்து இடுப்புக்கும் கீழ் அரைத்து இல்லாமல் செய்து உயிரைப் பறித்தது. 


இந்த நினைவே இன்னும் மறக்க முடியாதிருக்க நேற்று ஒரு செவி வழிச் செய்தியில்:

எண்ணெய்ச் செக்கு மோட்டாரில் ஒரு நடுத்தர வயது பெண் சிக்கி அவரது உடலே துண்டுகளாகி வீட்டுக் கூரைக்கும் மேல் எல்லாம் தெறித்து விட்டதாகவும் உடலே இல்லாது பாதிக்கும் மேல் துண்டுகளாகிப் போனதாகவும் காரணம் அவரது கட்டிய சேலை அந்த மோட்டாரில் சிக்கியதே காரணம் என்று பேசப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


மனிதர்கள் மேலும் மேலும் வளர ஆசைப்படுவதில் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர் கண்ணீர் வடிப்பது போல...ஆனால் நாம் நம் நிலையை என்றும் உணரத் தலைப்பட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் ஒரு போதும் பணி புரியவே கூடாது. உடல் இரும்பாயிருந்தாலும் துரு ஏறத்தானே செய்யும்.


பிறப்பின் வழி ஒன்றாயிருந்த போதும் மரண வழிகளில்தாம் எத்தனை வகைகள்.  முகலாய மன்னன் ஹுமாயுனின் மரணம் விசித்திரமாய் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. 1556ல் கையில் நிறைய புத்தகங்களுடன் நூலகத்தில் இருந்து வருகையில் தொழுகைக்கான அறிவுறுத்தல் குரல் கேட்க இவர் அப்படியே  அதற்காக பணிந்து (தொழுகைக்கு நேரமாகி விட்டதே என்ற பதற்றத்தில்)  தமது நீளமான அங்கியில் காலை வைத்து தடுமாறி படிகளில் விழுந்து உருண்டு சுவற்றுக் கல்லில் தலை அடிபட்டு 3 நாட்கள் உயிருடன் இருந்து மறைந்ததாக சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை