Sunday, May 28, 2017

கொளத்தூர் சித்தி பாக்கியம் காலமானார்: கவிஞர் தணிகை

கொளத்தூர் சித்தி பாக்கியம் காலமானார்: கவிஞர் தணிகை

Related image




Image result for kolathur in salem district


கொளத்தூர் என்றாலே வெள்ளிக் கிழமை சந்தையும் அங்கே மிகவும் பிரபலமான வர மிளகாய், புளி வியாபரமே அனைவர்க்கும் நினைவுக்கு வரும் ஆனால் எங்களுக்கோ எங்கள் சித்தி தான் நினைவுக்கு வருவார்.

26.05 .2017 அன்று சித்தி காலமானார் வெள்ளிக்கிழமை ஆதலால் இரவு விளக்கு வைத்தவுடன் இறுதிச் சடங்கு என்றார்கள். மேட்டூருக்கு 8.கி.மீ அங்கிருந்து 11 கி.மீ கொளத்தூர். கொளத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகேதான் சித்தி வீடு. ஆனால் ஆண்டுக்கணக்காக நான் சென்று உடல் நிலை சரியில்லாதிருந்த அவளைப் பார்க்காதிருந்த்து நெருடலாகியது உடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வருகிறார் என பாலம், மேட்டூர் பகுதிகளில் கலர், வெள்ளை என வேலை நடந்தபடி இருந்தது பாலத்தின் மேல் பேருந்து ஊர்ந்தபோது உடன் வந்தவர் சொன்னார் ஞாயிறு அன்று தூர் வாரும் பணிகளைத் துவக்க முதல்வர் வருகிறார் அதற்காகத்தான் இந்த வெள்ளை அடிக்கும் பணி என்று...

அவளுக்கு வயது 70லிருந்து 80க்குள் இருக்கும். பேரன் ஆம்பூரில் ஸ்டேட்பங்கில் பணி, மகள் பாரதிய வித்யாபவன் திண்டலில் பணி. வேலைக்காரப் பெண் அருகிருக்க உயிர் காலை 11.15 மணிக்கு பிரிந்ததாக சொன்னார்கள் உடன் உறவென்று யாருமில்லை.தனிமைப் பயணம்.

அவள் எனது தாயின் மயில் வீட்டு சொந்தம். என் தாயின் தந்தையும் இவளது தந்தையும் ஒரு வீட்டில் பிறந்த சகோதரர்கள் என்பார்கள். எனது பெற்றோரின் தாய் தந்தையரை நாங்கள் கண்ணால் கண்டதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒன்று விட்ட உறவான சித்தியும் அவர் சகோதரர்களும், அவளது தந்தையும் எங்களுடன் உறவு முறை பாராட்டி வந்தனர்.

சித்தியின் ஒரே மகள் பள்ளி விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்திருக்கிறாள். நான் கூட ஒரு பள்ளி கோடை விடுமுறையின் போது அவரக்ள் வீட்டு மளிகைக்கடைக்கு உதவி செய்யப் போய் இருந்திருக்கிறேன் பல நாட்கள் சினிமாப் பார்த்துக் கெட்டுப் போனது கொளத்தூர், தாரமங்கலம் போன்ற இடங்களில்தான். ஏன் எனில் நமது சொந்த வீட்டில் சொந்த ஊரில் அந்தளவு  சுதந்திரமாக செயல்பட முடியாது பெற்றோர் கண்டிப்பால்.

செய்தி தெரிவித்து விட்டால் அது எந்த நிகழ்வானாலும் வருவதற்கு தவற மாட்டாள், அங்கிருந்து அவள் வாங்கி வரும் ரஸ்தாளி பழம் மிகவும் பெரிதானதாக இருக்கும். எங்கள் தாய் இறந்து 11 வருடம் ஆகிவிட தந்தை இறந்து 31 வருடம் ஆகிவிட எல்லாத் தொடர்புமே ஏனோ தானோ என தொய்வடைந்து விட்டது. அதில் இந்த சித்தியும் போய் தேய்ந்து இன்று மறைந்து விட்டாள்

இனி கொளத்தூர் எங்களைப் பொறுத்த வரை வெறுமையாகிவிட்டது.

சினிமா என்றால் அப்படி பார்ப்பாள், அவள் ஒரு முறை அவர்கள் ஊரில் ஊராட்சி மன்றத்தில் கவுன்சிலராகக் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணி புரிந்திருக்கிறாள்.

அவள் வீட்டு முன் அந்த ஊர் தியேட்டரின் போஸ்டர் கொண்டு வந்து ஒட்டுவார்கள் அதற்கு பிரதியாக கடைசி நாள் கடைசி காட்சிக்கு ஒரு இலவச பாஸ் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அப்போதெல்லாம் வண்டி வாகனத்தில் அந்த படத்திற்கான விளம்பரம் படம் போடும் முன் ஊருக்குள் ஒரு வலம் வந்து செல்லும் ஊரே வேடிக்கை பார்க்கும் சிறுவராக இருக்கும்போது அது பெரிய காட்சி.

மற்றொரு வெறுக்கத் தக்க, கூச்சப்பட வேண்டிய மாற்றி அமைக்க வேண்டிய காட்சி, வீட்டின் பின் புறம் மலக்குழி அந்த மலத்தை மனிதர்கள் அள்ளிச் சென்று அப்புறப் படுத்தும் காட்சி ஏற்க முடியாமல் இன்று நினைத்த போதும் அருவருப்பூட்டுவதாய்...நான் அங்கேதான் அதை முதலும் இறுதியுமாகக் கண்டது.

அடுத்து மொய் வைக்கும் முறைகள்: சரியாக மொய் வந்து சேராவிட்டால் அந்த ஊரின் அதற்காக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சிகையழகு செய்யும் இனத்தாரை பயன்படுத்தி மொய் வைக்காதார் வீட்டுக்கே சென்று நிகழ்ச்சிக்கு மொய்யை சண்டையிட்டு வசூலிக்கும் கொடுமை எல்லாம் அந்த ஊரில் இருந்தது நான் சிறு வயதில் கண்டது, கேள்விப்பட்டது, ஆனால் இப்போது வெகுவாக நகராக காம்ப்ளக்ஸ் முதற்கொண்டு மாறிப் போய் இருந்தது அந்த ஊர்.

ஊர் நன்றாக கிராமிய  ஆற்றோரம் அழகாக வீற்றிருக்கிறது. அந்த ஊரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருப்பதால் அது ஒரு வர்த்தக நகராய் மாறிப் போய் இருந்தது. வெள்ளிக்கிழமை சந்தை என்றால் கடையை எல்லாம் மூடிவிட்டு மதியம் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு ஓய்வு ஒழிச்சல் இல்லாத வியாபரத்தில் மூழ்கித்திளைப்பார்கள் அந்த கடைக்காரர்கள் எல்லாம் அன்றைய ஒரு நாள் வியாபாரத்துக்கு மற்ற ஆறு நாள் சராசரி வியாபரமும் ஈடாகது கடை திறந்து வைத்து செய்யும்போதும்.

சித்தி ஒல்லியான தேகம், மோர் பால்,நெய், மாமிசம் இப்படி ஏதுமே சாப்பிட மாட்டாள். கண்ணாடி போட்டுக் கொண்டாள். அதிகம் பேசுவாள் அனைவருடனும் உடனே ஒட்டிக் கொள்வாள் அதனால் சில நேரம் வம்பையும் விலைக்கு வாங்கிக் கொள்வாள்.எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்று கணக்கு எல்லாம் பார்த்து அவளுக்கு நடந்து  கொள்ளவோ பேசவோ தெரியாது.

 அவளுக்கு அவள் கணவனுக்கும் ஒத்துப் போகவில்லை. இவளை விலக்கி விட்டு அவன் வேறு மணம் செய்து கொண்டான், இவளும் அவனை விலக்கி விட்டு மனம் போன படி அவளது பிள்ளை பேரன் பேத்தி என்றே இருந்து காலத்தை ஓட்டி விட்டாள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

நிறைய மாரியம்மன் திருவிழாக்கள் அவள் இங்கேயும் நாங்கள் அங்கேயும் என  நினைவு படுத்த வரும். ஆனால் எனது தாய்க்கும் பின்னே எந்த பெருவிழா திருவிழா என்று எதையும் கொண்டாட முற்படாததால் எல்லாம் மறந்து போக ஆரம்பித்து விட்டது.

நான் பாலமலைக்கு சேவை செய்ய 3 மாதம் அங்கிருந்தபோது கொளத்தூர் வழிதான் வர வேண்டியதிருக்கும். அப்போது சில சமயம் அங்கே வந்து விட்டு அதன் பின் வீடு வந்து சேர்ந்ததுண்டு.

நேற்றுதான் நினைத்தேன் கடந்த 6 மாத காலமாக முடியாமல் இருந்திருக்கிறாள் சுமார் 20 கி.மீ கூட தொலைவில்லாத அந்த ஊரில் அவள் இருந்திருக்கிறாள். ஆனால் அவள் அவள் மகளுடன் இருப்பாள், பேரனுடன் இருப்பாள், பல வாறு ஆங்காங்கே அவ்வப்போது இருந்து வந்ததும் ஒரு காரணம் தொடர்பு விட்டுப் போக, வயதாகி விட்டதால் அவளும் எங்கள் வீட்டுக்கு இப்போதெல்லாம்  வரவில்லை, எங்களுக்கும் அன்றாடத் தேவை பணிச் சுமை என நாட்கள் ஓடி விட்டது அவளைப் பார்க்கச் சென்று 2 வருடம் ஆகி இருக்கும் என எனது மூத்த சகோதரியின் மகன் சொன்னான். நான் எவ்வளவு நாள் ஆகியிருக்கும் நாம் இவளை வந்துப் பார்த்துச் சென்று என்று கேட்டதற்கு.. அவளது ஒரு பேரன் ஜோதிலிங்கம் என்பவன் +2 படித்தபோது கிரிக்கெட் பார்த்து பார்த்தே இறுதித் தேர்வில் தோல்வி அடைந்து மாமா நான் பாஸாகிவிட்டேன் என்று சொல்லியபடியே வெளித் தெரிந்தால் மான அவமானம் என தற்கொலை செய்து கொண்டான் . ஆனால் அவனை அவனுடைய உடன் தோழர்கள்தான் அடித்துக் கொன்று விட்டார்கள் என சித்தியும் அவள் மகளும் ஒரே குரலில் அவனது ஒரு நினைவு நாளில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

காலம் சென்று கொண்டே இருக்கிறது இனி எல்லாருக்கும் எங்கள் பருவத்தார்க்கு முதுமை, மகன்களும், மகள்களும் அவரவர்க்கு மகவுகளுமாகி விட்டன...எனக்குத்தான் எதுவுமே தாமதம். எனவே இன்னும் பேரன் பேத்தி அளவுக்கு இல்லாமல் மகன் ஒருவனுடன் வாழ்க்கை கடமையுடன் நின்று கொண்டிருக்கிறது..

நானே பரவாயில்லை, எனது மகனே பரவாயில்லை, இன்று ஒசூரில் எனது மகனுடன் பயிலும் ஒரு தோழனின் தந்தை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்த சேதி நேற்று, அவன் இன்னும் மீதமுள்ள 3 ஆண்டு படிப்பை எப்படி படிக்கப் போகிறான் தந்தை இன்றி என அவனுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

சித்தி எல்லாம் முடித்து விட்டாள் . அவள் ஆத்மா சாந்தி அடையட்டும். அமைதியாக எல்லாம் நடந்தது. கடைசியில் இறுதி ஊர்வலம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பட்டாசு சத்தம் தவிர, சொர்கரதம் சிவபுராணப் பாடல்கள் தவிர வேறு பெரிதான சத்தம் ஆரவாரம் ஏதுமில்லாத மௌன அஞ்சலி. பாக்கியம் சிவ பதவி அடைந்து விட்டாள் அதே வெள்ளிக்கிழமை கொளத்தூர் சந்தை நாளில்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Image result for kolathur in salem district


2 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. thanks for your concern on this post and your feedback sir. vanakkam.

    ReplyDelete