Monday, March 14, 2016

அப்துல் கலாம் வழியில் அடியேன் அரவிந்த் கண் மருத்துவமனை சேலத்தில்: கவிஞர் தணிகை.

அப்துல் கலாம் வழியில் அடியேன் அரவிந்த் கண் மருத்துவமனை சேலத்தில்: கவிஞர் தணிகை.



அப்துல் கலாம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் தமது அனுபவங்களை எழுதி இருந்தார். எத்தனை பேர் பகிர்ந்து கொண்டீரோ தெரியாது. அவர் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த போது இஜட் + கேட்டகிரி கமாண்டோ ஃபோர்ஸ்க்கெல்லாம் தெரியாமல் கண் அறுவை சிகிச்சைக்கு சென்று உடனே செய்ய முடியுமா என விசாரிக்க இலவசம் என்றால் உடனே செய்து விடலாம் இங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும் என மருத்துவ ஆலோசகர்கள் ஆலோசனைப்படி அங்கேயே உள் நோயாளியாக தங்கி அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

பிச்சைக்கார நிலையில் இருக்கும் ஏழைகளுடன் ஒரு ஏழையாக, அவர்கள் கொடுத்த படுக்கையில் படுத்துக்கொண்டு, தட்டு வாங்கி சாப்பிட்டு அந்த தேவதைப் பெண்டிர் செய்யும் சேவையை புகழ்ந்து பாராட்டி எழுதி இருந்தார். அடுத்த நாள் இவரின் கமாண்டோக்கள் மருத்துவ மனையை சுற்றி பாதுகாப்புக்கு வந்து குவிந்து விட யார் என்ன? எதற்கு என எல்லாம் பார்த்தால் இந்த தோள் பையை தூக்கி வந்த இந்த எளிய நபர்தான் பிரதமரின் ஆலோசகர் அவருக்குத்தான் இத்தனை பாதுகாப்பு எனத் தெரிந்ததாம். அப்படி மக்களோடு மக்களாக இருந்ததால்தான் அந்த சேவையாளர்களின் அரிய சேவையை கண் கூடாக பார்த்து உணர்ந்து அனுபவிக்க முடிந்தது என தமது அனுபவத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

எமது வாழ்வில் மகாத்மா, அன்னை தெரஸா, அப்துல் கலாம் இந்த மூவரே முன் மாதிரிகள். இந்த மூவருக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் நிறைய. அது பற்றி எழுத அல்ல இந்த பதிவு. எனவே கலாமை மட்டும் தொட்டு அந்த மாமனிதரே இப்படி இலவசமாக கண்புரை அறுவை நீக்கச் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்ற முதல் அடி ஆணவத்தை அப்படியே நொறுக்க‌

இப்போது நாமிருக்கும் நிலையில் இது தான் சிறந்தது என அடுத்த அடி வழிகாட்ட...

இணைய வழியில் நெட்டிஜனாக இருந்த பலன் வலது கண் புரை நன்கு வளர்ந்து எதுவும் தாமதமாகவே நடக்கும் எனக்கு கண் பார்வை ஒன்று அறவே போகுமளவு இது 54 வயதுக்குள்ளேயே முற்றி விட,எப்போது சமயம் வாய்க்கும் என்றிருந்த எனக்கு ஒரு இலவச கண் சிகிச்சை முகாம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியில் என்னை அனுமதித்தது கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள...





எனது 25 வயது முதல் 35 வயது வரை கிராமிய விழிப்புணர்வு மேம்பாட்டு நிறுவனத்தில் திட்ட அலுவலராக பணிச் சேவை செய்த போது எனது ஒருங்கிணைப்பில் பல்வேறு பட்ட முகாம்கள் நடத்திய வெற்றி பெற்ற அனுபங்கள் என்னுள் ஏராளம். மருத்துவ முகாம், உழவர் பயிற்சி முகாம், தோட்டக்கலை முகாம், விவசாய மேம்பாட்டு முகாம்,இளைஞர் பொறுப்பு பயிற்சி முகாம், குழந்தைகள் முகாம், பெண்கள் விழிப்புணர்வு மேம்பாட்டு முகாம், சமுதாயப் பணியாளர் பயிற்சி முகாம் இளைஞர் முகாம், விளையாட்டுப் போட்டிகள் இப்படி மாதம் ஒன்றுக்கு 2 நிகழ்வுகள் நடந்தபடியே ஆண்டெல்லாம் செல்லும். அப்போதெல்லாம் மற்றவர்க்கு நாங்கள் செய்தோம் எனது தலைமையில். அப்போதெல்லாம் இந்த அடியவனுக்கு எதுவும் தேவைப்படவேயில்லை.




ஆனால் தேவைப்படும்போது அந்த பணிகளில் இருந்தெல்லாம் முடியாமை, இயலாமை, உடல் நலம் காரணம் பற்றி எல்லாம் விடுபட்டு இருந்தாலும் அந்த தர்மம் என்னைத் தொடர்ந்து வருகிறது போல...

இந்த முகாம் எனது குடும்ப நண்பர் எனது பள்ளித் தோழன் பூபதி குடும்பத்தாரால் அவரது தந்தை நினைவாக எஸ்.இ.முத்துசாமி அறக்கட்டளை . சேலம் மெல்வின் சுழற் சங்கம், மால்கோ எனர்ஜி லிமிடெட், மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற...

சென்று பார்க்கலாமே என சென்றால் நல்ல கூட்டம், ஒரு அனுமதி எண் மட்டும் பெற்றுக் கொண்டு சில மணி நேரம் கழித்து சென்றேன். பூபதி, அவரது சகோதரர் சுரேஷ் ஆகியோர் அன்பொழுக வரவேற்றனர். அதுவும் பூபதி எனக்கு அடையாளம் தெரியவில்லை.சுமார் 20 அல்லது 30 ஆண்டுக்கும் முன் பார்த்த உறவு. ஆனால் அவர் அடையாளம் தெரிந்து அதே அளவு நட்புச் செறிவுடன் பேசியதே ஒரு நல் அறிகுறி அடையாளமாக இருந்தது.

எண் வரிசைப்படி பல்வேறுபட்ட சோதனைகள். சுமார் 6 சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். கொஞ்சம் பொறுமை வேண்டும். காத்திருப்புக்கு.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன் தாய் தெய்வானை அம்மாளுக்கு சாய்பாபா ட்ரஸ்ட் மூலம் மேட்டூர் சுப்ரமணிய சாமி கோவில் அர்ச்சகரும் நண்பருமான அந்த நபர் ஒரு எண் முன் கூட்டியே எடுத்து வைத்து எல்லாம் தயார் நிலை செய்து வைத்திருந்தார். ஆனால் எமது குடும்பம் பெரிய குடும்பம். 5 சகோதரிகள், 2 சகோதரர்கள். தாய் என்னிடம். இப்படி இலவசமாக தள்ளிவிட்டு செய்து விட்டானே என எவராவது எண்ணி விட்டால் அது எனக்கு இளப்பமாகிவிடக்கூடாதே என சேலம் டி.எம்.எஸ் கண் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்.செல்வரங்கம் வழியே செய்வித்தேன். பரிசோதனைக்கு ஒரு நாள், அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் என காரில் அழைத்து சென்று அப்போதே இந்தியப்பணம் 12,500 கட்டணமாக அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டி நல்ல லென்ஸாக வைக்க அறிவுறுத்தினேன். அப்போது நான் பார்வை இழப்பு மீட்பு சங்கத்தில் உறுப்பினர் கண் தானம் எல்லாம் செய்தோம், செய்ய பிறரை ஊக்குவித்தோம்.

காசுக்குத் தக்க பணியார விலையில் லேசர்,லேசிக் என்றும், லென்ஸ்கள் வேறு வேறாக இருக்கிறது என்றும், நல்லபடியாக செலவு செய்து கொள்வோருக்கு உடனே லேசர் மெஷின்களில் ஆட்டோமேட்டிக் என்ற வடிவத்தில் எல்லாம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் உடனே வீடு திரும்பலாம் என்றும் இப்படி மாதக் கணக்கில் நிபந்தனைகள் எல்லாம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்றெல்லாம் அறிந்த போதும் இப்போது யாம் இருக்கும் நிலை, மகன் மணியத்தின் பள்ளி மேனிலை இறுதித் தேர்வு அதன் பின் வரும் கல்லூரிப் பருவம் அதன் எதிர்பார்ப்புகள், செய்ய வேண்டிய கடமைகள் செலவுகள் பொறுப்புகள் யாவும் முன் நிற்க ஒரு காலத்தில் கார் வாங்குவேன் என்று சொல்லி வாங்காமல் காலம் என்னை வாழ வைத்துக்கொண்டிருப்பதற்கேற்ப இந்த இலவச முகாமிலும் நுழைந்து கொண்டேன்.

எனது மகனுக்கும், மனைவிக்கும் இப்படி இலவச முகாம் மூலம் செய்ய அனுமதிப்பேனா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் எனக்கு மிகவும் கீழ்தட்டு வாழ்வு முதல் பிரதமர், இந்தியத் தலமை நீதிபதி, குடியரசுத் தலைவர் வரை ஒரு மென்முகத் தொடர்பு இருந்த அனுபவமும் நம்மால் எதையும் தாங்க முடியும் தாக்குப் பிடிக்கும் திறன் இருந்தபடியாலும் இதை இப்படி ஏற்றுக்கொண்டேன்.

மருத்துவத்தில் ஒரு குறையும் இல்லை. மிக அருமையாக, மிக நேர்த்தியாக மிகவும் சரியாக துளி பாகுபாடின்றி இந்த கண் மருத்துவத்தை கீழ் உள்ள பாமரர்க்கும் எடுத்து வந்துள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்திற்கும் இந்த முகாம்களை ஏற்பாடு செய்யும் அத்தனை தொண்டு நிறுவனங்களுக்கும் நாம் நன்றிகடன் பட்டவராவோம்.அந்த சிறு பெண்கள் எல்லாம் ஒரு நபருடன் கூட மரியாதை குறைவாக நடக்கவேயில்ல நாம் பார்த்தவரை எல்லாரையும் தாத்தா, பாட்டி என்றே அழைத்தார்கள். நல்லவேளை என்னை அந்த மாதிரி அழைக்காதது என்னை இன்னும் முதுமைக்குள் செல்லாதவன் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள சற்று ஆறுதலாக இருந்தது. கால தேவனின் மயக்கம்.

ஆனால் வந்து கலந்து கொள்ளும் நமது மக்கள் அடிக்கும் லூட்டிதான் தாள முடியாதது. சுத்தமில்லாமல், மூத்திர நாற்றமடிக்க,3 நாளானாலும் காலில் பாதத்தில் ஒட்டியுள்ள புழுதி மண் போகாமலே அறுவை சிகிச்சை தியேட்டர் வரை செல்வது, சோதனை செய்யும் தாதிப் பெண்டிருக்கு ஒத்துழைக்காமல் தொல்லை கொடுப்பது , இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். புகை பிடிக்காதீர் என்றால் கழிப்பகத்தில் சென்று புகை பிடிப்பது அது சேர்த்து கட்டப்பட்டிருக்கும் நோயாளிகள் படுத்த படுக்கையிருக்கும் இடத்துக்கே தொந்தரவாயிருப்பது ...ஆக செல்லும் குழு முழுதாக சோதனை முடிந்தபின் தான் அந்த குழு அடுத்த கட்டத்தின் பரிசோதனைக்கு செல்ல முடியும் என்பதால் எல்லாருடைய நேரத்தையும் வீணடிப்பது, உணவுண்ட சில்வர் தட்டை நன்கு கழுவாமல் விடுவது...இப்படி..இந்த தட்டு கழுவும் பணியை நான் அங்கு சென்றும் ஒருங்கிணைக்க வேண்டியதாயிற்று.அவரவரே அவரவர் சாப்பிடும் தட்டை கழுவி அந்த பிப்ரவரி 7 இரவு முதல் 9 காலை வரை வைத்துக் கொள்ளவும் வீட்டுக்கு புறப்படும் போது கொடுத்து விடவும் சொல்லி விட்டேன் தன்னார்வத் தொண்டராக அங்கேயும் மாறி.

ஏன் எனில் நாம் நேரு யுவக் கேந்திரா முகாம்களில் எல்லாம் ஏற்கெனவே ஒரு சுற்றறிக்கை கொடுத்து விடுவோம், தட்டு, டம்ளர் படுக்கை போர்வை எல்லாம் அவரவர்கள் கொண்டு வரவேண்டுமென்று. எமது கிராமிய விழிப்புணர்வுத் திட்டப் பணிகளின் போது உணவைப் பொட்டலமாக கொடுத்து விடுவோம் எனவே இந்தப் பிரச்சனை இல்லை. இங்கே இந்தப் பிரச்சனை இருந்தது.(தேசிய அளவில் மாநில அளவில் முகாம் நடத்தும்போது சுத்தம் சுகாதாரம் எல்லாம் நன்றாகவே இருக்கும். அது போல இங்கும் இருக்க வேண்டும்.)

அவர்களே பாய், தலையணை, தட்டு எல்லாமே கொடுத்தார்கள். பற்பொடி கூட கொடுக்கப்பட்டது ஆனாலும் சிலர் பல் விளக்கமாலே ஆபரேஷன் தியேட்டர் வரை வந்து விட்டனர். சுமார் 16 சோதனைக் கட்டங்கள் தாண்டி இறுதி நிலைக்கு.

அடியேன் அல்சர், பைல்ஸ், உயர் இரத்த அழுத்தம், தற்காலிக சர்க்கரை எல்லாம் இருக்கும் நோயாளியாக முதற் சோதனைகளில் கணிக்கப்பட்டேன் முத்திரை குத்தப்பட்டேன் . இந்த நிகழ்வு திடீரென நிகழ, முகாமுக்கு வருகிறீர்களா என்றார்கள். வருகிறேன் எனச் சொல்லி விட்டேன்.

முன் சில நாட்களில் நடைப்பயிற்சிக்கு செல்லாமை, பதஞ்சலியின் வில்வ சாக்லேட், குல்கந்து, தேன் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டது எல்லாம் என்னை சில நோய் அறிகுறியாளனாக காண்பித்தது சோதனை அறிக்கைகள். ஆனாலும் கவலைப்படும்படி இல்லை.

முகாம் பிப்ரவரி 7 அன்று இங்கே மால்கோ பள்ளியில் நிறைய சோதனைகள் சுமார் 6 இடங்களில். மருத்துவர் அறுவை சிகிச்சை உடனே செய்து கொள்ள பரிந்துரைக்க அடுத்த பிரிவில் கண்ணில் ஊசியில் மருந்து ஏற்றினார்கள் பார்க்கவே அச்சமூட்ட இதென்னடா கண்ணில் கண் இரப்பையில் ஏற்றுகிறாரே என ஒரு தாக்கம்.

ஆனால் அப்படி ஒன்றும் நமக்கு செய்யும்போது வலி இல்லை. மருந்து தொண்டைக்கு வந்து விட்டதா என கேட்க,ஆமென்ற பதில் இயல்பாக்கி விட்டது. அடுத்து சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், அடுத்து விலாச உறுதிப்பாடு அதன் பின் ஒரு அடையாள அட்டை கணினியில் ஏற்றி கொடுத்து விடுகிறார்கள். ஒரு நூல் கட்டிய அட்டையை.

அங்கே  மிக அவசரம் என எல்லாரையும் காய்ச்சிக் கொண்டிருந்தார் ஒரு ஒருங்கிணைப்பாளர்.அவர் அனைவரையும் வண்டிக்கு போகச் செய்ய பொறுப்பில் இருந்தார்.  நான் வரிசைக்கிரமப்படி 113 என்ற நிலையில் இருந்தேன்.

எவரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெளி உணவு எனக்கு ஒத்துக்கொள்ளாததால் சாப்பிட்டுக் கிளம்ப,(முகாமில் அனைவர்க்கும் உணவுப் பொட்டலம் தக்காளிச் சோறு, புளிச் சோறு என வழங்கப்பட்டது ) அங்கொரு அரசு பேருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. என்னை வேண்டாம் சார் நீங்கள் அடுத்த பேருந்தில் ஏறிக்கொள்ளலாம் என ஒரு இளைஞர் தடுத்தார்.

அல்சர்,பைல்ஸ், பிரயாணத்தை தவிர்க்கவேண்டிய எனது உடல் நிலையை இயற்கை கண்ணுற்று அந்த தம்பி வடிவத்தில் வந்து என்னைத் தடுத்ததோ? அல்லது நான் வீட்டுக்கு வந்து புறப்பட எடுத்துக்கொண்ட கால அவகாசம் காப்பாற்றியதோ!

முன் சென்ற 2 பேருந்துகளும் (அதற்கு முன்பே ஒரு பேருந்து சென்று விட்டதாம்) மதுரைக்கு சென்றன. எனது மீதமுள்ள பேர் 19 பேருக்கு ஒரு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நாங்கள் சேலம் அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டோம். நெடுந்தூரப்பயணம் தவிர்க்கப்பட்டதற்கு நன்றி யாருக்குச் சொல்வதோ!

மதுரை செல்வதாக வீட்டில் சொல்லி வந்தவன் இரவு முகாம் சேலம் கண் மருத்துவ மனை அரவிந்த் சென்றவுடன் நான் சேலத்தில் இருக்கிறேன் என வீட்டுக்கு பேசினேன். இனி வரும் முகாம்கள் எல்லாம் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையில் வைத்தே அறுவை சிகிச்சை செய்வோம் என அந்த ஒருங்கிணைப்பாளர் எங்களிடம் கூறினார்.

சேலம் நெத்திமேடு என்ற இடத்தில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அன்னதானப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காளியம்மன் கோவில் அருகே 5 அடுக்குகளில் இந்த சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்படுகிறது. பேருந்து வந்து நின்றதும் தாதிப் பெண்கள் சாலையை கடக்கவும் உதவினார்கள் பெரிய முதிய உள் புற நோயாளிகளாய் சேர வந்திருந்த என்னை உள்ளடக்கியவர்களுக்கு.வெளியே 10 மாவட்டங்களிலும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையின் கிளைகள், தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம், சென்னை, கோவை இப்படி பரவிக்கிடப்பதை அறிவிப்புப் பலகை தெளிவு படுத்தியது.

உடனே பரிசோதனை ஆரம்பம், முகாமில் செய்த சோதனைகளை எல்லாம் மறுபடியும் இவர்கள் செய்து அதற்கு மேலும் சோதனை இரவு வரை வரிசையாக தொடர்ந்தார்கள் . நேரம் காலம் பார்க்காமல். கொசுக்கடியிலும். அந்தப்பெண்கள், அந்த மருத்துவர்கள் எல்லாரையும் கண்டிப்பு காட்டிய தலைமைத் தாதியர் அவர்கள் எல்லரையும் நாம் சேவை புரிவதற்காக பாரட்ட வேண்டும் நன்றி காட்டவேண்டும். முகாமில் மேட்டூர் முதல் அடிக்கடி சொட்டு மருந்து சுற்றுகள் விட்டபடியே இருந்தனர் போதிய இடைவெளிகளுடன் அவ்வப்போது இடைவிடாமல்.

எனக்கு நினைவிருக்கும் வரை சுமார் இதுவரை 7 கண் மருத்துவ நிபுணர்கள் எங்களது கண்களை பரிசோதனை செய்தனர் அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும். கே ரீடிங் என்றால் என்ன என்றேன்? கார்னியா (விழி வெண் படலம்)எப்படி இருக்கிறது என்ற ரீடிங் என்றார்கள். சர்க்கரை, இரத்த  அழுத்தம், உடலில் ஏதாவது பிணிகள் , அலர்ஜி இருக்கிறதா என பிசிறில்லாமல் சோதித்து அறிகிறார்கள். நுட்பமாக நாம் தரும் தகவல்களை பதிவு செய்து கொள்கிறார்கள் எந்த இடத்திலுமே எதையுமே தவறவிடுவதில்லை. நல்ல கவனிப்பு

எல்லா பரிசோதனைகளையும் முடித்து தங்குமிடத்துக்கு அனுப்பினர். எனது வீட்டை விட நன்றாக உள்ள மொசைக் தரைதளம், நல்ல பாய், நல்ல தலையணை, நல்ல கழிப்பறை எல்லாம் உள்ளது நீர் பிரச்சனை இல்லை. தினமும் ஒரு பெண் வந்து கழிப்பறையை சுத்தம் செய்து விட்டு சென்றார். வாஷ்பேசின் எல்லாம் மின்சார விசிறி கூட உண்டு. புகை பிடிக்க வேண்டாம் என்கிறார்கள் நமது மண்ணின் மைந்தர்கள் கேட்பதில்லை.

எனக்கு அல்சர் என்பதால் அவர்களின் பச்சரிசிப் பொங்கல்,பொங்கல் பச்சரிசியில் வைக்காமல் எதில் வைப்பார்கள் என்றார் அந்தப்பெண்(ஆனால் எங்கள் வீட்டில் வெண்பொங்கல் புழுங்கல் அரிசியில்தான் வைப்பார்கள் தாயே தெரியாமல் கேட்டு விட்டேன் என மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்) இரவில் இரசம் சோறு ஆகியவை ஒத்துக்கொள்ளவில்லை. கேண்டீனில் ஒரு நாள் சாப்பிட முயன்றேன் குடிநீர் வாங்கிக்கொண்டேன் பிஸ்கட்களுடன், ஆனால் கேட் தாண்டி கேன்டீன் 10அடி செல்வதற்கும் ஏக கண்டிப்பு. உள் நோயாளி கேண்டீன் எல்லாம் செல்லக்கூடாது என. ஒரு நபர் என்னை சுட்டு விரலால் உள்ளே போ கேண்டீனில் உட்காராதே என சைகையால் எச்சரித்தார். அவருக்கும் என் நன்றி.செய்யக் கூடாத செயலை செய்தவன் போல் கேண்டீனில் எனக்கு குடிநீர் பாட்டில் பிஸ்கட் தந்த பெண்ணும் பார்த்தார் வாட்ஸ் மேன் ஏன் உங்களுடன் யாரும் வரவில்லையா என்றவர் கேன்டீன் செல்ல அனுமதித்து விட்டு பின்னாலேயே வந்து கேன்டீன் நடத்துபவரிடம் இன் பேஷண்ட்டுக்கு ஏதும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள் மேலிடத்தில் என அறிவுறுத்தினார். அவரும் உணவளித்து உள் சென்று உண்ணுங்கள் என சமாளித்தார்.

 காலை 7 மணிக்குள் காலை உணவு பொங்கல் போன்றவை, மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் மதிய உணவு, இரவு மறுபடியும் 6 மணிக்கே ரசம் உணவு . அவர்களை குற்றம் சொல்ல வழியில்லை. ஆனால் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதை முறியடிக்க எப்படியோ ஒரு நாள் கேண்டீன் சாப்பாடு, இரவு 3 தோசை என பாட்டில் நீர் ,பிஸ்கட் என மீறியும் அந்த வயிற்றின் காந்தள் தீர ஒரு வாரம் ஆயிற்று.

சரியாக அதிகாலை என்னை வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு சோதனைக்கு உட்படுத்த எல்லாம் சரிதான் என அறிக்கை வர‌ எல்லாருக்கும் முன் என்னை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள். ஏன் எனில் அங்கே சென்ற குழுவில் நான் கொஞ்சம் வேறுபட்டு இருந்ததால். உடை, பழகும் விதம், நன்றி பகிர்தல், தினமும் கழுத்தோடு 3 மணிக்கே எழுந்து குளித்த விதம். ( 2 நாளுமே ஆடை மாற்றிக் கொண்டது  இப்படி பண்பாட்டால்)

அங்கே அறுவை சிகிச்சை செய்யும் கண்களை மறுபடியும் பரிசோதித்து மயக்க மருந்து ஊசி போடப்பட்டது. காலுக்கு, தலைக்கு ஆபரேசன் கவர்கள் அணிவிக்கப்பட்டன. விழியை நாலாபக்கமும் அசைக்கச் சொல்லி மருத்துவர் ஒருவர் மறுபடியும் ஒரு ஊசியை விழியின் இரு ஓரங்களிலும் போடுகிறார். மேலும் வலது கையில் ஒரு ஊசி போடப்பட்டு அதன் பின் விளைவு இருக்கிறதா என சோதிக்கப்படுகிறது அதன் பின் அறுவை சிகிச்சை கூடம் அழைத்து செல்லப்படுகிறோம்.

சிலருக்கு உடல் நிலவரத்துக்கேற்ப ஆபரேசன் சற்று தள்ளி போடப்படுகிறது. சிலருக்கு திரும்பவும் வந்து விடுங்கள் என கோரப்படுகிறது எங்கள் குழுவில் ஒருவருக்கு உடல் முகம் எல்லாம் வீங்கிவிட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தாமல் பெட் ரெஸ்ட் செய்யச் சொல்லி திரும்பி வரச் சொல்லி விட்டார்கள் ஊர் அருகே என்பதால்.

நாங்கள் சென்று அட்மிட் ஆன அதே நாளில் சின்ன திருப்பதி சேலத்தில் முகாமிலிருந்து 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு வேறு அறைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு வேறு அறைகள். நோயாளியின் தீவிரத்திற்கேற்ப கட்டிலும் உண்டு. இதை எல்லாம் விட மதுரையில் ஏக களேபரமாக இருக்குமாம். இரவில் கூத்துப் பாடியதாகவும், ஏன் மது கூட அருந்தியதாகவும் அங்கு சென்று ஏற்கெனவே ஒரு கண் அறுவை சிகிச்சை செய்து வந்தவர்கள் பேசிக்கொண்டனர். எனக்கு அருகே 2நண்பர்கள் ஒருவர் கல் உடைப்பவர், மற்றொருவர் பெயிண்டர். கல் உடைக்கும் கட்டடத் தொழிலாளியின் செல்பேசியில்தான் எனது வீட்டிலிருந்து மகனும்,மனைவியும் இரவு 9 மணிக்கும் மேல் இலவச தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு அந்த இரண்டு நாளும் பேசினர். நான் மட்டுமல்ல போன் இல்லாத அல்லது கொண்டு வராத அனைவர்க்குமே அவரது செல்பேசிதான் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆக பயன்பட்டது.




அந்த விடுதியில் இறுதியில் நர்ஸ்கள் அறை, அதன் முன் ஒரு மருத்துவர் அந்த அதிகாலையில் எங்களை சோதித்தார். என்னதான் பணம் கொடுத்தாலும் அந்த நேரத்தில் எல்லாம் மருத்துவரை பார்ப்பதே அரிதுதான். எனவே என்னால் முடிந்தளவு அனைவர்க்கும் நன்றி நன்றி என்ற வார்த்தைகளை நெஞ்சார விளம்பினேன் நம்மால் வேறென்ன அவர்க்கு தர முடிகிறது.?

அறுவை சிகிச்சைக்கும் முன்பு மறுபடியும் ஒரு முறை தலைமைத் தாதி பல் விளக்கி விட்டீரா, சிறு நீர் கழிப்பதாயிருந்தால் சென்று வாருங்கள் என அனுப்பி வைக்கிறார். அதன் பின் அனஸ்தீசியா அதன் பின் அறுவை சிகிச்சைக்கூடம்.

நான் சென்ற கூடத்தில் இரு படுக்கைகள். ஒரு அறுவை சிகிச்சை முடித்து எனது பக்கம் திரும்பினார். அந்த நோயாளியிடம் அவ்வளவுதான் முடிந்தது என அன்பொழுக பேசினார். நான் வணக்கம் சொன்னேன். மேல் துணி அணிவித்து படுக்க வைத்தார் நர்ஸ். என் மேல் கூட அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்தார் .அது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

ஆபரேஷன் மெஷின் என்புறம் வர, என் வலது கண் அறுவை சிகிச்சை செய்யும் பகுதி தவிர சுற்றியும் துணி கொண்டு பஞ்சு கொண்டு மறைக்கப்பட்டது. சார், நான் எழுத்தாளன், நிறைய படிப்பவன் எழுதுபவன்  என்றேன் இது தூரப்பார்வையை சரி செய்யும் வேண்டுமானால் அதன் பின் கண்ணாடி அணிக என்று பேசிக்கொண்டே ஆப்ரேசன் நடந்து முடிந்தது. ஒரு சிரமம் வலி தெரியவில்லை.

அந்த மருத்துவரை எழுந்து வணங்கினேன் இரு கரம் கூப்பி. அதாவது விழிக்கோளம் மேல் தூக்கபட்டு நரம்பு சிதைவின்றி அந்த மெஷினில் உள்ள ஒரு ரப்பிங் மெஷினால் மேல் இருக்கும் புரை வழித்து தேய்த்து துடைத்து எடுக்கப்படுவது நன்றாக தெரிகிறது. அதன் பின் ஒரு செயற்கை லென்ஸ் வைக்கப்படுகிறது . அதை எப்படி தைக்கிறார் என்பது தெரியவில்லை. உடனே வெளியே அனுப்பி விடுகிறார்கள் மீறினால் ஒரு 30 நிமிடம் இருக்கலாம். நல்ல தரமான லென்ஸ் வைத்துக்கொள்ளுங்கள் என என் வீட்டில் இருந்து சுமார் 2000 கொடுத்து அனுப்பினர்.ஆனால் அதெல்லாம் பேசவே வழி இல்லை. அவர்கள் வைத்ததுதான் சரிதான் என்று விட்டு விட்டேன்.

அதன் பின் ஒரு மாத்திரை கொடுத்து லிப்ட் வழியே கீழ் அனுப்பி ஒரு கட்டுக் கட்டி நன்றாக ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். 6 மணி நேரம் கழித்து கட்டை பிரித்து மருந்து விட ஆரம்பிக்கிறார்கள்.கட்டை பிரித்த மறு நாள் செவிலியர் அழகாக துடைத்து எடுத்து மருந்து விடுகிறார்கள். கண்ணாடி கொடுத்து எல்லா விவரமும் சொல்லி சொட்டு மருந்துகள் அடங்கிய இரு வகையான 3 டப்பா கொடுக்கிறார்கள். சாப்பிட பத்தியம் இல்லை. கண்ணில் நீர் படாமல் கழுத்து வரை குளிக்கலாம் என்கிறார்கள்.புகை,புழுதி, தூசி, வெயிலில் ஒரு மாதம் முதல் 6 வாரம் வரை செல்ல வேண்டாம் என்றும் ஒரு மாதம் முடிந்ததும் தலைக்கு சாம்பூ போட்டு குளிக்கலாம் என்றும் சொல்லி அறிவுறுத்தி உள்ளனர் அட்டை வழியாகவும்.

மறுபடியும் காலை ஒரு மருத்துவர் , வீட்டுக்கு வரும் முன் இவரை வீட்டுக்கு அனுப்பலாமா என ஒரு மருத்துவர் என இப்படி ஓவ்வொரு கட்டத்திலும் நம்மை கவனிக்கிறார்கள்.

சொட்டு மருந்து விடும் முறைகளை அட்டையில் பிரிண்ட் செய்து அதை கையில் கொடுத்து 6 வாரம் அதை தவறாமல் பயன்படுத்தச் சொல்கிறார்கள். மார்ச்.6 ல் மறுபடியும் முகாம் நடந்த இடத்துக்கே வந்து மறு பரிசோதனை நடக்கிறது.

மருத்துவர் அருமையாக கவனித்தார். கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார். கண்ணாடி அப்போது இல்லையென்பதால் மருத்துவ மனைக்கு வந்தால் கிடைக்கும் என்றார். அந்த தாதிப் பெண் கூட என்னை எனது வெளித் தோற்றத்தைப் பார்த்து நீங்கள் வெளியே கூட வாங்கிக் கொள்ளலாம் என சொன்னபோதும் மருத்துவர் அவரை மறுத்தார்.நாம் பளிச் என வெளியே செல்வதால் நன்மையும் உண்டு. சிலர் நம்மை பொருளாதாரத்தில் பெரிய ஆள் என்றும் தோற்றத்தை வைத்து தப்புக் கணக்கு போட்டு விடுகிறார்கள்.

பாமரர்க்கும் செய்யும் சேவை உண்மையில் இவர்கள் செய்வது இறைப்பணி. அறப்பணி. அங்கு குழுமி இருக்கும் நோயாளிகளை எல்லாம் சேர்த்து தலைமை நர்ஸ் நினைக்கும்படி ஒரு ஆலோசனை அறவுரை கூட்டம் நடத்த வேண்டும் அதில் என் போன்றோர் அந்த சேவையில் ஈடுபட்ட சுமார் 100க்கும் மேலான மருத்துவர், தாதியர், போன்ற அனைவர்க்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்து ஒரு நாள் வைத்திருந்து மறு நாள் காலை அவர்களே அவர்கள் செலவில் அனுப்பி வைத்தனர்.  நான் செலவு செய்தது கண்ணாடிக்கு ரூ.50ம், குடிநீர் பிஸ்கட் சாப்பாடு வகையில் 150ம் இவற்றை நான் என் உடல்நிலை ஒத்துழைக்காததற்கு நானாக செய்த செலவுதான். அவர்கள் அதைக் கூட செய்யச் சொல்லவில்லை.மேலும் தொலைபேசியில் விசாரித்தாலும் விளக்கம் சொல்கிறார்கள்.என் போன்றோருக்கு மட்டுமல்ல இவர்கள் தருவது யாவருக்கும் வரம். நல்வரம். கண் பூ அகற்றும் தரம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம், அந்த சிரசுக்கு கண்தான் மூலம். ஒளி மூலம் தரும் இவர்களும் சாமிதானே...சாமிகளே உங்களை வணங்குகிறேன்.இன்னும் எவ்வளவு கருணை செய்ய முடியுமோ அவ்வளவு கருணை செய்யுங்கள் கடைக்கண் காட்டுங்கள் என்றும் எம் நன்றி உரித்தாகட்டும்.

வீட்டுக்கு வந்த அதே நாளில் நான் நடைப்பயிற்சி செய்து பார்த்தேன். பிரச்சனை இல்லைதான். ஆனால் அவர்கள் சொல்லிய புழுதி இருந்தது. ஒரு கண் நன்றாக இருக்கும்போதே மறு கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வது சிறந்தது. தேவைக்கு ஒரு கண் மூடிக் காத்துக் கொள்ளலாம்.

தலைமைச் செவிலியர் சேலம் மாவட்டத்தில் அனாதாரவான, படித்த 10த் +2 படித்த அல்லது வேலை வேண்டும் பெண்கள் இருந்தால் அழைத்து வருக உணவு தங்குமிடம் மற்றும் ஊதியம் உண்டு. இப்போது இந்தப் பெண்கள் எல்லாம் தெற்கு பக்க மாநிலமான புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி பக்கம் எல்லாம் இருந்து வந்து பணி புரிகிறார்கள். சேலம் மாவட்டத்தில் இருந்து யாரும் இன்னும் காணோம். அழைத்து வந்தால் உடனே பணி தருகிறோம் என்றும் வேண்டுகோள் வைத்தார். யாராவது தெரிந்தவர் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

1 comment: