Sunday, March 13, 2016

தமிழகத் தேர்தல் - 2016 சந்தையும் ஜனநாயக முரண்களும்: - கவிஞர் தணிகை

தமிழகத் தேர்தல் - 2016 சந்தையும் ஜனநாயக முரண்களும்: - கவிஞர் தணிகை






பேருந்தோடு 3 விவசாயக் கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்றவர்க்கும் ஆயுள் தண்டனையாக குறைப்பு,உச்ச நீதிமன்றத்தில் ஊசலாட்ட வழக்கில்  இருக்கும் முதல்வருக்கோ ஏராளமான வாய்ப்பு,பல்லாயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காதவனுக்கும் பட்டு விரிப்பு,எல்லாம் கட்சி,அரசியல் ,ஆட்சி, பல்லாண்டு வாய்தா .பணம், செல்வாக்கு நெளிவு சுளிவு.




11 மாதம் ஓடி மறைந்து  வாழ்ந்து விட்டு 4 மாதம் கர்ப்பிணியான கோதை கதறுகிறாள் தன்னைவிட இளம் வயது கணவனைப் பிரித்தால் செத்து விடுவோம் என. வயதில் முதிர்ந்த ஆண்கள் எவ்வளவு வயது குறைந்த பெண்ணையும் மணக்கலாம், குடும்பம் நடத்தலாம் ஆனால் பெண் தாம் தன்னை விட குறைந்த ஆணை மணக்கக் கூடாது . எல்லாம் சட்டத்தில் நீதியில் சொல்லப்பட்டுள்ளது.

இயற்கைக்கு முரணாக 35 இலட்சம் பேரை யமுனை ஆற்றங்கரையில் திரட்டும் சக்தி படைத்த இரவிசங்கர் சொல்கிறார் தமது பெட்டைக்குரலில் தன் இனச் சேர்க்கை என்பதெல்லாம் குற்றமில்லை அது நவீன வாழ்க்கையின் ஒரு அம்சம் என்று.அது ஒரு ஆர்ட் ஆப் லிவிங், ஸ்டைல் ஆப் லைப் என்று.

ஒரு பாமரன் விவசாயத்திற்கு கடனுதவி பெற்றால் கடைசியில் சிறு தொகைக்கும் அடித்து இழுத்துச் செல்லப்படுவதும், தற்கொலை செய்து கொள்வதும்,ஆனால் ஈசா சாமியார் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவுக்கு அவர் இருக்கும் இடம் சென்றே தேசிய வங்கிகளே  கடன் கொடுத்துவிட்டு பல்லிளித்தபடி புகைப்படம் வெளியிடுவதும்,

மாபெரும் திருடன் மல்லைய்யாவை மாஜி பிரதமர் தேவ கவுடா உயர் குடியில் பிறந்த சீமான், என்றும் ராஜ்ய சபா உறுப்பினர் என்றும் "இதெல்லாம் பிஸினஸ்ஸில் இருப்பது தானேப்பா"(எது வேலை செய்த ஊழியர்க்கு சம்பளம் கொடுக்காமல் அவர்கள் நெஞ்சில் நஞ்சை வார்த்துக் கொல்வதும், அரசுக்கு அரசின் விமான ஆணையத்துக்கு (அத்தாரிட்டி) வரி ஏய்ப்பது, வங்கிகளை பல்லாயிரம் கோடி கடன் பெற்று சொத்து ஒன்றுமேயில்லை என கணக்கு காட்டி ஏமாற்றி விட்டு சிறு பெண்களோடு கோடி கோடியாக கொடுத்து கூத்தடிப்பது,இரவுப்பார்ட்டி நடத்துவது, சி.பி.ஐ விசாரணை நடக்கும்போதே பாடகருக்கு கோடி கோடியாக கொடுப்பது, தமது கம்பெனி நஷ்டம் என வேறு பேரில் அவரே அந்த கம்பெனியை மார்க்கெட் விலைக்கு வாங்கிக்கொள்வது எல்லாமே இந்த மாஜி பிரதமர் தேவகவுடா போன்றோர்க்கு தவறில்லை) என்பதும்...கொடுத்த காசோலை காசில்லாமல் திரும்பி விடுவதும்.

இதெல்லாம் ஜனநாயக முரண்கள் . எங்கள் நாட்டில் எதுவும் நடக்கும். இப்போது தமிழகத் தேர்தல் - 2016 சந்தை.





ஆளும் கட்சியின் அம்மா எந்தக் கட்சியையும் மதிக்காதவர் இப்போது வேல்முருகன் கட்சி.பார்வாட் பிளாக், கொங்கு இளைஞர் பேரவை போன்ற 7 கொசுக் கட்சிகளுடன் ஓ. சாரி..குசுக் கட்சிகளுடன், ஓ. ஓ சாரி சிறுக் கட்சிகளுடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளாராம். இதிலிருந்தே அம்மாவின் தேர்தல் பீதி நன்கு விளங்கி இருக்கும். அம்மா இந்தத் தேர்தலில் மாநிலம் எங்கும் சுற்றி வாக்கு கேட்கவே வழியில்லை. அப்படியே ஜெயித்து விடலாம் அவருக்கு கட்சியினர் ஊர் ஊருக்கு உயிரைக் கொடுக்க இருக்கிறார்கள். என்றாலும் தேர்தல் பயம். எம்.ஜி.ஆருக்கும் பிறகு தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வர் பதவியைத் தக்க வைக்க வேண்டுமே...ஆனால் தமிழக மக்கள் எந்த தோசையை எப்படி வேண்டுமானாலும் திருப்பிப் போட்டு நிதர்சனமான முடிவைத் தரவல்லவர்கள்தான்.

 எல்லாம் மாஸ் மக்களிடம் இருக்கிறது என்னதான் இத்தனை கட்சிகள் இப்போதைக்கு பிரிந்து நின்று குழப்புவதாகத் தோன்றினாலும் மே.16க்குள் ஒரு வடிவத்துக்குள் வந்து விடுவார்கள்.ஆனாலும் மாடுகள் பிரிந்து செல்வது இந்த கட்சிக்கு நல்லதே.கடந்த முறை தே.மு.தி.க செய்த அதே வேலையை சதவீதத்தை இந்த உதிரிகள் ஈடு கட்டி விட மாட்டாரா என்று ஆதங்கம். தே.மு.தி.க தனித்து இருப்பதால் ஒரு பக்கம் இதற்கு பரவாயில்லை என்றாலும் கடந்த முறையை ஒப்பு நோக்கினால் ந்ஷ்டம்தான். அதனால் இந்த கட்சிக்கும் பின்னடைவுதான்.தி.மு.கவுக்கு அதனால் +பிளஸ் இல்லை. ஆனால் இவர்களுக்கு மைனஸ்.




இரண்டாம் நிலை தி.மு.க முதல் நிலைக்கு ஸ்டாலினுக்காகவாவது வரவேண்டும் என பேச்சு அடிபடுகிறது. நல்ல நிர்வாகி, இவர் துணை முதல்வராகவும், மேயராகவும் நல்ல பணி புரிந்தவர் .ஆனால் இவர் கட்சி மேல் இன்னும் ஜனக்கட்டு அலை பரவ பாய மறுக்கிறது எம்.ஜி.ஆர் பொருளாளரை இவரது தந்தை மு.க நீக்கி கட்சியை குடும்பக் காட்சியாய் மாற்றியதிலிருந்து..என்றாலும் உணர்ந்தோம், செய்வோம் எனத் துடிக்கிறார்கள்.




அடுத்து  தி.மு.க ஆட்சியில் திருமண மண்டபத்தை சாலை விரிவாக்கத்துக்காக ஆட்சி நிர்வாகம் இடித்த போது சினிமா சங்க தலைவராக இருந்தவர் ரஜினி வராவிட்டால் என்ன? நான் வருகிறேன் என கட்சி ஆரம்பித்து இளையவர் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார் கூட்டணி மந்திரத்தில். ஆனால் இவருக்கு இப்போது முதல்வராகவும் ஆசை. வாய்ப்பை ட்ராபிக் இராமசாமி, இவரது மனைவி, இவரது மைத்துனர் எல்லாம் எப்பாடு பட்டாவது கொண்டு வந்து விடலாம் என காய் நகர்த்த ஆனால் இவரோ பொது மக்கள் மேடைக்கு வரும்போதே தள்ளாடிய படி வருகிறார் மது அடிமையாய். வயது 64 முடியவில்லை அவராலும் பாவம். சொல்ல முடியாது எல்லா வாக்குகளும் சின்னாபின்னமாக சிதறிக் கலையும்போது எவர் வேண்டுமானாலும் முதல்வர் பதவியை எட்ட வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவர் தனித்து நிற்பதால் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.கவாகிய இவர்கள் கட்சிக்கும்தான் பின்னடைவு. தி.மு.கவுக்கு இல்லை என்பதே என் கருத்து.

மருத்துவர் அன்பு மணி  நல்ல இளைஞர் இருக்கும் முதல்வர் வேட்பாளர்களில் முதல் தகுதியானவர்தான். ஆனால் இவர் அ.இ.அ.தி.மு.கவில் அம்மாவின் தத்துப் பிள்ளையாக இருந்தால் இவர்தான் முதல்வர். நல்ல முதல்வராகவும் வரலாம். மற்றபடி நல்ல கனவு. ஆனால் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர்.




அப்புறம் நம்ம சிம்ம கர்ஜனை வைகோ தம் மகனின் சிகரெட் வியாபாரத்தை நியாயப்படுத்துகிறார், மாரல்  இருக்கிறாம் அதில். இவருக்கு மதுவை விட புகையிலையின் எந்த வடிவமும் மனிதருக்குத் தீங்கு, நுகர்வோருக்கு மட்டுமல்ல அருகிருப்போருக்கும், சுற்றுப்புறத்த்துக்கும் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை. இவர் பற்றி என்னவெல்லமோ செய்திகள். வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை இந்த மக்கள் நலக் கூட்டணி திருமாவுக்கும், பொதுவுடமைக் கட்சிக்காரர்களுக்கும்.

நல்லக் கண்ணு, சகாயம், பொன்ராஜ் போன்றவர்கள் எல்லாம்  நல்ல மனிதர்கள் சமுதாய அக்கறை உள்ளவர்கள் ஆனாலும் தமிழக சரித்திரத்தில் அவ்வளவு பெரிய மாறுதல் எல்லாம் நமது மக்களிடம் எதிர் பார்ப்பதற்கில்லை

பாரதிய ஜனதா பற்றி ஒரு தேசியக் கட்சி மாநிலத்தில் செல்வாக்கு எந்த அமித் ஷாவாலும், பிரதமராலும் ஏற்படுத்த முடியாது பெரியார் மண்,  வேண்டுமானால் விஜய்காந்த், விசு, சுந்தரராஜன் இளைய ராஜா போன்ற சினிமா நட்சத்திரங்கள் தங்களது கணக்கு வாழ்க்கை வருவாய் சொத்து போன்றவற்றிற்காக பயந்தும் எஸ்.வி.சேகர் போன்ற பதவி வேண்டுவோர்க்காகவும் சிலர் சேரலாம். ஆனால் இந்த கட்சி கண்டாலே கூட்டணி சேரும் கட்சிக்காரர் எல்லாம் பயந்து ஓடுகிறார்.

எல்லாவற்றையும் விட இந்த தேர்தலில் தேர்தல் முடிந்த பிறகு ஏற்படும் நிலைக்கேற்ப நாம் வலிமையானவருடன் சேர்ந்து பதவி சுகம் காண்பது சிறந்தது என்ற போக்கு அதாவது மக்கள் என்ன செய்வார்களோ என நிர்ணயிக்க முடியாத போக்கு இருப்பதால் அதற்கேற்ப செயல் பட்டுக் கொள்ளலாம் என எல்லாருமே நினைக்கிறார்கள்.

எல்லாக் கட்சியினரையும் இந்த தமிழகத் தேர்தல் பெரிதும் அச்சம் கொள்ள வைத்திருக்கும் மிகவும் புதுமையான அதிர்ச்சியூட்டும் முடிவுகளை வெளிப்படுத்த இருக்கும்  இந்த தேர்தல். நம் போன்றோருக்கு எப்போதும் போல வழக்கமான தேர்தலாகவே இருக்கிறது. பெரிதும் மக்களுக்கு இதனால் மாறுதலும் தேறுதலும், நன்மைகளும் விளையுமா என்பதுதான் நம் கவலை.

ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி ஏட்டில் வெளிப்படுத்த முடியா அளவு எல்லா பேரங்களும் முடிந்து தான், சில முடிவுகளை வேண்டா வெறுப்பாக இந்தக் கட்சிகள் எல்லாம் எட்டியுள்ளன. ஆனாலும் இன்னும் நிறைய நாடக அரங்கேற்றங்களும் காத்திருக்கின்றன இன்னும் 2 மாதத்திற்கும் மேல்  முழுதாக இருக்கிறதே...

அவ்வப்போது சந்திப்போம் தேர்தல் நிலை பற்றி சிந்திப்போம். பகிர்ந்து கொள்வோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment