Wednesday, March 30, 2016

மதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக் 3.கவிஞர் தணிகை

மதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக் 3.கவிஞர் தணிகைஈஸ்டர் கிறிஸ்து உயிரித்தெழுதல் நாளை லாகூரில் பூங்காவில் கொண்டாடிய கிறித்தவ மக்கள் மீது பாகிஸ்தான் தாலிபான் மனித வெடிகுண்டு இன வெறித் தாக்குதல் 72 பேரை பலி கொண்டு 250 பேரை படுகாயமடையச் செய்த சம்பவம் ஒரு உலகின் மதவெறி சோகம். இறந்தது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும்.மார்க்ஸ் சொன்ன அபின் என்ற மத போதையை விட இது எந்த கணக்கிலுமே சேராத காட்டுமிராண்டித்தனம். வார்த்தையில் வடிக்க முடியாத கொடூரம். சோகம்.

இதன் பொறுப்பை ஏற்ற பாகிஸ்தான் தாலிபான் குழு இதுமுடிவல்ல ஆரம்பம்தான் இனி இது நிறைய தொடரும் என பாகிஸ்தான் அரசை மிரட்டியுள்ளது.

பிறர் மகிழ்வில் நாமும் சேர்ந்து மகிழ்வது ஒரு விதம், பிறர் மகிழ நாம் செயல்படுவது ஒரு விதம், பிறர் மகிழ்வதை பார்ப்பதில் சுகம் ஒருவிதம் இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு பிறர் துன்பத்தில் எப்படி இந்த குரூர மனங்கள் மகிழ்கின்றன? உண்மையிலேயே அவை மகிழ முடியுமா?

அதுவும் ஒரு திருநாளில் ஒரு விழாவில் இப்படி இனத் துவேசத்துடன் ஆவலுடன் இது போன்ற சம்பவத்துக்காக காத்திருந்ததாக சொல்லி இருப்பது கொடுமையிலும் கொடுமை.இந்த தீவிரவாதத்துக்கு ஒரு முடிவே இல்லையா? இந்த தீவிரவாதிகளை அடக்க, அழிக்க ஒழிக்கவே உலகுக்கு வழியில்லையா? சொல்லி விட்டால் ஒரு சில நண்பர்கள் கச்சை கட்டிக் கொண்டு கிறித்தவர்கள் ஜப்பானில் குண்டு போடவில்லையா? கிறித்தவ அமெரிக்கர், ஆங்கிலேயர் உலகெங்கும் கொடுங்கோல் செய்யவில்லையா? முகமதியரைத் தாக்கவில்லையா? இஸ்ரேல் பாலஸ்தீனியரை படுகொலை செய்யவில்லையா? என்றெல்லாம் வக்காலத்து வாங்க வந்து விடுகிறார்கள்.அவ்வப்போது நடக்கும் சம்பவத்துக்கு இது போன்ற முகமதிய இயக்கங்கள் காரணமாகி விடுகின்றனவே அதை மட்டும் தண்டிக்க திருத்த முடியவில்லை எனிலும் நாம் கண்டிக்க, நமது கருத்தை சொல்லவும் ஒரு நேர்மை, தூய்மை, துணிவு வேண்டுமே. அதில் நீங்கள் உங்களைப் போன்றோர் எப்படி தவறு காண்கிறீர் என்பதுதான் புரியவே இல்லை.

மதங்களை விமர்சிப்பது வேறு. உயிர்களை பறிப்பது வேறு. இப்படிச் செய்ய எந்த மனிதமும், எந்த உலக விதியுமே இவர்களை அனுமதிக்காது. இது ஒருமன நிலை கடந்த சைக்கோத்தனம். இந்த மனநோயாளிகள் உளவியல் ரீதியாக குணப்படுத்த வேண்டியவர்கள்.
வரலாறை காலத்தை திருப்ப முடியாது. என்றோ நடந்த நிகழ்வுகளுக்காக என்றுமே அப்பாவிகள் உயிர் போவதும் உடல் சிதைப்பதும் தொடர்ந்திடக் கூடாது. இதெல்லாம் மனிதமா? இப்படி உலகில் நடக்கலாமா?

ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவிலிருந்து 10 லாரிகள் இரவோடிரவாக காணாமல் போனாலும், வைகோ தமிழக அரசியல் என ஒரு புறம் பேசபட்டு தேர்தல் நாள் நெருங்கி வந்தாலும், மல்லையா தமது கடனில் 4000 கோடியை முதல் தவணையாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனச் சொன்னாலும் செய்திகள் எவ்வளவு உருண்டோடினாலும்,தேமுதிக விஜய்காந்த் மச்சான் சுதிஷ் வைகோவுக்கு துணை முதல்வர், கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளாட்சி, நிதி, திருமாவுக்கு கல்வி மந்திரி பதவிகள் விஜய்காந்த் முதல்வரானால் உண்டு என்றாலும் சில நாட்களாக இந்த உயிர்கள்  பாகிஸ்தானி லாகூர் பூங்காவில் பூக்களைப் போல பறிக்கப்பட்டது இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தப்பட்டது மனதிலிருந்து அகலவில்லை.இதை எல்லாம் எழுதி என்ன ஆகப் போகிறது? ஏற்கெனவே எங்களுக்குத் தெரிந்த செய்தியை எழுதி என்ன ஆகப் போகிறது? என்று எனது ஒரு நண்பர் கேட்பார் வழக்கமாக...அவருக்கு புதிதாக செய்திகளை உருவாக்க முடியாது. நடப்பதை தெரியப்படுத்துவது செய்தி ஆகி விடுகிறது. ஆனால் இது போன்ற செய்திகளில் நமதுகருத்துகளை பதியவைப்பது நாம் யார் எனக் காட்டுகிறது.

நாம் பிறரை மகிழவைப்பதில் மகிழும் இனம். பிறரை மகிழ வைப்பதையே இலட்சியமாக கொண்டு இருக்கும் இனம். எனவே மதத்தின் பேரால் இப்படி ஒரு கொடூரம் உலகில் நடப்பதை பதிவிடுவது எமதுகருத்தை தெரிவிப்பது ஒரு வடிகால். நாம் எங்கிருக்கிறோம் எனக் காட்டி நமது உயிர்ப்பை உறுதி செய்துகொள்வது.

எந்த மதமானாலும் எதன் அடிப்படையின் மேல் அது அமைந்திருந்தாலும் ஒரு சமரசப் போக்கும் மனிதாபிமனமே எல்லா மதங்களையும் விட உயர்ந்த மதம் என்ற மனோபாவம் இருந்தால் மட்டுமே இந்த உயிர்ப்பலிகள் தடுக்கப்படும். அதுவரை ...என்ன செய்வது துக்கப்படுவதையன்றி...


கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.
கொஞ்சம் கீதை,கொஞ்சம் பைபிள்,கொஞ்சம் குரான் என்று  மூன்று பிரதானமான மதங்களின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.இதை நேர்மறையாக பார்ப்பதும், எதிர்மறையாக பார்ப்பதும் அவரவர் அறிதல் புரிதல்,தெளிதல் உணர்தல் அகம் புறம் சார்ந்தது.கீதை:

எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததும் விளைவில் அமிர்தம் ஒப்ப மாறுவதோ,அந்த இன்பமே சாத்விகம் ஆகும். அது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

 விஷியங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசம் எனப்படும்.

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசம் என்று கருதப்படும்.

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலும் இல்லை. வானுலகத்திலும்  இல்லை.

குரான்:

பாகம் 10.ஸுரத்துத் தவ்பா அத்தியாயம்:9 ருகூஃ 10.

77. அல்லாஹ்வுக்கு - அவனுக்கு வாக்களித்ததில் - அவர்கள்  மாறு செய்த காரணத்தினாலும், அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தாலும் ; அவனை அவர்கள் சந்திக்கின்ற (கியாமத்து) நாள் வரை அவர்களுடைய நெஞ்சங்களில் நிபாக்கை (நயவஞ்சகத் தன்மையை)அவர்களுக்கு இறுதி முடிவாக ஆக்கிவிட்டான்.

78. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும்,நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை எல்லாம் மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லயா?

79. (ம்முனாபிக்கான)வர்கள் எத்தகையோரென்றால்,முஃமின்களில் தாரளமாக தருமங்கள் செய்கிறவர்களையும்,இன்னும் தங்களுடைய உழைப்பைத் தவிர (வேறு எதனையும் தானம் செய்வதற்குக்) காணமாட்டார்களே (அதாவது இயலாது இருக்கின்றார்களே)அத்தகைய (எளிய)வர்களையும் குறைகூறி,அவர்களைப் பரிகாசம் செய்கின்றனர்.அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான் - மேலும் ,நோவினைத் தரும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

பைபிள்:

லூக்கா 8.இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்
மத்9:18 - 26; மாற் 5: 21 - 43

40. இயேசு திரும்பி வந்தபோது (கெரசேனர் பகுதியில் இருந்து கலிலேயாவுக்கு) அங்கே  திரண்டு காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.41.அப்போது தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து  தம்முடைய  வீட்டிற்கு வருமாறு வேண்டினார். 42.ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருந்தாள் இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்  கொண்டிருந்தது. 43. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.

44. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று...45.என்னைத் தொட்டவர் யார்? என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர்., பேதுரு,ஆண்டவரே,மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே என்றார்...46. அதற்கு இயேசு "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்;என்னிடம் இருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.47. அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக் கொண்டே வந்து  அவர்முன் விழுந்து,தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனவரின் முன்னிலையிலும் அறிவித்தார்..  48. இயேசு அவரிடம் "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.

கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் வரை.


No comments:

Post a Comment