Tuesday, March 8, 2016

ஸ்பீட்பிரேக் (வேகத் தடை - 1) கவிஞர் தணிகை

ஸ்பீட்பிரேக் (வேகத் தடை - 1) கவிஞர் தணிகை
டமால் என்ற ஒரு பேரிடி போன்ற சத்தம். முதல் நாள் அரசுத் தேர்வு செய்முறை(பிராக்டிகல்) 9a.m மணிக்கு ஆரம்பிக்கும் முன் வந்து சேர்ந்திருந்த எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் கீழே இறங்கி ஓடி வந்தனர் மேட்டூர் சேலம் சாலைக்கு புதுசாம்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு.சண்முகானந்தா பஸ் நின்று கொண்டு பயணிகளை இறக்கி விட்டு சில நொடிகளில் புறப்பட இருந்த ஆனந்தா பஸ் பின்னால் குத்தியிருந்தது.

ஒரே ரணகளம், ஓலம்,சுமார் 50 பேர் காயமடைந்தோர்  பெரிதும் மாணவ மாணவிகள் சிறியோர் எல்லாம் கத்தியபடி இருந்தனர், ஒரு ஸ்கூட்டி கீழே உடைந்து கிடந்தது, ஒரு தாய் தமது 3 வயது மகவை மடியில் போட்டு கதறிக் கொண்டிருந்தார். இடி வாங்கிய பஸ் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 50 அடி தானாகவே ஓடி பேருந்துக்கு காத்திருந்த அந்த அதிகாலை வேளையில் நின்றிருந்த பெரிதும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர் மேல் எல்லாம் மோதி நின்றது.

சண்முகானந்தா ஓட்டுனரை அந்த நிலையிலும் ஒருவர் அடிக்கப் பாய்ந்தார். ஆனால் அவர் கால் மடங்கி இரண்டு பஸ் இடிபாடுகளிடையே சிக்கிக் கிடந்தது. இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.எடுக்க முடியவில்லை.
அந்த மால்கோ பள்ளி மாணவர்கள் அரிய சேவை செய்தனர், முதல் உதவி செய்து விபத்தில் அடிபட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி விரைந்து செயல்புரிந்தனர். நின்று கொண்டிருந்த பஸ் பின் புறம், கூரை எல்லாம்காணவில்லை. இரண்டு பஸ்களையும் பிரிக்க முடியவில்லை. ஒரு ஐஷர் வேன் டிரைவர் தனது வண்டியில் இருந்த பெரிய ரோப் கயிறை கொடுத்துச் செல்ல மாணவர்கள் கூடியிருந்தோர் எல்லாம் சேர்ந்து 2 பேருந்துகளை பிரித்தனர். மாட்டிக் கொண்டிருந்த சங்கர்  சண்முகானந்தா ஓட்டுனர் வெளி எடுக்கப் பட்டார், கால் இழந்து...சுவாசம் இருந்தது. லுங்கியில் இருந்தார்.
ஒரு மாணவி காதிலிருந்து இரத்தம் வழிய, மாணவர்களின் உதவியை வேண்டாம் விடுங்கள், பிராக்டிகல் எக்ஸாம் போகணும் என்றாள் இரத்தத்தை தானாக துடைத்தபடி...

தனியார் ஆம்புலன்ஸ், வந்து சிலரை,அதே சமயம் பல வாகனங்கள் மூலமும் பெரும்பாலனவரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அரசு  விபத்து ஊர்தி 108 மற்றும் காவலர்களும் உடனடியாக வந்து சேர வில்லை. தகவல் உடனே அளிக்கப் பட்டிருந்த போதும். ஹாய்  டைம் பாய்ஸ் ஆச்சு, எல்லாம் எக்ஸாம் கிளம்புங்க...  என ஆசிரியர்கள் போதும் எல்லாம்  உங்க பிரன்ட்ஸை நாங்க பார்த்துக்கொள்கிறோம் என பள்ளிக்கு திருப்பி அனுப்பினர். ஒரு மாணவர் கை முழுதும் கண்ணாடிச்  சில்லுகள் குத்தி ஏற்றியபடி இருந்தார். ஒரு மாணவருக்கு மூளையில் அடிபட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இன்னைக்குத் தாம்பா தெரிஞ்சிக்கிட்டேன், உண்மையில் பெண்கள் வீக்கர் செக்ஸ் தாம்பா, அடிபடாமல் இருந்தவர்கள் கூட கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டிருந்தனர். ஆண் மாணவர்கள்தான் உதவி எல்லாம் செய்தனர். என்று ஒரு உதவி செய்த மணியான மாணவர் தம் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட கூட்டம். ஊரே கூடிவிட்டது. எத்தனை பேர் உயிர் போயிருக்கும் என்றே சொல்ல வில்லை. எவருக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் செய்தியில் செய்தி இருந்தது ஆனால் வாகனங்களின் பேர் மற்றும் இறந்தவர் விவரம் இல்லை. அந்த 3 வயது குழந்தையும், அந்த ஓட்டுனர் சங்கரும் இறந்து விட்டார் என மறு நாட்களில் மக்கள் பேசிக்கொண்டனர். தனியார் பேருந்தில் ஏறுவது கூடாது என தலைப்பிரசவ பிள்ளைக்காரி பேசுவது போல பேசிக் கொன்டார்கள்.

கோட்டாட்சியர் வந்தார் ஸ்பாட் வெரிபை செய்தார். மறுநாள் தனியார் பஸ் முதலாளிகள், லாரி முதலாளிகள், பேருராட்சி  மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் எல்லாம் வைத்து ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. மேட்டூர் தெர்மல், மற்றும் சரக்கு லாரிகள் போக்குவரத்தால் பேருந்துகள் செல்வது நேரத்திற்கு முடியவில்லை. எனவே தனியார் பஸ்கள் ஒன்றையொன்று முந்திக் கொள்ள வேண்டிய நிலை என பேருந்து தரப்பு , சரக்குந்து லாரிகள் எங்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கி எங்கு நாங்கள் அதுவரை நிறுத்திக் கொள்வது என இடம் காண்பியுங்கள் நிறுத்திக் கொள்கிறோம் என அவர்கள் தரப்பு, பேருராட்சி, நகராட்சி அதெல்லாம் இடம் இப்போது  காண்பிக்க  முடியாது என அவர்கள் தரப்பு.  முடிவாக ஒன்றும் செய்ய முடியாமல் எப்போதே ஒரு சமூக சேவகர் அந்த மால்கோ  பள்ளி முதல்வரிடம் கேட்டுக் கொண்டு பேசியபடி அரசால் பள்ளி வரும் முன் சாலையில் ஒரு வேகத் தடை ஒரே நாளில் அதுவும் ஏனோ தானோவென்று அவசரமாக அமைக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பள்ளியின் நுழை வாயில் முன் இருந்த அரசு மதுபானக் கடை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அது பற்றி சமூக சேவகர் பள்ளி முதல்வரிடம் பல முறை பேசியுள்ளார், அவரும் கோட்டாட்சியரிடம் சொல்வதாக சொல்லி இருந்தார். ஆனால் இந்த பிரச்சனையை கையில் எடுத்தால் ஆந்திராவில் இருந்து வந்த அந்த இளம் இந்திய அரசாணைப் பணி ஐ.ஏ.எஸ் கோட்டாட்சியர் பணி இடம் மாற்றம் செய்யப் படலாம்.


சங்கருக்கு குழந்தை இல்லை. தத்துக்கு அபிராமியை எடுத்து வளர்த்திக் கொண்டிருந்தான். அவளுக்கு எப்படியாவது இந்த ஆண்டு ஒரு ஆங்கிலப்பள்ளியில் இடம் பிடித்து விட வேண்டும் என ஒரு ஆசை. எவ்வளவு பணம் கேட்டாலும் எப்படியாவது கொடுத்து. முதலாளி உதவுவதாக சொல்லியிருந்தார். அவளை ஒரு அனாதை  நாம் தத்து எடுத்துத் தான் வளர்த்துகிறோம் என எந்த காரணம் கொண்டும் உயிரே போனாலும் அவளுக்குத் தெரியாமல் வளர்த்த வேண்டும் என மனைவி இலட்சுமியிடம் அடிக்கடி சொல்வான்.

சண்முகானந்தா, ஆனந்தா பஸ் ஓனர் இருவருமே மாமன் மச்சான். இருவருமே இராசியாகிவே இருப்பார்கள். இரண்டு வண்டிக்குமே இன்சூரன்ஸ் பணம் வந்து விட்டது. ஆனால் சங்கர் இறந்து விட்டான் . இந்த கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் இதன் பின்னணி?

சங்கர் சரியாக உறங்காமல் தொடர்ந்து 6 நாளாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.  அவனால் ஒன்றுமே முடியவில்லை. வண்டியை நிறுத்தலாம் என்றால் இன்னும் கொஞ்சம் ஓட்டு இன்று மட்டும் ஓட்டு, நாளை அவன் வந்து விடுவான் திருப்பதிக்குப் போன வெங்கடேசன் என்று சொல்லியே வேலை வாங்கிக் கொண்டார்கள்.

அன்று இராமன் நகரில், அன்று புதுசாம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் விபத்து நடந்ததே அதற்கு ஒரு கி.மீ தொலைவில் ....என்னால் முடியவில்லை என சங்கர் நடத்துனர் சேகரிடம் சொன்னான். வண்டியை இங்கே நிறுத்தி விட்டு இறங்கிக் கொள்கிறேன் என்றான், சேகர் கொஞ்சம் பொறுத்துக் கொள், குடிக்கத் தண்ணீர் கொண்டு வருகிறேன், என பாட்டிலுடன் இறங்கினார், அங்கே இருந்த செக்கிங்க் பரமசிவம், என்ன என்று கேட்க, இங்கேயே நிறுத்தி விட்டு இறங்கிக் கொள்வதாக சொல்கிறான் சங்கர், முடியவில்லையாம், அதான் தண்ணீர் எடுக்க வந்தேன், என சேகர் சொல்ல, பரமசிவம், அதெல்லாம் வேண்டாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வண்டியை மேட்டூர் பஸ் ஸ்டேன்டிற்கு போய் நிறுத்தச் சொல், வெங்கடேசன் அங்க வந்து மாற்றிக் கொள்வான் என பேசிக் கொண்டிருக்க....என்னதான் ஆயிற்றோ சங்கருக்கே விளங்கவில்லை, வண்டி ஓட ஆரம்பித்தது படு வேகம், பிரேக் பெயில் ஆனது போல. பார்ப்பவர்கள் எல்லாம் கத்த, நடத்துனர், சேகர் ஒரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர, கண்டக்டர் இல்லாமலேயே சண்முகானந்தா பஸ் சென்று சாம்பள்ளியில் சில நொடிகளில்  பயணிகளை இறக்கி விட்டு அந்த முதல் டிரிப்பில் சேலத்தில் இருந்து மேட்டூர் வந்த ஆனந்தா பஸ் பின்னால் ஒரே இடி...பஸ் பின் புறம் உள்ளே புகுந்து நின்றது. பின்னாலும் முன்னாலும் இறங்குவதற்காக  படிக்கட்டில் நின்ற பயணிகளும், பேருந்து ஏறுவதற்கு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்களும், முழுக்க முழுக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு போக வேண்டிய பிள்ளைகளும் ஏகமாக ஒரு அறியாத் தாக்குதலுக்கு ஆளானார்கள். ஆனால் அன்றும் இன்றும், ஒரேமாதிரியாகவே நாட்கள் விடிந்தன.என்ன அன்று ஒரு ஸ்பீட் பிரேக் அங்கே இல்லை. இன்று இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த பதிவு. இது போன்ற ஸ்பீட் பிரேக் என்ற பகுதியில் எமது வலைப்பூவில் இனி இது போன்ற உண்மைச் சம்பவத் தொடர்கள் மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து பூக்கும்.2 comments:

  1. வேகத்தடை தேவையாய் இருக்கிறது

    ReplyDelete
  2. yes true my dear friend Kathaikkalam Rajasekar. In each and every aspects of our life speadbreakers are required. if it is not we can't realise our way's importance. thanks for your feedback on this post .vanakkam pl.keep contact.

    ReplyDelete