Wednesday, May 13, 2020

ஒன்பது: உண்மைக் கதை 9 வேலிகளே பயிரை மேய்வதுதான்....: கவிஞர் தணிகை

ஒன்பது: உண்மைக் கதை 9 வேலிகளே பயிரை மேய்வதுதான்....: கவிஞர் தணிகை

See the source image

என்னடா இவன் ஒரே போக்கிலேயே எழுதிக் கொண்டிருக்கிறானே என்று உங்களுக்குத் தோன்றலாம். எல்லாம் நடந்த உண்மைகள். அதில் வெற்றியின் பக்கம், தோல்வியின் பக்கம், வெற்றி தோல்வி இரண்டுமே இல்லாத நடுநிலைப் பக்கம் என இவற்றைப் பார்த்துப் பிரிக்கலாம்.

இது நடந்தது 1987. முதன் முதலாக எனது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆண்டுக் கணக்கில் நிதி வழங்கிய அந்த நிறுவனத் தலைவர் பேரில் ஒரு கபாடிப் போட்டியை நடத்தத் திட்டமிட்டேன். அது முதல் ஆண்டு என்பதால் சிறு துவக்கமாக இருக்கட்டும் என மலைமேல் உள்ள ஊர்களின் அணிக்கும் மட்டும் அழைப்பு விடுத்தோம்.

அப்படியும் பகுடுப் பட்டு என்ற ஊரின் சற்று வணிகத் தலமான சற்று பெரிய கல்ராயன் மலைக் கிராமங்களில் இருந்து சற்று முன்னேறிய ஊரின் இளைஞர்களும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து கலந்து கொண்டனர்.
கபடி இருக்கும் விளையாட்டுகளிலேயே ஒரு வீர விளையாட்டு. அதிலும் மலைவாழ்மக்கள் சற்று முரட்டு குணம் கொண்டவர்கள்...அதிலும் இளைஞர்களை சொல்லவே வேண்டாம்.

எனவே அடிதடி தகராறு பட்டுக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் அந்தப் பகுதிக்கு ஊரிய காவல் நிலையத்தில் ஒரு நாள் இரவும் பகலும் விளையாடப் படும் கபாடிப் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க காவலரை அனுப்புங்கள் என்றேன். என்ன இருந்தாலும் நமது பார்வையை விட காவலர் இருக்கிறார்கள் என்றால் சற்று அந்த மக்களும் இளைஞரும் கட்டுப் பாடாக இருப்பர் என்ற கருத்துடனே.

சரியாக நினைவில்லை...அப்போது 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அந்த போட்டிகளே பின் நாட்களில் வளர்ந்து பகுடுப்பட்டு என்ற இடத்தில் நடத்தப்படும்போது மாநில அளவுக்கு விரிந்தது என்பதும் அதில் நான் விளையாட்டை நடத்திக் கொடுக்க அழைத்திருந்த இரண்டு உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்து விட்டார் என்பதும் இந்தப் பதிவுக்கு தேவையான செய்தி அல்ல...அது பற்றி அது குறித்த மற்றொரு குற்றம் நடந்த பதிவை எழுத முனையும்போது மேலும் மற்றொரு பதிவில் எழுதுகிறேன்..

எப்போதும் பகுடுப்பட்டு இளைஞர்க்கும் இந்த பெரிய கல்ராயன் மலை இளைஞர்க்கும் கபடியில் ஒரு அசுரத் தனமான போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருப்பது போல..... எனவே எனக்கு காவல்துறையின் ஒத்துழைப்பு அவசியம் தேவையாயிருந்தது.

அப்போது கீழே தும்பல் என்ற இட்த்தில் இருந்து காந்தி என்ற ஒரு நல்ல இளைஞர் வந்து நடுவராக இருந்து விளையாட்டை நடத்திக் கொடுத்தார். நல்ல கூட்டம். இரவிலும் மின்னொளி ஆயில் எஞ்சின் வைத்து மின்சாரம் இல்லாத ஊரில்...மக்கள் நன்றாக மகிழ்வுடன் போட்டிகளை கண்டு களித்தனர். இதெல்லாம் வேறு

கரியகோயில் காவல் நிலையத்தில் இருந்து ஒரே ஒரு காவலரை அனுப்பி இருந்தனர். அவர் நல்ல குண்டாக இருந்தார். அதிகம் பேசாதவராக. இருந்தார். அவரது போட்டோ கூட விளையாட்டுப் போட்டியை பதிவு செய்ய எடுத்த போட்டிகளில் இன்னும் இருக்கிறது. அதெல்லாம் ஆரம்ப காலம். போட்டிகள் போய்க் கொண்டிருந்தன. இரவு என்றுதான் நினைக்கிறேன் . போட்டி நடந்த விளையாட்டுத் திடல் முன்பாக ஒரு மேடை. அதன் பின் உள்ள ஒரு வீட்டில்  அந்த ஊரின் நபர்களுடன் ஒத்துழைப்புடன் சாராயம் வைத்து விற்பனை செய்து அதை அருந்துவோர் சென்று அருந்தி வருவதாகச் செய்தி கிடைத்ததும்

நான் இந்த காவலரை சற்று சென்று பாருங்கள் என செய்தி சொல்லி அனுப்பினே. சென்றவர் நான் எதிர்பார்த்திருந்த நேரத்தை விட அதிக நேரம் ஆகியும் காணாததால் என்ன ஆயிற்று என நானே பார்க்க அந்த வீட்டில் உள்ளே சென்று பார்த்தேன். அப்போது அவர் டம்பளரில் சாராயம் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார் மேலும் எனப் பார்த்தவுடன் மேலும் கீழும் அவரது காக்கி சட்டை மேல் எல்லாம் சிதறடித்தும் கொண்டது அதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ன உணர்வில் இருந்தேன் என்றே அப்போதும் புரியவில்லை இப்போதும் அந்த கலவையான உணர்வு பற்றி விளங்கவில்லை ஆனால் அந்த சம்பவம் இன்னும் என் நினைவில் நேற்று நடந்தது போல் இருக்கிறது. இது ஒரு சிறிய விடயம்தான். ஆனால் இந்த விதை போன்றதை நீங்கள் விரித்து விருட்சமாக்கிப் பாருங்கள் இந்த நாட்டில் நடைபெறும் எல்லா அழிவுக்கும் அது ஆதாரமாக விரிவதைக் காணலாம்.

See the source image
மறுபடியும் அவரை அழைத்து வந்து விளையாட்டு நடக்கும் இடத்தில் நிறுத்தினேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment