Friday, May 22, 2020

பதிமூன்று: ஏழுமலை இரண்டாம் பகுதி: உண்மைக் கதை 13. கவிஞர் தணிகை

சாலையில் நாய்களும்
வரும்
கவனமாய் இரு மகனே!

வாழ்க்கையில்
வஞ்சனையும் சூதும் தொடரும்
புரிந்து கொள் மகனே!

வேகம் தேவைதான்
அதை விட முக்கியம்
விவேகம் மகனே!

நல்லவரை ஒரு போதும்
காலம்
கை தவற விடாது மகனே!

பணம்
பைத்தியக்காரத் தனம்...

அதற்காக
எல்லாவற்றையும் விட்டு விடவும் முடியாது
எல்லாவற்றையும்  விட்டு விடவும் கூடாது  மகனே!

எல்லாமே சொல்வார்
பணம் பத்தும் செய்யும்
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றெல்லாம்
பணம் கொஞ்சம் கொஞ்சமாய் நமது
மனிதாபிமானத்தை கொன்று
கடைசியில் நம்மையும் கொல்லும்

பசி வந்திடப் பத்தும் {பற்றும்} பறந்திடும் என்பார்
பசி வந்தால் தான் வறுமை புரியும்
ஏழ்மை தெரியும்
எல்லாம் எதற்கென்று ?

நல்லவரை
காலம் ஒரு போதும் கை   விடாது மகனே!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை





பதிமூன்று: ஏழுமலை இரண்டாம் பகுதி: உண்மைக் கதை 13. கவிஞர் தணிகை

சென்ட்ரல் வங்கியில் இருந்து அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் பணம் கட்ட வில்லை எனில் அடமானமாக வைக்கப்பட்டுள்ள வீடு அதாவது அவர்கள் கடை வைத்துள்ள வீடு ஏலத்திற்கு விடப்படும் என்று...ஏன் எனில் கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் வாங்கிய இலட்சக்கணக்கான பணம் திரும்பக் கிடைக்குமா என்ற கோணத்தில். விசாரித்துப் பார்த்ததில் அந்த ஏழுமலை வாங்கிய அல்லது வைத்திருந்த எல்லா சொத்துக்குமே முதல் வாரிசு அவனது மனைவியின் பெயரும் இரண்டாம் வாரிசு என அந்த குழந்தை பெயரும் மூன்றாவதாகவே அவனின் தாய் முழு நிலா பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

ஏழுமலையின் கொலைக்கும் பிறகு அந்த வீதியில் நடப்பதற்கே மன அமைதி இல்லை. என்ன இருந்தாலும் அவன் என்னிடம் பயின்ற மாணவனாயிற்றே. ஆனால் அந்த வீதி வழியாகவே எதற்கெடுத்தாலும் எங்கள் வீட்டிலிருந்து சாலையை நாங்கள் சென்றடைந்தாக வேண்டும். போகும் போதும் வரும்போதும் வருத்தமாகவே இருந்தது
இப்படி கூட நடக்குமா என நடந்த பின்னும் நம்பும்படியாக இல்லாதிருந்தது. சிறு கைக்குழந்தையை எடுத்துக் கொண்ட அவன் மனைவி அவளது பெற்றோர் இருப்பிடம் வனவாசி சென்றுவிபக்க‌ட்டார்.

அவனது பெற்றோர் என்னிடம் ஒன்று நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது பஞ்சம் பிழைக்க குமாரபாளையம் செல்ல வேண்டியதுதான் என மிக சோகத்தில் நம்மையும் ஆழ்த்தினர். கவலைப் படாதீர் எனத்  தேற்ற முடியவில்லை. இருந்தாலும் நாங்கள் இருக்கிறோம் அப்படி ஒன்றும் உங்களுக்கு நேர்ந்து விடாமல் எங்களால் ஆனதை செய்வோம் என ஆறுதல் கூறினேன்.

நல்லா கவனியுங்கள் இங்கிருந்துதான் கதை ஆரம்பம். பொது வாழ்வில் ஈடுபடுவோர் எப்படி எல்லாம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அடி பட இடி படப் போகிறார் என்பதை...

செயலில் இறங்கத் தீர்மானித்தேன். எந்த நீதிமன்றத்திற்கு சென்றிருந்தாலும், காவல் நிலையத்துக்கு சென்றிருந்தாலும் முடியாத மிக அரிய செயல்பாடுகளை காந்திய முறையில் நான் செய்த முடித்த கதை இது.
அவனின் இரு சக்கர வாகனத்தை விற்கலாம் எனத் தீர்மானித்தேன். செத்துப் போனவன் வாகனம் என எங்கே சொன்னாலும் வேண்டாம் என்றார்கள். ஹீரோ ஹோண்டா புதிதாகவே இருந்தது.
எனது பக்கத்து ஊரில் இருந்த சகோதரிக்கு தெரிந்த ஒருவர் வந்து பார்ப்பதாகச் சொன்னார். அவர் வந்து பார்த்தார்
அவரிடம் என்னைப் பற்றியும் எனது சகோதரி பற்றியும் அறிந்திருந்ததால் ஒரு விலை நிர்ணயம் செய்தேன் . வண்டியின் ஆர்.சி புத்தகம் அவனது மனைவி குடும்பத்திடம் இருந்தது. இவர்கள் பலரை வைத்தும் பல முறைக் கேட்டுப் பார்த்த போதும் அதை அவர்கள் எவரிடமும் கொடுக்காத நிலை இருந்ததாகச் சொன்னார்கள்.

சரி வாருங்கள் நான் கேட்டுப் பார்க்கிறேன். என்னுடன் வருவார் எவருமே பேசக் கூடாது. என்னைத் தவிர வேறு
எவருமே பேசக்கூடாது என எங்கள் ஊரிலேயே உறுதி மொழி வாங்கிக் கொண்டேன். அப்படி இருந்தால் நான் வருகிறேன் இல்லாவிட்டால் வரவில்லை என்றேன். ஒத்துக் கொண்டார்கள். அன்று எனக்கு சிறிது காய்ச்சல் கூட. மதிய உணவும் இன்னும் அருந்தவில்லை. சிறு குழந்தையாய் இருந்த மகனுக்கு மறு நாள் கணக்குப் பரீட்சை அவன் பள்ளியில் அவன் முதல் மாணவனாக விளங்குபவன்.அது அந்த நிலையின் இறுதித் தேர்வு. இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு சிவம் மற்றும் அவரது உறவினர் என ஒரு குழு எனது தலைமையில் வனவாசி புறப்பட்டோம்.

நான் சொல்லியது போலவே எனைவிட வயதில் மூத்தோர் பலர் இருந்த போதும் எவருமே வாய் திறக்க வில்லை. நான் பக்குவமாகப் பேசினேன். நடந்த சம்பவத்தை மாற்ற முடியாது ஆனால் இனி நடக்க இருக்கும் சம்பவத்தையாவது சுமூகமாக முடிப்போம். நீங்கள் கவலைப் படாதீர். வண்டி ஆர்.சி.புக்கை கொடுங்கள் எதை விற்றாலும் உங்களுக்கு சம பங்கு பிரித்துக் கொடுக்கப் படும் என உத்தரவாதம் அளித்தேன். நீங்கள் கேட்பதற்காக கொடுக்கிறோம் நீங்கள் இவ்வளவு எடுத்துக் கட்டிக் கொண்டு செய்கிறீர் ஒரு நாள் பாருங்கள் உங்களையே அவர்கள் எப்படி கேவலப் படுத்தப் போகிறார்கள் என்று அந்தப் பெண்ணின் தந்தை ஒரு வார்த்தையை சொல்லி அந்த ஆர்.சி புத்தகத்தைக் கொடுத்தார்.

நான் வண்டியை எனது சகோதரிக்குத் தெரிந்த பக்கத்து ஊர்க்காரர் சேலம் கேம்ப் காரர் ஒருவருக்கு விலை பேசி விற்றேன். பதினையாயிரம் கிடைத்தது. அதை இரண்டாகப் பிரித்தேன். இரு சாரர்க்கும் 7,500 என.இந்த 7,500 வைத்து சென்ட்ரல் வங்கிக்கு இரு தவணைக் கட்டி வாய்தா வாங்கிக் கொண்டோம்.{தொகை மதிப்பு மாறி இருக்கலாம் அது பதினையாயிரமா 22000மா என்பது நினைவில்லை காலம் நிறைய சென்று விட்டதால் மொத்தத்தில் மொத்த மதிப்பில் இரு குடும்பத்துக்கும் சரி பாதி} சற்று காலம் தாழ்த்தி எப்படியும் உங்கள் கடனைக் கட்டி விடுவோம் என உறுதி அளித்து வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையோ அல்லது ஏலமோ விட்டு விடாதீர் எனக் கேட்டுக் கொண்டேன்.

அடுத்து கையில் இருந்த ஏழுமலையின் மனைவி வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பணம் 7,500 ஐ வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லி எனது வீட்டின் லேன்ட் லைன் பி.எஸ்.என்.எல் தான்...தகவல் கொடுத்தேன். நீங்களே கொண்டு வந்து கொடுத்து விடுங்கள் என்றனர். அய்யா உங்கள் வீட்டில் 3 மகன்கள் உள்ளனர். பயம் வேண்டாம் நானாயிற்று எனை நம்புங்கள் எதுவும் நடக்காது எனத் தேற்றிய பின் அன்று மாலை அந்த ஏழுமலையின் மனைவியின் சகோதரர் ஒருவர் வந்து பணத்தை வாங்கிச் சென்றார்.

அவர் வாங்கிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் வண்டியை வாங்கிச் சென்றவர் வண்டியைக் கொண்டு வந்து
எனது வீட்டில் நிறுத்தி விட்டு, எனக்கு வண்டி வேண்டாம் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றார்.அவரின் காரணம்: வண்டி அடிபட்டிருக்கிறது, அதற்கு இன்சூரன்ஸ் கட்ட வில்லை என்றெல்லாம் காரணம். அடக் கடவுளே நான் என்ன செய்வேன் என ஒரு புறம் வீட்டிற்கு 2 தவணைக் கடன் கட்டியாகிவிட்டது
மறுபுறம் ஏழுமலையின் மனைவிக் குடும்பத்துக்கும் கொடுத்தாகிவிட்டது இப்போது இப்படி வண்டியைக் கொண்டு வந்து எனது வீட்டில் நிறுத்தினால் என்ன செய்வது என யோசித்து எனது தம்பி முறையிலான உறவுக்காரப் பையனை அழைத்து அவன் மெக்கானிக் பட்டறை லாரிக்கு நடத்தி வருபவர்கள்...இந்த வண்டியில் என்ன பிரச்சனை ஏதும் இருக்கிறதா என சோதித்துப் பார்த்து இவருக்கு கொடுக்கவும் என்றேன். வண்டியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என அவர் சொல்லி நம்பிக்கை அளித்தார் வாங்கியவர்க்கு.

மேலும் இன்சூரன்ஸ் பணம் 1500 நான் இருபக்கமும் வாங்கித் தருகிறேன் என இருவரையும் அழைத்து 750 ரூ வாங்கி கொடுத்து இதைக் கட்டிக் கொள்ளுங்கள் கட்டாத காலத்திற்கு சிறு அபராதம் இருக்கும் அதையும் சேலத்தில் அந்த இன்சூரன்ஸ் ஆபிசில் பணி செய்யும் ஒரு தெரிந்த நபரிடம் பேசி இராசியாக்கிக் கொள்ளலாம் என்று தைரியம் அளித்து அனுப்பி வைத்தேன்.

இதே போல அந்த நிலத்தையும் விற்று ஈடு செய்து விடுங்களேன் என இரு பக்கமும் கோரிக்கை வைத்தனர். அந்தப் பையன் காரியம் காவிரியாற்றங்கரையில் செய்து திரும்பியபோது. கவலைப்படாதீர் என்னால் முடிந்ததை செய்து கொடுக்கிறேன் என பாங்காக கூறினேன். அந்தப் பெண் வீட்டில் கொடுத்த கட்டில் மெத்தை  பீரோ போன்றவை எல்லாம் என்ன எனக் கேட்டதற்கு இவர்கள் எல்லாம் ஒரு வருட நினைவு நாளுக்கும் பிறகு கொடுக்கிறோம் வருடாந்திரம் கும்பிட்டு என்றார்கள்...

அதையும் சொல்லி விட்டேன். ஒரு குடும்பமும் இன்னொரு குடும்பமும் பகை. பேசிக் கொள்வதில்லை. பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு எங்கள் வீட்டு லேன்ட் லைனில் இருந்துதான் எனது செலவில் தான் பேசினேன். இரு பக்கமும் எந்த பைசாவும் செலவே வைக்க வில்லை.

அடுத்து தெரிந்தவரிடம் எல்லாம் சொன்னோம் அவன் வாங்கிய நிலத்தை விற்பதற்கு. சில அரசியல் பிரமுகர் எல்லாம் கூட குறைந்த விலையில் கிடைக்குமா வாங்கிக் கொள்ளலாமா என்றெல்லாம் கேட்பதாக சிவம் குடும்பத்தார் கூறினார்கள்...

விற்பனை செய்தால் அதில் வீட்டை வங்கியிலிருந்து மீட்கக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு மீதிப்பணத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறோம் என்று பெண் வீட்டாரிடமும் கூறி இருந்தேன். காலச் சூழலில் என்னுடன் பள்ளி இறுதி வகுப்பு படித்த நண்பர் அரங்கன் ஒருவர் அவர் பட்டு நெசவு வியாபாரம் செழிப்பான நபர் அவர்கள் வீட்டருகே இந்த நிலம் இருப்பதால் வாங்கிக் கொள்வதாக ஒரு இடைத்தரகரை வைத்து அணுகிக் கொண்டிருந்தார். எவரும் இடையில் தேவையில்லை. எந்த வில்லங்கமும் இல்லை நீ துணிந்து வாங்கலாம் என துணிச்சல் கொடுத்து வாங்க சம்மதிக்க வைத்தேன். பட்டா இருக்கிறது நிலத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை.. பட்டா வேண்டுமெனில் நீ அரசை அணுகி வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்றும் கூறினேன்.

சரி என ஒரு முன்பணமும் கொடுத்தார். கிரயம் செய்து கொள்ளும் நாளில் முழுப்பணமும் கொடுப்பதாக கூறினார்.
இந்நிலையில் கிரயம் செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டது. அன்று காலை ஏழுமலையின் தந்தை சிவம் வந்து எங்கள் வீட்டில் நீல நிற நீல்கமல் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சேரின் கால் ஒடிந்தது. சேர் உடைந்தது...என்ன எனக் கேட்டேன்...
இல்லை இந்தக் கிரயம் வேண்டாம்... இதன் பின் நாங்கள் அந்த வீட்டில் வாடகைக்கு குடி இருப்பது போலாகிவிடும் எனச் சொல்கிறார்கள். என்றார்கள்...அதை யார் சொன்னது எனக் கேட்டதற்கு: மகள் என்றார்கள்...அந்த ஏழுமலையின் மூத்த சகோதரி ஏழுமலையின் விதவை மனைவி  பெற்றோர் இருக்கும் வீட்டருகே தான் இவர் இருக்கும் வீடும் இருக்கிறது என்பதால் சற்று பெண்களின் குசலத்தால் இந்த பெரிய செயல்பாட்டுக்கே இடர் வந்து விடும் போலிருக்க‌

அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. காத்துக் கொண்டிருந்த காலம் கனியும்போது இன்று கிரயம் எனச் செல்லும்போது இப்படி எல்லாம் பின் வாங்கக் கூடாது என ஆறுதல் சொல்லி அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றங்கரையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றோம். பணத்தை வாங்கி முதலில் வங்கியில் கட்டி விட்டு மீதம் உள்ள தொகையை எடுத்து வரச் சொன்னேன். வீடு மீட்கப்பட்டது. மீதம் உள்ள பணம் ஏழுமலையின் மனவி குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டும் விட்டது. நிலம் விற்பனை முடிந்தது. அரங்கன் வாங்கியவன் சார்பாக எனக்கு பத்திரப்பதிவுக்கு நேரம் ஆகிறதே என்ற நிலையில் ஒரு வேளை மதிய உணவு கடையில் வாங்கி அளிக்கப்பட்டது அது மட்டுமே இலவசமாக இந்த முயற்சியில் நான் வாங்கிக் கொண்டது.  பீரோ கட்டில் மெத்தை எல்லாம் முதலாண்டு வருடாந்திரம் முடிந்த பின் தருவதாக ஏழுமலையின் வீட்டில் சொல்லி இருக்க அவர்களும் சரி எனச் சென்று விட்டனர்.

எல்லாம் முடிந்து விட்டது. மிகவும் நிம்மதியாக அனைவரும் கையொப்பமிட நிலம் கைமாறிவிட்டது. சிக்கல் தீர்ந்து விட்டது. எந்த நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் முடியாத குடும்பச் சிக்கல் வழக்கை மிக நல்ல முறையில் கையாண்ட திருப்தியில் நான் இருக்க...உங்களுக்கு ஒரு வேளையாவது எனது கையால் சோறு சமைத்து போட வேண்டும் என ஏழுமலையின் தாய் முழுநிலா சொன்னதுண்டு...அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அம்மா நான் பத்தியச் சாப்பாட்டுக் காரன் என்று அதற்கு மறுமொழியும் சொல்லிய நினைவு.

ஒரு நாள் எனது இல்லத்தரசி கடைக்கு செல்லும்போது ஏழுமலையின் தந்தை சிவம் முழுநிலாவை இடித்து பேசிக் கொண்டிருந்த பேச்சை மெதுவாகப் பேசச் சொன்னதாகவும்,ஜாடையாக‌ நாங்கள் இவர்கள் பேச்சை நிலையை எல்லாம் கேட்டு இவர்கள் மருமகள் வீட்டில் சொல்லி விடுவதாகவும் பேச்சு அடிபட ஆரம்பித்திருந்தது.எங்களுக்கு அதில் ஏதோ இலாபம் வந்து விடுவது போல . இந்தப் பெரும் பிரச்சனையை முடிக்க எங்கள் வீட்டு தொலை பேசிக்கு ஆன செலவைக் கூட நாங்கள் இவர்களிடம் பெறாமல் எங்கள் செலவில் எல்லாம் செய்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்து முடித்து வாழ வைத்ததற்கு எனக்கு கிடைத்த பரிசு அவச் சொல்தான்.

நான் ஏற்கெனவே எனது இல்லத்தரசியிடம் சொல்லி இருந்தேன். போதும் இவர்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்தாகிவிட்டது இனி இவர்களிடம் நாம் அதிகம் நட்பு பாராட்டும் முறை எல்லாம் கூடாது எனச் சொல்லி இருந்தேன் போதும் பட்டதெல்லாம் என்பதற்காக.

அந்தக் கதை அப்படியே பலித்தது. அதன் பின் அவர்களுக்கும் எங்களுக்கும் பேச்சு வார்த்தை என்பதே இல்லாது போனது. அந்தப் பெரிய மனுசன் பேச்சைக் கேட்டு எங்கள் சொத்து முழுதும் போய்விட்டது. நிறைய பணத்தை கொடுத்து விட்டார்கள் என்றெல்லாம் அந்த சோறாக்கிப் போடுவேன் என்ற முழுநிலா பேச்சாட்டத்தில் ஈடுபட்டதெல்லாம் தெரிந்தது. அவர்களுக்குத் தெரியவில்லை. நடைமுறை. அல்லது தெரிந்தே அப்படியா என்பதும் புரியவில்லை. அவர்கள் இப்போதும் இருக்கும் வீடு கடை தனிவகுப்பு நடத்தும் வாடகை எல்லாம் நான் வங்கியில் இருந்து மீட்டதால் வந்தது என்பதும்,,,எல்லாவற்றிற்கும் அவரது மகன் அவனது மனைவிதான் முதல் வாரிசாகப் போட்டிருந்தான் இரண்டாம் வாரிசாக குழந்தை மூன்றாம் வாரிசாகவே இந்த முழு நிலா தாய் என்ற நிலையில் இருந்தார் என்பது...

அதை எல்லாம் ஏற்கெனவே எல்லா டாக்குமென்ட்களிலும் தஸ்தாவேஜிகளிலும் உறுதிப் பத்திரங்களிலும் கண்டதனால் நான் எடுத்த முடிவு மிகச் சிறந்ததாக இருந்தது. ஏன் எனில் எந்த சூழ்நிலையிலாவது முதல் வாரிசான அவரது மனைவி கையொப்பமிட்டு அங்கீகரிக்காமல் இருந்திருந்தால் அந்த சொத்தையும் விற்பனை செய்திருக்கவும் முடிந்திருக்காது அந்த வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த வீட்டையும் மீட்டிருக்கவே முடியாது.குடி முழுகி இருக்கும். இவர்கள் சொன்னபடியே தூக்கில் கூட தொங்கி இருக்கலாம். எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கேற்ப மாறிப் போனார்கள். இத்தனைக்கும் இவர்கள் வங்கிக் கடன் போக நான் ஏழுமலையின் வீட்டிற்கு கொடுத்தது குறைந்த தொகைதான்...வீட்டையும் இவர்கள் பக்கமிருந்த யாரும் உரிமை கோரவில்லை. இவர்கள்தாம் வைத்துள்ளனர்.

அந்த விதவைப் பெண் யாரையோ மறுபடியும் திருமணம் செய்து கொண்டாள் என்றும் இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை என்றெல்லாம் செய்திகள்...எங்களுக்கும் சிவம் குடும்பத்துக்குமான உறவு எத்தனை ஆண்டுகள் பாரம்பரியமிக்கது...இவர்கள் சொல்லித்தானே இவர்கள் மருமகள் குடும்பமே தெரியும் நாங்கள் அவர்களுக்கு இவர்களைப் பற்றி சொல்லி எங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சந்தேகப் பேயில் இவர்கள் மூழ்கியதும் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு வாழ்ந்து எங்களது நல்லுறவை இழந்ததும் அவர்களின் வாழ்வில் போக்கு.

எனது சகோதரர் ஒருவர் வீடு கட்டும்போது சாக்கடை மேல் கல் போட்டு அதில் லாரி லோடு இறக்க பயன்படுத்துவதால் கழிவு நீர் மேல் ஏறி வருகிறது அதை நீங்கள் கேட்டு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றவர்கள் இவர்கள் இதை ஏன் நீங்களே கேட்டிருக்கலாமே...மேலும் சிறிது காலம் அந்த வீடு கட்டி முடிக்கும் வரையில் பொறுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என பாம்பும் அடியாமல் தடியும் ஒடியாமல் பதில் சொல்லி இருவரின் பகையையும் சரி செய்தோம். இப்போது இவர்கள் எல்லாம் உறவில் இருப்பதும் ஆனால் அவர்கள் வாழ்வாதாரத்தையே காப்பாற்றிக் கொடுத்த நாங்கள் அவர்களுடன் பேச்சு வார்த்தை கொள்ளாதிருப்பதும் இவர்களைப் பற்றி இவர்கள் பெண் கொடுத்த சம்பந்தி இவர்கள் பற்றி நீங்கள் பின்னால் அறிவீர் என்ற சொல் சரியாகி விட்டதும்....இதன் மூலம் அறியப்படுவது சொல்லப்படுவது யாதெனில் பொது நலவாதி வெகுஜன விரோதி என்பது

மேலும் வருடாந்திரம் கும்புடுகிறோம் என வெற்றிலைப் பாக்கு எல்லாம் வைத்து வருவோர்க்கு எல்லாம் விருந்து அளித்து விருந்துண்டு செல்கையில் வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை எல்லாம் கொடுத்ததை எல்லாம் என்னால் சகிக்க முடியவில்லை. வெட்டுண்ட மகனுக்கு இவர்கள் எல்லாம் இப்படி செய்கிறார்களே என்று. இதற்கெல்லாம் அடிப்படையாக குடும்பத்தைக்  கெடுக்கும் சில குடும்பம் இல்லா பெண்கள் இருக்கிறார்களே அவர்களின் பேச்சை இவர்கள் கேட்டிருப்பதும் ஒரு காரணம் என்றெல்லாம் அறிய முடிந்தது.

நான் இன்றும் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் முதலாளிகளாக இருக்கிறார்கள். வீடு அவர்களுடைய சொத்தாகவே இருக்கிறது. அவர்கள் காலத்துக்கும் பின் அவர்கள் மகள் அதன் சொந்தமாக்கிக் கொண்டு குடிகார சமுதாயத்துடன் குடும்பத்துடன் நன்றாக வாழ்வாராக... நமது வாழ்த்துகள் தாம் என்றும் எவர்க்கும் உண்டே...அடுத்து மற்றும் சில உண்மைக் கதைகளுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment