Sunday, April 23, 2017

ஏன் இங்கு தண்ணீர் பஞ்சம்? ஆந்திரா முதல் சென்னை வரை ஒரு 'நீர்வழி' பயணம்! #SpotReport

குடிநீர் வரும் பாதை மோசமான நிலையில்

சென்னை மாநகர மக்களின் ஒரே குடிதண்ணீர் ஆதார நம்பிக்கையாக விளங்கிய கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டு இன்றோடு ஒரு மாதம் முடிகிறது. இது, சென்னையின் தாகத்தைத் தீர்க்கும் நம்பிக்கையை தகர்ந்துபோகச் செய்துள்ளது. கிருஷ்ணா நதிநீரை கண்டலேறு அணையில் தேக்கி, அதை அங்கிருந்து சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கடந்த 21 ஆண்டுகளாக அனுப்பிக் கொண்டிருந்த ஆந்திர அரசு, கடந்த மாதம் 21-ம் தேதி அன்று ஷட்டரை இழுத்து மூடி நிறுத்தி உள்ளது.ஆந்திர மாநில பொதுப்பணித் துறையினர், "கிருஷ்ணா நதியிலிருந்து கண்டலேறு அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத காரணத்தாலும், எங்கள் மாநிலத்திற்கே தண்ணீர்ப் பற்றாக்குறை சூழல் நிலவுவதாலும் நீர்வழி ஷட்டரை திறக்கமுடியாது" என்று தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை, சத்யசாய் கங்கா கால்வாய்ப் பாதை வழியாக, ஆந்திர அரசு கடந்த 1996-ம் ஆண்டுமுதல் சென்னையின் குடிநீர்த் தேவைக்காக வழங்கி வருகிறது. கால்வாய் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல் போன்றவற்றுக்கு உரிய நிதி கொடுத்தது போக, பராமரிப்பு என்ற அடிப்படையிலும், தமிழக அரசு ஆந்திர மாநிலத்திற்கு நிதி வழங்கி வந்தது.

சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக - ஆந்திர மாநில அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி. யும் வழங்க வேண்டும். நடப்பாண்டின் தொடக்கத்திலேயே, சென்னைக்கு நீர் வரும் சத்ய சாய் கங்கா கால்வாய்ப்பாதை மொத்தமாக காய்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, குடிநீர்த் தேவையை எடுத்துக் கூறி, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வலியுறுத்தினார்."எங்களால் இப்போதுள்ள சூழ்நிலையில், 2.50 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்க முடியும். அதை வழங்குகிறோம்" என்று  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்போது தெரிவித்தார். அதன்படி 2017 ஜனவரி 10-ம் தேதி முதல் சாய் கங்கை கால்வாயில், தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையிலிருந்து 12 டி.எம்.சி. நீரை திறந்தாலே அது, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டிற்கு வர பத்து நாட்கள் ஆகும். அப்படியிருக்க 2.50 டி.எம்.சி. நீரைத் திறந்து விட்டதால், சென்னைக்குள் வரும் அந்த நீரின் அளவு கால்வாயில் எந்த அளவுக்கு இருக்கும் என்பதே பெரிய கேள்வி.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுடன் தண்ணீர்ப் பங்கீடு தொடர்பாக பஞ்சாயத்து பேசிப் பேசியே தொண்டை காய்ந்து வருகிறது. அதற்காக, தமிழ்நாட்டில் தண்ணீருக்கான ஆதாரம் கொஞ்சமும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. 'எல்லாம் இருக்கிறது, ஆனால் ஒன்றும் இல்லை' என்ற கதைதான் உண்மை நிலவரம்.தமிழக பொதுப்பணித்துறை ஆவணங்களின்படி தற்போது மாநிலம் முழுவதும் 18,789 ஏரிகள் மிச்சமிருக்கின்றன... சுமார் முப்பதாயிரம் ஏரிகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், பெருவணிகர்கள் என்ற பெயரிலான கொள்ளையர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்தது போக இவைதான் எஞ்சியுள்ளன.  இவை தவிர 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பாய்ந்தோடும் புகழ்பெற்ற நீர்நிலைகளின் பெயர்களில் பாதியைச் சொன்னாலே கேட்பவருக்கு மயக்கம் வரும் அளவு பட்டியல் இருக்கிறது. அதில் பாலாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, தாமிரவருணி போன்ற ஆறுகளின் பெயரிலேயே பல ஆறுகள் பல மாவட்டங்களில் பாய்கின்றன. தாமிரவருணியின் கிளை ஆறுகளாக மட்டுமே பதினெட்டு ஆறுகள் உள்ளன. கரமணை ஆறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு என்பன கிளை ஆறுகளாகும்.
தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்தாலும் 120 கோடி மக்களும் குடிப்பதற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதியுறும் நிலை நீடிக்கிறது. 30 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீரை பொதுக் குழாய்கள் மூலமும், பூமிக்கு அடியில் இருந்து ஆழகுழாய்க் கிணறுகள் மூலமும் பெறுகிறார்கள்தமிழகத்தைப் பொறுத்தவரை தென்பெண்ணை, கெடிலம், வராக நதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர், அடையாறு, செய்யாறு, பாலாறு, ஆரணியாறு, அமராவதி, பொன்னை, பாம்பாறு, கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாறு, அக்கினி ஆறு, வைகையாறு, காவிரி, குடமுருட்டி, ஜம்பு நதி,  கோராம்பள்ளம், சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வரவனாறு, சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு,கெளசிகா நதி, கடனா நதி, சிற்றாறு, இராமநதி, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடி ஆறு, கருமேனியாறு, வாட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு என நதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. தவிர, தமிழ்நாட்டில் உள்ள நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகளின் பட்டியலும் பிரமிக்க வைக்கக்கூடியவையே. வைகை நதிப் படுகை, வைகை, மஞ்சளாறு, மருதா நதி, வைப்பார் நதிநீர்ப் படுகைகள், பிளவுக்கல், வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம், தாமிரபரணி நதிப் படுகை, மணிமுத்தாறு நதிப் படுகைகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு ஒன்று, சித்தாறு இரண்டு,பெரியாறு நதிப் படுகைகள் என ஏராளமான நீர்த்தேக்கங்கள், அணைகள் இருந்தாலும் தண்ணீர்த்தேவை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
ஒரு காலத்தில் நமக்கான ஆறுகளை நாமே வெட்டினோம்; அவற்றின் கரைகளை பலப்படுத்தினோம், ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்தோம்... இன்று ஆறுகளில் தேங்கிய மணலை அடியோடு பெயர்த்து, வளத்தைச் சுரண்டி வீடுகள் மற்றும் கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்! ஏரிகள், நீர்த்தேக்கங்களின் உதவியுடன் பன்னெடுங்காலமாக செய்துவந்த விவசாயம், இப்போது தண்ணீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இனி விவசாயத்துக்கு நீரைத் தேடி எங்கே போவது? நம் தாகம் எப்படித் தீர்வது? 

-ந.பா.சேதுராமன்
நன்றி:
vikatan

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


No comments:

Post a Comment