Tuesday, December 27, 2016

அமீர்கானின் டங்கல்(யுத்தம்) தமிழில் அவசியம் பாருங்கள்: கவிஞர் தணிகை

அமீர்கானின் டங்கல்(யுத்தம்) தமிழில் அவசியம் பாருங்கள்: கவிஞர் தணிகை


Image result for dangal


நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல அரிய படம்.குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்க வேண்டிய படம்.இது போன்ற கதையமைப்பு ஏன் கமலுக்கு கிடைப்பதில்லை எனக் கேட்கத் தோன்றும் படம். ஆணுக்கு பெண் நிகர் சரி சமானமாய் வைப்போம் என்ற சொல்லை அடி நாதமாகக் கொண்டு இருக்கும் படம்.

எனக்கும் கூட குத்துச் சண்டை பிடிக்குமளவு மல்யுத்தம் பிடிக்காது.ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தால் பிடிக்கிறது. ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல் போன இந்திய மல்யுத்த வீரர் மஹா வீர் தமது வாரிசாய் ஒருவரையாவது உருவாக்கி அவரது கனவான ஒலிம்பிக் அனுப்பி தங்கம் வெல்ல வேண்டும் என முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகள் அதை அவர் எப்படி தகர்த்தெறிந்து குறிக்கோளை எட்டுகிறார்  என்பதே கதை. எனக்கு இவரது படமான லகான் நினைவுக்கு வருகிறது

அதில் கிரிக்கெட். ஆங்கிலேயருடன் இதில் மல்யுத்தம் பெண் ஆண்களுடன்.முதலில் தமக்கு ஒரு மகன் பிறப்பான் அவனை உருவாக்கலாம் என எல்லா பயிற்சிகளுடன் தயாராக இருந்தும் அடுத்தடுத்து இவருக்கு நாலும் பெண் பிள்ளைகளாகவே போக மற்றவர் எல்லாம் வந்து மகன் பிறந்திருக்கிறான் மஹாவீர், ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லும்போது மஹாவீர் அந்த லட்டை பிட்டு தமக்கு இரு புறமும் வரும் தம் பெண்களுக்கு கொடுக்கிறார். யாரையும் கண்ணியக் குறைவாக நடத்த விரும்பாத நாகரீக மனிதராய் வாழ்கிறார்.

தம் இரு பெண்களையும் பாடாக படுத்தி விடுகிறார். முதலில் அவை ஒத்துழைக்க மறுத்தாலும் ஒரு தோழியின் திருமண வைபவத்தன்று அந்த தோழி இவரது தந்தையின் கரிசனத்தை விளக்க முற்பட அப்போதுதான் இவர்களுக்கு ஒர் தெளிவு ஏற்படுகிறது. அது முதல் தந்தை தரும் பயிற்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். ஆனால் அதற்காக அதற்குள் நிறைய இழக்கிறார்கள், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். தமது நேசமிகு  கூந்தலை இழக்கிறார்கள். உணவை, உறக்கத்தை, உடையை யாவற்றையும் இழந்து ஒரு முனைப்பாக கல்வியை விட இந்த பயிற்சியையே உயிராக பயிரக்குகிறார் மஹாவீர்.

ஊர் எதிர்க்கிறது, கேலி பேசுகிறது, தாயும் மனைவியுமானவளே எதிர்த்து பேசுகிறாள். ஏன் அந்தப் பெண்களே கூட தரக்குறைவாய் அப்பாவை எண்ணுகின்றன...ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இலட்சிய புருஷனாய் வலம் வந்து எல்லா சூழ்ச்சிகளையும் முறியடித்து கடைசியில் காமன்வெல்த் கோல்டு அடிக்குமளவு தமது மூத்த மகளை ஆளாக்கி விடுகிறார்.

Related image


கீதாவாக பபிதாவாக வரும் இளைய வயது பிள்ளைகளும், வளர்ந்த இளமைப்பருவத்தில் இருந்து அப்பாவுக்கு பேர் வாங்கித் தருவாராக நடித்திருப்பாரும் தமது ரோலை நன்குணர்ந்து செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் டிசம்பர் 21லும் இந்தியாவில் 23லும் வெளியான இந்தப் படத்தை மஹாவீர் சிங் பொகாட் என்னும் உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.70 கோடி முதலீட்டில் உருவான இந்தப் படம் 4 நாளில் 245 கோடி வசூலித்து விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியில் ஒரு இன்டர்நேஷனல் லெவல் போட்டியை நாம் ஆர்வமாக பார்க்க நேர்வதாக படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தயாரிப்பு அமீர்கான் குழுவினரே.

மஹாவீர் பொகட்டை பெரியப்பாவாக கொண்டிருக்கும் ஒரு சிறுவன் சொல்வதாக ஆரம்பத்தில் நகரும் கதை, நகைச்சுவையை நாசூக்காக கொண்டிருக்கிறது நல்ல இரசிக்கும்படியான சம்பவங்கள் நல்ல முறையில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும் நான் விரும்பாத ஒரு காட்சி உண்டென்றால் அது மகனும் அதாவது தம்பி மகனும் பெரியப்பாவான மஹாவீரும் சேர்ந்து மது அருந்தும் ஒரு காட்சி மட்டுமே. அதை நீக்கி விட்டால் மேலும் நன்றாக இருக்கும்.

எப்போதும் கிளைமாக்ஸில் கதாநாயகன் அடித்து துவம்சம் செய்து அநியாயத்தை தட்டிக்கேட்டு நமக்குள் சூடேற்றுவார், ஆனால் இதில் அமைதியாக தந்திரமாக தம்மை உள் வைத்து பூட்டப்பட்ட அறையில் உள்ள தந்தையும் குருவுமான மஹாவீர் கதவை உடைக்க முயன்று தோல்வியுற்று அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார் அல்லது பிரார்த்தனையில் ஈடுபடுகிறார் போட்டி முடிந்து இந்திய தேசிய கீதம் ஒலிக்கிறது அதைக் கேட்டு தமது குறிக்கோள் நிறைவேறியதைக் காணாமலே கண்டு பெரிதும் மகிழ்கிறார். இது வித்தியாசமான கதை நகர்வு.

நல்ல கிராமிய சூழ்நிலையில் அருமையான பதிவுகளை நமக்குத் தருகிறது.
தவற விடக் கூடாத படங்களுள் இதுவும் இடம் பிடிக்கிறது. இதன் வெற்றி பேசப்படும்... துணிச்சலான முயற்சி. அனைவரும் பாராட்ட வேண்டும் பார்க்க வேண்டும்.

தாரளமாக நூற்றுக்கு அறுபது கொடுக்கலாம்.தமிழில் உடனே மொழிபெயர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார்கள் அதற்காக நாம் நன்றி சொல்லவும் வேண்டும்

Image result for dangal poster


அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான‌ ஆழமான பாத்திரம், நிறைகுடம் ததும்பாது என அமீர்கான் மஹாவீர் பொகாட்டாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.எளிமையாக அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.

இன்னும் நிறைய இது பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம் ஆனாலும் அது நீங்கள் பார்த்து மகிழும் நிறைவை அளிக்காது என இத்துடன் முடிக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: