Friday, July 22, 2022

மீமாஞ்சனைக் காணவில்லை: கவிஞர் தணிகை

 மீமாஞ்சனைக் காணவில்லை: கவிஞர் தணிகை





மீமாஞ்சகன் என்ற பேரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கடவுள் மறுப்பு சிந்தனையாளர், ஒவ்வொருவர் செய்யும் செயலே அவரவர் விதியை தீர்மானிக்கும், மறை யாவும் பழையவை என்ற பொருள் படும் பெயர் அது. அப்பேர்ப்பட்ட பேரைக் கொண்டிருக்கும் எனது நண்பர் ஒருவரை கடந்த சில நாட்களுக்கும் முன்பு அந்த ஊருக்கு செல்லும் போது கேட்டேன்.


 அவர் மறைந்து 3 ஆண்டுக்கும் மேல் ஆகிறது என்றார்கள் அங்கிருந்த பெண்டிர்.


 வயது குறைவாகத் தானே இருக்கும்? என்ற எனக்கு

வயதைப் பார்த்தா இப்போதெல்லாம் சாவு வருகிறது...என்றார்கள்


அவரை மீன் என்றும் அவரது சகோதரரை மான்( அதியமான் என்று நினைவு) என்றும் பள்ளிக்கூடக் காலத்தில் இருந்தே அழைப்பது வழக்கம். சகோதரர் ஒரு உயரத் தாண்டும் விளையாட்டு சாம்பியன். அவர் எங்கோ ரெயில்வே பெங்களூரில் செட்டில் ஆகிவிட. 

மீன் கேபிள் நடத்தி வந்து கொண்டிருந்தார்.டி.வி , கணினி என்று மின்பொருள் சாதனம் எல்லாவற்றையும் விட்டு வைக்க மாட்டார் சரி செய்து கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்... ஏதோ ஒரு தியான அமைப்பிலும் தீவிரமாக செயல் பட்டு வந்தார். எனக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது அவர் எனக்காக எனது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் பற்றி ஒரு வீடியோ செய்து கொடுத்தது முதல்.


அப்பேர்ப்பட்ட பேரை வைத்த குடும்பம் பார்க்க வீட்டுக்கு செல்ல ஆரம்பித்த சில முறை பல முறை அவர் வீடு சென்ற நினைவு உண்டு...அவர் தந்தை, தாய் இருவருமே அரிய மனிதர்களாகவே இருந்தார். ஆனால் இப்போது எவருமே இல்லை.



காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருந்தது. எப்பேர்ப்பட்ட ஊர் அது...சுமார் 3000 குடும்பங்கள் அந்த இங்கிலாந்து சார்ந்த பியர்ட்செல் என்ற  மில் சார்ந்து வாழ்ந்து வந்த இடம் அது அதற்கான மனமகிழ் மன்றங்கள், கூட்டுறவு பண்டக சாலை,ரேடியோ கிரவுண்ட் , சினிமா போடும் வெட்ட வெளி, தொழிலாளர்க்கான மருத்துவ மனை,எல்லாம் மாறி விட்டது.


எனது சகோதர நண்பர் கூட ஒரு முறை பாத்திமா பீவி என்ற ஒரு  தையல் ஆசிரியையை போய்ப் பாருங்கள் என்று நேரு யுவக் கேந்திரா வழியாக கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த அம்மையாரையும் அவர் தையல் அலகையும் சென்று பார்த்தேன்....அப்போதெல்லாம் எனது சகோதர நண்பர் சொல் செயலாக்க நிறைய பேர் அவருடன் அன்பால் அல்லது ஏதோ  ஒரு பிணைப்பால் அவர் அரசு அலுவலர் என்ற வரையறையையும் மீறி தொடர்பில் இருந்தனர்.


எதையோ சொல்ல வந்து எங்கோ சென்று விட்டேன்...


மீமாஞ்சன் சிரித்து சிரித்து புன்னகை புரிந்து புரிந்து என்னுடன் பல வகையான கருத்து செறிந்த சொற்களை கலந்து பேசி விவாதித்துப் பேசுமளவு சிறந்த நண்பர். திருமணமே செய்து கொள்ள வில்லை...உருவம் இருக்கிறது உயிர் இல்லையே...


நேற்று கூட நூறு வயது கடந்த எனது துணைவியாரின் தாய் வழிப் பாட்டி மறைந்தார்... அப்படி கூட மரணத்துக்காக காத்திருந்து செல்வதை விட பூ உதிர்வது போல, பழுத்துக் காய்ந்த இலை உதிர்வது போல, மிக எளிதானதாக இருக்க வேண்டும் மரணம், அது உறங்கும் போது மிக எளிதானதாக இருக்க வேண்டும், மருத்துவ மனைகளில் இருக்கக் கூடாது என்று விழைவார்கள் அறிந்தார்.


எல்லோருக்கும் தெரிந்த ஒரு மறுக்க முடியாத மறக்கக் கூடாத உண்மை

அது எல்லா உயிர்க்கும் மரணம் என்பது ஒரு நாள் தவறாது இருக்கும் நிச்சயமாக என்பது...

அது பற்றி ஏன் சிந்திக்க மறுக்க வேண்டும்...பயமின்றி சந்திக்க வேண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் போல... 


அந்த நினைவுடன் இருக்கும் போது மனிதம் சிறக்கும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


( என்னடா காலையிலேயே இப்படிப் பட்ட ஒரு பதிவு என்று நினைக்க வேண்டாம். உண்மைக்கு கால நேரம் கிடையாது)

Thursday, July 21, 2022

சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை

 சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை




எங்கள் ஊரில் இருந்து தாரமங்களம் போக வேண்டி நேர்கையில் எனக்கு அந்த காலத்தில் என்.டி பேருந்து நினைவு வரும்படி நமது அரசுப் பேருந்து கிடைத்தது. அது மல்லப்பனூர் பிரிவு சாலை வழியே பழங்கோட்டை, விருதாசம்பட்டி,முத்தம்பட்டி, ஓலைப் பட்டி,குட்டப்பட்டி, தொளசம்பட்டி, அமரக் குந்தி வழியாக தாரமங்களம் போய் சேர்கிறது.


எல்லாம் நிறைய பட்டிகள். ஒரு வகையில் மழையால் பசுமைதான். இன்னோரு வகையில் இன்னும் வறுமைப் பிணி இருக்கும் நிலைதான். எல்லாவற்றையும் விட தமிழக அரசை இலவச பேருந்து மகளிர்க்கு விட்டதன் மாபெரும் காரியத்தை பாரட்டியே ஆக வேண்டும் எனத் தோன்றுமளவு எத்தனை வகையான பயணியர், எத்தனை வகையான பெண்டிர், முதியவர், நடக்க இயலாதார், கீழ் நிலை மருத்துவப் பணியாளர்கள், கிராமத்தார், படிக்காதார், படித்தார் இப்படி பலரும் பலன் அடைந்து வருவதைப் பார்க்கும் போது  இந்தக் குறிப்பிட்ட செயலைப் பொறுத்த வரை அரசின் செயல் மக்கள் நலம் சார்ந்ததாக இருப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை


எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியே அழைத்துச் சென்றார். அத்துடன் இந்த பயணிகள் அனைவர்க்கும் இலவச பேருந்து அனுமதிச் சீட்டு என்ற ஒன்று வழங்கப் பட்டு கணக்கு வைக்கப் படுவது என்பதும் பெரிய நிகழ்வுதான்....


அரசின் ஏற்ற இறக்கமான செயல்பாடுகளில் இது ஒரு காமராசர், எம்.ஜி.ஆர், போன்று ஸ்டாலின் என்ற பேர் நிற்கும் செயல்பாடுதான்.

இது போன்ற முக்கியமான துறைகளில், கல்வி நிலையங்கள், போக்குவரத்து,மருத்துவம் போன்ற இன்ன பிற சேவைத் துறைகளில் தனியார் மயமாவது நின்று பொது உடமை அல்லது அரசின் கை வசமே கூட யாவும் இருப்பது சிறந்ததுதான். ஆனால் அவை எல்லாம் நடக்குமா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Tuesday, July 12, 2022

இப்படியும் வெகு சிலர்: கவிஞர் தணிகை

 நன்றி : தினமணி 12.07.2022



R. Bindu Minister of Higher Education Kerala State Government.

ஆர். பிந்து என்ற கேரள மாநிலத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர்  27 வயதான விவேக் பிரபாகர் என்ற இளைஞரின் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சையின் முதல் நன்கொடையாக தனது தங்க வளையலைக் கழற்றிக் கொடுத்துள்ளார் என்பது நான் காலையில் கண்ட ஒரு நல்ல செய்தி. பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, July 11, 2022

இப்படியும் எங்கோ ஒரு சிலர்: கவிஞர் தணிகை

 நன்றி: தினமலர் 11.07.2022



முசாபர்பூர்: பீஹார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்க தன் மனசாட்சி அனுமதிக்கவில்லை எனக்கூறி தன்னுடைய 33 மாத சம்பளமான ரூ.24 லட்சத்தை திருப்பி அளித்துள்ளார்.

வேலை பார்த்துவரும் பலரும் சம்பளம் வந்தால் போதும் என்ற நிலையில் இருப்பர். வெகு சிலரே, வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாகவும், நியாயமாகவும் பணியாற்றுவர். அந்த வகையில் பீஹாரில் ஆசிரியர் ஒருவர், தான் சரியாக பாடம் எடுக்கவில்லை எனக்கூறி தனது மூன்று ஆண்டு சம்பளத்தை திருப்பி அளித்துள்ளார். பீஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிந்தி உதவிப் பேராசிரியராக கடந்த 2019 செப்டம்பர் முதல் பணியாற்றியவர் லாலன் குமார். இக்கல்லூரி, பி.ஆர்.அம்பேத்கர் பீஹார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாலன் குமார் பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை கிட்டத்தட்ட ரூ.24 லட்சம் சம்பளமாக பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்றுள்ளார்.


இந்த நிலையில் அவர் தான் பெற்ற சம்பளமான ரூ.23,82,228க்கான காசோலையை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதத்துடன் திருப்பி அளித்துள்ளார். இது தொடர்பாக லாலன் குமார் கூறியதாவது: மாணவர்களுக்கு சரியாக பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளின்போதும், ஹிந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். என்னுடைய எண்ணம் சிறப்பாக இருந்த போதிலும், என்னால் என் கடமைகளை சரிவர ஆற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில், சம்பளத்தை ஏற்றுக்கொள்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனசாட்சி அனுமதிக்காமல் தன் சம்பளத்தை திருப்பி அளித்த ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை