Tuesday, March 19, 2024

மகேஸ்வரன் மோனிஷாவுக்கு மண வாழ்த்து

               மகேஸ்வரன் மோனிஷாவுக்கு மண வாழ்த்து


        20. 03.2024  புதுசை சுப்ரமணியஸ்வாமி திருக்கோவில்

                          அதி காலை 4.30 முதல் 6.00 மணி



தந்தையை இழந்த பின் நங்கையை மணமுடிப்பது என்பது

எவ்வளவு கடினம் என்பதை நானும் அறிவேன் மகேஸ்வரன்.


தாரத்தை தாய்க்குப் பின் என்ற தலைமுறை நமது தமிழ் முறை

உனது தனயனுக்கும் தங்க மகளுக்கும் நீ பெரும் பேறு செய்!


நமது தலைமுறை தொடர்பு சங்கிலியின் கண்ணிகள் பிரிபடாமல்

எப்போதும் கோர்த்திருக்க வழித் தோன்றல்களுடன் வழி வழியாய்

பிறக்க சிறக்க பெற்றோர் தந்த இந்த உடலுடன் உயிருடன்

 நாம் நமது பிள்ளைகளுக்கு

உற்றாராய் நிறை வாழ்வு வாழ்ந்து பெரும் பேறு பெற வாழ்வுக்கு

 உயிர் தருவாய்!அத்துடன் தங்கைக்கும் நற் வழி சமைப்பாய்.


பிரபஞ்சத்தின் உயிர்த் துளி(ர்) கடவுளின் காணிக்கை அதில் 

ஒவ்வொரு துளியுமே அமுதசாகர வாழ்வுடன் நகர்கிறது...

பயணம் புறப்படத் தயாராக இருக்கும் உங்கள் இருவருக்கும்

ஏன் நால்வருக்குமே எங்கள் குடும்பத்தின் மனமுவந்த‌


வாழ்த்துகள்

என்றும்

கவிஞர் தணிகை

த.சண்முகவடிவு

த.க.ரா.சு. மணியம்.

Monday, March 18, 2024

சூல் : நாவல்: சோ தர்மன்: கவிஞர் தணிகை

 சூல் : நாவல்: சோ தர்மன்: கவிஞர் தணிகை



இரண்டே எழுத்தில் தலைப்பிட்டு புகுந்து மாயங்கள் செய்கிறார் எழுத்தாளர். சூல்: கருக் கொண்ட மேகம், சூல் கருக் கொண்ட தாய் அல்லது கர்ப்பம் தரித்த பெண், சூல் அறுவடைக்கு விளைந்து நிற்கும் பயிர்களுடைய நன்செய், புன்செய், வெள்ளாமை பற்றிய செயல்கள், இப்படி சொல்லிக் கோண்டே போகலாம் சூல் பூவுள் இருக்கும் மகரந்தக் கேசரம் கூட. அற்புதமான நாவல் மிகவும் நெருங்கிய சிறு எழுத்துகளின் அச்சுக் கோர்ப்பில். இதே 500 பக்கங்களை 600, 700 பக்கங்கள் கூட கொண்டு செல்ல வாய்ப்புகள் உண்டு பண்ணுமளவு.


1801,காலாபாணி போன்ற நாவல்கள் ஒரு வகையில் சோக சரித்திரம் சொல்கிறது என்றால் அதே காலக் கட்டத்தில் சூல் பொது மக்கள் வாழ்வைப் படிக்க ஆவலூட்டுகிறது.


இன்னும் ஐந்தாறு நூல்கள் கைவசம் படிக்கப் படாமல் இருப்பினும் சூல் பற்றி சொல்லியேயாக வேண்டிய நிலை. 500 பக்கம் விலை ரூ.380. அடையாளம் பதிப்பு. புத்தாநந்தம் . 2016 முதல் பதிப்பு 2020 வரை மீள் பதிப்புகள். தற்போதைய விலை ரூ.450 என சற்று முன் இணையவழியில் கண்டேன். சாகித்ய அகாடமி முதல் பல விருதுகளை வென்ற நாவல்.அல்லது இந்தியாவின் தென்னகத்தின் தமிழகத்தின் கட்ட பொம்மு காலம் முதல் தற்கால மக்கள் வாழ்வு மாற்றங்கள் பற்றிய காலப் பதிவு மிகவும் உற்சாகமான சுவையான பதிவு.


எட்டி இருந்து அரசு, அரசாங்கம், ஆட்சி, இராசாமார்கள் பற்றியும் கிட்ட இருந்து மக்கள் வாழ்நிலை மாற்றங்களையும் மிக நன்கு விளக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்தை எண்ணத்தை மிகவும் இலாவகமாக கையாண்டுள்ளார் தர்மன். பாராட்டாமல் இருக்க முடியாது.மேலோட்டமாக என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் ஒரு அடி ஆழம் தொட்டுச் சொல்லும் நாவல்.


நிறைய மாந்தர்கள் உலாவுகிறார்கள். எனவே எல்லாரையும் பற்றி இங்கு சொல்ல முடியவில்லை. புத்தகத்தை திருப்பிக் கொடுத்த பின் தாம் இந்த பதிவு என்பதால் சில குறிப்புகளில் பேதம் இருக்கலாம். அதாவது 25 அல்லது 21 அத்தியாயம் என நினைக்கிறேன்.


மகாலிங்கம் பிள்ளை தரமான வெற்றிலைக் கொடி ஆர்வம் அவர் உயிரை எப்படி மாய்க்கிறது என மிகவும் இயற்கையான நயத்துடன் சொல்லப் பட்ட விதம் வாழ்க்கை எப்போது எப்படி மனிதர்க்கு முடிந்து போகக் கூடும் என்பதை அழகாக சொல்லி விடுகிறது.


ஆசாரி ஒருவன், பனையேறி ஒருவன் இருவரும் சேர்ந்து எப்படி கட்டபொம்மு ராசாவுக்கு உதவியாக இருந்து அவர் குதிரைக்கு இலாடம் அடித்து விட்டு வாழ்க்கை முழுதும் ஒரு புதையலை கட்டிக் காக்கும் பூதமாக விளங்குகிறார்கள் என்பது


குஞ்ஞான் என்னும் மலையாள மாந்திரிகன் எப்படி இராசாவை ஒன்றுமில்லாமல் அடித்து மாயமாக மறைகிறான் என்பது,


காலம் எப்படி சோற்றை விற்பனை செய்ய ஆரம்பிக்கிற நிலையில் கொப்புளாயி எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னிடம், தயிர், மோர், பால், வெண்ணெய் ஆகியவற்றை இலவசமாகவே பெற்றுப் பயனடைவோரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார் என்பதையும் அவர் தமது எருமைகளை தமது மாருடன் சேர்த்து தேய்த்து குளிப்பாட்டுகிறார்  என்பது முதல்,கிறித்தவ தேவாலயங்கள், பள்ளிகள் எட்டிப் பார்ப்பு,


ராசாமார்களிடம் இருந்து விடுதலை பெறுவது, வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை பெறுவது அதன் பின் எப்படி மக்கள் வாழ்வு மாறிச் செல்கிறது என்பதை உடன் இருந்து பார்ப்பது போல இரசித்துச் செல்கிறார். இரசித்துச் சொல்லி இருக்கிறார்.


மேலும் நிறைய சொல்ல உண்டு...ஆனால் படியுங்கள் அது அவசியம். படிக்கும் பழக்கம் நாளாக நாளாக அருகிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காண முடிகிறது ஏன் எனில் பேசுவோர் எல்லாரும் செய்வாராக, ஏன் தமது செய்ல்பாடுகளை குணாம்சங்களை நேர்மையாக வைத்திருப்பாராக இல்லாது போவதால்...


இல்லையெனில் 1330 குறள்களை சிறுவர்களை படிக்க நிர்பந்திக்காமல்: தோன்றின் புகழொடு... ஒரு குறள் படி வாழ்ந்தாலே வாழத் தலைப்பட்டாலே போதுமே...சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாய் வாழும் வரை எவரையும் யாருமே நம்பவே போவதில்லை... இது மிகவும் சுருக்கமாக... ஏன் எனில் சூல் இரண்டெழுத்தில் ஒரு வரலாறை தேக்கிச் சொல்லி உள்ளது போல...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, March 7, 2024

நூல் வேலி தியான ஒளி நடை மொழி உறவின் வழி துளி சதுரத்தில் நான்: கவிஞர் தணிகை

 நூல் வேலி தியான ஒளி நடை மொழி உறவின் வழி துளி சதுரத்தில் நான்: கவிஞர் தணிகை



"பெண்கள் நீரைப் போல ஆண்கள் மலையைப் போல" நீர் ஒரு போதும்... ஜிங்யி...என்ற 45 ஆண்டுகளாக காதலுக்காக காத்திருந்த பெண்....சின்ரன்... சீனப் பெண்கள் சொல்லப் படாத கதையில்...


நண்பர் வி.கி சொல்வது போல நான் என்பதை எடுத்து எறிந்து விட்டால் அதன் பின் எல்லாம் வெற்றிதான் என்கிறார் யார் உடன் வந்தாலும் வராவிட்டாலும் இவர் இலக்கு நோக்கி நகர்ந்தபடியே இருக்கும் ஒரு வெற்றியாளர்தாம்.


நண்பர் வசந்த் சொல்வது போல "சாய்வு நாற்காலி" போன்ற கதையை எல்லாம் ஏன் தோப்பில் மீரான் போன்ற எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று நடு நாயகமான பாத்திரத்தின் மேல் அருவெறுப்பு கொள்ளும் கடைசி வரை தொடரும் முதலாளித்துவ சிந்தனையின் கொடுமைக் கதை.


எம்.வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள், நித்ய கன்னி போன்ற நூல்களைப் படித்தால் அந்த நபருக்கு எல்லாம் எதற்கு சாகித்ய அகாடமி விருது என்றே சொல்லத் தோன்றும். அவர் எதற்கு எழுதி அதை பிறர் படிக்க கொடுக்கிறார்கள். வெறும் நாட்குறிப்பாக எழுதி வைத்து அவரே நுகர்ந்து கொள்ளலாம்.


படிப்பாரை கேனை, முட்டாள் என்று நினைத்தபடி செலுத்தப் படும் உளறல் அல்லது உதவாத இலக்கியங்களுக்கு இவை எல்லாம் சான்று. இவை போன்ற புத்தகத்தை படிக்காதிருப்பதே நல்லது.


ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களை படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே (மனோ நிக்ரஹமே) மனம் என்ற ஒன்றை இல்லாதததாக்குவதே குறிக்கோள் எனக் கொள்வார் அளவற்ற நூல்களை படிப்பதால்  பயனில்லை என்பார்


என்றாலும் எனைப் போன்றோர் நிறையப் படித்து கண்களையும் உடலையும் கெடுத்துக் கொள்வோம் காரணம் பிறருக்கு வழி காட்ட வேண்டும் என்ற பேராசை


வைரமுத்து கூட கவிதை எழுதலாம், சினிமாப் பாட்டு எழுதலாம், கருவாச்சி காவியம்,  கள்ளிக் காட்டு இதிகாசம் என்று படிப்பாரை நேர விரயமே செய்துள்ளார். தண்ணீர் தேசம் சற்று பரவாயில்லை.


கலைஞர், பேரறிஞர் போன்றோர் கூட எழுதிய எழுத்துகளில் சுவையற்றதாகவும் இருக்கிறது.


முனைவர் மு.வ வின் எழுத்துகள் கதைகள் யாவும் வறட்சியான நடையாய் இருக்கும் ஆனால் கருக்கள் அசாதரணமாக இருக்கும். படிப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும் 



இதை எல்லாம் விமர்சனப் போக்கில் சொல்வதில் தலை ஒன்றும் போய்விடாது. கலை கலைக்காக கலை மக்களுக்காக என்று எப்போதும் இரு வேறு கூறான விவாதம் உண்டு. நான் கலை மக்களுக்காக இருக்க வேண்டும் என்று வாழும் அணி.


சமீபத்தில் படித்ததில் பிடித்தது: சாவு சோறு என்ற இமையம் அண்ணாமலை அவர்களின் சிறு கதைத் தொகுப்பு நல்ல சிந்தையைத் தூண்டும்  க்ரியா வெளியீடு. விலை ரூ.190. பக்கம் 160. குளறுபடியில்லாமல் மிகத் தெளிவான நடை. எடுத்துக் கொண்டிருக்கும் கருக்களும் நன்றாக இருக்கிறது.


சாவு சோறு என்ற சிறுகதைத் தலைப்பையே புத்தகத்தின் பெயராகவும் கொண்டு சொல்லவே ஒரு துணிச்சல் இருக்கிறது. திருட்டுப் போன பொண்ணு, ஆகாசத்தின் உத்தரவு, அரசாங்கப் பள்ளிக் கூடம், பரிசு. எதை பத்தினி இலை என்கிறார் என எனக்கு விளங்கவில்லை... பத்தினி இலை, பேராசை, ராணியின் காதல், வரம் எல்லா பிரசுரமான, பிரசுரமாகா கதைகளும் நன்றாகவே இருக்கின்றன. பாராட்டலாம். இந்த இமையம் என்னும் அண்ணாமலை ஒரு பள்ளி ஆசிரியர் கடலூர் மாவட்டத்துக்காரர்.


அதன் பின் சீனத்துப் பெண்கள் சொல்லப் படாத இரகசியம் என்னும் நூல் அரிய நூல் சின்ரன் என்னும் சீனத்து வானொலி ஒலிபரப்பாளரின் அனுபவங்களாக வந்திருக்கிறது. இவரை சீனாவில் வாழவிடாமல் செய்து பெண்ணுரிமைப் போராளி என்ற வகையில் சீனாவில் இருந்து தப்பி யு.எஸ் வாழ்வு. அருமையான நூல் 316 பக்கம் 200 பக்கம் படித்து முடித்திருக்கிறேன் விலை ரூ. 280 எதிர் வெளியீடு. 96. நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002. தொலைபேசி:04259 226012,9942511302 முதல் பதிப்பு டிசம்பர் 2016 தமிழாக்கம் ஜி.விஜயபத்மா.  நல்ல பணி சிறக்க வாழ்த்துகள்.


அதல்லாமல் பல நூல்கள் இன்னும் படிக்கப் படாமல்: சோ.தர்மனின் சூல்...500 பக்கம், காலாபாணி 1801 புத்தகத்தின் தொடர்ச்சி., நாடு கடத்தப் பட்ட சுதந்திர வேள்வியாளர்களின் நிலை என்ன ஆனது என ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களின் பி.டி. எப்  இப்படி படிக்க இன்னும் நிறைய இருக்கிறது


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: நூல்களில் கட்டுண்டும், தியான ஒளியில் சிதறுண்டும், நடைப் பயிற்சியில் உடல் ஆரோக்கியம் கொண்டும், உறவின் ஒரே வழிமொழிதலில் ஒட்டியும் எனது துளி சதுர வாழ்வில் நான்கு கோணங்களுடன் இணைந்து கிடக்கிறது எனது உயிரும் வாழ்வும்.


சொல்ல மறந்தது: முன் பகிர்ந்து கொண்ட‌ இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு... வம்சம் என்ற ஒரு பெண் அவரின் செயல்பாடு குடும்ப உறவுகளைச் சீர் படுத்துகிறது என்பதற்கும், தலைப்பு மறந்து விட்டது: அனைவராலும் கைவிடப் பட்டு இனி பிழைக்காது என்று இறந்து போனதாக எல்லாம் நினைத்த ஒரு குருவியை சிறுவன் அவனது பலத்த( இடைவெளி சந்தகமில்லா )நம்பிக்கை எப்படி அந்த குருவியை உயிர்ப்புறச் செய்து கடைசியில் உயிர்த்தெழச் செய்து பறந்து போக வைக்கிறது என்ற ஒரு மறக்க முடியாத கதை. அதை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். அது போலவே நானும் இருக்கிறேனோ என்ற சந்தேகக் கீற்று என்னிடமும் உண்டு.


மார்ச் 8 பெண்கள் தினம், மஹாசிவராத்திரி, இப்படி பல பார்வைகளுடன்... அது எப்படியாயினும் அதற்கு இந்த பதிவு அடையாளமாகட்டும்.


"பெண்கள் நீரைப் போல ஆண்கள் மலையைப் போல" நீர் ஒரு போதும்... ஜிங்யி...என்ற 45 ஆண்டுகளாக காதலுக்காக காத்திருந்த பெண்....சின்ரன்... சீனப் பெண்கள் சொல்லப் படாத கதையில்...



Saturday, March 2, 2024

என்மகஜெ

 என்மகஜெ: அம்பிகா சுதன் மாங்காடு: கவிஞர் தணிகை

மலையாளச் சூழலியல் நாவல் தமிழில் : சிற்பி



படிக்கும் பழக்கம் போய் பார்க்கும் பழக்கம் காலம் வந்த நிலையிலும் எழுதியபடி இருக்கிறோம் இன்னும் சிலர்.எப்படி சொல்கிறேன் எனில் எனது தம்பி ஒருவர் ( அவருக்கு பெற்றோர் இருவரும் இல்லை சிறு வயது. நமக்கும் தான்) தனது தந்தை இறந்த நிலையில் நியாய விலைக் குடும்ப அட்டையில் இருந்து தந்தை பெயரை நீக்க கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார் உடனே எழுதிக் கொடுத்தவரான இவர் பெயரை நீக்கி விட்டனர். இறந்த தந்தையின் பெயர் இன்னும் இருக்கிறது. சரி செய்ய சட்டத்திற்கு புறம்பான வழியை நாடுவது தான் நம் நாட்டில் இருக்கும் சிறந்த வழி என்று அவரது மாமா அதே துறையில் நல்லதொரு பொறுப்பான பணியில் தொலை தூர மாவட்டத்தில் இருந்து வருபவர் அனுபவம் இருப்பதால் வழி காட்டி இருக்கிறார். எனவேதான் சொன்னேன் பார்ப்பதோடு சரி எவரும் படிக்க ஆர்வப் படுவதேயில்லை என.


என்மகஜெ: சொல்லின் பொருள் எட்டுப் பண்பாடுகளின் நாடு என்பதாகும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. எண்மகஜெ என்று இருந்திருந்தாலாவது எண் வகை பண்புகள் கொண்ட இடம் என்ற முடிவுக்கு வர சரியாக இருந்திருக்கலாம். அப்படித்தான் எழுதியோர் சொல்கிறார்கள். இதை ஒரு ஆனந்த யாழை மீட்டுகிற ஆராரிராரோ பாடுகிற தங்க மீன்கள் போன்ற‌ நாவல் என்று பேரை வைத்து நினைத்தேன். பெரும்பாலும் அனைவர்க்கும் அப்ப‌டித்தான் தோன்ற வாய்ப்பு. ஆனால் இது என் மக(ள்) ஜெ அல்ல. முற்றிலும் வேறு.


சிற்பி( பாலசுப்ரமணியம் ) பொள்ளாச்சி தொழில் நுட்பக் கல்லூரிக்கு 1979ல் வந்த போதும் எளியவராகவே காட்சி அளித்தார். அவரும் எனது தோழர் ஒருவரின் நண்பர் இளையபாரதி என்னும் ராஜேந்திரன் என்பவரும் அன்றைய கல்லூரி+ கோவை வானொலி ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு விருந்தாளிகளாக இருந்தனர். இருவரும் அப்போது கோவை வானொலி நிலையத்தில் பகுதி நேர சேவை செய்ததாகவும் நினைவு.


சிற்பியை விட, ராஜேந்திரனை விட நாம் அதிகம் சாதிக்க முடியும் என்ற பெருமிதம் காணாப் போனது வாழ்வுச் சூறைக் காற்றில்.சிற்பி பாலசுப்ரமணியம் தான் இந்த நாவலின் மொழிபெயர்ப்பாளர்.அவர் தமிழறிஞராக நின்று நிறைய மைல்கற்களைத் தாண்டி சென்றபடியே இன்னும் 84ல் ஓய்வறியா பயணத்தில். ராஜேந்திரன் மத்தியக் கலால் வரித் துறையில் அப்போது நீண்ட முயற்சிக்கும் பின் ஆய்வாளர் ஆனார். இப்போது பெரும் பொறுப்புக்கும் பின் ஓய்வு பெற்றிருக்கலாம்.


வித்தியாசமான நாவல் "என்மகஜெ" இதன் ஆசிரியர் மாங்காடு அம்பிகா சுதன் சொல்லியபடி நடந்தவைகளுள் கற்பனையும் கலந்திருக்கிறார்.


நீலகண்டன் கருத்தடை செய்து கொண்ட ஆண்,உடலை விற்றுப் பிழைத்த ஒருபக்கம் மார்பகத்தை இழந்த( ஒரு முலையை அறுத்து எடுத்த பின் வாழ்வதாகவே நூல் சொல்) கர்ப்பப் பை எடுத்துக் கொண்ட தேவயானியுடன் (இருவரும்) உலகை விட்டு ஒதுங்கி யாருடனும் பேசாமல்  எவரும் எளிதில் தொட முடியா ஒரு மலைக்காட்டில் குடி அமைத்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். இந்த உலக வாழ்வும் மனிதர்களும் வேண்டாமென்று புறக்கணித்து விட்டு. ஒருவர்க்கொருவர் துணையாக இருக்கிறார்கள். அதிக நாட்கள் ஒருவர்க்கொருவர் துணையின்றி வாழ முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.


நீலகண்டன் தேவயானியை குற்றுயிரும் கொலையுயிருமாக 4 கல்லூரி இளைஞர்களிடம் சிக்கி சின்னாபின்னப் பட்டு ஒரு காட்டில் கிடக்கும் உடலாகவே கண்டு எடுத்து மூச்சி இருக்க கொண்டு வந்து காப்பாற்றுவதுதான் அவர்களின் முதல் சந்திப்பு. அதன் பின் அவர்களின் சேர்ந்த தேர்ந்தெடுத்துக் கொண்ட‌ வாழ்வுதான் இந்த நாவலின் கதை .


 கீழே சந்தைக்கு வர நேரும் போது  ஒரு நாள் கீழ் சிறு கிராமம் ஒன்றில் பெற்றோர் தூக்கிட்டு மாய்ந்து விட ஒரு குழந்தை அனாதையாக யாரும் இன்றி கிடக்க‌ அதை எடுத்து வருகிறாள் தேவயானி. அந்த குழந்தைக்கு அப்போதே நரைமுடி, அழ முடிந்தால் சத்தம் வராமை , தொண்டைக்குழி இல்லாமை ஓரிரு வயது இருக்கலாம் என்று நினைத்தால் அதற்கு 8 வயதுக்கும் அதிகமாக இருப்பதாக அதற்கு மருத்துவம் பார்த்த நல்ல மருத்துவரின் மொழி,  அதன் பின் தெய்வக் குற்றத்தால் அந்த மலையெங்கும் அதே பல்லவியுடன் சரணங்களாக சோக கீதங்கள், நிறைய குழந்தைகள் (அப்நார்மலாக) சாதாரண‌ மனித இயல்புக்கு மாறாக...அது மட்டுமல்ல 3 கால் கன்றுக் குட்டிகள், இரு தலை மாடு,தேனிக்கள் கூட இல்லாமை, புழு பூச்சிகள் இல்லா, மண்ணும், நீரும்...இப்படி அதிர்ச்சிகள் எங்கெங்கும்... எல்லாம் ஜடாதாரிக் கடவுளின் தண்டனை என... பாவத்துக்கு பழி வாங்க என... நமக்கு போபால் விஷ வாயு பற்றி ரயில்வே மேன் தொடர் சொன்ன கதை நினைவிலோட மேலும் படிக்க நேர்கையில்...


ஒத்த மனம் உள்ள சிலர் சேர்கிறார்கள் அது "என்டோ சல்பான்" என்ற மருந்து ஹெலிகாப்டர் மூலம் அரசு முந்திரிப்பண்ணைகளில் தெளிப்பதன் தெளித்ததன் தெளிக்கப் போவதன் விளைவே என...முடிந்த வரை உயிரைப் பணயம் வைத்து அதற்கு எதிராக போராட ஆரம்பிக்கிறார்கள். பெரும் வாழ்வா சாவா போராட்டம். அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை. வழக்கமான அரசியல் மந்திரி, தலைவர், அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்ட அரசுத் துறைகள், காவல் நிலையம் இப்படி சென்று கடைசியில் முடிவாக யார் பக்கம் வெற்றி தோல்வி என்றெல்லாம் சொல்லாமல் 288 பக்கம் நூல் விலை ரூ.200 நமக்கு கேள்விகள் எழுப்பி நிற்கிறது. 2013 வெளியீடு. இது கேரள மாநிலத்தில் நடந்த கதை.


 கடைசியில்  நீலகண்டனையும் தேவயானியையும் மரத்தில் ஆடையின்றி தலைகீழாக கட்டித் தொங்க விட்டு தீ இட்டு கொளுத்த  தமது அடியாட்களுக்கு ஆணையிட்டு விட்டு சிரித்தபடி இருக்கும் தலைவருக்கு திடீரென வயிறு ஏதோ கோளாறு செய்ய‌ இயற்கை உபாதையை துணியை எல்லாம் கழட்டி விட்டு நிர்வாணமாக கழிக்கச் சென்ற தலைவரை வெகு இயற்கையாக பெரும் பாம்பு ஒன்று தோளில் மேல்  போட்டு விடுவதுடன்/தீண்டி விடுவதுடன் கதையின் அத்தியாயம் தொக்கி நிற்கிறது... நிர்வாணமாக கத்தியபடி அலறுகிறார் தமது அடியாட்களை உடனே வந்து காப்பாற்ற எடுத்துச் செல்லும்படி.அதற்குள் நிறைய படிப்பவரும் அனுபவப் படுகிறோம்.


திரைப்படத்துக்கான ஒரு நல்ல கதை.

என்டோ சல்பான், கார்பைடுக் கல், டைக்ளோபினக் எல்லாமே விலக்கி வைக்கப் பட்ட மருந்து பிற முன்னேறிய நாடுகளில். இந்தியாவில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறதென செய்திகள் இருக்கின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, February 26, 2024

இருபதாம் நூற்றாண்டு சிறு கதைகள் நூறு:கவிஞர் தணிகை

 இருபதாம் நூற்றாண்டு சிறு கதைகள் நூறு:கவிஞர் தணிகை



சீர் வாசகர் வட்டத்தின் முதுகெலும்புடன் வீ. அரசு என்னும் பதிப்பாளர் மலிவு விலையில் தமிழ் சிறு கதை  வட்டத்தை நிமிர்ந்தெழ வைத்திருக்கிறார்.அதற்கு என தமிழ் ஆர்வலர்கள் பலர் நிதி உதவி செய்துள்ளனர். இல்லையேல் பரிசுக்குரிய நூல்களாக முதலில் ரூ.300 விலையிலும் அதை அடுத்து ரூ.500 விலையில் 1064 பக்கங்கள் தொகுத்து 100 சிறுகதைகளை அற்புதமாக வழங்கி உள்ளனர்.2016 ஆம் பதிப்பில் 1214 பக்கங்கள் விலை ரூ.599 என தற்போது இணையத் தேடலில் இருக்கிறது.


இதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வில்லை எனில் எனக்கு அது நெடு நாட்கள் நெருடலாக இருக்கும். இப்போதே சில நாட்கள் ஓடி விட்டன. மிக அரிய பணி . பாராட்ட வாய் வார்த்தைகள் போதா. கை எழுத்துகளும் போதா. என்னாலும் சில சிறு புத்தகங்களை தமிழ் உலகுக்கு கொடுத்தருள இயற்கை உதவி இருக்கிறது என்பதாலே இந்த நேர்த்தியான பெரிய நூலை இவர்கள் கொண்டு வர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என என்னால் உணர முடிகிறது.


ஹோமம் , நாயனம், போன்ற கதைகள் நெஞ்சிலிருந்து மறையவே மறுக்கின்றன. சில கதைகள் பெயர் மறந்த போதும் அதன் மாந்தர்கள் என்னுள் இன்னும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும் ஆனால் நீங்கள் படிக்க முனைவதே சிறந்தது.


புதுமைப் பித்தன் முதல் ஜெயகாந்தன் மற்றும் அந்தந்தக் காலக் கட்டத்தில் அவரவர் கைவண்ணத்தில் நேர்த்தியாக வடிவமைந்த‌ கை தேர்ந்த சிறுகதைகள் நூறை தெரிவு செய்து தொகுத்துள்ளனர். சில கதைகள் நேரம் பொழுது போக்க, சில கதைகள் படித்த மனதிலிருந்து கனத்தை எடுத்து வெளி எறிய முடியாமல், சில எரியம் விளக்கெனவும், வெளிச்சம் பரவச் செய்கின்றன.


சில கதைகள் ஏற்கெனவே படித்தவையும் இருக்கின்றன. எ.கா: ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், தி.ஜ.ர, மௌனி. நிறைய கதைகள் நான் மேலும் படிக்காதைவயே. முடிந்தவரை எல்லா எழுத்தாளர்களையும் கொண்டு வந்திருக்கின்றனர். அல்லது கொண்டு வர முயன்றிருக்கின்றனர் இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் பங்கெடுப்பில். எஸ். ரங்கராஜன் என்னும் சுஜாதாவின் கதைகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதில் எனக்கு சிறு குறையே.


காலத்தை 10, வருடம், 20 வருடம் எனப் பிரித்து வைத்து இருபதாம் நூற்றாண்டின் கதை கொண்ட பூ மாலை ஆக்கியுள்ளனர். நிறைய இது பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா மிகையுறினும் எழுதும் மகிழ் இழைகள் அதிகம் மலராத ஒரு காலக்கட்டத்தில் எனது வாழ்வுப் பிரதேசம் மூழ்கி இருப்பதால் இத்துடன் இந்த பகிர்வுப் பதிவை நிறைவு செய்திருக்கிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, February 20, 2024

எளிய வீடு மருத்துவம் தேடு: கவிஞர் தணிகை

 எளிய வீடு மருத்துவம் தேடு: கவிஞர் தணிகை



கடந்த சில நாட்களுக்கும் முன் நண்பர்களுக்காக மருந்து என்ற தலைப்பில் சில கருத்துகளை பதிவு செய்திருந்தேன். அவை யாவும் புதியதல்ல. நம் நடைமுறையில் ஏற்கெனவே உள்ளவைதான். அது பற்றி மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் வலை தளம் மூலம் பல ஆண்டுகளுக்கும் முன்பே நான் பகிர்ந்தவைதாம்.


அன்றைய பதிவில் சில விடுபட்டவை:

1. வாய்வுத் தொல்லை அதிகம் உள்ளோர் காலை எழுந்தவுடன் பழைய நீராகாரம் அருந்திய பின் பச்சை உருளைக்கிழங்குச் சாறு ( ஜூஸ்) ஒரு டம்ப்ளர் அருந்தி வர தினமும் வாய்வுத் தொல்லை இராது.

பொதுவாக உருளைக்கிழங்கு சார்ந்த உணவு வகை வாய்வுதான். ஆனால் இங்கு கணிதம் போல மைனஸ் இன்டு மைனஸ் ப்ளஸ் ஆகிறது.


2. கற்றாழை சோற்றுக் கற்றாழை மிக அரிய தாவரம். இது நல்ல மலமிளக்கி. நோய் எதிர்ப்புத் தன்மை உள்ளது

தினமும் கூட உண்டு வரலாம். சர்க்கரை + தேன் கலந்து. அல்லது அப்படியே...இது பற்றி நான் எனது யூ ட்யூப் வலையத்தில் கூட வெளியிட்டதுண்டு. இன்றைய பிரதமர் நமோ அன்றைய முதல்வர் ஜெவுக்கு இதை பரிந்துரை செய்ததாகக் கூட நான் கேள்விப் பட்டதுண்டு. நண்பர் பாலு ஆகாஷ் உடனே இதிலும் அரசியல் இருக்கிறது என கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன். மேலும் பெண்களுக்கு பெரிதும் பயனாகும் அழகு சாதனப் பொருட்களில் பதனப் படுத்தும் முறைகளில் இந்த கற்றாழை பெரிதும் பயனாகிறது.


3. சுண்டைக் காய் / சுண்டை வத்தல்: என்பார் மோரில் கலந்து காய வைத்தது. வாரம் ஒரு முறையாவது வறுத்து உணவுடன் உண்டு வர உணவால் ஏற்பட்ட நச்சு வெளியேறும்.(புட் பாய்சன்)


4. சளி பிடித்தார்க்கு: கொள், ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் நல்ல மருந்து. இரசம் வைத்து உணவுடன் உண்ண நல்ல குணம் இருக்கும்.


5. பிரண்டைக் கொடி, ஓமவள்ளி அதிலும் கற்பூரவள்ளி போன்றவை மிளகு சீரகத்துடன் சளி போன்றவைக்கு நல்ல மருந்து.


6. ஆவாரை, வெந்தயம் போன்றவை சர்க்கரை அல்லது நீரிழிவு வியாதிக்கு நல்ல மருந்து.


7. சிறியா நங்கை விஷ முறிவு


8. வேம்பு, மஞ்சள்,, இஞ்சி, மிளகு,சீரகம் போன்றவை  உடல் நலத்துக்கான அருமருந்து...


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால் இதை எல்லாம் அவரவர் உடலுக்கு உகந்தால் நீடித்த காலம் பயன்படுத்தலாம் அல்லது பின் விளைவு வேறுபடின் நிறுத்தி ஆராய வேண்டும். ஏன் எனில் மிகுதியான சூடு கூட உடலுக்கு கேடாய் முடியும்.


தினம் 2, வாரம் 2, மாதம் 2, ஆண்டுக்கு 2 பற்றி எல்லாம் உங்களுக்கும் தெரியும் ஆனால் இவை எல்லாம் எந்த எந்த குடும்பங்களில் கடை பிடிக்கிறீர்கள் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.


நல்லா தண்ணீர் குடியுங்கள், உகந்த பழம் சேர்த்துக் கொள்ளுங்கள் கோடை வந்து விட்டது.


மறுபடியும்  பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, February 18, 2024

மருந்து: கவிஞர் தணிகை

 மருந்து: கவிஞர் தணிகை



செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல...அயர்லாந்து பழமொழி


தாயின் மாரில் பால் சுரந்து குழந்தை வாய்க்குச் சென்று புகட்டப் பட்ட பின் அந்த சிறு உதடுகளை தாய் ஒரு மெல்லிய துணியை வைத்து துடைத்து விடுகிறாளே எறும்பு ஈ கடிக்காமல் மொய்க்காமல் அங்கிருந்து ஆரம்பித்து விடுகிறது மருத்துவம்.


நீங்கள் : இரா. முத்து நாகு எழுதிய சுளுந்தீ என்னும் நாவல் படிக்க வேண்டும் பாண்டுவ மருத்துவம் பற்றி தெரிய.


இன்னும் கைவசம் இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு...மலிவு விலைப் பதிப்பு பக்கம் 1064 உட்பட கைவசம் 11 நூல்கள் பாக்கி முன் முற்கொண்ட வேலையாக இருக்க‌ அதற்குள் இந்தப் பதிவு அவசியமென உட்புக...


எனது "நேசமுடன் ஒரு நினைவதுவாகி" என்னும் 2006 பதிப்பு நூலில்: 43,ஆம் பக்கத்தில்: 

நிலை மாற்றம் என்ற தலைப்பில்:

மின்சாரம் மருந்து

காற்று மருந்து தீ மருந்து

மண் மருந்து மலை மருந்து

ஒளி மருந்து வெயில் மருந்து

இலை மருந்து நிழல் மருந்து

விஷ(ம்) மருந்து வேர் மருந்து

யாவும் மருந்து

குளிர் சூடாய்

ஒரு நேரத்தில்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்!

இனி பொருந்துமா? என்று ஓர் கருத்துப் பகிர்வு இருக்கும்.


அவரவர் உடலுக்கு முதல் மருத்துவர் அவரே. காந்தி வழி நூல்களைப் படித்து மண் சிகிச்சை, நீர் சிகிச்சை,பிரமசாரிய விரத கூனே முறை பற்றி எல்லாம் அறிந்து கொள்க.ஆனால் அந்த மண்ணும், அந்த தூய நீரும் தேடிப் பயன் பெறுக.( இப்போது அந்த மாசு படா நீரும் மண்ணும் இல்லை)


ஆங்கில அல்லோபதி எனும் மருத்துவம் அவசர அவசியமாக சில நேரங்களில் தேவை. ஆனால் அவை பக்க விளைவு இல்லாமல் இல்லை. அங்கேதான் வந்து பெரிய வேள்வியின் பயனாக நிற்கிறது: மூலிகை மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம்,இயற்கை வைத்தியம் ஆயுர்வேதம்,  சித்த மருத்துவம் யுனானி ஹோமியோபதி இப்படிப் பட்ட மாற்று மருத்துவங்கள்.


நல்லதை எல்லாம் படிக்க கற்றுக் கொள்ள‌ மனிதத்துக்கு  நேரமோ ஆர்வமோ இல்லை. எனவே மிகவும் சுருக்கமாகவே சொல்லப் புகினும் இது சற்று நீளமானதுதான் என் சொந்த அனுபவமும்.


கிணற்றுப் பூண்டு தழை...சாதாரண வெட்டுக் காயங்களுக்கு போதுமான மருந்தே.

குப்பை மேனி : சரும அதாவது தோல் வியாதிகளுக்கு மருந்தே

முடக்கறுத்தான் கீரை: மூட்டு வலிக்கு மருந்தே

அகசுத்திக் கீரை என்பதே: அகத்திக் கீரை

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


அதில் ஒன்று: முருங்கை: வீட்டில் முருங்கை இருந்தால் முதுமையில் கோலின்றி நடக்கலாம் என்கிறது மருத்துவ மொழி ஒன்று.எங்கள் வீட்டில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முருங்கை உள்ளதுதான்.முருங்கை சுலபமாக எளிமையாகக் கிடைப்பதுதான் என்பதும் இதன் சிறப்பு

எலும்புக்கு, முடி வளர்ச்சிக்கு பயன்படும் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து , விந்து வீரியம் போன்றவைக்கு முருங்கைக் கீரை, முருங்கைக் காய் நல்ல மருந்து.


எனவே மகிழ்ச்சி என்னும் சமூக ஊடக பயன்பாட்டில் எனது தொடர்பில் இருக்கும் தோழர் ராஜேந்திரன் சொல்லிய முருங்கைக் கீரை + நாட்டுச் சர்க்கரை பற்றிய செய்தியை நான் பகிர்ந்திருந்தேன். அது அனைவர்க்கும் பயன்படும் என்பதால்.


எனக்கு எனது சேவைக் காலத்தில் கையில் வெண் அல்லது சிவப்பு படலங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன. அப்போது நான் எனது வட இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பாலமலையில் சிறிது காலச் சேவையுள் மூழ்கியபடி இருந்தேன்.


அந்த தேடலின் போது: பெருமருந்துக் கொடி அல்லது வண்டுக் கடி மருந்து என்ற ஒரு கொடியில் உள்ள இலை பற்றி வழிகாட்டப் பட்டேன். வைத்தீஸ்வரா பள்ளியின் பின்  உள்ள தேசாய் நகரில் வெள்ளாட்டுப் பட்டி ஒன்றில் அவ்வப்போது எனக்கு வெள்ளாட்டுப் பால் மருந்துக்கு என்பதால் இலவசமாகவே தருவார்கள், பல முறை தந்தார்கள். இந்த இலையை அரைத்து அந்த வெள்ளாட்டுப் பாலில் கலந்து உள்ளுக்கும் குடித்து, மேலுக்கும் தடவி வர சில மாதங்களில் அந்த தேமல்கள் அல்லது வெண் அல்லது சிவப்பு படைகள் அல்லது படலங்கள் மறைந்து சருமம் சரியாகி ரோமக்கால்களும் தோன்றி சரியாகியது. அதற்கு சைவம் அவசியம். மாமிசம், புளி போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற நிபந்தனைகள் உண்டு.  ஏன் எனில் அப்போது எனது வயது சுமார்25. AT those times I am Very Serious about the Future.Think about the proverb:our Exit might be  more graceful than our Entry.


இந்த பதில் மிக எளிதாக சொல்லி விட்டேன். ஆனால் இந்த மருத்துவத்துக்கு உதவியவர்களும், வழிகாட்டியவர்களும் நான் வணங்கத் தக்க குடும்ப நண்பர்களும் சிலர். அவர்கள் எப்போதும் நான் நன்றி செலுத்த தகுதி உள்ளோர்.


அவ்வளவு ஏன்? கொரானோ 19 தாக்கிய போதும், அதற்கும் முன்பிருந்தும் பல ஆண்டுகளாக‌ எனக்கு வயிற்றுப் போக்கு அடிக்கடி நிகழும். அப்போதெல்லாம் மாதுளையை விட சப்போட்டா பிஞ்சுகளை நன்கு  நைய அரைத்து மோர் அல்லது தயிரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும் இப்போதும் கூட அந்த முறை எனக்கு பயனாகி வருகிறது. உடன் தேவையெனில் எலக்ட்ரால் பவுடர் வாங்கி நீர்ச்சத்தை சேர்த்துக் கொள்ள குடித்தால் போதும்.Food Diet is also very important.


அதற்காக கெமிகல் லைன் ஹாஸ்டல் வரை, எங்கள் ஊரின் பலபகுதிகள், மால்கோ பகுதிகளில் சப்போட்டா பிஞ்சுகளுக்கு அலைந்த காலம் கண்டு எனது தங்கை ஒரு சப்போட்டா செடியைக் கொண்டு வந்து எங்கள் வீட்டில்  வைக்க அது வணங்கத் தக்க மரமாகி இன்றும் எனக்கு நோய் தீர்த்து வருகிறது மேலும் கனி கொடுத்தும் வருகிறது பலருக்கும் பறவைகளுக்கும், அணில்களுக்கும் உணவாகி. I pray that Tree.


 ஏன் என் உடலில் மலேரியா ஆந்திரா ஒரிஸ்ஸா பகுதி பணியில் இருந்த போது , கல்வராயன் பகுதிகளில் இருந்த போது டைபாய்ட் போன்ற வியாதிகளும், அதன் பின் எப்போதும் இப்போதும் உணவுக் குழல் தளர்ச்சி, நிறமி அணுக் குறைபாடு, மூலம், குடற்புண், கொஞ்சம் ஏமாந்தால் சர்க்கரை, உப்பு, இரத்த அழுத்தம் யாவும் உண்டு...ஆனால் அவற்றுடன் எல்லாம் எனது பயணம் சென்று கொண்டுதான் இருக்கிறது சுய மருத்துவ முறைகளைக் கையாள்வதால் எல்லாவற்றிலும் மிக்க பயன்பாடு.


அப்பிள் சைடர் வினிகர்(original) + பூண்டுச் சாறு + இஞ்சிச் சாறு+ எலுமிச்சைச் சாறு + தூய தேன் திரவம் தயாரித்து அருந்து வாருங்கள் பாருங்கள் எந்த கொழுப்பு சார்ந்த அடைப்புகளும் இரத்த நாளத்தில் இராது.


சிறு தானியப் பயிர் அடங்கிய கூழ் தயாரித்து எப்போதும் காலையில் உடல் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் விடாமல் அருந்துங்கள்.


தினமும் பழைய சோற்று நீர் அருந்துங்கள் உறங்கி விழித்ததும்...


இப்படி என்னால் பல சோதனை முயற்சிகளின் வெற்றியை சொல்ல முடியும். கேட்கத் தயாராக இருந்தால்.

வாழ்வு ஒரு அற்புதச் சுரங்கம் நுனிப்புல் மேயாமல் வார்த்தைகளை வீணாக்காமல் வாழ்ந்து பாருங்கள்.


இராமலிங்கர் சொன்னபடி அறிவியல் சொல்லும் படி அவரவர் உடல் பற்றியே இன்னும் முழுமையாக எவரும் அறிந்த பாடில்லை


 In Human body மேலும் மூன்று கோடிக்கும் மேல் இருக்கும் வியர்வைத் துவாரங்களையும் 72ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் நாடி  நரம்புகளையும் இட்டுக் கட்டப் பட்டிருக்கும் with so many inner and outer parts with wonder of organs உடல் பற்றி இராமலிங்கர் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோமே என்கிறார் திருமூலர்.


உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.... திருமூலர்.


உனக்குள் உறையும் உயிரே கடவுள் என்கிறார் திருமூலர்.உடலே கோயில் என்பதையும் காண்க‌



வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம் உடலின் 50% நோய் தீர்க்கும் மருந்துகள் அவை பற்றி நிறைய பள்ளிகளில் கல்லூரிகளில் அடியேன் உரையாற்றியதுண்டு பல்வேறு நிகழ்வுகளில் அவை இங்கு மிகையாகும் என்பதால் இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.