Tuesday, January 30, 2024

சொல்லாமல் இருக்க முடியவில்லை காந்தி:கவிஞர் தணிகை.

 சொல்லாமல் இருக்க முடியவில்லை காந்தி

கொசுக்களைக் கொல்லாமல் இருக்க முடியவில்லை இராமலிங்க வள்ளலார்.



காந்தி கிராமியப் பல்கலைக் கழகத்தில் சில மாதங்கள் பயிற்சி எடுத்தது

மதுரை வள்ளியம்மாள் கல்வி நிறுவனத்தின் காந்திய நூல்களைப் படித்து தேர்வு எழுதியதில் முதல் பரிசும் சான்றிதழும் பெற்றது

காந்தி மாதிரி இந்த நாட்டின் சுகாதாரத்திற்காக மலம் அள்ளி மலத் தொட்டிகளை தூய்மை செய்தது

காந்தி வழி நூல்கள் 20 மற்றும் காந்திய சாரம் அடங்கிய அனைத்து நூல்களும் பயின்றது

பல கல்லூரி, பள்ளிகளில் பேருரை காந்திய சிந்தனையில் நிகழ்த்தியது... 

நினைவு கொள்ளுங்கள் சுமார் 60,000 பக்கங்கள் அதற்கும் மேல் உள்ள களஞ்சியம் அவை. அது மேலும் இணைய உலகத்தில் 100,000 பக்கங்களாக விரிந்து கிடக்கிறது. இளமையில் வாய்த்ததால் அவை அனைத்தையும் படித்த பெருமை என்னுள் இன்னும் இருக்கிறது. இவை போன்ற தகுதிகள்


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

எனவே இந்த தகுதிகள் இருப்பதால் சொல்லாமல் இருக்க முடியவில்லை...


நாட்டை மனிதர்களை உலகை மதம் ஆட்டி வைக்கக் கூடாது கூறு போட்டு பிளந்து இரத்தக் களரியாக்கக் கூடாது என்ற சிந்தனை உள்ளார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...

இன்றைய காந்தி அமரத்துவ தினத்தில் அவர்க்கு இதை நான் செய்யும் அஞ்சலியாகக் கருதுகிறேன்.

சாதி மதம் சமயம் பொய்யென்று ஆதியில் உணர்த்தினாய் அருட் பெருஞ் ஜோதி

எம் மதம் எம் இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் அவர்க்கென்று அருள்வாய் அருட் பெருஞ் ஜோதி

என்பார் வள்ளலார்


விவேகானந்தர் மதங்கள் என்னும் ஆறுகள் இறை என்னும் சமுத்திரத்தில் கலப்பதாக உரைத்தார்.

சுருக்கமாக சொல்ல நினைத்தாலும் வார்த்தை சற்று நீண்டு விட்டது.

விமர்சனம் கொடுக்க நினைப்பார் அதற்கும் முன் அவை, அவர்கள், அது பற்றி எல்லாம் நிறைய தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள அறிந்து கொள்ள உணர்ந்து கொள்ள தேடல் நடத்த படிக்க வேண்டும் . அதன் பின் கருத்துகள் இருப்பின் முரண் இருப்பின் மாறுபட்ட கருத்துகள் இருப்பின் அது சமுதாய மேன்மைக்கு பயன்படுவதாக இருந்தால் தெரிவிக்கலாம். அதற்கு மனிதராய்ப் பிறந்த யாவர்க்க்கும் உரிமையும் கருத்து சுதந்திரமும், வாய்ப்பும் உண்டு.

அல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பேசுவது தவறே.

உயிருடன் இருக்கும் போதே பாராட்டி விடலாம். அது நல்ல வாய்ப்பு. விமர்சிப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, சிந்தித்து வாய் உரைப்பதும் எழுத முனைவதும் சிறந்த பலன் தரும்.


ரபீந்தர நாத் தாகூர் இவரை மகாத்மா என்கிறார், அவரை இவர் குருதேவ் என்கிறார். சுபாஷ் சந்திர போஷ் இவரை தேசத் தந்தை என்கிறார். தமது தந்தையாகவே கருதுகிறார். அது மட்டுமல்ல இவர் தன்னை தலைவராக ஏற்பது குறித்து மாறுபட்ட சிந்தனையில் இருப்பதை அறிந்து ஜனநாயக முறையில் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையிலும் அது வேண்டாம் எனத் துறக்கிறார். இந்த காந்தி காங்கிரஸ் பேரியக்கத்தில் அங்கமாக இல்லாத போதும்.

உண்மைதான் இந்தியாவின் 1947 விடுதலைக்கு காந்தி மட்டுமே காரணமல்ல. ஆனால் மையப்புள்ளி இவராகவே இருந்திருக்கிறார் என்பதை அனைத்து தலைவர்களும், அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் இரும்பு மனிதர் என்றழைக்கப் பட்ட சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, சுபாஷ், போன்றோர் கூட விலக்கல்ல. பகத் சிங் விவகாரத்தில் கூட முரண்கள் உள்ளன.

இவை யாவுமே பிரேதப் பரிசோதனைகளுக்கு ஒப்பானது. இதனால் உயிர்களுக்கு தீங்கு விளையும் எனில் அவை தேவை இல்லை என்பது எவராலும் மறுக்கக் கூடாத சத்தியம்.

எழுதுவதையும் பேசுவதையும் கூட நிர்பந்தமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால்

இத்துடன் நிறுத்திக் கொண்டு விடை பெறுகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

 


Saturday, January 20, 2024

சமூகக் காய்ச்சல்: கவிஞர் தணிகை

 சமூகக் காய்ச்சல்: கவிஞர் தணிகை



மாடுகள் மேய்ந்தாலும் மறுபடியும் புல் வளர்கிறது.
மீன்கள் நீந்தினாலும் நீர் சுத்தமாகவே இருக்கிறது.
மிருகங்கள் வாழ்ந்தாலும் காடுகள் அழியாதிருந்தன;
மனிதர்கள் தொடர்ந்து நடப்பதால் புல்லும் முளைப்பதில்லை;
மனிதர்கள் வாயை வைத்தால் நீர் அசுத்தமடைகிறது
மனிதர்கள் கையை வைத்தால் யாவும் கலங்கிவிடுகிறது
காடுகளிலிருந்து வளர்ந்தவன் காட்டை அழித்துவிட்டான்
நாட்டை காக்க வேண்டியவர் நாட்டை அழித்துவிட்டார்
தாய்ப்பால் தந்தவளின் மாரை அறுப்பதுபோல.

நடந்த தவறுகளை நினைப்பதைவிட
மறுபடியும் நிகழவிடாதிருப்பதே வளர்ச்சி!

கட்சிக் கத்திரிகள் முனை மழுங்கினாலும்
தேர்தல்கள் சாணைப்படுத்தி பதப்படுத்தி
மறு கூர் செய்ய

வெட்டுவதும் வெட்டப்படுவதும் 
இங்கு ஒன்றாகிவிடுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே
வெட்டிகொள்கிறார்கள்;\வெட்டுப்படுகிறார்கள்
கறைத் துண்டுகளாகிவிடுகிறார்கள்
பிளாஸ்டிக் கலர் கொடிகளுடன்
இரசாயன மதுப்புட்டிகளுடன்
விரைத்துப் போகிறார்கள்;களைத்துப் போகிறார்கள்
நீர்த்துப் போகிறார்கள்

மக்களே மக்களுக்காக ஆளும் ஆட்சியில்.
நகரம் நாகரீகமாக ஒதுங்கிக் கொள்கிறது
நாகரீகம் நாகரீகமாக ஒதுங்கிச் செல்கிறது
நரகக் குழிகளில் குப்பைமேடுகளாய்
கிராமம் வாக்களிக்கிறது வக்கு வகையின்றி
ஜனநாயக் வாய்க்கரிசி போட்டுக்கொண்டு

நகரம் அதிகம் அனுபவிக்கிறது எல்லாவற்றையுமே!
கிராமம் தாங்கிப் பிடிக்கிறது கிராம் துணுக்குகளுடன்
மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை

எல்லாம் ஒரே மயிர்க்கூச்செறியும் விரைவு
இது ஒரு உயிரின் கூச்சல்; சமூகக் காய்ச்சல்

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 

Friday, January 12, 2024

கூட்டணி: கவிஞர் தணிகை

 கூட்டணி: கவிஞர் தணிகை



இந்தப் பதிவை படிப்பதற்குள் ஒரு முறையாவது மகாக் கவி பாரதியின் வசன கவிதை: கந்தன் வள்ளி கயிறுகள் காற்றில் ஆடி பேசிக் கொள்வதை அந்த கீச்சு மொழியை தெரிந்த பின் இதையும் படிப்பதற்கு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.


பொன்னம்பலத்தார் செடிப் பக்கம் சென்று

 ப்ளாஸ்டிக் (நெகிழி) முக்காலியில்  அமர்ந்து கூழ் குடிக்க ஆரம்பித்தார்.குளிக்கும் முன் தான்.(சாரி ஔவையார்)முக்காலி முற்காலத்தில் இரும்பு மற்றும் தகடு அதன் பின் மரம், இப்போது ப்ளாஸ்டிக்...அடிக்கடி உடைந்தால் தானே புதிது புதிதாக வாங்குவார்கள் உற்பத்தியாளர்க்கும் விற்பனையாளர்க்கும் கொள்ளை இலாபம் கிடைத்து முதல் பணக்காரர் ஆகும் போட்டியில் கலந்து கொள்ள முடியும்


நேற்று நால்வர் கூட்டணியாய் வாக் கிக் வாக் கிங் (நடைப் பயிற்சி) ஈடுபடும் போது , டி.வி.எஸ் 50 வண்டி வரலாற்றையும், ரெனால்ட்ஸ் மை எழுதி, அதன் மறு நிரப்பு பற்றி எல்லாம் பேசி அனுபவித்தார்கள் உடன் நாய் முதல் வானொலி, துவி சக்கர வண்டி(சைக்கிள்) லைசென்ஸ்(உரிமம்) பற்றியும் விளக்கெரியா துவி சக்கர வண்டிக்கு காவல்காரர்கள் செய்த கைங்கர்யமும், அதற்கு கவுண்டமணி காமெடியாய் சைக்கிளில் லைட் இல்லாம வந்தோம் பிடிக்கிறீர்கள், அபராதம் விதிக்கிறீர், சைக்கிளே இல்லாமல் வருவாரை என்ன செய்யப் போகிறீர் என்றதை பகிர்ந்து கொண்டு சிரித்தபடி நடந்த நேரம் நிழலாட...எருமைச் சவாரி பற்றி எல்லாம் நயம்பட நண்பர்கள் இளமையை பகிர்ந்து கொண்டனர். எருமைதான் தமிழர்களின் வீட்டு விலங்காம் அதை இல்லாமல்  செய்த வெள்ளை விஞ்ஞானம்.


ஈ சைசில் (அளவில்) கொசுக்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து பொன்னம்பலத்தார் கெண்டைக் காலில் அமர அடித்துப் போட்டார். எண்ணிக்கையில் 3 உயிரற்ற உடல்கள் கிடந்தன‌.உப்பு அதிகம் இருக்கும் சுவை கொண்ட இரத்த உடல் கொசுக்களுக்கு ஈர்ப்பு...சுள்ளான்கள்.பாவம் ஆன்மா   பிரிதல்.உயிர் பிரிதல் என்பது பெரிய/மாபெரும் நிகழ்வு இல்லை.


ஈக்கு தலையில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பாம்புக்கு பல்லில் மனிதர்க்கு உடல் எல்லாம்...ஈக்களுள் தாம் எத்தனை வகைகள்?நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருள்வாய் அருட்பெருஞ்ஜோதி...இராமலிங்கர்


சிறிது நேரம் சிறிய சிவந்த எறும்புகள் அங்கும் இங்கும் வரிசையாக எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்தன.என்ன செய்தி சென்று சேரவில்லையா ஒரு எறும்பு கூட கொசுக்கள் அருகே வராமல் இருக்கே...


ஒரு பிள்ளையார் எறும்பு மொய்த்து இழுக்க முனைந்தது...


பிள்ளையார் என இந்த எறும்புக்கு பேர் வைத்தது யார்? அது நம்மைக் கடிப்பதில்லை.சிவந்த சிட்டெறும்பு கடிக்கும்

கட்டெறும்பு கொடுக்கு பிடுங்கி எறியும் வரை கடிக்கும். சிட்டெறும்பு கட்டெறும்பு என்ன அருந்தமிழ்.

செவ்வெறும்பு மா இலையை அப்படியே சுருட்டியபடி கூட சுற்றிக் கொள்ளும், செவ்வெறும்பு கடி பட்டிருக்கிறீர்களா நெருப்பாய் எரியும்... இப்படி எறும்புகளில் எத்தனை வகை?


இப்படி இன்னும் எத்தனை எறும்பு வகைகள்? மனிதர்க்கு தோராயக் கணக்கெடுக்கும் குலம் எறும்பு எவ்வளவு என்று எப்போதாவது  கணக்கு எடுத்துச் சொன்னதுண்டா?


அதன் பின் சிவந்த சிட்டெறும்பு ஒன்று தொட ஆரம்பித்தது, அதன் பின் பல வந்தன. பிள்ளையார் எறும்பு ஒன்றுதான் எனவே ஜூட் விட்டது.


என்ன பேசப்பட்டதோ பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து சிவந்த சிட்டெறும்பு கூட்டணி வர ஆரம்பித்து 3 கொசுக்களையும் இழுக்க ஆரம்பித்து விட்டன தனித்தனியாக... கொண்டு செல்ல ஆரம்பித்தன‌


அதன் பின் அந்த சிவந்த சிட்டெறும்புகளின் தலைமை எறும்புகள் போலும், இரண்டு அதை விட பெருத்த உடல் முன் பின் எல்லாம் கனத்து இருக்க மேற்பார்வைக்கு வந்தனவோ?!


கூட்டணி வெற்றி


கொசுக்களை எறும்புகள் குழிக்குள் கொண்டு சென்று விட்டன... 



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






Monday, January 8, 2024

பயமுறுத்துவது மனிதரே கடவுள் அல்ல‌: கவிஞர் தணிகை.

 பிய்த்தெறியப் பட வேண்டுமா? உதிர வேண்டுமா?



உலகெனும்

(பிரபஞ்சப்) பெரு வெளிக் கம்பளத்தின்

ஓர் ஓர விளிம்பின் நுனியில் இருக்கும்

பிய்த்தெறியப் படும் நிலையில் உள்ள‌


பிசிறு


மனிதா! கடவுள் காப்பாற்றவே!


பயமுறுத்துவது மனிதரே கடவுள் அல்ல‌


கூழானாலும் குளித்துக் குடி

ஔவைக்கென்ன தெரியும்

 நமது அல்சர் பற்றி


கந்தையானாலும் கசக்கிக் கட்டு

ஔவைக்கென்ன தெரியும்?

நமது உலகின் நிர்வாணப் பற்று


யாக்கைக்கு மருந்தென வேண்டாவாம் என்ற‌

வள்ளுவர்க்கென்ன தெரியும்?

தாயின் வயிற்றிலேயே குழந்தைக்கு வந்து இருக்கும்

நீரிழிவு ரகம் பற்றி


பிய்த்தெறியப் பட வேண்டிய உயிர்களுள்

உனது(ம்) ஒன்று


உதிர்ந்து போக வேண்டிய உயிர்களுள்

எனதும் உண்டு...


மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை.



Thursday, January 4, 2024

தாழ்வான இலக்கு குற்றமே

 



என் வாழ்வெனும்

பெருந் துயரின்

சிற்றின்ப வித்தில் விளைந்த பேரின்பச் சொத்து


நீ நல் ஆழி முத்து

அழகிய நவமணி

ஆருயிர்த் தங்கப் புதையல்


முடிந்து போகாத வைரச் சுரங்கம்

நான் கட்டி வைத்த காலத்தால் அழியாத கோட்டை


நீ வாழ நான் பாட‌

விதை கிழிந்து பெரு விருட்சமாக‌

உனை நீ விதை.


 மறுபடியும் பூக்கும் வரை

     கவிஞர் தணிகை


தாழ்வான இலக்கு குற்றமே


Monday, January 1, 2024

நாகமணி சிவலிங்கம் கண்டேன்: கவிஞர் தணிகை

 


கண்டேன் சிவலிங்கத்தை. வயது 72 1952ல் பிறந்த இவர் கர்நாடகத்தின் மாட்டேலி எனப்படும் இடத்தில் கிறித்தவப் பள்ளியில் பல மொழிகள் பயின்று படித்தவர். மேலும் நமது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேருந்து நடத்துனர். அவர் தொடர்பு எண்களை கேட்பார்க்கு தரத் தயாராக இருக்கிறேன்.


எதற்கு என்கிறீர்களா? விஷக் கடி எதுவாக இருந்த போதும் அது பாம்புக் கடியாக இருந்தாலும், தேள், பூரான் இப்படி எதுவாக இருந்த போதும் இந்த ப்ளாக் ஸ்டோன் கொண்டு விஷம் நீக்கி இலவசமாக தம்மை அணுகுவார்க்கு உயிர் காத்து வருகிறார்.


இந்தக் கல்லை தமக்கு தாம் படித்த பள்ளியின் தலைமைப் பொறுப்பினர் தம் மேல் அன்பு கொண்டு, தமது குணநலம் பார்த்து தாம் கிறித்தவராக இல்லாதிருந்த போதும் கொடுத்தனர் என்று அன்பு ததும்ப நன்றியுடன் குறிப்பிட்டார்.


மேலும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை இருக்கும் கிராமத்தின் இடங்களில் வீட்டுக்கு ஒரு கல் இலவசமாக கொடுத்ததைக் கூட வ‌றுமை காரணமாக வணிக நோக்கில் விற்று விட்டனர் என்பதையும் அவர் வழியே கேட்டேன்.


கடிவாயில் இந்தக் கல்லை வைத்தால் ஒட்டிக் கொள்ளும் என்றும் தேவைப்பட்டால் கட்டிவிடலாம் என்றும் ஏன் எனில் கல் கீழே விழுந்தால் உடைந்தும் போகலாம் என்பதற்காக, சிறு இரத்தக் கசிவு செய்து ஒட்டி விட்டால் அந்த விஷம் இறங்கும் வரை அல்லது இந்தக் கல் அந்த விஷத்தை உறிஞ்சிக் கொள்ளும் வரை அந்த உடலில் ஒட்டி இருந்து விஷத்தை முறித்த  பின் தாமாக ஒட்டி இருப்பதிலிருந்து விடுபடும் என்றும் உயிர் பிழைத்து விடுவர் என்றும் ஆனால் அதன் பின் அந்தக் கல்லை தூய்மைப் படுத்துவது மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டார். 


சுமார் 20 அல்லது 30 நிமிடங்கள் நீரிலும், அதன் பின் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் பாலிலும் ஊற வைத்தால் மட்டுமே அந்தக் கல் உறிஞ்சிய விஷத்தை இழக்கும் அது மிக முக்கியம் என்றும் அதன் பின் மட்டுமே பிறர்க்கு பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடுகிறார் . மேலும் ஏறி இருக்கும் விஷம் அந்த உடலைப் பொறுத்து பல மணி ஏன் சில நாட்கள் அல்லது பல நாட்கள் கூட காத்திருக்க வேண்டும் அந்த விஷம் முற்றிலும் அந்த உடலில் இருந்து வெளியேறும் என்கிறார். அது வரை அந்தக் கல் நோயாளிகளிடமே கடிவாயில் ஒட்டி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


எங்கள் ஊரிலேயே கூட முக்கிய பிரமுகர் ஒருவரின் ஆசிரியை மனைவிக்கு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குள் விஷக் கடியால் உயிர் போனதைப் போன்று எத்தனையோ உயிர்கள் இந்த அறிவியல் காலத்திலும் நடக்கும் போது இது ஒரு அரிய எளிய அற்புத செலவில்லாத மருத்துவ உயிர் காக்கும் செயலாய் இருக்கிறது என்பதால் இந்த ஆங்கில ஆண்டின் பிறப்பில் அவரை காலையில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனமகிழ்வையும் நிறைவையும் தந்தது எனவேதான் இந்தப் பதிவு பகிர்வு எல்லாம். உடனுக்கு உடனே.


கருப்புக் கல்,ப்ளேக் ஸ்டோன், பாம்புக் கல் ஸ்னேக் ஸ்டோன், அல்லது சற்ப்பன்ட் ஸ்டோன் பற்றி கூகுள் பொறியீட்டில் அதிகம் காணப்படவில்லை என்ற போதும் அவர் கூறியபடி பிரான்ஸ் இடம் பெறுகிறது பெல்ஜியத்தில் அதைத் தயாரிக்க ஒரு ஆலை இருப்பதாகக் குறிப்பிட்டார். 

ஆரம்பத்தில் இலாப நோக்கம் அல்லது பொருளாதார நோக்கத்தில் பயன்பாடு இல்லை என்ற போதும் இப்போது வணிகமயமாகிவிட்டதாகவும் அல்லது கிறித்தவம் பரப்ப அதன் பயன்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


நேற்று ரெயில்வேமேன் தொடரில் இந்து மத வெறியர்கள் ஓடும் விரைவு தொடர் வண்டியில்  பிரதமர் இந்திராகாந்தியை துப்பாக்கி சூட்டால் படுகொலை செய்யப் பட்ட காலக் கட்டத்தில் சீக்கியரைத் தேடி எப்படி கொல்ல முயல்கின்றனர் எனச் சொல்லப் பட்டிருந்ததைக் காணும் போது


உயிர்க் காத்து அதன் பயனாக தங்கள் மதம் ஈர்க்க முனைவதாக இருப்பதில் பெரிதான தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மதத்துக்காக உயிர் போக்குவதை விட உயிருக்காக உயிர் காக்க‌ மதத்தை பயன்படுத்துவது தவறு அல்ல என்றே தோன்றுகிறது. சரி விடுங்கள் அந்தப் பிரச்சனை நமக்கு வேண்டாம்.


கண்டேன் சிவ(ம்) லிங்கத்தை இவர் ஒரு ப்ளேக் ஸ்டோன் மேஜிக் காரர் ப்ளேக் மேஜிக்காரர் அல்ல.இவரது வாழ்க்கைத் துணையான கண்ணம்மா சிவலிங்கமும் இவர் செய்யும் உயிர் காக்கும் சேவைக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதுவும் குறிப்பிடத் தக்க வரவேற்கத் தக்க ஒன்று. இவர்கள் வாழ்க பல்லாண்டு என இந்த ஆங்கிலப் புத்தாண்டில் வாழ்த்துகிறேன். 


நாக மணி என்று விக்கிப் பீடியாவில் மற்றும் யூ ட்யூப் தளங்களில் இதைப் பற்றிய சான்றுகள் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு:பாம்பு-கல், கட்டுவிரியன் கல், பாம்பின் முத்து, கருப்பு கல், பாம்பு-கல் அல்லது நாகமணி என்பது விலங்கு எலும்பு அல்லது கல் ஆகும். இது பாம்புக் கடிக்கு நாட்டு மருந்தாக ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப்பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. விக்கிப்பீடியா


நாகமணி சிவலிங்கம் கண்டேன்: கவிஞர் தணிகை