Tuesday, September 26, 2023

சினிமாத் தீ: கவிஞர் தணிகை

  சினிமாத் தீ: கவிஞர் தணிகை



ஞாயிற்றுக் கிழமை "விமானம்" என்ற திரைப் படத்தை தொ(ல்)லைக் காட்சியில் பார்த்தேன். அடியேன் தான் சினிமாக் கட்சிக்காரனாயிற்றே. பார்க்காமல் விடுவேனா? அழுது கொண்டாவது பார்த்து விடுவதுதான் நமது பழக்கமாயிற்றே.


மிகவும் கீழ்த் தட்டு வாழ்க்கை பிரதிபலிப்பு. தெலுங்கு, தமிழ் பதிப்பு. சமுத்திரக் கனி மாற்றுத் திறனாளி மட்டுமல்ல பொதுக் கழிப்பிடத்தை பராமரித்து அதிலிருந்து வரும் சிறு தொகையில் கண்ணியமாக தாயில்லாத தமது மகனுக்கு உயர் வாழ்க்கையை பரிசளிக்க நினைப்பவர்.அவரைச் சுற்றி சில குப்பம் அல்லது சேரி புறம் போன்ற பகுதியில் வசிக்கும் வீடுகூட சரியாக இல்லா ஒண்டு குடிசை  நண்பர்கள் அவர்களின் குடும்பங்கள்.


ஒரே வரியில்: விமானப் பயணம் செய்ய வேண்டுமென்ற சிறுவனது ஆசையை நிறைவேற்ற பார்க்க சகிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவிப்பதாக படம் காட்டுகிறது. கடைசியில் கடவுள் நம்பிக்கையையும் இழந்து படாத பாடு பட்டு எல்லாம் இழந்து விமானத்தில் பறக்கவும் அமர்கிற போது லுகேமியா என்னும் இரத்தப் புற்று நோயால் மகன் இறக்க தந்தையும் இறக்கிறார்.புதுமைப் பித்தன் சிறு கதை படித்தது போன்று முழுசோகமும் இதயம் முழுதும் கவ்வியது. சில நாட்கள் வெளியேற முடியவில்லை. ஏண்டாப்பா பார்த்தோம் என்றிருந்தது.


மிகவும் நடைமுறை யதார்த்தமான படம்...ஆனால் பார்த்து விட்டு அதை செரித்துக் கொள்ள முடியவில்லை.கீழ்த்தட்டு மனிதர்களின் நிலை அப்படியேதான் இருக்கின்றன தற்போதைய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் போதும் சீன அதிபர் வந்த போதும் மதில் சுவர் எழுப்பி வறுமை ஒழிப்பை மறைத்து நிகழ்த்திய  நமது அரசு போல...


அந்தப் படத்தின் அதிர்வலை எனை எங்கெங்கோ கொண்டு சென்றது...அயோத்யா என்ற மனிதத்தின் இறுதிச் சடங்கு பற்றிய படத்தை விட இந்தப் படம் நிறைய வேதனைப் பட வைத்தது.


மறக்க முயன்று வருகையில்: சமந்தா ஒரு  TIK TOK   டிக் டாக் பதிவின் வழியே : தி சவுண்ட் ஆப் ம்யூசிக் THE SOUND OF MUSIC படமே தனக்கு மிகவும் பிடித்த படம் என்ற செய்தி அறிந்து அதை தேடிப் பிடித்துப் பார்த்தேன். எல்லாத் துறைகளிலுமே ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டு நியமிக்கப் பட்டு 5 ஆஸ்கார் மற்றும் உலகளாவிய விருதுகளில் பெரும்பாலும் எல்லாவற்றையும் வாங்கிய 1965 படம்.அதாவது எல்லாவற்றிலும் ஒரு இனிமையை காணும் ஒரு நல் உள்ளம் பெற்ற ஒரு கன்னியாஸ்த்ரி பயிற்சியில் உள்ள இளம் பெண் எப்படி ஒரு குடும்பத்தை இனிமைப் படுத்தி காப்பாற்றுகிறார் கடைசி வரை உடன் இருந்து எனச் சொல்லும் படம். நிறைய எல்லாம் சத்தமெல்லாம் பாடலாகவே இசையாகவே நாயகிக்குத் தோன்றுவது போல நமக்கும் ஒலிக்க...பாட்டம் ஆட்டம் எப்படி சிறு பிள்ளைகளுக்கு அதுவும் தாயில்லாத 7 பிள்ளைகளுக்கு தாயாகிறார் என்பதும் ஆஸ்திரியாவின் கடற்படையின் காப்டனின் துணையாகவும் ஆகிறார் என்பதுவே கதை. 8.2 மில்லியன் டாலரில் எடுக்கப் பட்டு 286.2 MILLION டாலர் அந்தக் காலத்திலேயே வசூல் கண்ட படம். கொஞ்சம் பொறுமையுடன் பார்ப்பார்க்கு பொக்கிஷம் அல்லது புதையல்.


                                                         
 ALL IS WELL

இந்தப் படத்தையும் 3 இடியட்S  என்ற நமது இந்தியப் படத்தையும் பார்த்து மகிழ்ந்தேன். உண்மையிலேயே இயற்கை எப்படி மனிதர்கள் வாழ்வில் விளையாடும் என்பதை நகைச்சுவையுடன் மிகச் சிறப்பாக அறிவியலை விரும்பும் அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய பொறியியல் மாணவர்கள் பற்றிய படம். இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி எனதருமை நபர்கள் சிலர் சொல்லி இருந்த போதும் அதை அப்போதெல்லாம் பார்க்க இயலவில்லை இப்போது பார்த்தேன். நல்ல தயாரிப்பு அருமையான படம்


நகைச் சுவை மட்டுமல்ல எல்லா உணர்வுகளுக்கும் இந்தப் படம் அரிய விருந்து. சில நேரங்களில் பின் புற குந்து புறத்தைக் காட்டி நிர்வாணப் படுத்துவதையும்,  நண்பர்கள் மது குடித்துக் கூத்தடிப்பதையும் தவிர்த்தால் மிகவும் இரசிக்கத் தக்க படம். நண்பன் என்ற தமிழ் படம் இதன் மீளுருவாக்கம் தான். தமிழ் படத்தை நினைவூட்டும் போது அந்த பேராசிரியர் பாத்திரம் சத்ய ராஜ், மற்றும் அந்த சத்யன் பாத்திரம் நன்றாக இருந்த நினைவு. மேலும் கரீனா கபூர் சற்று முதிர்ச்சியான பாத்திரமாகத் தெரிந்தார் இந்த அமீர்கான், மாதவன் மற்றும் சர்மான் ஜோஷி கூட்டணியுடன் போமன் இரானி, ஓமி வைதியா என்ற நடிகர்கள்  சேத்தன் பகத்தின் பைவ் பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலை உயிரூட்டம் செய்திருந்தனர். நல்ல பொழுது போக்குடன் அறிவூட்டம் செறிந்த படம்.



இந்த இரண்டு படத்தையும் பார்த்துத் தான் விமானம் என்ற படச் சோகத்தை மறந்தேன். இந்த இரண்டும் சுகம், அது சோகம்.


இந்தப் பதிவை: குவெய்ட் நாட்டில் உள்ள எனதருமை சீடர் பிரவீன்குமார் தங்கவேல் அவர்களுக்காக அர்ப்பணம் செய்துள்ளேன்.

ALL IS WELL

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

கறை படிந்த நிலமல்ல இது:கவிஞர் தணிகை

 எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை



1. கறை படிந்த நிலமல்ல இது

   தியாகக் குருதி நிறைந்தது


2. நிரந்தரமானது:

   தீர்க்க முடியாத பிரச்சினை என்று(ம்)

   மாற்றமின்றி என்றும் இருந்து மாறாதது


   கொசுக்கள்


3. ஏழ்மையில் புகழ்தல் இல்லை புகல்தலே


4. புராணங்களை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன்


5. சமூக விஞ்ஞானி:

   பெரியாருக்கு  இவ்வளவு அறிவு அந்த ஒரு(வரின்) மூளையில்

   எப்படி  வளர்ந்தது,இருந்தது என்று எண்ணி வியக்கிறேன்


6. பசியோடிருக்கும் ஒவ்வொரு உயிரின் பசியையும் ஆற்ற முயலாத‌

   உயிர்கள் செய்வது(ம்) பாவமே


7. இராமலிங்கரின் ஜீவ காருண்ய பசி தீர்த்தலையும்

   காந்தியின் இராம ராச்சியத்தையும்

   மார்க்ஸ் லெனின் தத்துவத்தையும் என்னால் ஒன்றிப் பார்க்க முடிகிறது


8. தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாததற்கும்

   வேரூன்ற‌ வழியில்லாமல் போனதற்கும் காரணம் பற்றி ஆய்வு செய்தால்

    அது பெரியார் பெற்ற வெற்றிதான் என்ற முடிவு வருகிறது.


9. பிரபஞ்சம்,உயிர்கள் நலம் இவற்றிற்கான பாலம் அறிஞர் மொழிகள்


10. நல்ல தலைமை+ தவறான இயக்கம்

    தவறான தலைமை + நல்ல இயக்கம்

    இரண்டுமே கேடுதான்.




Friday, September 15, 2023

GOD OF MUSIC: A.R.RAHMAN: கவிஞர் தணிகை

 காட் ஆப் மியூசிக்: ஏ .ஆர்.ரஹ்மான்: கவிஞர் தணிகை



சென்னையில் நடந்த மறக்க முடியுமா? மறக்குமா நெஞ்சம்: நிகழ்வின் குளறுபடிகளுக்கு எந்த வகையிலும் காரணமில்லாத போதும் பொறுப்பேற்றுக் கொண்டு கட்டணத்தை திருப்பி அளிக்க ஆரம்பித்த எல்லாப் புகழும் கடவுளுக்கே என்று சற்றும் தலைக்கனம் இல்லாத ஏ.ஆர் ரஹ்மானை எப்படிப் பாராட்டினாலும் தகும்.யாரால் நிகழ்ந்திருந்தாலும் நாம் தாம் பொறுப்பு என தமது மகனிடமும் அறிவுறுத்திய பெருந்தன்மை பற்றி செய்திகள் பகிர்ந்திருந்தன.


நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சுமார் 20,000 பேர் வர அனுமதிச் சீட்டு கொடுக்கப் பட்டுள்ளது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்ததே முதற்காரணமாக கருதப்படுகிறது. ஆனால் 41 ஆயிரம் பேர் அமர இட வசதி உள்ள இடத்தில் 50000 பேருக்கும் மேல் திரண்டதே இரண்டாம் காரணம்.


மேலும் ஒரே இடத்தில் பல வகையான கட்டணம் கொடுத்து அனுமதி பெற்றவர்களும் திரண்டதும், அவரவர் பிரிவிற்கு சென்று அமராதததும் அதனால் சேர்ந்த கூட்டமும் காரணமாகிட‌


போதுமான அளவில்லா காவல் துறையினரின் முன்னேற்பாடு வரையறைக்குள் இருந்ததால் கட்டுமீறிய கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர இயலாமல் போனதைப் பயன் படுத்திக் கொண்ட புல்லுருவிகள் பெண்களை உரசி, நெருடி நீங்காத காயத்தை வடுவை ஏற்படுத்திய வண்ணம் சிறுமையுடன் நடந்து கொண்டதை அனைவரும் எல்லா  ஊடகங்களும் வெளிப்படுத்தி இருக்கின்றன.


அது பற்றிய பதிவுகளும், பகிரதல்களும் வேதனைக்குரியதாய், வருத்தம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதற்கு ஆண் வர்க்கத்த்டை முழுவதுமே குற்றம் சாட்டி விட முடியாது...


மிருகங்கள் எங்கும் இரை தேட வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதை என்றுமே பெண்கள் மறந்து விடக்கூடாது. நடந்த செயல் வெட்கம் கெட்ட வார்த்தையில் சொல்லவொண்ணா செயல்களாகி சென்னையின் பெயரையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரையும் களங்கப் படுத்தி இருக்கின்றன.அவர் சென்னையில் பிறந்ததால் பெருமைப்படும் உலகே... வணக்கம் சென்னை என்றே பாடுமுன் பறை சாற்றும் ஒரு உயர்ந்த நபரை சென்னையின் நிகழ்வு காயப்படுத்தி விட ஈனர்கள் எங்கும் இருக்கிறார்கள் அதற்கு சென்னை மட்டும் விதி விலக்கா என்ன?பிரேசிலில் ஒரு பத்திரிகைப் பெண் செய்தியாளர் நேரடி ஒளிபரப்பின் போதே தொடப் பட்டு பின் புறம் தட்டப்பட்டு இருந்ததாகவும், ஐக்கிய அமெரிக்க நகர் ஒன்றில் காவலர் ஒருவர் தமது நாலு சக்கர வாகனம் மூலம் ஒரு பெண்ணை ஏற்றிக் கொன்று விட்டு சிரித்தபடியே இருபதாயிரம் டாலர் செக் எழுதிக் கொடுத்தால் சரியாகி விடும் என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டியபடி செல்வதையும் காணொளி மூலம் பி.பி.சி செய்தி கொடுத்திருந்தது.


நல்ல வேளை ஒரு முறை பாப் கிங்: மைக்கேல் ஜாக்சன் இந்தியா வருவதாக இருந்தது இரத்தானது கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஏன் எனில் அப்போது இப்படி எல்லாம் நடந்திருந்தால்...சொல்லவே தேவையில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சத்தமில்லா இரு புரட்சி: கவிஞர் தணிகை

 தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்  சத்தமில்லா இரு புரட்சி: கவிஞர் தணிகை




தமிழக முதல்வர் ஸ்டாலின்: கல்லூரி மேல் படிப்பு படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி,நகரப் பேருந்துகளில் அல்லது உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணம், இப்போது அறிஞர் அண்ணா பிறந்த நாளில் சுமார் ஒரு கோடியே ஆறு இலட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை... 

சத்தமில்லாமல் எந்தவித அரசு அலுவலகங்களிலும் ஏறி இறங்கி இம்சைப் படாமல் இலஞ்ச ஊழல் இல்லாமல் இடையுறாமல் வங்கிக் கணக்கில் நேற்றிலிருந்தே வரவு வைக்கப் பட்டிருக்கிறது பாராட்டத் தக்கது.

ஒரு சமூக செயல்பாட்டாளாராகவும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராகவும் இருப்பதால் அவ்வப்போது பொது மக்களை பேருந்துகளில் சந்தித்து பெண்களிடம் பேசும் போது இந்த நிதி உதவி மட்டும் இன்னும் கிடைக்காமல் உள்ளது அதையும் கொடுத்து விட்டால் பரவாயில்லை என்றவாறு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

அதற்கேற்ப வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டு முதல்வர் சகோதரிகளுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி இது உதவித் தொகை அல்ல உரிமைத் தொகை என்றும் உங்கள் உழைப்புக்கானது என்றும் இந்த திட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர் என்றும் இனி மாதம் தோறும் 1000 ரூ வரவு வைக்கப் பட்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பேற்படுத்திக் கொண்டுள்ளார் ஏழை எளிய மக்களுடன். முக்கியமாக தாய்மார்களுடன் பெண்களுடன் இது தேர்தல் காலத்தில் அதிர்வலைகளை கிளப்பி கிளர்ச்சியூட்டும். வாழ்த்துகள் நன்றி முதல்வருக்கு  பெண்கள் சார்பாக.

 ஏன் எனில் அந்த தாய்மார்கள்தான் முதலில் நின்று வாக்களிப்பவர்கள் நடுத்தட்டு மற்றும் மேல் தட்டு மனிதர்களை விட... சரியான நாடித் துடிப்பு. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் தமிழகத்தின் பெண்கள் வெளிக்கிளம்பி விட்டனர். பேருந்துகளில் 30 பயணிகள் என்றால் அதில் 20க்கும் மேற்பட்டோர் பெண்களாய் இருப்பதை கவனித்திருக்கிறேன். பெண்கள் வாழ்வில் இது ஒரு சத்தமிலாத புரட்சிதான்.


 இந்த திட்டத்தை கமல் முன் மொழிந்தார் தேர்தல் காலத்தில் தி.மு.க வழி மொழிந்து இப்போது அமல் படுத்தி உள்ளது தமது தேர்தல் கால உறுதிமொழியை...கர்நாடகாவில் ஈராயிரம் என்றும், வடக்கே ம.பியா சரியாக நினைவில் இல்லை அங்கும் கூட இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஊடகங்களில் படித்த நினைவு. இதே போல அனைத்து அரசுத் திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் முக்கியமாக பட்டா கொடுப்பது போன்றவற்றில் சரியான தகிடுதத்தங்கள்  மோசடிகள் நடைபெற்று வருகின்றன.


சென்னையில் தியாகராய நகரில் ஆரம்பிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம், காமராசரால் மாநிலமெங்கும் பரவலாக விரிவு படுத்தப் பட்டு, எம்.ஜி.ஆரால் சத்துணவாக்கப் பட்டு,இப்போது ஸ்டாலின் அவர்களால்  தமிழகத்தின் அனைத்து அரசுத் துவக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டியுடன் இளம் சிறார்கள் பள்ளிக்கு வரவேற்கப் படுகிறார்கள்.

நல்லதை நாடு வரவேறும் நாமும் வரவேற்போம்

அல்லவை தேய அறம் பெருகட்டும். வாழ்க!

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, September 10, 2023

உயிர் பிரிதல் (அ) விதை விந்தை சிந்தி: கவிஞர் தணிகை

 உயிர் பிரிதல் (அ) விதை விந்தை சிந்தி: கவிஞர் தணிகை



ஒவ்வொரு காலத்தின் அணுத் துகளிலும் (உண்மையிலேயே காலம் என்ற ஒன்று இருக்கிறதா? எல்லாம் கணக்கீட்டுக்காகத்தான்) பிறப்புகள் இறப்புகள்.


கழிவகத்தில் ஒரு சிறு தவளையைப் பார்த்தேன் நேற்று இரவு அதற்கு முயற்சி இருந்தது வெளியேறிச் செல்ல வேண்டி... எனவே கதவைத் திறந்து வழி செய்தேன். அது வெளியேறிற்று...


ஆனால் இரவு முடிந்து அதிகாலையில் அங்கு செல்ல நேர்கையில் அது அந்த மலத் தொட்டியுள் கிடந்தது. ஆராய்ந்தேன் இறந்து இருந்தது.


சின்னத் திரை நடிகர் எதிர்நீச்சல் மாரிமுத்து ஆதி குணசேகரனாகவே வாழ்ந்து மறைந்த செய்தியை அவர் செய்த அலப்பறையை மறக்க முடியாமல் தமிழ் உலகம் அவரது அதிர்வலைகளை இன்னும் கொண்டிருக்கும் நீர்க்குமிழி காலச் சூழலில்...


நாம் விடும் மூச்சுக் காற்றினால் கூட அணுத்திரள் அழிகிறது என்று நுட்பமாகச் சொல்கிறார்கள்.

கடைசி மூச்சுவிட முடியாமல் காற்றில் எங்கும் நிரம்பியுள்ள உயிர் வளியில் பிராண வாயுவை எடுத்துக் கொள்ள முடியாமல் மரணத்தின் கடைசிப் பக்கங்கள் எழுதப் படுகின்றன.


பிறப்புக்கு ஒரு வாயில்.

இறப்புக்கு எண்ணிறந்தன பிரபஞ்ச வெளியின் மாயம் போல...


நாம் ஏற்கெனவே மரணத்தின் விசித்திரத் தொடுகை பற்றி பதிகையில் ஹுமாயூன் மரணம், ட்ராக்டர் இயக்கத்தால் ஏற்பட்ட சோகங்கள்,கழுகின் காலிடுக்கில் இருந்து தப்பித்து விழுந்த நாகத்தால் ரெயில்வே கேட் அருகே ரயில் செல்ல வேண்டி காத்திருந்த கணவன் மனைவி இருசக்கர அமர்வில்  மனைவி கண்ணருகே கணவன் தலையில் நாகம் தீண்டிய மரணம்... இப்படி பல பகிர்தல்கள் இந்த மறுபடியும் பூக்கும் இதழைத் தொடர்ந்து படிப்பார்க்கு பகிர்ந்த நினைவாட...


உயிர் பிரிதலை ஒத்திப் போடுவதற்குத் தான் வாழ்க்கையும் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்...


இல்லை இல்லை அதெல்லாம் இல்லை இரவு 7.50 வரை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்த எனது மகன் இருக்கிறான் 7.55க்கு அவன் இல்லை...காரணம், பருவத் தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சியின்மையைச் சுட்டி இப்படி எல்லாம் இருந்தால் எப்படி ? பிழைக்க முடியும் என தந்தை செல்வம் மென்மையாகச் சொல்லியதே என்றார் என்னிடம்...


மேலும் இருவர் சென்று சோதிடம் பார்த்தோம் அவன் பிறந்த போது...கோனார் மிகச் சரியான சோதிடர். பெண் பிறக்க வேண்டிய நேரத்தில் ஆண்... என இழுக்க... எதையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு அவர் மழுப்பி விட...


அவன் இறந்த பிறகு அன்று என்னுடன் வந்த நண்பர் மறு நாளே தனியாகச் சென்று கேட்டதற்கு அந்தக் குழந்தைக்கு ஆயுள் அவ்வளவுதான் என்றதற்கு...ஏன் என்னிடம் சொல்லவில்லை அது பற்றி என்றதற்கு உனது மகன் நன்றாக இருக்கும் போது அதை எப்படி வந்து உன்னிடம் சொல்ல முடியும் ? என்று நண்பர் சொல்லி விட்டதாக , நடைப்பயிற்சி செய்து மட்டும் என்ன ஆகப் போகிறது என்ற முடிவில் இருப்பதாக சொல்லியது என்னுள் வெவ்வேறு அதிர்வலைகளை எழுப்பியது.


ஈரோடு புத்தகக் கலைவிழாவில் சூரியா, கார்த்தியின் தந்தை சிவகுமார் பகிர்ந்து கொண்டதை நான் நேரிடையாகக் கேட்டேன் அவரது தந்தை ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல சோதிடக் கணிப்பாளர் என்று இந்த நாளில் நான் இருக்க மாட்டேன் என ஏற்கெனவே குறித்து வைத்திருந்தாராம். அதன் படியே சிவகுமார் குழந்தையாக இருந்த போதே அவர் மறைந்ததாகவும் குறிப்பிட்டார்.


சொல்லத் தோன்றியது


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


  

Saturday, September 9, 2023

அரசியலும் சினிமாவும் சுரண்டலின் இரு வேறு முகங்கள்: கவிஞர் தணிகை

 அரசியலும் சினிமாவும் சுரண்டலின் இரு வேறு முகங்கள்: கவிஞர் தணிகை



இரு நிகழ்வுகளின் காட்சிகளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.


1. ஹரீஸ் சால்வே இந்தியாவின் மாபெரும் வழக்கறிஞர் வயது 68. மூன்றாம் மணம் செய்கிறார் இலண்டனில் விருந்து. கலந்து கொண்ட‌வர்கள்: இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி லலித் மோடி இந்தியன் ஐபிஎல் ஊழல்வாதி, மற்றும் முகேஷ் அம்பானி போன்ற இந்தியாவின் மாபெரும் மனிதர்களாகக் கருதப்படுவார் யாவரும் இந்தியத் தலைமைப் பதவியில் உள்ளாரின் நண்பர்கள் என்றும் சொல்லலாம்.இந்த செய்தியை ஊடகங்கள் உற்சாகமாக வெளியிட்டிருந்தன.


பெரியார், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் போன்ற வயது முதிர்ந்தார் கூட இளமங்கைகளை மணந்த வரலாறுகள் தமிழகத்திற்கும் உண்டு. குற்றவாளிகளாகக் கருதப்படுவாரை கடவுளாக போற்ற வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் திரைப்படவழி வந்த ஆட்சி, அதிகார அரசியல் வரலாறுகளும் உண்டு. எம்.ஜி.ஆரும். வயது முதிர்ந்தாலும் தமது கதாநாயகிகளை இளம் கவர்ச்சி மங்கைகளாகவே வைத்திருந்தார் என்பவை இங்கு மிகையான செய்திகள். ஆனாலும் இவர்களே நமை ஆளப் பிறந்தார்கள்,நமை வழிநடத்தும் ஆட்சி புரிந்தவர்கள்...(சகாயமும், நல்ல கண்ணுவும் இன்னும் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது)


2. அடுத்து தமிழகத்தின் சினிமா ஒரு குடும்பத்தின் கையில் என்பதை மறுக்க முடியாத செய்தியாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சினிமா பொங்கி வழிகிற தருணம், இந்த வருவாய், நிதி, இலாபத்தை தனிமைப் படுத்துவதை விட்டு பொதுமைப் படுத்தினால் அதாவது ஆண்டுக்கு எடுக்கப் படும் படங்களின் செலவு இலாபக் கணக்கை சரியாக பயன்படுத்தினால் டாஸ்மார்க் வருவாயை சமன் செய்தி மது விலக்கை அமல்படுதுமளவு...

ஆனால் கார்கள் பல உள்ள ரஜினி போன்றோர்க்கு(+ நெல்சன், அனிருத் எல்லாம் சேர்த்துதான்) கோடிக்கணக்கில் செலவு செய்து கார்களும் சில நூறு கோடிகளும்  இலாப பங்கு பட்டுவடா நடந்ததாக அவர்களின் ஊடகங்களே காணொளிக் காட்சிகளாக மகிழ்கின்றன‌


ஒரு குக்கிராமத்தை தத்து எடுத்து அதில் எல்லா வசதி  வாய்ப்புகளையும் அந்த செலவில் செய்தாலும் பேர் விளங்கும், ஏன் அந்த சினிமாவில் பாடுபட்ட குடும்பத்தார் அனைவர்க்கும் உணவு, உடை, உறையுள் போன்றவைக்கு நிரந்தர ஏற்பாடு செய்தாலும் மக்க்கள் ஆதரவு பெருக தலைமுறையெலாம் நினைவுடன் புகழும் பாராட்டும்... கீழ்த்தட்டில் உள்ள சினிமாக் கலைஞர்கள் வறுமையில் இறந்து கொண்டிருக்கும் செய்திகளும் இருக்கின்றன.


பெற்றார்க்கும், உற்றார்க்கும், ஊர் உறவுக்கும் எதையும் செய்தார்களா செய்வார்களா என்றும் தெரியாதார் பணம் இதில் ஊற்றுக் கண்ணாய் மாறி இலட்சங்களாய் கோடிகளாய் ஆகி இருக்கிறது ஆயிரங்களில், நூறுகளில் கீழ் இருந்து மேல் சென்று சினிமாக் கட்டணங்களாக...


உண்மைதான் சினிமாவும், அரசியலும் மனிதர்களின் இரு கண்கள்...இரு கண்களும் ஒரே காட்சியைத் தான் காண்கின்றன....

சினிமாவும் அரசியலும் சுரண்டலின் உச்சங்கள்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: இந்தியாவின் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் அறிக்கைகள் மத்திய அரசு ஆட்சியில் இருப்பார் மூலம் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக ஆதாரப்பூர்வ செய்திகளை ஊடகங்கள் தெரிவித்துள்ளன அதில் ஒன்று: சுமார் ஒன்னரை கோடி செலவு செய்ய வேண்டிய சாலைக்கு நூற்றுக் கணக்கான அதாவது இரு நூறு கோடிக்கும் மேல் செலவு செய்ததாக, சுங்கவரி ஏய்ப்பில் அரசியல் கலந்துள்ளதாக,இப்படி சொல்ல நிறைய...இதை எல்லாம் தேர்தல் எதிரொலிக்குமா எதிரொளிக்குமா இவை எல்லாம் கடைத்தட்டு மனிதர்க்கு சென்று சேருமா? என விடியும் பொழுதில் விடியுமா என்று எனக்கு உறங்கவிடா விழிப்பு.

Thursday, September 7, 2023

மாபெரும் விவாதம்: கவிஞர் தணிகை

மாபெரும் விவாதம்: கவிஞர் தணிகை

 




ஆதி சங்கரரைப் பற்றி படித்த நினைவுக் கீற்று ஒன்று நிழலாடுகிறது. ஏனோ தெரியவில்லை

.கி.பி.எட்டாம் நூற்றாண்டில் காலடியில் பிறந்த அருந்தவப் புதல்வர்,32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த தவ சீலர், கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிகளை தமக்கு பசியாற்றிய வீட்டின் மேல் பொழிந்தவர் என்னும் பேறு பெற்றவர்.இளந்துறவி,இப்படி பல... அதுவும் இதுவும் ஒன்று என்று அத்வைதம் செய்தவர்.

காசியில் விவாதித்து வெல்வாரே பெரும் அறிஞர் என்று போற்றப் பட்ட காலத்தில் காசிக்கு சென்று குமரிலபட்டர் என்பவரை வாதுக்கு அழைக்க அவரோ நான் குருத்துரோகம் செய்தவனாக இருக்கிறேன். நீங்கள் மகிஷ்மதி சென்று அங்குள்ள விஸ்வதாசரோடு மோதுங்கள் என்கிறார்.

அங்கு அவரது விஸ்வதாசரின் மனைவியே அபய பாரதி என்னும் சரஸ்வதி அருள் பெற்றவர் அல்லது சரஸ்வதி அவதாரமே இவர்களது விவாத அரங்குக்கும் நடுவராக இருக்கிறார்.17 நாட்கள் கடும் விவாதம்,கழுத்தில் உள்ள மாலை எவருடையது வாடுகிறதோ அவர் தோற்றவராவார்.

சங்கரர் வெல்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதன் பின் கூடு விட்டு பாய்தல் தாம்பத்யம் கற்ற பின் வருக எனல், சிருங்கேரியில் ஜல் ஜல் எனும் காற்சலங்கை ஒலி நிற்றல் இவர் திரும்பி பார்த்ததால், இன்னும் சிருங்கேரியில் ஓடும் நதி நீர் மீனை எவரும் பிடிப்பதில்லை என்பதும், பிரசவ வேதனையில் தவிக்கும் தவளைக்கு நாகம் படம் எடுத்து நிழல் தந்த புண்ணிய பூமி என்பதெல்லாம் கொசுறுச் செய்திகள்..

நாவலோ நாவல் என்று வெல்வார் சொல்வதாக மணிபல்லவ இளங்குமரன்...தீபம் நா.பார்த்தசாரதி சொல்வார்,

வைணவ ஆழ்வார்க்கடியான் விவாதம் முடிந்த கையோடு தடி கொண்டு சைவர்களைத் தாக்குவதாக பொன்னியின் செல்வனின் கல்கி புகல்வார்...

அறிவார்ந்த சபையில் விவாதித்தால் அறிவு வளரும், ஞானம் பெருகும்

மூடர்களோடு விவாதித்தால் பகை வளரும் ...இது பைபிள்

நாம் வெகுகாலமாக எழுதுவதையும் பேசுவதையும் வெகுவாக குறைத்து விட்டோம் காரணங்கள் பல.

 

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.