Sunday, August 28, 2022

நொய்டாவில் தரைமட்டம் ஆகவுள்ள இரட்டை கோபுரங்கள் - கவிஞர் தணிகை

 இன்று இந்தியாவில் நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் படுகின்றன. 

நன்றி: பி பி சி தமிழ் நாளிதழ்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

நொய்டாவில் தரைமட்டம் ஆகவுள்ள இரட்டை கோபுரங்கள் - எப்படி நடக்கும்?

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி செய்தியாளர்
இரட்டை கோபுரங்கள், நொய்டா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விதிகளை மீறியுள்ளதாகக் கூறி இரண்டு கட்டடங்களையும் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் 12 விநாடிகளில் இடிக்கப்படும்.

ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. பிறகு அவை கட்டட விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப்போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும்.

ஊடகங்களால் 'இரட்டை கோபுரங்கள்' என்று இந்த இரண்டு கட்டடங்களும் அழைக்கப்படுகின்றன. அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட மாடிகள் உள்ளன.

ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகள் இந்தக் கட்டடங்களைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும். கட்டடம் அதற்குள்ளாகவே தகர்ந்து விழும்படியாக இதைச் செய்வதுதான் திட்டம், அது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். இதைச் சாத்தியப்படுத்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பொறியாளர் இதை "பொறியியலின் அழகிய சாதனை" என்றழைத்தார்.இத்தகைய கட்டட இடிப்பு வேலைகள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. உலகம் முழுக்கவே இத்தகைய நடவடிக்கை அடர்த்தியான கட்டுமானங்கள் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படுவது அரிதாகவே நடக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமையன்று இதைச் செய்வது இந்த வேலையை இன்னும் சவாலாக்குகிறது.

இரட்டை கோபுரங்களின் இருபுறமும் சுமார் 7,000 பேர் வசிக்கின்றனர். கட்டடத்தில் இருந்து 30 அடி தொலைவிலேயே 12 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றும் உள்ளது

சிவப்புக் கோடு

இந்தக் கட்டடங்களில் உள்ள அனைத்து மனிதர்களும் வளர்ப்பு உயிரினங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்கிருந்து வெளியேற வேண்டும். வெடிகுண்டுகளை வைத்து இரு கட்டடங்களும் அவற்றுக்குள்ளாகவே இடிந்து விழும்படி வெடிக்க வைத்து ஐந்து மணிநேரம் கழித்து தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். தெருக்களில் சுற்றித் திரியும் உயிரினங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விலங்கு முகாம்களில் சேர்க்கப்படும். அப்பகுதியிலும் அருகிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த வெடிப்பு, 984 அடி உயரம் வரையிலான தூசு மேகத்தை உருவாக்கக்கூடும். ஆகவே, விமான நிலையங்கள் மற்றும் விமானப்படைக்கு, விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல. இந்தக் கட்டடங்கள் இடிக்கப்படவுள்ள இடத்திலிருந்து சுமார் 50 அடி தொலைவில் ஒரு நிலத்தடி குழாய் உள்ளது. இந்தக் குழாய் டெல்லிக்கு சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்கிறது.

கட்டடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதால் ஏற்படும் அதிர்வுகள் தங்கள் கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் என்று அருகிலுள்ள கட்டடங்களில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் இதுகுறித்துக் கவலைப்பட ஒன்றுமில்லை எனக் கூறுகின்றனர்.

நொய்டாவில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிக்க உதவும் பிரிட்டிஷ் பொறியாளர்கள், இந்தக் குண்டுவெடிப்பு அதிர்வுகளைத் தூண்டும் என்று கணக்கிட்டுள்ளன. இருப்பினும் அந்த அதிர்வு, நிலநடுக்கத்தை அளக்கக்கூடிய ரிக்டரில் மதிப்பிடப்படும் நான்கு என்ற அளவில் பத்தில் ஒரு பங்கு தான் இருக்கும் என்கின்றனர். மேலும், "இரட்டை கோபுரங்களின்" அடித்தளங்கள் அதிர்வுகளை உறிஞ்சுவதற்கு ஏற்ப தளர்ந்த கட்டுமானக் கழிவுகளால் அடைக்கப்படும்.

"இது முற்றிலும் பாதுகாப்பானது" என்கிறார் மூத்த பொறியாளர் மயூர் மேத்தா.

ஞாயிற்றுக்கிழமை, இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தப்போகும் மூன்று பேர், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஆறு பேர், குண்டுவெடிப்பு நிகழப்போகும் "விலக்கு மண்டலம்" என்றழைக்கப்படும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர்.

இரட்டை கோபுரங்களுக்கு அருகில் 9 மீட்டர் தொலைவில் இருக்கும் குடியிருப்பு கட்டடம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரட்டை கோபுரங்களுக்கு அருகில் 9 மீட்டர் தொலைவில் இருக்கும் குடியிருப்பு கட்டடம்

வெடிபொருட்களின் கவலையைப் பயன்படுத்தி கட்டடத்தைத் தகர்ப்பதற்கான வெடிப்பு தூண்டப்படும். மில்லிசெகண்ட்ஸ் கால அளவில் டெட்டனேட்டர்கள் மூலம் வெடிப்பு தூண்டப்படும். அதற்கான சிக்னல் பிளாஸ்டிக் குழாய்களின் வழியாக ஷாக் வேவ்களின் மூலம் கொண்டு செல்லப்படும்.

"இதுவோர் எளிதான வெடிப்பு நிகழ்வாக இருக்கப் போவதில்லை," என்கிறார், டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குதாரர் உத்கர்ஷ் மேத்தா. அவர், "நாங்கள் உண்மையில் 30 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 19 மாடிகளை வெடிக்கச் செய்வோம். மீதமுள்ளவை தாமாகவே தகர்ந்துவிடும். நாங்கள் அதை 'நீர்வீழ்ச்சி வெடிப்பு' என்று அழைக்கிறோம். இதற்கு புவியீர்ப்பும் உதவுகிறது," என்றார்.

பல வாரங்களாக, "பிளாஸ்டர்கள்(வெடிகுண்டை வெடிக்க வைப்பவர்கள்)" இரண்டு கட்டடங்களின் 30 மாடிகளில், வெடி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வெடிபொருட்களுக்கு இடையே, 20,000-க்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பொருத்துவதையும் வெடிபொருட்களை வெவ்வேறு மாடிகளில் பொருத்துவதையும் அவர்கள் உறுதி செய்தனர். கட்டடங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எஸ்கலேட்டர்களின் செயல்பாடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் நடக்கும் ஒரு மிகச்சிறிய தவறு கூட இந்த வெடிப்பு நிகழ்வை முழுமையாக நடக்க விடாமல் போகலாம்.

இருப்பினும், 11 ஆண்டுகளாகச் செயல்படும் மேத்தாவின் நிறுவனத்திற்கு பொறியியல்ரீதியாக இது மிகவும் சவாலான வேலையாக இருக்காது. உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியை இந்தியா முடுக்கிவிட்டுள்ள நிலையில், பழைய விமான நிலைய முனையங்கள், கிரிக்கெட் மைதானங்கள், பாலங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மையான எஃகு ஆலைகளில் உள்ள பழைய தொழில்துறை புகைப்போக்கிகள் உட்பட 18-20 கட்டமைப்புகளைத் தகர்த்துள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளாக பிகாரில் கங்கை நதியின் மீதிருந்த பழைய பாலத்தை இடித்தது, இவற்றில் மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று. அந்த இடிபாட்டின் குப்பைகள் எதுவும் பாலத்திற்குக் கீழிருந்த நதியில் விழக்கூடாது என்பதை பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது.

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படவுள்ள நாளின் அதிகாலையிலேயே, போலீசார் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவார்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படவுள்ள நாளின் அதிகாலையிலேயே, போலீசார் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவார்கள்

ஞாயிற்றுக்கிழமை "இரட்டைக் கோபுரங்கள்" கீழே விழுந்த பிறகு, 30,000 டன் கட்டுமான குப்பைகள் குவியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடு நிகழும்போது, அந்தக் குப்பைகள் சிதறி மக்களையோ அல்லது கட்டடங்களையோ சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக, இடிக்கப்படவுள்ள இரு கட்டடங்களையும் சுற்றி வலையமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 1,200 லாரிகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது அங்கிருந்து குப்பைகளை மறுசுழற்சி ஆலைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். "தூசு விரைவில் படிந்துவிடும். ஆனால், குப்பைகளை அகற்ற சற்று நேரம் எடுக்கும்," என்கிறார் மேத்தா.

இந்தியாவில் வானளாவிய கட்டடங்களை இடிப்பது எளிதானதல்ல. 2020ஆம் ஆண்டு, கேரளாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமார் 2,000 பேர் வசித்த இரண்டு ஏரிக்கரை சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை, அதிகாரிகள் தகர்த்தார்கள். ஆனால், அதைவிட நொய்டாவில் மேற்கொள்ளப்படும் கட்டட இடிப்புகளின் அளவும் அவை உருவாக்கியுள்ள மனப் பதற்றங்களும் முன்னெப்போதும் காணாதவை.

அதற்கு அருகிலுள்ள கட்டடங்களில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே தங்கள் வீடுகளை விட்டு நகரத்திலுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்குவதற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

"மக்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கிறார்கள். தங்களுடைய குளிரூட்டல் பெட்டிகளை மூடி வைக்கிறார்கள். சுவர்களில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கழற்றுகிறார்கள். நாங்கள் அந்தக் கட்டடங்களைப் பூட்டுகிறோம். இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை," என்று இரட்டை கோபுரங்களுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தின் அன்றாட விவகாரங்களுக்கான நிர்வாக சங்கத்தின் தலைவர் எஸ்.என்.பைரோலியா கூறுகிறார்.

வானளாவ உயர்ந்துள்ள கட்டடங்கள் ஒருகாலத்தில், வருங்கால வாங்குவோருக்கான கலப்படமற்ற ஆடம்பர வாழ்வுக்கான உறுதியை வழங்கின. தனியார் டெவலப்பரான சூப்பர்டெக், சியான் 37 மாடிகள் உயரமான கட்டடமாக, ஒரு 'சின்னமாக' இருக்கும் என்றும் ஏபெக்ஸ் பால்கனியில் நின்று பார்த்தால் "பளபளக்கும் நகரம்" கீழே தெரியும் என்றும் உறுதியளித்தது.

 ஞாயிற்றுக்கிழமை,இன்று இந்தியாவில் நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் படுகின்றன.  அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இடிபாட்டின் தூசுக்குள் மூடப்படும்.

Saturday, August 27, 2022

மழை நீரைப் பருகினால் நோய் நொடி இன்றி வாழலாம்: கவிஞர் தணிகை

 



மழை நீரைப் பருகினால் நோய் நொடி இன்றி வாழலாம்: கவிஞர் தணிகை


இன்றைய புதிய தலைமுறை அறிக்கை

6 மாதம் வரை சேமித்தாலும் எந்தவிதப் புழு பூச்சியோ நாற்றமோ  இல்லை . சேமித்து வைத்துள்ள மழை நீரை வடிகட்டி

 பருகி வருவதாகவும் சமைக்க பயன்படுத்தி வருவதாகவும் 40 ஆண்டுகளாக‌ எந்தவித நோய் நொடிகளும் இல்லை என்றும் நல்ல ஆரோக்யத்துடன் இருந்து வரும் அந்த 70 வயதுக்கும் மேற்பட்ட தம்பதிகளைப் பார்த்து (அந்த திருவண்ணாமலை அருகே உள்ள கீழீச்ச மங்கள கோதையன் வயது 76 இராணியம்மாள் வயது 72. இவர்களைப் பார்த்து )மற்றவர்களும் அந்த நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதாகவும் ஒரு நல்ல செய்தி. எனவே பகிர்ந்துள்ளேன்.


மழை வந்து 10 நிமிடம் ஆன பின் தூசி துப்பு நீங்கிய பின் மழை நீரை பிடித்து வைத்துக் கொள்வதாகவும் அதையே பருகி வருவதாகவும் மேலும் அதிலேயே சமையல் செய்வதாகவும் எந்த வித ஆழ்துளைக் கிணற்று நீரோ, கிணற்று நீரையோ பயன்படுத்துவதில்லை என்றும் இப்படி மழை நீரை சேமிக்கும் பழக்கம் வேண்டும் என்றும் மழை நீரின் அருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


நன்றி:

27.08.22 புதிய தலைமுறை அறிக்கை.

https://www.puthiyathalaimurai.com/newsview/146127/An-old-couple-s-family-has-been-living-only-by-drinking-rainwater-for-40-years-

Friday, August 26, 2022

நம்மாழ்வார்: கவிஞர் தணிகை

 நம்மாழ்வார்: கவிஞர் தணிகை



இந்த அரிய மாமனிதரை நிறைய நேரங்களில் கடந்தே வந்திருக்கிறேன் என்றாலும் அவரிடம் கழுத்தில் மாலை பெற்றவர்கள் கூட தேநீர், காபி அருந்துவதையும் காண்கிறேன். நான் தேநீர் காபி அருந்துவதில்லை. எனக்குத் தெரியும் எனது அன்புச் சகோதரர்  சிற்பி.கொ. வேலாயுதமும் அருந்துவதில்லை இதை எங்களுடைய 40 ஆண்டுக்கும் மேலான நட்புத் தொடர்பின் மூலம் சொல்கிறேன். அதே போல நம்மாழ்வார் சொல்வதை நண்பர் விடியல் குகன் அஞ்சல் செய்திருந்தார் அதில் 11 ஆம் கருத்தை கடைப் பிடித்தால் மட்டுமே அதில் காபி டீயுடன் மதுவும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும் இந்த குறைந்த பட்ச தகுதி இருந்தால் மட்டுமே தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மாமன்ற உறுப்பினராக தகுதி என்று இருக்க வேண்டும்.  மற்றபடி இதில் சொல்லப் பட்டிருக்கும் அனைத்து கருத்துகளும் 21 கருத்துகளும் ஒரு நல்ல இயக்கத்துக்கு கண்களாக இருக்க வேண்டும்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் 21 அம்ச வாழும் கிராம செயல் திட்டம்(சில திருத்தங்களுடன்)


1. கிராமங்களில் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இயற்கை விவசாயம் மட்டும் செய்யப்பட வேண்டும்.


2. கிராமந்தோறும் உடற்பயிற்சி செய்ய மற்றும் விளையாட ஒரு  விளையாட்டுத் திடல் ஏற்படுத்த வேண்டும்;


3.  கிராமந்தோறும் குடிநீருக்கு  கை கால் கழுவாமல் தூய்மையாய், பாதுகாப்பாய் வைத்திருக்கக் கூடிய சுற்றுச்சுவர், படித்துறை கொண்ட ஒரு குளத்தை ஏற்படுத்த வேண்டும்; 


4. கிராமப்புறங்களில் உள்ள சிறு தெய்வ வழிபாட்டை உயிர்ப்பித்து கொண்டாட வேண்டும்;


5. ஒவ்வொரு விவசாயியும் தனது  நிலத்தில் ஒரு குளமும், குளத்து மண் மேட்டில் ஒரு கொட்டகையும், ஆடு மாடுகளும் மரம் செடிகளும் வைத்து வாழ வேண்டும்; விவசாய துணைத் தொழிலாக குளத்தில் மீன் வளர்ப்பும் செய்யலாம்;


6. ஒவ்வொரு கிராமத்தின் மாடுகளும் அந்தந்த கிராமத்தின் எல்லை தாண்டி போகக்கூடாது; 


7. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமம் தொடர்பான -  கிராமத்துக்கு தேவையான அரசு அலுவலகங்களின் ஆவணங்கள் அனைத்தையும் தெரிவிக்கவும், வழங்கவும் கூடிய  ஒரு தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும்;


8. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் வாடகைக்கு பயன்படுத்தக்கூடிய கிராமத்திற்கு தேவையான கருவிகள் மற்றும் இயந்திர சாதனங்கள் உள்ள பண்ணை சேவை மையம் ஏற்படுத்தப்பட வேண்டும்;


9. கிராம பள்ளிக்கூடங்கள் தரமுள்ள கல்வி  வழங்கக்கூடியதாகவும், விவசாயம் மற்றும் கிராம தொழில்களை கற்றுத்தரக்கூடியதாகவும், படைப்பாற்றல் மற்றும் பண்பாட்டைக் கற்றுத் தரக்கூடியதாகவும் மேம்படுத்தப்பட வேண்டும்;


10. கிராமப்புறத்தில் சிறு தொழில் மூலம்  தயார் செய்து கொள்ள வாய்ப்பு உடைய பல்பொடி, சோப்பு, ஷாம்பு,  எண்ணெய், மிட்டாய் போன்ற பொருட்கள் வெளியில் இருந்து கிராமங்களுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறான அனைத்தையும் கிராமத்திலேயே தயார் செய்து கொள்ள வேண்டும்;


11. கிராமத்தில் காப்பி டீ குடிக்கக் கூடாது; காப்பி டீக்கடை இருக்கக்கூடாது; அதேபோன்று மது குடிக்க கூடாது. மதுக்கடையும் இருக்கக் கூடாது;


12. ஒவ்வொரு கிராமத்திலும் மாதந்தோறும் கிராம சபை கூடி கிராமத்துத் தேவைகளை பரிசீலித்து திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்;


13. கடைகளில் விதைகள் வாங்குவதைக் கைவிட்டு, எல்லா விவசாயிகளும்  அவரவர் நிலங்களில் பயிர் செய்வதற்கான பாரம்பரிய விதைகளை அவரவர் வீடுகளில் வைத்திருக்கவேண்டும்; 


14. அலோபதி மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ போன்ற மாற்று மருத்துவத்தையும் போற்றி வளர்த்து ஆரோக்கியமான கிராமத்தை ஏற்படுத்த வேண்டும்;


15. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் வேப்பமரம், முருங்கை, பப்பாளி, சவுண்டல், சீதாப்பழ மரம்,  வாழை, தென்னை, கருவேப்பிலை, எலுமிச்சை, நெல்லி கொய்யா, மா, பலா என பழ மரங்களும் பயன் தரும் மரங்களும் இருக்க வேண்டும்; 



16. மர நிழல்களில் தேன்பெட்டி வைக்க வேண்டும்; உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்த வேண்டும்;


17. எல்லா வீடுகளிலும் கொல்லைப் புறத்தில் ஆடு, மாடு, எருமை, கோழிகளின் எச்சங்களிலிருந்து எரிவாயு தயார் செய்யக்கூடிய சாண எரிவாயு கலன் அமைக்கப்பட வேண்டும்; மேலும் சூரிய சக்தி மின்சார சாதனங்கள் அமைத்து பயன்படுத்த வேண்டும்;


18. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  தட்டச்சு பயிற்சி வழங்கபப்பட வேண்டும்;


19. ஒவ்வொரு கிராமத்திலும் பொது மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும்; 


20. விவசாயம் மற்றும் கிராம தொழில்கள் அனைத்தையும் கிராம மக்கள் பரஸ்பரம் உதவிக் கொண்டு கூட்டாக உற்பத்தி செய்ய வேண்டும்; 


21. கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அந்தந்த கிராம மக்கள் அந்தந்த கிராமத்திலேயே பணத் தேவை இல்லாமல் பண்டமாற்று முறையில் பரிமாற்றிக் கொள்ள வேண்டும். கிராமச்சந்தை மற்றும் கிராம இயற்கை அங்காடிகள் நிறைய ஏற்படுத்த வேண்டும்; superb. Good Sharing. No Objection . All points are valid.

சரியான ஆலோசனை

நன்றி நண்பர்க்கு

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



பி.கு: ஆனால் எல்லாமே கிராமியம் சார்ந்த கனவுகள் நிறைவேற்றுவது மிகவும் கடினம்தான் என்ற போதிலும் கனவு மெய்ப்பட வேண்டும் நேற்றைய கனவுதானே இன்றைய வாழ்க்கை எனவே கனவு தூங்க விடவில்லை.

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மாமன்றம் இதை மட்டுமே ஒரு குறிக்கோளாக வைத்து 5 கிராமங்களை முதலில் உருவாக்கினால் போதும் அவை மாதிரியாகி உலகுக்கே வழி வகுக்கும்.

அதற்கு சக்தியுள்ள‌ ஆர்வமுள்ள இளைஞர்கள் அல்லது வழிகாட்டிகள் முதலில் வாரம் ஒரு முறை 10 பேர் இணைந்து இந்த குறிக்கோள்களை மனதில் இறுத்திக் கொண்டு கிராமங்களுக்கு சென்று 24 மணி நேரம் இருந்து செயல்படலாம். அங்கேயே உறங்கும் 8 மணி நேரம் கழித்தால் மீதமுள்ள 16 மணி நேரம் கூட ஆரம்பத்தில் போதுமானது....


Tuesday, August 23, 2022

மறுக்கவோ மறக்கவோ முடியாத நம்பி நாராயணன்: கவிஞர் தணிகை

 மறுக்கவோ மறக்கவோ முடியாத நம்பி நாராயணன்: கவிஞர் தணிகை



1994 முதல்  1996 வாக்கில் வழக்கு முடிந்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிரூபணமான வழக்கின் பின்னணிக் கதையை 2022ல் அலசிப் பிழிந்து காண்பித்துள்ளார் மாதவன் தமது ராக்கெட்ரி என்னும் பல மொழிப் படத்தின் வாயிலாக.


எல்லாமே ஒரு தாமதமாகவே நடைபெற்றுள்ளது. 2019ல் இவருக்கு பத்மபூஷன் வழங்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றமும், கேரள அரசும் 50 இலட்சம், 1.3 கோடி இழப்பீட்டுத் தொகையும் வழங்கிட இஸ்ரோவிலிருந்தும் இவர் விடுபடுகிறார் உரிய ஓய்வுக் காலம் முதிரும் முன்பே...



இவர் நான் குற்றமற்றவன், நிரபராதி அப்படியானால் யார் குற்றவாளி? அவருக்கு என்ன தண்டனை? என தமது வழக்கை விடாமல் பற்றி இருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்தப் படத்தை ஒட்டிய அவரது பேட்டிகள் பிரமிக்கத் தக்கவையாக சுவையாக இருக்கின்றன(Behind the Woods) பிகைன்ட் தி உட் என்ற காணொளி நிறுவனத்தின் இரு இளைஞர்கள் இவரை எடுத்த பேட்டிகள்  படத்தை மீறி இவரது வாழ்க்கையின் அனுபவங்களை இவர் பகிர்ந்து கொள்ள நமக்கு கிடைக்கிறது.+Arnab Goswamy's 1 hour 48 minutes interview.


இதைப் பற்றி நான் ஏன் குறிப்பிட்டு பதிவிட வேண்டியிருக்கிறது எனில் 1994 முதல் 1996 வாக்கில் நடைபெற்ற அந்த தனி மனித யுத்தத்தில் அவர் வென்றபோதே  " தி இந்து " ஆங்கில நாளிதழை தொடர்ந்து தினமும் படித்து வந்த வாய்ப்பு இருந்ததால் அனைவரிடமும் அது பற்றி பேசி இருக்கிறேன். பல முறை இந்த சட்ட சதி, பொய் வழக்கு பற்றியும் அதனால் இந்த மனிதர்க்கு நேர்ந்த அவமதிப்பு, அவமானம், வேதனை, இழிவு,பற்றியும் நிறைய அன்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த காசுக்கு விலை போன கருந்துரோகிகளை இன்னும் அடையளப்படுத்தி கண்டு கொள்ளாதிருப்பது இந்தியாவின் இயல்பான சாபக்கேடு...



ஆனால் இப்போது மாதவனின் இந்தப் படத்தால் மிகவும் ஒளிமயமாகி விட்டது ஒரு உண்மைச் சரித்திரம்.அவரின் ரெடி டூ ப்ளை போன்ற புத்தகங்களைக் காட்டிலும் இந்த படம் இவரை சிகரத்தின் கொண்டு நிறுத்தி அவர் செய்த தியாகச் சிகரத்தை உலகுக்கு வெளிப் படுத்திக் காட்டி விட்டது. மாதவனை பஞ்சாங்கம் என்ற வார்த்தையை தேர்வு செய்யாமல் பயனபடுத்தியமைக்காக கேவலாமக எழுதிக் கழுவி ஊற்றிய ஊடகங்களும் சமூக நெட்டிஜன்களும் அந்தப் படம் பற்றிய பதிவின் உன்னத நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்


படத்தின் நாயகனான உண்மை நம்பி நாராயணன் சொல்வது போல படம் 4 மணி எடுக்கப் பட்டு அவரே வாதாடிய நீதிமன்றக் காட்சிகள் சுமார் 2 மணி நேரம் வந்த காரணத்தால் இடம் பெறாமை என்ற குறை நீக்கப் பட்டு மாதவன் நம்பி நாரயணன் ராக்கெட்ரி 2 என்ற இரண்டாம் பாகம் கூட வெளியிடலாம். அவ்வளவு சரக்கு இருக்கிறது இந்தப் படத்தில் இந்த வாழ்க்கையில்.


ஓரளவு படித்தவர் மட்டுமே புரிந்து கொள்ளுமளவு எடுக்கப் பட்டு இருக்கும்  படம் என்ற ஒரு குறை தவிர வேறு குறைகள் இடம்பெறாமல் இருப்பது இந்த படத்தில் மாதவனுக்கு கிடைத்த வெற்றி. மனிதர் சளைக்காமல் போராடி வென்றிருப்பது அவரது இயக்கத்தில், நடிப்பில் தயாரிப்பில் எல்லாப் பக்ககங்களிலும் தெரிகிறது. தமிழில் இது போன்று படங்கள் வரத் துவங்கி இருப்பது ஒரு நல்ல ஆரோக்யமான நிகழ்வுகள்



ஜெய்பீம் படத்தின் வழி உறங்கிப் போன உண்மையை விழிக்க வைத்த முன்னால் நீதியரசர் சந்துருவின் அனுபவத்தை சூரியா கொண்டு வந்து சேர்த்தார்


விழித்தபடியே இன்னும் இருக்கும் ஒரு நம்பி நாராயணன் என்னும் உண்மைச் சுவாசத்தை மாதவன் அனைவர்க்கும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.


சட்டம் நீதி  நேர்மை உண்மை வாய்மை நியாயம் தர்மம் எல்லாமே ஒன்றுக்கொன்று சிறிதளவே மாறுபடினும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடையவை அவற்றை நிர்வாகம் என்னும் கருவி அரசின் வழி அமல்படுத்தவே ஆட்சி ,அரசியல் என்பதெல்லாம் இருக்க வேண்டும்... அல்லாமல்



அவற்றிலிருந்து மாறுபடும்போது இப்படிப்பட்ட தனிமனிதர்கள் எப்பாடுபட்டாவது தம்மை நிரூபித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு 80 வயதுடன் வாழ்ந்து வரும் முதிய நம்பி நாராயணன் என்னும் இந்த அற்புத மனிதர்.


நிறைய உண்மைகள் வெளி வராமலே புதைந்து போய் விடுவதும் உண்டு. நமது சுதந்திரக் களத்தின் விடுதலை விதைகள் போல...


வெற்றி பெற்றதால் நமக்கு தெரிந்திருப்பதால் இந்த மனிதரின் வாழ்வை நாமும் போற்றுகிறோம். அதைப் பற்றி வெளியே அதிகம் பரவ விட்ட ஒளி இழைகளுக்காக மாதவனையும் பாராட்டுகிறோம். இவர் ஒரு தமிழர் என்பதும் திருநெல்வேலியில் இவரது தந்தையின் ஊர்: ஏர்வாடி, தாயின் ஊர் களக்காடு என்பதையும் இவரது வாய் மொழி மூலமே  அறிந்தது முதல் மேலும் பெருமை கொண்டோம். ஏன் எனில் திருவனந்தபுரம், இஸ்ரோ ;கலாம் காலத்து தொழில் தோழர் என்றெல்லாம் தெரிந்த போதும் இவர் ஒரு கேரளத்து அன்பர் என்றே முன்பு காலம் வரை எண்ணி இருந்தோம். இப்போதைய இந்த தகவல் மேலும் பெருமை சேர்த்து விட்டது. மேலும் இந்த மனிதர் அசராமல் இன்னும் திருவனந்தபுரத்திலேயே வசித்து வருகிறார் என்பது மேலும் ஆணி அடித்தது போன்ற ஒரு அபாரமான வாழ்வின் வழிச் செய்தி. 



கடைசியாக ஒன்று: 

 Engineering Graduates are Super human beings....Nambi Narayanan Former ISRO Scientist


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Monday, August 15, 2022

வீட்ல விஷேசம் நாட்லயுந்தாங்க: கவிஞர் தணிகை

வீட்ல விஷேசம் நாட்லயுந்தாங்க: கவிஞர் தணிகை



75 ஆம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துகள்  ( சொல்லித் தானே ஆக வேண்டியிருக்கிறது)
சூப்பருங்க திங்கள் கிழமையில்  சுதந்திர நாள் இயல்பாக வந்திருப்பதால்  லீவு சேர்ந்து சனி ஞாயிறு திங்கள் என்று 3 நாளாகிவிட்டதே...ஆம்னி பேருந்துகளுக்கும் கொண்டாட்டமாம் ஆயிரம் ரூபாய் டிக்கட் மூவாயிரமாம் சென்னையில் இருந்து சொந்த ஊர் வர சென்னை வாசிகளுக்கு...

புது டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறாராம் நாட்டின் பிரதமர்

எல்லா வீடுகளிலும் கொடி ஏற்ற ஏற்பாடு செய்து விட்டார்கள்

பால், தயிர், அரிசி எல்லாம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விட்ட 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் இன்னும் என்ன என்ன கொண்டு வரப் போகிறதோ? தந்து விடப் போகிறதோ என அரசியல் தொலை நோக்கர்கள் கருத வேண்டிய சூழல்

காற்றுக்கு சுவாசிக்க வரி வந்து விடுமோ என ஒரு பேச்சரங்கத்தின் வாயிலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு காங்கிரஸ் கட்சி பிரமுகர் பேசி இருந்தார்....அடைக்கப் பட்ட உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றி எனக்கு மேல் விவரம் ஒன்றும் தெரியாது...

ஆனால் சமையல் எரிவாயுவின் விலை ஏறியபடியேதான் இருக்கிறது அதையும் கொடி ஏற்றிக் கொண்டாடியே தீர வேண்டும்...

வீட்ல விஷேசம்:

நல்ல படம். பார்க்க வேண்டும் என நினைத்ததை ஜி.தமிழ் சேனல் மூலம் நேற்று நிறைவேற்றிக் கொண்டேன்.
சிக்கலான கருப்பொருள் பாலாஜி கையாண்டிருக்கிறார் அதற்கான தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார்.என்றெல்லாம் சொல்ல முடியாது ஏனென்றால் இது 2018ல் வந்த இந்திப் படத்தின் மறு தயாரிப்பு போனி கபூர் வழியாக தயாரிக்கப் பட்ட படம். பாலாஜியுடன் அவர் நண்பர்களும் என்.ஜெ.சரவணன் என்ற இயக்குனரும் உருவாக்கி இருக்கிறார்கள் தமிழ் மொழிக்கேற்றபடி. என்றாலும் கேரள மலையாளமும் தமிழும் கலந்திருக்கிறது இதில் சொல்லப் பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் போல...

அபர்ணா முரளி ஒரு சிறந்த நடிகை. கவிதா  ரஞ்சினியாம் ஊர்வசியின் பேர்.
கே.பி.ஏ.சி. லதா என்னும் முதிர் நடிகை படத்தில் கதையை எடுத்து நிறுத்தி இருக்கிறார்.சத்தியராஜ் என்னும் உன்னிகிருஷ்ணனின் தாயாகவும் ஊர்வசியின் கிருஷ்ணவேணியின் மாமியாராகவும் இளங்கோ சகோதரர்களின் பாட்டியாகவும் இருந்து. ஊர்வசி, சத்யராஜ், பாலாஜி, அபர்ணா பாலமுரளி, லதா என்னும் பாட்டி எல்லாருமே மிக நன்றாக நடித்திருப்பதால் படம் பார்க்க பார்க்க மகிழ்வாக இருக்கிறது. ஆனால்

ஏன் முதிய வயதில் குழந்தை வேண்டாம் என இயற்கையின் முடிவு எனில் பெற்றோர்களின் ஆயுள் நீடித்து முழு அரவணைப்பும் இருக்காது அந்தக் குழந்தைக்கு கிடைக்காது என்பதால்தான்... அதிலிருந்து ஒன்றிரண்டு தப்பிப் போனால் என்ன செய்வது எனச் சொல்ல முயன்றிருக்கும் படம்...

நகைச்சுவைக்காக பார்க்கலாம்.




இந்தியத் தியாகிகளுக்காக விடுதலை நாளைக் கொண்டாடலாம் 

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

100 ஆம் ஆண்டு சுதந்திர தினப் பெருவிழா வரும் வரை வாழ்வாங்கு வாழ்ந்து நண்பர்கள் அனைவரும் கொண்டாட தயாராக உடல் பேணி உயிருடன் இருக்க அனைவர்க்கும் வாழ்த்துகள்.
இந்த 75 ‍மைனஸ் 15 = 60ல்

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பும், ஒரு குடும்பத்தில் மணவிழா நிகழ்வுமாக எல்லாம் நினைக்க நினைக்க தித்திப்புமாக என் துணைவியார் செய்த ஒப்பிட்டு போல‌ அதிகம் திகட்டுவதாக இனிப்பு கூடவே இருக்கிறது. இந்த  75 ஆம் தின சுதந்திர நாள்

வாழ்த்துகள்
வணக்கங்களுடன்.

Wednesday, August 10, 2022

வீணாகப் போகிறாள் காவிரி....கவிஞர் தணிகை

 


 போங்கடா நீங்களும் ஒங்க விவசாயமும் நீர்த் தேக்கமும் என்ற காவிரி ஒரே பாய்ச்சலாக பாய்ந்து கடலில் சென்று சேர விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.

தண்ணீ இல்ல தண்ணீ இல்லேம்பிங்க, குடிக்கிற தண்ணியைக் கூட அளவு பாத்து நிறுத்துவீங்க, காசை ஏத்தி ஏத்தி ஏழை பாளைங்களை குழப்புவீங்க இப்ப பாருங்க‌ அவனும் நிறுத்த முடியாமதான் அனுப்பறான், நீங்களும் நிறுத்த முடியாமதான் அனுப்புறீங்க...

என்னிக்கிடா என்னை பொக்கிஷமா நினைச்சு வீணாக்காம விளைச்சலுக்கு நீர் மேலாண்மை செய்யப் போறீங்க?

என்றபடி போங்கடா நீங்களும் ஒங்க விவ சாயமும் நீர்த் தேக்கமும் என்ற காவிரி ஒரே பாய்ச்சலாக பாய்ந்து கடலில் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறாள் தாயோட பிள்ளையாக....



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


வீணாகப் போகிறாள் காவிரி....கவிஞர் தணிகை