Monday, May 13, 2024

சர்வதேச விண்வெளி நிலையம் கண்டேன் பெரு மகிழ்வடைந்தேன்: கவிஞர் தணிகை

 சர்வதேச விண்வெளி நிலையம் கண்டேன் பெரு மகிழ்வடைந்தேன்: கவிஞர் தணிகை



ஏற்கெனவே சில முறை கண்ட நினைவுண்டு. இருப்பினும் எப்போதும் அறிவியல் பால் ஆர்வம் உண்டு.


வான் வெளியை அதன் தகவல்களை அறிவதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. அன்பு நண்பர்கள் பகிர்ந்த செய்தியை வைத்து நேற்று மாலை 07.07 மணிக்கு முயற்சி செய்தேன். என்னால் சர்வ தேச விண்வெளி நிலையத்தின் பயணத்தை காண முடியவில்லை. மேக மூட்டம்.


ஆனால் இன்று இப்போது அதிகாலை 5.00 மணிக்கு வட மேற்கிலிருந்து கீழ் வானில் தென் கிழக்கு நோக்கி மிக நன்றாக வெறுங் கண்களால் பார்க்குமளவு நல்ல வெளிச்சமாகவும் பெரியதாகவும் பயணம் செய்து மறைந்து போகுமளவு சென்றவரை நின்று பார்த்தேன் . கையில் வேறு தொலை நோக்கி ரஷியத் தயாரிப்பு என்னிடம் உண்டு அது மேலும் உதவிட அனுபவித்தேன். 


துணைவியாரையும் அழைத்துக் காண்பித்தேன்.


இனி நாளை 4.14 அதிகாலையிலும் முயல்கிறேன்.


அறிவியல் இயக்கம் அதன் விண் பயணத்தை நோக்கி குறிப்பிட்டுச் சொல்வார்கள். நமது நண்பர்கள் அனுப்பியிருந்த செய்தியில் நேரம் மட்டும் குறித்து இருந்தது. இருப்பினும் மிகத் தெளிவாகவே பார்க்க முடிந்தது

ஒரு நல்ல மகிழத் தக்க அனுபவமாக இருந்தது.


நன்றி தகவல் தந்த அன்பர்களுக்கு

மனித முயற்சி  பார்ப்பதற்கே இவ்வளவு சுகம் எனில் முயற்சி செய்து வெல்வார்க்கு எவ்வளவு சுகம், மேலும் அதில் பயணம் செய்வார்க்கு எவ்வளவு பெருமை...மனிதம் வெல்கிற தருணம் பல...ஆனாலும் இயற்கையின் துளியை நாம் உணரவே முடிந்தாலும் மிஞ்ச வழியே இல்லையே....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: இந்த விண்வெளி மையத்தை  மிகப் பழையதானதால் நாசா அழித்து புவியில் விழ வைத்து வேறு புதிதாக‌ ஒன்றை செய்து காலத்துக்கேற்ப தகவமைத்து புதிதாக அனுப்பப் போவதாகவும் ஒரு செய்தியை படித்த நினைவு உங்கள் தகவலுக்காக பகிர்ந்துள்ளேன்.

Tuesday, May 7, 2024

கோடையின் முதல் மழை(2024): கவிஞர் தணிகை

 கோடையின் முதல் மழை: கவிஞர் தணிகை



எதற்கு இந்த சிறு பதிவு? இயற்கை ஏமாற்றுவதில்லை என்ற நிறைவுக்காக.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை என்பார். எனவே பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் எண்ணத் தீர்மானம்.


காத்தின் கூத்து, இரண்டு நாட்கள் ஊழித் தாண்டவம் , சில துளிகள் தூறலிட்டு சென்று மறைந்தது. அங்கே மழை இங்கே மழை காவேரிப் பட்டணத்தில் மழை என்றார்கள்.


வெறுப்பாகவும் விரக்தியாகவுமிருந்தது.


நேற்று நள்ளிரவில் நல்ல‌ மழை. ஒரு உழவு அல்லது ஒரு வள்ளம், அல்லதுஒரு மரைக்கால் என்பார்களே அது... எங்கள் உரல் கல் முழுதும் நிரம்பி இருந்தது. வள்ளம் என்பது நாலு படி என்பதாகும்.


ஆனால் இன்னும் இது போல் இரண்டு மூன்று மழையாவது தேவை.


அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் இப்படி நிகழ்ந்ததும், மேலாக‌

எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா போடும்போது எல்லாம் திருவிழாவுக்குள் எப்படியும் நல்ல மழை பெய்வதை நான் கண்டிருக்கிறேன்.


இந்த மழை சினிமா கிளைமேக்ஸ் போல நெக் அன்ட் நெக்காக கடைசி நேரத்தில் பெய்து பேரைக் காப்பாற்றிக் கொண்டது.


ஏனெனில் இன்று அதிகாலை முதல் காவிரியாற்றில் சக்தி அழைக்க என எப்போதும் போல ஊரின் பெரும் கூட்டம் திரண்டு தீர்த்தம் கொண்டு வரல் வழக்கம் சிறுவர் சிறுமி, பெண்கள் , முதியவர்  இப்படி வயது கணக்கின்றி... 


அனைவரையும் காப்பாற்றி உள்ளது. இல்லையெனில் அடித்த வெய்யிலுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள்  கூட நிகழ்ந்திருக்கலாம்.ஏனெனில் அதிகாலையில் உணவு உண்ணாது சுமார் போக வர 5 கிலோமீட்டர்கள் நடந்து சென்று காவிரி நீர் எடுத்து  நடந்து வருகிற வழக்கம்.  


மீண்டும்  நன்றி இயற்கையே!

நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் உயிர்க்கெல்லாம் நன்மை செய்வோம் என்பதை....


Thursday, May 2, 2024

எல்லாமே எரிவதுதான்: கவிஞர் தணிகை

 எல்லாமே எரிவதுதான்



சுட்டெரிக்கும் வெய்யில்

சுடர் விடும் சூரியன்


ஆடை அணிவிக்கிறார்கள்

நீர் வார்க்கிறார்கள்


அறிவென்பதா? அழிவென்பதா?

இழிவென்பதா?இருளென்பதா?


நன்றியென்பதா?

நன்று என்பதா?


சிலை வணக்கத்தை விட 

இலை வணக்கம் தேவையெனும்போது


பசிக்கும் போதெல்லாம் சோறு

குருவிக்கு

குருவுக்கு.


       மறுபடியும் பூக்கும் வரை

         கவிஞர் தணிகை