Sunday, July 22, 2018

மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை

மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை

Image may contain: mountain, sky, outdoor, nature and water


அப்பாடா ! இந்த நீர் நிரம்பிய காட்சியை பார்க்க எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் தவம்...இயற்கை மனிதர்களின் மகத்தான கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறது. மழையாகப் பொழிந்து. குமாரசாமி இனி நம்மைக் கேட்க மாட்டார்களே காவிரி நீருக்காக என அழுததாகக் கேள்வி.

உடனே காலை சுமார் 7.50க்கு நில நடுக்கம், தர்மபுரி, பென்னாகரம்,மேட்டூர், அம்மாப்பேட்டை, தாரமங்களம், நங்கவள்ளி போன்ற பகுதிகளில். வழக்கம்போல சேலம் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நிலநடுக்க அளவை கருவி பணி செய்யவில்லை...

இயற்கை ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் சொல்வது போல அணையின் நீர்த்தேக்கத்திற்கும் நில நடுக்கத்திற்கும் தொடர்புள்ளதாகவே இச் செயல் தோன்றுகிறது. ஏன் எனில் பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் வறண்டு கிடந்த பூமி மேல்  93.47 டி எம் சி...அதாவது கன அடி..ஃக்யூபிக் மெட்ரிக் டன்...இரண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவுக்கு இந்த  மேட்டூர் அணை இடம் இருக்குமாம் நீரைத் தேக்கி வைக்க...
Image may contain: sky, mountain, outdoor, nature and water
நாட்டின் மிக முக்கியமான அணைகளில் பிரதானமானது.

இவ்வளவு நீரின் அழுத்தம் உருவானதால் நில நடுக்கம் தோன்றியிருக்கலாம்.

ஜெ நிரந்தரமாக கண்மூட, ஓ.பி.எஸ் பதவி விலக, சசிகலா கர்நாடகா சிறை புக, எடப்பாடி பழனிசாமி, இப்போது எடப்பாடியார் தினகரனின் மிரட்டலுக்கு சாயாமல் அவரை வெளியனுப்பி ஆட்சியை முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, ஆண்டுக்கு மேல் ஓ.பி.எஸ் உருவத்தை சிறிதாக்கி போஸ்டரில் தாம் பெரிதாக வளர்ந்து ...1934ல் கட்டிய அணையை 84 ஆண்டுகளில் ஒரு முதல்வர் அணையை திறந்து வைத்தார் என்னும் ஒரு பெயரைப் பதித்துக்க் கொண்டார்....நீர் இப்போது தேவையில்லை என்று ஒரு குரலும், இல்லை இல்லை குறுவை சம்பா பயிற்களுக்குத் தேவைதான் என்றும் கல்லணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு என்ற செய்திகளும் முரண்பட்டாலும் செய்திகளாகின்றன.
Image may contain: people standing, bridge, sky, ocean, outdoor, water and nature
மொத்தத்தில் குடி நீர்,  கால்நடைபருக நீர், பாசனத்திற்கான நீர் எல்லாப் பஞ்சமும் போக இயற்கை அன்னை வழி விட்டிருக்கிறாள். காவிரி கரை புரண்டு தாயின் மடி மேட்டூர் அணையில் சேர்ந்திருக்கிறாள். யோவ் இது தமிழ் நதி அய்யா, இப்போது நிறுத்துங்களேன் பார்ப்போம்...

அட இப்போதும் கூட எங்க பஞ்சாயத்து: வீரக்கல் புதூர் எனப்படும் ஊராட்சி ஒன்றியத்தில் ஆறு அளவு நீர் இருந்தாலும் நாயால் நக்கி நக்கியே குடிக்க முடியும் என்ற பழமொழிக்கேற்ப எங்கள் வீதியில் குடிநீரை மிகவும் அளவாக போதாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் பாவிகள்...ஒரு பெண் குடிநீர் வேண்டி எங்கள் வீடு வந்து பிடித்துச் செல்லுமளவு...

இவனுங்களை திருத்தவே முடியாதய்யா...

பாலாஜி, பழனி இன்று நில நடுக்கம் வந்ததாம் இல்ல தெரியுமா?

 அந்தப் பெண் சொல்கிறாள்: கேட் எல்லாம் ஆடியது என்று...

பவர் பழனி: சார் காத்து அடித்திருக்கும் ஆடியிருக்கும் சார்,

இல்ல பழனி அவங்க பக்கத்து வீட்டில் மேலே பரணில் வைத்திருந்த டம்ளர் எல்லாம் கீழே விழுந்ததாம்  என்று சொல்கிறாரே...

பாலாஜி: அது பூனை உருட்டி விழுந்திருக்கும் சார்...

பழனியும் பாலாஜியும்: நாங்க கூட ஆடலான்னுதான் பார்க்கிறோம் பசங்க இன்னும்  வரலை...கிரிக்கெட் பந்தை வைத்துக் கொண்டு..

கவலை இல்லாத மனிதர்கள்...எதற்கெடுத்தாலும் காமெடிதான்...

ஏன் எனில் சரியான படிப்பு கூட இன்று மின் வாரிய ஊழியராகிவிட்டார்கள் நிலம் அரசு கையகபடுத்தியதற்கு பதிலாக வாரிசு வேலை பெற்றதால்..

இப்போது மட்டுமல்ல...வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படும் முன்பே கூட இப்படித்தான் பேசுவார்கள்..நினைத்துக் கொண்டு மறுபடியும் உவந்து சிரிக்கலாம்.... அவ்வளவுதான் வாழ்க்கை...அடுத்த நொடியில் நில நடுக்கம் அதிகமாக கனமாக இருந்தால் நாம் இருக்கிறோமோ என்னவோ? எதற்கு சோகம்...
Image may contain: bridge, sky, outdoor and water
 117 feet at 6. 30 pm on 21.07. 2018.

காவிரியை, அணையை சிறையிட்டு வைத்திருக்கிறார்கள்...இம்முறை மக்கள் அருகே சென்று பார்க்க முடியாது சுவர், கம்பி வேலி...பதினாறு கண்மாய்  பாலம் பூட்டப்பட்டு மத்திய பாதுகாப்புப் படைக் காவலுடன்.எவரும் எப்படியும் காவிரி அருகே அணைப்பகுதியில் நீர் அருகே செல்ல முடியாத நிலை. எட்டி இருந்தே பார்க்குமளவுதான். அப்படி இருந்தபோதும் நீர் ஏற்று நிலையமருகே கடைசியில் பூட்டை தெரிந்தவர் என்றா திறந்து அந்த சிலரை மட்டும் அனுப்பினார் அந்த நபர்...தெரியவில்லை... சட்டம் இந்தையாவில் எப்போதும் அனைவர்க்கும் சமமாக இல்லை....தெரிந்தவர், சொந்தக்காரர், நணபர், அரசியல்வாதி, பணக்காரர் இவர்க்கெல்லாம் மாறுபாடும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, July 20, 2018

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

Image result for rajinikanth and vijayakanth acted together

சினிமா உலகில் விஜய்காந்த் டூப்ளிகேட் ரஜினிகாந்த் என விமர்சிக்கப்பட்ட ஒரு காலம் போய் அவருக்கு என ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் முன்னேறிய விஜய்காந்த் ரஜினிகாந்துக்கும் முன்பாகவே அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

அவரது கல்யாண மண்டபம் ஒன்றும் சர்ச்சைக்குள்ளானது. அப்போது ஆளும் கட்சியானவர்கள் அதன் பின் இவரிடமே கூட்டணிக்கெல்லாம் முயன்றது காலத்தின் பதிவு. இவ்வளவு செல்வாக்கு பெருகி வரும் சூழலில் தன்னை சிறுத்துப் போகச் செய்தது அவரின் பின் தொடர்ந்த செயல்பாடுகள். மிக வீரமான படங்களை எல்லாம் கொடுத்தும், ஜெ வை சட்டசபையிலேயே நேரடியாக எதிர்த்தவரும் மதுவின் பிடியாலும், உடல் நலம் குன்றியதாலும் பேசவே முடியாத காரணத்தால் ஊடகம், சமூக வலை தளங்கள் மூலம் எள்ளி நகையாடக் காரணமானார்.

மனைவியும், மைத்துனரும் துணையாகி கட்சியை வழி நடத்த, சிங்கப்பூர் எல்லாம் சென்று தேர்தல் காலத்தில் பெரும் தொகை பேரம் பேசியதாக செய்திகள் உலவின. வைகோவால் திமுக கூட்டணிக்கு செல்லாமல் படு தோல்வி அடைந்து கட்சி நிலை நலிவடையும் காலத்துக்கு சென்று கொண்டிருக்க அவர் கட்சியிலிருந்து முக்கியமான உறுப்பினர்கள் எல்லாம் வேறு கட்சிக்குத் தாவி தப்பிப் பிழைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதே போல ரஜினிகாந்தும் எப்போதும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார். இவர் மூப்பனாரை நேரடியாகவே ஆதரித்தும், அப்போடைய ஒரு தேர்தலில் இனி மாறுதல் நிகழ வில்லை எனில் ஆண்டவரால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது எனச் சொல்லியும், தேர்தலில் எந்தப் பக்கம் வாக்கு அளிக்க வேண்டும் என்று அறிவித்தும் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானார்.

இவரின் வீடும், ஜெ வின் வீடும் அதாவது என்றும் முதல்வரான ஜெவின் இருப்பிடமும் ஒரே இடத்தில் இருப்பதால் அதில் முரண்கள் தோன்றி ஆர்ப்பரிக்க வழியின்றி அடங்கியே இருந்தார். மன்னன் போன்ற படங்கள் அதன் பிரதிபலிப்பு எனச் சொல்வாரும் உண்டு.

இங்கும் இவரது மனைவி சொல்லே மந்திரம் என்பது போல அங்கே பிரேமலதா விஜய்காந்த் போலவே இங்கே லதா ரஜினிகாந்தின் வழிமுறைகள் இவரையும் வழி நடத்துவதாகவே சம்பவங்கள் சாட்சிகள்.

இப்போது அமித் ஷா விடம் ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி  அப்படிக் கொடுத்தால் பாரதிய ஜனதாவுடன் ஒத்துழைப்பு செய்வதாகவும் இல்லையேல் விட்டு விடுங்கள் எனப் பேசியதாகவும் செய்திகள் உலவுகின்றன.

ஆக என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் விஜய்காந்த் போன அதே வழித்தடத்தில் தாம் ரஜினிகாந்தும் சென்று வருகிறார் என்பதை ஒப்பீடு செய்வார்க்குப் புரியும். இவருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் உண்டு. அதே போல கட்சி, அரசியல், அப்படி இப்படி என எட்டு வழிச்சாலை பரவாயில்லை, போலீஸ் தரப்புக்கு சாதகமாக பேசுவது என்றெல்லாம் குளறுபடிகள் இவரிடமும் உண்டு. அவர் மேடையில் உளறுவார். இவர் மேடை இல்லாமலே உளறுகிறார் . எனவே இருவருமே ஒரே வழிப்பயணத்தில் இருப்பதை அனைவரும் காணலாம்.

சிலவற்றுக்கு கருத்தே தெரிவிக்க மாட்டார். கருத்து தெரிவித்தார் என்றால் அது மிகவும் சமுதாய நெருடல்களை , முரண்பாடுகளுடன் இருப்பது அவரின் நிலைப்பாடே தவிர சமுதாயமேம்பாட்டுக்கான, அல்லது மக்கள் நலம் சார்ந்ததாக ஊன்றிப் பார்த்தால் இருக்காது.

ஓடாத படங்களை  ஓடவைக்க நிறைய பட்ஜெட்டில் படம் எடுக்க, தமிழ் சினிமாவின் அதிகம் பணம் வாங்கும் நடிகராக இன்னும் இருக்கிறார் என்றாலும் முதல்வராகவோ ஒரு கட்சிக்கு ஏற்ற தலைமைப் பண்புகள் கொண்டாராகவோ சினிமாப் பின்னணி அல்லாமல் ஆன்மீகப் பயண அனுபவங்கள் வேறு அவரிடம் சிறப்பு இயல்புகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கமல் ஹாசனாவது கருத்துகளைத் தெரிவிக்கிறார். மக்களின் பக்கம் நிற்கிறார் ஆனால் அவரின் பக்கம் ரஜினிகாந்த் இடம் சேரும் கூட்டம் அளவு இல்லை என்கிறார்கள்...இவர் தனக்கில்லாத தகுதி கமல்ஹாசனிடம் இருப்பதை தெரிந்து கொண்ட பின்னும் அவரையாவது ஆதரிக்க தமது கூட்டத்தாரிடம் சொல்லலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, July 17, 2018

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

Image result for bad smell and traveller

இப்போதெல்லாம் எதையாவது பார்த்து அதில் ஆழ்ந்து விடுகிறேன்...உடனே இராமலிங்க வள்ளலாராக மனம் உருகி விடுகிறது. தலை வலிக்க ஆரம்பிக்கிறது..பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள்: எல்லாவற்றிலும் சகித்துக் கொள்ள முடியாத மானிடங்கள். உடனே அன்னை தெரஸா நினைவிறங்கி இவர்க்கெல்லாம் என்ன, எப்படி உதவப் போகிறோம் என்ற எண்ணங்கள் ஆலோலம் போடுகிறது.

இன்று மேட்டூர் ரயிலில் ஏறிய உடன் புலை நாற்றமெடுக்க ஒரு மனிதன் கடைசிப் பெட்டியில் வழக்கமாக நான் இறங்குவதற்கு வசதியாக ஏறும் பெட்டியில் ஒரு பெரிய சீட் முழுதும் படுத்துக் கிடந்தான்.

ஒரு பக்கம் தாள முடியவில்லை. எங்கே போக வேண்டும் எனக் கேட்டேன். சரியாக சொல்லவில்லை. நானே மேட்டூரா எனக் கேட்டுவிட்டு எனது  பையை மற்றொரு இருக்கையில் வைத்துவிட்டு கீழ் இறங்கி நின்று கொண்டேன்.

கண்ணில் பார்த்ததால் உருவாகும் வேதனை, பார்க்காதிருந்திருந்தால் இருந்திருக்காதே...அதே இன்னும் கொஞ்சம் காலம் தாழ்ந்து வந்திருந்தால் இந்த அலைக்கழிப்பு எண்ணம் எல்லாம் தோன்றியே இருக்காதே...மேலும் அந்த இருக்கையை பயன்படுத்தினாலும் கண்ணுக்குத் தெரியா கிருமிகள், வைரஸ்கள் அதைப் பயன்படுத்துவாரையும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கலாமே... என்றெல்லாம் நினைவோட்டம்...

காலம் நகர ஆரம்பித்தது. மறுபடியும் அந்த மனிதன் மணி எத்தனை , ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும் என கேட்டான். சொன்னேன். சிறிது நேரத்தில் மாணவர்கள் வர ஆரம்பித்தனர்.

அந்த மனிதன் மெதுவாக எழுந்து ஒரு காகித பெப்ஸி டப்பாவுடன் குடி நீர்க் குழாயருகே சென்று விட்டு மறைந்து போனான்.
அவன் மேட்டூர் ரயில் பயணியாக காட்டிக் கொண்டது பொய் என்பது புரிந்து போனாலும் இது போன்ற முகங்களும், மனிதர்களும் நிறைய நிறைய இப்போதெல்லாம் பொது இடங்களில் திரிவதை, உழல்வதை பார்க்கத் தாளமுடியவில்லையே என்றாலும் நாமும் இந்த உருப்படி இல்லா சமூகத்தில் மகனை உருப்படி ஆக்குவதற்காக ஒரு கல்வி நிறுவனத்தில் பணி செய்து உடலை உயிரை உருக்கி வாழ்பவன் தானே என்று பார்க்க நினைக்க ஆரம்பிக்கும்போதே ஹோசிமின்னாக நாமும் விளங்கி  நாட்டுக்கெல்லாம் ஒரு நல்ல தலைமையைத் தர மாட்டோமா என்று ஒரு கேள்வியும் உதி(ர்)த்தபடியே நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, July 14, 2018

நன்றி கலையகம் அன்பரசன்: கவிஞர் தணிகை

NGO Sector, The Trojan horse of capitalism - ஒரு துண்டுப்பிரசுரம்

Image result for ngo

------------------

"அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்?

நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக:

தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன?

NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை. தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது.

NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் வகிப்பதாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் கோபங்களை தணிக்க உதவுகிறது. அரச எதிர்ப்பு சக்திகளை சட்டபூர்வமான, அமைதியான, கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுகின்றது. 

இதன் மூலம், மக்களை முதலாளித்துவ ஆதரவாளர்களாக மாற்றுவதுடன், ஆளும் வர்க்க கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் NGO க்களின் தாக்கம் மிகக் குறைவாக இருந்த போதிலும், பிற உலக நாடுகளில் அவற்றின் ஆதிக்கம் அளவிட முடியாதது.

அரசு சாரா நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவற்றிற்கு கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி அரசிடம் இருந்து வருகின்றது. பல வகையான NGO க்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதிகாரத்தை கட்டமைப்பவை, உள்நாட்டு, சர்வதேச NGO க்கள் என்று பல வகையானவை. 

NGO என்றால் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" என USAID கூறும் வரைவிலக்கணம் சர்ச்சைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணம், அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றிற்கு உதவுவதால் மட்டும் அல்ல. ஒரு NGO அமைப்பு, மனேஜர்கள் போன்ற சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களையும், இலவச தொண்டு வேலை செய்யும் களப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு எழுதப் பட்ட ஐ.நா. சாசனத்தில் தான் NGO பற்றிய குறிப்புகள் வருகின்றன. இருப்பினும், உலகில் மிகப் பழமையான NGO, 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.

இந்த NGO க்களுக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? உலகளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுகளும் நிதி கொடுக்கின்றன. அதே நேரம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மத அமைப்புகளும் சிறியளவில் நிதி வழங்குகின்றன. முதலாளிகளையும், அரசையும் பின்பற்றி, மத நிறுவனங்களும் தமது செல்வாக்கை பயன்படுத்த விரும்புகின்றன.

சர்வதேச மட்டத்தில், அநேகமாக நீங்கள் கேள்விப் பட்ட எல்லா பெரிய நிறுவனங்களும், NGO க்களுக்கு நிதி வழங்கும் அமைப்புகளை கொண்டுள்ளன. Microsoft, Monsanto, Nike, Ford, Starbucks... இது போன்ற பெரும் முதலாளிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட செல்வந்தர்களும் நிதி வழங்குகின்றனர். பில் கேட்ஸ், ஜோர்ஜ் சோரோஸ், ரொக்கபெல்லர் என்று பலரைக் குறிப்பிடலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழைகள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்துவதன் நோக்கம் என்ன?  சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்கின்றன. இந்த நற்பெயர், மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களை பெருமளவில் வாங்க வைக்கும். அதனால் அதிக இலாபம் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை சுரண்டுகின்றது. அவர்களை நாளொன்றுக்கு பதினான்கு மணித்தியாலம் வேலை செய்ய வைத்து கசக்கிப் பிழிகிறது. ஒரு ஐபோனின் விலை தான், அதைச் செய்யும் தொழிலாளியின் ஒரு வருடச் சம்பளமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் மலேரியா தடுப்பு மருந்துக்கு கொஞ்சப் பணத்தை நன்கொடை வழங்குவதால், இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால உதவிகள் மூலம், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதனால் அவை என்றென்றும் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்த நாடுகளின் வளங்களை இரக்கமற்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அபிவிருத்தி தடைப் படுவதுடன், NGO நிறுவனங்களின் கருணையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன. இதனால்,வறுமை, பட்டினி, நோய்கள், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான மக்களின் போராட்டத்தை தகர்க்கின்றன.

எதற்காக முதலாளிகள் NGO நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார்கள்? முதலாளித்துவ பொருளாதார விதியின் படி பார்த்தால் இது ஒரு "மீளப் பெறப் படாத செலவு". அதாவது, ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு பகுதி உற்பத்தி செலவுக்கும், இன்னொரு பகுதி மீள் முதலீட்டுக்கும் செலவாகிறது. இதில் இலாபம் தனியாக ஒதுக்கப் படுகின்றது. அப்படியானால், எதற்காக முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறார்கள்?

தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முதலாளிகள் கொடை வள்ளல்கள் என்று சமூகத்தில் படம் காட்டப் படுகின்றது. ஆனால், இது ஒரு கொடை அல்ல. அவர்களது வர்த்தகத்தை உறுதிப் படுத்தவும், எதிர்கால இலாபத்தை நிச்சயப் படுத்துவதற்குமான முதலீடாக அந்தப் பணம் செலவிடப் படுகின்றது. இதனால் கிடைக்கும் இலாபம் நீண்ட கால நோக்கிலானது.

NGO நிறுவனங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான நன்மதிப்பை உருவாக்கி, முதலாளித்துவத்தை நிலைநிறுத்துகின்றன. ஜனநாயகமயப் படுத்தலுக்காக, பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடும் NGO க்களுக்கு கார்பரேட் முதலாளிகள் அள்ளிக் கொடுப்பதும் காரணத்தோடு தான். பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வதன் அர்த்தம், உற்பத்தி, தொழிலாளர் உரிமைகள், ஏகபோகம் போன்ற விடயங்களில் மிகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தான். இதனால், பெரும் முதலாளிகளுக்கு மிகப் பெரும் செல்வம் செல்வம் சேர்வதுடன், உழைக்கும் வர்க்கத்திற்கு அவலங்களும் உண்டாகும்.

அரசு எதற்காக NGO க்களுக்கு உதவுகின்றது? நடைமுறையில் உள்ள அரசு, பணக்காரர்களை பாதுகாப்பதையும் அவர்களது நலன்களை உறுதிப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது, வன்முறை மீது ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது. இன்றுள்ள முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு NGO க்களுக்கு நிதி வழங்குகின்றது. அரசு உறுதியாக இருந்தால் தான், அது பணக்காரர்களுக்கு சேவை செய்ய முடியும்.

NGO க்கள் முன்னெடுக்கும் "போராட்டம்" என்றைக்குமே அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. வன்முறை பிரயோகிப்பதில்லை. அத்துடன், மையப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. பாராளுமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு கோபத்துடன் இருப்பவர்களை, NGO க்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அஹிம்சா வழியில் போராடுமாறு சொல்லிக் கொடுக்கின்றன. அவர்களை கோட்டு சூட்டு போட்ட அலுவலகப் பணியாளர்களாக, அறிக்கைகள் எழுத வைக்கின்றன.

எந்த NGO வும் புரட்சிகரமாக செயற்பட முடியாது. அது தனது கணக்கு அறிக்கைகளை தயாரிப்பதிலும், அடுத்த வருடத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. நிதியின்றி எந்த NGO வும் இயங்க முடியாது. அரசும், கார்பரேட் முதலாளிகளும் புரட்சிகர NGO வுக்கு நிதி வழங்க மாட்டார்கள். சுருக்கமாக, ஒரு NGO வின் செயற்பாடுகளும், போராட்டங்களும், அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

சட்டங்களுக்குள் அனுமதிக்கப் பட்ட போராட்டம் வெற்றி காண முடியாது. அது எப்போதும் அதிகார வர்க்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் முடியும். அரசாங்கத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்கும் NGO போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், அது அதிகாரத்தை முழுமையாக கேள்விக்குட்படுத்த மாட்டாது. அரசைக் கவிழ்க்க நினைக்கும் NGO சட்டப் படி பதிவு செய்ய முடியாது. சமூகத்தில் NGO எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் அமைதியாக ஆட்சி செய்கின்றது.

பிற்குறிப்பு: 
துண்டுப்பிரசுரம் போன்ற இந்த சிறு நூல், (முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான) மசிடோனியாவில் உள்ள Crn Blok என்ற இடதுசாரி (Anarchist) அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 8, 2018

...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை

 ...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை


Image result for indian parliament election 2019


நாடு தேர்தலை நோக்கி மறுபடியும் அடி எடுத்து வைக்கிறது...வீட்டு வாசலுக்கு வாக்கை சரி பார்க்கும் ஆசிரியர்  காலை வந்து சென்றார்.பிரதமர் மோடி சுமார் 800 ஐ.ஏ.எஸ்களை நாடு தழுவிய அளவில் சுமார் 117 மாவட்டங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி அதுவும் ஆகஸ்ட்  15க்குள் அனுப்பி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய இருப்பதாக செய்திகள் வந்திறங்கியுள்ளன. எப்படி ஒரு மாதத்தில் இது போன்ற ஒரு பெரிய குறிக்கோளை நிறைவேற்றப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி...தேர்தல் நோக்கிய அறிகுறி...கேலிக்குறியும் கூட.


மேலும் மத்திய மாநிலத் தேர்தலை ஒரு சேர நடத்துவது பற்றியும் கருத்துகள் மாநிலம் வாரியாக முதல்வர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கப்படுகின்றன. இச்சூழலில் அவரவர்களும் அவர்களுக்கு சாதகமான பதிலை வேண்டும் வேண்டாம் எனத் தெரிவித்து வருவதாக நிலை .

சுமார் 70 வயதுக்கும் மேலான எனது நண்பர் இது போல மாநில மத்தியத் தேர்தல்கள் ஒரு சேர நடத்தப்பட்ட காலம் இருந்ததுதான் என்கிறார். மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இது நடத்த முடியாதது என்றெல்லாம் சொல்வதில் பொருள் இல்லை. அறிவியல் முன்னேற்றம் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இன்னும் வளர்ந்தபடியே உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் ஒரு சேர அப்படி மாநில மத்தியத் தேர்தல்களை நடத்த சாத்தியமில்லை, அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் நடத்தலாம் என்கிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரட்டும். தேர்தலை அப்படியே நடத்தவும் செய்யட்டும் அதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மோடி அரசு வாக்கு எந்திரங்களைத் தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டின் கறைகளை எல்லாம் கழுவி தூய்மையாக துடைத்து இந்த தேர்தலை நடத்த வேண்டும்

நாடு முழுதும் ஔரஙக சீப் ஆட்சி புரிந்தது போல ஒரே ஆட்சி மோடி ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது இந்த ஆளும் கட்சி அரசுக்கு என்ற குற்றச் சாட்டுகளும் இல்லாமல் இல்லை அவற்றிடமிருந்து எல்லாம் வெளி வந்து இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுவே ஒரு ஜன‌ நாயக ஆட்சிக்கு  ஒர் ஜனநாயக நாட்டுக்கு அழகு.

ஆனால் கட்சிகள், வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடாது. அரசே வேட்பாளர்களின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறும் வேட்பாளர்களை கட்சிகளை தேர்தல் களத்தில் இருந்தே தூக்கி விசிறி எறிந்து விட உறுதியான நடவடிக்கை வேண்டும்.

அடுத்து ஊழல், இலஞ்சம், வருவாய்க்கு மீறிய சொத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் பதவியிலிருப்பார், அவர்கள் உறவுகள், அவர்கள் பினாமிகள் என்னும் பார்வையில் போர்வையில் எவராவது இருந்தாலும் நிரூபிக்கப்பட்டால் அவர்களை 'திரும்ப அழைக்கும் உரிமையும்" மக்களின் வாக்குகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதெல்லாம் செய்ய முடியாததல்ல. செய்யும் அக்கறை உடையார் மட்டுமே நாடாளும் அருகதையுள்ள பதவிக்கே வர வேண்டும். இராதா கிருஷ்ணன் நகர் நடந்த தேர்தல், மற்றும் இடைத்தேர்தல்  , பொதுத் தேர்தல்கள் போன்றவற்றில் செலவிடும் சட்டத்துக்கு புறம்பான தொகையை மக்களிடம் திருப்பி விடும் தொகையை தடுத்து நிறுத்துமளவு தேர்தல் ஆணையத்துக்கு  வசதி வாய்ப்புகளோ சட்ட அங்கீகாரமோ இல்லை என்கிறார்கள் தேர்தல் முன்னால், இந்நாள் ஆணையர்கள் அவை அவர்களுக்கு இருக்க சட்ட வரைவுகள் கொண்டு வரப்படல் அவசியம்

ஆக  ஒரு சேர தேர்தல் நடக்கட்டும், அது சாதி மதமாச்சர்யங்கள் கடந்து மக்களுக்கு சேவை செய்த செய்யும் ஆட்சியாக  நல்ல வேட்பாளர்களைக் கொண்டு மலரட்டும்....


Related image

ஆனால் இதெல்லாம் நடக்கும் என்கிறீர்கள்?

பார்ப்போம் இனி வரும் எதிர்காலத்தை மேல் மேலான சுவையான செய்திகளுடன்...

                                      மறுபடியும் பூக்கும் வரை
                                            கவிஞர் தணிகை.