Saturday, April 30, 2022

cinema சினிமா Cinema{Apocalypto) அபோகாலிப்டோ: கவிஞர் தணிகை

 அபோகாலிப்டோ: கவிஞர் தணிகை



மெல் கிப்சனின் அபோகாலிப்டோ என்றால் தனியாகத் தெரிய...ஏன் எனில் அதே 2006 வாக்கில் அதே பெயருடன் (இரண்டுக்கும் ஆங்கில எழுத்தில் ஒரு எழுத்தே வேறுபாடு க என்பதற்கான சி ஒன்றிலும் கெ ஒன்றிலும் இடம் பெற்றிருக்கிறது) ஒரு தொடரும் ஏப்ரல் மாதத்தில் முடிந்திருக்கிறது. இந்த 138 நிமிடப் படம் அமெரிக்காவிலும் கௌதமாலாவிலும் 2006 டிசம்பரில் வெளிவந்திருக்கிறது. சுமார் 40மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப் பட்ட படம் 120 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வசூலித்திருக்கிறது


அதை விட 3 ஆஸ்கார் விருதுகளையும், கோல்டன் அவார்ட்ஸ் போன்ற பல விருதுகளையும் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது


மெல் கிப்சன் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல திரைக்கதாசிரியர், இயக்குனர் என்பதெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்த பின் தெரிந்து கொள்ளலாம்.



நூறு கோடிக்கும் மேல் ஊதியம் எனும் பெறும் நமது நடிகர்களை வரும்போதே ஒரு அதிர்வுடன் திரை உலகம் திரையில் காண்பித்து வரும் நிகழ்வுகள் நிகழ்ந்து வருவது முடிவடைவதாயில்லை.


ஆனால் இந்தப் படத்தில் ரூடி யெங்ப்லட் Rudy young blood என்பவர் தாம் முக்கிய பாத்திரம். அவர் யார் அவர் பின் கதை நகரப் போவதையே நிறைய நேரத்துக்கும் பின் தாம் உணர முடியும்.


இந்தப் படத்தைப் பற்றி ஏன் பதிவு செய்யத் தோன்றியது எனில் : பார்க்கவே கூசுமளவிலான தோற்றம், பழங்குடி மரபுகள், பற்காரைகள், முகத்தில் ஏதோ மணி அல்லது எலும்பு அணிகள், ஆண் அல்லது பெண் குறியை மட்டும் மறைக்க்கும் ஆடை குறைபாடுகள்... ஏதோ நெடிதுயர்ந்த காடுகள், அடவிகள், வனங்கள் அவற்றின் ஊடே பயணம் கதை நகர்தல்...



இந்த இனத்தைப் பிடித்த மாயா அல்லது மயன் இனம் இவர்களை நரபலி கொடுப்பது, பெண்களை ஏலம் விட்டு எடுத்துக் கொள்வது...


இதை எல்லாம் மீறி எந்த நேரத்திலும் உயிர் போகும் என்ற நிலையில் இந்த நாயகன் எப்படி எல்லாம் தப்பிப் பிழைக்கிறார் எப்படி தமது சொந்த வாழ்க்கைக்கு காட்டுக்குத் திரும்புகிறார் தம்மை எதிர்த்து அழிக்க நினைக்கும் எதிரிகளை அழித்து அவர்களிடமிருந்து தப்பி பிழைக்கிறார் என்பதே படம்,



ஆக உயிரின் தப்பிப் பிழைக்கும் ஓட்டம்... நம்மை அவருடன் ஓட வைக்கிறது.


எனவே இந்தப் படத்தை நாம் பார்க்கும்போது வியப்பு மட்டுமல்ல பிரமிப்பு ஏற்பட்டு விடுகிறது.

அடிக்கடி நமது கேபிள் டி.வியில் ஸ்டார் மூவிஸ் சேனலில் இடம் பெறுகிறது

பார்க்கலாம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, April 29, 2022

வாழ்க்கை வளைவில்...கவிஞர் தணிகை

   வாழ்க்கை வளைவில்...கவிஞர் தணிகை



பொய்களின் மேல் தீட்டப்படும் சித்திரம்

மிக வனப்பானதாகவே இருக்கிறது.


நெருப்பு வேறு எதையும் சேர விடுவதில்லை



ஒரு பொன் நாணயம் ஒரே பொன் நாணயம்!

ஒரு செம்பிழம்பு ஒரே செம்பிழம்பு!

இயற்கை சிரிக்கிறது. 

பதிலுக்கு நாமும்...!



பொய் பேசினாலும் பேசாவிட்டாலும்

சாவது நிச்சயம்

பொய் பேசாமலிருந்துதான் சாவோமே!

பொய் பேச வேண்டுமெனில் சாவோமே!


இலஞ்சம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்

சாவது நிச்சயம்

இலஞ்சம் கொடுக்காமலிருந்துதான் சாவோமே!

இலஞ்சம் கொடுக்க வேண்டுமெனில் சாவோமே!



போராடிச் சாவதே மேல்!.

போராடி வாழ்வதுதான் மேல்.


        ‍‍‍‍....கவிஞர் தணிகை

Saturday, April 23, 2022

வீட்டுக்கொருவர்க்கு வேலை ஏற்பாடே போதும் இலவசம் எல்லாம் வேண்டாம்: கவிஞர் தணிகை



வங்கும் சக்தியை அதிகப் படுத்தினால் போதுமே அவர்களே எல்லாம் வாங்கிக் கொள்ள முடியுமே.எப்போதும் பிச்சைக்காரர்களாய் வைத்திருப்பதை விட நிரந்தர வருவாய் உள்ள மனிதர்களே ஒரு நாட்டின் சொத்து.அப்படி ஆக்க வேண்டிய கடமையே அரசின் பொறுப்பு


பொருளாதார மேதை இரகுராம் ராஜன் ஆர்விந்த் சுப்ரமணியம், நோபெல் பரிசு பெற்ற‌ எஸ்தர் டவ்லோ,ஜீன் ட்ரெஜ்,எஸ். நாராயணன் ஆகிய ஐவர் குழு இப்போது தமிழக முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்கள் தந்துள்ளது என்று அறிய அவா! வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகம் நிலவ, விலைவாசி மேலும் மேலும் எகிறிப் போய்க் கொண்டே இருக்க, மதுவும் குற்றங்களும் பெருக...


மிழகத்திற்கு மத்திய தொகுப்பு நிதிப் பங்கீடு 30% மட்டுமே வரிப் பணத்தில் வருவதாகவும், அதுவே உ.பி, பிஹாருக்கு 210 % செல்வதாகவும் ஊடகத்தில் திறந்த அரங்கில் ஒரு இந்திய நிர்வாகப் பணி (ஓய்வு) தெரிவித்திருக்கிறார் இது அதிகாரப் பூர்வமான செய்திப் பகிர்வு.


இந்நிலையில் தமிழக மாணவர்களை ஏய்த்து வட இந்திய மாணவர்கள் பணி சேர்ந்தபோது தந்த மதிப்பெண்கள் பட்டியல் அனைத்தும் போலி என தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...


மத்திய/மாநில அரசுப் பணி குடும்பத்தில் ஒருவர்க்கு

தனியார் பணி நியமனங்கள் குறைந்த பட்ச ஊதிய வழி வகை

விவசாயம்  மற்றும் அதன் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாயப் பணிகளாக மடை மாற்றம்

கூட்டுறவு பணிகளுக்கான முன்னுரிமை

சிறு தொழில் சுய தொழில் மேலாண்மை ஊக்குவிப்பு

மருத்துவம் கல்வி அனைவர்க்கும் இலவசம் சமம்

போக்குவரத்து யாவும் அரசின் வசம்

இலஞ்ச இலாவண்யமற்ற நேர்மை

அரசு ஒப்பந்தப் பணிகளில் உண்மை, வெளிப்பாட்டுத் தன்மை, நேர்மை , நம்பிக்கை


மது, போதை, புகை ஆகிய தீயவற்றின் பால் மனிதர்க்கும் உயிர்க்கும் உலகுக்கும் ஊறு விளைக்கும் யாவற்றின் மேலும் பெரும் நெருக்கடி உதாரணமாக வாங்க முடியா அளவுக்கு விலை உயர்த்தல்

அத்தியாவசிய உணவுப் பண்டங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைப்பு

இலவசம் யாவற்றையும் நிறுத்தி விட வாய்ப்புகள் உண்டு அதற்காகும் செலவை இல்லாதகற்றி விடலாம். அவரவர்க்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்தி தொழில் ஏற்பாடும், வேலை வாய்ப்பும், நிரந்தர வருவாயும் செய்து கொடுத்தாலே போதும்.

இப்படி எல்லாம் செய்து வரும்போது பூரண மதுவிலக்கையும் கூட கொண்டு வர முடியும், மக்களின் நல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்து குற்றப் பின்னணியில் இருந்து விடுபடச் செய்ய முடியும்.


இது போன்ற முக்கிய நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பே ஆட்சிமன்றத்தை மேலும் உயர்த்தும்.

 தமிழக அரசிடம்  இதை எல்லாம் தெரிவிக்க ஆசைதான்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Friday, April 22, 2022

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் நண்பனே நண்பனே!:EARTH DAY கவிஞர் தணிகை

 இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் நண்பனே நண்பனே!: கவிஞர் தணிகை

SO LONG AS THE MILLIONS LIVE IN HUNGER AND IGNORANCE, I HOLD EVERY MAN A TRAITOR WHO HAVING BEEN EDUCATED AT THEIR EXPENSE, PAYS NOT THE LEAST HEED TO THEM
SWAMI VIVEKANANDA



3 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம், காணொளிக் காட்சியில் அவர்கள் ஆசிரியரை அடிக்கச் செல்வதை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து பரவ, உதவி ஆட்சியர் வந்து பாடம் எடுக்கிறார்.ஆனால் வேறொரு நிகழ்வில் முந்திய நாட்களின் செய்தி நான் கடக்க நேர்ந்தது: ஆசிரியர் மாணவரை கை தீண்டியது பற்றி காவல் துறையில் புகார் செய்து விசாரணை நடந்து அவருக்கு தண்டனை வழங்கப் பட்டதாக, ஆசிரியர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி மொபைல் போனில் வகுப்பு எடுப்பதை வைத்து பாலியல் பாடங்கள் கொண்டு செலுத்துவதும் , சமயம் சார்ந்த புனிதகுருமார்கள் பெண்களை பயன்படுத்தி விட்டு கைவிடுவதுமாக நிறைய நிறைய பாலியல் செய்திகள் குற்றப் பின்னணிச் செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகியபடியே இருக்கின்றன. அதில் ஒன்று இன்று 16 வயது சிறுமியை 12 வயது சிறுவன் தாயாக்கி குழந்தை பெற்றதாக...


நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் இவை உணர்த்துகின்றன.

நிறம், மணம், இராஜா, இசை, ஆட்சி, கறுப்புக் கொடி, மசோதா, இரண்டு சூரியன்கள் மத்தியம் மாநிலம் ன்பதையெல்லாம் கடந்து மக்கள் நலம் என்பதில் ஆட்சிமுறைகள் கவனம் செலுத்தியாக வேண்டிய அவசியம் இருக்க அதில் எல்லாம் இவர்கள் கவனம் செலுத்தியாக வேண்டும். அடிப்படையில் கோளாறு இருக்கிறது. நிகழ்வுகள் நடந்த பின்னே கவனம் செலுத்துவது பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை.


இவை போன்றவை நிகழாமல் இருக்க தடுப்பரண் போட்டே ஆகவேண்டும்

வயது வந்தோர்க்கு மட்டும் அந்தக் காலத்தில் A என சான்று பெற்ற CINEMA படங்கள் வந்து அமல்படுத்தப் பட்டது போல வயது வந்து சான்று பெற்றவர்க்கு மட்டுமே மது வழங்க டாஸ்மாக் முன் வர வேண்டும்,

 மேலும் குறிப்பிட்ட வயதுக்கும் மேலானவர்கள் மட்டுமே தொடு திரை செல்பேசி பயன்படுத்தல் வேண்டும் என்ற தடை உடனடியாக இந்தியாவெங்கும் அல்லது இந்தியா அளவில் இல்லாவிட்டாலும் நம் தமிழகத்தின் அளவிலாவது கொண்டுவரல் வேண்டும் என்பது இன்றைய அத்தியாவசியத் தேவை( உடனே பாடம் எல்லாம் அதில் தானே என்றெல்லாம் சமாதானம் சொல்லக் கூடாது அதெல்லாம் வேண்டாம் நேரடிப்பாடமும் வகுப்பாசிரியர் மரியாதையும் மிக முக்கியம்)


எனது ஆசிரியர்களை நான் நினைவு கொண்டு இன்றும் ஏங்கி வருவதும், இயங்கி வருவதும் அவர்கள் எனக்களித்த ஊக்கமும் அவர்களின் மறைவும், அவர்களை எனது வாழ்க்கைப் பதிவு புத்தகத்தில் இடம் பெறச் செய்து எனது நன்றியறிதலை தெரிவித்திருப்பதும்... அந்த நாட்கள் எல்லாம் பொன்னல்ல வைர ஒளி நாட்களாகும் இன்றைய பள்ளியில் நடப்பவற்றைக் காணும்போது எங்களின் காலம் எல்லாம் இனி என்றுமே வாரா நாட்களாகவே கருத இடம் உண்டு.


வடக்கத்திய இளைஞர்கள் பணியில் சேர்ந்த மத்திய மாநில தேர்வாணைய தேர்வுகள் அடிப்படையில் பணி சேர்ந்தமையில் மதிப்பெண் சான்றிதழ்களில் சுமார் 3500க்கு 1500க்க்கும் மேலான சான்றிதழ்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பது மற்றொரு செய்தி.... 


மாணவர்களுக்கு அவரவர் பணிகளை அது தூய்மைபடுத்தும் பணியாக இருந்தாலும் அவரவர் பணிகளை அவரவர் செய்து கொள்ளும் கல்வி, பயிற்சி வழங்கப்படுவதில் தவறில்லை. அது காலம் உள்ளளவும் அவர் உயிர் உள்ளளவும் அவை துணை செய்யும். அதை எல்லாம் தவறு என சொல்லக் கூடாது. இல்லையேல் அதற்கென தனிப்பட்ட முறையில் சிலர் ஒதுக்கப் பட்டு அது அவர்களுக்கு நிரந்தரமாகி அதிலிருந்து சாதியம் தோன்றிய கதைகள் நிகழ்வாகி விடும்.


பூமியில் தேவைக்கு போதுமானவை இருக்கின்றன ஆனால் பேராசைக்கு இல்லை... என மகாத்மா காந்தி சொன்னதை ஏன் நினைவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் இன்று" புவி தினம்"EARTH DAY 2022

THE EARTH HAS ENOUGH FOR EVERY MAN'S NEED

BUT NOT ENOUGH FOR EVERY MAN'S GREED

-----GANDHIJI



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Wednesday, April 20, 2022

நீல வெளிகளில்: கவிஞர் தணிகை

 நீல வெளிகளில்: கவிஞர் தணிகை













18.04.22 அன்று எங்கள் ஊரில் இலேசான நிலநடுக்கம். சேதம் ஏதுமில்லை.அணையில் 100 அடிக்கும் மேல் இந்த கோடையில் நீர் இருப்பது மகிழத்தக்கது.அது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ...ஏதோ வெடிச்சத்தம் போன்றிருந்ததாகவும் அதன் பின் நிலத்தடியில் பாறைகள் உருண்டு ஓடுவது போலவும் இருந்ததாக ஒரு நண்பரின் பகிர்வு


மற்றொருவரும் ஆம் சுமார் 11.30லிருந்து இரவு 11.40க்குள் இருக்கும் வெடிச்சத்தம் போன்றும் மாட்டு வண்டி ஓடுவது போல கட கட என சத்தம் வந்ததாகவும் வண்டி ஏதாவது வீட்டருகே வந்து நிற்கும் என எதிர்பார்த்ததாகவும் ஒரு குடும்பத் தலைவியின் ஆமோதிப்பும்,


 மற்றொரு இளைஞர் எங்கள் வீட்டு முன் நிறுத்தி இருந்த கார் ஆடியது என்றும் மேற்கூரை அசைந்தது என்றும்  அநேரத்தில் உறங்காமல் விழித்திருந்ததால் பார்த்தோம், உணர்ந்தோம் என்றும் கூறி இருக்கின்றனர்.


இதைப் பற்றி எந்த ஊடகமோ தினசரியோ செய்தியை வெளியிடவில்லை. எனவே இதைப் பதிவு செய்வது அவசியமாகிறது.


19.04.2022 மாலை சுமார் 4 மணி இருக்கலாம் திடீரென அத்திக் கட்டி ஆலங்கட்டியுடன் சிறிதளவு மழை. பெரியவர்களே கூட வியந்து சிறு பிள்ளைகள் போல அதைப் பொறுக்கிக் கொண்டு எடுக்க, சிலர் வாயில் இட்டு மகிழ்ந்தனர்.


தம்மை பெரும் சாதனையாளர்களாகக் கருதிக் கொள்வோரை அல்லது தான் என்ற கர்வம் உள்ளோரை எல்லாம் இந்த மாபெரும் இயற்கையின் முன் சிறிது நேரம் வெட்ட வெளியில், பெரு வெளியில் , மலைமுகட்டில் நிறுத்தினாலே போதும் நாமெல்லாம் ஆழிப்பேரலையில் ஊழித்தாண்டவத்தில் சிறு துகள் ஏன் ஒன்றுமில்லா பிழைகள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அப்பேர்ப்பட்ட காற்று, அப்பேர்ப்பட்ட மழை, அப்பேர்பட்ட சுழி, சுழல், அப்பேர்பட்ட கடலும் அலையும் இன்ன பிறவும்.


நீல வெளிதனின் நின்றோடும் புவி, ஏனைய கிரகங்கள், விண்மீன்கள், விண்கற்கள் என சொல்லொணோ வேகத்திடையே நின்றாடும் பூமியின் சிற்றுயிர்களாகிய நம்மிடை ஊடகம், தகவல், தொடர்புகள் யாவும் முக்கியமானவையே.

வார்த்தைகள் சிலருக்கு ஆய்தம் பெரியார் போன்றோர் அதை அப்படித்தான் பயன்படுத்தினார்கள்

வார்த்தைகள் சிலருக்கு கருவி பேரறிஞர் அண்ணா போன்றோர் அதை அப்படித்தான் பயன்படுத்தினார்கள்

here we remembers: Jeevanantham,E.V.K.Sampath, Navalar and others

வார்த்தைகள் சிலருக்கோ வெறும் விளையாட்டு, சிலருக்கோ அவ்வப்போதைய இடவெளியின் இட்டு நிரப்பல்கள்

சிலருக்கோ வெத்து வேட்டு.


ஆனால் உண்மையில் உருவ அடையாளமே தெரியா வள்ளுவப் பெருந்தகைக்கோ தமிழின் தலைமகனுக்கோ பெரும் வடிவம்.வார்த்தை வழி அவர் வாழ்கிறார் என்றுமே...நீல வெளிதனில் உண்மையொளி அவை யாவும். பாரதியின் உருவத்தை நாம் பார்க்கிறோம். ஆனால் வள்ளுவரின் வார்த்தைகளைத்தான் நாம் காணமுடியும். அவரின் உருவம் சிலர் வழி நமக்கு கிடைத்த கனாவும் கற்பனையுமே...


இறைவா!

அமைதியின் கருவியாய் என்னை ஆக்கியருளும்

பகையுள்ள இடத்தில் அன்பையும்

தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும்

பிரிவுள்ள இடத்தில் ஒற்றுமையையும்

பிழையுள்ள இடத்தில் உண்மையையும்

சந்தேகமுள்ள இடத்தில் உறுதியையும்

இருள் உள்ள இடத்தில் ஒளியையும்

கலக்கம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்

நான் விதைப்பேனாக!  

மதர் தெரஸா.




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Sunday, April 17, 2022

தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்யுங்கள்: கவிஞர் தணிகை

 தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்யுங்கள்: கவிஞர் தணிகை





கடந்த வாரத்தில் எனது மகனது 5 ஆம் வகுப்பு பயிற்றுவித்த ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்ததாக கேள்விப் பட்டேன்.


என்னதான்" மனந்திறந்து பேசலாம் வாங்க"

தெய்வா மக்கள் நல ஆலோசனை மையம் ( இலவசம்)


நீலக் கிரகமான பூமியைத் தவிர உயிர்கள் வேறெந்தக் கிரகத்திலும் காணப்படவில்லை

என்றெல்லாம் சொன்னாலும் எழுதினாலும் எவரும் வருவதாகவோ மீள்வதாகவோ பெருமளவு இல்லை. எப்போதோ ஒரு அத்தி பூக்கிறது...


தற்கொலைகள் அவ்வப்போது நடந்த வண்ணமே இருக்கின்றன.

எனவே தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்தால் ஒழிய இவர்கள் தப்பிக்க வழி இல்லை...


இந்த உலகில் அந்தரங்கமான சங்கீதத்திற்கு வடிவம் தந்து பாட முடிவதில்லை என்று சொல்லி இருப்பார்

தீபம். நா.பார்த்த சாரதி ஒரு நாவலில்.


இயற்கையை வணங்கக் கற்போம்

இயற்கையை வணங்கி நிற்போம்...


உயிர்களின் தோற்றம் மாற்றம் ஏற்றம் இறக்கம் மறைவு எல்லாம் கண்களுக்குப் புலப்படாதது...

இயற்கையை வணங்கி என்றும் உயிர்த்திருப்போம்...


வாழ்க 

 நீண்டு வாழ தற்கொலை எண்ணத்தைக் கொலை செய்யுங்கள்...




மறுபடியும் பூக்கும் வரை 

கவிஞர் தணிகை.

Wednesday, April 13, 2022

தமிழக அரசின் மறுபடியும் வரவேற்கத் தக்க முன்னேற்றப் பாதையில் ஒரு அடி: கவிஞர் தணிகை

 தமிழக அரசின் மறுபடியும் வரவேற்கத் தக்க முன்னேற்றப் பாதையில் ஒரு அடி: கவிஞர் தணிகை



இன்றைய தினசரிகளில்  சில முக்கிய செய்திகள் அவற்றுள் எனக்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியதான செய்தியாக இது பதிவாகி இருக்கிறது.


அது யாதெனில்


முதல்வர், முதன்மைச் செயலர் இன்னபிற முக்கியஸ்தர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இனி ஓட்டுனர் பயிற்சி உரிமம், உரிமம் புதுப்பிப்பு, உரிமம் விலாச‌ மாறுதல் ஆகியவற்றுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பித்து பெறும் ஏற்பாட்டை ஆரம்பித்துள்ளனர் என்பது...

Vehicle Learners Licence  LLR

Vehicle Licence Renewal

 Address change

இந்தியா இடைத்தரகர்கள் முன்னேற பெருவாய்ப்பு அளிக்கும் நாடாக இருக்கும்போது இது போன்ற திட்டங்களும் அதன் அமலாக்கங்களும் மட்டுமே அரசு மற்றும் மக்கள் ஆகிய இருமுனைகளுக்கு நடுவே இருக்கும் இடைத்தரகு முறையை ஒழிக்கும்.இடைவெளியை குறைக்கும்.


 இலஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக‌ அரசினால் முடிந்ததை செய்து வருவதாகத் தெரிகிறது. அதில் அவர்கள் மூதாதையர், பரம்பரை, சொத்து, ஏற்கெனவே வாழ்ந்த வாழ்வு முறை எல்லாவற்றையும் வைத்து பார்த்துக் கொண்டு சாயம் பூசியபடி பேசுவதை விட நேர்மையாக இப்போதிருந்தாவது ஆரம்பிக்க முயற்சிக்கிறார்களே என்று பார்த்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வரவேற்று பாராட்டுதலில் ஈடுபடவேண்டும். அதிலும் இதுபோன்ற திட்டங்களில் பொறுமையாக அவரவர் வரிசையில் அவரவர் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் பணி நடக்கும் என ஒழுங்கமைவுடன் அவசரகதியின்றி அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அது நல்லாட்சியில் நல்ல விளைவுகள் மலர இடம் கொடுக்கும்.


இடைத்தரகர்கள் எந்தவித தகுதியுமின்றி 4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பள்ளி இறுதி கூட தாண்டாமல் இருப்போர் மற்றும் இன்ன பிற சிலர் தொழில் கிடைக்கவில்லையே என்று இந்த தொழிலில் ஈடுபட்டு இதிலும் சாதி, இனம் ஆகிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் கார் பங்களா என பெரிய வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.


அரசை அணுகி சாதாரண மனிதர் யாவருமே தங்கள் தேவையை நிறைவு செய்து கொள்ள பெரும் தடையாகி விடுகிறார்கள். எனவே இது போன்ற தருணத்தில் இந்தக் கடுமையான காலக் கட்டத்தில் இது போன்ற முயற்சிகள் வரவேற்கத் தக்கது.


சொத்துவரி ஏற்றம், மற்ற நிகழ்வுகள், பற்றி எல்லாம் இன்னொரு நாள் பேசுவோம், குடி நீர் கட்டணம்: மாதமொன்றுக்கு ரூ.220, நெட் பில்:ரூ. சுமார் 600,வீட்டு வரி ஏற்றம், அத்துடன் 2 மாதத்துக்கு 100 யூனிட் வரை நுகர்வோர் மின்சாரக் கட்டணமே இல்லாமல் இருந்து வருவது கவனிக்கத் தக்கதுதான்.


மேலும் நானறிந்த ஒரு குடும்பம் அரசுப் பணியில் இருந்தபடியே இன்னும் இலவச அரிசி சலுகையைப் பெற்று வருகிறது, அதிலும் அவர்கள்தாம் முன்னதாக அந்த சலுகையை அனுபவித்து வருவதும் தெரிகிறது.


மத்திய அரசுப் பணிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து 200க்கும் மேற்பட்ட வட நாட்டார் தமிழகத்தில் பணிபெற்றிருப்பது அதிலும்  அரசு நடத்தி வைத்த தமிழ் தேர்வில் எல்லா மதிப்பெண்களும் அவர்கள் பெற்று தேறி இருப்பது என நிறைய குழப்பங்கள்


எல்லா அரசுப் பணிகளையும் கணக்கிட்டு, மாநில, மத்திய, மேல் இருந்து அடி மட்டம் வரை, தமிழகத்தில் எத்தனை குடும்பங்கள் எனக் கணக்கிட்டு வீட்டுக்கு அல்லது குடும்பத்துக்கு ஒருவர்க்கு மட்டுமே அரசு பணி அதிலும் அவரவர் தகுதிக்கேற்ப வாழ்வு உத்தரவாத அடிப்படைச் சம்பளத்துடன் என்ற ஒரு யுக்தியைக் கொண்டு வர முயற்சித்தால் எல்லா இலவச செலவுகளையும் குறைக்கலாம் விலையில்லா பொருட்களையும் கொடுக்க வேண்டிய அரசின் சுமைகளும் குறையும்....


இலவசக் கட்டணத்தை பெண்களுக்கு கொடுத்திருப்பதற்கு பதிலாக கட்டணத்தை அரசுப் பேருந்துகளில் ஏற்றாதிருந்தாலே கூட நல்லதுதான்...எல்லாம் அரசியல்...அப்பா எல்லாம் அரசியல்.


வீயாபாரிகள் வசம் இருக்கும் உலகை கொஞ்சம் மீட்க வேண்டும்

ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் தங்கம், இரும்பு போன்றவற்றிற்கு ஏன் மளிகை எண்ணெய் பொருட்களுக்கும் கூட‌ உக்ரைன், ரஷியா போரைக் காட்டி பன்மடங்கு விலையேற்றி பலநூறு சதவீதம் இலாபம் சம்பாதிக்கின்றனர். வேறு வழியில்லாமல் வாங்கும் நுகர்வோர் கவனிக்க வேண்டும் அவற்றை அவசியம் அப்போதே வாங்கத் தான் வேண்டுமா என்று?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, April 11, 2022

விலங்கு: கவிஞர் தணிகை

 விலங்கு: கவிஞர் தணிகை



அருளானந்தம் சலித்துக் கொண்டார், எங்கே போகிற எழவு எல்லாம் இங்கேயேதான் வந்து முடிய வேண்டுமா? நானேதான் அதை எல்லாம் செய்ய வேண்டுமா? மிகவும் துக்கமாக இருந்தது அவருக்கு.

அந்த அரை சைஸ் உள்ள பெண் பன்றி ஒன்று அவர் வீட்டருகே பின் புறமாய் ஓடும் கழிவு நீர் ஓடை ஒன்றில் இறந்து கிடந்தது வாயில் வெண்ணிற நுரை தள்ளி இருந்தது.


ஏற்கெனவே ஒரு முறை அப்படி இறந்து கிடந்த‌ ஒரு நாயை இவர்தான் புதைத்து இருந்தார். அக்கம் பக்கம் இருக்கும் எவருமே வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர அதன் விளைவு என்ன, அதை என்ன செய்ய வேண்டும் சுற்றுப் புறம் அப்படியே விட்டால் துர்நாற்றம் வீசுமே கிருமித் தொற்று ஏற்படுமே என்ற கவலை எல்லாம் எவர்க்கும் இல்லை.


அந்த நன்னீர் ஓடையாய் இருந்த ஓடை, மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓடை , மனிதர்கள் மீன்களுக்காக கட்டி வைத்திருக்கும் படலில் தேங்கியிருக்கும் மீன்களை பாம்புகள் வந்து இரையாகத் தேடித் தின்று கொண்டிருந்த ஓடை  இப்போது கழிவு நீர் ஓடையாக இருந்தது.கெம்ப்ளாஸ்ட் என்னும் இரசாயன ஆலையால் அதன் கழிவுநீரால் காவிரிக்கரையோரம் இருந்த அந்த சில ஊர்களின் மண் வளம் நீர் வளம் யாவும் இரசாயனக் கழிவாகின, குடிநீர்க்கிணறுகள் மூடப்பட்டு  வீட்டில் ஆளுக்கு ஒரு கிணறு என்று வைத்திருந்த குடிமக்கள் குடி நீருக்காக பிச்சை எடுக்க ஆரம்பித்தது இன்னும் முடிவுக்கே வர வில்லை...அதெல்லாம் வேறு கதை அதில் 60 வருட அரசியல் கழிவு கலந்திருந்தது.

 பன்றிகள் சுத்தம் செய்யும் தொழில் செய்து வந்தன. சிறுவராக இருந்த போது பன்றிகள் மேல் ஒரு அசூயை இருந்த நினைவை வளர்ந்த பின் அருளானந்தம் மாற்றிக் கொண்டார், அவையும் இல்லை என்றால் அவற்றால் ஏற்படும் சுத்தத்தை யார் தான் செய்கிறார் இங்கே... மேலும் பைபிளில் ஜீசஸ் ஒரு இடத்தில் ஆவிகளை பன்றிக் கூட்டத்தின் மேல் ஏவி அவற்றை கடலில் விழச் செய்தார் என்ற செய்தியை விமர்சித்தார் ஏன் அவை மட்டும் உயிர்கள் இல்லையா அவை என்ன பாவம் செய்தன? பாவிகளை இரட்சிக்கவே வந்தார் என்கிறார் இந்த அப்பாவி உயிர்கள் மேல் அவருக்கு கருணை இருந்திருக்கக் கூடாதா? என்றெல்லாம் யோசிப்பார்... 


என்ன செய்வது என யோசித்துக் கொண்டே நடைப்பயிற்சியை மேற்கொண்டார், எப்படி செய்வது ஒரு நீண்ட கடப்பாரையை வைத்து ஓடும் நீரில் நடுப் பள்ளத்தில் தள்ளி விடலாமா? அப்படி தள்ளினாலும் அது நீரால் அடித்துச் செல்லப் படுமளவு அதிக நீர் போகவில்லையே... அதனால் ஏதும் எங்க பக்கம் ஏன் தள்ளினீர் என வம்பு செய்யவே தயாராய் இருக்கும் முனியம்மா வந்து விடுவாளா? சரக் என ஒரு மரக் கிளையை வெட்டினாலும் முருங்கை கிளை ஒடிந்தாலும் போதும் அவள் அந்த ஓடையின் அக்கறையிலிருந்து எட்டிப் பார்த்து பிலாக்கணம் பாடுவாளே...ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்ட வந்த கதையாயிற்றே..முனியம்மா முந்தா நாளில் முளைத்த காளான், இவர் பிறந்து வளர்ந்து 60 வயதாகி அங்கேயே இருந்து வருகிறார், அவரை அந்த பிடாரி விரட்ட ஆரம்பித்த கதை இவரால் செரித்துக் கொள்ள முடியாதது. இரவானதும் எவருக்கும் தெரியாமல் தள்ளி விட முடியுமா?


அல்லது 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி ஊற்றி எரித்து விடலாமா? வேண்டவே வேண்டாம் வம்பாகிவிடும். நாற்றம் அடிக்குமே...



அந்த தாய்ப் பன்றியின் பல குட்டிகளும் தாய் உயிரோடிருப்பதாக எண்ணி எண்ணி ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு பால் மடியைக் கவ்வி உறிஞ்சி குடிக்க முனையும் பரிதாபம்...கண்களில் ஓடியது.


சுமார் ஒன்னரை மணிக்கும் மேல் சுமார் இரண்டு மணி நேரமே இருக்கும்  நடைப்பயிற்சியை முடித்துஇரவின் ஆரம்பத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்த வளவில் ஒற்றைப் பனையருகே வேலியோரம் எதையோ கருக்கிக் கொண்டிருந்தார்கள்...அருகே நெருங்கினால் பன்றிதான். அன்று சனிக்கிழமை.விடிந்தால்/விடிந்தவுடன்  ஞாயிறு சந்தை நாள். 


என்னப்பா அந்த பள்ளத்தில் கிடந்த பன்னியா? பார்த்துப்பா  வாயில் ஏதோ வெள்ளை நுரை இருந்தது திங்கக் கூடாததை ஏதோ தின்று இருக்கும் போல இருக்கு... எதுக்கும் எச்சரிக்கையாய் இருங்க என்று சொல்லி விட்டு ஒரு பிரச்சனை தீர்ந்தது என்று பெருமூச்சு விட்டபடி வீட்டை அடைந்தார்.


என்னப்பா பன்றியை எடுத்துக் கொண்டு சென்று தீய்த்துக் கொண்டிருக்கிறார்கள்...என வாசுகியைக் கேட்டார். ஆமாம் நீங்கள் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் வந்து எடுத்துச் சென்று விட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் போல் இருக்கிறது. எண்ணிக்கை கணக்கு மாலையில் பார்ப்பார்கள் போலும்,மேலும் அந்த சிறு குட்டிகள் தாயின்றி தவிப்பதை வைத்தும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

*****************************************************************************************************


PART II.


ஏனோ இவருக்கு , தொலைக்காட்சியில் சிசி டிவியில் பதிவானது என பிள்ளைத் தாய்ச்சி பெண் தோழியுடன் மருத்துவமனை சென்று பிரசவித்து குழந்தையை கொன்று கழிவறையில் வீசிச் சென்ற காட்சியும்,

ரயில்வே ரோட்டில் உயிருடன் பெண்குழந்தையை பொதுமக்கள் காவலர் உதவியுடன் எடுத்து காவல் நிலையம் சேர்த்ததும், கள்ளக் காதலுக்காக பிள்ளைகளைக் கொடூரமாக கொன்று விடும் செய்தியும்


தாயும், மகனும் மாதக் கணக்காக குடித்தபடியே இருந்து, சோறு இல்லாமலே இருந்து இறந்த செய்தியும்


பீடிக்காக அவனைக் கொன்றேன் என குடிகாரன் தந்த வாக்கு மூலமும்,

 சிறுமியை வன்புணர்ச்சி செய்யும் விடலை, வயோதிகம் பற்றிய செய்தியும்,


 சொந்த தந்தையே மகளை வன்புணர்ச்சி செய்த பின் தங்கை வயசுக்கு வந்ததும் அவளையாவது காப்பாற்றலாம் அவளையும் விடமாட்டான், நமது வாழ்க்கையைத்தான் பெற்ற அப்பனே சீரழித்து விட்டான் என இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள் எனக் கேட்ட பள்ளி ஆசிரியைகளிடம் நிலையைச் சொல்லி தங்கையையாவது தந்தையிடமிருந்து காப்பாற்றிவிடலாம் என உண்மையை சொல்லி தந்தைக்கும் தாய்க்கும் தண்டனை பெற்றுக் கொடுத்த‌ (இது தெரிந்த தாய் ஒரு முறை தந்தையை வெளக்கமாறால் அடித்து பயனின்றி விட்டு விட்டதால் அவளும் உடந்தை என அரசு வழி கைதான) செய்திகளும்,


பெற்ற தந்தையே தனயனை, பேரன் பேத்திகளை, மருமகளை வீட்டில் பூட்டி விட்டு , நீர்த் தொட்டியைக் காலி செய்து, மின்சாரத்தை துண்டித்து, தப்ப முடியாமல் படுக்கையறைக்குச் சென்றதும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய செய்தியும்



மேலை நாடுகளில் இருந்தபடி குழு பாலியல் உறவை மேற்கொண்ட நாடு தழுவிய செய்தி கடவுளின் தேசத்தில் இருந்து புறப்பட்டிருந்த செய்தியும், எப்போது பார்த்தாலும் பெண்களின் நிர்வாணப் படங்களை இணையத்தில் போட்டு விடுவேன் என பயமுறுத்தி வன்கொடுமை செய்வதும் பணம் பறிக்கும் செயல்கள் செய்தி வரும் நாளிதழ்களும்,


அனைவரிடமிருந்துமே மாற்றம் என்பது வர வேண்டும்

ஒவ்வொருவரிடமிருந்துமே அது துளிர் விட வேண்டும்...

அப்போதுதான் ஒரு சமுதாய மாற்றம் சாத்தியம்

 அதற்கு உழைப்பை நல்க வேண்டும்...

THERE IS NO ACHIEVEMENT WITH OUT SACRIFICE ...DR.S.RADHAKRISHNAN


அந்த ஓடையை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பஞ்சாயத்து சுத்தம் செய்து மராமத்து, பராமரிப்பு, சுற்று சுவர், நீர் ஓடைக்கு கான்க்ரீட் நீர்ப்பரப்பு எனச் செய்வதாக சொல்லி இருக்க....மக்கள் மறுபடியும் குப்பைகளை அதில் வந்து கொட்டாதீர் என சொல்லியும் எவரும் கேட்பதாக இல்லை. பாலத்தின் மேல் சிசிடிவி வைத்து கண்காணித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் காலமும் வருமோ?


சுத்தம் செய்யும் ஜுவன்கள் அசூயை படைத்ததா?

அவற்றைக் கூட சாகடிக்கும் நச்சு மரங்கள் பெருமை படைத்ததா?

அருளானந்தத்தின் கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை பதில் ஒன்றே என்றிருந்த போதும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.







Sunday, April 10, 2022

டாணாக்காரன்: கவிஞர் தணிகை

 டாணாக்காரன்: கவிஞர் தணிகை



2 மணி நேரம் 21 நிமிடம் நீளம். நேரம் போனதே தெரியவில்லை இதுவே படத்தின் முதல் வெற்றி. மிகவும் கனகச்சிதமாக தேவைக்கதிமாக காட்சிகள் இல்லாத தொகுப்புப் பணிக்கு அடுத்த வெற்றி... இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.


டாணாக்காரன் என்ற இந்தப் படத்தைப் பற்றி சொல்லியாகவேண்டும் என்ற பாதிப்பு பார்த்த உடன் ஏற்பட்டு இருக்கிறது. இதை டிஸ்னி‍ ஹாட்ஸ்டாரில் 08.04.22 அன்று  ஒளி பரப்பி விட்டார்கள். தியேட்டரில் ரிலீஸ் இல்லை.இதைப் பற்றி எழுத எனக்கு 2 நாள் ஆகி விட்டது. ஆனால் எழுத வேண்டும் என்ற நிர்பந்தமே எழுத வைக்கிறது.


மிக நல்ல அரிய உயரிய படம். தமிழ் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் காவல்துறைக்குத் தேர்வு பெற்றவர்களுக்கான பயிற்சியில் நடப்பவை.

ஆனால் இதில் ஒரு வரலாறே அடங்கி இருக்கிறது. நிறைய பேர் இறந்திருக்கிறார்கள் பயிற்சியில் என்கிறது படம்.



இன்னும் நமது சிறைகள் ஆங்கில அடக்கு முறை பாணியில் இருந்தே வெளிவரவில்லை.

அதே போலவே நமது காவல் துறையும் தான்.

விக்ரம் பிரபுவுக்கு பேர் சொல்ல இது ஒரு நல்ல படம்.


லால் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே இயல்பான நடைமுறை நடப்புக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள்  இதுபடத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இயக்குனர் துணிந்து இது போன்ற கருப்பொருளை எவரையும் காயப்படுத்தாமல் கையாண்டிருப்பது அவரது திறமைக்குச் சான்று.


மறுக்க முடியாத உண்மைகள் சில சம்பவங்களாக கோர்க்கப் பட்டிருக்கின்றன. லிவிங்ஸ்டன் காவல் நிலையத்தில் அவமானப்பட்டு உயிரிழப்பது அதன் வாரிசாக வரும் சிறுவன் விக்ரம் பிரபுவாக காக்கி சட்டை சீருடையில் காவலராக வேண்டுமென்பதே வாழ்வின், உயிரின் இலக்காக கொள்வது அதனிடையே நடக்கும் சம்ப்வங்களும் போராட்டக் களமுமே படம்.


 சில காட்சிகள் மட்டுமே அல்லது சிறிது நேரமே இடம் பெறும் போஸ் வெங்கட், காவல் துறையில் பயிற்சி பெறும் காவலர்களுக்கு இலஞ்ச ஊழல் பற்றி பாடம் எடுக்க வரும் ஒரு உண்மையான காவலராக வருவதுடன் படத்தின் அடிநாளத்தை இரத்த ஓட்டத்தை உயிர் நாடியை எடுத்துச் சொல்கிறார்: அது என்னவெனில்: 

விருது, பரிசு வாங்க வேண்டுமென்பதும் அதன் முக்கியம் கருதியும் ஒரு வேலை கிடைத்து விட்டது என்றும், சுயநல குடும்ப பொருளாதார பிரச்சனை களைய பணி என்றும் இது போன்ற‌ காரணங்களுக்காக காவலர் சீருடையை அணிய முனையாதீர் அதை விட முக்கியம் மக்களுக்கு ஒர் பிரச்சனை என வரும்போது அதைக் களைய அங்கு உண்மையான காவலர் தேவை அப்படி ஒரு உண்மையான காவலராய் இருக்க இன்றைய இளைஞர் முன் வர வேண்டும் அந்த நினைவுடன் இருப்பார் மட்டுமே காவலர் தேர்வுக்கும் வர வேண்டும் அதுவே காவலரை பெருமைப் படுத்தும் காவல் துறைக்கு நல் பேரை விளைவிக்கும் என முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் தமிழ்.


அது மற்ற படங்களை விட இந்த படத்தை மேல் கொண்டு சென்று இருக்கிறது. லால் என்ற நடிகர் ஈஸ்வர மூர்த்தியாகவே வாழ்ந்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பதவி உயர்வு கிடைக்காத போலீஸ்காரராக, இப்படியே செல்லும் படத்தில் மலம் கழிக்க வரிசையில் நிற்கும் பயிற்சிக் காவலர்கள் முதல் அதில் அவசரமாக வருவதாகச் சொல்லி கத்திப் பார்த்தும் முடியாமல் அரைக்கால் சட்டையிலேயே கழிப்பவர், பயிற்சியின் கடுமை, கொடுமை, கெட்ட வார்த்தை என்பது கலாச்சாரம் என்பது,  இப்படி எல்லா அவலங்களும் அம்பலப் படுத்தப் பட்டுள்ளது.



மேலும் அந்த பயிற்சியும் துறையும் ஆங்கில ஆதிக்கத்தின் எச்சமாகவே இருப்பது, நமது மண்ணின் மாந்தரை,நமது மனிதர்களை தேர்வு செய்து நம்மையே அடித்து துவைத்து கொன்று குவிக்க ஆங்கிலேயரின் ஏவல் நாய்களாகவே இருந்தாரின் வழித் தோன்றலாகவே இன்றும் ஏன் இந்த காவல் துறை தொடர வேண்டும் என்ற கேள்விகளை பயமின்றி எழுப்பி இருக்கிறார் இதன் இயக்குனர் தமிழ்


ஆனால் இன்னொரு பக்கத்தை எடுத்துக் கொண்டால் காவலர் இல்லை எனில் கையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாறி பொதுமக்களை மிரட்டி வருவாரை எவர் தான் தடுக்க முடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை


இதை எல்லாம் சீர் படுத்த இடையில் ஏதோ ஒன்று தேவை...அதுதான் பக்குவம். பதவியின் பொறுப்பு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு. நமது மக்களுக்கான சேவையில் நாம் இருக்கிறோம் என்ற நல்ல எண்ணம். அதைச் சொல்ல முனைந்து முயன்றிருக்கும் படம். ஒரு நல்ல காவல்காரர் அந்த இடத்தில் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காதில்ல  போன்ற வசனங்கள் பாராட்டும்படியாக இருக்கிறது.


எமது பகுதியிலேயே கொலை ஒன்று சர்வ சாதாரணமாக நடந்துள்ளது, மேலும் பொது நலம் சார்ந்த வசதி வாய்ப்புகளை எல்லாம் கூட தனிப்பட்ட நபர்களே ஆக்ரமிப்பது, அதை வேறு எவரும் கேட்க முனைந்தால் அவர்களை வன்முறையில் ஈடுபட்டு மிரட்டுவது என்கிற பேர்வழிகளை எல்லாம் காவல் துறை இல்லையேல் வழிக்கு கொண்டு வருவது என்பதுவும் இயலாத காரியம்.


எனவே நல்ல காவலர்களின் சேவையை மெச்சவும் பாராட்டவும் மரியாதை செய்யவும் போற்றவும்

மக்களை  தீயவரின் பேச்சுக்கடிமைப்பட்டு தீயவர் அணியில் இணைந்து கொண்டு துன்புறுத்துவதுமாக‌ செயல்படும் காவலர்களை அகற்றவும் தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனது தனிப்பட்ட மற்றும் கூட்டுக் கடமையுமாகிறது.



டாணாக்காரன் என்றால் காவல்காரன் என்ற பொருள், பொதுவாக ஒரு அமைப்பை, ஒரு கட்டடத்தின் முன் வாயிலில் நின்று கொண்டு காவல் காத்துக் கொண்டு இருப்பவரது நினைவே இந்தப் பேரைக் கேட்டால் வரும். இது ஒரு ஆங்கில ஆதிக்க கால வார்த்தை போல இருக்கிறது. இதை ஏன் தலைப்பாக வைத்தார் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது.


கட்டாயம் 100க்கு 75க்கும் மேல் மதிப்பெண் தர வேண்டிய படம். இதில் எங்கும் ஓட்டை உடைசல், பிசிறு, தவறான சித்தரிப்புகள், முரண்கள் இருப்பதாகவே தெரியவில்லை. எல்லாம் நேர்மையாக இருப்பதையே நேர்மையாகவே காட்டி இருக்கிறார்கள். நல்ல படம். நாட்டுப் பற்றுடன் எடுக்கப் பட்டிருக்கும் படம். இன்றைய மக்களுக்கு மட்டுமல்ல இன்றைய காவல் துறையில் சேர முனையும் இளைஞர் அவசியம் பார்த்து தெரிந்து கொண்டு அதன் பின் பணியில் பயிற்சியில் சேர இந்தப் பட‌த்தைப் போட்டுக் காட்டலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


ஒரே சூரியன் ஒரே நிலா ஒரே வானம் ஒரே பூமி வாங்கடா: கவிஞர் தணிகை

 ஒரே சூரியன் ஒரே நிலா ஒரே வானம் ஒரே பூமி வாங்கடா: கவிஞர் தணிகை

WINDZOID COURIER SERVICE 1830 E MILLS AVENUE EL PASO TX USA 79901

வின்ட்ஜாய்ட் கூரியர் சர்வீஸ் என்ற நிறுவனம் வேலை தருவதாக படித்த இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து வரும் செயல்பாடு பற்றி ஒரு ஆங்கிலப் பதிவை செய்திருந்தேன். in my DAWAN PAGES WORDPRESS.COM அதைப் படித்த ஜோஸப் உல்ரிச் என்ற ஜெர்மானியர் நான் அதில் ஈடுபடுபவனல்ல எனது சுயசரிதையைப் பாருங்கள் என்று பதில் அளித்துள்ளார்.  அவருடைய மின்னஞ்சல் வழிதான் அந்த இளைஞர்க்கு முதல் தொடர்பு ஏற்பட்ட அவருடைய சுயவிவரங்களை அனுப்பச் சொல்லி அந்த போலி நிறுவனம் கேட்டிருந்தது



அந்த நிறுவனம் 1830 இ மில்ஸ் அவென்யூ எல் பசோ டெக்ஸாஸ் மாநிலம் 79901 ஐக்கிய அமெரிக்க குடியரசு என்ற இடத்தில் இயங்கி வருவதாக அந்த இடத்தில் பணிபுரிய ஆள் தேவை என ஏமாந்த இளைஞர்களிடம் பணம் பிடுங்கி ஏமாற்றி வருகிறது.


அதற்கு கையாட்களாக ஒரு வலைப்பின்னலை வெப்சைட்டை வைத்திருக்கிறது முதலில் ஜோசப் உ.உல்ரிச் என்பவர் தனது மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்கிறார் அதை அடுத்து வில்சன் எல்லிஸ் பேரி என்ற நபர்   இதன் இந்த போலி நிறுவனத்தின் மனித வள மேலாளராக இருப்பதாகவும் அவருடைய மின்னஞ்சல் வழி தொடர்கிறார். இவர்கள் வாட்ஸ் ஆப், மின்னஞ்சல், தொலைபேசி வழியாக பேசி காணொளிக் காட்சி வழியாகக் கூட இல்லாமல் ஒரு கேள்வி வினாத்தாள் மூலம் விடை தரச் சொல்லி அதன் மூலம் தேர்வு பெற்றதாகவும் தொடர்புடைய புகைப்படம், பாஸ்போர்ட் ஸ்கேன் காபிகள், டிகிரி சான்றிதழ் எல்லாவற்றையும் அனுப்பும்படி எல்லாம் மின்னஞ்சல் வழி உடனுக்குடன் நடந்த உடன், எதிர்பாரா ஒரு பெரும் தொகையை ஊதியமாகத் தர விருப்பதாகவும் அதற்கு முன் விசா பணிகளை கவனித்து கொடுத்தால் விமான அனுமதிச் சீட்டை அனுப்பி வைப்பதாகவும் இங்கு செய்யும் செலவு அனைத்தையும் நிறுவனத்தில் சேரும்போது மீட்டுக் கொள்ளலாம் என்றும் அதைப் பார்த்த உடன் உடனே விமான அனுமதிச் சீட்டை அனுப்புவதாகவும் தெரிவித்ததை நம்புவோர்க்கு


உடனே விசா விண்ணப்ப எண்: ஒன்றை அளித்து விசா விண்ணப்ப மையத்தில் மாண்பு மிகு.செல்வி.குளோரியா பெர்பெனா என்பவரை தொடர்பு கொள்ளுங்கள் என அவருடைய முழு தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் ஆப் எல்லாம் தருகிறார். அந்த செல்வி குளோரியா பெர்பெனா என்பார் பற்றி இணையத்தில் தேடினால் அவர் உண்மையிலேயே அமெரிக்க ஐக்கிய குடியரசின் தலையாய அலுவலகப் பணிபுரியும் குழுவில் ஒருவராக பொது உறவு  PUBLIC AFFAIRS (பப்ளிக் அஃபேர்ஸ்) கவனிக்கிறார் என வலைதளமும் தரவுகளைத் தருகிறது.


உடனே அவரும் ரிங்கி தமங் என்ற நபர் கணக்கு எண்; 14540100125045 FEDERAL BANK பெடரல் பாங்க்  IFSC CODE:ஐ.எப்.சி கோட்:எப்டிஆர் எல்0001454 என்ற மாரத்தஹள்ளி என்ற கிளை பெங்களூர் எண்ணுக்கு 190 அமெரிக்க டாலரை அதாவது நமது இந்தியப் பணத்தில் 14440 ரூபாயை அனுப்பச் சொல்கின்றனர்.


அப்போதும் அவரை நம்பும் நபர்களுக்கு  கோவிட்  தடுப்பூசி போட்ட சான்றிதழ் மற்றும் பயண காப்புறுதி சான்றிதழ் பெற ரூ.89,700 அல்லது 1200 அமெரிக்க டாலர் அனுப்பச் சொல்லி தடுமாறி வேறு ஒரு கணக்கு எண்: குபேந்திரா ரியாங்  எண்: 99980106925014 அதுவும் பெங்களூர் பெடரல் வங்கிதான் ஆனால் கிளை ராஜாஜி நகரில் உள்ள ராஜ் சேம்பரில் டாக்டர் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ள வங்கியில் கட்டச் சொல்கிறார்கள். அதன் IFSC CODE: ஐ.எப்.சி.கோட் எப் டி ஆர் எல் FDRL0001334


இவர்களை பதிவு அலுவலகம் எங்கே? தலைமையகம் அல்லது தலைமை அலுவலகம் எங்கே என்று கேட்டாலும் சொதப்பல். நேரடியாக வந்து பார்த்து கட்டி விடுகிறோமே என்றாலும் இல்லை வேண்டாம் என்கிறார்கள். அது மட்டுமல்ல நாடெங்கும் அல்ல உலகெங்கும் 100க்கும் மேலான நபர்களைத் தேர்வு செய்திருக்கிறோம், உங்களுடையது மட்டும் தான் தாமதமாகிறது உடனே விரைந்து கட்டுங்கள் என இந்த வில்சன் எல்லிஸ் பேரி என்பவரும் குளோரியா பெர்பெனா என்பாரும் கேட்கிறார்கள். விரைவு படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்த அடுத்த நொடியில் தொடர்பை துண்டித்துக் கொள்கிறார்கள். இல்லை எங்களிடம் ஏற்கெனவே இன்னொரு இன்சூரன்ஸ் கம்பெனி வழியாக பெற்ற சான்றிதழ் இருக்கிறது என்றால் அதெல்லாம் செல்லாது யு.எஸ் இன்சூரன்ஸ் சர்வீஸஸ் வழியாகவே பெறவேண்டும் அதையும் திருப்பித் தந்து விடுவோம் என்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி யு.எஸ் நாட்டில் இல்லை என்பதையும் நீங்கள் கூகுளில் தேடினால் தெரிந்து கொள்ள முடியும்.


இது பற்றி சென்னை அமெரிக்க எம்பஸி என்ன சொல்கிறது எனில் இதெல்லாம் அவரவர் சொந்த முயற்சியில் செய்ய வேண்டியதுதான், இது பற்றி எல்லாம் எங்களை ஏன் கேட்கிறீர்கள் என்றும், பெட‌ரல் வங்கி ஏன் இப்படிப்பட்ட வாடிக்கையாளரைக் கொண்டிருக்கிறீர் என்றால் நீங்கள்  CYBER CRIME CELL சைபர் கிரைம் வழியாக வாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது.



இந்தப் பதர்கள் பெயரை வைத்துப் பார்த்துப் போர்க்கும்பொது வடக்கத்திய மாநிலம் அல்லது வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநில‌ நபர்களாக இருக்கலாம் அல்லது ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் கூட்டுக் களவாணிகளாக பெங்களூரில் இருந்து கொண்டே ஒரு வெப்சைட்டை ஆரம்பித்து எல்லாவற்றையும் இட்டுக் கட்டி எவர் ஏமாந்திருக்கிறாரோ அவர்களின் தாலியை அறுக்கலாம் என இயங்கி வருவதாகத் தெரிகிறது. அல்லது இதில் நாடு தழுவிய அளவில் பல களவாணிகள் இடம் பெற்றிருக்கிறார்களா என்பதை காவல் துறையினர்தான் கண்டறிய முடியும்.


எச்சரிக்கையாக இருங்கள்.

மேலும் டைம்ஸ் நௌ ஜாப்ஸ் TIMES NOW JOBS  வழியாக உங்களின் தேடலுக்கு வரும் நல்லவற்றுடன் இந்த இளைஞர்களுக்கான கேடும் கலந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது போல மணிடெக் MONEYTEK  இன்ன பிற... அதற்கு வெப்சைட்டே விலைக்கு எவர் எடுக்கிறாரோ எனக் காத்திருக்க  எந்த இளைஞர் ஏமாற காத்திருக்கிறாரோ என பிடுங்க பார்க்கின்றனர்.


RELATED CULPRITS CONTACT AND COMMUNICATION DETAILS FOLLOWS: 

E MAIL IDS  MOBILE NUMBERS AND WHATS APP ETC

all small in email ids

1.JOSEF U. UTE ULLRICH E MAIL: JOSEF - ULLRICH@T-ONLINE.DE

2. WILSON ELLIS BARRY

 HUMAN RESOURCES MANAGER

WINDZOID SERVICE

1830 E MILLS AVENUE EL PASO, TX 79901 UNITED STATES

TEL:+14099001200 FAX:+114099001200

E MAIL: WILSON.ELLISBARRY@WINDZOID.COM

                 CAREERS@WINDZOID.COM

                  INFO@WINDZOID.COM


3. HON.MS.GLORIA BERBENA

VISA PROCESSING UNIT

VISA APPLICATION CENTER - NEW DELHI

CALL/WHATS APP + 918527465742

ADDRESS" US VISA APPLICATION CENTER - INDIA

BABA KHARAK SINGH ROAD, CONNAUGHT PLACE

NEW DELHI, DELHI 110 001. WORKING HOURS 9.00 AM - 5 PM (MONDAY - FRIDAY)

E MAIL: TRAVEL@MEA - GOV.ORG.


4. RINKI TAMANG

ACCOUNT NUMBER: 14540100125045

FEDERAL BANK . MARATHA HALLI BRANCH

IFSC CODE: FDRL0001454 PIN : 560 037


5. KUBANDRA REANG

ACCOUNT NUMBER:99980106925014

IFSC : FDRL0001334

RAJ CHAMBER

RAJKUMAR ROAD, II BLOCK

RAJAJI NAGAR BANGALORE. 560 010


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு:

நம்மை இரண்டு நூற்றாண்டாக காலனியாதிக்கத்தில் வைத்தே ஏமாற்றிய வெள்ளை ஏகாதிபத்தியம் இப்போது எதோ ஒரு யுக்தியில் எப்படியாவது ஏமாற்றியே பிழைக்கலாம் எனத் திட்டமிடுகிறது...

ஐநா இலங்கை அரசுக்கு இப்போது புத்தி சொல்கிறது

இதன் நாட்டாண்மை ரஷியா உக்ரைன் விவகாரத்தில் என்ன நிலை?

ஐநா இலட்சக்கணக்கான தமிழரை கொன்று குவித்த விவகாரத்தில் என்ன செய்தது?

பாகிஸ்தான் உள் நாட்டு தற்போதைய பதவி மாற்ற‌ விவகாரம் பற்றி என்ன சொல்லி இருக்கிறது?

மூன்றாம் உலக நாடுகளிடம் மட்டுமே இதன் நாட்டாண்மை செல்லுமா? நேட்டோ , ரஷியா சீனா போன்ற வல்லரசுகளிடம் வீட்டோ அதிகாரம் உள்ளோரிடம் என்ன?...

அடுத்து டாணாக்காரன் பற்றி அவசியம் சொல்ல வேண்டும்...