Wednesday, June 29, 2016

வெற்று அழுகையால் என்ன பயன்? கவிஞர் தணிகை

                                                 
வெற்று அழுகையால் என்ன பயன்? கவிஞர் தணிகை


காலை 7.30 மணிக்கு ஒரு பேருந்து நிலையத்தில் தம்பி டிபன் வாங்கிக் குடுங்க தம்பி என்று ஒரு முதியவளின் குரல்...  விடாமல் என்னை நெடுநேரம் துரத்தியது....       பேருந்து ஏறியமர்ந்தால் பெரும் கூட்டம். வயதான ஒரு பெண் எண்ணெய் காணாத சாமியார் பரட்டை முடிச்சுகளுடன் சிகை,கையில் ஒரு சிறு பழைய ஒயர் கூடை. நிற்கவே முடியவில்லை. இப்படீன்னு தெரிந்திருந்தால் நான் எஸ்.3 ல் ஏறியிருப்பேன் ( அது ஒரு நகரப் பேருந்து )உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனை செல்கிறார் போலிருக்கிறது

எந்த மனிதருமே அக்கறை கொள்வதாய் இல்லை. எனது இருக்கையருகே அந்தப் பெண்...நடத்துனர் அனுமதிச் சீட்டு கோர, அதை எடுக்கவும் தெம்பில்லை, என்னிடமிருந்த கூடையிலிருந்து எடுத்துக் கொடுக்க சொன்னார்.

கூடையைப் பார்த்தேன் உள்ளே ஒரு சிறு துண்டு, மாத்திரைகள்  ஒரு மணிப் பர்ஸ். அதில் உள்ள ஒரு பத்து ரூபாயை எடுத்து கொடுத்தவுடன் இன்னும் உள்ள சில்லறையை கேட்டார். அதில் 3 ரூபாய் இருந்தது. கொடுத்து விட்டு கொஞ்சம் ஒரு ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார் நடத்துனரிடம்.14 ரூபாய் அனுமதிச் சீட்டு.

அப்படி எல்லாம் குறைக்க மாட்டார் அம்மா, என்ற என்னிடம் மீண்டும் அந்தக் கூடையில் வெளியே இருந்த ஒரு 10 ரூபாய் தாளை எடுத்து ஒரு ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நடத்துனர் வேண்டாம் என்று தம் பங்குக்கு புண்ணியம் தேடிக் கொண்டார்

நீங்க எங்க போறீங்க என்றார் அந்த முடியாத பெண். எழுந்து அமர்ந்து கொள்க என்று எனது இருக்கையை கொடுத்தேன். கைகளில் சிறு நடுக்கம் இருந்தபடியே இருந்தது. கழுத்தில் தாலி இருந்தது.

இவளுக்கு யாருமே துணையாக இல்லையா? ஏன் இந்த நிலை, இப்படியே பேருந்து நிலையத்தில் கொடிக்கம்பத்தடியில் படுத்துக் கிடக்கும் அந்த மனிதர் ....இப்படியாகவே நினைவு சென்றது.

ஓ என இந்த சமுதாயத்தை பார்த்து அழத்தான் தோன்றியது. அழுதென்ன பயன். ஒவ்வொரு தனிமனிதரும் ஏதாவது இந்த சமுதாயம் நோக்கி திருப்பிச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்னும் இருக்கிறது.என்னருகே அமர்ந்திருந்த ஒரு கல்லூரி மாணவர் தூங்கியபடி பயணம் செய்து வந்தார்.

நான் விட்டு விட்ட சேவையை தொடரவே மறுபடியும் இந்த பயணம் வாழ்வு என்று வந்திருக்கும் போலிருக்கிறது. எங்கு பார்த்தாலும் முடைநாற்றம். எச்சில் சாலையில் துப்பும் பெரிய மனிதர்கள் . சிறுநீர், மலம் , குப்பை மேடு என ஒரே துர் நாற்றம் எங்கு பார்த்தாலும் சாலை நகர் புறம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் எல்லாமே!



நிறைய பிச்சைக்காரர்கள் செயற்கை ஊனத்தோடும் இயற்கை ஊனத்தோடும்...

நன்றாக இருப்போர் தமது பணிகளை , தமது வேலையை, தமது பொறுப்பை, தமது கடமையை சரியாக செய்தால் இப்படி எல்லாம் இருக்குமா? இப்படி எல்லாம் நேருமா? ஈவு இரக்கமில்லாமலே போய் விட்டதே, எந்த மனிதர் பற்றியுமே வேறு எந்த மனிதருமே அக்கறை கொள்வதாகத் துளியும் தெரியவில்லையே...

கட்சிகள், அரசு, நிறுவனங்கள் பற்றி எல்லாம் சொல்லவே இல்லை. தனிமனித அவலங்கள் பற்றியே கவலைப்படுகிறேன். இதனிடையே புகைத்துக் கொண்டே பொது இடங்களில் பயணம் செய்யும் பொறுப்பற்ற மனிதர்கள், வாகனத்தின் படிக்கட்டு வாசலிலே குடித்து விட்டு படுத்துக் கிடக்கும் உணர்வற்ற சவங்கள்...இப்படியாக எங்கும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 26, 2016

தியான வழிகாட்டிகள் விவேகானந்தரும் அரவிந்தரும்: கவிஞர் தணிகை

தியான வழிகாட்டிகள் விவேகானந்தரும் அரவிந்தரும்: கவிஞர் தணிகை




தியானம் செய்கிறேன் என்றாலே ஈஷாவா, வேதாத்திரியா,பிரம்ம குமாரிகளா,ரவி சங்கரா என கட்சி கட்டிப் பேசும் நிலையில் தியானத்தின் அடிப்படை ஒன்றுதான் அதில் இவர்கள் எல்லாம் சிறிது வசதிக்குத் தக்கபடி பிரணாயாமம், ஆசனம், போன்றவற்றை சிறிது சிறிதாக மிகைப்படுத்தி  அல்லது குறைவு படுத்தி அல்லது வசதிப்படுத்தி வைத்து செய்து வருவதை எந்தக் கட்சி யாருக்கு பிடிக்கிறதோ அது போல இந்த தியானப் பயிற்சி முறைகளிலும் பிடிப்பவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள்.மற்றபடி இதன் நடுத் தண்டும் வேர்ப் பகுதியும் ஒன்றே ஒன்றுதான்.

இனி அரவிந்தர் சொல்வதை பார்ப்போம்:

தியானத்தின் போது எல்லாவிதமான எண்ணங்களும் வருவது பகைச் சக்திகளாலன்று; சாதாரண மனித மனத்தின் இயல்பே அதற்குக் காரணம். எல்லாச் சாதகர்களுக்கும் இந்தக் கஷ்டம் ஏற்படும்; பலருக்கு மிக நீண்ட காலத்திற்கு இருக்கும். அதை ஒழிக்கப் பல வழிகள் உள்ளன.

ஒரு வழி எண்ணங்களைக் கூர்ந்து பார்த்து, அவை காட்டும் மனித இயல்பைக் கவனித்து, ஆனால் அவைகளுக்குச் சம்மதம் கொடாமல், தாமகவே அவை ஆடி ஓய்ந்து அடங்க விடுவது‍‍‍‍‍===1.ஆற்றில் ஓடும் பொருள்களை ஓட விட்டு அமைதியாக அமர்ந்து பார்ப்பது போல,2.அறிவுக்கேற்ப ஒரு பொருள் பற்றி சிந்தித்து முடிவு கண்டு ஓய்ந்து போவது போல,3. சுவற்றில் அடித்த பந்து போல எண்ண அலைகளை அப்படியே திருப்பி அனுப்ப கற்றுக் கொள்வது....

இந்த வழியையே சுவாமி விவேகானந்தர் அவருடைய இராஜ யோகத்தில் சிபாரிசு செய்கிறார். இன்னொரு வழி, எண்ணங்களைத் தனதாகக் கருதாமல், சாட்சி புருஷனாகப் பின்னால் விலகி நின்று சம்மதம் மறுப்பது...எண்ணங்களை புறத்தே இருந்து அதாவது இயற்கையிலிருந்து வருபவைகளாகக்க் கருதப்பட வேண்டும். அவைகள் மனவெளியைக் கடக்கும் பிரயாணிகள் போன்றவை. நமக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லை.அவற்றில் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது போல உணரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் சிறிது காலத்திற்குப் பிறகு மனம் இரண்டு பாகங்களாகப் பிரிகிறது.

ஒரு பாகம் அமைதியாக சலனமின்றி சாட்சியாக எல்லாவற்றையும் பார்க்கிறது; இது எண்ணங்களை அலைந்து திரியும் பிரகிருதிப் பாகம்.
பிரகிருதிப் பாகத்தையும் அமைதியாக்க அல்லது மோனமாக்க முயலலாம்.

 பிரகிருதி என்றால் மூலப்பகுதி /அடிப்படை அல்லது பிரதானப் பகுதி என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

மூன்றாவது ஒரு வழி உள்ளது அது தீவிரமானது. இந்த முறைப்படி எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று கவனித்து, அவை தன்னிடமிருந்து வரவில்லை, தலைக்கு வெளியிலிருந்தே வருகின்றன எனச் சாதகன் அறிகிறான். அவ்வாறு அவை வருவதைக் கண்டு பிடித்தால், அவை உள்ளே புகுமுன் அவைகளை அப்படியே அப்பால் எறிந்து விட வேண்டும். இதுவே எல்லாவற்றிலும் கடினமான‌ முறை. இம்முறையை எல்லாரும் பின் பற்ற முடியாது; முடிந்தால் இதுவே மோனத்திற்கு மிகச் சக்தி வாய்ந்த சுருக்கு வழியாகும்.

ஆதாரம் நூல் : யோகத்தின் அடிப்படைகள்‍... ஸ்ரீ அரவிந்தர்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, June 24, 2016

தமிழனாய் இந்தியனாய் மனிதனாய் சுற்றித் திரிந்தேன் இந்தியா முழுதும்: கவிஞர் தணிகை

தமிழனாய் இந்தியனாய் மனிதனாய் சுற்றித் திரிந்தேன் இந்தியா முழுதும்: கவிஞர் தணிகை



பிரதேச உணர்வுகள் தலை தூக்கி ஆடுவதாகவும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா , தமிழ்நாடு என தென்னகத்திலும் வடக்கிலும் இந்தி ,வங்காளி, குஜராத்தி, மராட்டி, சீக்கியம் என பிரிந்து கிடப்பதாகவும் சொல்லப்படலாம். ஆனால் நான் 1985 முதல் 1992 வரையிலான காலத்தில் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும், ரயில் வழி, தரை வழி, நீர்வழி மற்றும் வான் வழி ஆகிய எல்லா வழிகளிலும் பயணம் செய்தேன். எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை.

மண் வேறாக தெரிந்தது, பூக்கள் வேறாக மரங்கள் வேறாக நீர் நிலை வடிவங்கள் வேறாக மனிதர்கள் வித்தியாசமாகத் தெரிந்தனர் ஆனாலும் தனிமனித போக்கு என்பதைத் தவிர வேறு பெரிய பிரதேச உணர்வுகள் எதனாலும் பெரிய அளவில் பாதிக்கப் படவில்லை என்பதே உண்மை.

சொல்லப் போனால் ஒரிஸ்ஸாவில் இருக்கும் போது முரளிதரன் கிடாவ் என்ற ஒரு மின்வாரிய பிரிவு அலுவலர் அல்லது செக் ஷன் ஆபிசர் அழைத்து அன்பொழுக விருந்தளித்ததும், ஆந்திராவுக்கும் ஒரிஸ்ஸாவுக்கும் இடைப்பட்ட நீர்வழி நிலவழியில் பொல்லூர் என்ற இடத்தில் பெயர் மறந்து போன மற்றொரு மலையாள நண்பர் அவரும் மின்சார வாரியப் பணியாளர்...மலேரியா பாதிப்பின் போது உணவகத்தில் வாந்தி எடுத்த போது அழைத்துச் சென்று அவரது வீட்டில் (அப்போது அவரது குடும்பம் ஊருக்குப் போயிருந்தார்கள்) தங்க இடமளித்து அவர் பணிக்குச் செல்லும்போதும் என்னை இருக்கச் சொல்லி விட்டு மருத்துவமனை சென்று சோதித்து அறிந்து காய்ச்சலுக்கு சிகிச்சை செய்து கொள்ளப் பணித்து விட்டு நான் யார் எப்படிப் பட்டவன் என்பது தெரியாமலே எனக்கு பேருதவி புரிந்ததும்

ஆந்திராவில் இருந்தபோது இரகுநாத்,மற்றும் நிரஞ்சன்குமாருடன் ஓர் வீட்டில் இருந்து கொண்டு சமைத்து உணவுண்டு மாலையில் ஒரு பள்ளி மைதானத்தில் மணலில் அமர்ந்து அளாவளாவி மகிழ்ந்ததும் அந்த பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் எம்மை அடிக்கடி வாரம் ஒரு முறையாவது அவர்கள் வீட்டில் எங்களது மூவரையும் அழைத்து விருந்து கொடுப்பதும் நாங்கள் 3 பேருமே அப்போது மணமாகாத இளைஞர்கள்.



கேரளாவில் கொச்சின் எர்ணாகுளத்தில் ஒரு கன்னியாஸ்த்ரி நான் மரக்கறி உணவு மட்டுமே உண்பவன், அதிலும் அந்த 30 பேரில் ஒருவனே என்ற போதிலும் எனக்காக தனியாக அனைத்து பதார்த்தங்களையும் சமைத்து என்னை திக்கு முக்காட வைத்ததும் அன்பு மழையில் நனைய வைத்ததும்

கர்நாடகாவில் இருக்கும்போது ரெய்ச்சூர் வறண்ட பாலை பூமியில் வாழும்போதும் அந்த மக்கள் என்னை ஆதரித்ததும்,நமது தமிழரே ஒருவர் நான் செய்யாத தவறை செய்ததாக சொல்லி எமது மத்திய அலுவலகத்தில் எனக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயன்றதும்...ஒரு சாதராண கொர்ரய்யா என்னும் படிப்பறிவு இல்லா ஒருவனால் கோழி எச்சத்தின் அருகே உறங்க ஏற்பாடு செய்யப்பட்டதும்

நமது தமிழ்நாட்டில் கல்ராயன்மலையில் முதலில் மலைவாழ்மக்கள் எனக்கு இரவில் படுக்க இடமாக மாட்டுக் கொட்டிலை காண்பித்ததும்..இப்படியாக எனது நினைவு தொடர்வண்டியில் பின்னோக்கி பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.ஆனால் எவருமே என்னிடம் எந்த பிரதேச உணர்வு கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த தனிப்பட்ட சிலர் ஆந்திராவில் நமை அரவாடு (தமிழ் மக்கள் நாகம் போன்றவர் என்பதும்) கர்நாடகா இன மக்கள் நம்மை அவர்கள் வாழ்வை பிடுங்க வந்த போட்டியாளர் என்றே இன்னும் நினைப்பதும்



கேரளத்து மக்கள் வேறாக பிரிந்து கிடந்தாலும் நம் தமிழரை நிறைய இடங்களில் சார்ந்தும் வாழ்வதும் ஆனால் அவர்கள் இடத்தில் அவர்கள் மரபு சார்ந்த வாழ்வை வாழ்வதுமாக..

தனிப்பட்ட முறையிலான இது போன்ற தனிமனித அனுபவங்கள் ஒருவாறு பிறரின் அனுபவங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது எனை எல்லாவகையிலும் வேறுபடுத்திக் காண்பிப்பதை என்னால் சில சமயங்களில் வாய் விட்டும் சொல்ல முடிவதில்லை இப்படி எழுதி வைத்தாலும் அதை படித்து கோபம் கொள்வதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?

ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அப்போது போதிய மாத ஊதியமும் இல்லாதிருந்த அந்நிலையில் இந்த பரந்த மனதுக்காரர்கள் இல்லையெனில் எனது வாழ்வு எப்படி முடிந்து இருக்கும் என சொல்லவேத் தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் இந்த பதிவு பற்றித் தெரியவே போவதில்லை. ஆனால் அத்தனை அன்பு நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும் எப்போதும் உரித்தாகும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 19, 2016

எம்.ஜி.ஆரின் இரு வேறு திசைகள்: கவிஞர் தணிகை.

எம்.ஜி.ஆரின் இரு வேறு திசைகள்: கவிஞர் தணிகை.
 இலங்கை கண்டியில் பிறந்த தந்தையை வெகு விரைவில் இழந்த குழந்தை இந்தியா வந்தும் தமிழ்நாட்டில் வசதி இல்லாமல் தாயால் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டாலாவது வயிறாவது நிறையுமே என்று சேர்த்து விடப்பட்ட இரு சகோதரர்களில் இளையவரான எம்.ஜி.ஆர். நாடாண்ட கதை தமிழ் நாட்டில் ஒரு சரித்திரம்.



இவரின் சுவாசம் தமிழ்தான் .ஆனால் இவரை மலையாளி என பிறப்பால் மலையாளி ஆதலால் பேசி அதையே குறையாக பேசித் திரிவாரும் உண்டு.

எழுதும் நேரம் குறைந்து விட்டது .பொருளாதாரச் சிக்கனம் உடல் நலம் என்னை ரயில் பயணியாக்கி விட்டது.ரயில் பயணத்தில்  நண்பர் உடன் ஒருவரை ஆமாம் சாமி போட வைத்து எம்.ஜி.ஆரை ஒரு ஃபிராடு அவர் சம்பாதித்தது சினிமாவுக்கு வெளியே வேறு வழியில் , மற்றும் முதுமையடைந்த பிறகும் இள வயது பெண்களை தேடிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் பேசினார்கள்.

நண்பர் அடிப்படையில் நல்லவர்தான் ஆனால் அவ்வப்போது முரண்களுடன் பேசி இன்புறுவது அவரது இயல்பு.அதற்கு ஒரு சப்பைக்கட்டாய் உடன் ஒருவரை ஜால்ரா போடவும் ஏற்பாடு செய்து கொள்வார்.

அவர் ‍ எம்.ஜி.ஆர் செய்த தான தர்ம காரியங்கள் அளப்பரியன, எண்ணிறந்தன அவை யாவும் அவரின் தனிமனித ஒழுக்கக் கேட்டையும் விட அவரை குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்ற குறளின் படி அவரை தமிழ் நாட்டின் சரித்திரத்தில் பங்கெடுக்க வைத்து விட்டது நீங்களும் நானும் அந்த ஜால்ரா நபரும் விதிவிலக்கானவர்கள். என நான் பேசி முடித்து விட்ட போதும் அது பற்றிய அந்த கருத்தோட்டம் பற்றிய சிந்தனைத் தொடர் அறுபடாமல் என்னுள் நிகழ்ந்தபடியே இருப்பதால் அது ஒரு பதிவாகிறது.

தமிழ் இந்து நாளிதழில் அவர் பற்றி நாளொரு சம்பவம் பதிவாகிறது படித்துப் பாருங்கள் உண்மைப் பொருள் அறிந்து கொள்ளுங்கள் என்றேன் அதற்கு நண்பர் இந்து நாளேடு எல்லாம் நாங்கள் படிக்க வேண்டிய ஏடுமல்ல என பதிலுரைத்தார்.

வண்ணம் பூசிக்கொள்ளாமல் கலர் கண்ணாடி அணியாமலே நான் எல்லாவற்றையும் படித்து வருபவன். எம்.ஜி.ஆர்தான் இன்றிருக்கும் தமிழகத்தின் அரசியில் சூழலின் அடிப்படை என்ற போதிலும் அது காமராசர் இந்தியாவில் இந்திராவை பிரதமாராக்கி விட்டது போன்ற தவறு. எப்படி அதற்கு காமராசரை முழுதும் நாம் குற்றவாளியாக சொல்ல முடியாதோ அதுபோலவேதான் எம்.ஜி.ஆரின் கதையும்.



சாப்பாட்டு முன் அமர்ந்திருந்த சிறுவன் ராமச்சந்திரனை‍ எம்.ஜி.ஆரை கையை பிடித்து பந்தியிலிருந்து வெளியே இழுத்து விட்ட கண்ணீர்க்கதையின் எதிரொளிப்பு அவர் எவர் பசி என்றாலும் தம்மால் முடிந்தவரை  வாழ்க்கை எல்லாம் அனைவர்க்கும் பசிக்கு உணவிட்டதாக படித்ததுண்டு. அவர்தான் பள்ளியில் காமராசரின் திட்டமான‌ மதிய உணவை சத்துணவாக்கி ஏழைப் பிள்ளைகளின் பசியை போக்கவும் உறுதுணையான முதல்வராகவும் இருந்தார்.கருணாநிதியும் அவரை தி.மு.கவிலிருந்து வெளியேற்றினார் இன்றும் அனுபவித்து வருகிறார் அதன் விளைவை.

பொன்மனச் செம்மல் என அறிஞர் அண்ணாவாலே அழைக்கப்பட்டவர். அண்ணாவின் காலத்திய தி.மு.கவே எம்.ஜி.ஆரின் பொருள் கொடை சார்ந்து நிறைய கட்டங்களில் வளர்ந்த கதையை அண்ணாவே மேடையில் பாராட்டிப் பேசிய பதிவுகள் உண்டு. அப்போது என்.எஸ்.கேவும் ஒரு வள்ளல்.அதே என்.எஸ்.கேவுக்கும் கூட கடைசிக் கட்டத்தில் இவர் உதவியதாக நிகழ்வுகள் குறிப்பிடுகின்றன. ஒருக்கால் என்.எஸ்.கேவிடமிருந்தும் கூட இந்த தர்ம காரியத்தை இவர் கற்று அவரை முன் மாதிரியாக கொண்டிருந்திருக்கலாம்.


 அண்ணாவின் மறைவுக்கும் பிறகு , நெடுஞ்செழியன்,அன்பழகன் மதியழகன் போன்றோரை எல்லாம் கடந்து முதல்நிலை அடைய எம்.ஜி.ஆர். என்ற அஸ்திரம் தேவைப்பட்டது கருணாநிதிக்கு. அதன் பின் அந்த மனிதரையும் இந்த இராஜ தந்திரி ஒதுக்கி விட ஒதுக்கப்பட்ட மனிதர் ஒரு சரித்திரம் படைத்த கதை தமிழ் நாட்டில் நிகழ்ந்தது.

மாயத்தேவர் முதல் வெற்றி பெற்றி திண்டுக்கல் எம்.பி ஆகி அ.தி.மு.கவுக்கு தேர்தல், அரசியல் வழியை துவக்கி வைக்க அதன் பின் ஏறுமுகம்தான். இடையில் ஒரு பாராளுமன்றத் தேர்தலில் தோற்றார்கள் என்பது தவிர. தொடர்ந்து இருமுறை பதவியில் வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்தது எம்.ஜி.ஆர்தான் .

நிறைய மக்களுக்கு செய்ய நினைத்தார். ஆனால் நடைமுறையில் சில நிறைவேற்றப்பட்டன. பல முடியவில்லை ‍ திருச்சியை தலைநகராக மாற்ற நினைத்தது போல...



ஜெவை விட, கலைஞரை விட எம்.ஜி.ஆர் ஆட்சி நன்றாகவே இருந்தது என்பதை நினைவு தவறாமல் இருப்பார்  யாரும் உணரமுடியும். சிறு வயதுக்காரர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. மேலும் இலங்கை பிரபாகரனுக்கு உறுதுணையாக நிறைய நன்மைகள் செய்தார் மற்ற முதல்வர்கள் எவரும் அந்த அளவு இலங்கைத் தமிழர் பால் அக்கறை கொண்டதாக இல்லை.

உண்மைதான் இவர் சார்ந்திருந்த துறையும், இவருக்கிருந்த அரசியல் செல்வாக்கும் பொருள் பலமும் நிறைய இளம் நடிகைகளின் அருகாமையை இவருக்கு சேர்த்திருக்கும் தான் . ஆனால் அதனால் எல்லாம் இவர் பொது வாழ்க்கை பாதிக்கவில்லை. இவர் எப்படி இருந்தபோதும் மக்களுக்கு செய்ய வேண்டிய சேர வேண்டிய திட்டங்களின் தொகையை தம் சுயநலத்துக்காக பயன்படுத்தவில்லை. தம் குடும்பத்துக்கு தமிழ் நாட்டின் அரசு பணத்தை கையகப்படுத்திக் கொள்ளவில்லை. அதுவே பெரும் தகுதி தற்கால நிகழ்வுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்.

அரசியலும் சினிமாவும் பொதுவாழ்வின் இரட்டை முகங்கள் என்பதாகவே அண்ணாவின் காலத்திலும்  ஏன்  அண்ணாவின் காலம் மட்டுமல்ல, காமராசர் காலத்தில் கூட சிவாஜி கணேசனை பயன்படுத்தி சினிமாக்கள் காங்கிரஸ் பற்றி அதன் பிரதானம் பற்றி பிரச்சாரம் செய்தன.அது எம்.ஜி.ஆரின் காலத்தில் மேலும் சிகரம் ஏறி என்.டி.ஆர் முதலானோர் ஆந்திராவில் வரவும் வழி வகுத்தன. கர்நாடகாவில் அந்த‌ அரிய முயற்சியை ராஜ்குமார் செய்யவில்லை. செய்திருந்தால் அங்கும் நடந்திருக்கும் பிரதான நடிகரே முதல்வராகும் கதை.

இன்று ரஜினிகாந்த் சாதனை கபாலி சாதனை, சூப்பர் ஸ்டார் என்பார் எல்லாம் எம்.ஜி.ஆரின் முன் உருவமற்றவர்களே. தமது பிரபலத்தை மக்கள் மனங்களில் விதைத்து ஆட்சியை பிடித்து தம்மால் ஆன காரியமாற்ற எம்.ஜி.ஆர் தயங்கவில்லை. அது சாப்பாட்டுக்கு இல்லாது பந்தி முன் பசியுடன் அமர்ந்து இருந்த சிறுவன் வெளியே இழுத்து விடப்பட்ட சிறுவனின் வெற்றி.

 இழிவாக எம்.ஜி.ஆரை சொல்வார் எல்லாம் தமது பொன்னை, பொருளை சிறிதளாவாவது பிறர்க்கு கொடுத்து பார்க்கட்டும். அதன் ஈத்துவக்கும் இன்பம் பற்றி தெரிந்து கொள்ளட்டும். பிறர் செய்யும் தர்மத்தை அதனால் அவர்கள் புகழ் பெருகியதை எல்லாம் நாம் விமர்சிக்கலாம். ஆனால் அதனால் அவர்களுக்கு என்றுமே சிறுமை விளைந்து விடுவதில்லை . அதுவும் அவர் மறைந்த பின்னும் அவர் பேர் சொல்லி இன்றைய ஆட்சி மலர்ந்திருக்கிற சூழல்களில். நிறைய மனிதர்கள் அவர் பின்னால் இன்னும் இருக்கிறார்கள். நமக்கு அது சரி என ஏற்றுக் கொள்ள முடியாத போதும்.

மக்கள் திலகம் ஏன் அவருக்கு பட்டப் பெயர். அவர் மக்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்ததால்தான். அது போல் எவருமே இனி அல்லது எப்போதும் இல்லை.



அவர் சந்திர பாபுவுக்கு, அசோகனுக்கு அல்லது தம்மை எதிர்த்தாருக்கு எல்லாம் தனிப்பட்ட முறையில் இழைத்த தவறுகள் பற்றி எல்லாம் முழுக்க முழுக்க நாம் அறிய முடியாதபோது நாம் அவற்றால் பாதிக்கப் படாதபோது அது பற்றி எல்லாம் நூற்றுக்கு நூறு எது சரி என்று உரைக்க முடியாது.

நான் சுட்டுக் கொண்டே இருப்பேன் என்ற எம்.ஆர். இராதா குடும்பம் வழி வழியாக தமிழர் என்ற போதையில் வாழ்ந்து வருகிறது .ஆனால் எம்.ஜி.ஆர் வாரிசே இரத்த வழியில் இல்லாத போதும் நாடாண்ட கதையில் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார் இந்த‌ மக்களாட்சி முறையில் தமிழகத்தின் ஆண்டவர் வரிசையில் அவர் இடம் பெற்றதை அவரின் கட்சி இடம் பெற்று வருவதை எவருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இது மக்களாட்சி தீர்ப்பு. அல்லது இந்த மக்களாட்சி முறையை சரி இல்லை என்று மாற்றுக மாற்ற முயல்க வாழ்த்துகள்.

dedicated to


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.








Sunday, June 12, 2016

உண்மைக்கு பரிசு எப்போதுமே துப்பாக்கி குண்டுகளும் துரு மரணமும்தான்: கவிஞர் தணிகை

உண்மைக்கு பரிசு எப்போதுமே துப்பாக்கி குண்டுகளும் துரு மரணமும்தான்: கவிஞர் தணிகை



உண்மையை எழுதுவதால் உறவுகள் முறிவதும், நட்பு பிரிவதும் எல்லாத் தரப்பும் எதிர்ப்பாக மாறுவதும் உண்மையான சத்திய சோதனைதான்.வயதில் இளையவரானாலும் அறிவில்,அனுபவத்தில் ஒரு சிறந்தவர் என் பால் அக்கறை உள்ளவர் சொல்கிறார்: எழுதுவது அதை படிப்பவரிடம் என்ன பாதிப்பு ஏற்படுத்தும்? அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனப் பார்த்து எழுத வேண்டும் என்றார். அது சரிதான்.




நாம் பெரும்பாலும் நமது உணர்வுகளை தெறிக்க விடுவதை, ஓட விடுவதை, எண்ணங்களை எடுத்து எழுத்துகளில் வைப்பதை ஏதாவது பெயரிட்டு வடிகாலான கதை கட்டுரை,சொற்கோவை என வடித்திடுகிறோம். மற்றொரு புறம் சமுதாய மேம்பாட்டுக்காக நமது சார்பாக நமது அனுபவத்தை பங்கிட்டுக் கொள்கிறோம். நாம் பெற்றதை திருப்பிக் கொடுத்துச் செல்வது போல.\

புத்தகங்கள் உயிரற்றவைதான் ஆனால் அவை என்றும் உயிர் வாழ்கின்றன என ஒரு பள்ளியின் மதில்  சுவர் தன்னில் எழுதி வைத்திருந்த செய்தி பாருக்கே நன்மை பயக்கும். ( இந்த பார் என்பதற்கு உலகு என்பது பொருள் மதுபான விற்கும் ஆங்கில  பார்/bar அல்ல). எனவே ஒவ்வொருவரும் எழுதத் தான் வேண்டும். ஒரு நூலாவது.யார் எழுதியிருந்தாலும் அது யாவருக்கும் பயன்படும் என்பதால்.




ஆனால் நாம் பெரியார் போல எழுதுகிறேன் அண்ணா போல எவரையும் புண்படுத்தாமல் எழுத வேண்டும் என்பார் மற்றொரு ஆர்ட்டிஸ்ட்.  இவர்கள் எல்லாம் சொல்வது சரிதான். பெரும்பாலும் அதை படிப்பவர்களிடம் என்ன மாறுதல் என்ன விளைவு என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என கணிக்காமலே நிறைய முறை எழுதி விடுகிறேன் என்பதும் உண்மைதான். அதன் விளைவை பாதிப்பை தாக்குபிடிக்க முடியாமல் எதற்கு இப்படி செய்தோம் என கூசிப்போனதும் என்னிடம் நிகழ்ந்தவைதான்.

ஆனாலும் நண்பர்களுக்கு சொல்வேன், ஒளிவு மறைவு இன்றி பட்டவர்த்தனமாக அப்பட்டமாக சொல்லும்போது பகை வரத்தான் செய்யும். பிறகு எப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்? நண்பர்கள் கூட பயந்து கொள்கிறார்கள்தான் இவனுக்குத் தெரிந்தால் எப்போதாவது அதை , நம்மைப் பற்றியும் எழுதி விடுவானே என்று... எனவே எதை எழுதுவது, எதை எழுதாமல் விடுவது என்றெல்லாம் கணக்குப் பார்த்துச் செய்தால் அது வாழ்க்கை விளையாட்டு ஆகிறது.



ஆனால் எழுத்து என்பது பொறுக்க முடியாமல் பொங்கிடும் ஊற்று அதை வெளியே எடுத்து விட்டாக வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்பு அனுபவங்களையும் அனுபவத்துத் தான் தீர வேண்டும் அப்போதுதான் அவர் ஒரு படைப்பாளியாக இருக்க முடியும். ஒரு போராளியாக இருக்க முடியும். ஒளிவு மறைவு, நெளிவு சுளிவு கொண்டு எல்லாம் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

நான் வாழ்க்கை முழுதும் போராடிக் கொண்டே இருப்பவன். அதிகமாக மிஞ்சிப் போனால் இன்னும் இந்த 55 வயதான மக்களுக்காக பாடுபட்டு உருக்குலைந்து போன‌ உடலும் உயிரும் ஒட்டி இருக்கிறது அதையும் இந்த சமுதாய மேம்பாட்டுக்கு விதைத்து விடவே தயாராய் இருக்கிறேன். அப்படியே வளர்ந்து விட்டதால் என்னால் அவ்வளவு எளிதாக எனது எழுத்தின் பாணியை, ஸ்டைலை , மாற்றிக் கொள்ள முடிவதில்லை. அப்படி மாற்றிக் கொள்ளும் எண்ணமும் இல்லை.(Most of biography and Auto biographies books are earning negative points more than normal books)

சமுதாயத்தின் பாதையோடு செல்வார் பலர் பலம் பொருந்தியோரக‌, பாதையை புதிதாக சமைப்பார் சிலர் , அல்லது அதற்காக முயல்வார் சிலர் நிறைய வருந்துவாரக‌. இந்த சிலருள் நானும் இருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.



மகாத்மா,நல்ல எழுத்தாளர் என்று சொல்வதற்கில்லை என்றாலும் அவர் 60,000 பக்கங்களுக்கும் மேல் எழுதியுள்ளார். உண்மையை  மட்டும்தான்
அப்படி எழுத முடியும். உண்மைக்கு உறை போட்டுக் கூட அப்படி எழுத முடியாது.

நானறிந்தவரை கலாம், தெரஸா போன்ற மாபெரும் ஆன்மாக்கள் மட்டுமே இயல்பாக மறைந்தன கடவுளைப் போல சேவையின் மூலம் உயர்ந்ததால் அவர்கள் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை கொலையும் செய்யப்படவில்லை. மற்றபடி இப்படி முயற்சி செய்த பலருக்கும் துப்பாக்கி குண்டுகளும் துருமரணங்களுமே பரிசாக கிடைத்திருக்கின்றன.





மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்வதுதான் கடவுளுக்கு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எங்கெங்கோ உயிர்க்குது உயிரியியல் ஜப்பானில் ஒரு முன்னோடிக் கண்டு பிடிப்பு: கவிஞர் தணிகை.

நன்றி: மாலை மலர். June 10.16
5 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியே குஞ்சு பொரிக்க வைத்த ஜப்பான் மாணவர்கள்

ஜப்பானில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கோழிமுட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியில் குஞ்சு பொரிக்க வைத்து பழைய சித்தாந்தத்தை முறியடித்து, அசுர சாதனை படைத்துள்ளனர்.

டோக்கியோ:

‘முட்டையை விட்டு குஞ்சு வந்து துறுதுறுன்னு முழிக்குதடா ராமைய்யா!’ என்ற ஒரு பழைய தமிழ் சினிமா பாடல் உண்டு. அதாவது, முட்டையின் ஓடுதான் அந்த குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என்பது அந்த பாட்டின் விளக்கம், காலகாலமாக மக்களிடையே நீடித்துவரும் நம்பிக்கையும் அதுதான்.

ஆனால், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கிக் காட்டியுள்ளனர்.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுக்கும் ஒரு மாணவி அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார். அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின்மீது போர்த்தி, முட்டையை உடைத்து டம்ளருக்குள் ஊற்றுகிறார்.

பின்னர், திறந்த நிலையில் அந்த டம்ளரை பொரிப்பானில் (இன்குபேட்டர்) வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.

இதன்மூலம், முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய சித்தாந்தம் தவிடுப்பொடியாகி உள்ளது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்த சில நாட்களில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள் இதைக் கண்டு வாயடைத்துப் போய் உள்ளனர். அந்த வீடியோ, உங்கள் பார்வைக்கும்...

https://www.youtube.com/watch?v=am3iGHDnJHc

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=am3iGHDnJHc



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Saturday, June 11, 2016

உலகை மாற்றியோர் பட்டியலில்

உமேஷ் சச்தேவ்

2016-ம் ஆண்டு உலகை மாற்றி யவர்களின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ளும் ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ள சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவும் இடம் பெற்றுள்ளார்.
யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம் என்னும் பெரிய சென்னையில் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார் இவர். வாடிக்கையா ளர்கள் எந்த மொழியில் பேசினாலும், எதிரில் இருப்பவர் கள் புரிந்துகொள்ளும்படி வடி வமைக்கப்பட்டுள்ளது. இந்த மென் பொருளில் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட வட்டார மொழிகள் உள்ளன.
2016 உலகை மாற்றியவர்கள் பட்டியலில் இடம் பிடித்ததை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று உமேஷ் சச்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த நபர்களுடன் நான் பணிபுரிந்தேன் அவர்கள் மிகச் சிறந்த ஆதரவை எனக்கு அளித்தார்கள். அவர்களோடு இதைக் கொண்டாடுகிறேன் என்று தெரிவித்தார்.
இந்தப் பட்டியலில் இத்தாலி யைச் சேர்ந்த பிரான்சஸ்கோ சவுரோ முதலிடத்தை பிடித்துள் ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயதுடைய அஷிமா ஷிராய்ஸி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
thanks to Tamil Hindu
dedicated by
Kavignar Thanigai.

Thursday, June 9, 2016

முரண்பாடுகளாகத் தெரியவில்லை? :‍_கவிஞர் தணிகை

முரண்பாடுகளாகத் தெரியவில்லை? :‍_கவிஞர் தணிகை




வேகத்துடன் பாதுகாப்பு, ஃபாஸ்ட் அன்ட் சேவ்ஃப்,மானியத்தை விட்டுக் கொடுங்கள் ஏழை மக்களின் வீடுகளில் அடுப்பெரிய விடுங்கள்,மருத்துவ மனைகள் அதிகமாகிக் கொண்டே மருத்துவர்கள் அதிகமாகிக் கொண்டே நோய்களும் நோயாளிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பது,டிரைவ் டோன்ட் ஃபிளை என்பது, தமிழக அரசே அரசு டாஸ்மாக் மது விற்பனை செய்தபடியே பொது இடத்தில் மதுக் குடி போதை மீட்பு எண்கள் என எழுதி வைத்திருப்பது...மருந்துக் கடைக்காரர் காலையில் கடை திறந்ததும் நிறைய மருந்து வியாபாரம் ஆக வேண்டுமே என்று எண்ணுவது, நோயாளிகள் சீக்கிரம் நோய் தீர வேண்டும் என எண்ணுவது..எல்லாமே சமூக முரண்பாடுகள் தான். மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருக்க வேண்டும் என ஓட்டுனரும்,நடத்துனரும் நிர்வாகத்தினரும் எண்ணுவது, அதில் ஏறும் பயணிகளோ அதிக கூட்டம் இருக்கக் கூடாது சுகமாக பயணம் செய்ய வேண்டும் என பயணிகள் ரயிலும், பேருந்தும் கூட்டமில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவது...இப்படியாக‌

திருவண்ணாமலையில் கண்ணபுரம் என்ற ஊரில் பள்ளிப் பிள்ளைகள் கழுத்தில் மாலை அணிவித்து மேள தாளம் முழங்க அரசுப் பள்ளி திறந்த முதல் நாளில் வரவேற்றார்களாம்.உருப்படி ஆகுமா? வாத்தியார்களை மதிக்க கற்குமா அந்தப் பிள்ளைகள் அதை பெரிய விழாவாக்கி பேரூராட்சி தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனராம்.ஓவரா தெரியலை? எங்கய்யா போகுது நாடு?



ஒரு பக்கம் மார்ச் மாதம் தலைமை ஆசிரியரை சந்தித்துக்
 கேட்கும்போது 200 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற பள்ளியில் இப்போது 150 பிள்ளைகள், 150 பிள்ளைகள் இருந்த பள்ளியில் 99 பிள்ளைகள் இப்படி அரசுப் பள்ளிகள் நலிவடைந்து கொண்டிருக்க, ஒரு பள்ளியிலோ ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள் இருந்து பாடம் சொல்லிக் கொடுப்பதாக உள்ளதாம். எப்படி இருக்கிறது தமிழகக் கல்வி பார்த்துக் கொள்ளுங்கள்.

கருப்பொருள் மாறிவிட்டது: இனி கருத்துக்கு ஒத்திசைவாக:
மித வேகம் நன்று என்றார்கள் ஆனால் இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஸேப்ஃ என்கிறார்கள்.

சுள்ளிகள் குச்சிகள் பொறுக்கி அடுப்பெரித்துக் கிடந்தவர்களை எல்லாம் எரிவாயு உருளைக்கு மாற்றி விட்டு இப்போது மானியத்தை விட்டுக் கொடுங்கள், ஏழைகளின் வீட்டு அடுப்பெரிய விடுங்கள் என விளம்பரங்கள்...நீங்கள் நல்ல தொழில்  ஏற்படுத்தி வேலை வாய்ப்பை கொடுத்து மதுவை எல்லாம்  அகற்றினாலே ஏழைகள் வீட்டு அடுப்பெல்லாம் நன்றாக எரியும். மேலும் அந்த சுள்ளிகள், விறகு எல்லாம் புகை என்றவர்கள், ஆலை, போக்குவரத்து மூலம் நாடு நகரம் கிராமம் எல்லாம் புகை மண்டலம் ஆக்கிவிட்டார்கள்.



நான் முன்பே சொன்னபடி மருத்துவமனைகளும், மருந்துக் கடைகளும், மதுக்கடைகளும், அரசும், போக்குவரத்து சாதனங்களும், ஊடகங்கள் யாவுமே மக்களுக்கு முரணாக இருந்து யார் யாருக்கோ லாவணி பாட மக்கள் நலத்தை குழி தோண்டி புதைத்து வருகின்றன. எல்லா விளம்பரங்களுமே மக்கள் இயல்பான இயற்கையான வாழ்வுக்கு வேட்டு வைத்து விட்டன. கேடு செய்து விட்டன, ஊறு செய்து விட்டன, குழி பறித்து விட்டன. என்ன வார்த்தை சொன்னாலும் அது குறைவாகவே முடியும்.

பெரிய பேருந்து நிலையம், மாவட்ட பேருந்து நிலையம் யாவும் முடை நாற்றம் ஈக்காடு, கொசு நாடு, மக்கள் புழங்கவே அருகதையற்றதாய் கக்கூஸ்களாய் இருக்கின்றன...மக்கள் வாழ்வோட்டத்தில் இதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். சிலர் மட்டும் இன்னும் பாசாங்காக மூக்கைப் பிடித்தபடி கடந்து செல்கின்றனர்.



நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளால் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடப்போவதில்லை. அது தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்ன ஆட்சியாக இருந்த போதிலும் மக்கள் நிலையும் கோட்பாடும் அழிந்து விட்டன‌

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 5, 2016

பொய் சொல்லிகள்:‍‍ கவிஞர் தணிகை

பொய் சொல்லிகள்:‍‍ கவிஞர் தணிகை




மது அருந்துவோர் அதிகமாக அதிகமாக மது அருந்தாதோர் விதி விலக்குகள்,புகைப்போர் முன் புகைக்காதோர் வாழத் தெரியாதோர்,அது போல பொய்யுரையும் புனை சுருட்டும் செய்வார் முன் பொய் பேசாதோர் வேடிக்கையாகும் கேலிப் பொருள்.



பொய் சொல்லக் கூடாது பாப்பா என்ற முண்டாசுக் கவிஞனின் பாப்பா பாட்டு நகைப்பிடமாகி விட்டது. பொய் சொன்னால் மட்டுமே எல்லாம் கூடும் பாப்பா என்ற பாடல் மட்டுமே பொருந்தும் உலகாகி விட்டது.

எப்படி எல்லாம் பேசுகிறார்கள், அப்பப்பா நினைத்துப் பார்த்தால் பெரும் மலைப்பாகி விடுகிறது. நாக்கை நினைத்தபடி நினைக்கவும் முடியாதபடியும் பயன்படுத்துகிறார்கள். பிறர் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக இவர்களே ஜோடித்து, சிருஷ்டித்து உருவாக்கி பேசி விடும் வித்தை தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.




கேட்டால் அப்படி இருந்தால்தான் எதையும் செய்ய முடியுமாம், பிழைக்க முடியுமாம். வெளியே சொல்வது முற்றிலும் வேறாக இருக்க நடைமுறையில் எதிர்ப்பதமாக செய்கிறார்கள். காரணம் கண்டறிய அப்படி செய்ய வில்லை எனில் அந்தக் காரியத்தை செயல்பாட்டை நடத்த முடியாமல் செய்து விடுகிறார்கள். எனவேதான் அப்படி பொய்யாடை புனைந்து திரிய வேண்டியதிருக்கிறது பொய் வலை கட்ட வேண்டியதிருக்கிறது என்கிறார்கள்.

தமக்கு முரண்பாடான கருத்து என்றால் அதை நேருக்கு நேராக எதிர் கருத்து கொண்டு சொல்லலம், விவாதம் செய்யலாம், மாறுபட்ட கருத்தை சொல்லி விளக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மாறுதலாக பொய் சொல்லி புனை சுருட்டு செய்து ஜோடனையாக ஜோடித்துப் பேசி எதை சாதிக்க நினைக்கிறார்கள் என்பது இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே நம் போன்றோருக்கு இருக்கிறது.இதை படித்தவர், மெத்தப் படித்தவர் எல்லாமே செய்கிறார்கள் படித்தவர்கள் படிக்காதாரை விட அதிகம் செய்கிறார்கள்.




இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் இது போன்ற எல்லா அயோக்யத்தனங்களும், மாய்மாலங்களும், வித்தைகளும் கற்றவர்களே வாழ தகுதியுள்ளார் என்று பெண்களும் பாராட்டி அங்கீகரித்து வாழத் தலைப்படுவது அதன் பின் வேதனைப்படுவது...

சிகரெட் புகைக்காத, மது அருந்தாத, ஒழுக்கமுடைய ஆண்கள் ஒன்றுக்கும் உதவாதார் , சாமியார் இவர் எதற்கும் உதவார் இவர் எந்த உறவுக்குமே சரிப்பட்டு வரார் என சொந்த பந்த உறவுகளும், நட்பும் , தொடர்புகளும், பெண்களும் கை கழுவி விட்டு சென்று விடுவது இயல்பான வாழ்க்கைப் போக்காகிவிட்டது.



இது பெரிதும் வருந்தத் தக்கது, வேதனையான சமூகப் போக்கு,காட்சிக்கு அந்த மனிதர் கால் விளங்காது போல ஒரு சக்கர தட்டின் மேல் அமர்ந்து சாலையில் கை வைத்து தள்ளி பயணம் செய்து சாலையை கடக்கிறார். ஆனால் அவர் நடப்பதை நான் கண் கூடாக கண்டதுண்டு.  அந்தப் பிச்சைக்கார தம்பதியர் அந்த பேருந்து நிலையப் பகுதிகளில் மட்டுமே இருந்து பிழைக்கிறது. காலையில் தினமும் நான் கவனித்து வருகிறேன்.

இப்படித்தான் சமூகமும் ஏமாற்றுவாரை நம்பி செல்கிறது...இது அரசியல், கல்வி, கலாச்சாரம், கலை,தொழில்,நிறுவனங்கள், வியபாரம் அரசு நிறுவனங்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்து விட்டது.

அரசே இதை எல்லாம் ஊக்குவிக்கிறது. பல விண்ணப்ப படிவங்களில் உண்மையைத் தெரிவிக்காமல் பொய்த் தகவல் தந்தால்தான் எதற்கான விண்ணப்பம் செய்யப்படுகிறதோ அந்த விண்ணப்பம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எ.கா: ஒரு பணியில் இல்லாதவர் பணியில் இல்லை என சொல்ல அரசு விண்ணப்பத்தில் வழி இல்லை, ஏதாவது ஒர் கட்டத்தின் வழியே குறைந்த பட்ச வருவாயாவது காண்பித்து சான்றிதழ் பெற வேண்டியதிருக்கிறது. எனவே பொய் சொல்ல விரும்பாதாரையும் பொய் சொல்ல வைத்து கணக்கு காண்பிக்கிறது.




மேலும் சொல்லப் போனால் இன்றைய பெரும் கவர்ச்சி ஊடகமான சினிமா இது போன்ற நாயகத்தையே பெரிதும் செல்லுலாய்ட் வடிவத்தில் உருவாக்கி சமூகத்தின் முக்கிய சந்திப்புகளில் நுகர அனுப்பி வைக்கிறது.திருடர், ரௌடிகள்,கொலைகாரர், கற்பழிப்பார், கொள்ளைக்காரர், ஏமாற்றுவோர், பொருளாதாரக் குற்றவாளிகள், மல்லையாக்கள், அம்பானிகள், அதானிகள் எல்லாம் எப்படி தொழில் நடத்த முடிகிறது அப்படி எல்லா வித்தைகளையும் கையாண்டுதான். அவர்களே நாயக நாயகி ஆக்கப்படுகிறார்கள். அவர்களே ஊடகங்கள் மூலம் நாயகத்துவம் பெற்று அனைவராலும் பாரட்டப் பெற்று அதே போல வாழ்வு வாழத் தலைப்படுகிறார்கள். தனித்துவம் என்ற ஒன்று அழிக்கப்பட்டு காலம் வெகுவாகி விட்டது.



 ஒலிம்பிக் பொறுப்பாளராக அம்பானி குழுமத்தின் பெண் வந்திருக்கிறார் எல்லாவற்றிலுமே ஒரு பொய்க் கலாச்சாரம் படர்ந்து விட்டது.

எவ்வளவோ செய்ய வேண்டியதிருக்க அதிகாலையில் கூட பேருந்துகளில் வியாபாரக் கற்பனை பொய் சிந்தனை புகட்டும் பாடல்கள் அந்த பேருந்து பயணத்தை ஒரு பிரமையில் ஒரு கற்பனாலோகத்தில் பயணம் செய்ய வைத்து அந்த கணப் பொழுதுகளில் அருகருகே பயணம் செய்யும் எந்தவகையிலும் அவரது வாழ்வில் இடம் பெற முடியாத ஆண் பெண்களை எல்லாம் அந்தப் பொழுதின் நாயகம் ஆக்கி ஒழுக்க இழிவை ஏற்படுத்தி விடுகிறது. அந்த தனியார் மயத்தை ஊக்குவிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுக்கவும் மக்கள் பொய் சொல்லிகளை பதவியில் அமர்த்தவும் மகிழ்வுடன் தயாராகிவிடுகிறார்கள்...இந்த தேவையற்ற இரைச்சல் அடக்க முடியாமல் ஓலமாகி விட்டது. இதன் எதிர்ப்புக் குரல் யாரும் கேட்க முடியாமல் சாகும் முன் முணகும் ஒரு ஈன ஸ்வரமாக ஆகிவிட்டது.



பால் விலை இறக்கம் என தேர்தல் அறிக்கை சொல்லியதை இந்த ஆளும் கட்சி அரசு செய்யாதாமே?

மதுவைப் பற்றி பேசாதிருந்திருந்து காங்கிரஸ் கட்சியுடன் கூடாதிருந்திருந்தால் தமிழகத்தின் ஆட்சி அமைப்பதலில் கூட மாறுதல் இருந்திருக்கலாம் என்பது எல்லாம் முடிந்த பின் தெரிய வந்திருக்கிறது.

பொய் சொல்லிகளை முறியடிக்க உண்மையை உரக்கச் சொல்வது எமது பாணி அது எந்த பாறை மேல் வேண்டுமானலும் முட்டி மோதி பயனற்றும் போகட்டும்.



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, June 4, 2016

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் புகழுக்கு மரணமில்லை: கவிஞர் தணிகை.

ஜெயித்துக் கொண்டே இருப்பேன் குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் புகழுக்கு மரணமில்லை: கவிஞர் தணிகை.

May 6th 1966: Muhammad Ali in training for his title fight against Henry Cooper. copyright PRESS ASSOCIATION

61 போட்டிகளில் 56 குத்துச் சண்டை போட்டிகளில் வென்ற அரிய மனிதர் உண்மையிலேயே உலகிலேயே கிரேட்டஸ்ட் மனிதர்தான்.பெர்கின்ஸன் நோய் வந்தபோதும் பொதுவாழ்வில் இறந்து விலகாமல் இரு முறை ஒலிம்பிக் நிகழ்வில் தலையாய விருந்தினராய் கலந்து கொண்ட பெருமை பெற்றவர். 74 வயதில் இன்று மரணமடைந்தது எம் போன்றோருக்கு நாமும் மரணமடைவோம் என்ற பாடத்தையும் அதற்கும் முன் இன்னும் என்ன செய்யலாம் என்ற உத்வேகத்தையும் அளித்திட வாழ்வை உந்திச் செல்ல மறுபடியும் ஒரு விசையை கொடுக்கிறது. 3 முறை தொடர்ந்து உலக கனரக குத்து சண்டையின் சாம்பியனாக வென்றவர்.

ஒலிம்பிக் தீப ஜோதியை ஏற்றும்போது ஒரு கை நடுங்க மறு கை உதறல் எடுக்க இந்த ஜோதியை ஏற்றுகிறேன் என்ற முகமது அலி என்கிற காஷியஸ் கிளே...தம்மை ஒரு முகமதியர் என்று மாற்றிக் கொண்டார் கடவுளின் அடிமை வெள்ளையரின் அடிமை அல்ல என்றாவர். மார்ட்டின் லூதர் கிங் என்ற மாபெரும் கறுப்பினத் தலைவரின் வழித்தோன்றலாய் இருந்ததாக இவரிடம் தோற்ற குத்துச் சண்டை வீரர்கள் ஜோ பிரேசர், ஃபோர்மென் போன்றோர் இன்றும் அவர் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.
U.S. boxing great Muhammad Ali poses during the Crystal Award ceremony at the World Economic Forum (WEF) in Davos, Switzerland, in this January 28, 2006 file photo.


நல்ல கருத்துக்கு குரல் கொடுத்தவர், அதனால் சிறைக்கும் சென்றவர்
இவரைப் பற்றி நான் அறிந்து கொள்ள ஆரம்பித்தது எனது சிறு வயதில் அதாவது அப்போது 7ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கலாம் வயது 10க்கும் மேல்.சுமார் 40 ஆண்டுக்கும் முன்னால் குமுதம் வாரந்தரியில் "ஜெயித்துக் கொண்டே இருப்பேன்" என்ற தலைப்பில் மிக நீண்ட தொடர் ஒன்று வந்தது. அதை யார் எழுதினார்கள் என்பது இப்போது நினைவில் இல்லை.

ஆனால் அவர் காஷியஸ் கிளே பிறந்த ஏழ்மை, காலில் செருப்பு கூட இல்லாமல் அவர் ஓட ஆரம்பித்தது, அவரின் அன்பு மிகுந்த பெற்றோர் அதன் பின் அவரது வீரம் எல்லாம் அத்திப் பூத்தாற்போல் நினவில் ஆட...அட இப்போது 74 வயதில் வியாழன் அன்று அவர் மருத்துவமனையில் சேர்ந்த செய்தியை ஒரு நொடி பார்த்தேன் இன்று மதியம் அவர் இறந்த செய்தி வந்த சில நிமிடங்களில் அறிய முடிந்தது.

Boxing legend Muhammad Ali blows a kiss after receiving Sports Illustrateds 20th Century Sportsman of the Century Award in 1999

அப்போதெல்லாம் இது போன்ற நல்ல தொடர்கள் குமுதம் வெளியிடும். உடன் சாண்டில்யன் கதையுடன். அப்போது குமுதத்தில் படித்ததுதான் பாப்பிலோன் வண்ணத்துப் பூச்சி என்ற கதையல்ல வாழ்க்கை வரலாறு ஒரு கைதியின் இடைவிடாத சிறை விட்டுத் தப்பிக்கும் போராட்ட சம்பவஙகளும்...

முகமது அலி, மைக்கேல் ஜாக்ஸன்,புரூஸ் லீ, ஜாக்கி சான் இவர்கள் எல்லாம் நமது மண்ணின் மைந்தர்களாகவே நமக்குள் இறங்கி விட்டவர்கள். இவர்கள் இழப்பு எல்லாம் உலகுக்கே பெரும் சோகமுடைத்து...

சில்வஸ்டர் ஸ்டால்லோன், ஆர்னால்ட் போன்று இவரல்ல, இவர் மகாபுருஷன். எப்போதாவது தான் எந்த யுகத்திற்காவது ஒரு முறைதான் அலி போன்றோர் பிறக்கின்றனர். உண்மையாக வாழ்ந்தவர். அவரின் சில காணொளிக் காட்சிகளைப் பார்த்து வியந்தேன் மிக உச்ச உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பான கோபமான சிங்கத்தின் உரை போன்றது. உண்மையில் மார்ட்டின் லூதர் கிங் வழித் தோன்றலாய்ச் சொல்லலாம்.




ஆனால் இவர் சொல்லி அடிப்பதிலும் வல்லவர். இவரை இத்தனாவது செகண்டில் வீழ்த்துவேன் என சொல்லி குத்தி வீழ்த்திய சம்பவங்கள், இவரை இத்தனாவது ரவுண்டில் நாக் அவுட் செய்வேன் எனச் சொல்லி அடித்து வீழ்த்துவது இவரது சண்டை ஒரு பெரும் காட்சி என்றால் பேச்சும் பெரும் ஆரவாரத்தை உருவாக்கியது.



இவரை நினைத்துக் கொண்டுதான் மகன் மணியத்தை சிறுவனாய் இருக்கும் போது ஓடச் சொன்னேன் ஆனா அவன் நாய்க்கு பயந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான் . இப்போது அதையும் செய்வதில்லை இரு சக்கர வாகனம் அதிகம் உபயோகிக்கிறான். குத்துச் சண்டை போட்டிக்கு செல்கிறேன் என பள்ளியில் இருந்து வந்து மேனிலைப்பள்ளியில் கேட்கும்போது வேண்டாம் வேண்டாம் முகம் மாறிவிடும், பல் போய்விடும் என உறவுகள், நட்பு எல்லாம் தடுக்க பெற்றோருமாகிய நாங்களும் தடுத்து விட்டோம்.



முகமது அலி பற்றிய காலைப் பதிவை அப்படியே எமது டான்பேஜஸ் தளத்தில் பதித்துள்ளேன் முடிந்தால் ஒரு முறை அதையும் படித்து பாருங்கள்.

மாவீரன் முகமது அலிக்கு என்றும் எமது அஞ்சலிகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஜெ (win) வின் மதியூகம் கலைஞரின் இராஜ தந்திரத்தை வென்ற கதை: கவிஞர் தணிகை

ஜெ  (win) வின் மதியூகம் கலைஞரின் இராஜ தந்திரத்தை வென்ற கதை: கவிஞர் தணிகை




92 ஆண்டுகள் முடித்த பழம் எம்.ஜி.ஆரை ஒதுக்கி, வைகோவை ஒதுக்கி, கலாமை கலாம் என்றாலே கலகம் தான் என்று மறுமுறை குடியரசுத் தலைவராக முன் மொழிய மறுத்து, மூப்பனாரை பிரதமாராக வரவிடாமல்  ஒத்துழைக்க மறுத்து, செம்மொழி மாநாட்டுக்கு ஒரு நூலாசிரியர் என்ற முறையில் கூட கலாமுக்கு அழைப்பிதழ் கொடுக்க மறுத்த நாயகரே உங்களின் இராஜ தந்திரத்தை மக்களின் பிரித்தாளும் கொள்கையை சரியாக கையாண்டதால் ஜெவின் மதியூகம் வென்று விட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு அருகே வந்தபோதும் இன்னும் ஆளும்  ஆசையும் விடவில்லை, பதவி ஆசையும் விட்டபாடில்லை. சொந்த மகனைக்கூட இவன் தான் என் வாரிசு எனச் சொல்லுமளவு உமக்கு குழப்பமில்லாமல் இல்லை.இன்று நீர் கட்சிக்குத் தலைவர், உமது மகன் பொருளாளர்,இளைஞரணித் தலைவர், மகள், மருமகள், மருமகன் எல்லாம் தான் கட்சி. ஆட்சி என்றால் நீங்கள் என்றே இருக்க வேண்டும் என்ற பேர் ஆசை பேராசை.எப்போதும் எம்.எல்.ஏ. உங்களுக்கென்று தனி இருக்கை இல்லை என்று சட்ட சபையில் சொல்லி விட்டார்களாமே!

 நீங்கள் வாழ்ந்த வாழ்வு அப்படி.என்ன என்ன முடியுமோ எல்லாம் செய்வீர் ஆனால் உமக்கு உகந்தவர் தவிர வேறு எவருமே பதவியில் அமர்ந்து விடக் கூடாது என்ற கவனத்தை தவற விட மாட்டீர். அந்த அம்மாவுக்கு எல்லாரையும் பந்தாடி விடும் பழக்கம் உண்டு என்றால் உமக்கு பந்து எல்லாப் பந்துகளுமே உங்கள் மைதானத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கணக்கு. அதுதான் இப்போது தப்பு கணக்காகி விட்டது. நீங்களும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி எல்லாரையும் கூப்பிட்டுப் பார்த்தும் எவருமே உங்கள் அணிக்கு வரவில்லை. மக்கள் வேறு மாற்றி தீர்ப்பை எழுதி விட்டார்கள். அதற்கு 68 வயதின் மதி யூகம் உமது 92 வயதை இராஜ தந்திரத்தை பழுத்த அனுபவத்தை வென்றதாகி விட்டது.

ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிப்பட்ட நபரின் ஒழுங்கு நடவடிக்கைகள் பாங்காக அமையும். நீங்கள் திறமை சாலி என்ற பதிவுகள் நிறைய உண்டு. ஆனால் நல்லவர் என்ற பதிவுகள் மிகவும் குறைவு. அப்படி எல்லாம் இருந்தால்தான் ஒரு பேரியக்கம் நடத்த முடியும் என்ற சூத்திரத்தில் சிக்கியபடியே உங்கள் பயணம் இன்னும் தொடர்கிறது.

உங்களின் தனிப்பட்ட திறமை, ஆளுமை , முதல்வர் நிர்வாகம் எல்லாம் நன்றாக இருக்கும்.ஆனால் கட்சித் தலைமை,அடுத்தவரை விலக்கி வைக்கும் தன்மை, தி.மு.க என்றால் முக தான் மு.க குடும்பம்தான் என்ற பிரமை எல்லாம் எம் போன்றோருக்கு மாறுபட்ட கருத்துகளை விளைப்பவை.

ஒரு வேளை கண்ணதாசனின் மனவாசம் வனவாசம் படித்ததால் உங்களின் சில செயல்பாடுகள் எமை பாதித்ததாயும் இருக்கலாம். பதவிக்காக எதையும் செய்வாராய் இருந்தீர் எத்தனையோ முறை மத்திய மந்திரிசபையில் இடம் பெற்று தமிழர் நலம் புறக்கணிக்கப்பட்ட போதும் மௌனியாகவே உங்களது நம்பிக்கை விசுவாசிகள்  மந்திரிகளாகவே நீடித்திருந்தார்கள்.

ஏன் இலங்கை தமிழர்களின் இனப்படுகொலை நடந்து முடிந்து பிரபாகரனின் முடிவு ஏற்பட்ட போதும் நீங்கள் தேர்தல் பதவி, கட்சிகள் கூட்டணி என்பதில் முழு கவனமாய் இருந்தவர்தான். நீங்கள் தமிழினத் தலைவராக உண்மையாகவே இருந்து போராடியிருந்தால் ஒருவேளை தமிழகமே உங்களுடன் பின் திரண்டு இலங்கை அரசுக்கு எதிராக போராடி நமது மத்திய நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.

கர்நாடகாக்காரர்கள் காவிரிக்கும் அவர்கள் இனத்துக்கும் போராடுவது போல...

எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு செய்த அளவில் கூட நீங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஈடுபடவில்லை.வேடிக்கைக்காக உண்ணாநோன்பு செய்தவர்தான் நீர். கேட்டால் மீசை அரும்பும் முன்னே ரயில் மறியல் செய்தவர் என்பீர். அதற்குள் எத்தனை சித்து விளையாடல் செய்திருந்தீரோ?

கண்ணதாசனுக்கு கிடைக்காத மோதிரம் மேடையில் அண்ணாவால் உமது தேர்தல் பணிக்காக அணிவிக்கப்பட நீங்களே மோதிரம் வாங்கிக் கொடுத்தவர்தானே? நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் போன்றோரை பொதுப்பணித் துறையில் இருந்து கடந்து முதல்வர் பதவி அடைய அண்ணாவுக்கப்புறம் எம்.ஜி.ஆரை பயன்படுத்தி விட்டு அதன்பிறகு எம்.ஜி.ஆரையும் தூக்கி எறிந்தவர் தானே?

தூக்கி எறிந்தவர் வெகுண்டு எழுந்த சரித்திரம் கொடுத்த அடி இந்த தேர்தல் வரை அவர் இல்லாதபோதும் உங்களை பாதித்திருக்கிறது. என்னதான் மக்கள் உங்கள் பக்கம் நிற்க முயன்றாலும் தர்மம் எம்.ஜி.ஆர் என்ற எழுத்துகள், ஜெவின் வியூகம் மற்றும் மதியூகம் உஙக்ளது ராஜ தந்திரத்தை வீழ்த்தி விட்டது.

என்ன இதனால் மக்களுக்கு சேர வேண்டிய நல்ல விஷியங்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஆதங்கம் எம் போன்றோர்க்கு. நீங்களும் உங்கள் கட்சியும் தோற்று மக்களுக்கு கிடைக்க இருந்த சற்று மேலான ஆட்சியையும் கோட்டை விட்டு விட்டீர்.

தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றப்பட்டிருக்க, அரசின் பால் விலை ஆவின் பால் விலை குறைக்கப் பட மாட்டாது என மாவட்ட செயலாளராக இருக்க வேண்டிய எமதருமை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரே சொல்லி விட்டாராமே...

அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கும் அதை தட்டிக் கேட்க வேண்டிய திராணி எவருக்குமே இல்லை.

தீர்ப்பை எதிர்பார்ப்போம், பணம் என்றால் பாதாளம் வரை பாயும் என்பார். அவர்கள் பணத்தை இறைப்பார்கள் எடுத்தும் கொள்வார்கள். நீங்கள்?....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

P.S:-  இறைக்காமலே எடுக்க முயல்பவர்...பால் இல்லா மடியிலும் கறக்க முயல்பவர், காசு கொடுக்காமலே மிரட்டி வந்த கதை எல்லாம் கண்ணதாசன் சொல்லில்...


மருத்துவம் என்பது சேவை இதை மருத்துவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியத் தேவை.: கவிஞர் தணிகை.

மருத்துவம் என்பது சேவை இதை மருத்துவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியத் தேவை.: கவிஞர் தணிகை.



 சேலம் இலண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் பணி புரியும் ஒரு  நர்சிங் முடித்த நலிந்த‌ இளைஞர் பேருந்தில் பேசி வருகிறார் அழுதபடி, அக்கா எனக்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை. எல்லாம் தப்பித்துக் கொண்டார்கள் நான் மாட்டிக்கினன் அக்கா... அதுவும் குறைந்த ஊதியத்தில் என. அந்த இளைஞர்க்காக இந்த பதிவு சமர்ப்பணம்.

மற்றொரு மருத்துவர் தமது சேவைப் பணியை மாதத்தில் ஒரு 2 மணி நேரம் கூட ஏழை எளியவர்க்கு அவரின் நிறுவனம் தர பணித்த போதும் அதை செய்ய விரும்புகிலார் அவரை சபித்தும் இந்த பதிவு.

உயிர் காக்கும் சேவை,விஷம் கக்கும் பாம்பின் கடிக்கும்,உயிர்க் கொல்லி நோய் போக்கும் அருமருந்துக்கும் அதிபதி நீங்கள் இப்படி அவலமாய் கருணை இன்றி இருக்கலாமா?

ஒரு மாதத்தில் ஒரு சில மணி நேரம் உங்களால் ஏழைக்கும், இல்லார்க்கும் மருத்துவ சிகிச்சை செய்து புண்ணியம் தேடிக் கொள்ள முடியாதா?

உயிரை காக்கும் உங்களை தெய்வம் என்கிறார்கள். தெய்வம் என்றால் கருணை உள்ளது. எனவேதான் மருத்துவர் அனைவரும் கருணை உள்ளத்துடன் இருக்க இருப்பதிலேயே புனிதத் தொழில் எனக் கருத்தில் கொண்டு வெண்ணிற ஆடையை சமூகம் உங்களுக்கு தந்தது.

ஆமாம் இந்த இந்தியா அசுத்தம் நிறைந்தது, அழுக்கு நிறைந்தது, துர் நாற்றம் மிகுந்தது, பிச்சைக்காரர் நிரம்பியதுதான் அதற்காக நீங்கள் எதுவும் செய்யாமலே வாழ்ந்து முடிந்து விடுவீரா? கொஞ்சமாவது ஒரு துளியாவது சுயநலம் மறந்து துயர் துடைக்க வர மாட்டீரா?

நீங்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் உங்கள் பெற்றோர் செலவு செய்த பணத்தில் தான் படிக்கிறீர் அதற்காக செல்வம் செழித்தோருக்கு மட்டும் கட்டணத்துக்கு மட்டுமேதான் சிரித்து முகம் கொண்டு சிகிச்சை செய்வீரா? ஏழைக்கு இரங்க மாட்டீரா?


அட உங்களுக்கு உதவி புரியும்  ஒரு நண்பர் தாதியர் படிப்பு படித்து விட்டு இப்படி இரவும் பகலுமாய் அல்லல் பட வேண்டுமா குறைந்த ஊதியத்துக்கு இது சரியா? இதற்கா அந்த ஊழியர் நர்சிங் படிப்பு முடிக்க வேண்டும் என்கிறீர்? காலை முதல் நள்ளிரவு வரை இருந்து கணக்கு முடித்தால் தான் பணி முடிகிறதாமா? இது என்ன கால அட்டவணை? எட்டு மணி நேர வேலை மேதின விழா உலக தொழில் நிபந்தனைகள் எல்லாம் என்னவாயிற்று?

இந்த நாடு நிறைய துறைகளில் எல்லாம் உலகின் முன்னணியில். இன்னும் நிறைய துறைகளில் எல்லாம் உலகின் முன்னணியாக வரவேண்டும்.

படித்தோர் அதிலும் மருத்துவம் படித்தோர் கிராமங்களில் பணி புரிய விரும்புவதேயில்லை. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என இந்த நாட்டின் தந்தை சொல்லி சென்று சுடப்பட்டு இறந்தபோதும்.எவருக்குமே சுயநலப்பற்று தவிர வேறு பற்றே இல்லை.

சீனா என்னும் நமது நாட்டை விட மக்கள் தொகை அதிகமான பெரிய நாட்டை பேர் புட் மெடிகல் ஒர்க்கர் ( கால் நடை மருத்துவ தாதியர்)என்று சொல்லிய பயிற்சி அளித்த தாதியர் மூலம் காடு மேடு எல்லாம் நாடு நகரம் எல்லாம் பரப்பி அந்த நாட்டு மக்களின் சுகாதாரம் மேம்பட மாவோ (மா சே துங்க்) என்னும் மனிதர் முயன்றார் வென்றார். இங்கு நாடு என்பது கிராமம்.

இங்கும் கூட அரசு மருத்துவ மனைகளும், சுகாதார மையங்களும் தம்மால் ஆன சேவை ஆற்றிட அரசு பணித்திருக்கிறது. ஆனாலும் அவை தேவையை பூர்த்தி செய்ய அந்தளவு வளர்ச்சியுடன் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு கி.மீ தொலைவிற்கும் ஒரு துவக்கப்பள்ளி என்கிறார். இன்றைய ஆட்சி காலை சிற்றுண்டியும் தர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் ஒரு அரசு துவக்கப் பள்ளியில் ஒரே மாணவர் இருப்பதாகவும் இரு ஆசிரியர் கற்றுத் தருவதாகவும் செய்தி புகைப்படத்துடன் வருகிறது அதே போல‌

சேலம் சிறப்பு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் இரவு நேரத்தில் விளக்குகளே முன் புறம் எங்கும் எரிவதில்லை நிலை பாரீர் என தேர்தல் விதியை மாற்றிய‌ அதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு நிர்வாகம் பாருங்கள்.


சுருக்கமாக சொல்ல விரும்புவது: அரசு ஊதியத்தில் பணி புரியும் அனைவரும், மருத்துவம் படித்து மருத்துவத் தொழிலில் ஈடுபடும் அனைவரும் மருத்துவத்தை தொழிலாகக் கருதாமல் சேவையாக என்று தொடர்வது? தெரஸாவாக வேண்டாம். ஒரு சிறந்த சீர்மிகு மருத்துவராக இருப்பது உங்களுக்கும் உங்கள் அடுத்த தலைமுறைக்கும் நல்லதில்லையா?

அரசு: அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி பள்ளிகள் மாதிரி 2 கி.மீ சுற்றளவுக்கு ஒரு மருத்துவமனை பேர் என்ன வேண்டுமனாலும் இருக்கட்டும் அது சுகாதார மையம் அல்லது அரசு பொது மருத்துவமனை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் கண், பல். எலும்பு, பொது, பிரசவம் மற்றும் குழந்தை நலம்,கண்,காது, தொண்டை , அறுவ சிகிச்சை மையங்கள், சித்தமருத்துவம், ‍ஹோமியோபதி, இன்னும் பல துறைகளுடன் பரிசோதனை மையங்கள் அது எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் போன்ற நவீன தொழில் நுட்ப மருத்துவ வசதிகளுடன் மனிதரின் உயிர் காக்கும் 24 மணி நேர சேவையும் தர வேண்டியது நோக்கி நகர்ந்து செல்ல வேண்டியது அவசியம்.

இந்த பாம்பு கடி, நாய்க்கடி, விஷக்கடி மருத்துவம் பெற‌ சென்றோம் மருந்து இல்லை என்று திரும்பினோம் என்றெல்லாம் இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் சம வாய்ப்பு, சம முக்கியத்துவம் தந்தாக வேண்டும். அது தான் சிறந்த நாடாக இருக்க முடியும். அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அந்த பணிகளில் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.அல்லாமல் சுயநலப் பிண்டங்களுக்கும் பொது சேவை என்றால் என்ன என்றே தெரியாத முண்டங்களும் அந்தப் பணியில் இருப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் கேடு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

காட்சிப் பிழைகள்

காட்சிப் பிழைகள்

காட்சிக்கு வந்தாரை எல்லாம்
கதாநாயகம் என்றோம்

கட்சித் தலைவர் ஆக்கினோம்
முதல்வரானார்கள்

கண் எதிரே தியாகம் செய்து
செத்து வீழ்ந்தாரைக் கூட
பிழைக்கத் தெரியாதோர் என்றோம்

கலாம்
கலைஞர்
ஜே
சின்ன பையன்
விஜய்காந்த் சசிபெருமாள்
கலந்து போனார்கள்
கலைந்து போனார்கள்
கரைந்து போனார்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.