Sunday, December 31, 2023

சட்டையை உரிக்கிறேன்:/எல்லா இடங்களிலும் (என்) தெய்வம்: கவிஞர் தணிகை

 சட்டையை உரிக்கிறேன்:/எல்லா இடங்களிலும் (என்) தெய்வம்: கவிஞர் தணிகை



திருப்பதியில் : விளையாட்டுப் பையனாகவே இருக்கிறீயேடா?...


பழநீ: செல்வம் சேரும்...வேறொரு வாய் வழி வந்த வார்த்தைகள்...5 ரூபாய் இனாம், அவ்வளவுதானா? மேலும் ஒரு 5 ரூபாய் கொடுத்தது...


திருவண்ணாமலை: இப்படி வர்ரதா இருந்தா வராத....நல்ல அறிவுரை பிறரைப் போல தாமும் நினைத்து சட்டையைக் கழட்டி விட்டு நீண்ட வரிசையில் நின்றபடி அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்த போது...

திருவரங்கத்தில்: மூதாட்டி சிறுவனாக இருந்தவனை இஞ்சினியர் ஆவான், என வாழ்த்தி யாசகம் பெற்றார். ஆனான்.


மாரியம்மன் கோயில்: போயிடு, போடா, போயிடுடா...அதன் பின் அங்கிருந்து அகன்று சென்ற பின் அடிதடிக் கைலப்பு. சிக்கல் தவிர்க்கப் பட்டது...


காளியம்மன் கோயில்: அவனை விட்டுடு தொந்தரவு பண்ணாதே...அண்டை வீட்டுக்காரனை தப்பிக்க வைக்க என்னிடம் வேண்டல் அல்லது கோரிக்கை அல்லது அது அவர்கள் சார்பான ஆவியா?!


முனியப்பன் கோயில்: அடுத்தவர் வாயிலிருந்து வரும் வார்த்தை முன் தெரிந்தது மேலும் நிறைய சிக்கல்களின் போதெல்லாம் விடுவிப்பு...


 வீட்டுள் நிறைய :


இரவில் வெளியே படுத்துக்கிட்டா  சரியாகிடும்...இல்லை செய்ய வில்லை திருடன் தனியாக வெளியில் வீட்டில் இருந்து தொடர்பின்றி இருந்த சிறு அறைக்குள் சென்று தேடல் செய்திருக்கிறான்...எல்லாம் கலைத்து போட்டு பூட்டை உடைத்து...இன்ன பிற....


தேர்தல்லியா நிக்கற முதல்ல அம்மா புட்டுக்கிட்டு போப் போறா பாரு அதை முதல்ல பாரு...இப்படி நிறைய அவள் இறந்தாள் தவிர்க்கவே முடியா சோகம்...நீண்ட...


அடுத்த ஆண்டு அவ இருக்க மாட்டா...அவ(ள்) இல்லைதான் அது அம்மா


40 ஆண்டு கால தியான வாழ்வு


ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் பின் இந்த மூன்றாம் கண், ஆன்மா விழிப்பு, தியான வழி ஒளி: 


"காதுகள்' எம்.வி. வெங்கட் ராம்  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் ஆனால் அந்த நூல் அவரது அனுபவப் பூர்வமான தொல்லைகளை விளக்கி இருக்கும் நுட்பம்...ஆனால் கூச்சமின்றி எப்படித்தான் பதிவு செய்தாரோ அவரக் கேட்க வேண்டும் அது அவரது சுய சரிதைதான்.


ஏனென்றால் தியானத்தில் நிறைய கவிதைகளை, வார்த்தைகள் இழப்பதாக கால நீட்டுதல் இருக்க...


மகாத்மாவும் தனது உள் குரலுக்கு மதிப்பளித்தார் என்கிற குறிப்புகள் உண்டு


ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி எல்லாம் பேசியதாக படித்ததாக நினைவில் இல்லை

ரமண மஹரிஷி: இவர் ஒருவர் தாம் நானறிந்த வரையில் ஞானிகளில் "நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்றவர்.


உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

திருமூலர்: 

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...



நேரம் காலம் எல்லாம் கவனிக்கப் பட வேண்டியதாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியதாக...


நவ கிரகங்களை எல்லாம் ஆசான் ஜீ  இறையின் புழுக்கை என்கிறார்


பேரண்டம் பெருவெளி பிரபஞ்ச நோக்கு என்ற பார்வையில் அது சரியாகவும் இருக்கக் கூடும்.


ஒன்று எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது

இரண்டு அது நமது ஆன்மாவாக இருப்பது


மூன்று இந்த வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு: நம்முள்ளிருந்தும், வெளியிலிருந்தும் கிடைப்பதை தெரிந்து கொண்டதாக சொல்ல முடியும் என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த  மருத்துவ நண்பரிடம்... ஆனால் அவரும் நானும் பார்த்து கிட்டத் தட்ட 26 ஆண்டுக்கும் மேலாகி விட்டது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




THE RAILWAY MEN

 ரெயில்வே மென்: கவிஞர் தணிகை



நவம்பர் 18. 2023ல் சுமார் 50 முதல் 65 நிமிடங்கள் ஓடும்படியான 4 பகுதிகளாக வெளிக் காட்டப் பட்டுள்ள நல்ல தொடர் சினிமா இந்த ரெயில்வே மென். ரயில்வே மனிதர்கள்.


தப்பும் தவறுமாக ரயில்வே இருக்கும். இந்தியாவின் ஏன் உலகிலேயேக் கூட பெரிய ரயில்வேத் துறை இந்தியாவுடையது. இதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அற்புதப் பணியை உயிர்களை ஆயிரக்கணக்கில் காத்த பதிவை நம்மையும் பார்க்க வைத்து உணர வைத்திருக்கிறார்கள்.


மாதவன் ஜுஹி ஜாவ்லா  தவிர பெரும்பாலும் நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள். காரணம் இந்தித் தொடரின் மொழிபெயர்ப்புதான் இது.


ஆனால் ஹாலிவுட் ஸ்டைலில் இதயத்தைப் பிழிந்து விடுகிறது. அழுது கொண்டே கைத் தட்டியபடி பார்க்க வேண்டியதாக இருக்கும் இந்த மினி சீரியல் ஒரு வெப் தொடராக வந்திருப்பதை ஒரே நாளில் விடாமல் பார்த்து முடித்துவிட்டுத் தான் மூச்சு விட்டேன். காரணம்: போபாலில் 1984ல் நடந்த யூனியன் கார்பைட் வாயுக் கசிவின் போது வெளிப்பட்ட பெருந்துயரம்.


உண்மையிலேயே எடுக்கப் பட்டதுதானா? இல்லை அந்தக் காலக் கட்டத்தை அப்படியே எடுத்து நம் முன் தந்துள்ளார்களா என எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது காட்சி அமைப்புகள்


ரெயில்வே நிலையத்தின் தலைவராக வரும் உண்மைப் பாத்திரம் உண்மையிலேயே இறந்ததாகக் கருதி அதன் பின் பிணவறையில் இருந்து 3 மணி நேரத்துக்கும் மேலான பிறகு உயிர் பெற்றதான நிகழ்வு அவர் செய்த புண்ணியத்துக்கு பிராயச் சித்தமானது என நம்மிடம் ஒரு எண்ணம் எழ வைக்கிறது.


எக்ஸ்பிரஸ் திருடனாக இருந்தவர் எப்படி இவரைப் பார்த்து இவரது செயல்பாட்டைப் பார்த்து மனந்த் திருந்துகிறார் என்பதும்


யூனியன் கார்பைட் நிறுவனத்தில் பணி புரியும் அந்த முக்கியப் பணியாளர் எப்படி தமது உயிரையும் பொருட்படுத்தாமல் 5 ஆம் வாயு உளையை தொடர்பிலிருந்து விபத்து நேராமல் துண்டிக்கச் செய்து அதன் பின் இறக்கிறார் என்பது,


இப்படி நடந்தே தீரும் என்ற நிலையை உலகுக்கு வெளிப்படுத்தி அதைப் பற்றி எவருமே அக்கறை கொள்ளாத போதும் கடமையை அபாயத்தை முன் கூட்டியே வெளியிட்ட‌ பத்திரிக்கையாளர் எப்படி அந்த பெரும் இடரிலிருந்து உயிர் பிழைத்து முடிந்தவரை பிறரைக் காப்பாற்றி இந்தக் கோவிட் 19ல் கொரானாத் தாக்கி உயிரிழந்தார் என்பது இவை மட்டுமல்ல‌


ரெயில்வே ஊழியர்களை எப்படி மாதவன் ஒருமுகப் படுத்தி இந்த இடரில் மேலும் உயிர்கள் பழியாவதை தடுக்கிறார் மேலும் அந்த முகமதியரியாஸ் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் செயல்பாட்டாளர் ரெயில்வே நிலையத் தலைவருக்கு எப்படி உறுதுணையாக செயல்பட்டு உயிர் இழக்கிறார்


இதனிடையே இந்து சீக்கியக் கலவரத்தில் பிரதமர் இந்திராவின் துப்பாக்கிச் சூட்டிற்கு பழி வாங்க வாளெடுத்து சீக்கியரைக் கொல்லப் புறப்படும் வெறியர் கூட்டம் அதனிடையே சிக்கும் 2 சீக்கியர்


இப்படி எந்த இடத்திலும் தொய்வில்லாத ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற உணர்வு. இந்த தொடருக்கு நாட்டின் உயரிய விருதை வழங்க எல்லாத் தகுதிகளும் இருக்கிற திரைப்படம்.


தொலைத் தொடர்பு இணைப்புத் துண்டாகி இருக்கும் போபால் ரயில் நிலையத்தின் வழி வரும் விரைவு தொடர்வண்டிகளை அதை உரிய வழியில் மட்டுமே அணுகத் தூண்டும் கதை அமைப்பு அதை அமலாக்கும் ரெயில்வே மனிதர்கள்... சொல்ல மொழியில்லை பாராட்ட அளவு தேவையில்லை.


சிறந்த அனுபவத்தை அளித்திருக்கிறது  இந்த தொடர் பகுதிகள்.இந்திய சினிமாவில் இப்படியும் செய்யலாம் என்று முயன்றுள்ளனர்.

அனைவரும் காண வேண்டும்.

ஈரத் துணி முகக் கவசம் தான் எண்ணிறந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. அழுகிய முட்டைக் கோஸ் நாற்றம் நுரையீரலை கண்களை எப்படி பாதிக்கிறது என்ற கொடூரங்கள்...என்ன விஞ்ஞானமோ எழவோ என்று பார்க்கும்போதே சபிக்கத் தோன்றுகிறது

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

p.s:அமெரிக்க நீதி இன்னும் கிடைக்கவில்லையாமே...இந்தியாவில் இதெல்லாம் சகஜம் என்கின்றனர் ஐரோப்பியர். அதிலும் ஒரு நல்ல அறிவியல் அறிஞர் தென்படுகிறார் அவரையும் செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.15 ஆயிரம் குடும்பங்களுக்கு கொள்ளி வைத்த அந்த மீத்தேன் ஐசோடப்புக் கசிவுக்கு அந்த இந்தியாவில் நடந்த ஜப்பான்  ஹிரோஷிமா, நாகசாகிக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்?

இறுகப் பற்று:இந்தக் காலத்துக்குத் தேவையான திரைப்படம்: கவிஞர் தணிகை

 இறுகப் பற்று:இந்தக் காலத்துக்குத் தேவையான திரைப்படம்: கவிஞர் தணிகை



நிறைய சோகங்களும் சம்பவங்களும் நிறைந்த 2023 ஆம் ஆண்டில் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் "இறுகப் பற்று" என்ற காலத்துக்குத் தேவையான ஓரு படம் அக்டோபர் 6ல் வெளிவந்துள்ளது..


நிறைய பேர் கவனித்திருக்கவும் வாய்ப்பு குறைவே.


ஆனால் காதல் திருமணம், சேர்ந்து வாழ்தல், பிரிதல்,விவாகரத்து போன்ற இளைஞர்களின் பிரச்சனையில் சத்தமின்றி அணுகி இருப்பது மட்டுமின்றி  நல்ல தீர்வையும் முன் வைத்துள்ளது.உடனடியாக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடிப்பதைத் தவிர்த்து அவரவர்க்கு உண்டான கால அவகாசத்தை வழங்கினாலே போதும் குடும்பங்கள் பரிமளிக்கும் என்ற செய்தியை எளிமையாக இழையோட விட்டிருக்கும் படம்.


விக்ரம் பிரபு, ஸ்ரத்தா , விதார்த், மனோ பாலா போன்ற தெரிந்த முகங்களுடன் அதிகம் இது வரை பதியாத முகங்களுடன் இந்தப் படத்தை முன் வைத்துள்ளனர். யுவராஜ் தயாளன் இயக்குனர் சற்றும் தொய்வின்றி படத்தை கொண்டு சென்றுள்ளார்.


இரண்டு ஜோடிகளின் வாழ்வுப் பிரச்சனைக்குள் புகும் மன இயல் வல்லுனர் ஒருவரின் வாழ்விலும் அதே பிரச்சனை எவ்விதம் ஊடுருவிச் செல்கிறது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நைஸாக ஏற்றி படத்தை பார்க்க வைத்துள்ளனர். ஆக 3 ஜோடிகளின் வாழ்வின் தடுமாற்றம் மற்றும் தடம் மாற்றம்.


எனக்கென்னவோ நம் வயது போன்றோர் பார்ப்பதை விட இன்றையக் காலக் கட்டத்தில் உள்ள தம்பதிகள் அவசியம் பார்க்க வேண்டும் அது விவாக ரத்து நீதிமன்ற வழக்கு, வாழ்வின் நற் தருணங்களை இழக்காதிருத்தல் ஆகியவற்றுக்கு பெரிதும் உதவும் என்றே தோன்றுகிறது.


ஆர்வத்தை அதன் ருசியைக் குறைக்காதிருக்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முடிந்தால் ஒரு முறை பாருங்கள் இளையோரைப் பார்க்கச் சொல்லுங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, December 21, 2023

பூக்கள் பூக்கள் தேனீக்கள்: கவிஞர் சு. தணிகை



1. ஊர் ரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்


2.வீடு ரண்டு பட்டா பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு(ம்)


3.சுற்றுப் புறத் தூய்மை யாவருக்கும் மேன்மை


4.பொது நல வாதி வெகு ஜன விரோதி


5.இரு பிறவி நல்ல சொல்லாடல் சுளுந்தீ இரா.முத்து நாகு


6.(ஜே.என்.1) J N.1மூன்றாம் கோவிட் அலை2023/ 2024 ஆரம்பம்


7.குரங்கு Mpox அம்மையும் பரவல்...உலக சுகாதார நிறுவனம்WHO


8.மேற்கத்திய நாடுகளைப் பின் பற்றினால் உன் 3 ஆம் தலைமுறை அழியும்

                                  விவேகானந்தா

9.க்ளின் சிம்மன்ஸ் 22 வயதில் சிறை 48 ஆண்டுக்குப் பின் நிரபராதி

                            இது அமெரிக்க நீதி.

10.நம்பகமான மனிதர்கள் இல்லை எழுத்துகள் இருக்கின்றன.


                                                                       மறுபடியும் பூக்கும் வரை

                                                                       கவிஞர் சு. தணிகை






Tuesday, December 12, 2023

பூலோகம் ஆனந்தத்தின் பிள்ளை. கவிஞர் தணிகை

 

               பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

 


கூவும் குயில்கள் இன்னும் இருக்கின்றன

பாயும் நதிகளும் இன்னும் இருக்கின்றன

தாவும் குரங்குகள் வாழ்வு தடம் மாறிய போதும்

தாயும் சேயும் தற்கொலை விழையும் போதும்

 

மேலை நாடுகளின் வியாபார யுக்தியும் யுத்தமும்

கீழைக் காற்றில் விசிறிடும் நச்சும் புகையும்

தாழை மலர்களில் வாசம் செயும் நாகமும்

காலை எழும் நட்புச் சொற்களும் கதிரும் இன்னும்...

 

மலைகள் பெயர்ந்த போதும் பூமியின் எடை ஒன்றே

மழை வீச்சு தாறுமாறானபோதும் புவி வெப்பச் சூழல்

பிழைகளாய் பிரிந்த போதும் அச்சும் சுழலும் ஒன்றே

குழந்தைகள் செல்பேசியில் குழந்தை மனங்கொண்டார்

                                   சொல் பேச்சினில்.

 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிரிவினைகள் மறந்து இங்கு கூடிடலாம் ஒன்று

சீர் பிரித்து சீர் சேர்த்து செய்த கவி ஒன்று

 

நன்று செய்வோர் நானிலத்தில் அரிய மலர்ச் செண்டு

ஒன்று இணையும் பூவாய் நாருடன் சொற்கற்கண்டு

தமிழ் மொழியுடன் உலகு விரிந்த சரித்திரம் கண்டு

மொழியும் சொல்லில் அண்டப் பெருவெளி முடியா நூற்கண்டு

 

அரசியல் சித்து விளையாடல் அறியோம் நாம்...தொண்டில்

அரிசியியல் கொண்டு ஆட்டுவிப்போர் பின் தாம் அழியோம்

நல்வினை தீவினை இரண்டின் ஆட்சி மாட்சிமை நின்று

நல்வினையும் தியாகமுமே சிறந்த நகை செய்வோம் என்றும்

 

இலட்சங்களால் கோடிகள் சேர்த்துக் கொள்வார் வென்று

தேர்தலில் வெற்றி ஒன்றே பெற்றிடுவார் நின்று

இலட்சியத்தில் தடுமாறி தியாக தீபம் ஏற்றிக் கொண்டு

வாழ்ந்து மறைவர் விடுதலைப் போராளிகள் நினைவுடனே

                   அடையாளம் தெரியாது சென்று....

 

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை உண்மைதான்

பூலோகம் ஆனந்தத்தின் பிள்ளை.

மறுபடியும் பூக்கும் 

கவிஞர் தணிகை


 

Wednesday, December 6, 2023

க்கூ...(ல்): கவிஞர் சு. தணிகை

 க்கூ...(ல்): கவிஞர் சு. தணிகை



ஆயிரம் காக்கைக்கு ஒரே ஒரு கல்

இலஞ்சம்


உடல் முழுக்க ஆடை

கொசுக்கள்


முழுப் பக்கம், ஒரு பக்கம், இரு பக்கம் , பல பக்கம்

குண்டூசிமுனையிலிருந்து....


தெரு தவறாமல் மருந்துக் கடை

ஒரே மதுக் கடை


புகை நீ புகையை விடு மேலே மேலே...

புகைந்து போ(க)


கருத்துகளைப் படிக்காமல் காலமெலாம் களித்திடு

எலிப் பொறி


பொய்களின் பின் பயணம் தொடர்

மெய் தொடர்வதறியாது...


கரு உருவாக இலட்சங்கள்

கலை(க்க) ஆயிரத்தில்


பொம்மை மிஞ்சும் உருவங்கள்

உரு வெளி


பர வெளியில் மழைத் துளி உயிர்த் துளி

வெள்ளக் காட்டுத் தீ...


  மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் சு. தணிகை


Monday, December 4, 2023

அறிவியலின் ஐந்து கீறல்கள் இயற்கையின் ஐந்து கூறுகள்: கவிஞர் தணிகை

 அறிவியலின் ஐந்து கீறல்கள் இயற்கையின் ஐந்து கூறுகள்: கவிஞர் தணிகை



1. செயற்கைச் சூரியன்: ஜப்பான் ஐரோப்பிய யூனியன் இணைந்து ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து ஆய்வு நடத்தி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் போவதாக செய்தி. சூரியனில் இப்படித்தான் ஹீலியம் வாயு உருவாகி எரிந்து வருவதாகவும் இது வரை புவியில் அணுக்களை பிளவு படுத்தியே அறிவியல் செயல்பாடுகள் இருந்ததாகவும் இதுவே அணுக்களை இணைத்துச் செய்யும்( First) ஆய்வு என்பதும் குறிப்பிடத் தக்கது.2024 அக்டோபர் வரை நமது சூரிய மண்டலத்தின் மையமான சூரிய எரிதலின் உச்சம் நிகழும் என்று அறிவியல் கணித்துள்ளது.


2. இப்போது விண்ணில் புவியை வலம் வந்து கொண்டிருக்கும் பழசாகிப் போன விண்வெளி ஆய்வுக் கூடத்தை இழுத்து செயல்படாமல் பசிபிக் கடலில் தள்ளும் முயற்சிக்கு பல ட்ரில்லியன் யூ. எஸ் டாலர் (சுமார் 6 முதல் 9 வரை யூ.எஸ் ட்ரில்லியன் டாலர்கள்) செலவாகும்  அதற்கான முயற்சிகளை யூ.எஸ்ஸின் நாசா செய்து வருவதாகவும் அமெரிக்கன் விண்வெளித் துறையான நாசா அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக புதிய ஆய்வுக் கூடம் அமைக்கவும் ஏற்பாடுகள் உள்ளன.

3. 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சூரிய மண்டலத்தை கண்டறிந்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி. அதில் 6 கிரகங்கள் புவியை விட இரண்டு மடங்கு பெரிதாக உள்ளதாகவும், நமது சூரிய மண்டலத்தில் நடந்தது போன்ற இடித்தல், சிதறல் போன்ற நடவடிக்கை ஏதுமின்றி இவை உருவாகி உள்ளதால் கிரகங்களைப் பற்றி அதன் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்புகள் நன்கமைந்துள்ளன என்றும் நாசா செய்தி.


(நினைவுக்கு: ஒளியின் வேகம் சுமார் 3இலட்சம் கி.மீ /1,86,000 மைல்கள் ஒரு நொடிக்கு அது போல ஒளி ஓராண்டு பயணம் செய்யும் தொலைவையே அறிவியல் ஒர் ஒளியாண்டு என்று கணக்கிடுகிறது.)


4.2021 செவ்வாயில் இறக்கிய ஹெலிகாப்டர் மாடலை அடிப்படையாக வைத்து புவியில் இறங்கும் ஹெலிகாப்டர் விசையையும் மேம்படுத்த நாசா ஆராய்ச்சி


5. செவ்வாயில் உள்ள நீரிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்க சீனா செய்யும் முயற்சிக்கு நாசா ஒத்துழைப்பு செய்யும் என்றும், விண்வெளியில் தாவர வளர்ச்சி பற்றி ஆய்வுகள் உள்ளன என்றும் செய்திகள் உள்ளன.


பி.கு: நாசாவைச் சார்ந்த செய்திகளே இவை என ஏன் என்று கேட்கிறீர்களா? என்ன தான் இருந்தாலும்(US) நாசா,ஜப்பான், ரசியா,ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, சீனா, நமது இஸ்ரோ ஆகியவற்றில் எப்போதுமே நாசாவே முன் நிற்பதால் அதை சொல்வதன்றி வேறு வழியில்லை.

மிக்ஜாம் புயல், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் என்று செய்தி ஊடகங்கள் அசை போட்டுக் கொண்டிருக்க இதெல்லாம் எங்கே கவனிக்க நேரம் என்கிறீர்களா? 

என்ன தான் அறிவியல் கீறல்கள் மனித முயற்சிகள் இருந்த போதும், ஆகாயம், நெருப்பு, காற்று,நிலம் , நீர் இந்த  இயற்கையின் ஐந்து கூறுகள் அடிப்படையை எவ்வித மனித முயற்சிகளும் நெருங்கவும் முடியாது எப்போதுமே நாயகம் இவை மட்டுமே...


அறிவியல் அவசியம்தான் இயற்கை அதை விட பெரும் அதிசயம் அல்லவா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


டிசம்பர் 4 1997 என்றதொரு நாள் என் வாழ்வில் வந்து இன்றுடன் 26 ஆண்டுகள்  அந்த அர்ப்பணிப்புக்கான‌ பதிவு இது. இரு வேறு துருவங்கள் இருப்பதால்தாம் புவி சுழல் புவி பயணம்... தன்னைத் தானே 24 மணி நேரத்துள் சுழற்றிக் கொண்டு மணிக்கு 67,000 மைல்கள் வேகத்தில் செல்லும் புவியில் நமது இருப்பே நமக்குத் தெரிவதில்லை. இல்லாதது பற்றி ஏங்கிக் கொண்டு இருப்பதை போற்ற மறந்து நிற்கிறோம்.


Saturday, November 25, 2023

சு. வெங்கடேசன் அவர்களின் வீர யுக நாயகன் வேள்பாரி: கவிஞர் தணிகை

 சு. வெங்கடேசன் அவர்களின் வீர யுக நாயகன் வேள்பாரி: கவிஞர் தணிகை



தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ஆனந்த விகடன் வெளியீட்டின் வீரயுக நாயகன் வேள்பாரியை படித்து முடித்தது முதல் அது பற்றி உங்களுக்கு(ம்) சொல்ல வேண்டும் என்ற அவாவை எண்ண முடிப்பை இன்று நிறைவேற்றிக் கொள்ளவே இந்தப் பதிவு.


விடியல் குகன் இதில் அதிக படங்கள் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். மணியம் செல்வத்தின் ஓவியங்கள்


கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல... என்பதற்கேற்ப இந்த சரித்திர ஓவியத்தை உரிய நேரம் காலத்தில் படிக்க முடியாமல் இப்போதுதான் புலவர்.ரா.சௌம்யா அவர்களின் புத்தகம் கொடுத்து உதவல் மூலம் படிக்க வாய்ப்பு  கிடைத்தது.அவர்க்கு எம் இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.


1400 பக்கங்கள் அதன் விறுவிறுப்பில் மூழ்கி விரைந்து படித்து எனக்கு உடல் சூடு,கண் கீழ் இமைகள் வீக்கம்.ஆனாலும் நாளையே சாகப் போவது போல செயல்பாடு இருக்க வேண்டும், என்றும் நிலைப்பது போன்று இருக்க வேண்டும் என்ற காந்திய சிந்தனை, நோக்கத்தோடு இந்த அரிய வரலாற்றுப் பதிவைப் படித்தேன். மிக வாழ்வின் அரிய பணியை நிகழ்த்தி தமது வாழ்விற்கு பொருள் தேடிக் கொண்டார் வெங்கடேசன்.


மிகவும் அருமையான தயாரிப்பு நேர்த்தியான நூலாக்கம். மிகவும் உயர்ந்த தரமான தாள்களுடன் தெளிவான அச்சுப் பிரதியுடன் முதற்பதிப்பு 2018 டிசம்பர்,2021 வரை ஏழு பதிப்புகள் கண்டுள்ளதாக குறிப்பு.ரூபாய் 1600 விலை என்ற போதும் புத்தகத் திருவிழாக்களில் குறைந்த விலையுடன் கிடைக்கலாம்.


அடியேனும் பல ஆண்டுகள் மலைவாழ் மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுபட்டவன் என்ற முறையிலும் அந்த வாழ்க்கையில் தொடர்புடையவன் என்ற கோணத்தில் இந்த நூல் அதன் இடங்கள், சம்பவங்கள், வீர வரலாறு, காடு , மலை அதன் பின் புலம், அதை சார்ந்த உயிர்களே படைக்கலங்களாக பயன்பட்டமை ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ள நேர்ந்தது.சொல்ல வார்த்தை இல்லை பாராட்ட மொழி இல்லை. தமிழ் தெரிந்த அனைவருமே படித்தாக வேண்டிய ஒரு ருசிகரமான வீரியமான படைப்பைக் கொடுத்துள்ளார்.


முருகன் வள்ளி பாரியின் முன்னோர் என்று சொல்லப் படுகிறது. காக்கா விரிச்சிப் பறவை, சுண்டாப் பூனை,ஆண் காட்டெருமையின் காதுக்குள் இருக்கும் முடி அதில் இருக்கும் பூச்சிகள், காட்டெருமையின் பின் கால் ஜவ்வு போன்ற உறுப்பின் பாகத்தை வெட்டி விட்டால் அது நகர முடியாமல் நின்ற இடத்தில் இருந்தே போரிடும் என்ற தகவல், விஷப் பாம்பின் வாயைத் திறந்து அதில் போடப்பட்டு விஷம் தோய்த்தெடுக்கப் படும் முட்கள் கருவிகளாகும் ஆயுதங்கள், அலவன் என்னும் விஷத்தை முறிக்கும் அளவு விஷமுடைய சிறுவன்


வான் நிகழ்வை உற்று நோக்கும் திசை விழையார்,சேர சோழ பாண்டிய ஏன் வேள் பாரிக்கும் போற்றத் தக்கவரான கபிலர், எந்தப் பக்கம் விட்டாலும் வடக்கு நோக்கியே அமரும்   தேவாங்கு,காட்டுக் கொல்லி விதைகள்,(விசித்திரம் : மீன்களும், பறவையும், விலங்குகளும் அதனால் கவரப்பட்டு மயக்கமடைதல்) ஆட் கொல்லி மரம், காம முறுக்கி, காமச் சுருக்கி ,மரங்கள்....


இப்படி எங்கு தொட்டாலும் அரிய செய்திச் சுரங்கத்தை வைத்திருக்கிறது இந்த புத்தகப் பெட்டகப்  பொக்கிஷம்.


சாண்டில்யன், கல்கி, தீபம் நா. பார்த்த சாரதி, கோவி. மணி சேகரன், அகிலன், இப்படி எண்ணற்ற வரலாற்று கதாசிரியர்களோடு பயணம் செய்த நாம் இப்போது வேள்பாரியுடன் சு. வெங்கடேசன் அவர்களுடன் பயணம் செய்தமைக்கு மகிழ்ந்து அவர் உழைப்புக்கு தலைவணங்கி அவரது முயற்சிக்கு பாராட்டைத் தெரிவிக்க வேண்டிய கடமைப் பாட்டில் இருக்கிறோம்.


எண்ணிக்கையில் மிகக் குறைவான படை வீரர்கள் ஏன் படை என்று கூட சொல்ல முடியா வீரர்கள் உடைய‌ ஒரு தலைவன் எப்படி தக்க சூழ்நிலைகளையும் இடம் பொருள் ஏவல் கொண்டு அங்கிருக்கும் உயிரினங்களின் தன்மைகளை பயன்படுத்தி வீரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் உயர்ந்தோங்கிய சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரு சேர படையெடுத்து வேள் பாரியை ஒழித்துக் கட்ட சூழ்ந்து நின்றார்களை ஓட ஓடத் துரத்தி அடித்தான் என்பதே இந்த கதை.


 இதன் விதை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என்பதே அதில் இருந்து முளைத்ததே. இரு மல்லிகைக் கொடி ஒர் இரவில்/இரவுக்குள் இவன் நிறுத்திச் சென்று இருந்த தேர் மேல் விரவிப் படர்ந்து சேர முயற்சிப்பதைக் கண்டு தேரை எடுத்தால் அந்தக் கொடிகள் அறுபடுமே என்பதற்காக பாரியும் அவன் தோழி ஆதினியும் அந்த தேரை அப்படியே விட்டு விட்டு நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கே தேருடன் சென்ற நமது தலைவன் நடந்து வருகிறானே என பறம்பு மலை மக்கள் கண்டு வியக்க.


பகல் எல்லாம் சூரிய ஒளியை தனது இலைகள் மூலம் எடுத்துக் கொண்டு இரவில் ஒளி விடும் மரம் இப்படி இன்னும் நிறைய நிறைய சொல்கிறார் காடு மலை சார்ந்த வியப்புகளை வெங்கடேசன்.


அங்கவை, சங்கவை என்றால் சாலமன் பாப்பைய்யா மூலம் கேலிக்குள்ளான சங்கர் ரஜினியின் கூட்டணியில் உருவான சிவாஜி படம் தான் நுனிப்புல் மேய்வார்க்கு நினைவு வரும் . ஆனால் இங்கே இதில் வரும் உண்மையான வீர மகள்கள். அங்கவை சங்கவை என்னும் பாரியின் பெண்களை  கபிலர் காப்பாற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதான செய்யுள்களைப் படித்ததுண்டு. ஆனால் இந்த வேள்பாரி வேறு.இதில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை.


இந்த வேள்பாரி உண்மையிலேயே வீர யுக நாயகன் தான். அவனுக்கு உதவிடும் நீலன், காலம்பன், தேக்கன், காடன் இப்படி எல்லா பாத்திரங்களும் மேலும் அற்புதமான பெண் படைப்புகளும் நமது கண் முன்னே காவியத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


பொன்னியின் செல்வனைக் கூட எடுத்துக் காட்டி விட்டார்கள். ஆனால் வேள்பாரியைக் காட்டுவதென்பது அத்தனை சுலபமல்ல . ஒரு வேளை (சிஜி) கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வழியே கொண்டு வந்தால் தான் உண்டு. படித்தே ஆக வேண்டும் அது ஒரு சுகம். இது ஒரு தமிழின் வரம்.

thanks su. Venkatesan M.P sir.

hats off to you.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, November 24, 2023

பேரன்பு ஹச்சிக்கோ: கவிஞர் தணிகை

 பேரன்பு ஹச்சிக்கோ: கவிஞர் தணிகை



படத்தை எனக்கு பரிந்துரை செய்த ஒரு பொறியாளர் இதைப் பார்த்து அழுதீர்களா? என்று கேட்டார். ஆம் என்ற ஒற்றை எழுத்துச் சொல்லை ஆங்கிலத்தில் S  என்றே என்னால் சொல்ல முடிந்தது.



ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதம் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் தனது மானிட நண்பர்க்காக காத்திருந்த, சரியாக மாலை 5 மணி வாக்கில் வந்து சேரும் தொடர் வண்டியில்  அவர் பணி முடிந்து திரும்பவும் வருவார் வருவார் எனக் காத்திருந்து ஏமாந்து அதன் பின் அங்கேயே உயிர்விட்ட ஒரு நாயின் கதை. அதன் கடைசி மூச்சு கூட பேரன்பின் விளைந்த சிறு துளியாக மறைந்த ஒரு காவியத்துக்காக அதே இடத்தில் அந்த நாய்க்கு ஒரு வெண்கலச் சிலையை ஜப்பானில் நிறுவி இருப்பது அதன் பெருமையை பறை சாற்றுகிறது.


ராம நாராயணன், தேவர் போன்றோர் விலங்குகளை வைத்து தமிழ், இந்தி போன்ற இந்தியப் படங்களில் எல்லாம் தாய்மார்களை நெகிழ வைத்தார்கள்.


நேற்று ஹச்சிக்கோ என்னும் ஜப்பான் மூலம் உருவான உண்மை வாழ்க்கையை 2009/10 வாக்கில் எடுக்கப்பட்ட ஆங்கில படத்தை சுமார் 97 நிமிடம் பார்க்க நேர்ந்தது.



நெக்குருகி கண்ணீர் சிந்தாமல் இந்த திரைப்படத்தை எவருமே காணமுடியாது. அதுவே பேரன்பின் வெற்றி.

மற்றபடி இந்த திரைப்படத்துக்கு வசனம் ஏதுமே அவசியமில்லை என்றே எனக்குப் பட்டது. மேலும் இதில் வில்லத்தனம் செய்யும் எந்த பாதிப்புகளும் இல்லை. மிகவும் இயல்பான வாழ்வின் நகல்.


பொதுவாக ஜப்பான் என்றாலே துல்லியமான நேரம் கடைப்பிடிப்பாளர்கள்,பெருமுயற்சியாளர்கள்,மிகுந்த தேசப்பற்றுள்ளார் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருப்போம் அத்துடன் இந்த பேரன்பு பாராட்டுவார் என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.


அவசியம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பாருங்கள். பேரன்பின் மழையில் நனைய...


ஹச்சிக்கோ என்றால் 8 என்ற எண்ணைக் குறிக்கும் என்றும்,மேலும் இந்த வகையான நாய் இனத்தை பயிற்சி அளித்து பயிற்றுவித்து மனித இனம் பயன்படுத்த முடியாது என்பதெல்லாம் தெரியவரும் செய்திகள்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: நாய், பூனை, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் ஏன் காட்டு விலங்குகள் கூட நேசிப்பாரிடம் தவறாத அன்பு காட்டும் எங்கு சென்று விட்டாலும் தமது இடத்துக்கு திரும்பும் என்ற நிகழ்வுகள் நம்மிடமும் உண்டு என்றாலும் இந்த 9 ஆண்டுகள் 9 மாதம் காத்திருந்த ஹச்சிகோ நாயின்  நம்பிக்கை மனிதரிடம் காண முடியாதது. இதில் கொஞ்சம் மனிதரிடம் இருந்தாலும் மனிதமும் உலகும் செழிக்குமே..

Tuesday, November 21, 2023

ரோஜாக்களுடன் நான்: கவிஞர் தணிகை

 ரோஜாக்களுடன் நான்: கவிஞர் தணிகை





கார்த்திகை 2 நவம்பர் 18 வ.உ.சி. கப்பலோட்டிய தமிழர் நினைவு நாள் மட்டுமல்ல எனது தந்தையின் நினைவு நாளும் கூட. அந்த நாள் 38 ஆவது நினைவு நாள். இருவருக்கும் மற்றொரு ஒற்றுமை இவர் 65 வயது அவர் 64 வயது. இவரும் அவரும் பாட்டாளிகள். ஒருவர் செக்கிழுத்தவர் மற்றவர் 4 விசைத்தறி இரவும் பகலும் ஆங்கிலக் கம்பெனியில் பார்த்து ஊதியம் ஈட்டி 10 குடும்பங்களை உருவாக்கியவர். அதெல்லாம் சரி.

வழக்கம் போல 3 ரோஜா மாலைகள் வாங்கி வர விரும்பினேன். அய்யப்பன் கோவில் பருவ காலம் என்றார்கள், சஷ்டி என்றார்கள் பூக்கடைகளில் பூக்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஒரு பெண்மணி பூ இல்லை என்றார். மற்றொருவர் இருப்பதை தரலாமே என்றதற்கு அய்யப்பனுக்கு மாலையில் வந்து கேட்கும்போது வேண்டும் என்றார், அதே இடத்தில் மற்றொரு பெண் ஒரு மாலை ஒரு முழம் அளவு ரூ. 300 என்றார் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பூ இல்லையென்றால் என்ன என்ற நிலைக்கு வந்து நடக்க ஆரம்பித்து விட்டேன்.

மற்ற கடைகளில் எல்லாம் நேற்றைய பூக்கள் மூலம் கட்டிய மாலைகள் வாடிக் கொண்டிருந்ததே ரூ. 150 என வாங்கி விடலாமே என்றும் யத்தனிப்பு. ஆனால் ஒரு கடையில் இருந்தவர் இரண்டு இங்கு வாங்கிக் கொள்ளுங்கள் இன்னொன்று  எனக்கு கட்டத் தெரியாது. கடைக்கார மருத்துவமனைக்கு சென்றுள்ளார் வர நேரமாகும் என்றார். அவரை செல்பேசியில் வரச் சொன்னேன். வருவதாக சொல்லியதால் அரை மணி இருக்கும் காத்திருந்த நேரம் வரவில்லை. பிறகு அந்த வேடிக்கையாகப் பேசிய அந்த பக்கத்து கடைக்காரரே இந்த இரண்டு மாலையை வைத்துக் கொள்ளுங்கள் பக்கத்தில் இருந்து இன்னொரு மாலையை வாங்கி வந்து விடுங்கள் என்றார். என்ன தண்ணி தெளித்துள்ளீரே என ஒரு வாடிக்கையாளர் கேட்டதற்கு என்னை 7 ஆம் வகுப்பு படிக்கும்போதே எனது வீட்டில் தண்ணி தெளிச்சு விட்டார்கள் என்று பதில் சொல்கையில் அந்த நபரிடம் இருந்த நேர்மையும் வேடிக்கைப் பேச்சும் வெளிப்பட்டது. அவர் அந்தப்  பூக்களுக்கு தண்ணீர் தெளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவரின் சொல்படி அருகாமையில் இருக்கும் கடை ஒன்றுக்கு சென்று அங்கும் மாட்டி இருந்த மாலையின் விலை கேட்டேன். அதுவும் ரூ.150 என்றார். ஆனால் சற்று நேரத்தில் புதுப் பூக்கள் வரும் என்றார். சொல்லி வாய் முடிக்கும் முன் ஒரு வேனில் பூக்கள் வந்தன. 

பதினொன்னரை மணிக்கு காலை ரோஜா வரும் நேரம் என்றார் சொல்லி வாய் மூடும் முன் வந்தது. மூளையே குறித்து வைத்துக் கொள் என்றேன். எனது நேரம் நல்ல நேரம் என்றேன் பழைய பூக்களுக்கு பதிலாக புதிதாக வாங்கிக் கொள்கிறோம் என்பதில் ஒரு மகிழ்வு. அவர் பேரைக் கேட்டேன் நாகராஜன் என்றார். அவர் கடையில் நின்று இருந்து 3 மாலை வரை  கட்டி வாங்கிக் கொண்டு வந்து எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டேன்

.பழைய பூ மாலை ஒன்று ரூ.150 ஆனால் இந்த மாலை ரூ.200. ஏற்கெனவே சென்ற‌ அந்த கடைக்கு சென்று அவர்கள் மாலை எதுவும் வேண்டாம் என்று தயங்கி தயங்கி சொல்லி விட்டேன். மாலைகளை விரைந்து கட்டச் சொன்னார் நாகராஜன் தமது தாயிடம், அவரது தாயும் அந்த பழைய மாலைகளைக் காட்டி ஏன் இது தான் இருக்கிறதே என்று சொல்லியபடி காலம் தாழ்த்த முயற்சிக்க எடை போட ஆள் வரணும் என்றபடி எல்லாம் சொல்ல, அதெல்லாம் இல்லை உடனே கட்டு, நான் எடை போட்டுத் தருகிறேன் என விரட்டினார். தாயும் மகனுமா ? இல்லை முதலாளியும் வேலை ஆளுமா என்று கேட்டு தாயும் மகனும் தான் அந்த உரிமையில் பேச முடியும் என்ற எனது முடிவை அவர்களும் ஆமோதித்து சிரித்தனர்.

அதற்குள் சில படிகள் இந்த வரிகளில். குண்டு மல்லிகை கிலோ 1650 அதுவும் ஒன்னரை மணிக்கு மதியமே கிடைக்கும் என்றார் பூக்கடை நாகராஜன். மற்றவர் ஒருவர் கேட்டதற்கு பதில். பூக்கள் வர வர வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது. சொல்லில் நேர்மை இருந்தது.மற்ற சில பூக்கடைக்காரர்கள் கூட இவரிடம் வாங்குகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

மாலையை வாங்கிக் கொண்டு வரும்போது மருத்துவ மனையில் இருந்து வந்திருந்த அந்தப் பெண் என்னை அழைப்பதை காதில் வாங்கிக் கொண்டே திரும்பாமல் நடையைக் கட்டி பேருந்துக்கு வந்தேன் என்றாலும் நான் ஏமாற்றி விட்டேன். அந்த பழைய பூ மாலையையும் வாங்கி கொண்டு ரூ.150 வீதம் 300 தந்திருக்க வேண்டும் அதுதான் எனது சொல்லின் நேர்மை என்று ஒரு பக்கம் கூறியது.என்றாலும் பழைய பூக்களை வாங்காமல் தடுத்த நல்ல நேரத்தை எண்ணியபடி...அப்படி எல்லாம் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்குமளவு என்னிடம் செல்வம் சேரவில்லையே எனத் தேற்றிக் கொண்டேன்'.ஒரு நாள் வாடிடப் போகும் மாலையில்  தாம் எத்தனை எண்ணங்கள் புதைந்தபடி...

எல்லாம் ஒரு நேரம் தான்.

நான் மாலை வாங்கிய கதை இத்தோடு முற்றிற்று.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Thursday, November 16, 2023

2. நிரந்தரமானது: கொசுக்கள்:கவிஞர் தணிகை

 

எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை

 எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை



1. கறை படிந்த நிலமல்ல இது

   தியாகக் குருதி நிறைந்தது


2. நிரந்தரமானது:

   தீர்க்க முடியாத பிரச்சினை என்று(ம்)

   மாற்றமின்றி என்றும் இருந்து மாறாதது


   கொசுக்கள்


3. ஏழ்மையில் புகழ்தல் இல்லை புகல்தலே


4. புராணங்களை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன்


5. சமூக விஞ்ஞானி:

   பெரியாருக்கு  இவ்வளவு அறிவு அந்த ஒரு(வரின்) மூளையில்

   எப்படி  வளர்ந்தது,இருந்தது என்று எண்ணி வியக்கிறேன்


6. பசியோடிருக்கும் ஒவ்வொரு உயிரின் பசியையும் ஆற்ற முயலாத‌

   உயிர்கள் செய்வது(ம்) பாவமே


7. இராமலிங்கரின் ஜீவ காருண்ய பசி தீர்த்தலையும்

   காந்தியின் இராம ராச்சியத்தையும்

   மார்க்ஸ் லெனின் தத்துவத்தையும் என்னால் ஒன்றிப் பார்க்க முடிகிறது


8. தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாததற்கும்

   வேரூன்ற‌ வழியில்லாமல் போனதற்கும் காரணம் பற்றி ஆய்வு செய்தால்

    அது பெரியார் பெற்ற வெற்றிதான் என்ற முடிவு வருகிறது.


9. பிரபஞ்சம்,உயிர்கள் நலம் இவற்றிற்கான பாலம் அறிஞர் மொழிகள்


10. நல்ல தலைமை+ தவறான இயக்கம்

    தவறான தலைமை + நல்ல இயக்கம்

    இரண்டுமே கேடுதான்.




Monday, November 6, 2023

ஸ்டாலின் இளைஞர்களின் முன்னோடி ...கவிஞர் தணிகை

 ஸ்டாலின் ஓர் மாணவராகவும் என் மகன் போன்ற சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்க அவருடைய கராத்தே ஆசிரியர் மூலமாக அவருடைய மேற்பார்வையுடன் பணிக்கப் பட்டது முதல் அவரை சற்று நெருக்கமாக நானறிந்தேன். பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் நியாயம், நீதி , நேர்மை என்று போராட்டம்.



எனவே பொருளாதாரத்தில் வெகுவான முன்னேற்றம் இல்லை.இவருடைய தந்தை ஒரு பொதுவுடமை இயக்க பிரமுகராகவும் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தமை அனைவரும் அறிவர். இவருக்கு ஸ்டாலின் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.


பொதுவாக கலை சார்ந்து அதன் வருவாய் கொண்டே வாழ்வது என்பது இந்தியா, ஏன் தமிழ் நாடு போன்ற இடங்களிலும் சற்று அல்ல மிகக் கடினமான ஒன்று. அதை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு மிகவும் இல்வாழ்வை நல்வாழ்வாக நடத்தி வருவது இவரது வெற்றி.


இந்த இணையர்கள் இணையர் என்ற திருமணத் தளத்தின் மூலம் இணைந்து இன்று ஒரு தவழ்ந்திடும் ஆண் மகவுடன் மகிழ்கின்றனர் என்பது ஒரு கூடுதல் செய்தி.


இவரது மாணவர்கள் நல் ஒழுக்கத்துடனும், நற்பயிற்சியுடனும் சிறந்த மனிதர்களாக‌ விளங்கிட அவர் தம் பெற்றோர் மகிழ்வது போல அடியேனும் மகிழ்கிறேன் என்ற பகிர்வை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் அது மட்டுமல்ல இவருடைய( கராத்தே) ஆசிரியர் எனது மகனுக்கும் நாலைந்து வயது முதலே கராத்தே ஆசிரியராக இருந்து எங்கள் குடும்ப வாழ்விலும்  வாழ்வின் நிகழ்வுகளிலும் இணைந்திருந்த அந்த காலம் பற்றி அசை போடுவதற்காகவே 


இந்த முறை ஸ்டாலின் அழைப்பை ஏற்று எனது நேரத்தில் அரை மணி நேரம் அவர்களுடன் இருந்தேன். காலம் ஒளியின் வேகத்துடன் விரைகிறது



வாழ்த்துகள் ஸ்டாலின் 

மேலும் வளர்க மக்கள் ஆதரவு பெறுக‌


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


ஸ்டாலின் இளைஞர்களின் முன்னோடி ...கவிஞர் தணிகை

Monday, October 30, 2023

அம்பத்தூர் முதல் அமெரிக்கா வரை: கவிஞர் தணிகை

 கடந்த சில நாட்களாக நாட்டில் அல்லது உலகில் நடந்தேறி வரும் சம்பவங்கள் மிகவும் உற்று நோக்கி கவனிக்க‌த் தக்கவை சாதாரணமாக எல்லா செய்திகளையும் போல புறந் தள்ளி விட்டு செல்லக் கூடியவனவாய் இல்லை. அமைதியாக இருக்க முடியவில்லை.



1. அம்பத்தூரில் ஆய்த பூஜைக்காக இரு சார இந்திய வட மாநில இளைஞர் கூட்டம் மோதிக் கொள்வதும் அதைத் தடுக்கச் சென்ற அல்லது சமாதனம் செய்யச் சென்ற காவல் துறையினரை அந்தக் கூட்டத்தினர் ஓட ஓடத் துரத்தி அடித்ததும் அதன் பின் உடனே அல்லது விரைவாக 33 பேர் காவல் துறையினரின் கட்டுப் பாட்டில் எடுத்ததும்...


ஒவ்வொரு தனி மனிதச் செயலும் நாட்டின் அல்லது உலகின் ஒட்டு மொத்த நன்மை தீமைகளுக்கு வித்தாகிறது 


மகாத்மா காவலரையும், இராணுவத்தினரையும் அவரவர் கடமையைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


மக்களின் எண்ணமே அரசு , அரசின் எண்ணமே காவல் துறை அந்தத் துறைக்கே இது போன்ற நிலை என்றால் பிற துறைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.


மகாத்மாவின் இராமராஜ்ஜியக் கனவிலும், கம்யூனிலும் காவல் துறைக்கு வேலை இல்லை. ஆனால் அது போன்ற வானமே தொடு தூர ஆட்சி வரும் வரை காவல் துறை இருந்து தான் ஆக வேண்டும்.


2. கேரளத்தின் வழிபாட்டுத் தலத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தவர் தமது பக்க நியாயம் பற்றி விளக்குவதான காணொலி...இழந்து போன ஒரு மனித உயிர்க்கும்,காயம் பட்ட பலருக்கும் நீதியாக அமைந்து விடப் போவதில்லை.


3. இஸ்ரேல் பாலஸ்தீனிய யுத்தம், ரஷ்யா உக்ரைன் போன்ற போர்கள் சொல்லொணா மனித குலத்தின் மேல் நடத்தப் படும் தாக்குதல்கள் உயிர்சேதங்கள், பொருட் சேதங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மேல் தாக்க அதன் விலை ஏற்றம்


4. அமெரிக்காவிலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மனிதர் பலரைக் கொன்ற பின் பிணமாகக் கிடந்ததாகச் செய்தி.


பொதுவாக உலகும் மாந்தர்களும் முக்கியமாக அதிக மக்கள் தொகை உடைய இந்தியா போன்ற நாட்டு மக்களும் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி மிக விரைவாக நகர்ந்து வருகிறார்கள் அதன் விளைவுகளே யாவும்.அப்படி செல்லும் போது 3 தலைமுறைகளில் குலம் அழிந்து விடும் என்று விவேகனந்தா போன்ற ஆன்ம நேயர்கள் கருதி எச்சரித்துள்ளனர்.


இவற்றை எல்லாம் அபாயச் சின்னங்களாகவே கருத வேண்டும், இவை சில சம்பவங்களே பெரும்பாலும் நாடும் மக்களும் உலகும் அமைதியாகத் தானே சென்று கொண்டிருக்கிறது....சேலம் கோட்டை மாரியம்மன் குட முழுக்குத் திருவிழாவில் முகமதிய நண்பர்கள் குடிநீர் போத்தல்களை அனைவர்க்கும் வழங்கி நெஞ்சை நெகிழ வைத்தார்களே அதுவும் சம்பவம் தானே செய்திதானே என சமாதானப் படுத்திக் கொள்ளக் கூடாது. சமாதனப் படுத்திக் கொள்ளவும் முடியாது.


இதில் மாநிலம், மத்தி, உலகு என்றவாறெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வழி இல்லை. ஆட்சி முறைகளில் சரியான அணுகுமுறை இல்லை என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. சாதாரண மனித உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற கருத்தே நிலைப்படுகிறது. விசாகப் பட்டினம்  ரயில் விபத்து உட்பட... காவல்துறையினரும் குடும்பம் என்ற அமைப்பின் அங்கங்கள் தானே, ஆட்சி அமைப்பின் கருவிகள் தாமே. BE PEACE DON'T BE AS A PIECE

what is the use of UNO ...?

கருத்துகள் வெளிப்பட‌

எண்ணங்கள் தெளிவாக‌

தியானம்




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

கொசுக்களும் உயிர்கள்தாம் ஆனால் அவற்றை....


Monday, October 16, 2023

மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்: கவிஞர் தணிகை(எ)தணிகாசலம் சுவாமிகள்.

 மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்: கவிஞர் தணிகை



இல்லை என்றும் சொல்லலாம் இருக்கிறது என்றும் எண்ணிச் சொல்லலாம் எண்ணிக் கொள்ளலாம் அது எல்லா இடங்களிலும் வியாபித்து நீக்கமற நிறைந்து கிடக்கிறது என்பார் .


பொங்கு பல சமயமெனும் நதிகளெலாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப்... பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே...எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்க நிழல் பரப்பி மயற் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச் செங்குமுதம் மலர வரு மதியே எல்லாம் செய வல்ல கடவுளே தேவ தேவே என்பார் இராமலிங்கர்


அத்தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் பொய்த் தேவுப் பேசி புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாது பற்றற நான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவுக்கே சென்றூதாய் கோத்தும்பி...


விவேகானந்தர் சொல்லியபடி கிணற்றுத் தவளை உவமைகளுடன்,எல்லா மதங்களும் நதிகளே...


வறுமையும். பிணிகளும், பஞ்சமும், பசியும் பட்டினியும் இன்னும் தீராமலே இருக்கையில் இயற்கையில் இயல்பில்


தானாக சாகும் வாய்ப்பு தவறாத உயிர்களை மின்சாரம், குடி நீர் உணவின்றி தவிக்க விடுவதும், இரக்கமின்றி கொன்று குவிப்பதுமாக மனித இனம் மல்லுக் கட்டிக் கொண்டு மனித குலம் அபாயகரமாக சென்று கொண்டிருக்கும் காலக் கட்டம்.


இன்றும் நோபெல்தான் உயர்ந்த மனிதகுலப் பரிசென்கிறார், அதை நிறுவிய ஆல்ப்ரட் நோபெல் தாம் டைனமைட் வெடிமருந்தைக் கண்டறிந்த போது அது பாறைகளைத் தகர்க்கும் வெடிமருந்து அது பலனளிக்கும் உயிர்களுக்கு என்றே கருத்துப் பதிவு செய்தார்.


ஆனால் சொல்லொணா கொடுமைகள்,,, பார்க்கவும் முடியா காட்சிகள்...நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...


எந்நிலையில் இருந்தாலும் எவர் செய்தாலும் எவர் காரணமாக இருந்த போதும் வன்முறை தீர்வாகாது. எனவே தான் காந்தி மகாத்மா போன்றோர் தமிழர் நெறியில் வள்ளுவத்தில் சுட்டிய படி இன்னா செய்தாரை ஒறுத்தல்....என்று தனி மனித வாழ்வுக்கும்  வழி காட்டினார்....ஆனால் இன்று இனங்கள் ஒன்றுக்கொன்று அழித்துக் கொள்வதும், நாடு ஒன்றுக்கொன்று  அழித்துக் கொள்வதுமாக  சொல்லத் தரமன்று. சொல்வதில் தர்மம் என்று....


சமயத் தலைவர்களும், நாட்டின் தலைவர்களும் இதை எல்லாம் தடுக்கும் கடமையில் உள்ளார் அனைவரும் வாளாவிருக்கின்றனர். ஐ.நா சபை  என்பது வெறும் பேருடன் குறுகிக் கிடக்கிறது.


இந்த நேரத்தில் ஈனஸ்வரத்துடன் பிராத்தனை செய்வதன்றி என்போன்றோர்க்கு வழி இல்லை...மனித குலம்  இது போன்ற அழிவு அத்தனைக்கும் ஆணி வேராக விளங்கும் (அதிலிருந்து ஆரம்பிக்கும்) மதம், இன பேதம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ இயற்கையை பிரார்த்திப்போம்.


எம் மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்

அம்மதம் என்றருள்வாய் அருட் பெருஞ்ஜோதி...


சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. என்கிற தணிகாசல சுவாமிகள்.


Sunday, October 8, 2023

விசித்ராவும் பவா செல்லத்துரையும் பிக்பாஸ் நடப்பில் : கவிஞர் தணிகை

விசித்ராவும் பவா செல்லத்துரையும் பிக்பாஸ் நடப்பில் : கவிஞர் தணிகை.



 பவாவை ஒரு அறிவு ஜீவி என்று நினைக்கும்படி ஊடகவழி செய்திகள் இருந்தது இப்போது பிக்பாஸ் வழியே அந்த பிம்பங்கள் உடைய சாதாரண மனிதரை விட கீழ் இறக்கப் பட்டுள்ளார் எச்சில் துப்புவதை திருத்திக் கொள்ள மாட்டேன் என்றதன் மூலம். இவரது துணைவியாரே மலையாள மொழி நூலை தமிழ்படுத்தியவர் சரி அது படிக்காதவராக இருந்தால் எப்படி நடந்திருக்கும்?

 படிப்பு அவசியமில்லை, கையெழுத்து தெரிந்தார் நாட்டில் 30 சதம்தான் இருப்பர் அதனால் தவறில்லை என பொறுப்பில்லாமல் பேசி இருக்கிறார். மேலும் பாரதியாரும், புதுமைப் பித்தனும் கூட மெத்தப் படித்தாரில்லை ஆனால் அவர்களை தமிழ் கூறும் உலகம் தவிர்க்கவே முடியாது என்றார். ஆனால் பவா ஒன்றை மறந்து விட்டார் அவர்களை படிக்க வேண்டுமானாலும் பொதுவான படிப்பறிவு தேவைதான் என்பதை.அது முறையான கல்வியானாலும் சரி முறைசாராக் கல்வியானாலும் சரி. ஆர்வம் + முயற்சி இருந்தால்மட்டுமே அவர்களை அல்லது இலக்கியத்தை அனுபவிக்க முடியும். கதை சொல்லிகளுக்கு வேலையே இல்லை. அவரவர் படிக்க ஆரம்பிக்கும் போது.

 மேலும் விசித்ரா போன்ற முனைவர் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்(5000அ15000) பேர் முன் கதை சொல்லி இருக்கிறேன். என எள்ளி நகையாட முயற்சிக்கிறார். படிக்க வேண்டும் என்று சொன்ன ஒரு கருத்தை எதிர்ப்பதாக எண்ணி. கதை படிப்பதும் கேட்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அவை யாவுமே உணவு உடை உறையுள் தேவைக்கடுத்துதான் . இலக்கியம் இன்னும் தமிழ் சார்ந்து சோறு போடுவதில்லை.முயற்சி நடந்தபடி உள்ளது அவற்றுக்கு முக்கியத்துவம் வேண்டி.

அதே பாரதியும் புதுமைப் பித்தனும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் எப்படி துயரப்பட்டு வீழ்ந்தார்கள் என்பதையும் கதைசொல்வார் கவனிக்க வேண்டும். விசித்ராவை அவரது நிலையை அனைவரும் பாராட்ட வேண்டிய அவசியம் உள்ளது. படிக்க வேண்டும் என்று சொன்னதில் தவறு ஏதுமில்லை. தலைமுறை இடைவெளி என்பதெல்லாம் இல்லை. தாத்தாவின் மகன் அப்பாவின் மகன் மகன், அப்பத்தா,அம்மம்மா, பாட்டி மகள் அம்மா மகள் மகள் என்ற மனிதத் தொடர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அது மறுபடியும் எண்ணும் எழுத்தும் இல்லாத நாகரீகமில்லாத காட்டு மிராண்டித் தனத்திற்கே திரும்பி சென்று விட முடியாது. கூடாது. 

கமல் ஏதோ இருதரப்பையும் இணைத்தபடி பேசி ஒட்டும் வேலையை செய்ய முயல்கிறார். ஆனால் அப்பட்டமாகத் தெரிந்தது பவாவின் தோல்வியும் அழுதபடி இருந்தாலும் விசித்ராவின் வெற்றியும்.

 படிக்காமலே ஒரு பட்டறையில் சேர்ந்த படிக்காத பையன் ஒருவன் கூட மெக்கானிக் வேலை கற்றுக் கொண்டு சோத்துக்கு வழி தேடிக் கொள்ள முடியும் ஆனால் அந்த நிலையைத்தான் உலகம் எப்போதும் ஆதரிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி. சமுதாய அக்கறை உள்ளோரை எல்லாம் இதே போல அவமானப் படுத்திக் கொண்டே இருங்கள் விளங்கிடும்....மேலும் காட்சி ஊடகம் தான் வாழ்க்கை என்ற போக்கை வாழவேண்டிய நெறியுடனான சமுதாயத்தில் ஊற்றி ஊற்றி கெடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். 

 உண்மைதான்: நன்ற்றாற்றலுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை. 
 மறுபடியும் பூக்கும் வரை 
கவிஞர் தணிகை.

hamas and Israel problem, 
cauvery water issue
iran life losses
russia and ukrain war everything is after this only
so our opinion also necessary to add with it.

Saturday, October 7, 2023

வாட்ஸ் அப் தளங்களில் வருபவை பகிர்பவை யாவும் உண்மையல்ல: கவிஞர் தணிகை

 வாட்ஸ் அப் தளங்களில் வருபவை பகிர்பவை யாவும் உண்மையல்ல: கவிஞர் தணிகை



1.ரீல் விடுகிறார்கள். ரியலாக பகிர்வதைவிட.(TRY TO POST AND SHARE REAL NOT ADD REELS)

2.எது உண்மை எது பொய் என பிரித்தறியத் தெரியாதார்க்கு இவை பேரிடர் தரும். WASTE OF TIME


3.செய்தி ஊடகங்கள், அரசியல், சினிமா மற்றும் தொலைக்காட்சி அதன் தொடர்கள் யாவற்றிலும் இடம் பெறும் பெரும்பாலானவர்கள் வல்லுனர்கள் அல்ல. பள்ளிகள்  சென்று படிப்பதை கை விட்டவர்கள்.


4. எழுதுவது, படிப்பதை மற்றும்  தாய் மொழியில் கையெழுத்திடுவது தெரிவது கூட தேவையற்றது என வாய்வீச்சு பேசி வருகிறார்கள்.


6. ஊடகத்தை பயன்படுத்தும் அல்லது ஊடகம் பயன்படுத்தும் எல்லாருமே அண்ணாவாகவும், கருணாநிதிகளாகவும், காமராசர்களாகவும், எம்.ஜி.ஆர்களாகவும். ஜெயலலிதாக்களாகவும் ஆகி விட முடியாது.


7.திரைத் துறை மற்றும் தொலைக்காட்சித் தொடர் வியாபாரங்கள் மிகவும் உச்சத்தில் சென்று கொண்டிருப்பது அபாயகரமானது. எல்லாமே என்.எஸ்.கே ஆகவும் எம்.ஆர். ராதாவாகவும், பட்டுக் கோட்டையாகவும் இருக்க வழி இல்லை.


8. எதிர் வரும் இளந்தலைமுறை போதையில் இருந்து மீண்டாக வேண்டிய நிர்பந்தம் இருக்கையில் நமது கதாநாயகர்கள் வன்முறை நாயகர்களாக போலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலில் முகம் தெரிந்து விட்டால் ஒரு நாளைக்கு சுமார் 15,000 ரூபாய் வருவாய் ஈட்ட முடிகிறது என அதன் பக்கம் சாய்ந்து வரும் இளம் பட்டாளம் அதிக பார்வையாளர்களைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் கை கோர்த்து வரும் நிலையில் மேலும்அதிலும் கேரளத்து பைங்கிளிகள் ஆதிக்கத்துடன் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்... என தமிழ் கூறும் நல்லுலகம் சீரழிந்து வருகிறது. தொழில்கள் நசிந்து வருகின்றன‌


9. மஞ்சள் தூளில் பல் துலக்க சொல்வது பல் காறையை போக்கவில்லை மாறாக பல் வண்ணம் பற்றி கவலைப் படாதார்க்கு ஒரு கிருமி நாசினியாக பயன்படலாம்.


10. ரவையில் குலோப் ஜாமூன் செய்யச் சொல்வது சரிவரவில்லை என ஒரு இளம் பெண் கூவியிருக்கிறார்.


10. கறிவேப்பிலை அதிகாலை வெறும் வயிற்றில் உண்பது பெருமருந்து என்றார் தமிழருவி மணியன் ஆனால் அது பக்க விளைவை ஏற்படுத்தி உடல் சூட்டை வயிற்றுச் சூட்டை பெருக்க காரணியானது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.


11. சிவகுமார் போன்றோர் நல்லபடியாக ஆக்க பூர்வமான செய்திகளைச் சொல்கின்றனர். அதை எவரும் கேட்க இல்லை. அவர் பல்லில் காபி பட்டே 65 ஆண்டுகள் ஆகியது என்கிறார் மற்ற நல்ல பழக்க வழக்கங்கள் உடைய 81 வயது  திரையுலக மார்க்கண்டேயன் கெட்ட பழக்கம் ஏதுமில்லை தன்னிடம் என கட்டியங் கூறுகிறார்.

WHATS APP SHARING ARE MOSTLY FAKE AND  REPEATED: KAVIGNAR THANIGAI

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






Thursday, October 5, 2023

இராமலிங்க வள்ளலார்: கவிஞர் தணிகை

 இராமலிங்க வள்ளலார்: கவிஞர் தணிகை



200 ஆம் ஆண்டு வருவிக்கை நாள் இன்று என்று இராமலிங்க வள்ளலார் பற்றிய பிறந்த நாளைக் குறிப்பிடுகிறார்கள்.


தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி.


ஜீவகாருண்யம் பசி தீர்த்தல் மனிதநேயத்தின் கடமை என வடலூர் அணையா அடுப்பும் ஜோதியும்.


நாம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மகாத்மா காந்தி, இரவீந்த்ர நாத் தாகூர்,அம்பேத்கார் போன்றோரை கொண்டாடும் அளவுக்கு அவர்கள் அதாவது வடக்கு மாநிலத்தார் மகாக் கவி பாரதியையும்,இராமலிங்க வள்ளலாரையும், பெரியாரையும் கொண்டாடுகிறார்களா என்று வடக்கே நகர்ந்து பாருங்கள் ஏன் யாம் இதைக் குறிப்பிடுகிறேன் எனத் தெளிவாகத் தெரியும்.எனது இளமையில் ஆந்திரா(பிரிவு படாத போது) கர்நாடகா, ம.பி,ஒரிஸ்ஸா, தலைநகர் புது டில்லி வரை வாழ்ந்ததன் அடிப்படையில்  இதை மொழிந்துள்ளேன்.


தினமும் எனது நினைவகத்தில் உள்ள சில வரிகளை அவர் தந்ததை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும் வலைக்குட்படும் பொருளே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் கரத்தமர்ந்த அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிய கடலே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

அம்பெனும் பர சிவமே!


பெற்ற தாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பதுவே மறந்தாலும்

நற்றவத்துள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை

நான் மறவேனே.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை மிகு நினது புகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்

மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்...


சாதியும் மதமும் சமயமும் பொய் என‌

ஆதியில் உணர்த்திய‌ அருட் பெருஞ்ஜோதி

எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்

அம் மதம் என்றருள் அருட் பெருஞ் ஜோதி

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட் பெருஞ் ஜோதி.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி

உள்ளே ஒத்துரிமையாய்  உடையவராய் உவக்கின்றார் யாவரவர்

உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம்

எனத் தேர்ந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட‌

என் சிந்தை மிக விழைந்ததாலோ!.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Wednesday, October 4, 2023

திருப்பூர் குமரனின் ஊர் திருப்பூர் அல்ல: கவிஞர் தணிகை

 திருப்பூர் குமரனின் ஊர் திருப்பூர் அல்ல: கவிஞர் தணிகை



கொடி காத்த குமரன் என்றும் திருப்பூர் குமரன் என்றும் அழைக்கப்படும் குமாரசாமி சென்னிமலையில் பிறந்து வாழ்ந்தவர்.சுமார் 28 ஆண்டுகள் வாழ்ந்து சரித்திரப் புகழ் பெற்றவர்.எனது இளமையில் தினமணி தீபாவளி மலர் ஒன்றில் முதன் முதலாக இவரின் ஊர் திருப்பூர் அல்ல என்பதும் இவர் பற்றிய நல்ல கருத்துகளையும் வெளியிட்டிருந்ததை படிக்க நேர்ந்தது. அது முதல் எல்லா சந்திப்புக் கூட்டங்களிலும் அதை நான் எனது உரை வீச்சில் குறிப்பிடத் தவறுவதேயில்லை.


 நெசவாளர் குடும்பம். ஒரு திருமணத்திற்கு மொய் ரூ.1 வீதம் ஒரே நேரத்தில் வந்த‌ எட்டு திருமணத்திற்கு மொய் ரூபாய் எட்டை வைக்க வழியின்றிப் போனதால் துக்கத்தோடும், வெட்கத்தோடும் அவமானமாகி விடுமே என்று கூச்சம் தாங்காமல் இரவோடு இரவாக வீட்டைக் காலி செய்து கொண்டு சென்னிமலையில் இருந்து திருப்பூர் வந்து குடியேறுகிறார்.அதன் பின் நடந்ததை நாடறியும் உலகறியும்.


கல்வி என்பது கற்றுக் கொள்ள,கற்றுக் கொள்வதை வாழ்வில் பயன்படுத்த.


1904 அக்டோபர் 4 முதல் 1932 சனவரி 11 வரை வாழ்ந்த இவர் வாழ்வு எனக்கு படிப்பினைத் தர 1991 ஜனவரி 21 அன்று அல்ல அதற்கும் முன்பிருந்தே திட்டமிட்டிருந்ததை அன்று முதல் அமல்படுத்தினேன்  எங்கள் குடும்பத்தில்.அதைப் படித்தது முதல் எங்கள் குடும்பத்திலும் நிலவி வந்த அந்த தீய பழக்கத்திலிருந்து எங்கள் குடும்பத்தை விடுவித்து விட்டேன்.


அதாவது வரதட்சணைக் கொடுமை போன்றதே இந்த மொய் கலாச்சாரமும். எனவே மொய் வாங்குவதில்லை வைப்பதுமில்லை என்ற நெறிக்குள் வந்து விட்டேன். எனது தங்கை மணம் முதல் அதை அமல்படுத்தி பல்லாண்டுகளாக பயணம் வந்து விட்டேன். இன்றைக்கு அந்த நெறியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. என்னால் முடிந்தால் சிறு அன்பளிப்புகள் செய்து விட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.அல்லது எனது புத்தகங்களின் அன்பளிப்புகள் தாம் வாழ்த்துகளுடன்.


சீட்டுப் பணத்தை ஏமாற்றிச் செல்கிறார்கள் என்ற காரணத்தால் எனது தாயையும் சீட்டு போன்றவை அவசியமில்லை எனக் கட்டுப் படுத்தி விட்டேன். அவற்றை நடத்துவதும் கட்டுவதுமில்லை.


இன்சூரன்ஸ்  ....வாழ்வுக் காப்புறுதி அவசியமில்லை என்று காந்தியம் சொல்வதால் அதையும் நாங்கள் செய்து கொள்வதில்லை


எங்கள் வாழ்வில் பெரிதாக சேமிப்பு என்று ஏதுமில்லை, சிக்கனம் தான் சேமிப்பு.


திருப்பூர் குமரனின் நாளில் இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது, இவர் மட்டுமல்ல சுப்ரமண்ய சிவா பிறந்த நாளும் இன்றைய தினத்தில்...மகாக் கவி பாரதி, சிவா, செக்கிழுத்த செம்மல் போன்றோர் ஒரு குழுவாக பெரு நட்புடன் விடுதலைப் போராட்டத்தில் பாடுபட்டு தங்கள் வாழ்க்கையுடன் தங்கள் உடலையும் குடும்ப வாழ்க்கையையும் வேதனைப் படுத்திக் கொண்ட‌வரலாறு என் போன்றோருடன் இன்னும் வாழ்கிறது.

நூற்றாண்டுகள் கடந்தும் இவை வாழும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, September 26, 2023

சினிமாத் தீ: கவிஞர் தணிகை

  சினிமாத் தீ: கவிஞர் தணிகை



ஞாயிற்றுக் கிழமை "விமானம்" என்ற திரைப் படத்தை தொ(ல்)லைக் காட்சியில் பார்த்தேன். அடியேன் தான் சினிமாக் கட்சிக்காரனாயிற்றே. பார்க்காமல் விடுவேனா? அழுது கொண்டாவது பார்த்து விடுவதுதான் நமது பழக்கமாயிற்றே.


மிகவும் கீழ்த் தட்டு வாழ்க்கை பிரதிபலிப்பு. தெலுங்கு, தமிழ் பதிப்பு. சமுத்திரக் கனி மாற்றுத் திறனாளி மட்டுமல்ல பொதுக் கழிப்பிடத்தை பராமரித்து அதிலிருந்து வரும் சிறு தொகையில் கண்ணியமாக தாயில்லாத தமது மகனுக்கு உயர் வாழ்க்கையை பரிசளிக்க நினைப்பவர்.அவரைச் சுற்றி சில குப்பம் அல்லது சேரி புறம் போன்ற பகுதியில் வசிக்கும் வீடுகூட சரியாக இல்லா ஒண்டு குடிசை  நண்பர்கள் அவர்களின் குடும்பங்கள்.


ஒரே வரியில்: விமானப் பயணம் செய்ய வேண்டுமென்ற சிறுவனது ஆசையை நிறைவேற்ற பார்க்க சகிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவிப்பதாக படம் காட்டுகிறது. கடைசியில் கடவுள் நம்பிக்கையையும் இழந்து படாத பாடு பட்டு எல்லாம் இழந்து விமானத்தில் பறக்கவும் அமர்கிற போது லுகேமியா என்னும் இரத்தப் புற்று நோயால் மகன் இறக்க தந்தையும் இறக்கிறார்.புதுமைப் பித்தன் சிறு கதை படித்தது போன்று முழுசோகமும் இதயம் முழுதும் கவ்வியது. சில நாட்கள் வெளியேற முடியவில்லை. ஏண்டாப்பா பார்த்தோம் என்றிருந்தது.


மிகவும் நடைமுறை யதார்த்தமான படம்...ஆனால் பார்த்து விட்டு அதை செரித்துக் கொள்ள முடியவில்லை.கீழ்த்தட்டு மனிதர்களின் நிலை அப்படியேதான் இருக்கின்றன தற்போதைய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் போதும் சீன அதிபர் வந்த போதும் மதில் சுவர் எழுப்பி வறுமை ஒழிப்பை மறைத்து நிகழ்த்திய  நமது அரசு போல...


அந்தப் படத்தின் அதிர்வலை எனை எங்கெங்கோ கொண்டு சென்றது...அயோத்யா என்ற மனிதத்தின் இறுதிச் சடங்கு பற்றிய படத்தை விட இந்தப் படம் நிறைய வேதனைப் பட வைத்தது.


மறக்க முயன்று வருகையில்: சமந்தா ஒரு  TIK TOK   டிக் டாக் பதிவின் வழியே : தி சவுண்ட் ஆப் ம்யூசிக் THE SOUND OF MUSIC படமே தனக்கு மிகவும் பிடித்த படம் என்ற செய்தி அறிந்து அதை தேடிப் பிடித்துப் பார்த்தேன். எல்லாத் துறைகளிலுமே ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டு நியமிக்கப் பட்டு 5 ஆஸ்கார் மற்றும் உலகளாவிய விருதுகளில் பெரும்பாலும் எல்லாவற்றையும் வாங்கிய 1965 படம்.அதாவது எல்லாவற்றிலும் ஒரு இனிமையை காணும் ஒரு நல் உள்ளம் பெற்ற ஒரு கன்னியாஸ்த்ரி பயிற்சியில் உள்ள இளம் பெண் எப்படி ஒரு குடும்பத்தை இனிமைப் படுத்தி காப்பாற்றுகிறார் கடைசி வரை உடன் இருந்து எனச் சொல்லும் படம். நிறைய எல்லாம் சத்தமெல்லாம் பாடலாகவே இசையாகவே நாயகிக்குத் தோன்றுவது போல நமக்கும் ஒலிக்க...பாட்டம் ஆட்டம் எப்படி சிறு பிள்ளைகளுக்கு அதுவும் தாயில்லாத 7 பிள்ளைகளுக்கு தாயாகிறார் என்பதும் ஆஸ்திரியாவின் கடற்படையின் காப்டனின் துணையாகவும் ஆகிறார் என்பதுவே கதை. 8.2 மில்லியன் டாலரில் எடுக்கப் பட்டு 286.2 MILLION டாலர் அந்தக் காலத்திலேயே வசூல் கண்ட படம். கொஞ்சம் பொறுமையுடன் பார்ப்பார்க்கு பொக்கிஷம் அல்லது புதையல்.


                                                         
 ALL IS WELL

இந்தப் படத்தையும் 3 இடியட்S  என்ற நமது இந்தியப் படத்தையும் பார்த்து மகிழ்ந்தேன். உண்மையிலேயே இயற்கை எப்படி மனிதர்கள் வாழ்வில் விளையாடும் என்பதை நகைச்சுவையுடன் மிகச் சிறப்பாக அறிவியலை விரும்பும் அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய பொறியியல் மாணவர்கள் பற்றிய படம். இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி எனதருமை நபர்கள் சிலர் சொல்லி இருந்த போதும் அதை அப்போதெல்லாம் பார்க்க இயலவில்லை இப்போது பார்த்தேன். நல்ல தயாரிப்பு அருமையான படம்


நகைச் சுவை மட்டுமல்ல எல்லா உணர்வுகளுக்கும் இந்தப் படம் அரிய விருந்து. சில நேரங்களில் பின் புற குந்து புறத்தைக் காட்டி நிர்வாணப் படுத்துவதையும்,  நண்பர்கள் மது குடித்துக் கூத்தடிப்பதையும் தவிர்த்தால் மிகவும் இரசிக்கத் தக்க படம். நண்பன் என்ற தமிழ் படம் இதன் மீளுருவாக்கம் தான். தமிழ் படத்தை நினைவூட்டும் போது அந்த பேராசிரியர் பாத்திரம் சத்ய ராஜ், மற்றும் அந்த சத்யன் பாத்திரம் நன்றாக இருந்த நினைவு. மேலும் கரீனா கபூர் சற்று முதிர்ச்சியான பாத்திரமாகத் தெரிந்தார் இந்த அமீர்கான், மாதவன் மற்றும் சர்மான் ஜோஷி கூட்டணியுடன் போமன் இரானி, ஓமி வைதியா என்ற நடிகர்கள்  சேத்தன் பகத்தின் பைவ் பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலை உயிரூட்டம் செய்திருந்தனர். நல்ல பொழுது போக்குடன் அறிவூட்டம் செறிந்த படம்.



இந்த இரண்டு படத்தையும் பார்த்துத் தான் விமானம் என்ற படச் சோகத்தை மறந்தேன். இந்த இரண்டும் சுகம், அது சோகம்.


இந்தப் பதிவை: குவெய்ட் நாட்டில் உள்ள எனதருமை சீடர் பிரவீன்குமார் தங்கவேல் அவர்களுக்காக அர்ப்பணம் செய்துள்ளேன்.

ALL IS WELL

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

கறை படிந்த நிலமல்ல இது:கவிஞர் தணிகை

 எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை



1. கறை படிந்த நிலமல்ல இது

   தியாகக் குருதி நிறைந்தது


2. நிரந்தரமானது:

   தீர்க்க முடியாத பிரச்சினை என்று(ம்)

   மாற்றமின்றி என்றும் இருந்து மாறாதது


   கொசுக்கள்


3. ஏழ்மையில் புகழ்தல் இல்லை புகல்தலே


4. புராணங்களை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன்


5. சமூக விஞ்ஞானி:

   பெரியாருக்கு  இவ்வளவு அறிவு அந்த ஒரு(வரின்) மூளையில்

   எப்படி  வளர்ந்தது,இருந்தது என்று எண்ணி வியக்கிறேன்


6. பசியோடிருக்கும் ஒவ்வொரு உயிரின் பசியையும் ஆற்ற முயலாத‌

   உயிர்கள் செய்வது(ம்) பாவமே


7. இராமலிங்கரின் ஜீவ காருண்ய பசி தீர்த்தலையும்

   காந்தியின் இராம ராச்சியத்தையும்

   மார்க்ஸ் லெனின் தத்துவத்தையும் என்னால் ஒன்றிப் பார்க்க முடிகிறது


8. தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாததற்கும்

   வேரூன்ற‌ வழியில்லாமல் போனதற்கும் காரணம் பற்றி ஆய்வு செய்தால்

    அது பெரியார் பெற்ற வெற்றிதான் என்ற முடிவு வருகிறது.


9. பிரபஞ்சம்,உயிர்கள் நலம் இவற்றிற்கான பாலம் அறிஞர் மொழிகள்


10. நல்ல தலைமை+ தவறான இயக்கம்

    தவறான தலைமை + நல்ல இயக்கம்

    இரண்டுமே கேடுதான்.




Friday, September 15, 2023

GOD OF MUSIC: A.R.RAHMAN: கவிஞர் தணிகை

 காட் ஆப் மியூசிக்: ஏ .ஆர்.ரஹ்மான்: கவிஞர் தணிகை



சென்னையில் நடந்த மறக்க முடியுமா? மறக்குமா நெஞ்சம்: நிகழ்வின் குளறுபடிகளுக்கு எந்த வகையிலும் காரணமில்லாத போதும் பொறுப்பேற்றுக் கொண்டு கட்டணத்தை திருப்பி அளிக்க ஆரம்பித்த எல்லாப் புகழும் கடவுளுக்கே என்று சற்றும் தலைக்கனம் இல்லாத ஏ.ஆர் ரஹ்மானை எப்படிப் பாராட்டினாலும் தகும்.யாரால் நிகழ்ந்திருந்தாலும் நாம் தாம் பொறுப்பு என தமது மகனிடமும் அறிவுறுத்திய பெருந்தன்மை பற்றி செய்திகள் பகிர்ந்திருந்தன.


நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சுமார் 20,000 பேர் வர அனுமதிச் சீட்டு கொடுக்கப் பட்டுள்ளது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்ததே முதற்காரணமாக கருதப்படுகிறது. ஆனால் 41 ஆயிரம் பேர் அமர இட வசதி உள்ள இடத்தில் 50000 பேருக்கும் மேல் திரண்டதே இரண்டாம் காரணம்.


மேலும் ஒரே இடத்தில் பல வகையான கட்டணம் கொடுத்து அனுமதி பெற்றவர்களும் திரண்டதும், அவரவர் பிரிவிற்கு சென்று அமராதததும் அதனால் சேர்ந்த கூட்டமும் காரணமாகிட‌


போதுமான அளவில்லா காவல் துறையினரின் முன்னேற்பாடு வரையறைக்குள் இருந்ததால் கட்டுமீறிய கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர இயலாமல் போனதைப் பயன் படுத்திக் கொண்ட புல்லுருவிகள் பெண்களை உரசி, நெருடி நீங்காத காயத்தை வடுவை ஏற்படுத்திய வண்ணம் சிறுமையுடன் நடந்து கொண்டதை அனைவரும் எல்லா  ஊடகங்களும் வெளிப்படுத்தி இருக்கின்றன.


அது பற்றிய பதிவுகளும், பகிரதல்களும் வேதனைக்குரியதாய், வருத்தம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதற்கு ஆண் வர்க்கத்த்டை முழுவதுமே குற்றம் சாட்டி விட முடியாது...


மிருகங்கள் எங்கும் இரை தேட வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதை என்றுமே பெண்கள் மறந்து விடக்கூடாது. நடந்த செயல் வெட்கம் கெட்ட வார்த்தையில் சொல்லவொண்ணா செயல்களாகி சென்னையின் பெயரையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரையும் களங்கப் படுத்தி இருக்கின்றன.அவர் சென்னையில் பிறந்ததால் பெருமைப்படும் உலகே... வணக்கம் சென்னை என்றே பாடுமுன் பறை சாற்றும் ஒரு உயர்ந்த நபரை சென்னையின் நிகழ்வு காயப்படுத்தி விட ஈனர்கள் எங்கும் இருக்கிறார்கள் அதற்கு சென்னை மட்டும் விதி விலக்கா என்ன?பிரேசிலில் ஒரு பத்திரிகைப் பெண் செய்தியாளர் நேரடி ஒளிபரப்பின் போதே தொடப் பட்டு பின் புறம் தட்டப்பட்டு இருந்ததாகவும், ஐக்கிய அமெரிக்க நகர் ஒன்றில் காவலர் ஒருவர் தமது நாலு சக்கர வாகனம் மூலம் ஒரு பெண்ணை ஏற்றிக் கொன்று விட்டு சிரித்தபடியே இருபதாயிரம் டாலர் செக் எழுதிக் கொடுத்தால் சரியாகி விடும் என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டியபடி செல்வதையும் காணொளி மூலம் பி.பி.சி செய்தி கொடுத்திருந்தது.


நல்ல வேளை ஒரு முறை பாப் கிங்: மைக்கேல் ஜாக்சன் இந்தியா வருவதாக இருந்தது இரத்தானது கூட பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஏன் எனில் அப்போது இப்படி எல்லாம் நடந்திருந்தால்...சொல்லவே தேவையில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சத்தமில்லா இரு புரட்சி: கவிஞர் தணிகை

 தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில்  சத்தமில்லா இரு புரட்சி: கவிஞர் தணிகை




தமிழக முதல்வர் ஸ்டாலின்: கல்லூரி மேல் படிப்பு படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி,நகரப் பேருந்துகளில் அல்லது உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணம், இப்போது அறிஞர் அண்ணா பிறந்த நாளில் சுமார் ஒரு கோடியே ஆறு இலட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை... 

சத்தமில்லாமல் எந்தவித அரசு அலுவலகங்களிலும் ஏறி இறங்கி இம்சைப் படாமல் இலஞ்ச ஊழல் இல்லாமல் இடையுறாமல் வங்கிக் கணக்கில் நேற்றிலிருந்தே வரவு வைக்கப் பட்டிருக்கிறது பாராட்டத் தக்கது.

ஒரு சமூக செயல்பாட்டாளாராகவும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராகவும் இருப்பதால் அவ்வப்போது பொது மக்களை பேருந்துகளில் சந்தித்து பெண்களிடம் பேசும் போது இந்த நிதி உதவி மட்டும் இன்னும் கிடைக்காமல் உள்ளது அதையும் கொடுத்து விட்டால் பரவாயில்லை என்றவாறு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

அதற்கேற்ப வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டு முதல்வர் சகோதரிகளுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி இது உதவித் தொகை அல்ல உரிமைத் தொகை என்றும் உங்கள் உழைப்புக்கானது என்றும் இந்த திட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர் என்றும் இனி மாதம் தோறும் 1000 ரூ வரவு வைக்கப் பட்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பேற்படுத்திக் கொண்டுள்ளார் ஏழை எளிய மக்களுடன். முக்கியமாக தாய்மார்களுடன் பெண்களுடன் இது தேர்தல் காலத்தில் அதிர்வலைகளை கிளப்பி கிளர்ச்சியூட்டும். வாழ்த்துகள் நன்றி முதல்வருக்கு  பெண்கள் சார்பாக.

 ஏன் எனில் அந்த தாய்மார்கள்தான் முதலில் நின்று வாக்களிப்பவர்கள் நடுத்தட்டு மற்றும் மேல் தட்டு மனிதர்களை விட... சரியான நாடித் துடிப்பு. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் தமிழகத்தின் பெண்கள் வெளிக்கிளம்பி விட்டனர். பேருந்துகளில் 30 பயணிகள் என்றால் அதில் 20க்கும் மேற்பட்டோர் பெண்களாய் இருப்பதை கவனித்திருக்கிறேன். பெண்கள் வாழ்வில் இது ஒரு சத்தமிலாத புரட்சிதான்.


 இந்த திட்டத்தை கமல் முன் மொழிந்தார் தேர்தல் காலத்தில் தி.மு.க வழி மொழிந்து இப்போது அமல் படுத்தி உள்ளது தமது தேர்தல் கால உறுதிமொழியை...கர்நாடகாவில் ஈராயிரம் என்றும், வடக்கே ம.பியா சரியாக நினைவில் இல்லை அங்கும் கூட இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஊடகங்களில் படித்த நினைவு. இதே போல அனைத்து அரசுத் திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் முக்கியமாக பட்டா கொடுப்பது போன்றவற்றில் சரியான தகிடுதத்தங்கள்  மோசடிகள் நடைபெற்று வருகின்றன.


சென்னையில் தியாகராய நகரில் ஆரம்பிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம், காமராசரால் மாநிலமெங்கும் பரவலாக விரிவு படுத்தப் பட்டு, எம்.ஜி.ஆரால் சத்துணவாக்கப் பட்டு,இப்போது ஸ்டாலின் அவர்களால்  தமிழகத்தின் அனைத்து அரசுத் துவக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டியுடன் இளம் சிறார்கள் பள்ளிக்கு வரவேற்கப் படுகிறார்கள்.

நல்லதை நாடு வரவேறும் நாமும் வரவேற்போம்

அல்லவை தேய அறம் பெருகட்டும். வாழ்க!

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை