Wednesday, March 30, 2022

துல்ஹர் சல்மானின் சல்யூட்: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 துல்ஹர் சல்மானின் சல்யூட்: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை



சில தினங்களுக்கும் முன் வந்த 2.பத்திரிகை செய்திகள்:


 1.சாத்தான் குளம் சாட்சியம்: ஆம் அந்த 2 பேரையும் சிறைக்குள் கொண்டு வரும்போதே மிகவும் அடிபட்ட காயங்களுடனேயே இருந்தனர்.


2.ஒரு திருட்டு கேஸில் சந்தேகப்பட்டு பிடிபட்ட ஒரு நபரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரிக்க மற்ற இருவரின் துணையுடன் பின்னால் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டு ஒரு காவலர் தமது வண்டியில் குற்றவாளியை மோட்டர் சைக்கிளின் பின்னால் அமர வைத்து கொண்டு செல்லும் போது மோட்டார் சைக்கிளை ஓட்ட விடாமல் கழுத்தை கை கொண்டு இறுக்கி, வண்டி ஒட்ட விடாமல் செய்து, ஒரு பெரிய கல்லை எடுத்து காவலரை தலையில் தாக்கி விட்டு தனது பைக்கை ஓட்டி வந்தவரையும் மிரட்டி எடுத்துக் கொண்டு ஓட்டிச் செல்ல, காவலரின் காயம் இரத்தம் நிற்காத நிலையில் அந்த பொதுமக்களில் உதவி செய்ய வந்த இருவரும் காவலரை மருத்துவ மனையில் சேர்த்துவதே முக்கியபணி என நினைத்து சேர்க்க...குற்றவாளி மாயம்...


இரண்டுமே இரண்டு விளிம்பு நிலை செய்திகள் சட்டம் ஒழுங்கு காவல் துறை பற்றி.


சல்யூட்: மலையாளம்.


சிந்திக்க வைக்கும் நல்ல படம்.


20 கோடி செலவில் வேஃபேரர் படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான் இந்த படத்தை சல்யூட் என்று போலீஸ் ஸ்டோரியாக்கி தந்திருக்கிறார். தயாரித்து முக்கிய பிரதான அர்விந்த் கருணாகரன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தும் வார்த்திருக்கிறார். நல்ல முயற்சி. சுமார் 143 நிமிடத் திரைப்படம்.


மார்ச் 17அல்லது 22 என்ற தேதியில் 2022ல் வந்திருந்த படம் சிந்திக்க வைத்தது. இது ஓடிடியில் வருவதா அல்லது தியேட்டரில் ரிலீஸ் செய்யவா என தடுமாறியப் படங்களுள் ஒன்று.


நமக்கும் நமது முன் காலத்திய அனுபவங்களில் நிறைய போலீஸ் ஸ்டோரி உண்மையாகவே கிடைத்திருக்கிறது. நிறைய போலீஸ் ஸ்டோரிகள் எல்லா மொழிப் படங்களிலும் உலகளாவிய அளவில் எப்போதுமே உலவி வருபவைதான்.


அதிலிருந்து இந்தப் படம் எப்படி விலகி நிற்கிறது எனில்:


1. இதில் வரும் சந்திர பாண்டியன் பிள்ளை போன்ற குற்றவாளிகள் எப்படி ஒரு சாட்சியமோ, ஆதாரமோ இல்லாமல் தங்கள் குற்றங்களைச் செய்து கொண்டு போகிறார்கள் எவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் என்பதும்


2.குற்றங்கள் நடைபெற பொதுமக்களின் பலஹீனங்களே அவர்களின் குணாம்சத்தில் உள்ள குறைபாடுகளே பொதுவாக குற்றவாளிகள் இவர்களை ஏமாற்ற அல்லது பயன்படுத்திக் கொண்டு தப்பித்துச் செல்ல காரணமாகி இருக்கின்றன என்பதும் பொதுமக்களே அதற்கு இடம் கொடுக்கிறார்கள் என்பதும்


3. காவல் துறை இப்படி தப்பித்துச் சென்று கொண்டே இருப்பார் பற்றி எந்த விவரமும் கிடைக்காத போது சமூகம் ஏன் அந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்ற நிர்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் போது ஏமாளிகளாக சிக்கிக் கொள்ளும் சிறு சிறு நபர்களை அல்லது விட்டில் பூச்சிகளை அதற்கு ஏன் பயன் படுத்த வேண்டி நேரிடுகிறது என்பதையும்


4. மேலும் குற்றவாளிகள் காவல்துறை நெருங்கி விடும் போது எப்படி தப்பிச் செல்ல நேரிடுகையில் இயல்பாகவே விபத்தாலோ, அல்லது இயற்கையாகவே இறந்து விட நேரிட அதற்கு எப்படி மாற்று செய்ய வேண்டி இவர்களும் அந்த வழக்குகளில் இருந்து பொய் விவரங்களை இட்டு நிரப்பி மூடி மறைக்க நேரிடுகிறது என்பதையும்


5. தொடர்பில் பொதுவாக இல்லாமலேயே கிடைக்கும் விருது பட்டம் பரிசு பதவி போன்றவையும்


நன்கு விளக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளன. இது போன்ற கண்ணிகளிடை ஒரு நியாயமான நல்ல மனமுடைய காவல் அலுவலர் எப்படி தத்தளித்து எப்படி போராடி உண்மையை கொண்டு வர முடியும் என கருணாகரன் பாத்திரம் சொல்லி இருக்கிறது...அவர் சம்பளம் இல்லா விடுமுறையும், சட்டம் படிப்பதும், அவர் தோழியும், உடன் பிறந்த ரோல் மாடல் என்னும் அண்ணனாக வரும் மனோஜ் கே.ஜெயனும் 


மொத்தத்தில் இந்த படம் தரும் எப்போதும் போன்ற அறிவுரைகள்


1. குழந்தை பாக்யம் இல்லை என்று அதற்காக எவரையும் பூஜை புனஸ்காரம் என்று நம்பிச் செல்லும் மடமையை


2. காதல், காமம், தீர்த்துக் கொள்ள எவர் என்று தெரியாதவரிடம் சிக்கி பொருளை இழப்பாரை மயங்கிச் செல்லும் முட்டாள் தனத்தை


3. முன் பின் தெரியாதவரை தெரிந்து கொள்ளாமலேயே அவர் தம் பேச்சை நம்பி வீடு வாடைகைக்கு அல்லது அவரது வீட்டில் தங்க வைப்பதை அந்த அறியாமையை


4. நம்முடைய தகவல்களை தேவையில்லாமல் பிறருக்கு பகிர்ந்து கொண்டு அதைக் குற்றவாளிகள் பயன்படுத்தி செய்யாத குற்றத்திற்காக படும் வேதனை அவஸ்தையுறும் ஏமாளித்தனத்தை


5. காணும் காட்சிகளை எல்லாம் உண்மை என நம்பும் பேதமையை


எல்லாம் மிக அழகாக விளக்கிச் செல்கிறது.


இந்த தொழில் நுட்ப உலகில் கொஞ்சம் அறிவிருந்தால் போதும் எல்லா காவல், அரசு நடவடிக்கைகளையும் மீறி இந்த  குற்றவாளிகள் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள், விலாச அட்டைகள், ஆதார் கார்ட்கள், மாந்திரிக கயிறுகள், அதற்கான பொம்மைகள் இப்படி வகைப்படுத்தி காண்பிக்கும் இடம் உச்சம்...


இப்படி நம்பும் ஒரு தம்பதியினர் இப்படிப் பட்ட ஒருவரால் தாம் தமக்கு குழந்தை பிறந்தது என அவரை கடவுளாகக் கொள்வதும்


ஒரு நபர் தமது பேரை பயன்படுத்தி அந்த .....போகுமிடமில்லாம் கடனை, குற்ற நடவடிக்கைகளை தம் பேரை பயன்படுத்தி தம்மை படாத பாடு படுத்தி வைத்த  மனநோயில் வாயில் வரக் கூடாத வார்த்தையில் எல்லாம் அந்த ......பையனை திட்டுவதுமாக‌


எதிரும் புதிருமான  காட்சிகள் வழி நமக்கு நிறைய சொல்லப் பட்டிருக்கின்றன‌


மொத்ததில் காவல் துறை என்பது மட்டும் நமக்கு தீர்வை தந்து விட வழியில்லை

பொதுமக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இது போன்ற குற்ற நடவடிக்கைகள் நடக்க வழி இருக்காது மேலும் சமூக எண்ண மதிப்பீடுகள், குழந்தை பிறப்பு, பொருளாதாரம், காதல், காமம் பற்றி எல்லாம் குற்ற நடவடிக்கையாக மாறுமளவு எல்லை மீறக் கூடாது ஒரு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற நடவடிக்கை எல்லாம் சீராக்கப் பட்டு காவல் துறை போன்ற அரசின் கரங்களுக்கு வலு சேர்க்கும் எனச் சொல்லும் படம். ஒரு சிக்கலான பிரச்சனைக்கு தம்மால் முடிந்தளவு தீர்வையும் சொல்லி இருக்கிறது.


இதனிடையே காவல் பணி செய்யும் ஊழியர்களும் அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடனும் நடக்க வேண்டும் அவரவர் விருப்பப் படி நடந்து கொண்டு பொதுமக்களின் வெறுப்புக்கும் ஆளாகக் கூடாது மேலும் அப்பாவிகள் அந்த ஆட்டோ டிரைவர் அவரது தங்கை போன்றோர் தண்டிக்கப் படக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறது.


நாம் ஏற்கெனவே தமிழில் ஜெய் பீம் நீதியரசர் சந்துருவின் வழக்கறிஞர் கால வரலாற்று பழங்குடியினர் கதையை படமாக கொண்டு வந்து அண்மைக் காலத்தில் பார்த்து விட்டதால் இது பிரமிப்பு ஏற்படுத்த வில்லை. ஆனாலும் அது ஒரு கோணம் இது வேறு கோணம்.


காவல் துறை எப்படி எல்லாம் நிர்பந்திக்கப் பட்டு தவறுகள் இழைக்கின்றன அதனால் எப்படி அப்பாவிகள் வாழ்வு பாதிக்கப் படுகின்றன என்பதை நன்கு சொல்லி உள்ள படம்....நன்கு ஆய்வுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்...மக்கள், அப்பாவி மக்கள், காவல் துறை, குற்றவாளிகள் எல்லாம் பிணைத்து...புத்தர் நெறிப்படி ஆசையே அழிவுக்கு காரணம் என்ற பழங்கால மொழியின் மூலமே இதற்கு தீர்வு வரும்...ஆனால் பின் நோக்கி பயணம் செய்து பழக்கப் பட்ட மக்கள் அந்த நேரிய வழியில் சீரிய வழியில் எல்லாம் பயணம் செய்ய ஆசைப்படுவார்களா? குற்றங்கள் குறையுமா?



பாருங்கள் படமாகவே...பின் கொள்கை பிடிப்புள்ளோர் அது பற்றி கலந்துரையாடுங்கள்.


நன்றி

வணக்கம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை





Sunday, March 27, 2022

தமிழக அரசு கவனத்துக்கு: கவிஞர் தணிகை

  தமிழக அரசு கவனத்துக்கு:  கவிஞர் தணிகை



கடந்த பதிவில்  சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் என்ற என்னவெல்லாமோ எழுத முனைந்து அது வேறு முகம் காட்டி இருக்கிறது. இவை எல்லாம் நடப்பது எழுத்தின் வசத்தின் அல்லது எழுத்து வாசத்தால் விளைபவை. விளைந்தவை.


நான் குறிப்பிட வேண்டியது:


நங்கவள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஒரு உரையாடல்:

ஒரு( Aged/Age old ) விவசாயப் பெண்மணி தான் அறிந்தவரிடம்: மஞ்சப் பையில் இருந்து ஒரு அரசு ஆவணத்தை எடுத்துச் சொல்கிறார்: எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உண்டு. சகோதரர்கள் மூவருக்கும் ஆளுக்கு  ஒரு ஏக்கர் இருக்கின்றன. ஆனால் இவர்கள் பாதியாக ஒன்னரை ஏக்கர் தாம் இருக்கிறது என்று பட்டா அளித்திருக்கிறார்கள்...


இதைப் பற்றி சொல்ல வேண்டியது: 

இது இவருக்கு மட்டுமல்ல‌

பொதுவாகவே 5 சென்ட் இருந்தால் பாதிக்கு இரண்டரை சென்டுக்கு மட்டுமே பட்டா கொடுப்பேன் என்பது, கொடுப்பது

எவ்வளவு இடம் இருக்கிறதோ அதில் பாதிக்கு மட்டுமே அரசு ஆவணம் தருவது என்ற நிலையே பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மீதம் உள்ளவைக்கு மீண்டும் மீண்டும் அவர்களிடம் அரசு ஊழியர்களிடம் சென்று அல்லாட வேண்டும் அலைந்து அலைந்தே சாக வேண்டும் அல்லது இலஞ்சம் கொடுக்காமல் மீளவே கூடாது என்ற நிலையை வேண்டுமென்றே ஏற்படுத்துகிறார்களா? 

உள்ளதை உள்ளபடிக்கு அத்தாட்சி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும் இணை நிலத்தாரின் நிலங்களின் நீள அகலத்தை மாற்றி மாற்றிக் கொடுத்து சிண்டுமுடிந்து முனைந்து அடிபட்டு உதைபட்டு அளக்க இவர்களை வரவழைக்க வேண்டும் என்றே செயல்பட்டு நில அளவைகளைக் குறிப்பிடுவது...

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்று ஏற்கெனவே பிரிந்து கிடக்கும் மக்கள் இனத்தை மேலும் பிரித்து காளைமாடுகள் சிங்கம் நரி கதை செய்து வருகிறார்கள். நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால் என்ற பாரதியின் வரிகள் வரிக்கு வரி இங்கு பொருந்துகின்றன.


 இந்த இடைத்தரகர்கள் இருப்பதை குறைத்து பதிவு செய்வதும், அதன் பின் எங்கோ இருக்கும் ஆய்வாளர்க்கு இவ்வளவு தரவேண்டும் அவ்வளவு செய்ய வேண்டும் குறைத்துக் காண்பிக்கப் பட்டிருக்கிறது என நாய்ப் பிடுங்கல் பிடுங்குவதுமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு அரசு போக்குவரத்து அலுவலர் நேர்மையாக செயல்பட்டு இலஞ்ச இலாவண்யத்துக்கு இடம் கொடுக்காமல் நேரடியாக மக்களுக்கே சந்திப்பு முறைகளை நடவடிக்கையாக மேற்கொள்கிறார் என அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகளை இந்த புரோக்கர்கள் செய்கிறார்கள் என்ற செய்திகளும் படிக்க வேண்டி நேரிட அதன் விளைவாகவே இந்தப் பதிவு... 

நல்ல அரசு ஊழியர்களை வாழவிடாமல் செய்வதும் தொல்லைகள் கொடுப்பதும் வாய்ப்பிருந்தால் வன்முறை கையாண்டு ஏன் கொன்று கூட விடுவதும், கொல்ல முயற்சிப்பதும், மற்ற அல்லக்கைகளுடன் நேரடி தொடர்பில் கூட்டு சேர்ந்து கொண்டு களவாணித்தனங்கள் செய்வதுமாக ஒரு திருட்டு நாட்டாண்மை நடந்து கொண்டு இருக்கிறது.


நல்ல அலுவலர்களுக்கு அரசு  பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையுள்ளது மேலும் இது போல உழைப்பு பிழைப்பின்றி ஏய்த்துப் பிழைப்பார் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.



அரசு பொதுவுடமை அரசு என்றால் கூட எல்லாம் அரசுக்கே என எடுத்துக் கொண்டு மக்கள் நலத்தில் கவனம் கொள்ளலாம் ஆனால் இது தனி உடமை அரசு என்னும் போது இருப்பதை ஏன் இப்படி இல்லாமல் காட்ட வேண்டும் என்பது புரியவில்லை. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை எல்லாம் ஊடகங்கள் வெளிச்சத்துக்கு நன்கு கொண்டு வந்து அரசின் கவனத்துக்கும் ஈர்த்து நிலையை சீர்படுத்தினால் மட்டுமே மக்கள் நலம் சிறக்கும்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Saturday, March 26, 2022

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...:‍ கவிஞர் தணிகை

 சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...:‍ கவிஞர் தணிகை



அன்றாடம் செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.

இலஞ்சம் பெறும் போது அரசு ஊழியர்கள் பிடிபடுவதாக...


ஆனாலும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது.


நில அளவை செய்ய, பதிவு செய்ய, பட்டா வழங்க, சான்றிதழ் வழங்க‌

இப்படியாக...பெரும்பாலான அல்லது அனைத்து அரசுத் துறை யாவற்றிலுமே...

முயற்சிக்கிறார்கள் தடுக்க குறை சொல்ல முடியவில்லை

என்றாலும் அதையும் மீறிச் சென்றபடியே இருக்கின்றன...


தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் காணும் நேரம்

இங்கிருக்கும் உற்பத்தியாளர் சங்க பொறுப்பாளர் ஒருவர்

தொலைக்காட்சியில் இங்குள்ள உள் மாநிலத்தில் தொழில் சார்ந்த பிரிவுகளில் கவனம் வைக்க வேண்டுமே

என்று கவலைப்படுகிறார்.



பால் விலை, போக்குவரத்து கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக சூசக தகவல்களை

துறை சார்ந்த அமைச்சர் விளக்குகிறார்.


சமையல் எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றப் பட்டிருக்கும் நிலையில்

விலைவாசி ஏறுவது இயல்புதானே அதைக் குறிவைத்து 

28,29ல் தொழிற்சங்கங்கள் ஒரு புறம் போராட அதை அரசு ஆதரிப்பதாக ஒருபுறம் அறிக்கையும்

மறுபுறம் அத்தியாவசிய பண்டம் பணி சார்ந்த நடைமுறைகளை நடத்தியாக வேண்டிய 

கட்டாயத்தில் இருப்பதாக அமைச்சர்கள் பணி தொடர வேண்டும் என்றும்

நிர்பந்திக்கிறார்கள்...


எல்லாவற்றிலுமே ஒரு இரட்டை நிலை இருப்பதைக் காண முடிகிறது.

இல்லை நமக்குத் தான் ஒன்றும் தெரியவில்லையா?


தம்மம்பட்டி வங்கி ஒன்றில் ஒரு மனிதரின் கணக்கில் இருந்த போட்டிருந்த சுமார் 3.5 இலட்சம் டிபாசிட்/இருப்பு/வைப்புத்

தொகையை அவரைக் கேட்காமலேயே வங்கி பங்கு சந்தையில் போட்டுவிட்டதாகவும் வருடாந்திர பங்கை

செலுத்தாமல் அந்த தொகை 3ல் ஒரு பங்காகிவிட்டதாகவும் அதையும் திருப்பித் தர முடியாது என்பதை

ஏற்றுக் கொள்ள முடியா ஒரு வாடிக்கையாளர் போராடிப் பார்த்து விட்டு வங்கியிலேயே தம் கையை தாமே

அறுத்துக் கொண்டு மருத்துவ மனையில் 108 மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக செய்தி


ஒருவரது கணக்கில் இருக்கும் பணத்தை எந்தக் காரணம் முன்னிட்டும் அவரின் அனுமதி இன்றி எப்படி இந்த வங்கிகள் எடுக்கலாம்? அதை எல்லாம் தடுக்க சட்டம் இல்லையா? அரசு கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டுமே செய்ய முடியுமா? அதையும் பாமரர் சார்ந்து நீதி சார்ந்து செய்யவல்லதா?




சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி...என்ற பாரதியின் பாடல் வரிகள் ஏனோ நினைவில்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Wednesday, March 23, 2022

உலக தண்ணீர் தினம் நேற்று இன்று பகத் சிங் நினைவு தினம் மேலும் இன்று தணிகை தினம்

 உலக தண்ணீர் தினம்  22.03.2022

23.03.2022 Bhagath Sing Memorable day


மேலும் இன்று தணிகை தினம் 23.03.2022



அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி வெளக்கமாறு டில்லியுடன் பஞ்சாப்பையும் கூட்டி ஆட்சிக்கட்டில் ஏறி  உள்ள நிலையில் அதன் மந்திரிசபை பதவி ஏற்பு பகவத் மான் சிங் தலைமை பகத் சிங் பிறந்த கிராமத்தில் நடந்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.

யானைக்கு இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்.


இன்று பகத் சிங் நினைவு தினம் மட்டுமல்ல‌

இன்று தணிகை தினமும் கூட‌


ஆம் எனதருமை முக நூல் மற்றும் ட்விட்டர் நண்பர்களே:

முக நூல் மற்றும் சமூக ஊடகங்களில் உண்மையான தகவல்களைத் தருதல் ஏற்புடையதல்ல என்ற காரணத்தால்

அதை வெளிக்காட்ட வில்லை...



எனக்கு முக நூல் வழி கிடைத்த அற்புத பொக்கிசம் ரத்தினவேல் அய்யா திருவில்லிப் புத்தூர் போன்ற அரிய நண்பர்களுக்காக இதை நான் சொல்ல வேண்டியதாகிறது.


அரசிதழ் படி எனது பிறந்த நாள் மார்ச்.18 என்று இருக்கும் போதிலும்

உண்மையில் இன்றுதான் எனது (மிக முக்கியமான) பிறந்த நாள்...






Sunday, March 20, 2022

கடவுள் தேசத்தில் தவறி விழுந்த விதைகள்: கவிஞர் தணிகை

 கடவுள் தேசத்தில் தவறி விழுந்த விதைகள்: கவிஞர் தணிகை



கேரள தேசத்தை கடவுளின் தேசம் என்பார். 

அங்கு இரண்டு நாளாக  செய்திகளில் முக்கிய இடத்தில் இந்த செய்தி அது: ஒரு தந்தை தமது மகனை மருமகளை பேரப் பிள்ளைகளை நிலம் விவசாயம் சார்ந்த பிரச்சனை ஒன்றிற்காக வீட்டைப் பூட்டி விட்டு, வீட்டு தண்ணீர் தொட்டியில் திட்டமிட்டு  நீரைக் காலி செய்து, மின்சாரத்தை மற்றும் தொலைத் தொடர்பு யாவற்றையும் துண்டித்து விட்டு அவர்கள் எல்லாம் படுக்கை அறைக்கு சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து வெறித்தனமாக படுகொலைகள் செய்துள்ளார். 


காப்பாற்ற வந்தவர்களையும் நெருங்கினால் உங்களையும் கொல்லத் தயங்க மாட்டேன் என மிரட்டி உள்ளார், காவல் துறை, தீ அணைப்புத் துறை வந்து நடவடிக்கை எடுத்தும் காப்பாற்ற வழி இல்லை. அந்த அறையில் இருந்த கழிவறையில் நீர் பிடித்து தீயை அணைக்க முயன்ற மகனுக்கு அங்கே தண்ணீர் வராத நிலை.


விவசாயம் செய்யாமலும், விளை நிலத்தை திருப்பி தந்தைக்கே கொடுக்காமல் விட்டு, விவசாயம் செய்ய விடாமல் இருந்த மகன் குடும்பத்துக்கு இவர் செய்ய அநீதி... ஒருவேளை நிலத்தை விவசாயத்தை அந்தளவு நேசித்திருப்பாரோ? மண்ணை விட உயிர்கள் மனித உயிர்கள் விலை மதிக்க முடியாததாயிற்றே என்ற பக்குவம் இவருக்கு எதனால் போயிற்று என்பதுதான் தெரியவில்லை...


கொஞ்ச நாட்களுக்கும் முன்பு கேரளத்தில் இருந்து ஒரு( நெட் ஒர்க் ) வலைப் பின்னல் பற்றி செய்தி தொடர்ந்து சில நாட்கள் வந்து கொண்டே இருந்தன அதன் பின் அவை காணாமல் போயிற்று. அது மேலை நாடுகளில் சில இடங்களில் இருப்பது போன்ற குழு பாலியல் உறவுகளும், துணையை மாற்றிக் கொள்வதுமான தொடர் செய்திகள் கேரளத்தில் இருந்து ஆரம்பித்து அதன் தொடர்ச்சி பல இடங்களில் இந்தியாவில் விரிந்து பல மாநிலங்களுள் செல்வதாகவும் அத்துடன் முக்கிய புள்ளிகள், அரசியல் பிரபல‌ நபர்கள் தொடர்புகள் விரியக் கூடும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.... ஆனால் அதன் பின் மறக்கப் பட்டன.


 ஆக கல்வியில் முன்னணியில் உள்ள ஒரு மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலத்தில் இது போன்ற தவறான விதைகளும் அவ்வப்போது தமது விருட்சங்களை விரித்தே வைக்கின்றன இவை எல்லாம் நாம் மறந்து போக வேண்டிய செய்திகள் என்றாலும் இவைதான் கல்வி தரும் வளர்ச்சியும் நாகரீகமுமா என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, March 19, 2022

தமிழக வரவு செலவு அறிக்கை 2022 : கவிஞர் தணிகை

 தமிழக வரவு செலவு அறிக்கை: கவிஞர் தணிகை



18/03/2022  தமிழக நிதி நிலை அறிக்கை

19/03/2022 வேளாண்மை நிதி நிலை அறிக்கை சமர்பித்த நிலையில்


இது வேளாண் தொழில் பால் அக்கறை உள்ள அரசாகவும், அதிகமான ஈடுபாட்டுடன் பெண் உயர் கல்வி சார்ந்த நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிற செயல் வரவேற்கத் தக்கதாகவே அனைவரும் கருதும் நிலை உள்ளது.


 உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்திருந்ததே அரசு, ஆனால் இதன் பின்னணியில் அந்த ஆலோசனைகளுடன்  இருந்த குழுவினரின் சுவடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.


உழவர் சந்தை மேலும் 50ல் கவனம் கொள்ளவேண்டியும், 10 உழவர் சந்தை புதிதாகவும் தோற்றுவிக்கப் பட வேண்டும் என்பது மறுபடியும் ஒரு நல்ல முடிவு.


உழவர் சந்தை மற்றும், கிராமத்து மினி பேருந்துகளை கலைஞர் கருணாநிது முதல்வராக இருக்கும்போது கொண்டுவந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவை அடுத்து வந்த அரசால் புறக்கணிக்கப் பட்டன என்பதை எல்லாம் மக்கள் நலம் சார்ந்த சிந்தனையாளர்கள் மறந்திருக்க வழி இல்லை.


மேலும் மாவட்ட தலைமை இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் சிறு தானியப் பயிர்கள் கொள்வினை, கொடுப்பினை கொண்டு வரப்படுவது எல்லாம் ஒரு நல்ல நிகழ்வுக்கு முன் வாயில்கள்.


மேலும் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு...அதற்கு நிதி ஒதுக்கீடு...எல்லாம் கலந்துரையாடல் மூலம் தெளிவு படுத்தப் படல் நல்லது


அரசுப் பள்ளியில் பயிலும் (6 ஆம் வகுப்பு முதல் 12 வரை) மாணவியர்க்கு பட்ட பட்டய உயர்கல்விக்கு செல்லும்போது ரூபாய் ஆயிரம் அவர் கணக்கில் வரவு வைப்பதை எவருமே தவறு என்று மறுக்க முடியாது. அதை நல்ல படியாக அமல்படுத்தினால் இலவச பேருந்து மகளிர்க்கு என்பது போல இந்த அடுத்தக் கட்ட முயற்சியும் மாண்பு மிகு தமிழக முதல்வர்  ஆட்சிக்கு வலு சேர்க்கும். அடுத்த படியாக இருக்கும்.


நிதி உதவி நன்னிலையடையும் போது குடும்பத் தலைவிகள் பேரில் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் படும் பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டு இருக்கின்றன என்ற செய்தி நேர்மறையாகப் பார்த்தால் வரவேற்புடையதே.


நாங்களும் பொருளாதாரம் சில ஆண்டுகள் படித்த நினைவு... எனவே நிதி நிலை அறிக்கை பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை என்று ஒருபுறமும், மற்றொரு புறம் கடனை அதிகமாக்கிக் கொண்டும் செல்வதும் முரணாகவே உள்ளது.


முயற்சிகள் வெல்லட்டும். பாராட்டுகள்


பி.கு: பாலுக்கு, தக்காளிக்கு, முள்ளங்கிக்கு உரிய விலை இல்லை என்று பெரும் அளவில் விவசாயிகள் ஏன் சாலையில் கொட்டி விரயம் செய்வதாக ஏன் இன்னும் செய்திகள் வருகின்றன? அவற்றை சிறு முயற்சி செய்து தேவைப்படுவார்க்கு மலிவான விலை அல்லது இலவசமாகக் கொடுக்க வேண்டும் அது நல்ல விளைவைத் தரும்.



தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மாமன்றம் கூட அந்த அந்த பகுதிகளில் அதைச் செய்ய முயற்சிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை மன்றம் பரிசீலித்து நல் முடிவுக்கு வரட்டும்.


மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி வெளக்கமாறு டில்லியுடன் பஞ்சாப்பையும் கூட்டத் துவங்கி இருக்கிறது ஒரு உற்சாகமான வரவேற்கத் தக்க வளர்ச்சி. நமக்கெல்லாம் கூட ஒரு தூண்டு உணர்வைத் தொடர உதவட்டும்...


அதற்குள் தான் அந்த மனிதரை பொது இடத்தில் அறைந்ததும், கேவலப்படுத்தியதும் ஒன்றிய அரசு டில்லியில் அவருக்கு நிறைய செயல்பாடுகளுக்கு சுயமாக செயல்படவிடாமல் ஆளுநர் கொண்டு அடக்கி முடக்க முயன்றதும், அவர் குடும்பம் கூட வேதனை தாங்கியதும் வெளிச்சம் தர வேண்டிய செய்திகள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்,

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்,‍ செவ்வி

அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்;

கருமமே கண்ணாயினார் ...குமரக் குருபரர். பாடல் 52. நீதி நெறி விளக்கம்.






Thursday, March 17, 2022

ஒரு மௌன யுத்தம்: கவிஞர் தணிகை




எனது பெயர் எஸ்.தணிகாசலம் வயது:60 1993 மார்ச் 11ல் 8 சென்ட் நிலம் வாங்கி பத்திரப் பதிவு செய்து பட்டா மாறுதலுக்கும் மனு செய்துள்ளேன். அப்போது அதன் சர்வே எண:188/2B2 பட்டா எண்:211.வீரக்கல் புதூர்(014) பேரூராட்சியில் இருக்கிறது.

1.03.11.2018ல் பட்டா உட்பிரிவு செய்து அளிக்க முறைப்படி உரிய சேவை மையம் ழியே விண்ணப்பித்திருக்கிறேன்: உட்பிரிவு பட்டா மாறுதல் எண்:330809148325 விண்ணப்ப எண்:2018/0105/08/069770 தேதி: 03.11.2018. சர்வே எண்:188/2B2D1A1A1 என்று குறிப்பிடப் பட்டு...பட்டா வழங்கப் பட வில்லை. எந்த வில்லங்கமும் இல்லை சான்றுகள் இணைக்கப் பட்டிருந்தன. அளந்தும் சென்றார்கள்.


2. 01.09.2021 மீண்டும் முறைப்படி உரிய .சேவை மையம் வழியே விண்ணப்பித்திருக்கிறேன் உட்புல பிரிவு மாறுதல் பட்டா எண்:133080914488639 விண்ணப்ப எண்:2021/0105/08/233891 தேதி:01.09.2021 சர்வேஎ எண்: 188/2B2A என்று...குறிப்பிட்டு பட்டா வழங்கப் படவில்லை எந்த வில்லங்கமும் இல்லை சான்றுகள் இணைக்கப் பட்டிருந்தன அளந்தும் சென்றார்கள்.


3. 14.12.2021 மீண்டும் மனு செய்யச் சொன்னார்கள் அளந்த பிறகு முறைப்படி இ.சேவை மையம் வழியாக விண்ணப்பித்துள்ளேன்.:சர்வே எண்: 188/33A என்று குறிப்பிட்டு.செய்துள்ளேன் உட்பிரிவு பட்டா மாறுதல் எண்:133080914488639 விண்ணப்ப எண்:2021/0105/08/258351 தேதி: 14.12.2021

4. பாரத ஸ்டேட் வங்கி மூலமாகவும் சலான் தேதி:17.12.2021 வழியாக ரூ.400 18.12.2021 அன்று வங்கியில்  உட்பிரிவு மாறுதல் பட்டாவுக்காக SA No: 188/33 என்று கட்டப்பட்டு விட்டது.

ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் ரூ.160 முதல் 240 வரை செலவு சேவை மையத்துக்கு செலவு செய்திருக்கிறேன். பல முறை அளந்து சென்றும் பட்டா கிடைக்காமல் எனது மனைவிக்கு வாக்கு அடையாள சரியான அட்டைக்கு 5 முறை அலைந்து திரிந்தது போலவே இதுவும் இருக்கிறது.


 14.01.2022 இன்று வரை எனக்கு கிடைக்க வேண்டிய பட்டா கிடைக்காதிருப்பதன் காரணம் ஒன்றே ஒன்று: அது நான் சட்டத்துக்கு புறம்பாக நடக்க மறுப்பதுதான். இலஞ்சம் கொடுக்காமல் இருப்பதுதான். இதை எப்படி சொல்கிறேன் எனில் எனக்குப் பிறகு அந்த இடங்களில் அதன் சுற்றுப் புறங்களில் நிலம் வாங்கி விண்ணப்பித்த அனைவருமே பட்டா பெற்றுவிட்டனர்.

 காரணம் அமைப்புடன் அனைவருமே ஒத்துப்போவார்களாக இருக்கின்றனர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நில அளவை அலுவலர்கள் பலமுறை மாறிவிட்டனர். பல முறை அளந்தும் விட்டனர்.ஆனால் ஒரு அம்மா ரூ. ஐந்தாயிரம் கொடுங்கள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று மாறுதல் செய்து சென்றுவிட்டார். பின்னால் வருவார் செய்து கொடுப்பார் என்று சர்வே எண் மாறி விட்டது உங்களுக்கென்ன பட்டாதானே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்

பின்னால் வந்தவர் நல்லவர் அவரும் அளந்து ஆவன செய்தார். ஆனால் அவரின் உதவியாளர் ஒருவர் ( அரசு அலுவலரா என்று தெரியவில்லை) ரூ.8000 கொடுங்கள் முடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். வீரக்கல்புதூர்(014) பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி புரியும் ஒரு ஆயாம்மா நீங்கள் அளவீட்டாளருடன் பேசுங்கள் என எனது மனைவியிடம் கூறி இருக்கிறார் கொள்வினை கொடுப்பினை பற்றித்தான்.

ஆக அரசு நல்ல விதமாக செயல்பட எண்ணினாலும், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாதாரண பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே எப்படியும் இடைத்தரகர்கள் தோன்றியபடியே இருக்கிறார்கள்.அமைப்பு மாறவில்லை.நான் எவரையுமே குறிப்பிட்டு காட்ட விரும்பவில்லை. அந்த முகமற்ற நபர்கள் சமூகத்தின் அவலங்களாய்த் தொடர்கின்றனர்.

 எனக்கு இப்போதிருக்கும் நிலை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும் பத்திரப் பதிவு, வருவாய் மற்றும் அரசுத் துறைகள் எப்படி எல்லாம் மேல் இருந்து இயங்க நினைக்கின்றன ஆனால் கீழ் மட்டத்தில் இயங்க மறுக்கின்றன என்பதற்கு.


இந்நிலையில் எனக்கு பட்டா கிடைக்க ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

வணக்கங்களுடன்.


கவிஞர் தணிகை ()எஸ்.தணிகாசலம்

இணைத் தலைவர்

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்

11/125 புதுசாம்பள்ளி

மேட்டூர் அணை 636 403

தொடர்பு எண்: 8015584566

deivapublisher@gmail.com

puthusamballi

14.01.2022


பி.கு: இந்த மின்னஞ்சலை தமிழ் நாடு அரசின் மாண்பு மிகு முதல்வர் முதல்,தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்,கோட்டாட்சியர், தொடர்புடைய அமைச்சர்கள் இப்படி அனைவர்க்கும் தெரியப்படுத்தியதால் பெற்ற சிறு வெற்றி இது. எல்லாப் புகழும் இயற்கைக்கே. இந்த மடலின் விளைவாகவும், இதன் நினைவூட்டல்களினாலுமே உரிமையுடைய நில ஆவணத்தை ஆன்லைனில் பெற முடிந்திருக்கிறது. யாரையும் புண் படுத்த வேண்டிய நிலையில் இல்லாமல் எனது குறையை மட்டுமே தீர்க்கச் சொன்ன ஒரு அத்தியாம் இது. ஆனால் இது எத்தனையாவது அத்தியாம் மறுபடியும் பூக்கும் வாழ்வுப் புத்தகத்தில் என்று மட்டும் கேட்டால் அதிர்ந்து போவீர்கள் இன்னும் இருக்கும் காலமெல்லாம் அதே துணிச்சலுடன் பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துகளுடன் கவிஞர் தணிகை