Saturday, November 25, 2023

சு. வெங்கடேசன் அவர்களின் வீர யுக நாயகன் வேள்பாரி: கவிஞர் தணிகை

 சு. வெங்கடேசன் அவர்களின் வீர யுக நாயகன் வேள்பாரி: கவிஞர் தணிகை



தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ஆனந்த விகடன் வெளியீட்டின் வீரயுக நாயகன் வேள்பாரியை படித்து முடித்தது முதல் அது பற்றி உங்களுக்கு(ம்) சொல்ல வேண்டும் என்ற அவாவை எண்ண முடிப்பை இன்று நிறைவேற்றிக் கொள்ளவே இந்தப் பதிவு.


விடியல் குகன் இதில் அதிக படங்கள் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். மணியம் செல்வத்தின் ஓவியங்கள்


கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல... என்பதற்கேற்ப இந்த சரித்திர ஓவியத்தை உரிய நேரம் காலத்தில் படிக்க முடியாமல் இப்போதுதான் புலவர்.ரா.சௌம்யா அவர்களின் புத்தகம் கொடுத்து உதவல் மூலம் படிக்க வாய்ப்பு  கிடைத்தது.அவர்க்கு எம் இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.


1400 பக்கங்கள் அதன் விறுவிறுப்பில் மூழ்கி விரைந்து படித்து எனக்கு உடல் சூடு,கண் கீழ் இமைகள் வீக்கம்.ஆனாலும் நாளையே சாகப் போவது போல செயல்பாடு இருக்க வேண்டும், என்றும் நிலைப்பது போன்று இருக்க வேண்டும் என்ற காந்திய சிந்தனை, நோக்கத்தோடு இந்த அரிய வரலாற்றுப் பதிவைப் படித்தேன். மிக வாழ்வின் அரிய பணியை நிகழ்த்தி தமது வாழ்விற்கு பொருள் தேடிக் கொண்டார் வெங்கடேசன்.


மிகவும் அருமையான தயாரிப்பு நேர்த்தியான நூலாக்கம். மிகவும் உயர்ந்த தரமான தாள்களுடன் தெளிவான அச்சுப் பிரதியுடன் முதற்பதிப்பு 2018 டிசம்பர்,2021 வரை ஏழு பதிப்புகள் கண்டுள்ளதாக குறிப்பு.ரூபாய் 1600 விலை என்ற போதும் புத்தகத் திருவிழாக்களில் குறைந்த விலையுடன் கிடைக்கலாம்.


அடியேனும் பல ஆண்டுகள் மலைவாழ் மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுபட்டவன் என்ற முறையிலும் அந்த வாழ்க்கையில் தொடர்புடையவன் என்ற கோணத்தில் இந்த நூல் அதன் இடங்கள், சம்பவங்கள், வீர வரலாறு, காடு , மலை அதன் பின் புலம், அதை சார்ந்த உயிர்களே படைக்கலங்களாக பயன்பட்டமை ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ள நேர்ந்தது.சொல்ல வார்த்தை இல்லை பாராட்ட மொழி இல்லை. தமிழ் தெரிந்த அனைவருமே படித்தாக வேண்டிய ஒரு ருசிகரமான வீரியமான படைப்பைக் கொடுத்துள்ளார்.


முருகன் வள்ளி பாரியின் முன்னோர் என்று சொல்லப் படுகிறது. காக்கா விரிச்சிப் பறவை, சுண்டாப் பூனை,ஆண் காட்டெருமையின் காதுக்குள் இருக்கும் முடி அதில் இருக்கும் பூச்சிகள், காட்டெருமையின் பின் கால் ஜவ்வு போன்ற உறுப்பின் பாகத்தை வெட்டி விட்டால் அது நகர முடியாமல் நின்ற இடத்தில் இருந்தே போரிடும் என்ற தகவல், விஷப் பாம்பின் வாயைத் திறந்து அதில் போடப்பட்டு விஷம் தோய்த்தெடுக்கப் படும் முட்கள் கருவிகளாகும் ஆயுதங்கள், அலவன் என்னும் விஷத்தை முறிக்கும் அளவு விஷமுடைய சிறுவன்


வான் நிகழ்வை உற்று நோக்கும் திசை விழையார்,சேர சோழ பாண்டிய ஏன் வேள் பாரிக்கும் போற்றத் தக்கவரான கபிலர், எந்தப் பக்கம் விட்டாலும் வடக்கு நோக்கியே அமரும்   தேவாங்கு,காட்டுக் கொல்லி விதைகள்,(விசித்திரம் : மீன்களும், பறவையும், விலங்குகளும் அதனால் கவரப்பட்டு மயக்கமடைதல்) ஆட் கொல்லி மரம், காம முறுக்கி, காமச் சுருக்கி ,மரங்கள்....


இப்படி எங்கு தொட்டாலும் அரிய செய்திச் சுரங்கத்தை வைத்திருக்கிறது இந்த புத்தகப் பெட்டகப்  பொக்கிஷம்.


சாண்டில்யன், கல்கி, தீபம் நா. பார்த்த சாரதி, கோவி. மணி சேகரன், அகிலன், இப்படி எண்ணற்ற வரலாற்று கதாசிரியர்களோடு பயணம் செய்த நாம் இப்போது வேள்பாரியுடன் சு. வெங்கடேசன் அவர்களுடன் பயணம் செய்தமைக்கு மகிழ்ந்து அவர் உழைப்புக்கு தலைவணங்கி அவரது முயற்சிக்கு பாராட்டைத் தெரிவிக்க வேண்டிய கடமைப் பாட்டில் இருக்கிறோம்.


எண்ணிக்கையில் மிகக் குறைவான படை வீரர்கள் ஏன் படை என்று கூட சொல்ல முடியா வீரர்கள் உடைய‌ ஒரு தலைவன் எப்படி தக்க சூழ்நிலைகளையும் இடம் பொருள் ஏவல் கொண்டு அங்கிருக்கும் உயிரினங்களின் தன்மைகளை பயன்படுத்தி வீரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் உயர்ந்தோங்கிய சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரு சேர படையெடுத்து வேள் பாரியை ஒழித்துக் கட்ட சூழ்ந்து நின்றார்களை ஓட ஓடத் துரத்தி அடித்தான் என்பதே இந்த கதை.


 இதன் விதை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என்பதே அதில் இருந்து முளைத்ததே. இரு மல்லிகைக் கொடி ஒர் இரவில்/இரவுக்குள் இவன் நிறுத்திச் சென்று இருந்த தேர் மேல் விரவிப் படர்ந்து சேர முயற்சிப்பதைக் கண்டு தேரை எடுத்தால் அந்தக் கொடிகள் அறுபடுமே என்பதற்காக பாரியும் அவன் தோழி ஆதினியும் அந்த தேரை அப்படியே விட்டு விட்டு நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கே தேருடன் சென்ற நமது தலைவன் நடந்து வருகிறானே என பறம்பு மலை மக்கள் கண்டு வியக்க.


பகல் எல்லாம் சூரிய ஒளியை தனது இலைகள் மூலம் எடுத்துக் கொண்டு இரவில் ஒளி விடும் மரம் இப்படி இன்னும் நிறைய நிறைய சொல்கிறார் காடு மலை சார்ந்த வியப்புகளை வெங்கடேசன்.


அங்கவை, சங்கவை என்றால் சாலமன் பாப்பைய்யா மூலம் கேலிக்குள்ளான சங்கர் ரஜினியின் கூட்டணியில் உருவான சிவாஜி படம் தான் நுனிப்புல் மேய்வார்க்கு நினைவு வரும் . ஆனால் இங்கே இதில் வரும் உண்மையான வீர மகள்கள். அங்கவை சங்கவை என்னும் பாரியின் பெண்களை  கபிலர் காப்பாற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதான செய்யுள்களைப் படித்ததுண்டு. ஆனால் இந்த வேள்பாரி வேறு.இதில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை.


இந்த வேள்பாரி உண்மையிலேயே வீர யுக நாயகன் தான். அவனுக்கு உதவிடும் நீலன், காலம்பன், தேக்கன், காடன் இப்படி எல்லா பாத்திரங்களும் மேலும் அற்புதமான பெண் படைப்புகளும் நமது கண் முன்னே காவியத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


பொன்னியின் செல்வனைக் கூட எடுத்துக் காட்டி விட்டார்கள். ஆனால் வேள்பாரியைக் காட்டுவதென்பது அத்தனை சுலபமல்ல . ஒரு வேளை (சிஜி) கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வழியே கொண்டு வந்தால் தான் உண்டு. படித்தே ஆக வேண்டும் அது ஒரு சுகம். இது ஒரு தமிழின் வரம்.

thanks su. Venkatesan M.P sir.

hats off to you.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, November 24, 2023

பேரன்பு ஹச்சிக்கோ: கவிஞர் தணிகை

 பேரன்பு ஹச்சிக்கோ: கவிஞர் தணிகை



படத்தை எனக்கு பரிந்துரை செய்த ஒரு பொறியாளர் இதைப் பார்த்து அழுதீர்களா? என்று கேட்டார். ஆம் என்ற ஒற்றை எழுத்துச் சொல்லை ஆங்கிலத்தில் S  என்றே என்னால் சொல்ல முடிந்தது.



ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதம் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் தனது மானிட நண்பர்க்காக காத்திருந்த, சரியாக மாலை 5 மணி வாக்கில் வந்து சேரும் தொடர் வண்டியில்  அவர் பணி முடிந்து திரும்பவும் வருவார் வருவார் எனக் காத்திருந்து ஏமாந்து அதன் பின் அங்கேயே உயிர்விட்ட ஒரு நாயின் கதை. அதன் கடைசி மூச்சு கூட பேரன்பின் விளைந்த சிறு துளியாக மறைந்த ஒரு காவியத்துக்காக அதே இடத்தில் அந்த நாய்க்கு ஒரு வெண்கலச் சிலையை ஜப்பானில் நிறுவி இருப்பது அதன் பெருமையை பறை சாற்றுகிறது.


ராம நாராயணன், தேவர் போன்றோர் விலங்குகளை வைத்து தமிழ், இந்தி போன்ற இந்தியப் படங்களில் எல்லாம் தாய்மார்களை நெகிழ வைத்தார்கள்.


நேற்று ஹச்சிக்கோ என்னும் ஜப்பான் மூலம் உருவான உண்மை வாழ்க்கையை 2009/10 வாக்கில் எடுக்கப்பட்ட ஆங்கில படத்தை சுமார் 97 நிமிடம் பார்க்க நேர்ந்தது.



நெக்குருகி கண்ணீர் சிந்தாமல் இந்த திரைப்படத்தை எவருமே காணமுடியாது. அதுவே பேரன்பின் வெற்றி.

மற்றபடி இந்த திரைப்படத்துக்கு வசனம் ஏதுமே அவசியமில்லை என்றே எனக்குப் பட்டது. மேலும் இதில் வில்லத்தனம் செய்யும் எந்த பாதிப்புகளும் இல்லை. மிகவும் இயல்பான வாழ்வின் நகல்.


பொதுவாக ஜப்பான் என்றாலே துல்லியமான நேரம் கடைப்பிடிப்பாளர்கள்,பெருமுயற்சியாளர்கள்,மிகுந்த தேசப்பற்றுள்ளார் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருப்போம் அத்துடன் இந்த பேரன்பு பாராட்டுவார் என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.


அவசியம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பாருங்கள். பேரன்பின் மழையில் நனைய...


ஹச்சிக்கோ என்றால் 8 என்ற எண்ணைக் குறிக்கும் என்றும்,மேலும் இந்த வகையான நாய் இனத்தை பயிற்சி அளித்து பயிற்றுவித்து மனித இனம் பயன்படுத்த முடியாது என்பதெல்லாம் தெரியவரும் செய்திகள்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: நாய், பூனை, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் ஏன் காட்டு விலங்குகள் கூட நேசிப்பாரிடம் தவறாத அன்பு காட்டும் எங்கு சென்று விட்டாலும் தமது இடத்துக்கு திரும்பும் என்ற நிகழ்வுகள் நம்மிடமும் உண்டு என்றாலும் இந்த 9 ஆண்டுகள் 9 மாதம் காத்திருந்த ஹச்சிகோ நாயின்  நம்பிக்கை மனிதரிடம் காண முடியாதது. இதில் கொஞ்சம் மனிதரிடம் இருந்தாலும் மனிதமும் உலகும் செழிக்குமே..

Tuesday, November 21, 2023

ரோஜாக்களுடன் நான்: கவிஞர் தணிகை

 ரோஜாக்களுடன் நான்: கவிஞர் தணிகை





கார்த்திகை 2 நவம்பர் 18 வ.உ.சி. கப்பலோட்டிய தமிழர் நினைவு நாள் மட்டுமல்ல எனது தந்தையின் நினைவு நாளும் கூட. அந்த நாள் 38 ஆவது நினைவு நாள். இருவருக்கும் மற்றொரு ஒற்றுமை இவர் 65 வயது அவர் 64 வயது. இவரும் அவரும் பாட்டாளிகள். ஒருவர் செக்கிழுத்தவர் மற்றவர் 4 விசைத்தறி இரவும் பகலும் ஆங்கிலக் கம்பெனியில் பார்த்து ஊதியம் ஈட்டி 10 குடும்பங்களை உருவாக்கியவர். அதெல்லாம் சரி.

வழக்கம் போல 3 ரோஜா மாலைகள் வாங்கி வர விரும்பினேன். அய்யப்பன் கோவில் பருவ காலம் என்றார்கள், சஷ்டி என்றார்கள் பூக்கடைகளில் பூக்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஒரு பெண்மணி பூ இல்லை என்றார். மற்றொருவர் இருப்பதை தரலாமே என்றதற்கு அய்யப்பனுக்கு மாலையில் வந்து கேட்கும்போது வேண்டும் என்றார், அதே இடத்தில் மற்றொரு பெண் ஒரு மாலை ஒரு முழம் அளவு ரூ. 300 என்றார் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பூ இல்லையென்றால் என்ன என்ற நிலைக்கு வந்து நடக்க ஆரம்பித்து விட்டேன்.

மற்ற கடைகளில் எல்லாம் நேற்றைய பூக்கள் மூலம் கட்டிய மாலைகள் வாடிக் கொண்டிருந்ததே ரூ. 150 என வாங்கி விடலாமே என்றும் யத்தனிப்பு. ஆனால் ஒரு கடையில் இருந்தவர் இரண்டு இங்கு வாங்கிக் கொள்ளுங்கள் இன்னொன்று  எனக்கு கட்டத் தெரியாது. கடைக்கார மருத்துவமனைக்கு சென்றுள்ளார் வர நேரமாகும் என்றார். அவரை செல்பேசியில் வரச் சொன்னேன். வருவதாக சொல்லியதால் அரை மணி இருக்கும் காத்திருந்த நேரம் வரவில்லை. பிறகு அந்த வேடிக்கையாகப் பேசிய அந்த பக்கத்து கடைக்காரரே இந்த இரண்டு மாலையை வைத்துக் கொள்ளுங்கள் பக்கத்தில் இருந்து இன்னொரு மாலையை வாங்கி வந்து விடுங்கள் என்றார். என்ன தண்ணி தெளித்துள்ளீரே என ஒரு வாடிக்கையாளர் கேட்டதற்கு என்னை 7 ஆம் வகுப்பு படிக்கும்போதே எனது வீட்டில் தண்ணி தெளிச்சு விட்டார்கள் என்று பதில் சொல்கையில் அந்த நபரிடம் இருந்த நேர்மையும் வேடிக்கைப் பேச்சும் வெளிப்பட்டது. அவர் அந்தப்  பூக்களுக்கு தண்ணீர் தெளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவரின் சொல்படி அருகாமையில் இருக்கும் கடை ஒன்றுக்கு சென்று அங்கும் மாட்டி இருந்த மாலையின் விலை கேட்டேன். அதுவும் ரூ.150 என்றார். ஆனால் சற்று நேரத்தில் புதுப் பூக்கள் வரும் என்றார். சொல்லி வாய் முடிக்கும் முன் ஒரு வேனில் பூக்கள் வந்தன. 

பதினொன்னரை மணிக்கு காலை ரோஜா வரும் நேரம் என்றார் சொல்லி வாய் மூடும் முன் வந்தது. மூளையே குறித்து வைத்துக் கொள் என்றேன். எனது நேரம் நல்ல நேரம் என்றேன் பழைய பூக்களுக்கு பதிலாக புதிதாக வாங்கிக் கொள்கிறோம் என்பதில் ஒரு மகிழ்வு. அவர் பேரைக் கேட்டேன் நாகராஜன் என்றார். அவர் கடையில் நின்று இருந்து 3 மாலை வரை  கட்டி வாங்கிக் கொண்டு வந்து எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டேன்

.பழைய பூ மாலை ஒன்று ரூ.150 ஆனால் இந்த மாலை ரூ.200. ஏற்கெனவே சென்ற‌ அந்த கடைக்கு சென்று அவர்கள் மாலை எதுவும் வேண்டாம் என்று தயங்கி தயங்கி சொல்லி விட்டேன். மாலைகளை விரைந்து கட்டச் சொன்னார் நாகராஜன் தமது தாயிடம், அவரது தாயும் அந்த பழைய மாலைகளைக் காட்டி ஏன் இது தான் இருக்கிறதே என்று சொல்லியபடி காலம் தாழ்த்த முயற்சிக்க எடை போட ஆள் வரணும் என்றபடி எல்லாம் சொல்ல, அதெல்லாம் இல்லை உடனே கட்டு, நான் எடை போட்டுத் தருகிறேன் என விரட்டினார். தாயும் மகனுமா ? இல்லை முதலாளியும் வேலை ஆளுமா என்று கேட்டு தாயும் மகனும் தான் அந்த உரிமையில் பேச முடியும் என்ற எனது முடிவை அவர்களும் ஆமோதித்து சிரித்தனர்.

அதற்குள் சில படிகள் இந்த வரிகளில். குண்டு மல்லிகை கிலோ 1650 அதுவும் ஒன்னரை மணிக்கு மதியமே கிடைக்கும் என்றார் பூக்கடை நாகராஜன். மற்றவர் ஒருவர் கேட்டதற்கு பதில். பூக்கள் வர வர வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது. சொல்லில் நேர்மை இருந்தது.மற்ற சில பூக்கடைக்காரர்கள் கூட இவரிடம் வாங்குகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

மாலையை வாங்கிக் கொண்டு வரும்போது மருத்துவ மனையில் இருந்து வந்திருந்த அந்தப் பெண் என்னை அழைப்பதை காதில் வாங்கிக் கொண்டே திரும்பாமல் நடையைக் கட்டி பேருந்துக்கு வந்தேன் என்றாலும் நான் ஏமாற்றி விட்டேன். அந்த பழைய பூ மாலையையும் வாங்கி கொண்டு ரூ.150 வீதம் 300 தந்திருக்க வேண்டும் அதுதான் எனது சொல்லின் நேர்மை என்று ஒரு பக்கம் கூறியது.என்றாலும் பழைய பூக்களை வாங்காமல் தடுத்த நல்ல நேரத்தை எண்ணியபடி...அப்படி எல்லாம் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்குமளவு என்னிடம் செல்வம் சேரவில்லையே எனத் தேற்றிக் கொண்டேன்'.ஒரு நாள் வாடிடப் போகும் மாலையில்  தாம் எத்தனை எண்ணங்கள் புதைந்தபடி...

எல்லாம் ஒரு நேரம் தான்.

நான் மாலை வாங்கிய கதை இத்தோடு முற்றிற்று.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Thursday, November 16, 2023

2. நிரந்தரமானது: கொசுக்கள்:கவிஞர் தணிகை

 

எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை

 எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை



1. கறை படிந்த நிலமல்ல இது

   தியாகக் குருதி நிறைந்தது


2. நிரந்தரமானது:

   தீர்க்க முடியாத பிரச்சினை என்று(ம்)

   மாற்றமின்றி என்றும் இருந்து மாறாதது


   கொசுக்கள்


3. ஏழ்மையில் புகழ்தல் இல்லை புகல்தலே


4. புராணங்களை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன்


5. சமூக விஞ்ஞானி:

   பெரியாருக்கு  இவ்வளவு அறிவு அந்த ஒரு(வரின்) மூளையில்

   எப்படி  வளர்ந்தது,இருந்தது என்று எண்ணி வியக்கிறேன்


6. பசியோடிருக்கும் ஒவ்வொரு உயிரின் பசியையும் ஆற்ற முயலாத‌

   உயிர்கள் செய்வது(ம்) பாவமே


7. இராமலிங்கரின் ஜீவ காருண்ய பசி தீர்த்தலையும்

   காந்தியின் இராம ராச்சியத்தையும்

   மார்க்ஸ் லெனின் தத்துவத்தையும் என்னால் ஒன்றிப் பார்க்க முடிகிறது


8. தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாததற்கும்

   வேரூன்ற‌ வழியில்லாமல் போனதற்கும் காரணம் பற்றி ஆய்வு செய்தால்

    அது பெரியார் பெற்ற வெற்றிதான் என்ற முடிவு வருகிறது.


9. பிரபஞ்சம்,உயிர்கள் நலம் இவற்றிற்கான பாலம் அறிஞர் மொழிகள்


10. நல்ல தலைமை+ தவறான இயக்கம்

    தவறான தலைமை + நல்ல இயக்கம்

    இரண்டுமே கேடுதான்.




Monday, November 6, 2023

ஸ்டாலின் இளைஞர்களின் முன்னோடி ...கவிஞர் தணிகை

 ஸ்டாலின் ஓர் மாணவராகவும் என் மகன் போன்ற சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்க அவருடைய கராத்தே ஆசிரியர் மூலமாக அவருடைய மேற்பார்வையுடன் பணிக்கப் பட்டது முதல் அவரை சற்று நெருக்கமாக நானறிந்தேன். பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் நியாயம், நீதி , நேர்மை என்று போராட்டம்.



எனவே பொருளாதாரத்தில் வெகுவான முன்னேற்றம் இல்லை.இவருடைய தந்தை ஒரு பொதுவுடமை இயக்க பிரமுகராகவும் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தமை அனைவரும் அறிவர். இவருக்கு ஸ்டாலின் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.


பொதுவாக கலை சார்ந்து அதன் வருவாய் கொண்டே வாழ்வது என்பது இந்தியா, ஏன் தமிழ் நாடு போன்ற இடங்களிலும் சற்று அல்ல மிகக் கடினமான ஒன்று. அதை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு மிகவும் இல்வாழ்வை நல்வாழ்வாக நடத்தி வருவது இவரது வெற்றி.


இந்த இணையர்கள் இணையர் என்ற திருமணத் தளத்தின் மூலம் இணைந்து இன்று ஒரு தவழ்ந்திடும் ஆண் மகவுடன் மகிழ்கின்றனர் என்பது ஒரு கூடுதல் செய்தி.


இவரது மாணவர்கள் நல் ஒழுக்கத்துடனும், நற்பயிற்சியுடனும் சிறந்த மனிதர்களாக‌ விளங்கிட அவர் தம் பெற்றோர் மகிழ்வது போல அடியேனும் மகிழ்கிறேன் என்ற பகிர்வை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் அது மட்டுமல்ல இவருடைய( கராத்தே) ஆசிரியர் எனது மகனுக்கும் நாலைந்து வயது முதலே கராத்தே ஆசிரியராக இருந்து எங்கள் குடும்ப வாழ்விலும்  வாழ்வின் நிகழ்வுகளிலும் இணைந்திருந்த அந்த காலம் பற்றி அசை போடுவதற்காகவே 


இந்த முறை ஸ்டாலின் அழைப்பை ஏற்று எனது நேரத்தில் அரை மணி நேரம் அவர்களுடன் இருந்தேன். காலம் ஒளியின் வேகத்துடன் விரைகிறது



வாழ்த்துகள் ஸ்டாலின் 

மேலும் வளர்க மக்கள் ஆதரவு பெறுக‌


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


ஸ்டாலின் இளைஞர்களின் முன்னோடி ...கவிஞர் தணிகை