Monday, May 30, 2022

திருமண வரவேற்பு விழா வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

                               முதல் சந்திப்பு  பெரும் வியப்பு: கவிஞ‌ர் தணிகை


     ராஜசேகர் MCA                         06.06.2022                                           மரு.பூஜா M.B.A



தென்னக ரயில்வே ராஜா

எனை சந்தித்தார்

மகள் திருமண வரவேற்பு அழைப்புடன்


முதல் சந்திப்பிலேயே மனிதர்

மனந்திறந்தார்.

பல முனைகளில் நாங்கள் ஒன்றுபட்டிருந்ததை

பேச்சு காண்பித்து விட்டது


கிளிக்கூட்டத்திற்கும், பறவைக் கூட்டத்திற்கும்

காக்கை கூட்டத்திற்கும் தினம் உணவளிக்கும் நெகிழ்வு


அவற்றில் எஞ்சியவற்றை எடுத்து அரைத்து மறுபடியும்

எறும்புக் கூட்டத்திற்கு இட்டு விடல்


உணவு சமைத்து ரயில்வே மேடைகளில் இருக்கும்

ஆதரவற்றோர்க்கு தினம் உணவு அளித்தல்


இப்படி ராஜாவும் சண்முகப்ரியா ராஜாக் குடும்பத்தாரும்

உயிர்களிடையே புண்ணியம் கட்டிக் கொண்டு வாழ‌


காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியின் வரிகள்

இவர்களின் பிடித்தமானது...

இவர்களை மனிதாபிமானிகள் என்பதை விட‌

உயிரபிமானிகள் என்பதே பொருத்தமானது


இவர்க‌ளின் பெண் வாரிசு மரு. பூஜா 

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ O.ராஜசேகரை

கரம் பற்றும் நன்னாளில்



எங்கிருந்தாலும் தமிழும் தமிழ்க் குடும்பமும்

தமது பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன‌

கண் காணா இடத்தில் இயங்கிய போதும்...


எனது வாழ்த்துகள் எப்போதும் இவர்களுடன்

கவிஞர் தணிகை

மற்றும் குடும்பத்தார்.



இது ஒரு திருமணக் காலம்: கவிஞர் தணிகை

                            BEST WISHES FOR YOUR HAPPY MARRIED LIFE

குகன் ராஜ்  B.E                                                                          மோகனப்ரியா B.E

நாள் :03.06.22               இடம்:ஸ்ரீ சண்முகத் தேவர் முத்தம்மாள் திருமண மஹால்                                                                                 திருப்பூர்



அங்கமுத்து என்ற பெயர்

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது


எங்கள் வீட்டில் அது எங்கள் குடும்பத்தின் மூத்த பெண்ணுக்கு

அவர் விண்ணுலகு புகுந்த பின்னும் அந்த நாள் நினைவுகளில்

நாங்கள்



ஏன்?

அவர் தம் பெயர்த்திக்கு மணம் எனவே அந்நினைவு சுழல்களில்

நாங்கள்


அந்தச் சிறுமி 

நாளை அறுபட இருந்த 

கோழியை தப்பிக்க வைத்தவர்

மிகவும் அப்பாவி 


ஆனால் வளர்ந்த பின் சுமந்ததோ பெரும் பாரம் பொறுப்பு

குடும்பத்தின் மூத்த உறுப்பினர் வழிதான்

இளையவருக்கும் வரும் என்பார்

அதெல்லாம் பொய்யான வரலாறு எங்களுடையது


அவளின் இளைய மகள் பேபி ஈஸ்வரனுடன் வாழ்ந்த‌

அடையாளம் மூன்று பெண்களாய்...

ஈஸ்வரன்

ஈஸ்வர பதம் அடைந்தார் கொஞ்ச காலத்தில்

அதன் பின் ஒரு நல்ல தாயாய் பேபி

இந்த பெண்களை உருவாக்கம் செய்து உரிய கல்வியும் கொடுத்து

இன்று மணமேடையில் ஏற்றி வெற்றி கண்டிருக்கிறார்


தியாகம், உழைப்பு, விடாமுயற்சி

மனதை மேம்படுத்தும்

மனிதத்தை மேம்படுத்தும்



இந்த மணமக்களும் வாழ்வாங்கு வாழ 

எங்கள் குடும்பத்தின் வாழ்த்துகள்

என்றென்றும்

கவிஞர் தணிகை

 மற்றும்

 குடும்பத்தார்.



Sunday, May 29, 2022

திருமண வாழ்த்து மடல்

                                                                     03.06. 2022

                                              பழனியம்மாள் திருமண மண்டபம்

                                                           கருமலைக்கூடல்

                                                            மேட்டூர் 636402



                             வழக்கறிஞர் அருணாச்சலம் காட்சிக்கு எளியவர்

                           என்னுடன் நடைப் பயிற்சியில் தோளோடு தோள்

                                                              சேர நடமாடுபவர்.


                                           எப்போதும் கையில் ஒரு சூட்கேஸ்

                                                             ரயில் பயணம்

                                            வயது கருதாது வாழ்வின் முறை


                                             வயதில் என்னை மூத்தவர்

                                                சிந்தைக்கு இளையவர்

                                                வெளிப்படையானவர்


            கோம்பூராங்காடு கபாலீஸ்வரர் கோவில் கட்டுமானப் பணியில்

                               எனது நிலைக்கு ஆதரவாய் நின்றவர்


                     அவர் மகன் மல்லையராஜ் மங்கையர்க்கரசியை

                                 வாழ்வுத் துணையாய் ஏற்கும் காலம்

                                                        மணமக்கள்

                                                பீடும் பெருக்குமாய்

                                                   ஏறும் நீருமாய்

                                   சோறும் வாழ்வும் வயலுமாய்

                                         சேறும் கழனியுமாய்

                             செம்புலப் பயனுமாய் ஒரு சேர்ந்து



                           நீடுழி வாழ பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

                                                      என்றும் வாழ்த்தும்

                                                      கவிஞர் தணிகை

                                                மற்றும் குடும்பத்தினர்.




மண வாழ்த்து

 மருத்துவர் பிரதீப் டேனியல் கைன்னஸ்

முதுகலை பல் மருத்துவம் பயில‌

சேர்ந்தது முதலே

என்னுடன் கை கோர்த்தவர்

மென்முகம் காட்டியவர்

தென்றலாய் வீசியவர்



படித்த அதே கல்லூரியில்

இன்று ஆசிரியர்

நிலை மாறினாலும்

பிழையாகா நட்பு பாராட்டுபவர்


நிறைய நாட்கள் லிப்ட்

கொடுத்து

நான் விரைவாக வீடு சேர‌

உறுதியுடன் உதவிய தோழர்


இன்று இவர் (மே 30 2022)

மருத்துவர் பிரைஸியை

வாழ்வுத் துணையாக ஏற்கும்

காலக் கட்டத்தில்

நானும் இவருடன் இருப்பதில் மகிழ்கிறேன்


பூ மழையாக பா மாலையாக‌

எனது சொற்களால் சுடர் விடும்

இந்த வாழ்த்து

இவர்தம் வாழ்வை வாழ்த்தட்டும்

வாழ்க்கை வழித்தடத்தில் பூக்கள் தூவட்டும்


போற்றுதலுடன்

வாழ்த்துகள்

ஆசிகள்

என்றென்றும்

அன்பன்

கவிஞர் தணிகை



 

Monday, May 23, 2022

பெட்ரோல் பிளாஸ்டிக் கவர் கழிவுகளில்:பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!

 thanks

THINAKARAN  23.05.2022

இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!



திண்டுக்கல் : பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பழனி ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்த முயற்சியில் அவர் தற்போது வெற்றி அடைந்துள்ளார்.

ஒரு கிலோ அளவிலான பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மில்லி லிட்டர் பைராலிஸிஸ் பெட்ரோல் கிடைப்பதாகவும் இதில் 10% அப்ஸலுட்டில்லி ஆல்காஹாலை சேர்த்தால் வாகன எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு லிட்டருக்கு 58 கிலோ மிட்டர் வரை வாகனம் இயங்கும் என்றும் எஞ்சினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வரும் எரிவாயுவை சமையலுக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து அதன் மூலம் இறுதியாக கிடைக்கும் கழிவுகளை சாலை அமைப்பதற்கும் கான்க்ரீட் போடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கார்த்திக் தெரிவித்தார்.பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து எடுக்கும் பெட்ரோல் மூலம் மாணவன், தனது இரு சக்கர வாகனத்தை இயக்குவது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Wednesday, May 18, 2022

கிங் ரிச்சர்ட் (சினிமா சினிமா சினிமா):அழகு என்பது செயலே கவிஞர் தணிகை

 கிங் ரிச்சர்ட் (சினிமா சினிமா சினிமா):அழகு என்பது செயலே கவிஞர் தணிகை



சிறந்த திறம் படைத்த அனைவரிடமுமே கர்வம், தலைக்கனம், செருக்கு ,எல்லாரையும் விட நான் பெரியவர், உயர்ந்தவர் என்னும் எண்ணம் இருப்பதை பெரும்பாலும் காணலாம். அது சாதி, மதம், இனம், பொருள் பலம் இப்படி ஏதாவது ஒன்றைக் காரணமாகக் கொண்டிருக்கும். ஆனால் பூமியின் உச்சிக்கு ஏற வேண்டிய சிறந்த  மனிதரிடம் அதைக் காணமுடியாது. அதை எப்படி சொல்லி ஒரு தந்தை வளர்க்கிறார் என்பதை தொடு உணர்வாக கொண்ட படம்.



செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல என்ற ஒரு பழமொழி உண்டு. அழகு என்பது செயலே என்று பெரியார் கூட பேசியதாக நினைவு. கறுப்பு இனம், மிகவும் தோற்றத்தில் அழகில்லா தோற்றம்,ஏன் சொல்லப் போனால் அசிங்கமான உருவங்கள் எப்படி உலகின் பெண்கள் டென்னிஸ் எவரெஸ்ட் சிகரம் ஏறி அமர்ந்து சாதிக்கிறாரகள் என்பதை சொல்லி இருக்கும் படம்.



 உண்மையில்  கிங் ரிச்சர்ட்டாக நடித்து ஆஸ்கார் வாங்கிய வில் ஸ்மித் கர்வத்தில் கண் மண் தெரியாமல் கோபப்பட்டு ஆஸ்கார் மேடையில் அறிமுக உரை செய்யும் மற்றொரு நடிகரை  தமது மனைவி பற்றிக் குறிப்பிட்டார் தம் பேச்சில் என அறைந்து மன்னிப்பு கேட்டு அதற்கு உரிய வேதனையையும் பெற்றுவிட்டார் ஆனால் அவர் ஆஸ்கார் மற்றும் பல விருதுகளை வென்றதில் எந்த வியப்பும் இல்லை. அப்பேர்ப்பட்ட நடிப்பு. இவர் இந்தப் படத்தை தயாரித்துள்ள 3 வரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நடித்தது அவர்தாமா என்று தெரியாத தந்தையாக கிங் ரிச்சர்ட் ஆக இருக்கிறார். உண்மையில் கிங் ரிச்சர்ட் கூட அப்படி இருக்கிறாரா என்பது தெரியாது.


 2021 நவம்பர் வெளிவந்த படம் இதைப்பற்றி நான் ஏன் பதிவிட வேண்டியதிருக்கிறது எனில் விளையாட்டைப் பற்றி ஹிந்தி தங்கல், தமிழ் கனா, மௌலி இயக்கத்தில் அஸ்வினி நாச்சியப்பாவின் ஓட்டம் ஆகியவை வந்திருந்த போதிலும் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் சரித்திரமாக நிற்கும் சரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் என்ற இரு சகோதரிகளின் அடையாளத்தை அழிக்க முடியாதிருக்கும் நிகழ்வை காலத்தில் காட்சி முறையில் எளிமையாக எடுத்து 144 நிமிடங்கள் ( அதில் கடைசியாக டைட்டில் நிறைய நிமிடங்கள் இடம் பிடித்துக் கொள்வதை தவிர்த்து விட்டால் இன்னும் குறைந்த நீளமே உள்ள படம்) பதிவு செய்திருக்கிறது..



கிங் ரிச்சர்ட்டை சாகடிக்குமளவு கூட அடித்து நொறுக்குகிறார்கள், பின் வாங்குவதில்லை தமது இலக்கிலிருந்து, மேலும் பணம் வரும்போது அந்த வாய்ப்புகளை எப்படி தவிர்த்து இதெல்லாம் எம் தகுதியல்ல என மேலும் மேலும் எப்படி தவிர்ப்பதன் மூலம் தொட முடியாத உயரம் செல்ல முடியும் என வீனஸ் வில்லியம்ஸ் ஸ்பான்சர்ஷிப் தொகை 1 மில்லியன் டாலர்களிலிருந்து அரஞ்சா சாஞ்சஸ் விகாரியோவிடம் வஞ்சகமாக முதல் கிராண்ட்ஸ்லாம் டைட்டிலில் வீழ்ந்த பின்னும் புகழ் ஏணியில் ஏறி ரிபோ காலணி நிறுவனத்தின் மூலம் முதல் வாய்ப்பிலேயே 13 மில்லியன் டாலரை அந்த மிகவும் கீழ் தட்டில் இருந்த குடும்பம் பெறுகிறது என்னும் போது பார்க்கும் எவருமே வியப்படையாமல் இருக்க முடியாது.



நோ காம்ப்ரமைஸ், நோ கன்வின்ஸ், எங்குமே சமரசம் செய்து கொள்ளாத திறமை மீது வைத்த  அசாதாரணமான நம்பிக்கை,எவராலும் சமாதானப் படுத்த முடியாத இறுக்கம், இவைதான் கிங் ரிச்சர்ட். அடிப்படையில் டென்னிஸ் பயிற்சியாளராக இருக்கும் இவரும் இவரது டென்னிஸ் பயிற்சியாளாரான மனைவியும் எப்படி இந்த வீனஸையும் , சரீனாவையும் உச்சிக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற அடிப்படையை மட்டும் விளக்கி எடுத்துள்ளார்கள். 


உண்மையில் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மணமுறிவு முறித்து விவாகரத்து பெற்றுக் கொள்கிறார்கள் என்பது மேல் விவரம்.



 நடையிலேயே அசத்துகிறார் வில் ஸ்மித் அது வேறு...


இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்பதை விட இதில் சொல்லப் பட்டிருக்கும் கர்வம் கொள்ளாதே, அழகு என்பது செயலே போன்ற பாடங்கள் தாம் என்னை இதை எழுதவே நிர்பந்தித்தது. 



சில நாட்களுக்கும் முன் கூட ஒரு 17 அல்லதூ 18 வயது நிரம்பிய இளைஞன் ( அங்குதான் உரிமம் உண்டாமே துப்பாக்கி வைத்துக் கொள்ள) ஒரு பொது இடத்தில் அதிகமாக கறுப்பு இன மக்கள் புழங்கும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தி பலரைக் கொன்று இருக்கிறான். பலர் காயமடைந்ததாகவும் செய்தி. இது போல் அமெரிக்க  மண்ணில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு 


இதன் அடிப்படையில் பார்த்தால் இன்னும் அங்கு நிறவெறி அடங்காதது தெரியும், மார்ட்டின் லூதர் கிங் ரத்தம், ஆப்ரஹாம் லிங்கன் போன்றோர் மட்டுமல்ல இராபர்ட் கென்னடி போன்ற நாட்டின் முதல் மனிதர் யாவருமே சுட்டுத் தள்ளிய தேசம் அது...



இங்கும் இந்திராவும், ராஜீவும், மகாத்மாவும் சுட்டு தானே தள்ளப் பட்டிருக்கிறார்கள்... குண்டுகளுக்குத் தானே இரையானார்கள்... காரணங்கள் பல...ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை கர்வம்...


இன்று உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்த செய்தியை போற்றி புகழ்ந்து வரும் நிலையில் நாம் இருக்கும் போது இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது...இராமாயணத்தில் அனுமன் வாலுக்கு  பற்ற வைத்த தீ அந்த  தேசத்தையே எரித்ததான கதை தமிழ் இனத்தை அழித்த நாடு இப்போது தன்னைத் தாமே எரித்துக் கொண்டு இருக்கிறது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை