Friday, October 18, 2019

திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி: கவிஞர் தணிகை.

 திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி: கவிஞர் தணிகை.

Image may contain: குகன், standing

கடந்த 12.10.19 அன்று திருச்சி தேசியக் கல்லூரியில் விடியல் நண்பர்கள் சந்திப்பில் என்னை காந்தியம் ஒரு வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள்.அன்றைய தினம் எனக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது.

விடியல் குகன்  என்னும் எனதினிய நண்பர் முன்னின்று ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வரும் விடியல் நண்பர்கள் குழுவில்  சமுதாயத்தில் மேல் நிலையில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கல்லூரி பிரமுகர்கள், உருமு தனலட்சுமி கல்லூரியின் முதல்வர், தேசியக் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதித்துவம் செய்த 60  பொறுக்குத் தரமான மனிதர் அடங்கிய சபை அது. அறிவார்ந்த சபையும் கூட.
Image may contain: one or more people and people standing
எனக்கு நல்லதொரு ஊக்குவிப்புத் தொகையுடன் மரியாதை செய்யப்பட்டது. பிறகென்ன கரும்பு தின்ன யானைக்கு கூலியா கொடுக்க வேண்டும். அது ஒரு நல்லதொரு அரிய உரையாக அமைந்தது. எவ்வளவு நேரம் பேசினேன் என குறிப்பு எடுத்து வைக்கவில்லை எனினும் எந்தவித நேரத் தடையும் தடங்கலும் இன்றி பேச அனுமதிக்கப்பட்டேன். ஆனால் இது போன்ற தலைப்பில் சில மணி அல்லது ஒரு மணி பேசுவதெல்லாம் சரியில்லை ஒரு பத்து நாளாவது ஒர் மணி நேரம்  பயிற்சி வகுப்பாக எடுத்தால் மட்டுமே சற்று இதன் தலைப்பு சார்ந்த கருப்பொருளை விளக்கி வைக்க முடியும். என்றாலும் அவர்கள் எல்லாம் பாராட்டும் வண்ணம் இந்த சிறிய காலத்திலேயே மிகவும் தெளிவாக அற்புதமாக பேசியதை அனைவரும் உள் வாங்கிக் கொண்டனர். ஒரு கவிதை படித்த பெண் பேசுவதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் என்ற வார்த்தையை ஒரு பாராட்டாக வழங்கினார் இதை விட சுருக்கமாக அந்த உரை வீச்சை எவரும் கணக்கிட்டு விட முடியாது

பேசிய அனைத்தையும் என்னால் பதிவிட முடியாது என்ற போதிலும் முடிந்த வரை பதிவிட வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஏன் எனில் அந்தக் காலத்தை பிடித்து வைக்க முயல்தல் ஒன்றும் தவறில்லையே... என்றாலும் எவரும் மிக நீண்ட பதிவு என்ற நோக்கத்தில் படிக்காமல் விட்டு விட்டால் அது அவர்களைப் பொறுத்தே அமையும். எனவே சற்று சுருக்கமாகவே எழுத விழைகிறேன்.
Image may contain: 2 people, people smiling
எர்த் ப்ரொவைட்ஸ் எனப்ஃ டு சேட்டிஸ்பை எவரி மேன்ஸ் நீட்ஸ், பட் நாட் எவரி மேன்ஸ் க்ரீட்....ஆங்கிலத்தில்.Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.If you want to change the world change yourself.

டாக்டர் மு.வ சொல்வார் தனது நாவல் ஒன்றில்: உலகெங்கும் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது இதில் முன் வருவார்க்கு முதல் பரிசை கொடுக்கிறது இந்த முடிவை மாற்றி கடைசியாக வருவாரிலிருந்து பரிசு கொடுப்பதை மாற்றி அமைக்க வேண்டும் என்பார்

தற்போது கூட வாட்ஸ் ஆப் குழுவில் மாற்றுத் திறனாளிக் குழந்தை ஒன்று ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக கைக்கட்டை ஊன்று கோலுடன் ஓட முயற்சித்து வருகிறது விழுகிறது வெற்றிக் கோட்டை எட்ட அருகில் சென்ற அத்தனை குழந்தைகளும் திரும்பி ஓடி வந்து அந்தக் குழந்தையை எடுத்து அதனுடன் சென்று அனைவரும் முதல் பரிசை பெறுகின்றனர்.
Image may contain: 1 person, standing
ஏன் ஒரு சூரியா படத்தில் கூட இப்படி சிலருக்கு பரிசு வழங்குவதை ஆட்சேபித்து வெளியே வந்து அனைவர்க்கு பரிசு கொடுக்க வேண்டும் அதுவே சரி என்பதாக இருக்கும்.

ஏன் விடியல் சந்திப்பில் கூட கலந்து கொள்ள வரும் அனைவரையுமே மன நிறைவையும் திருப்தியும் அடைய வைத்தே அனுப்புகிறார்கள் என்று முன்னுரையாகக் குறிப்பிட்டு விட்டு தலைப்பில் புகுந்தேன்.
Image may contain: 4 people, people standing, people sitting and indoor
நெறி என்றால்: ஒழுங்கு, கற்பு, முறை, நீதி இப்படி தமிழ் சொல்கிறது.
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்....வாகனத்தை இயக்கும்போது இருக்க வேண்டிய கட்டுப்பாடு, இப்படி சொல்லி விட்டு நெறிப்படுத்த வேண்டியவர் எல்லாம் யார் என்றால் : பெற்றோர், ஆசிரியர், நாடு, தலைமை, நட்பு போன்றவரே நெறிப்படுத்த முடியும்.
Image may contain: 5 people, people smiling, people sitting and indoor
நகுதல் பொருட்டன்று....அக நக நட்பது....நட்பில்...

இப்போது சி.சி.டி.வி என்பது எதற்கு ...நேர்மையின் மதிப்பு எவ்வளவு... பைபிளில் மனித ஆயுள் 900 ஆண்டுகள் என்பதை நேர்மையின்மையை பார்த்த இறை 120 ஆக குறைத்தது என்றும் காந்தியும் 120 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறியதையும் குறிப்பிட்டேன். காந்தியம் என்பது காந்தி என்ற தனி மனித வாழ்வு மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய தவம் என்பதை எடுத்துக் கூறினேன்.

உடல் என்னுடையது, உடல் உண்மையிலேயே உன்னுடையதுதானா? உடை , உணவு, கல்வி, புத்தகம்,பை, பணம் சொத்து இவற்றின் பால் பித்து...இவற்றின் ஆரம் அதிகரித்து அதிகரித்து சுயநலம் என்ற ஒரே சிறு விசை முதலாளித்துவம் என்ற பெரு விசையை ஏற்படுத்தி விட  அதில் புவியடக்கம். பாதிக்கும் மேலான உயிர்களுக்கும் உணவு குடிநீரும் கூட இல்லை . கிரெட்டா தன்பெர்க் 16 வயது சிறுமி உலகத் தலைவர்களை எல்லாம் எள்ளி நகையாடி இருக்கிறாள்.
Image may contain: 1 person, standing and food
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் சொல்லி இருக்கிறார்: பூமி முடிந்து விட்டது. விரைவில் வேறு கிரகத்தில் குடியேறுங்கள் என்கிறார் மனித குலத்தை. ஆதலால் சந்திரன், செவ்வாய், எட்ட முடியாக் கோKகள்,(totally saturn's moon until now is discoverd is 82 it is the highest number of moon having planet in our solar family) சனியின் 20 வது நிலா எல்லாம் சேர்ந்து 82 நிலாக்கள் எல்லாம் கண்டுபிடிப்புகளாக...காந்தியின் வார்த்தையை இங்கு நினைவில் கொள்ளலாம் அது மனிதரின் தேவைக்கேற்ப பூமியில் யாவும் கிடைக்கிறது பேராசைக்கேற்ப எல்லாம் கிடைக்குமா?

முதல் ஆதி தத்துவம்...முதலாளி தத்துவம் முதல் ஆதித் துவம் துவம், துவி: என்றால் இரண்டு: முதலாளித்துவம்...தொழிலாளித்துவம்...உழைப்பே மூலதனம். மூளைக்கும் அறிவுக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்றால் ஆற்றலுக்கு காந்திதான்

19 ஆம் நூற்றாண்டு தந்தது: மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் 20 ஆம் நூற்றாண்டு தந்தது: காந்தியம்.
நெறி: தீயின் நெறி: எரித்தல், நிலத்தின் நெறி: பொறுத்தல், நீரின் நெறி: உயிர்ப்பித்தல் காற்றின் நெறி: உணர்த்தல் காந்திய நெறி என்பது: கடையனையும் கடைத்தேற்றல், அர்ப்பணித்தல், தியாகத்தால் சாதித்தல், சகித்துக் கொள்ளல்.
Image may contain: 4 people, people sitting and indoor
இன்னா செய்தாரை ஒறுத்தல்:; நெல்சன் மாண்டேலாவின் சிறை வாழ்க்கையில் அடித்து துன்புறுத்தி குடிக்க நீர் கேட்ட போது தன் முகத்தின் மேல் சிறு நீர்கழித்த  ஜெயில் வார்டனுக்கு அவர்  தென் ஆப்பிரிக்காவின் தலைவராக மக்கள் அங்கீகாரத்துடன் அரசாட்சியில் இருந்தபோது பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று உணவருந்தும் இடத்தில் தனியாக இருந்த அவரையும் அழைத்து உணவருந்தச் செய்து அதற்குண்டான பணத்தைக் கொடுத்து அவரது கை நடுக்கம் தாம் ஏதாவது செய்து விடுவோமா என்ற பயமே என தன்னுடன் வந்தார்க்கு விளக்கி கூறியது...

காந்தி ஸ்மேட்ஸ் சம்பவத்தில் காந்தியை மலம் கழிக்கும்போது பூட்ஸ் காலால் உதைத்த  ஜெயில் வார்டனுக்கு செருப்பு தைக்கும் தொழிலை சிறையில் கற்று முதல் பூட்ஸை அவருக்கு பரிசளித்தது அதை அவர் இங்கிலாந்து சென்றும் போடாமல் பிரார்த்தன அறையில் வைத்து வணங்கியது போன்றவை சொல்லப்பட்டது
Image may contain: 8 people, people sitting and shoes
ஒபாமா நோபெல் வாங்கிய உடன் யாரை சந்திக்க அவா என்ற கேள்விக்கு நாலைந்து முறை நோபெலுக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் கிடைக்காத காந்தி பேர் சொல்லி அவருடன்  பேசிக் கொண்டே காலைச் சிற்றுண்டி அருந்த ஆசைப்பட்டது..

ஒரு பெருங்கடலை ஒரு மாபெரும் சமுத்திரத்தை 60000 பக்கங்களில் சொல்ல முயன்றதை சிறிய கால அளவில் சொல்ல முனைவது...

கலாம் சீடர்களாகிய நாங்கள் சொல்லும் வழக்கமான : பூங்கா, வெட்டுக்கிளி, மான்,தேனீ அத்துடன் மனிதரிடம் இருக்கும் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சத்வ, ரஜோ, தமோ...
Image may contain: 6 people, including குகன், people sitting and shoes
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்... சொல்லி காந்தி ஹரிச்சந்திரா, இராமாயணம், வைதிகத் தாய், புலால் உணவு, மது, புகை மாது தொடமாட்டேன் என இலண்டன் பாரிஸ்டர் படிக்கச் சென்ற போதே பகவத் கீதை, தாய் சொல்லைத் தட்டாதே என வாழ்ந்தது அந்தக் காலத்தில் கடல் கடந்து போவதின் விளைவு, கோவிலுக்குச் செல்ல தடை ..
Image may contain: Tanigai Ezhilan Maniam, hat
காந்தியின் தூண்டு உணர்வாளர்கள் பலர்: டால்ஸ்டாய், ரஸ்கின், கோகலே, தாகூர், அதில் தில்லையாடி வள்ளியம்மாள் வயது: 16. போராட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் சிறை சென்று உயிர் இழந்தது, முத்துலட்சுமி ரெட்டி மருத்துவர் இருவருமே தமிழர்கள். வைகைக் கரையில் குளிக்கும்போது மேலாடையை இழக்க காரணமாக பெண்கள் ஆற்றங்கரையில் இருந்தது... தமிழ் கற்க ஆசிரியர் நியமித்துக் கற்றது, இரு கைகளாலும் எழுதக் கற்றது, விவசாயப் பண்ணை, ஆஸ்ரமங்கள், யங்க் இண்டியா, இண்டியன் ஒப்பீனியன், -ஹரிஜன் பத்திரிகை நடத்தியது, சமையல், பஜனை, பிரார்த்தனைக் கூட்டங்கள், துப்புரவுப் பணி, போராட்டங்கள், சத்தியாக்கிரகம், சிறைத்தவம், உண்ணாநோன்பு அஹிம்சையும் வாழ்வு என வாழ்ந்தது, விமானப் பயணம் செய்யாதது, ஜோக் பால்ஸ் நீர்வீழ்ச்சியை விட விண்ணிலிருந்து வரும் மழையையே பார்த்திருக்கிறேன் என வாழ்வில் ஓய்வையும் மகிழ்வுக்கான பொழுதுகளையும் புறக்கணித்தது

வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற அறிவாளிகள் இருக்கும் காலத்தில் வாழ்ந்து உலகெலாம் பிரதமர் என்றால் அது காந்தி எனப் பேர் பெற்றது அவரது தூண்டு உணர்வுடன் அடியேனாகிய நானும் கூட பாலமலையில் ஒர் கிராமத்தில் பள்ளியருகே அரசால் கட்டி மக்களால் பாழடிக்கப்பட்டிருந்த 8 கழிவறைகளை துப்புரவு செய்யும்போது அவர் எப்படி காந்திய மாநாடு நடந்த இடத்தில் அவர் அப்போது எவர் என்றே தெரியாத போது அருகிருந்த வீடுகளில் முறம் துடைப்பம் கொண்டு மலம் வாரி அப்புறப்படுத்தியது நினைவிலாட கைகள் வைத்தே மலத்தொட்டியை சுத்தம் செய்தது...
Image may contain: 1 person
திருப்பூர் குமரன், லால்பகதூர், காமராஜ், வினோபா பவே, ஜெபி, கிருபாளினி, மொரார்ஜி, பகத், சுபாஷ், அம்பேத்கர், மோதிலால், ஜவஹர்லால், வல்லபாய் படேல் பாரதி, சிதம்பரம், சிவா, மித வாதம், தீவிர வாதம்....

13 வது வயதில் 14 வயது கஸ்தூரிபாவை மணந்தது, 2 முறை தாசி வீடு சென்றது, மூத்த மகன் ஹரிலால் குடிகாரராக ஏன் இருந்தது என்ற விளக்கம்... உண்ணா நோன்பு மருத்துவம் , நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, கூனே மெத்தெட் 8 முறை கொலை செய்ய முயற்சியில் 7 முறை தப்பியது, 8 வது முறை சுடப்பட்டு இறந்தது தென் ஆப்பிரிக்காவிலேயே கொலை முயற்சியில் பற்கள் எல்லாம் உடைக்கப்பட்டு சாலையில் இருந்தோர் வந்து காத்தது...பண்ணை விவசாய முறைகள், கூட்டுறவு விவசாய முறைகள், கிராமியப் பொருளாதாரம், அடிப்படையிலான வாழ்க்கை முறைகள்...ராமராஜ்ஜியக் கனவுகள்..சத்தியாக்கிரகம், ஒத்துழையாம, வெள்ளையனே வெளியேறு, செய் அல்லது செத்து மடி சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கட்டுக்கு அடங்கா கூட்டம், தண்டி, வேதாரண்யம் நீதிமன்றட்தில் நீதிபதிகளே எழுந்து நிற்பது அவர் செல்லும்போது...

மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற சத்யமான காந்தி சிரவணன், ஹரிச்சந்திரா, விஸ்வாமித்திரர், இராமயாணம், போன்ற கதைகளிலிருந்து உருவான ஒரு சத்திய வரலாறு சாத்தியமான வரலாறாக இந்தியாவில்.

3 குரங்கு பொம்மை...ஆயிரம் வழி அழிவுக்கு, ஒரே வழிதான் ஆக்கத்துக்கு. அது காந்திய நெறிக்குத் திரும்புவதும் கிராமிய வாழ்வின் உன்னத வாழ்வின் முறைக்கு மாறுவதும்தான்...அதை நமது மக்களும், அரசுகளும் செய்ய நாம் என்ன செய்யப்போகிறோம்?

தோன்றின் புகழொடு.... தோன்றுக...
Image may contain: people sitting and indoor
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இளம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலாம் பிறந்த நாளில்: கவிஞர் தணிகை.இளம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலாம் பிறந்த நாளில்: கவிஞர் தணிகை.

Image may contain: 9 people, including திருக்குமரேசன் வீ, selfie, closeup and outdoor

எழுத நேரமில்லா பொழுதுகளாக ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்வில் இன்று இயற்கை மழையால் வீடடங்கி நடைப் பயிற்சி விட்டு நல்ல வேளை மின்சாரமும் ஒத்துழைக்க இன்று உங்களுக்காக காலத்தின் சில பதிவுகள்.

எனது கல்லூரியின் ஒரு பேராசிரியர் கலாம் பிறந்த நாளுக்கு பள்ளிக்கு சென்று பேஸ்ட் பிரஸ் கொடுத்து அவர்களுக்கு பல் பரிசோதனையும் செய்யலாம் எனக் கேட்டுக் கொண்டார். எது எப்படி போனாலும் முயற்சியை கைவிடாத எனது வாழ்க்கை வரத்தில் இதெல்லாம் தானாக வந்து கூடிக் கொள்கிறது.

இரண்டு பள்ளிகளை சில காரணம் பற்றி நிராகரித்து விட்டு 3 வதாக இந்தப் பள்ளியை அதாவது இளம்பிள்ளையில் இருக்கும் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்தோம். தொடர்பில் இணைந்த உடற்கல்வி ஆசிரியர் மகப்பேறு மருத்துவ விடுப்பில் இருந்த போதும் உதவி தலைமை ஆசிரியரை தொடர்பேற்படுத்தித் தந்தார். அவரும் தொடர்ந்து தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை நேரம் குறித்து ஏற்பாடு செய்து தந்தார்.

இதெல்லாம் நடந்தது அக்டோபர் 14 சுமார் சற்றேறக் குறைய இரவு 7 மணி. இதற்கு எங்களது கல்லூரி பேராசிரியரும் இணங்கி சம்மதித்து தம்மால் ஆன ஒத்துழைப்பாய் அவர் சேலம் மாவட்ட இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்த்தால் சுமார் 2000 பேஸ்ட் பிறஸ்களை எடுத்து வந்து தனது காரில் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார். அத்துடன்  எங்களது பயிற்சி மருத்துவர்கள் 20 பேரும், மற்றொரு பேராசிரியரும் உடன் வந்திருந்தார்.

அனைவர்க்கும் பேஸ்ட் பிரஸ்கள் அதாவது அந்தப் பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1900. அவர்கள் அனைவர்க்கும் கால்கேட் கம்பெனியின் சார்பாக, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பாக கொண்டு வந்திருந்த பேஸ்ட்(பற் பசை) மற்றும் பல் துலக்கி(பிரஸ்)  வழங்கப்பட்டன

தலைமை ஆசிரியரும், உதவித் தலைமை ஆசிரியரும் வெளியில் வேலையாக சென்றிருந்தபோதும் அந்தப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கு சரியான உரிய அறிவுறுத்தல் செய்திருந்தமையால் கமல் கலாம் படித்த பள்ளியின் வாசலில் மட்டும் இருந்து விட்டு வந்தது போல் அல்லாமல் உள் சென்று செயல் புரிய முடிந்தது.

பெரும்பாலன அனுபவங்கள் நல்லவை ஆனாலும் சில பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்க்கு சென்று சேர வேண்டிய நல்ல செய்திகளை, நல்ல செயல்களை தடுத்தே விடுகிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பார்க்கு இன்னும் சமூக நோக்கம் அதிகம் தேவைப்படுகிறது. அதல்லாமல் வாழ்க்கையை புரட்ட வருவாரின் செயல்கள் நிறைய எண்ணிக்கையில் உள்ளார்க்கு சென்று சேர வேண்டிய அத்துணை நல்ல செயல்களையும் தடுத்து மறைபொருளாக்கி வெளியில் தெரியாமல் விடுபட வைத்து விடுகிறது. இயற்கை அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டட்டும்.

அப்படி எல்லாம் இல்லாமல் இந்த ஆசிரியர்கள்...நல்ல துணை செய்தனர். மேலும் இந்த பள்ளிக்கு எங்கள் கல்லூரியின் சமூக பல் மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு முன் சென்று பல் மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்றை நடத்தியது ஆனால் அதிலிருந்த எத்தனை பேர்  கல்லூரி வந்து பயன் பெற்றார்கள் என்பதுதான் எமக்கும் தெரியாத தகவல்களாக இருந்தது. எனவே இனி அதை முறைப்படுத்த நாங்களும் பெரு முயற்சி எடுத்து வருகிறோம்.

நான் மெதுவாக இந்தக் கல்லூரியின் பொது உறவு அலுவலராக பணி செய்து வருகிறேன் என்றும் அடுத்த அடியாக குடியரசுத் தலைவராக இருந்தபோதே கலாமுடன் எனக்கிருந்த  தொடர்பும் அவர் எனக்கு எழுதிய கடிதமும் எனது நூல்களை அவர் கைகளில் தவழச் செய்ததும், எனது சிறு வயது மகனை அவரைப் பார்க்க அழைத்து சென்றிருந்துமான நினைவுகளை என்னுள் புதுப்பித்தபடியே அவர்களிடம் சுருக்கமாக நான் ஒரு கலாமின் தூதுவன் என்பதை தெரிவித்து கலாமுக்காகவும், உங்களுக்காகவும் சில செய்திகளைப் பதிவு செய்ய உங்களிடம் வந்திருக்கிறேன் எனச் சொல்லவும் சிறு பிள்ளைகளிடமிருந்து ஏக கர ஒலி. நிஜமாகவா நிஜமாகவா என வியப்பின் குரல்கள். கலாமை பள்ளிச் சிறுவர்கள் நேசிப்பதை அளவிட முடியாது.
Image may contain: 6 people, people smiling, people standing and outdoor
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானியரும்
புத்தரும் யேசுவும்
உத்தமராம் காந்தியும் கலாமும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க
 என்ற கேள்வியுடன்  ஆரம்பித்த எனது உரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்வும் புகழும் காத்திருக்கிறது இரட்டையாய்ப் பிறந்தாலும் அவர்களின் கை ரேகையும், விழிப்பாவையும், பற்களும் எல்லாம் வேறு வேறானவை போலவே அவரவர்க்கும் ஒரு தனி வழி இருக்கிறது அவரவர்க்கு கை வரும் ஒரு கலையை கற்றுத் தேர்ந்து 10,000 மணி நேரம் உழைத்தால் உலகு உமைப் புகழ்வது நிச்சையம் என உறுதி கூறினேன்.

3 குறள்களை வாழ்வில் கடைப்பிடிக்கச் சொல்லி:
தோன்றின் புகழொடு தோன்றுக....
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்...
இன்னா செய்தாரை ஒறுத்தல்..
போன்ற குறள்களை  மட்டும் உயிர் மூச்சாய் நேசியுங்கள் வெறும் பேச்சாய் விட்டு விடாதீர்கள் என்று அதற்கான சில எடுத்துக்காட்டு உவமைகளையும் கோர்த்துக் கொடுத்தேன். கர ஒலி விண்ணைப் பிளந்தது...

அதில் காந்தியும் நெல்சன் மாண்டேலாவும் இருந்தார்கள் இடையே எங்கள் கல்லூரி அவர்களுக்கு செய்ய விரும்பும் பல், வாய் , ஈறு குறித்த மருத்துவ உதவிகளையும் அதில் 10 துறையும் , அந்தக் கல்லூரியை இந்திய சிறுவர் பல் மருத்துவத் துறையின் தலைவரும், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் துணைத்தலவராக இருக்கும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் ஜான் பேபி ஜான் திறம் பட வழி நடத்தி வருவதையும் குறிப்பிட்டேன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் நான் உரையாற்றிய மணிக்கணக்கான உரையாக அது இல்லாமல் இருந்த போதும் அதே கருப்பொருளில் சிற்றுரையாக இருந்த போதும் சிறிது நேரமே உரையாற்றியபோதும்  மிக நிறைவான திருப்தியாக இருந்தது.

Image may contain: 2 people, people smiling, people standing


சிறுமிகள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். கலாமின் கடித நகலையும் காண்பித்தேன், நான் கொண்டு சென்றிருந்த சில புத்தகங்களையும் மனமுவந்து கலாமின் பிறந்த நாள் பரிசாக அந்தச்  சிறுமிகளுக்கு  பரிசளித்தேன்.
இந்த அக்டோபர் 15 கலாமின் 88 வது பிறந்த நாள் ஒரு மறக்க முடியா நாளாக இணைய இயற்கை பேருதவி புரிந்தது. அதற்கு என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.Saturday, October 12, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள் :7.சசிபெருமாளை செதுக்கிய சிற்பி கொ.வேலாயுதம் எம்.எஸ்.சி: கவிஞர் தணிகை.

 என் நட்பின் நனி சிறந்தவர்கள் :7.சசிபெருமாளை செதுக்கிய சிற்பி கொ.வேலாயுதம் எம்.எஸ்.சி: கவிஞர் தணிகை.
Image result for marubadiyumpookkum.blogspot.com


காந்தியவாதி என்று ஊடகம் எல்லாம் கொண்டாடியதே செல்பேசி டவர் மேல் ஏறி மதுவிலக்கு வேண்டும் என உயிர் பிரிந்ததே அந்த சசிபெருமாளை உருவாக்கியதில் பெரும்பணி இந்த சிற்பி என பின்னாளில் தன்னை அழைத்துக் கொண்ட நேரு யுவக்கேந்திரத்தின் சேலம் ஒருங்கிணைப்பாளராகவும் அதன் பின் இந்தியாவின் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணி புரிந்து ஓய்வு பெற்ற கே.வேலாயுதம் அவர்களுக்கு. எனக்கும் அவருக்கும் 12 13 வயதுக்கு இடைவெளியிருக்கும் மிஸ்டர் வேலாயுதம் என்ற எனது சகோதர நண்பர்க்கு.

நான் நேரு யுவக் கேந்திராவில் என்னை தேசிய சேவைத் தொண்டராக இணைத்துக் கொண்ட  போது அவர் அங்கே ஒருங்கிணைப்பாளர் சேலம் மாவட்டத்துக்கு. அது 1983 என நினைவு.அப்போதெல்லாம் என்னை எவருமே வேலைக்குப் போகாதிருந்ததால் மதிக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த மனிதர் என்னை அங்கீகரித்ததில் முதல் மனிதராக இருந்தார். எனவேதான் எனது முதல் நூலான மறுபடியும் பூக்கும் நூலுக்கு முதல் அங்கீகாரம் என்ற அவரது முன்னுரையை  வாங்கிப் போட்டு வெளியிட்டேன் அது தவிர அவர் தவிர எனது புத்தகங்களுக்கு அணிந்துரை வேறு எவரிடமும் எப்போதும் வாங்கிப் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் துணைவியார் திருமதி. மருத்துவர் வள்ளி வேலாயுதம் எம்.டி (மகப்பேறு மருத்துவர்) எனது தாய்க்கும்  எனது துணைவிக்கும் மருத்துவ சேவை செய்ததை எனது பரம்பரை நினைவு கூறும்.

அவர்கள் குடும்பத்தில் எனது நண்பர் தவிர அனைவரும் அதாவது இரண்டு மகன்கள் இரண்டு மருமகள்கள் மற்றும் எனது சகோதரியான  வள்ளி வேலாயுதம்  அவர்களையும் சேர்த்து 5 மருத்துவர்கள். அவரது குடும்பம் ஒரு சிசுருதர் குடும்பம் என அவரது மூத்த மகன் விமல் திருமணத்தின் போது வாழ்த்தைக் கோர்த்திருந்தது இன்றும் என் நினைவுடன்.

சசி பெருமாள் ஒரு தீவிரவாதியாய் இலஞ்சம் கேட்டார் என்பதற்காக ஒரு அரசுப் பணியில் இருந்த மருத்துவர் ஒருவரை காலணியால் தாக்கி விட்டார் என்பதற்காக அந்த தருணத்தில் எங்கள் குடும்பத்தினர் அடைந்தது ஒரு தர்ம சங்கடமான நிலை. அதை எப்படியோ தாண்டி வந்து விட்டது. அப்போது சசி பெருமாள் ஒரு நெசவுத் தொழிலாளி. ஆனால் கிடைக்கும் வருவாய்க்குள் குடும்பம் நடத்தும் ஒரு எளியவர், சசிக்குமார் என்னும் நண்பருடன் தோழமை காட்டி அவர் பேரை தன்னுடன் சேர்த்து பெருமாளை சசிபெருமாள் ஆக்கிக் கொண்டவர். அவரை நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் என்ற இயக்கத்துக்கு தலைவர் ஆக்கி நாட்டுக்குரிய பணிகளை கையில் எடுத்து வந்தோம்.

நான் சேர்ந்த புதிதில் எனது ஆளுமை, பேச்சுத் திறன் ஆனவை எல்லாம் அனைவர்க்கும் பிடித்துப் போக சசி பெருமாள் வீட்டருகே அதாவது இளம்பிள்ளையில் உள்ள மேட்டுக்காட்டில் முதல் முதலில் ஒரு கூட்டம் போட்டோம் அது முதல் சசி எனது இரசிகர் அது முதல் அந்த இயக்கத்தில் நிறைய தோழமை சேர்ந்த பயணம். அது காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம் என்றான போதும், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றான போதும்... ஆக 1983 முதல் இன்று வரை அந்த நட்பு வட்டம் பிரிந்து போகவில்லை. அ. தமிழரசு, ராஜாகிருஷ்ணன், ராமலிங்கம், செம்முனி அதன் பின் வந்த மணி, ஷேக்ஸ்பியர், அருணாச்சலம், கண்ணன் காசாம்பாள், ஜமுனா ராணி, பீபி ஜான், ராஜா  இப்படியே தலைவர்களும் தொண்டர்களும் வந்து கொண்டே போய்க் கொண்டே இருக்க... நானும் எனது சகோதர நண்பர் கொ.வேலாயுதமும் அப்படியே இயக்கம் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் எங்கள் நட்பு இன்னும் தொடர்ந்தபடியே இருப்பது  இயல்பாக இருக்கிறது.

நிறைய இடங்களில் முரண்பட்டு சண்டையிட்டு வார்த்தையாடி வந்திருக்கிறேன் என்றாலும் அது இயக்கம் இது குடும்பம் என நாங்கள் இருக்கிறோம். வேலாயுதம் எவரையும் புண்படுத்தும் நடைமுறையே தெரியாதவர். எனவே அனைவரையும் நம்புவார் பெரும்பாலும் ஏமாறுவார். நான் எவர் தவறு செய்த போதும் அப்படியே அப்போதே அதைச் சுட்டிக் காட்டி வெளுத்து வாங்கி விடுவேன்.

நானும் அவரும் முதல் சந்திப்பு என ஏற்பட்டதே ஒரு போட்டி வழியாகத்தான். அது குடும்பநலத்துறையின் போட்டியை நேரு யுவக்கேந்திரா இடத்தில் நடத்தினார்கள். நானும் ஒரு போட்டியாளன். பேச்சுப்போட்டி. ஏற்கெனவே முடிவு செய்தது போல் இரண்டு பெண்ணுக்கு கொடுத்தார்கள். எனக்கு கொடுக்க வேண்டிய பரிசு கொடுக்கப்படவில்லை உடனே அங்கே தகராறு. ராஜா அப்போது யாரெனவே தெரியாது அவர் என் பக்கம் சேர்ந்து கொண்டு ஏக களேபரம். ராஜா என்னுடைய பேச்சை இடது சாரியாக இருக்கிறது என்றே இவருக்கு மறுக்கப்பட்டது நியாயமில்லை என்று வேலாயுதத்திடமும் சொன்னார்.

அன்று அந்தப் பேச்சுப் போட்டியில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை ஆனால் அதை எல்லாம் விடப் பெரிய பரிசாக வேலாயுதம் என்ற நண்பர் கிடைத்தார் இது வரை அதாவது 1983களில் ஆரம்பித்த இந்த நட்பு 36 ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு  பரிசுக்கான விதையின் பரிசை அன்றே இயற்கை  எனக்காகக் கொடுத்திருந்தது அப்போதெல்லாம் எனது மூடக் கண்ணுக்கு புலப்படவே இல்லை.
Image result for marubadiyumpookkum.blogspot.com
எத்தனை முகாம்களில் நானும் அவருடம் ஒரே இடத்தில் உண்டு , உறங்கி ஒரு நல்ல தலைமைக்கேற்ற தளபதியாகி  அதை எல்லாம் சொல்ல முடியாது போங்க....ஒரே இரவுக்குள் போக வேண்டிய நிர்பந்தம் வந்தால் அப்படியே சென்று மறு நாள் காலைக்குள் திரும்பி விடும் முகாம் பாதிக்காத அவரின் நேர்மையக் கண்டு நான் வியந்து பார்த்திருக்கிறேன்.

ஒரு புத்தாண்டின்போது முகாமில் இருந்தபோது சரியாக 12.01 மணி நள்ளிரவில் அனைவரும் சேர்ந்திருக்கும்போது ஆர்வமிகுதியுடன் அன்றைய இளஞரான தணிகை எழிலன் ஹேப்பி நியூ இயர் எனக் கத்தியபோது கூட தலைமை என்ற முறையில் அவர் என்னை கடிந்து கொள்ளாதது எனக்கு இன்றும் கூட நினைவில் இருக்கிறது.

தளபதியாக இருந்தவன் நிறைய தருணங்களில் தலைமையேற்று நிறைய கூட்டங்களை நடத்தவும் நேரு யுவக் கேந்திராவின் நேர்முகத்தேர்வை நடத்திடவும் சம வாய்ப்புகள் ஏற்படச் செய்தவர்.

மிக்க பொறுமைசாலி அவருக்கு அவரது நண்பர் என்ற போர்வையில் துரோகம் செய்வாரைக்கூட மன்னிக்கும் குணம் கொண்டவர் நான் வெகுண்டு எழும்போதெல்லாம் ஏன் தம்பி, இறைவன் மேல் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்பார்.

அடுத்த ஒரு அண்ணா பாரம்பரியம் உண்டாகி இந்த நாட்டை திராவிட பாரம்பரியத்திடம் இருந்து கூட மீட்டு தியாக பாரம்பரியத்துடன் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என நிரூபிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. காரணம் எங்களிடம் கவர்ச்சி , பொருளாதாரம், ஒருவர்க்கு ஒரு பாதிப்பு ஏற்படும்போது அனைவரும் இணைந்து அவர்க்கு தக்க துணையாகி உறுதுணையாகாமை, ஊடகத்தின் பார்வைக்கு விளம்பரமாகாமை, துணிச்சலுடன் அனைவரும் சிறைக்கு சென்று போராட முனையாமை அதாவது சட்டமீறல் நடத்தி இயக்கத்தை வலுப்படுத்த முடியாமை போன்றவதாம்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
மற்றபடி அவரவர் கைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம்பணம் போட்டு போட்டு இயக்கம் நடத்த அவரவர் வீடுகள் ஒத்துழையாமை, அனைவர்க்கும் வேறு வேறு பொறுப்புகள் இருந்தமை இப்படி நிறைய சொல்லலாம். ஆனால் அத்தனையையும் மீறி நிறைய செய்தோம்.

பணி முகாம்கள், நிறைய வீடுகள் கட்டிக் கொடுத்தது, உறிஞ்சிக் குழிகள் அமைத்துக் கொடுத்தது பாதைகள் அமைத்தது, பள்ளிக் கல்லூரிகளில்  இலட்சக்கணக்கில் மரங்கள் நட்டு பராமரித்து பெரியவை ஆக்கியது, மது,போதை, எதிரான போராட்டஙக்ள், ஹோகனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டத்திற்காக முதன் முதலாக போராடியது, முதன் முதலாக எங்கள் இயக்கத்தினரும் பெண்களுமே சிறை சென்றது, காவிரி நீர் பட்டினிப் போராட்டங்களாக சேலம் மாவட்ட்ட ஆட்சியர் வளாகம் முன் போராடியது அப்ப்போது வெளிப்பட்ட எனது பேச்சை சிறு கையேடாக்கி நதி நீர் இணைப்புக்கான முயற்சியாக்கி நாடெங்கும் விநியோகித்தது

வேலாயுதம் பாடினால் பெண்கள் எல்லாம் அழ ஆரம்பித்து விடுவார்கள் அப்படி பாடுவார். அவர் குரல் பாட ஏற்றது. ஆனால் பேசுவதற்கு எனது குரல் என்றானது. எரி தீபங்கள் என்ற தலைப்புடன் ஒரு சிறு பாடல் புத்தகம், சில  ஒலிப்பேழைகள் அப்போதே போட்ட நினைவுகள்... அதில் ஒன்று:

நெருப்பு ஊர்வலங்கள் நாங்கள் சூரிய தோரணங்கள்
ஆலையில் தொழிலாளர்கள் வயல் வெளியில் விவசாய மக்கள், கடல் அலையில் மீனவர்கள்  உழைத்து உயிர் வாழும் தோழர்கள்....என்ற பொருள்பட இருக்கும். இப்போது மட்டுமல்ல எப்போதும் அவை பொருந்தும்

கைகளை நீட்டி உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.பாரதி பாடல்களை தூக்கிப் பிடிப்பார்கள்.  பாரத சமுதாயம் பாரத சமுதாயம் பாடல் அனைவர்க்கும் மனப்பாடமாக தெரியும் வண்ணம் அத்தனை முறை பாடியிருப்பார்கள்...

பீட்டர் அல்போன்ஸ், ஆடிட்டர் சுரேஷ்(மறைந்த), குட்டப்பட்டி நாராயணன்,  போன்ற  பிரபலங்கள் எல்லாம் அங்கே எனக்கு அறிமுகமானார்கள் க.ராசாராம், அவரது மூத்த சகோதரர் ஜெயசீலன், மற்றும் எனக்கு பேர் வாங்கிக் கொடுத்த முதல் முகாமுக்கு வந்த தெய்வத்திரு முத்து அருணகிரி ராஜ் எம்.டி அப்போது அவர் சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர். இப்படி நல்ல நல்ல நபர்கள்  உடன் நான் பணிபுரியக் காரணம் கோ.வேலாயுதம்.

மேலும் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.எ.ப் பாருக்கியை காண இருவரும் போவோம், அரசியல் நெடி இல்லாத போது அவர் எங்களை நல்லபடியாக வரவேற்பார் அப்படி இருக்கும்போது அவர் அப்புறம் பார்க்கலாம் என திருப்பி விடுவார் ஆனால் அதைக்கூட நாங்கள் பொறுத்துக் கொள்ளமல் காத்திருந்து பார்த்து விட்டே திரும்பிய அனுபவம் எல்லாம் அப்போது நிகழ்ந்தது.

ஒருவரை அது எவ்வளவு பெரியவராக இருந்தபோதும் எவருக்காவது உதவித் தேவைப்பட்டால் அவரை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கூடத் தயங்கவே மாட்டார். இருவரும் அனைவரையும் அனைத்தையும் அப்படியே நம்புவராக இருந்து நிறைய ஏமாந்த அனுபவமும் உண்டு.

நீண்ட நாட்கள் பேருந்தில் மட்டுமே பயணம். பெரிய பந்தா பேர்வழி எல்லாம் இல்லை. சின்னபையன் என்பவரை மதுவிலக்கு வேட்பாளராக சேலம் வடக்கு தொகுதியில் நிறுத்தி வெறும் எண்ணூற்று  பதினாறு வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றும் எங்கள் கொள்கையை கைவிடவில்லை. கையெழுத்து வேட்டையில் இறங்கி இலட்சக்கணக்கான கையொப்பங்கள் பெற்று அரசுக்கு அனுப்பி வைத்தோ. பயனில்லை அது வேறு.

சின்ன பையன், இல்லை சசிபெருமாள் இல்லை, பொறியாளர் மணி இல்லை. இப்படி எங்கள் தியாக திருவிளக்குகள் எல்லாம் இல்லை.

இப்போது வேலாயுதம் 70 வயதை மீறி நினைவுப் பிறழ்தல் அடிக்கடி நேர பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார் சென்னையில்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
அப்போது சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரும் இவருக்கு எழுதினார் என்றே நினைவும்
அச்சமில்லை, என்ற அச்சுப் பிரதி ஒன்றை நடத்தியதாக நினைவும். மேலும் மக்கள் கலைப்பண்பாட்டுக் கழகம், நடத்தி இன்குலாப் அறிமுகத்துடன் கவியரங்கம் நடத்தினோம். அதிலும் கவிதை அவருடன் செய்ய இவர் என்னைப் பணித்தார்.

அது ஒரு வசந்த காலம் தான்...கசந்த காலமாக அது எப்போதுமே இருக்காது...
அவருக்குள்ளும் எனக்குள்ளும் அவரும் நானும் இருந்த காலத்தை காலம் வெகுவாக விழுங்கி விட்டது நினைவிருப்பதும் இல்லாமல் போகாமல் இருக்க இப்போது பதிவு செய்திருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, October 3, 2019

மேட்டூர் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை: கவிஞர் தணிகை.

மேட்டூர் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை: கவிஞர் தணிகை.

Image result for மேட்டூர் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை:

கடந்த சனிக்கிழமை அங்கு சென்று வந்தேன். வாகனம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை எங்கு நடுவழியில் நிறுத்தி விட்டு நாம் கொண்டு செல்லும் உடலை வேறு வாகனம் பேசி அழைத்து செல்ல வேண்டுமோ என்னும் நிலையில் வாகனம் இருந்தது. அதை கீர் மாற்றினார் பாருங்கள் அந்த ஓட்டுனர் எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது

ஆனால் அந்த மனிதர் கவலைப்பட வேண்டும். கொண்டு சென்று சேர்த்து விடுவேன் என உறுதி அளித்தார். அது அவருக்கு வழக்கம் போலும்.

மேலும் அவரே வாகன ஓட்டுனர் அவரே நவீன எரிவாய் மேடையின் இயக்குனர் எல்லாம் அவரே

இரண்டு புகைப்படம், ரேஷன் கார்ட் அல்லது ஸ்மார்ட் கார்ட் ஒரு நகல், இறந்த மருத்துவமனையின் கடிதத்தில் ஒரு நகல் இப்போது ரூ. 4500க்கும் மேல் கட்டணம். அடுத்து அவர்கள் வாகனத்துக்கு 1500க்கும் மேல் வாங்குகிறார்கள். அதெல்லாம் கூட பரவாயில்லை
Image result for மேட்டூர் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை:
அந்தக் கட்டணம் தவிர நாம் கொண்டு சென்ற உடலை உள்ளே தள்ளுகையில் கற்பூரம் வைத்து உறவினரை பற்ற வைத்துவிட்டு, நூற்று ஒரு ரூபாய் காணிக்கை என்றும் அதை அடுத்து போட விருப்பம் உள்ளோர் எல்லாம் போடுங்கள் என அனைவரும் போட அதில் ஒர்  அள்ளு அள்ளிக் கொள்கிறார்.

மேலும் அதை அடுத்து ஓட்டுனருக்கு ஏதாவது கொடுங்கள் என அவரே வந்து நிற்கிறார் ஆனால் இதெல்லாம் அலுவலகத்தில் இருப்பவருக்குத் தெரியக்கூடாது என்றும் சொல்கிறார் என்னே ஒரு ஒளிவு மறைவு.

யாராவது ஒரு புண்ணியவான் அல்லது ஒரு நல்ல சேவை அமைப்பு ஒரு நல்ல வாகனத்தை ஸ்பான்சர் செய்ய வேண்டும் என எண்ணி இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். ஏன் எனில் காரியம் நல்ல காரியம்தான். எந்த தவறும் இல்லை.

ஆனால் இந்த கீழ் மட்டப்பணியாளர்கள் எவ்வளவு காசு பணம் கொடுத்தாலும் அதற்கு மேலும் பிச்சை எடுப்பவராகவே இருக்கிறார்களே அதை யார்தான் மாற்ற முடியும்...

அரசு ஊழியர்களிலும் அந்தக் கடை நிலை ஊழியர்கள் அதை விடக் குறைவான  ஊதியம் பெறுவாரிடமும் கூட தீபாவளி இனாம்.. துப்புரவு பணி செய்யும்போது இனாம்  பொங்கல் இனாம் இப்படி ஊரெல்லாம் வாங்கிக் கொள்ளும் பழக்கத்தை எந்நாள் விடுவது

அவர்களுக்கு தட்டாமல் அரசுப் பணியும் மேல் நிலையில் படித்த இளைஞர்க்கு எல்லாம் கிட்டாத பணியுமாக இருப்பதெல்லாம் இதை எழுதி பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

Wednesday, October 2, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 6. வேணு பார்த்திபன்: கவிஞர் தணிகை

 என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 6. வேணு பார்த்திபன்: கவிஞர் தணிகை

Image result for everest ever rest

1987 அல்லது 1988 ஆகவும் இருக்கலாம் 30 ஆண்டுக்கும் மேலாகிவிட்டது அவன் மறைந்து.வே.பார்த்திபன் ஆங்கிலத்தில் எழுதும்போது வி.பார்த்திபன் . இவனது தந்தை பெயர் வேணுகிருஷ்ணன். இவன் ஒருவன் தான் எனது பால்ய நண்பன். இரண்டாம் வகுப்பு வரை பள்ளியின் கீழ்க்கட்டடத்தில் சேர்ந்து படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது அவர்கள் ஊர்  திருச்சி பக்கம். தந்தை மால்கோ கம்பெனியில் டைப்பிஸ்ட் பணி. எனவே அந்தக் குடும்பம் எங்களது ஊரில் குடி இருந்தது. அவனது தாய் இன்னும் இருக்கிற ஒரு உத்தம மனுஷி.

அதன் பின் அவர்களுக்கு மால்கோ குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு அவர்கள் மால்கோஅலுவலர் குடியிருப்புப் பகுதிக்கு மாறிப் போனார்கள். இடைவெளி. அதன் பின் நான் இதே ஊரில் 5 ஆம் வகுப்பு வரை படித்து 6 ஆம் வகுப்பு வைத்தீஸ்வரா பள்ளியில் சேர்ந்தேன் . அவனும் அங்கே ஏதோ ஒரு வகுப்பில் அதே பள்ளியில் இருந்திருக்கிறான் என்றாலும் பெரிய நினைவுக்குரிய பதிவுகள் எல்லாம் இல்லை.

பள்ளி இறுதி ஆண்டு அதாவது பதினோராம் வகுப்பு நான் மஞ்சள் அல்லது பச்சை நிற கபடி அணிக்கு தலைவன். பள்ளியில் வைத்த ஆரம்ப கட்ட போட்டிகளில் வென்று இறுதி ஆட்டம் மட்டுமே பாக்கி. அதை வைக்கவே மாட்டேன் என உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்ன காரணத்தாலோ அடம் பிடித்து வந்தனர். செல்வன் உடற்கல்வி ஆசிரியர் இன்னும் இளமை குன்றாமல் இருக்கிறார் அவர் அப்போது பி.ப்பி.எட்... அவர் எங்களுடைய நச்சரிப்பு தாங்காமல் ஒரு நாள் மதிய வகுப்பு முடியும் நேரம் மாலையில் கடைசி பீரியட் 3.45 மணி முதல் 4.30க்குள் இறுதி ஆட்ட கபடி போட்டியை நடத்துகிறேன் என ஒரு கட்டாந்தரையில் சிறு சிறு கற்கள் முட்டிக் கொண்டிருக்கும்  இடத்தில் கோடுகள் போட வைத்து இங்கே ஆடுங்கடா என்று சொல்லி விட்டார்.

யார் டாஸ் வின் பண்ணியது என நினைவில்லை. எங்கள் பக்கம் சைட். அவர்கள் பக்கம் ரைட் ...முதல் ரைடராக பார்த்திபன் வருகிறான் நன்றாக வளர்ந்திருக்கிறான். நான் சிறுவனாக அதிக வளர்ச்சியின்றி அப்போது வரை அகத்தியன் என்றே புனை பெயருடன் அழைக்கப்பட்டு அதை மாற்றவே எல்லா விளையாட்டுகளிலும் தோற்றாலும் ஜெயித்தாலும் பங்கு கொள்ள ஆரம்பித்து காலையில் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வரிசையில் முதலாக நிற்பவன் படிப்படியாக பின்னேறி 3வதாகவோ 4வதாகவோ நிற்குமளவு வளர்ந்திருந்தேன். அது ஒரு பக்கம் போகட்டும்.

பார்த்திபன் ரைடு வந்தானா, நல்லா ஏற விட்டு ஒரே டைவ் கேட்ச். நான் தான். அவன் மூச்சை விட்டு விட்டான் எதிர்பாராத இந்த அதிர்ச்சி அவனை வீழ்த்தி விட்டது. அதிலிருந்து எப்படியோ விளையாடி அன்று போட்டியை வென்றுவிட்டோம். எனது வலது முழங்கையில் இன்னும் அந்த கட்டாந்தரைக் கற்கள் குத்தி கிழித்த காயத்தின் தழும்பு மறையாமல் பார்த்திபன் மறைந்தாலும் அவன் நினைவு போலவே பெரிதாகவே இருக்கிறது.

அது முதல் எங்கள் நட்பின் பயணம் ஆரம்பத்திருக்கும் போலும். அந்த ஆண்டு முடிந்தது. அவன் கல்லூரியில் சென்று புகுமுக வகுப்பு எழுதி தேறத் தவறி அதன் பின் அஞ்சல் வழிக் கல்வியில் இளங்கலை  வகுப்பு படித்து வந்தான்.

நான் எனது படிக்கப்போன இடத்தின் தாக்கத்தில்  ஏற்பட்ட போராட்டமான சூழலில் எல்லாம் அவன் தான் எனக்குப் பெரும் ஆறுதல். ஏன் எனில் அவர்கள் நேரடியாக வந்து பரீட்சை எழுதினால் போதும் என நிபந்தனை விதித்து விட்டார்கள். புத்திசாலியான குடும்பம் அல்லது புத்திசாலியாக நான் இருந்திருந்தால் அப்போதே தனி வகுப்பு ஏதாவது சேர்ந்து உருப்படியாக வழி பார்த்திருக்கலாம். இப்போது தோன்றுவது அப்போது தோன்றவில்லை ஒரே சோகம்...அவன் வீடு வரை வந்து நாங்கள் இருவரும் சேர்ந்து நடைப்பயிற்சிக்கு செல்வதும் அதன் பிறகு அவன் என்னை வந்து வீட்டில் விட்டு விட்டு அவன் வீட்டுக்கு செல்வதுமாக அந்தக் காலத்தை செலுத்தினோம்.

அவனைப்பற்றி நிறைய எழுத உண்டு. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே  எழுத முடியும் ஏன் எனில் படிக்கும் உங்களுக்கு அது பாரமாக இருந்து விடக்கூடும் என்பதற்காக.
Image result for ever rest
நான் சைவம் என்றால் அவனும் அதுமுதல் அசைவ உணவை எடுத்துக் கொள்ள மாட்டேன் எனக் கடைப்பிடிப்பான்.

இருவரும் இரண்டாம் ஆட்ட சினிமாவுக்கு நிறைய சென்றதில்லை ஆனாலும் நிறைய சினிமா சேர்ந்து பார்த்ததுண்டு. பல ஊர்களிலும்.

ஒரு முறை சைக்கிளில் சேலம் வரை சென்று வந்தோம்.அப்போதுதான் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட புதுப்பழக்கம்.  ஓமலூர் அருகே அவனது ரப்பர் செருப்பின் வார் அறுந்து போக அப்போது பள்ளி சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஒரு பின்னூக்கி என்னும் பின்னூசியை  அவனது செருப்பு வாரை இணைக்க கொடுத்ததும்

ஒசூருக்கு வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு ஒரு சிறு நிறுவனத்துக்கு சென்றுவிட்டு அதுவும் கிடைக்காத நிலையில் இருவரும் நெய்வேலி ரமேஸ் என்னும் ஜுனியர் அப்போது அங்கே சைட் எஞ்சினியராக இருக்கிறான் என அவனைப் பார்க்க என சென்று அவன் இடத்தில் தங்கி விட்டு திரும்பினோம்.

கையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு எவ்வளவு ஒரெ நாளில் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என சின்ன திருப்பதி வரை சென்று அங்கே ஒரு தோட்டத்தில் நடுவில் இருந்த வீட்டில் உணவு அங்கே அமர்ந்து உண்ண முடியுமா எனக் கேட்க அவரகளோ வீட்டைத் திறந்து வைத்து தண்ணீர் முதல் கொடுத்து உபசரித்த நினவெல்லாம் புதையலாக அப்படியே கிடக்கிறது. இப்போது அப்படி எல்லாம் போய்க் கேட்டால் வீட்டுக்குள் எல்லாம் எவருமே விட மாட்டார்கள்

நான் ஒரிஸ்ஸாவில் பயிற்சியில் இருக்கும்போது எனக்கும் எங்கள் வீட்டுக்கும் கடித பாலம் போட்டு தேவையானபோது எனது பிரதிநிதியாக வீட்டுக்கு சென்று பார்த்துக் கொண்டவன்.

 அவர்கள் வீட்டு மாமரமும், வாழை இலைகளும் தேவையான போதும் காய்த்தபோதும் எனது வீட்டில் காய்த்ததாகவும் இருப்பதாகவும் வேறுபாடின்றி கொடுத்து வந்தான்.

தனக்கு கிடைக்க வேண்டிய மால்கோ வாரிசு பணியை தனது தம்பிக்கு விட்டு விட்டு, நான் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன் என உறுதியோடு இருந்தவன் என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் மிக அன்பாக பழகியவன். எல்லா அநீதிகளையும் தட்டிக் கேட்பதில் என்னுடன் ஒத்துழைத்தவன். ஒரு முறை மால்கோ புத்தாண்டு விழாவில் எங்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்த கூப்பனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உணவு மறுக்கப்பட்டு இல்லை என்றானபோது கொதித்து எழுந்தவன், அவனது குடும்பத்து நூலக சந்தாதாரர் உரிமையில் எனக்கு நூல்கள் எடுக்க அவர்கள் மால்கோ மனமகிழ் மன்ற நூலகத்தில் அனுமதி பெற்றுத் தந்தவன் இப்படி சொல்ல சொல்ல இன்னும் இன்னும்...

 அவன் எந்த பணியும் கிடைக்காமல் ஒரு நிறுவனத்துக்கு சேவையாக ஊழியம் பார்த்து வந்தான். ஊதியமின்றி. அது சரியாக வராதபோது ஒரு மதுபானக் கடையில் ஊழியம் பார்க்கச் சென்றான் அப்போது அதை நான் அனுமதிக்கவில்லை. அதை விட்டு விட்டான். இப்போதோ அப்படி இருப்பது அரசு வேலை.

நான் திட்ட அலுவலராக மலைவாழ் மக்களுக்கு சில திட்டங்கள் தீட்டி பணியாற்றி வந்தபோது அவர்கள் வீட்டில் அல்லது அவனோ அந்தப் பணிகளில் அவனுக்கு வேலை கிடைக்குமா எனக் கேட்டார்கள்...நானோ அது சரியாக வராது என ஏனோ அதைப்பற்றி நினைக்கவும் மனமின்றி இல்லை என ஒரெயடியாக மறுத்துவிட்டேன். ஒரு வேளை அப்படி கொடுத்திருந்தால் ஏதாவது நற்பயன் விளைந்து அவன் என்னுடன் இருந்து அந்தப் பணிகளில் நானும் தொடர்ந்து செய்து வந்திருக்க முடியுமோ என்னவோ காலத்தின் கணக்கை யார்தான் அறிவது?

அவன் தந்தை அனுமதி பெற்றுத் தர சில முறை வீட்டில் தாய் முதற்கொண்டு சிலரை அந்த அலுமினியத் தொழிற்சாலையின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தது முதல் காலப்போக்கில் அதன் தலமை மேலாளர்  நாகராஜராவ் வரை நான் பழக அடிப்படைக் காரணமாக அவன் நட்பே இருந்தது என்றால் அது மிகையாகாது. பீஹார் நில அதிர்வு நடைபெற்றபோது அந்த மால்கோ பகுதிகளில் மக்கள் வளமையுடன் இருப்பதால் அவர்களிடம் நேரு யுவக்கேந்திராவுடன் இணைந்து பணியாற்றி தொகை மற்றும் துணிகளையும் அனுப்பும்போது சுழற்சங்க தலைவராகவும் இருந்த அந்த மால்கோ தலமை மேலாளரை தனியாக சந்திக்கும் வாய்ப்புகளையும் அவருடன் எனக்கு மென்முகமான நட்பையும் பெற்றேன். ஆனால் நல்லவர்கள் இந்த பூம்யில் அதிக காலம் இருப்பதில்லை என்பதற்கேற்ப அவரும் கொஞ்ச காலத்தில் ஒரு குடும்பப் பிரச்சனை காரணமாக காலமானது...

அந்த அலுமினியம் தொழிற்சாலை சென்று பார்த்த நினைவும் அப்போது அவர்கள் மாதிரிக்காக கொடுத்த ஒரு அலுமினியக் கட்டியும் அப்படியே உள்ளது. அவன் இல்லை. அந்தக் கம்பெனி அலுமினிய பார்கள், அலுமினியக் கம்பிகள், தூள்கள், தகடுகள் எல்லாம் தயாரித்த கம்பெனியும் இப்போது இல்லை வெறும் மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாலமலைக்குச் சென்று பணிபுரியும்போதும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் நடுவில் ஒரு வெண் தழும்பு உருவாக ஆரம்பித்திருந்தது அது தொழு நோயின் அறிகுறியோ என பயம் கொள்ள ஆரம்பம். அவனோ அதெல்லாம் உனக்கெல்லாம் நமக்கெல்லாம் வராது என்றான். எனது சகோதரி ஒருவர் பார்த்து இது என்ன எனக் கேட்கும்போது அது ஒரு சிறிய கொள்ளு பயிரளவு இருந்தது அப்படியே சிறிது சிறிதாக பெரிதாக சிவந்த தழும்பாக ஆரம்பித்தது பாலமலையில் சுயசமையல் செய்யும்போது நெருப்பு ஏதாவது பட்டிருக்கும் என பதில் சொன்னது தப்பாக...அதற்கு மருத்துவம் ஒரு சாமியாரம்மா சொல்ல அந்த இலைகளை எனக்கு கிடைக்கச் செய்தது பார்த்திபன் அம்மாதான். அவர்கள் வீட்டுப் பக்கம் இருந்த ஆட்டுப்பட்ட்யில் ஆட்டுப்பால் வாங்கி இந்த இலைகளைப் பறித்து அரைத்து இரண்டையும் கலந்து உள்ளே குடித்து வெளியே பூசிக் குளித்தேன் மாமிச உணவும் புளியும் தவிர்த்து தனியே இருந்து அதைப் போக்கினேன். அதன் பின் தெரிந்தது அது ஒரு வண்டு கடியாகவும் இருக்கலாம் என...அதற்கான இலைகளை வண்டுகடிக்கான இலை எனச் சிலர் கேட்டதும் உண்டு. பெருமருந்துக் கொடி என்றும் சொன்னார்கள்..

மேட்டூர் கை கொடுக்காத நிலையில் திருப்பூர் வேலைக்குப் போய் நிலைக்கப் பார்த்தான். நல்ல பேரும் வாங்கினான். ஆனால் இரு சக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்கையில் மரணம் அருகு வந்து கொண்டிருப்பதாக அவனது தாயிடம் சொல்லியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

1987 தான் நினைக்கிறேன் எனது திட்டப்பணிகளுக்காக ஒரு காமிரா வாங்க இளங்கோவன் மெக்கானிக்கல் தாரமங்களம் அப்போது சென்னை அம்பத்தூரில் பெஸ்ட் அன்ட் கிராம்ப்டனில் பெக்கான் வேர்ஸ் என்ற கம்பெனியில் பணி புரிந்து வர அவனைப் பார்த்துவிட்டு அவனுடன் சேர்ந்து மூர் மார்க்கெட் சென்று ஒரு மினோல்டா காமிரா வாங்கிக் கொண்டு ஒரு நாள் தங்கி வந்தேன்.

அப்படி காமிர வாங்கக் கிளம்பும்போது வீட்டிலிருந்து அப்போது எங்கள் வீட்டுக்கு கொளத்தூரில் இருந்து வந்திருந்த பாக்கியம் சித்தி, தாய், சகோதரி எல்லாமே எனை வழியனுப்ப வந்தார்கள்...100 மீட்டர் சென்றிருப்போம் வீட்டில் இருந்து...சில குட்டிகளை உடன் அழைத்துக் கொண்டு ஒரு தாய்ப்பூனை இடமிருந்து வலம் சென்றது (இதைப்ப் பற்றி எல்லாம் கண்ணதாசன் நன்றாக சொல்வார் தனது மனவாசம் வனவாசம் வாழ்வின் சரிதத்தில்)

மறுபடியும் வீடு வந்து சிறிது நீர் பருகிவிட்டு சிறிது நேரம் கழித்துப் பயணம் ஆரம்பித்தேன்.

பயணத்தை எண்ணியபடி நடத்தி எதற்காக சென்றோனோ அதை எல்லாம் செய்து முடித்து வந்து சேர்ந்தேன். பார்த்திபன் ஹோகனக்கல் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இற்ந்தான் என்ற செய்தியை எனக்குச் சொல்ல பெரிதும் முயன்றிருக்க அது என்னை அடையாதபோதும் எனது தாயும் சகோதர் ஒருவரும் அவனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்தனர். நான் வந்தவுடன் சென்றேன்.

திருப்பூரில் இருந்து நண்பர்களுடன் ஹோகனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று குளிக்க வந்த சம்பவம் இவன் உயிரைக் குடித்துள்ளது அது அவன் தவறி விழுந்ததால் நடந்ததா, இல்லை தள்ளி விடப்பட்டதால் நடந்ததா தற்கொலையா இல்லை கொலையா என்பதெல்லாம் தெரியவே இல்லை. கதை முடிந்தது.
Image result for ever rest
சில ஆண்டுகள் முடிந்தவரை தந்தைக்கு நினைவாஞ்சலி நவம்பரில் போடுவது போன்று இவனுக்கும் தினசரிகளில் கவிதை எழுதிய சில வரிகளுடன் போட்டேன். அதன் பின் நானும் விட்டு விட்டேன். அவர்கள் வீட்டில் அவனது போட்டோ திரை வைத்து மூடப்பட்டு தம்பி திருமணம் நடந்து குடும்பம் எல்லாம் ஆகி அவனது தந்தை மறைந்து தம்பியின் இரண்டு மகன்கள் எல்லாம் படித்து பணியில் சேர்ந்து மணப்பருவத்தில் தயாராகிவிட்டார்கள் அவனது தாய் முதுமையில் தங்கை சாந்தி குடும்பமும் தாய் மாமன் வீரபத்திரனையே மணந்து அவரும் பேரன் பேத்தி எடுத்துவிட்டார்.

அவனது போட்டோ ஒன்று ஒரு நாள் எனது வீட்டில் பூனை தட்டியதால் சாய்ந்து போக மறு நாளில் அவனது தந்தை இறந்த சேதியும் வந்து சேர்ந்தது.

அவனது இறந்த உடலை நான் பார்க்கவே இல்லை. ஆனால் அவனைப் போன்ற நண்பன் ஒருவனை நான் இனி பெறப்போவதே இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 29, 2019

மரகதப் பொண்ணு சபிதா மறைந்தாள்: கவிஞர் தணிகை

மரகதப் பொண்ணு சபிதா மறைந்தாள்: கவிஞர் தணிகை

நேற்று அதிகாலை 28.09.2019 அன்று  5.45 மணி அளவில் சபிதா என்னும் 33 வயதுடைய பெண் என வளராத ஒன்றுமறியாமல் ஒரு குழந்தையாகவே இருந்து வாய் பேச முடியாமல் வாழ்ந்த ஒரு எங்கள் குடும்பத்தில் இருந்து எனது மூத்த சகோதரிகளில் ஒருவரானவருக்கு பிறந்த 3 ஆம் பெண் இயற்கையோடு இணைந்து விட்டாள்.

அப்படி என்ன பெரிய விடயம் அப்படி என்ன சிறப்பு இதில் இதைப் பதிவு செய்யுமளவு என்கிறீர்களா?

இவள் ஒரு தெய்வப் பிறவி என்று சொல்வார்களே அது போல ஸ்பெஷல் சைல்ட். மன வளர்ச்சி குன்றியவர் என்று முழுதும் சொல்லி விட முடியாது. ஏன் எனில் இவளுக்கு நன்றாகப் புரியும் ஆனால் பேச வராது. கைகள் எல்லாம் பென்சில் கூடப் பிடிக்க வலுவில்லாதிருக்கும் எனவே எழுதவும் முடியாது. பற்கள் துருத்தியபடி முன்னும் பின்னுமாக இருக்கும். ஆனால் மிகவும் கூர்மையான அறிவுடையவளாகவே இருந்தாள்

பிறவியிலேயே வாய் பேசவும் வராது. இவற்றுக்கு எல்லாம் ஆதி முதல் அடிப்படைக் காரணம் எது எனில் இவள் 3 ஆம் குழந்தையாக தாயின் வயிற்றில் இருக்கும்போது இவளது தாய்க்கு கொடுக்கப்பட்ட தீவிரமான மாத்திரகைள் உண்மையில் சொல்லப்போனால் மூன்றாவதும் பெண்குழந்தையாக இருப்பதை ஒரு வாறாக யூகித்த இவளின் பெற்றோர் இவள் வேண்டாம் என்று காலங்கடந்த எடுத்த முடிவால் விளைந்த விளைவு. இவள் பிறவி இப்படி ஆகிப்போனது.

மற்றபடி எல்லாக் குழந்தைகளோடும் அதாவது அப்போது அவளை விடக் குறைவான வயதில் இருந்த எனது தங்கை மகள் , மகன், எனது மகன், மற்ற உறவினர்களின் குழந்தைகள் அங்கே தெருவில் உள்ள அண்டை அயலாரின் குழந்தைகள் யாவருடனும் நட்பு பாராட்டி வருவாள். குழந்தைகளை நேசிக்கத் தெரிந்தவளாகவே இருந்தாள்.

இவளை இதற்காகவே இருக்கும் பள்ளியிலும் ஒரு முறை சேர்த்தியும் பார்த்தேன் தாய்க்கு மகளை விட்டு இருக்க முடியாமல் இவளுக்கும் குடும்ப சூழல் மறக்க முடியாமல் இருக்க திரும்பவும் வீட்டுக்கே வந்து சேர்ந்தாள். தலையில் பேன்கள் எல்லாம் பிடித்த நிலையில்.

அது மட்டுமில்லாமல் இவளுக்கு தந்தை கிடையாது. இவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே இவளது தந்தை மாரடைப்பால்  அகால மரணமடைந்தார். இவளும் இவளது மூத்த சகோதரிகளும் இவளது தாயும் அவர்களது வாழ்வை எங்களோடு பிணைத்துக் கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது அவளது மூத்த சகோதரிகள் மணக் காலம் வரை. அதாவது 1985 முதல் 2006 எங்களது தாயின் மரணம் வரை அவர்கள் எங்களோடுதான் எங்களைச் சார்ந்துதான் வாழ்ந்து வந்தனர் என்றும் சொல்லலாம். சுமார் 20 ஆண்டுக்கும் மேல். அதன் பின் சுமார் பத்து ஆண்டுகள் அவர்கள் வாழ்வு வேறாகிப் போனது எங்கள் வேர் இடைவெளியானது.

அதன் பின் பல ஆண்டு ஓடியது...கிளிகள் இறகு முளைக்க கிளைகள் தாவ சமூக சாதிபேத வேற்றுமை பகைமை படர வாழ்வு எப்படி எப்படியோ தடம் மாறிப்போக பல ஆண்டு காலம் இவளது தாயின், சகோதரிகளின் அரவணைப்பில்  வாழ்ந்தாள்.

நேற்று முடிந்து போனாள். முன் சென்று வழி நடத்தினேன் இறுதிக் காரியங்களை எப்படி ஆரம்பத்தில் அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கினோமோ அப்படியே...அதற்குள் புரட்டாசி சனிக்கிழமை என்கிறார்கள், அமாவாசை கோவில் பூஜை என்கிறார்கள் விரைவாக எடுத்து விடுங்கள் என பார்ப்பனியக் கோவில் கொட்டம் .... அமைதியாக நிறைவாக நிதானமாக எல்லாம் செய்து முடித்து விட்டோம் ஒரு வாறாக.

மழை வேறு மாலையில்
அமைதி அறக்கட்டளையால் நடத்தப்படும் வாகனத்தின் மூலம் மேட்டூர் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று சில நிமிடங்களில் காரியத்தை கணக்காக முடித்தபின் வீடு வந்து சேர்ந்தோம்.

எங்கள் குடும்பம் சார்ந்த  மற்றொரு சகோதரியின் மருமகனான பழனிவேல் இவர் நல்லாசிரியர் விருது பெற்றும்  உதவிக் கல்வி அலுவலர் பணியை வேண்டாம் என மறுத்தும் தற்போதும் தலைமை ஆசிரியராக இருப்பவர் தாரமங்கலத்தில் இருந்து வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் அழகாக சிவபுராணம் தேவாரப் பாடல்களைப் பாடி  தேவையான இடங்களில் சேர்த்து கோர்த்து பிரார்த்தனையை நடத்திக் கொடுத்து இறுதி யாத்திரையை நிகழ்த்திட உதவி புரிந்தார் இதைக் குறிப்பிடா விட்டால் இந்தப் பதிவு நிறைவுபெறாது.

Thursday, September 26, 2019

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: கவிஞர் தணிகை

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: கவிஞர் தணிகை
Image result for nenjamundu nermaiyundu odu raja


சிவகார்த்திகேயன் தயாரித்த ஒரு நல்ல படம். இது ஜுன் 14 அன்று வெளியிடப்பட்டு காற்றோடு காற்றாக போய்விட்டது. கடுகு என்று ஒரு படம் வந்ததே உங்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது...அது புலிவேசம் என்ற கருத்துருக் கொண்டு வந்த படம் அது


அதே போல இதுவும் ஒரு நல்ல படம் ஆனால் அதை விட நல்ல கதை என்றே சொல்ல வேண்டும். பொது இடத்தில் ஒரு வன்முறை அல்லது ஒரு அசம்பாவிதம் அல்லது அநியாயம் நிகழும்போது எவருமே அதை தட்டிக் கேட்க வருவதில்லையே எல்லாமே செல்பி எடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சப்புக் கொட்டிக் கொண்டே போய் விடுகிறார்களே என்ற ஆதங்கத்தையும்

அப்படி நடக்கும் அநியாயத்தை வெளிபடுத்த முனையும் சமுதாய நலம் சார்ந்த மனிதரை எப்படி வீழ்த்தி விடுகிறார்கள் என்பதுவும் படம். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்.

ரியோ ராஜ் தொலைக்காட்சி தொடர் நடிகர் சத்தமில்லாமல் அடக்கமாக அலட்டல் இல்லாமல் நடிக்கிறோம் என்று தெரியாமல் நன்றாகவே நடித்திருக்கிறார் தனது நண்பராக‌ விக்னேஷ் காந்த் என்னும் நடிகருடன். இதில் ராதாரவி பத்திரிகை நிருபராக இருக்கும் தன் மகனை இழந்த அப்பா மற்றும் கதையை நகர்த்தும் முக்கிய பாத்திரம்.

மயில்சாமி, நாஞ்சில் சம்பத் போன்ற துணை பாத்திரங்களுடன்  விவேக் ப்ரசன்னா அடுத்த சத்யராஜாக வலம் வரலாம்.

இந்தப் படம் இன்றையத் தேவை ஆனால் இது அவ்வளவு சென்றடைந்ததா என்றே சொல்ல முடியாது.
தெரிந்தவர் பாருங்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அரசியலும் பணமும் விருதும்: கவிஞர் தணிகை

அரசியலும் பணமும் விருதும்: கவிஞர் தணிகை


Image result for gretta speech


குளோபல் கோல்கீப்பர் விருது பெறுபவர் நரேந்திரமோடி இந்தியப் பிரதமர் இது மெலிண்டா பில் கேட்ஸ் பவுண்டேசன் மூலம் வழங்கப்பட்டுள்ளது
இது அப்படி ஒன்றும் உலகப் புகழ் பெற்ற விருது என்றெல்லாம் சொல்லிவிடுவதற்கில்லை.

இப்போதெல்லாம் கூட்டம் சேர்ந்தபக்கம் தான் எல்லாம் கொடி பிடிக்கிறார்கள் எவரும் எதையுமே சிந்தித்துப் பார்ப்பதெல்லாம் இல்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நோபெல் பரிசுகள் நியாயமாக வழங்கப்படுவதில்லை என்றும் அப்படி வழங்கப்பட்டால் தனக்கு வழங்கப்பட வேண்டும் வழங்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசியுள்ளார் அந்த நோபெல் பரிசுக்கு ஆசைப்பட்டு.

அதுமட்டுமல்ல பராக் ஒபாமாவுக்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்று அவருக்கும் எனக்கும் தெரியாது என எள்ளி நகையாடியுள்ளார். உண்மையிலேயே சிதம்பர சொல்வது போல‌ இந்தியப் பிரதமரும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபரும் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்புகள்தாம்.

இருவருமே ஒருவரை ஒருவர் வெகுவாக புகழ்ந்தபடியே இருக்கின்றனர். இவரை  இந்தியாவின் தந்தை என்றும் இவரே இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும்  இவர்களை எல்லாம் கிரெட்டா தன்பெர்க் என்னும் 16 வயது சிறுமி உலக வெப்பமயமாதல் பற்றிய உச்சி மாநாட்டில் தோலுரித்துக் காட்டி நோபெல் பரிசுக்கு நிகரான பரிசை பெற்றுள்ளார்.

சீனாவை அடுத்து உள்ள இந்தியா மாபெரும் ஜனநாயக அரசு உலகளவில் இதற்கு வியாபார வாய்ப்புகள் அதிகம் உள்ளதை எல்லா பணக்கார நாடுகளும் உலகின் பெரும் பணக்காரர்களும் அறிவர் எனவே இந்தியவை ஆள்வார் எவர் என்றாலும் அவரை புகழ்ந்தே ஆகவேண்டும் அவருக்கு விசா கூட வழங்கக் கூடாது என மறுத்த தேசம் இப்படி போற்றிப் புகழ்கிறது மேலும் இவர்களே கலாம் போன்ற மாமனிதர்களை ஆடையை அவிழ்த்து விமான நிலையத்தில் சோதனை இட்டவர்கள் என்பதை எல்லாம் எவருமே மறந்து விட முடியாது.

அங்கே ட்ரம்புக்கு தேர்தல் இங்கே மோடிக்கு தேறுதல்...
எல்லாம் ஒரு தேவைக்காகவே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை 

Tuesday, September 24, 2019

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, உலக மகாப் புளுகு :கவிஞர் தணிகை.

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, உலக மகாப் புளுகு எது என்றால்
அது மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டில் இந்தியாவில் யாரும்
வெளியிடத்தில் கழிப்பதே இல்லை என்பதை அமெரிக்காவில் அறிவித்ததுதான்
இப்போது உலகுதான் சுருங்கிவிட்டதே...யார் எங்கே சொன்னால்தான் என்ன‌
தெரியாமலா போய்விடும்?

கலாம் 2020ல் இந்தியா ஒரு நல்லரசாக மாறி விடும் என்ற கனவுகாலத்தின் கனத்த பாதங்களின் முன்
கலைந்து சுக்கு நூறாகிப் போனது அதை உறுதிப்படுத்த  இன்னும் 3 மாதங்கள் மட்டுமே
பாக்கி.
Image result for elephant crushes small egg

Image result for universal lie
இந்நிலையில் ரஷியாவுக்கு கடன் 72000 கோடி கடன் கொடுக்குமளவு
இந்தியா வளர்ந்து விட்டதாக வெளிநாட்டில் படியளப்பதும்
இங்கே விவசாயம் நலிந்து போவதும், படித்த இளைஞர்க்கு வேலைவாய்ப்பே
இல்லாமல் போவதுமாக....

நடப்பதையும் நடந்ததையும் மட்டுமே சொல்லி இருக்கிறேன்
இதில் எனது சொந்தக் கருத்து எதுவுமே இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: தூய்மைப் பாரதத் திட்டத்தில் நோடல் ஆபிசராக பணிபுரிந்தவன்
என்ற உரிமையிலும், அனுபவத்திலும் இதை சொல்லி இருக்கிறேன்.

Thursday, September 19, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 5. அழகு என்கிற அழகிரிசாமி: கவிஞர் தணிகை.

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 5. அழகு என்கிற அழகிரிசாமி: கவிஞர் தணிகை.அழகிரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எனது விடுதி அறைத் தோழன். அவன் மேல் கட்டிலைத் தேர்வு செய்து கொண்டான். என்னுடையது கீழ்க் கட்டில்.பத்தாம் வகுப்பு படித்த இந்த சின்னப்பயல்களையும் எங்களோடு  அதாவது பதினோராம் வகுப்பு படித்த எங்களோடு காலம் இணைத்து விட்டது. அப்படி பத்தாம் வகுப்பு முடித்து எங்களுக்கு சமமாக படிக்க வந்தவர்களில் இந்த அழகிரி, இளங்கோவன் இப்படி இன்னும் பல பேர். இவனும் பாலுவும் சேர்ந்து சிறந்த கல்லூரியின் டேபுள் டென்னிஸ் ஆட்டக்காரர்கள். அப்போது காமன் ரூம் விளையாட்டு அறையின் பொறுப்பாளன் நான் . அது வேறு அவனுக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்  எப்போது வேண்டுமானாலும் ஆடுவதற்கு. ஆனாலும் அதிலும் நான் விதிமுறைகளின் படி நேரம் ஆகிவிட்டால் போங்கடா என வெளியில் துரத்திவிடுவேன்.

அழகிரியின் திருப்பூர் வீட்டுக்கு பல முறை சென்றிருக்கிறேன். அப்போது அவனது தந்தை ஒரு மில்லில் பணி புரிந்து வந்தார். அம்மா வீட்டில் வேஸ்ட் காட்டன் என்றும்  மற்ற வீட்டில் செய்யும் பணிகளையும் செய்து வந்தார். அவனது தந்தை, தம்பி சிவான் என்னும் சிவகுமார்....இவரை சமீபகாலத்தில் நடந்த  அழகிரியின் ஒரே மகன் திருமணத்தின்போதுதான் நீண்ட காலத்துக்கும் பின் பார்த்தேன் நெற்றியில் விபத்து நடந்த அடையாளமான பெரிய தலைக் கட்டுடன்.

தாத்தா, அப்பா, அம்மா, தம்பி ஏன் அவனது முறைப்பெண்ணாக இருந்து துணைவியாக வாழ்ந்துவரும் அவர்கள் குடும்பம் எல்லாமே எனக்கு அறிமுகமாகி மிகவும் அன்புடன் நடந்து கொண்டது இனிய நினைவுகளாகவே இன்றும்.

அழகிரியின்  மகன் பாலாஜியின் திருமணத்திற்கு நான் சென்று கலந்து கொண்டது நீண்ட காலம் கழித்து. எனவே அவனின் தாய் என்னை உச்சி மோந்து கன்னத்தில் கன்னம் வைத்து முத்தமிட்டு என்னை அன்பின் உச்சி எது என்று கொண்டு சென்று காண்பித்து விட்டார்கள் .அப்படிப்பட்ட தருணங்களுக்காகவே அந்த திருமணத்திற்கு சென்று வேலுசாமி வீட்டில் தங்கி இருந்து மறு நாள் முகூர்த்தம் முடிந்து அதன் பின் தான் வந்து சேர்ந்தேன் வீட்டுக்கு எனது வழக்கத்துக்கும் மாறாக. மேலும் அப்போதைய அன்பின் பூரிப்பினால் நினைவு மறதி வந்து எனது செல்பேசியை மின்னூட்டம் செய்ய வைத்ததை அப்படியே கல்லூரியில் விட்டு விட்டு சென்றதும் திருமணம் முடிந்ததும் உடனே கல்லூரிக்கு வந்து அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரவேண்டி நேர்ந்ததும் இன்னும் நினைவகலாமல் உள்ளது.

அழகிரியின் மருமகளும் ஒரு முதுகலை பல் மருத்துவம் படித்த பல் மருத்துவர்.

அழகிரியின் தாய் சேமித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் முதன் முதலாக அழகிரி வெளிநாட்டுக்குப் போனதாக அவனே சொன்னான். அந்த இராசிதானோ என்னவோ அவன் ஆண்டில் பாதி நாட்களை சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் வணிகம், தொழில் என சுற்றி வருகிறான்.

அதற்கு எல்லாம் முன்னால் அவன் எல்.ஜி.பி  உரிமையாளர் ஒருவருக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்தபோதும் அங்கே சென்று அவனது பணியிடத்தில் அவனை சந்தித்து வந்திருக்கிறேன்.

திருப்பூரும் பொள்ளாச்சியும் அருகே என்பதால் அவனைத் தேடி அவன் குடும்பத்தினர் அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது எங்கள் விடுதிக்கு வந்து அவனை பார்த்துச் செல்வார்கள். எங்கள் வீட்டில் இருந்து எவரும் வருவதான சூழல் இல்லை. எனவே அவனது குடும்பம் கூட எனது குடும்பமாகவே இருந்தது.

அவனது இளமைக் கால முறைப்பெண்ணுடனான மணத்திற்கு நான் மட்டுமே நண்பர் என்ற பிரதிநித்துவத்தில் கூட இருந்து சிறப்பு செய்தேன். அதே போல் அவனது மகனது திருமணத்திலும் நான் கலந்து கொண்டிருந்தது இன்னும் வெகுசிறப்பு.

அவனும் நானும் திருப்பூர் செல்லும்போது சில சினிமாக்கள் பார்த்ததுண்டு அப்படிப் பார்த்ததில் இன்னும் மறக்க முடியாத படம் தமிழ் மொழிபெயர்ப்பில் "பேய்க்கார்" எனப்படும்" கார்" என்னும்  ஆங்கிலப்படம் மறக்க முடியாததாயிருக்கிறது.

அவன் காங்கேயத்தில் ஒரு விசைத்தறிக்கான லெதர் உபரிப் பொருட்கள் தயாரிக்கும் அகியோடெக்ஸ் என்னும் கம்பெனியை நண்பர்களை பங்குதாரராக்கி நடத்தி வந்து அப்போது தனிக்குடித்தனம் நடத்தி வந்தான். அப்போதும் நான் அங்கு சென்று வந்தேன் அப்போது அவனது குழந்தையாயிருந்த மகன் பாலாஜியை ஸ்கூட்டரில் முன்னும் என்னை பேருந்து நிலையத்துக்கு கொண்டு விட பின் இருக்கையிலும் ஓட்டி வந்தது இன்னும் நினைவில்...

எப்போதும்  நகைச்சுவை உணர்வுடன் கேலிப்பேச்சு பேசிக் கொண்டு இன்னும் குழந்தை மனப்பான்மையுடன் அவன் இன்னும் வாழ்ந்து வந்தாலும் இன்று அவன் தாத்தா ஆகப்போகிறான் ஏற்கெனவே முழுச்சொட்டை விழுந்த தாத்தா அவன். அவனது தாய் கூப்பிடுவது போல ஒரு நாள் கூப்பிட்டு ஏதோ எழுதப்போய் இப்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை என்பதை அவனது இடவெளி ஏற்படுத்தி இருந்தது.

அப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை திருப்பூர் சென்று அந்த அந்த காலக் கட்டத்திற்குரிய பனியன் டிசைன்களை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து அதை அணிந்து கொண்டு பார்ப்பவர்களை எல்லாம் மிரள வைத்த காலம் இளமையில் உண்டு.இவனுக்கும் எனக்கும் பெரிய ஒட்டுதல் இல்லாதது போன்ற வெளித் தெரியாத அளவிலேயே நட்பு இருந்த போதும் நான் சொல்லி விட்டால் அவன் கேட்பான் என்று அவன் தந்தை சொல்லியதும் நான் குடித்துவிட்டு கீழே கிடக்கும் குடிகாரர் பற்றி திட்டி எழுதியபோது அதனால் தான் உன்னுடன் பேசவே பயம் கொள்கிறேன் என்று பிதற்றியவன்

அவனும் நானும் ஒரே அறையின் பங்காளர்களாக இருந்தபோதே அவனுடைய சட்டை போன்றவற்றை நான் போட்டுக் கொண்டு கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களும் உண்டு.
 அதில் ஒரு சில்க் சட்டை போன்றது சிவப்பு நிறப் பின்ணணியில் சிறு பிறை போன்ற கறுப்புக் கோடுகளுடன் இருந்த சட்டை இன்னும் என் நினைவில் உள்ளது ஆண்டுகள்  40 ஆகும் தருவாயில் கூட...

நினைவுகள் மறக்கவில்லை அதில் பொலியும் இனிமையும் மாறவில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, September 17, 2019

மறுபடியும் புதர் அடியில் கிடந்த மூக்குக் கண்ணாடிப் பெட்டி கிடைத்துவிட்டது: கவிஞர் தணிகை

மறுபடியும் புதர் அடியில் கிடந்த மூக்குக் கண்ணாடிப் பெட்டி கிடைத்துவிட்டது: கவிஞர் தணிகை

Image result for again I got my spectacles with it box in muddy bushes in yesterday rain


நேற்றே கிடைக்கும் கிடைக்கும் என்ற வார்த்தை வந்து கொண்டுதான் இருந்தது. எனினும் நான் மிக்க கோபமும் விரக்தியிலும் இருந்ததால் நானே எனது கவனக் குறைவால் அது கீழே விழுந்ததை கவனிக்காது,அதை சரியான முறையில் வைக்காமல் தவறவிட்டது என்றாலும் கூட எனக்கு வழிகாட்டும் சக்தியை நான் கோபித்து அது சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.கிடைத்தாலும் கிடைக்கட்டும் கிடைக்காவிட்டாலும் போகட்டும் என வெறுப்பில் நம்பாமல் இருந்தேன்.

ஆனால் சரியாக அது தவறிப்போன 24 மணி நேரமுமே நான் என்ன செயலில் ஈடுபட்டுக் கிடந்த போதிலும் ஒரு ஓரத்தில் மெலியதாக இந்த எண்ணமும் ஓடாமல் இல்லை.

கனி கிடைக்காத ஆத்திரத்தில் பெற்றோரை கோபித்துக் கொண்ட குமரன் முருகன் பழநி சென்று நின்றதாக சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ அதே கோபம் அப்படியே இருக்கிறது. என்னதான் தியானத்தில் பெரிதாக ஈடுபட்டு பயிற்சியாளராக இருந்தபோதும் எனக்கு கோபத்தை இன்னும் சரியாக விலக்கவே தெரியாமல் வாழ்ந்து வருகிறேன் என்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

நேற்று அந்த மழை ஈரத்திலும் தேடிக்கொண்டிருந்த போது: சீர்காழி குரலில் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றார் ஞானத் தங்கமே என்ற பாடலின் வரி வந்து கொண்டிருந்தது. நான் அந்த புதர் சேறுஞ்சகதியுமான இடத்தை விட்டு மறுபடியும் அரை கிலோமீட்டருக்கும் மேல் சென்று அந்த மழை இரவில் தேடி முடித்துவிட்டு இந்தப் புதரிலும் டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு ஏமாந்தே வந்தேன்.

அப்போதெல்லாம் முனியப்பன் கோவிலில் நாம் மறந்து வைத்து விட்டு வரும் குடை,குளிர் கண்ணாடி  இப்படி என்ன பொருள் அங்கு வைத்தாலும் மறு நாள் போய்ப் பார்க்கும்போதும் அப்படியே வைத்த இடத்தில் இருக்கும் அப்படி மறந்து வைத்துவிட்ட பொருள்களை பல முறை நான் மறுபடியும் சென்று எடுத்துக் கொண்டது உண்டு.

அதே போல இன்றும் அமைந்தது. கல்லூரி முடிந்ததும் டாக்டர் குமார் வாருங்கள் போகலாம் என்று என்னைக் கொண்டு வந்து குரங்குச் சாவடி பேருந்து நிலையம் அருகே காரில் இருந்து இறக்கி விட்டபோது மணி 3.52. அதன் பின் பேருந்தில் ஏறி வீடு வந்த போது மணி 4.58. குளித்து முடித்து வெளிச்சத்திலேயே நடைப்பயிற்சிக்கு சென்ற போது மணி 5.20மாலை.

அதே இடம் சென்று தேடினேன். முதற்கட்ட தேடலில் தென்படவில்லை. பின் எப்படி நேற்று வீடு வரும்போது வந்தேனோ அதே போல சேற்று நீரை விட்டு விட்டு புதர் பக்கம் எப்படி நான் கால் வைத்து வந்தேனோ அதே போலத் தேடினேன் சில அடிகளிலேயே செடிகளின் புதர் அடியில் மண் கலரில் உள்ள எனது மூக்குக் கண்ணாடி பெட்டி அப்படியே கிடந்தது. எடுத்துக் கொண்டேன்.

இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்றும் நான் நம்பாமல் மீறிச் செயல்படும்போது அதன் வேதனை அனுபவங்களும் அதன் பின்னும் அந்த சக்தி எப்படி வழிகாட்டுகிறதோ அப்படியே நடக்கிறது அவை என்னுடைய போக்கில் போவதல்ல.
Image result for again I got my spectacles with it box
மறுபடியும் அதுவே வெல்கிறது. எனது மீறலுக்குரிய தண்டனையாக அனுபவித்த வேதனை பக்குவமாக.

நான் தோற்றவனாகவே நிற்கிறேன். ஆனால் தோற்பதில் உள்ள சுகம் அனுபவித்து வேதனைக்குப் பதிலாக வேள்வியை இன்னும் அதிகம் உறுதியாக மேற்கொள்ள வேண்டிய பாதையில் போக வேண்டிய படிகளில் மறுபடியும் ஒன்றை ஏறுபவனாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, September 16, 2019

தெய்வத்தின் குரலா ஆன்மாவின் குரலா: கவிஞர் தணிகை

தெய்வத்தின் குரலா ஆன்மாவின் குரலா: கவிஞர் தணிகை
Image result for meditation side effects


சகுனமும், நாள் கிழமைக் கணக்கீடுகளும் என்னைப் பொறுத்தவரை சரியாகவே செயல்படுகின்றன. இதை நான் ஏற்றுக் கொண்டதை சொல்ல ஒளிக்க அவசியமே இல்லை. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரைப் படித்தபின்னும் எனக்கு  நேர்ந்த இவற்றை பெரியார் பிறந்த நாளில் சொல்லக் கூச்சப்பட்டாலும் உண்மை உண்மைதானே.

நேற்று கல்லூரி முடிந்தவுடன் பயணம் முடித்து வீடு சேர்ந்தேன் துணைவியாரின் மனைவி தனது கூந்தலை அவிழ்த்து முடிந்து கொண்டிருந்தார் அதுவே நான் பார்த்த காட்சி. அது எனக்கு சரியாகப் படவில்லை

அடுத்து குளித்து முடித்து சுமார் மாலை 6 மணி நடைப்பயிற்சி புறப்பட்டேன் தினமும் மாலையில் வரும் மழை. இன்றும் வானெங்கும் கருக்கல் மேகம் திரண்டிருந்தது எனக்கு அமெரிக்கன் படமான இன்டிபெண்டன்ஸ் படத்தில் மேகம் திரண்டு செல்வதைப் பார்ப்பது போல் இருந்தது.

வேண்டாண்டா, வேண்டாண்டா என இரு முறை ஒரே வாசகமாய் ஒலியற்ற குரலின் மென்மையான எச்சரிக்கை. மீறி நடந்தேன் உடல் நலம் தேவைப்படுவது மிகவும் முக்கியமாகப் பட..

வழியில் கோம்பூரான்காட்டில் இரண்டு நண்பர்கள் நீங்கள் அந்தப் பாலத்தருகே செல்வதற்குள் மழை வந்து விடும் என்றார்கள். அப்படியே ஆரம்பித்தது மழை. கருப்பு ரெட்டியூர் வரை மட்டுமே செல்ல முடிந்தது கையில் குடையும் , அத்தியாவசிய கல்லூரி கைபேசியும், சிறு துண்டும், கைடார்ச் லைட்டும், அத்துடன் பூச்சி கண்ணில் அடிக்காதிருக்க ஒரு பவர் மூக்குக் கண்ணாடியுடன் பெட்டியில் இப்படி இத்தனை தேவைப்படுகிறது ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கூட...

ஒரு டைலர் கடை முன் புறம் எவருமில்லை. நானும் அஜித் என்னும் இளைஞர் தெர்மல் பணிக்குச் செல்பவர் எதிர் வீட்டுக்காரர் இருவரும் தஞ்சம் அடைந்தோம் அரை மணி நேரத்துக்க்கும் மேல் நல்ல மழைப்பொலிவு.

சற்று குறைய பொறுமை இழந்து குடை இருக்கும் தைரியத்தில் வீடு திரும்பலாம் என முடிவெடுத்து எதையும் மறக்காமல் எடுத்துக் கொண்டேனா எனப் பார்த்துவிட்டு புறப்பட்டேன்.

கண்ணன் வீட்டில் சற்று நிற்கலாமா இல்லை அந்தப் பெரியவர் வீட்டில் சற்று இடைவெளி கொடுக்கலாமா என்று கேட்டபடியே பாலம், அதன் பின் கோம்பூரான்காடு என நடந்து கொண்டே இருந்தேன்.

அர்ஜுனன்...கிருஷ்ணன் மட்டி மண் கம்பெனி அருகே ஒரே சேறுஞ்சகதிய்யும் அதில் குட்டையாக மழை நீர் தேக்கம், மேல் மழை. குடை கையில் இடையே ஒரு இடத்தில் சிறு நீர் கழிப்பு...அப்படியே அந்த நீர்க்குட்டையை தாண்ட வழியின்றி கம்பெனி சுவர் உள்ள புதர் ஓரம் செல்ல  முயற்சி செய்து வெளியே தாண்டி வரும்போது பார்த்தால் பாக்கெட்டில் மூக்குக் கண்ணாடிப் பெட்டியை கால் சட்டைப் பையில் சிறு துண்டுடன் வைக்க முடியாமல் செருகி வைத்திருந்ததைக் காணவில்லை. எங்கே விழுந்ததோ...தெரியவில்லை.

மனம் அடித்துக் கொண்டது..உடனே அந்த குரல்... பழி வாங்கியது போல வேண்டான்னு சொன்னோம் கேட்டியா...என..

பதறி அடித்தபடி டார்ச்சை அடித்துக் கொண்டு வந்த வழியே அந்தப் பாலம் வரை நின்று சிறு நீர் கழித்த இடம் எது எனத் தேடிக்கொண்டும், ஒரு வேளை பிரபு கடையில் சாக்ஸை கழட்டி ஷூவுக்குள் இருந்த நீரை சாக்ஸைக் கழட்டி பிழிந்த இடத்தில் ஏதாவது வைத்து இருக்கிறோமா, என்று இப்படி எல்லாம் மனம் அடித்துக் கொள்ள சென்று பார்த்தேன். அது எங்கும் காணப்படவில்லை.

மறுபடியும் சேறும் சகதியும் புதருமான பகுதியில் எங்காவது கிடக்குமென்ற நம்பிக்கையில் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை. அதை எவரும் எடுத்தாலும் அவருக்கு அது பெரும்பயனாக இருக்கப் போவதில்லை என்பது உண்மைதான் என்றாலும் பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பெறுமான ஒரு அத்தியாவசியப் பொருளை தொலைத்தது எனது கவனக் குறைவால் என்பதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை

என்றாலும் இது  வரை வாழ்வில் எவ்வளவு இழந்திருக்கிறேன், எவ்வளவு அரிய உயிர்களை இழந்திருக்கிறேன் எத்தனை பொருள்களை இது போல் இழந்திருக்கிறேன், மேலும் இந்தக் கண்ணாடி எங்கே எங்கே என்று விசாரித்து எப்படி எப்படிஎல்லாம் செய்ய வேண்டும் என முயன்று செய்து விலை கொடுத்து வாங்கி இப்படி வீணாக போனதே என்ற கவலையை நிலையாமையை சொல்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நால் எல்லாமே போவதுதானே எனத் தேற்றிக் கொள்கிறேன்.

போனது எல்லாம் போனதுதானே..

வருவது எல்லாம் வருவதுதானே...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for meditation side effects
மறுபடியும் என்னை விட எனது நானை விட அந்த வார்த்தைகளே பிரதானமாகி நிரூபித்து விட்டது.... 

என் நட்பில் நனி சிறந்தவர்கள்: 4. சி.பி.கிரிதரன் எலக்ட்ரிகல்

என் நட்பில் நனி சிறந்தவர்கள்: 4. சி.பி.கிரிதரன் எலக்ட்ரிகல்


Image result for nachimuthu polytechnic college


 எப்போதும் குறு நகை தவழும் முகமும் கலகல என சிரிக்கும் குணமும் எப்போதும் கிரிதரனுக்குச் சொந்தம்.

.    1978ல் நாங்கள் அறிமுகமானபோதே  கிரிதரனுக்கு தந்தை கிடையாது. தங்கை உண்டு. தாயுடன் உக்கடத்திலிருந்து ஒரு வலுவான பரிந்துரையின் பேரில் கல்லூரி சேர்ந்து மின்னியலை படித்தவன். எனக்கும் அவனுக்கும் எப்படி நட்பு உருவானது என்றே தெரியவில்லை .ஆனால் அது 1978 முதலே ஆரம்பித்து விட்டது.

அவனுக்கு என்னிடம் என்ன அப்படி ஒரு ஈர்ப்பு என்பதோ எனக்கு அவனிடம் என்ன ஒரு பிடிப்பு என்பதோ வார்த்தையில் சொன்னால் முடியாது.
அந்தக் காலத்திலேயே ஒரு வெள்ளை வேட்டையை மடித்துக் கட்டிக் கொள்வான், மேலே காக்கி சட்டையை போட்டுக் கொண்டு இருப்பான். அந்தக் காட்சி இன்னும் என்னுள் அப்படியே இருக்கிறது.

அவன் தான் என்னை இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துச் செல்லப் பழக்கியவன் என்று சொல்லலாம். அவனுடன் பொள்ளாச்சியில் ஊருக்குள் இருந்த ஒரு பெயர் மறந்து போன தியேட்டரில் மலையாள படங்கள் அதிகம் பார்த்தோம். ஓமன், சீமா நடித்தது, ஜெயன் நடித்தது  ஜெயப்ரதா நடித்தது கமல் நடித்த ஈட்டா என்னும் படம் ஈட்டா என்றால் மூங்கிலாம்.

பெரும்பாலும் அவனே அந்த டிக்கட் செலவை எல்லாம் ஏற்றுக் கொண்தாக நினைவு. பகலில் விடுமுறை நாளில் மேட்னி பார்த்துவிட்டு பெயர் மறந்து போன ஒரு பிரபலமான கடையில் தேங்காய் பன்னும், ஏலக்காய் தேநீரும் உண்டது இன்னும் மணமாக இருக்கிறது.அதுதான் அங்கே அதிகம் அனைவர்க்கும் பிடித்த வகை உணவு. கல்லூரி மாணவர் அனைவருமே அங்கு அதையே விரும்பு உண்ணச் செல்வர்.

அவன் நல்ல பொறுப்புடன் இருப்பான். அவனுடைய குடும்ப கஷ்டத்தை வெளியே எவரிடமும் காண்பிக்கவே மாட்டான். ஏன் என்னிடம் கூட சொன்னதில்லை அப்போது அவன் அப்படி நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவன் அறை உள் தாளிடப்பட்டு இருக்கும் என்ன நாம் முயற்சி செய்து தட்டினாலும் காட்டுக் கத்து கத்தினாலும் கிரிதரா கிரிதரா என உருகினாலும் கதவை பிடிவாதமாகத் திறக்கவே மாட்டான். அப்படி அவன் கதவைத் திறக்காமல் நான் காய்ந்ததெல்லாம் உண்டு.

அவனது சொந்தக்கார விரிவுரையாளர் நாச்சி முத்து என  நினைக்கிறேன் எங்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்க ஒராண்டு ஒரு பாடத்துக்கு வந்து சுருக்கமாக விரிவுரை செய்த நினைவு. அவனின் சொந்தக்காரப் பெண் துளஸிமணி கூட அங்கேயே வந்து படிக்க சேர்ந்தது.

எப்படியோ படிப்பு முடித்து எங்களுடைய செட்டில் முதன் முதலாக குவெய்த் சென்று பணியில் அமர்ந்தவன் அவன் தான். அவனுடைய கடிதம் வரும்போதெல்லாம் மனம் மிகவும் மகிழும். அப்போதெல்லாம் தொலைத் தொடர்புதான் அவ்வளவு இல்லையே. அந்தக் கடிதத் தொடர்பு கொஞ்ச நாள் இருந்தது அதன் பின் என் போதாத நேரம் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமாடா எனக் கேட்டது முதல் நின்று போயிருந்தது.

அதன் பின் வெகு காலம் கழித்து சிங்கப்பூரில் ஹனீபா டெக்ஸ்டைல்ஸ் மூலம் நிர்வாக அலுவலர் பணிக்கு அவர்கள் அழைத்து என்னிடம் பாஸ்போட் இருந்தும் தாய் தனியாக இருப்பவரை ஒருவர் மட்டுமே அப்போது என்னிடம் இருந்தவரை பிரிந்து செல்லக் கூடாது என அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் நான் பாதை மாறிப்போனதெல்லாம் வேறு.
Image result for nachimuthu polytechnic college
முதலாண்டு அவனுடன் வள்ளியப்பன் டெக்ஸ்டைல்ஸ், மேட்டுப்பாளையச் செல்வன் மெக்கானிக்கல்  மற்றும் ஒரு நண்பர் பெயர் மறந்துபோனது ஆகியோர் அவனது அறைப் பங்காளர்கள். அவர்கள்  ஒரு முறை எல்லாம் சேர்ந்து என்னைப் பிடிக்க முயற்சிக்க அத்தனை பேரையும் வலுவாக இடித்துத் தள்ளி என்னை எனது பலத்தை நிரூபித்து ஜெயித்த நிகழ்வெல்லாம் அவனுடைய அறையில் நடந்த உண்மைக்கதை அதை எல்லாம் சொல்லில் சொல்லி சிரிப்பார்கள் மகிழ்வில் மாய்வார்கள்

அதை அடுத்து அவனும் நானும் ஒரு முறை மெஸ்ஸில் சாப்பிடாமல் அனைத்து மாணவர்களும் ஸ்ட்ரைக் செய்த இரவு இருவரும் மட்டும் சென்று சாப்பிட்டு விட்டு வந்த போது எங்கள் இருவரையும் அனைத்து சீனியர் மாணவர்களும் வளைத்துக் கொண்டு எதிர்த்துக் கேள்விகள் கேட்டபோது எங்களிடம் வீட்டில் இருந்து கொடுத்த காசு பணம் ஏதும் இல்லை. பசிச்சிது...போய் சாப்பிட்டோம்...என நான் பதில் சொன்னதைக் கேட்ட சீனியர் மாணவர்கள் ஒன்றும் செய்யாமல் சரி விடுங்கள் அவர்கள் போகட்டும் என விட்டு விட்டார்கள் ரூமுக்கு. அதை  கிரி எப்போதும் உனக்கு எவ்வளவு துணிச்சல் எத்தனை பேர் இருந்த போதும் கொஞ்சம் கூட சீனியர் ஜூனியர் பயமில்லாமல் எப்படி பேசினாய் ... என்பான்...
Image result for nachimuthu polytechnic college
அன்பு கிரிதரா இப்போது நீ எப்படி இருக்கிறாய்...தாய், தங்கை நலமா, உனது குடும்பம் எப்படி, நீ எங்கே இருக்கிறாய் என்றெல்லாம் கேட்க எப்போதும் ஆவலாய் இருக்கும் உன் அன்பு தணி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 15, 2019

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு: கவிஞர் தணிகை

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு: கவிஞர் தணிகை


Image result for anna birthday chief minister of tamil nadu

இன்னும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கூடிய மக்கள் வெள்ளத்தின் உலக  சாதனையை எவராலும் விஞ்ச முடியவில்லை.  40 ஆண்டுகள் ஆனபின்னும் பிறந்தாலும் இவர் போல என பேர் சொல்ல வேண்டும் இவர் தான் என ஊர் சொல்ல வேண்டும். அண்ணா இந்த சாதனைகளுக்கெல்லாம் முற்றிலும் தகுதியனவர்.பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் ஆன பின் வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு வந்து ஒரு மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்.1967/68 அதன் புகைப்படம் இன்றும்  அதன் முக்கிய இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் நாம் அந்தக் காலத்துக்கு செல்ல முடிகிறது.

  அடியேன் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அந்த இடத்திற்கு தொடர்புடையவனாகி இருக்கிறேன்.

 முதன் முதலாக அந்த அரசு மருத்துவ மனைக்கு சென்ற போது அதன்   தலைமை மருத்துவர் வேண்டா விருப்பாக இருந்தார். காரணம் சேவை செய்ய சென்றவர்கள் சரியாக செயல்படவில்லை என்பதே.

அதை சீர் செய்யவே வந்திருக்கிறேன் எனச் சொல்லி இந்த கடந்த  3 ஆண்டு காலத்தில் மிகவும் சீரிய முயற்சியுடன் இயங்கி வேண்டா விருப்பாக இருந்த அதே தலைமை மருத்துவரால் மெச்சி மகிழ்ந்து வாரத்தில் இரு நாள் இயங்கி வந்த பல் மருத்துவத்திற்கான பிரிவை அவருடைய உதவி மற்றும் இணை சுகாதார இயக்குனரகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தினமும் இயங்கும் வண்ணம் மாற்றி அமைத்து சேவைகள் சென்று சேர ஒரு கருவியாக இருந்திருக்கிறேன்

இதற்காக இணை சுகாதார இயக்குனரகம் ஆணை வழங்கிட வேம்படிதாள தலமை மருத்துவரும் எங்கள் கல்லூரியின் முதல்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு மேற்கொண்டு இருக்கின்றனர். எங்கள் கல்லூரி இதற்கான அத்துணை பொருளாதார உதவிகளையும் செய்ய அரசு அதற்குண்டான பங்களிப்பை செய்து வர இரு கை ஓசையாகி இருக்கிறது இங்கொரு சேவை.

இது ஒரு சத்தமில்லா சாதனைதான். ஏன் எனில் பல் வலியோடு வரும் நோயாளிகளுக்கு வாரம் இரண்டு நாள் போதாது அவ்வப்போது அன்றைய தினமே நோய் தீர்வு செய்யப்படுவதுதான் சரியாக இருக்கும் என்ற பொதுமக்களுக்கான சேவை மனப்பான்மையோடு இந்த செயல்பாடு சேவையாக செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பணி புரிய வரும் மருத்துவர்களிடம் நான் உவந்து சொல்வதுண்டு இதை அறிஞர் அண்ணா திறப்பு விழா செய்திருக்கிறார். என. இது மட்டுமல்ல  அப்போது மத்திய மந்திரியாக இருந்த  மரகதம் சந்திரசேகர் 1953ல்  தற்போது இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவுக் கட்டடத்துக்கு வந்து திறப்பு விழா செய்து சென்றிருக்கிறார்.

அதை அடுத்து அறிஞர் அண்ணா அளவு எவருமே பெரிய பேச்சாளராக இருக்க வழியில்லை. இருந்தாலும் நானும் ஒரு நல்ல பேச்சாளர் என்ற  பேச்சு இருக்கிறது அது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேசுமளவு எனைக் கொண்டு சேர்க்குமளவும் காலமும் வாழ்வும் செய்திருக்கிறது. அவர் கன்னிமாரா நூல்கள் அனைத்தையும் படித்து முடித்ததாக சொல்வார், நானும் எங்கள் ஊரில் உள்ள இரு கிளை நூலகம் நூல்கள் படித்து அதன் பின் மற்றொரு தனியார் ஆலையின் மனமகிழ் மன்ற நூல் நிலையத்தின் நூல்களை எல்லாம் படித்து முடித்தேன். அதன் பின் சேலம் மைய நூலகம் சென்றேன். பெரியார் படிப்பகமும் சென்றேன் தொட்டுக் கொள்ள மட்டும்.
ஒரு முறை தலைவாசல் அரட்டை அரங்க தேர்வின் நிகழ்வில் உதயம் ராம் என்னையும் என்னுடன் இருந்த மற்றொரு தம்பியையும் விளையாட்டாக என்ன அண்ணாவும் கலைஞருமாக என என்னை அறிஞர் அண்ணா எனக் குறிப்பிட்டது யாவும் சுவைபடப் பகிரத்தக்கதாகவே உள்ளது.

அண்ணா ஓரிவில் என்ற நாடகத்தை ஒர் இரவில் எழுதி முடித்தார் அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டது அடியேனும் அளவுக்கு மிஞ்சினால் என்னும் சுமார் 30 பக்க நூலை ஒரே இரவில் எழுதி முடித்து அப்போது என்னுடன் தொடர்பிலிருந்த இரு நண்பர்களுக்கு காட்டினேன்


அறிஞர் அண்ணா கலாம் படித்த பள்ளிக்கு எப்படி வரவழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டார் என கலாமே தமது நூல் குறிப்பில் குறிப்பிடுகிறார் அது ஒரு சுவையான நிகழ்வு. அந்த கலாமிடம் கூட எனக்கு தொடர்பிருந்ததும் அந்தக் கலாமும் அடியேனும் கூட அறிஞர் அண்ணாவை பின் பற்றுவாரே. .மேலும் காமராசர் மட்டுமல்ல அறிஞர் அண்ணாவும் மிகவும் எளிமையானவரே. சுயநலம் இல்லாதவரே அவர் அவர் குடும்பத்துக்கு எல்லாம் எதையும் சேர்த்தவர் அல்ல. அவருக்கு எனக் குழந்தையே இல்லை. தத்து எடுத்து வளர்த்தவரே டாக்டர் பரிமளம் போன்றோர். அவரது மனைவி ராணி அம்மையாருக்கு முன்னாள் முதல்வர் ஜெ உதவியதாக வந்த செய்திகள் இன்றும் நினைவில்.

பேரறிஞர் நல்ல மனிதர். பானுமதி பற்றி ஊடகம் கேள்வி எழுப்பியபோது கூட உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக நயம்பட அவள் ஒன்றும் பத்தினியுமல்ல நானொன்றும் புத்தனுமல்ல என்று கூறிய கதையை உலகே பேசும்.
Image result for anna birthday chief minister of tamil nadu
ஆனால் கலைஞரின் அரசியல் சாகசம் அவரையும் பீடித்து விட்டது. கண்ணதாசனும் கலைஞர் கருணாநிதியும் கட்சிப் பணி செய்து வென்ற ஒரு தேர்தல் பற்றி தான் அண்ணாவிடம் பாராட்டு பெற பொதுக்கூட்டத்தில் தான் விலைக்கு வாங்கிக் கொடுத்த மோதிரத்தை அண்ணாவிடம் இருந்து பரிசாகப் பெற்றதாக வெளிக்காட்டிக் கொண்டு பேர் வாங்கிய கதையை பற்றி கண்ண தாசன் கேட்க அறிஞர் அண்ணாவோ நீயும் வாங்கிக் கொடுத்திருந்தால் உனக்கும் மேடையில் பரிசாக கொடுத்திருப்பேன் என சமாதானப்படுத்தி சமாளித்ததாக வனவாசம் மனவாசம் நூல் குறிப்புகள் சொல்கின்றன.

அந்த அரசியல் சாகசம்  பாசாங்கு மக்களுக்கும் பிடித்துப் போக  அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரைத் தேவைப்பட நல்லவர் அரசியலில் நுழைய முடியாத போக்கும் வித்தை தெரிந்தவர் மட்டுமே கோலோச்சும் போக்கும் காணப்படுகிறது சுயநலம் மட்டுமே குடும்பம் மட்டுமே தலைமை ஏற்றிருக்க அதிலிருந்து தமிழக அரசியல் தலைவிதி அண்ணாவுக்கும் பின் கலைஞர் கை வர எம்.ஜி.ஆர் உதவ அதன் பின் அதே எம்.ஜி.ஆர்  மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்று பாடி விமர்சித்து அரசியலுக்கு வந்து அ.இ.அ.தி.மு.கவை அரியணை ஏற்றி வைத்தார்.

இன்று ப்ளக்ஸ் தலையில் விழுந்து சுபஸ்ரீ மரணத்துக்கு ஸ்டாலின் குரல் கொடுப்பது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வரவேற்கத்தக்கதே எனினும்  மது ஆலைகள் எல்லாம் இவர்களிடம் சொந்தமாக இருக்கிறது அவர்கள் போன்றோர்தான் டாஸ்மாக்கிற்கே மதுவை விநியோகம் செய்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் இருப்பதை  மறுப்பதற்கில்லை.

கலைஞருக்கும் பின் ஸ்டாலின் ஸ்டாலினுக்கும் பின் உதயநிதி என்றே வளரும் கட்சி....இப்போது ஏனோ அழகிரியின் குரல் அடங்கி இருக்கிறது இந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றியும் பெற்று விட்டது. ஆனால் அதனால் அதற்கு எந்த வித பெரும்பயனும் இல்லாமல்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Related image
 எல்லோரும் இன்று அண்ணாவைப் பற்றி நினைக்கிறார் எனவே நானும் சொல்ல வேண்டுமல்லவா எனக்கும் பேரறிஞர் பிடித்தமானவர்தானே...மயிலும், காகமும் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு இன்று அமித்ஷாவும் அண்ணாவும் என நினைத்துப் பார்க்கிறேன் இன்றும் பொருந்த...

Saturday, September 14, 2019

அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே அரசு செயல்படும் : கவிஞர் தணிகை

அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே  அரசு செயல்படும் : கவிஞர் தணிகை
சுபஸ்ரீ இறப்பு 2000க்கும் மேலான போஸ்டர் ப்ளக்ஸ்களை எடுக்க வைக்க ஒரே பெண்ணை பெற்று எடுத்ததாகச் சொல்லும் தந்தை வயிறு வாயுமாக அடித்துக் கொள்ள மகளை இழந்த குடும்பத்துக்கு 5 இலட்சம் இழப்பீடு அளிப்பதாக அரசு விளம்பரங்களும் நீதிமன்றத்தின் தீர்வுமாக ...

முதன் மந்திரி வழியாக வந்தால் உடனே சாலை போட்டிருப்பார்கள்
பாராளுமன்ற உறுப்பினர் வருவதாக இருந்தால் கொசுமருந்து அடித்து சாலை இருபக்கமும் சுண்ணாம்பு வட்டங்கள் இட்டு அலங்கரிப்பார்கள்
 சாலையில் செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராகவாவது இருக்க வேண்டுமல்லவா?
இப்படி பொதுமக்கள் எல்லாம் போகவா சாலையும் ரோடும்....
Image result for subashri death
போனால் இப்படித்தான் இருக்கும், நடக்கும். இதை எல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ட்ராபிக் இராமசாமிக்கு வயதாகிவிட்டது ப்யூஸ் மானுஸ் போன்றவர்களுக்கு செருப்பு மாலையும் அடி அடி பூஜையும், எனைப் போன்றோர்க்கு வீட்டிலேயே கொசுக்கடி தாளவில்லை சிறைக்கு சென்று கொசுக்கடியை தாக்குப் பிடிக்க உடலில் சத்து இல்லை,.இதைப்பற்றி எல்லாம் பேச எழுத கேட்க கேள்வி எழுப்ப குடும்பம் வாய் வயிறு ஏதுமே  இருக்கக் கூடாது அவர்கள் மனிதராயும் பிழைக்கக் கூடாது...பிழைத்திருக்கவும் கூடாது. பிழைக்கவும் விடமாட்டார்கள் அதெல்லாம் வேறு.

காவல் நிலையத்துக்கு புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்
நீதிமன்றத்திற்கு வழக்கு  தொடரப்பட்டால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
புகார் மனு வந்தாலும் கொடுத்தாலும் மட்டும்தான் அது பற்றி கவனித்தால் நடவடிக்கை என்ற பேரிலாவது எதாவது செய்ய விரல் அசைக்கப்படும்

ஊடகம் எல்லாம் எதையும் கண்டு கொள்ளாது அதிசயமாக இருந்தால் மட்டும் கண்டு கொள்ளும் இரட்டைத்தலைப் பாம்பு, ஒங்களைப் போடணும் சார் என்ற சினிமா விளம்பரம் இது போன்று வித்தியாசமாக இருந்தால் மட்டுமே ஊடகம் வருவாய் இருந்தால் மட்டுமே தொழில் நடத்த முடியும்.... எனவே பொதுமக்கள் பிரச்சனையை எல்லாம் யார் கையில் எடுத்துக் கொள்ளப்போகிறார்கள்... எல்லாம் ஆன்லைனிலேயே சான்றிதழ் பட்டா மாறுதல் யாவுமே செய்து கொள்ளலாம் ஆதார் பான் போன்றவை கூட ஆனால் கொடுக்க வேண்டியதை பார்த்துக் கொடுத்துவிட்டால்... தனியார் என்பவை இருக்கும் வரை அரசு என்பது இப்படித்தான் இருக்கும்...
Image result for subashri death
சேலத்தில் முதல்வர் வருகிறார் என்று சிட்டியிலும் அர்பன் லிமிட்டிலும் ஹைவே சாலைகளிலும் அடிக்கடி இந்த சம்பவம் நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பத்து பதினைந்து மீட்டர் இடைவெளியில் ப்ரோட்டோக்கால் என்ற நடைமுறையில் சாலையில் கடும் வெயிலிலும் மழையிலும் நூறடிக்குள் அல்லது நூறு மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு காவலர் இதுவே கிலோமீட்டர்களின் நீளத்தில் தொடர்ச்சியாக வரிசையாக....
Image result for subashri death
சாலையின் இருமருங்கும் கட்சிக் கொடிகள் சில இடங்களில் சாலையின் உள் பக்கமாகவே அக்கறையில்லாத படிக்காத பாமர குடிகார வேலைக்காரர்களால் நடப்பட்டிருக்க  எங்கும் எங்குமே எங்கெங்கும் போஸ்டர்கள் .அம்மாவின் விளம்பர ஸ்டைல் இன்றைய முதல்வர் விருப்பமாக... இதெல்லாம் சட்டம் நீதிக்கும் புறம்பானது என முதல்வருக்கு தெரியாது என நினைப்போமாக அல்லது அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாது அதை எல்லாமா ஒரு முதல்வர் பார்த்துக் கொண்டிருக்க முடியும்... அவர் மிகவும் பிஸியானவராக இருப்பார், ஸ்டெரிலைட்டாலையில் மனிதர்கள் சுடப்பட்ட கதை போல அங்கு ஒரு பெண்ணை வாயில் குண்டு சுட்டு சாகடித்த கதை போல இன்று இந்த சுப-ஸ்ரீ விபத்து...

பாருக்குள்ளே நாடு நம் பாரத நாடு, டாஸ்மாக் பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம தமிழ் நாடு.
ப்லக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது என சட்டமும் நீதியும் சொன்னபோதும் எதற்கெடுத்தாலும் போஸ்டர் கலாச்சாரம் கட்சி என்று இல்லாமல் மக்கள் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது இறந்தாலும், பிறந்தாலும், மணம் என்றாலும், பூப்பெய்தினாலும்,இன்னும் டைவர்ஸ் செய்து கொண்டோம் என்ற போஸ்டரைத்தான் இன்னும் பார்க்க முடியவில்லை. அதையும் செய்தித்தாள்களில் மறுதேடலுக்காக போட்டுக் கொள்வார்கள்.... இதற்கு எல்லாம் ஆரம்பம் இந்த அரசியல் கட்சிகள்தான்.

போஸ்டர் அடிக்கச் சொன்னவர்கள் மேல் செயல்நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதை அடித்த பிரஸ்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறார்களாம் வாயில் அல்லாமல் வேறு ஏதிலோ சிரிக்கிறார்களாம் கேட்பவர்கள்...
Image result for subashri death
இதெல்லாம் ஒரு அரசு இதற்கெல்லாம் அரசு என்று பேர்...
அதிலும் கட்சிக்காரர்கள் என்றால் சொல்லவே வேண்டாம் எல்லார் வீட்டு திருமணங்களும் தலைவர்கள் போஸ்டர்கள் இல்லாமல் இல்லை. அதில் ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மீக போஸ்டர்களும் இருக்கின்றன... யாரைச் சொல்லியும் குற்றமில்லை மக்களின் மனநிலையே அப்படி ஆகிவிட்டது...இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் மனநிலை பிறழ்ந்தவராகவே கருதப்படுவார். இதெல்லாம் இந்தக் காலத்தின் அவசியமய்யா என்ற குரல்கள் ...டாஸ்மாக்கில் பணி செய்யும் எனக்குத் தெரிந்த ஒரு சாகக் கிடக்கும் சவத்துக்கு சம்பளம் ஒரு குவாட்டரும் இருபது ரூபாயுமாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for subashri death
இறந்து போன சுப-ஸ்ரீக்கும், ஒரே மகளை இழந்த பெற்றோர்க்கும் இந்த பதிவை ஆழ்ந்த  வருத்தத்துடன் காணிக்கையாக்குகிறேன்.


Thursday, September 12, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 3 மறக்க முடியுமா மணிமாறன் உன்னை: கவிஞர் தணிகை


மறக்க முடியுமா மணிமாறன் உன்னை: கவிஞர் தணிகை

நீ எனக்கொரு சகோதரனாய் நண்பனாய் சீனியராய் எல்லாம் இருந்தாய்..உனக்கும் எனக்கும் இடையே நம்மிடம் ஒரு நாகரீகமான உறவு நட்பையும் மீறி இருந்தது. அதை வெறும் ஒரு பெயர்ச் சொல்லி(ல்) குறிப்பிட முடியாது.
Image result for good friend

மணிமாறனை அவர்கள் வீட்டில் ராஜா என்றுதான் கூப்பிட்டதாக நினைவு. 1979 முதல் 1997 வரை வந்த இந்த உறவு அதன் பின் ஏனோ விடுபட்டுப் போயிருக்கிறது. இப்போது அவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். எனக்கு அவர் ஒரு ஆண்டு மூத்தவராக இருந்து எங்கள் படிப்பில் ஆனால் வேறொரு பிரிவில் இருந்து  படித்து முடித்து வேலை  வாய்ப்பு மையம் வழியாக அப்போதைய சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்ந்தார். அவரது அலுவலக சிறப்பிதழ்களில் கூட என்னிடம் ஒரு கவிதையைக் கேட்டு வாங்கி  வெளியிடக் காரணமாகி இருந்தார்.

அவரது திருமணத்துக்கு நானோ அவர் எனது திருமணத்துக்கோ வர வாய்ப்பில்லாமல் காலம் செய்திருந்தது. அவரது துணைவியாரும் அவர் காட்டிய அதே அன்புடன் அவர்கள் வீடு செல்லும்போதெல்லாம் என்னிடம் நடந்து கொண்டதும் அவரது தாய் தந்தை தங்கை தம்பி அனைவருமே என்னை ஒரு வேண்டப்பட்டவராக வைத்துக் கொள்ள இவர் அப்படி என்னதான் அவர்களிடம் சொல்லி என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்திருப்பார் என்றுதான் தெரியவில்லை.

நான் எனது சொந்த வீட்டுக்கு போவது போல அவர்கள் வீட்டுக்கும் போவேன் அப்போது அவர்கள் சிங்கா நல்லூரில் நந்தா நகர் என்ற  இடத்தில்  இருந்தனர். முதல் முறை அவர்கள் வீட்டை தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். அது நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. அதன் பின் பல முறை சென்றேன். எப்போதுமே அவர் அன்பு அப்படியே இருந்தது
Image result for good friend
அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருக்கிறார். அவருக்கு என எங்கள் வீட்டில் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு (பிரத்யோகமாக என்ற வார்த்தையை தவிர்க்க முனைந்திருக்கிறேன்) எங்கள் இருவரையும் மீன் வளத்துறைக்கு அனுப்பி  புதிதாக மீன்கள் வாங்கி வந்து அவருக்கு உண்ண செய்த நிகழ்வு இன்றும் இரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அவர் ஈரோட்டில் பணியமர்ந்த போது ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கும் அவர் அழைக்க நான் சென்றிருந்தேன். சில பெண்கள் ....எங்களுக்கு தனிச் சிறப்புடன் பஜ்ஜி இதற்கு சரியான தமிழ் வார்த்தை வாழைக்காய்  பலகாரம் என்பது கூட சரியாக இல்லையே சரி ....வாழைக்காய் சீவலுக்குப் பதிலாக  அதில் ஒரு தேங்காய் ஓட்டை வைத்தும் விளையாடியது நினைவிருக்கிறது இப்படி சாப்பிடும் பொருள்களில் கூட விளையாட முடியும் என்பதை நான் அங்கு தெரிந்து கொண்டேன்.

எதிர்பாராது அந்தப் பலகாரத்தில் இருந்த தேங்காய் ஓட்டை நாங்கள் கடிக்க அதைப்பார்த்த அந்தப் பெண்கள் சிரி சிரி என சிரிக்க மணிமாறனுக்கு வந்ததே கோபம் அதை அவரிடம் அந்தக் கோபத்தை அன்று மட்டுமே பார்த்தேன். மற்றபடி மணிமாறனுக்கு  எப்போதும் சிரித்த முகமே எனக்கு  பரிச்சயம். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

நான் விளையாட்டு அறையில் உதவியாளனாக இருந்து பகுதி நேர வேலை கல்லூரி நிர்வாகத்தில் பார்த்த போது அவர் நூலகத்திற்கு உதவியாளராக இருந்தார். அப்போது அவர்  மூன்றாம் ஆண்டு. நான் இரண்டாம் ஆண்டு.

 நாங்கள் எப்படி அறிமுகம் ஆனோம் என்பது கூட சரியாக நினைவில் இல்லை. சரியான  சீனியராக அவர் இருந்தார். என்னை தவறான வழியில் மூன்றாம் ஆண்டு சீனியர்கள் தங்கள் சுயநலத்துடன் வழிகாட்டி சுருக்கெழுத்தை short hand course along with all theory subjects and not selecting banking subject with a wrong selection..தேர்ந்தெடு என ஆசிரியர்களும் வழிகாட்டி திருப்பு முனையை ஏற்படுத்தி அதனால் விளைந்த மோசமான விளைவுகள் எல்லாம் வாழ்வெலாம் பேசப்பட வேண்டியது தொடர்ந்து வருவது. ஆனால் இவருக்கும் அதற்கும் எந்த பழியும் இல்லை.Image result for good friend

முதலாண்டில் ஒரு மனப்போராட்டத்தின் போதுகல்லூரியில் நடந்த ஒரு சச்சரவில்   எனக்கு ஆறுதலாக இருந்து கிணத்துக் கடவில் உள்ள அவர்களது தாத்தா பாட்டி அவர்கள் மொழியில் அப்பத்தா அம்மாச்சி வீட்டில் கூட தங்கி அதன் பின் சொந்த ஊருக்கு திரும்பி வர உதவிகள் செய்தார். அவருடைய நண்பர் ஜோசப் கிணத்துக் கடவில் ஒரு கிறித்தவ அனாதை ஆசிரமத்தில் செல்வாக்குடன் வளர்ந்த இளவரசன் என்பதும் அவரும் அப்போதே கல்லூரிக்கும் கூட தனது சட்டையில் ரோஜா வைத்துக் கொண்டு வருவதும் இன்றும் நினைவில். மேலும் அவர் மின்னியல் படிப்பில் இருந்தார் என்பது நினைவிலிருக்கிறது.

அவர் அப்போதே இருந்தால் 18 அல்லது 19 வயது கூட இல்லாதபோதே தலையெங்கும் முடியின்றி சொட்டைத்தலையுடன் தான் இருப்பார். ஆனால் அது பற்றி எல்லாம் அவர் அலட்டிக் கொண்டதே இல்லை. ஏன் எனில் அவர் ஒரு ஜென்டில் மேன் எனச் சொல்லப்பட வேண்டிய அரிய கனவான். நீட்டாக ட்ரஸ் செய்து கொள்வார். அவர் பேச்சில் என்றுமே ஒரு முதிர்ச்சி இருக்கும். என்னிடம் எதனால் அப்படி பிரியமாக இருந்தார் என்றே எனக்கும் தெரியவில்லை.
Image result for good friend
எனது சகோதரி ஒருவரின் திருமணம் தாரமங்களத்தில் நடந்தபோது ஒரு நண்பர்கள் பட்டாளமே வந்து அதில் கலந்து கொண்டது. அதில் இவரும் வந்திருந்தார் நாம் முன்பு சொன்ன குகனும்  , செம்பண்ணனும், இன்னும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்று மணத்துக்கு முன் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கும் கூட சென்றிருந்தோம் தாரமங்களத்தில் அப்போதிருந்த கார்த்திகேயன் தியேட்டரில்.

அதன் பின் குழந்தைகள் எல்லாம் வந்த பின்னே அவர் கோவையில் உள்ள வேறொரு ஊருக்கு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்பதை அவர்கள் வீட்டுக்கு வழக்கம்போல எனக்குத் திருமணமான பின்னே ஜி.டி. தாமோதரன் இன்ஸ்டியூட்டுக்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு பல்கலைக் கழக மானியக்குழுவின் நிகழ்ச்சிக்கு  சென்றிருந்தபோது அவரை வழக்கம்போல் அவரது வீட்டுக்கு சென்றபோது அறிந்தேன். மிகவும் சோர்வடைந்ததாலும் அது மிக இரவு நேரமாகிவிட்டதாலும் அவரைப்பார்க்க அவரது இருப்பிடம் செல்லாமலே வந்து விட்டேன்
Related image
ஏற்கெனவே 1997 என நினைக்கிறேன் கோவையில் உள்ள திவான் பகதூர் சாலையில் உள்ள தனிஷ்க் கடைக்கு அப்போது சேலத்தில் அது திறக்கப்படவில்லை. கோவையில் தான் இருந்தது. அங்கு சென்ற நான் அவரது சந்திப்பிற்கான நேரமின்றி திரும்பி வந்துவிட்டேன் அது முதல் அவரது வாழ்வும் எனது வாழ்வும் தனியாகிப் போனது.

என்றென்றும் அந்த அன்புக்கு நன்றியறிதலுடனே நான் வாழ்ந்து வருகிறேன் ஆனால் அவை பற்றி அவர் அறியாதிருக்கவும் கூடும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.