படித்த உடன் இதை பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். நன்றி கலையகம் உங்கள் மின் மடலுக்கு
//மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்றால்.... மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்!//
1. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்பது மார்க்ஸ் சொன்னது. இன்று சர்வதேச சட்டங்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. ? தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலநேரம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர்.
மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!
2. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. உலகின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சியான பாரிஸ் கம்யூனில் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. இன்றைய செலவினத்தைப் பொறுத்தவரையில், ஒருவர் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். அது எல்லோருக்கும் கிடைகிறதா? ஒரே நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஏழாயிரம் ரூபாயும், மனேஜர் ஒரு இலட்சம் ரூபாயும் சம்பளம் வாங்கும் கொடுமையும் நடக்கிறது.
மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!
4. ஆண், பெண் சமத்துவம் பேணப் பட வேண்டும். சிறார் தொழிலாளர்களை சுரண்டுவது ஒழிக்கப் பட வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. ஆண், பெண் உழைப்பாளிகளுக்கு சமமான ஊதியம் வழங்கப் படுகின்றதா?
மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!
5. நேரடி ஜனநாயக அமைப்பான தொழிலாளர் பாராளுமன்றம், ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. அதிகாரப் பரவாலாக்கல் மூலம், ஊருக்கு ஊர் தொழிலாளர்கள் நேரடியாகப் பங்கு பற்றும் பாராளுமன்றம் அமைப்போம். அதன் மூலம், உழைக்கும் மக்கள் தமது நலன்களை பிரதிநிதித்துவப் படுத்த முடியும். தொழிற்சாலைகளையும் தொழிலாளர்கள் நிர்வகிக்கும் அமைப்பை உருவாக்குவோம். இதற்கெல்லாம் நீ சம்மதிக்கிறாயா?
மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தாமல் விடுவதற்கு, நீ ஆயிரம் நியாயங்களை அடுக்கலாம். அந்தக் காரணங்களையும், இங்கே கூறப்பட்ட விடயங்களையும் தமிழ் மக்கள் முன்னால் வைத்து பொது வாக்கெடுப்பை கோருவோம். யார் சரி, பிழை என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அதற்கு நீ சம்மதிக்கிறாயா?
மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... குறைந்த பட்ச மக்கள் ஜனநாயகத்தை கொண்டு வருவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!
யானை பார்த்த குருடர்கள் மாதிரி, "மார்க்சியம் பார்த்த மடையர்கள்" இருக்கிறார்கள். காலங்காலமாக முதலாளித்துவம் பரப்பி வரும் மக்கள் விரோதக் கருத்துக்களை, தமது சொந்தக் கருத்து மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.
"மார்க்சிய பூச்சாண்டி" காட்டி, பாமர மக்களை பயமுறுத்துகிறவர்கள் எந்தளவு படித்திருக்கிறார்கள்? பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு, மெய்யியல், விஞ்ஞானம், மானிடவியல் போன்ற பல பாடங்கள் மார்க்சியத்திற்குள் அடங்குகின்றன என்பதை அவர்கள் அறிவார்களோ?
இன்றைய கல்வி அமைப்பு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அடிமைகளை உருவாக்குகின்றது. அதற்கு மாறாக கல்வியை மக்களின் நலன்களுக்காக மாற்றி அமைப்பது தான் மார்க்சியத்தின் குறிக்கோள். அதற்காகத் தான் நடைமுறையில் உள்ள கல்வியை விமர்சனபூர்வமாக அணுகுகின்றது.
மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும். "சுயமாக சிந்திக்கும் அறிவுஜீவிகள்", அடிமைகளை உருவாக்கும் கல்வி தொடர்பாக என்னென்ன விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்? நடைமுறையில் உள்ள கல்வி அமைப்பை கேள்விக்குட்படுத்தாமல், "கற்றவைகளை ஒப்புவிக்கும் இயந்திர மனிதர்கள்" மார்க்சியத்தை விமர்சிப்பது வேடிக்கையானது.
மார்க்சியம் ஒரு தத்துவமாக கருதினால், பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர்களையும் குறை கூற வேண்டியிருக்கும். சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையில் எழுதி வைத்த தத்துவங்கள் மார்க்சியத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதையெல்லாம் இன்றைக்கும் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?
மார்க்சியத்தை நிராகரிப்பவர்கள் உலக மக்களுக்கு செய்த, இனிமேல் செய்யப் போகும் உதவிகள் என்ன? வறுமையை ஒழிப்பதற்கு வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பட்டினியால் வாடும் மக்களை காப்பாற்றுவதற்கான கொள்கை என்ன? அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தத்துவம் என்ன?
மார்க்சியத்திற்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்து இவர்கள் முன்வைக்கும் தத்துவம் அல்லது கொள்கைகள் என்ன? ஒன்றுமேயில்லை. இதுவரையும் இல்லை. இனிமேலும் வரப் போவதில்லை. அதனால், மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது எந்த வகையில் தவறாகும்? அப்படிப் போராடுங்கள் என்பதையும் மார்க்சியம் தானே சொல்லிக் கொடுத்தது?
அது ஒரு புறம் இருக்கட்டும். //மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்// என்று அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு, மார்க்ஸ், லெனினை விட்டால், உலகில் வேறு யாரையும் தெரியாதா?
19 ம் நூற்றாண்டில் சோஷலிசத்தை முன்மொழிந்த ஜாகோபின், புருதோன், பகுனின் என்று ஏராளமான தத்துவ அறிஞர்கள் இருக்கிறார்களே? அவர்களை பற்றியும் பேசலாமே? சமதர்மம் போதித்த சங்க கால தமிழ்ப் புலவர்கள் பற்றிப் பேசலாமே?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பற்றி இவர்கள் கேள்விப் பட்டதே இல்லையா? "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்." என்று கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே மார்க்சியம் பேசிய திருவள்ளுவர் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதியார் ஒரு கம்யூனிஸ்டா? "ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது இலகு. ஆனால், பணக்காரன் பரலோகம் போக முடியாது" என்று போதித்த இயேசு கிறிஸ்து மார்க்சிஸ்ட் அல்லவே?
“நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” – Dom Hélder Pessoa Câmara (பிரேசில் நாட்டு கத்தோலிக்க பாதிரியார்)
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment