Monday, November 2, 2020

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நானறிந்த வரையில்: கவிஞர் தணிகை

  ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நானறிந்த வரையில்: கவிஞர் தணிகை



சென்னை அடையாறு தியாசிபிகல் சொசைட்டியில் வளர்ந்த சிறுவன், முறையாக கல்வி படிக்காமல் தனிக் கல்வி வழியே விழிப்புணர்வு பெற்று உலகெலாம் விரிந்திருந்த அமைப்பை எல்லாம் கலைத்து விட்டு தான் ஒரு குரு அல்ல, தான் ஒரு வழிகாட்டி அல்ல, தமக்கென்று சீடர் எவருமே இல்லை தான் ஒரு தோழர்தாம், எவர் வந்தாலும் வாருங்கள் கலந்து பேசி நாம் உண்மையைக் கண்டறிவோம் என்ற நிலைப்பாட்டிலே உலகெங்கும் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றியவர்.


இவரை ஆரம்பத்தில் கடவுள் என்று வருவார் என்று எதிர் பார்த்தனர் இவரை வளர்த்திய பெருமக்கள் எல்லாம்.


நான் அதுவாக இருக்கிறேன், நீ தான் உலகம், புத்துணர்வு, இளமை,அறியாமை ஆகியவை மேலும் மேலும் கற்றுக் கொள்ள ஏணிப்படிகளாகும் என்ற மையப் பொருளுடன் பின்னிப் பிணைந்த வாழ்வின் ஓட்டத்தில் இணைந்தவர்.


இவரை ஞானி என்று குறிப்பிடலாம்.இவரைக் கற்றவர் எல்லாம் நல்ல மேதமை உடையவராக இருக்க வேண்டும் ரஜினிஸ் என்னும் ஓஷோ நறுக்கென்று சொல்வார் : சாதி இருக்கும் வரை கடவுள் இருப்பார், சாதியை ஒழிக்க மாட்டார்கள் கடவுளையும் என்பது போல வார்த்தைகளை வீசி விடுவார் வாளின் கூர்மையுடன். இவரைக் கிழவர் அப்படித்தான் சொல்வார் என்றெல்லாம் குறிப்பிட்டு விடுவார்.


ஆனால் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பயணம் செல்ல முயன்றால் இப்படிப் பட்ட வார்த்தை ஒன்று கூட இல்லை என்பதைக் காணமுடியும்.


நீ யார் என்று கேட்டால் நீ ஒரு மனிதம் என்று உணர், சொல், செயல்படு என்பார். நாட்டின் கோடுகள் கூட மனிதரைப் பிரிக்க முடியாது என்பார். அப்புறம் எப்படி சாதி, மதம், இனம்,மொழி என்ற கோடுகள் பிரிக்க முடியும். 


இந்த சிகரமேறுதல் நமக்கு இராமலிங்க வள்ளலார், கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர்,

போன்றோரை நினைவுக்கு அழைத்து வரும். அப்படிப் பட்ட மனிதம் ஆக நாம் மாற ஆரம்பித்தால் புவி உயிர்கள் எவற்றுக்குமே  தீங்கு செய்யா மனம் நமக்குள் வந்து விடும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்பதும் பசிக்கு உணவளிப்பதே சீவ காருண்யங்களில் தலையாயனது என்பதெல்லாம் விளங்க ஆரம்பிக்கும்.


கடவுள் என்ற பிரபஞ்சப் பொருள் மனிதரால் ஆக்கப் பட்டதே என்றும் தியானம் மூலம் நினைவைக் கழித்து விட முடியும் என்றும் கூறுவதுடன் தியானம் என்பதன் பாற்பட்டு அதற்கு அடிமையாகும் நிலை வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அதை இதை எல்லாம் தேடிப் படித்து நம்மை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பார். எதுவாக இருப்பினும் அத்துடன் முற்றிலும் இணைந்து உணரும் போது வேறுபாட்டை நம்மால் உணரமுடியாது என்பார். ஒரு கணத்தில் நாம் பார்க்கும், கேட்கும், உணரும் அறியும் தெரியும் காட்சிகளை அப்படியே மறுபடியும் எதிர்பார்க்கும் மனப்பிணியிலிருந்து விடுபட்டால் நமது செயல் படாத மூளைப் பிரதேசங்கள் நன்கு செயல்பட்டு மூளையின் அதிகபட்ச செல்கள் செயல்பட்டு அறிவு அகண்டமாகி நாமும் அறிவை விருத்தி செய்து ஞானம் பெறலாம் என்பது இவரது வாழ்வின் போக்கில் நமக்கு சொல்லாமல் சொல்லும் சேதி.


இவரது பேச்சு உரைகளை பல்வேறுபட்ட நாடுகள், நகரங்கள், இடங்களில் செய்ததை 80க்கும் மேற்பட்ட தொகுப்புகளாக ஜெ.கெ.பவுண்டேசன் என்ற இவரது ஆர்வலர்கள் நடத்தி வரும் நிறுவனத்தால் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உலகின் பல இடங்களிலும் இந்த நிறுவனம் சொல்லுமளவு பல பணிகளை செய்து வருவதாகவும் செய்திகள் இருக்கின்றன.


இவர் மரணம், பிறப்பு, மதம், கடவுள், தற்போதைய பிரச்சனைகள்,  மனிதப் பழக்க வழக்கங்கள், இப்படி தத்துவார்த்தமாக எல்லா தலைப்புகளிலும் கலந்துரையாடல் செய்துள்ளார்.  அது அனைவர்க்கும் பயன் அளிக்கும் என்பதுவும் எனது கருத்தும்



மறுபடியும் பூக்கும் வரை:

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment