Sunday, November 15, 2020

மூக்குத்தி அம்மன்: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

 மூக்குத்தி அம்மன்: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை



ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் எழுதி இயக்கி ஐசரி கணேஷ்( இவர் கல்வி நிறுவனம் கல்லூரி என்று நடத்துவதிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளவர். சங்கமம் என்னும் போட்டியை தவறாமல் கல்லூரிகளுக்கு இடையே நடத்தியும் வருகிறார் ஐசரி வேலன் என்னும் எம்.ஜி.ஆர் படங்களின் நகைச்சுவை நடிகரின் மகன் ) இவரது தயாரிப்பில் வெளி வந்து இணைய வழி காணும் திரைப்படமாக நமக்கு காட்சி கிடைக்கிறது. சூரரைப் போற்று படம் முதலாம் நிலை என்றால் இது இரண்டாம் நிலை என்றும் கொள்ளலாம். சொல்லலாம்.



நயன் தாராவை சரியாக கன கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். குறை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆர்.ஜே.பாலாஜி நம்முள் ஒருவராக எளிமையான, சினிமா  காஸ்ட்யூம் என்று அந்நியப் படாமல், மேக் அப் அதிகம் இல்லாமல் ,  ரிப்போர்ட்டர் வேலை, 3 தங்கைகளுக்கு அண்ணன் ரோல், விசித்திரமான ஊர்வசியின் மகன் மற்றும் தாத்தா மௌலி என எல்லோருடனும் ஒன்றி விடுவது போல நம்முடனும் ஒன்றி விடுகிறார்.


அதை விடப் பெரிய வெற்றி அவருடையது என்ன வெனில் நாத்திகம் ஆத்திகம் என்ற கத்தி முனையில் விளிம்பு வரை எல்லாம் சென்று சர்ச்சையாக்கிக் கொள்ளாமல் அழகாக நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இளைஞராக இருந்து கதையை தன்னால் இயன்ற வரை நகைச்சுவையாக நகர்த்தி செல்கிறார்.


சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டிலுமே ஊர்வசிக்கு ஒரே மாதிரியான அம்மா வேடம். ஒரு வேளை சரண்யா பொன்வண்ணன் கிடைக்க வில்லையோ...ஊர்வசி சூரரைப் போற்று படத்திலிருப்பதை விட இதில் அசத்தி இருக்கிறார். சோகம், நகைச்சுவை எல்லாம் கைவந்த கலை. ஆனால் இவர் மதுக் குடித்துவிட்டு கேரளாவில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்து அது ஊடகத்தில் பிரபலமானது நினைவுக்கு வராமலே பார்த்தால் சூப்பர்ப் என்று சொல்ல வேண்டும்.






நம்பும்படியான நம்பமுடியாத இப்படி காட்சி அமைப்புகள் இருந்தாலும் படம் இரசிக்கும்படியாக  நன்றாகவே இருக்கிறது. அஜய் கோஷ் என்பவர் பகவதி பாபாவாக ஆட்டம் கட்டி விடுகிறார் யார் இவர் என்று கேட்குமளவு.

படத்தின் பெரும்பாலான இடத்தில் ஆரம்பத்தில் இருந்து கதை முடிவு வரை ஜக்கி வாசுதேவ் பற்றி தாக்கி இருக்கிறது வெளிப்படையாகவே தெரிகிறது.


கடவுள் என்பது பற்றி சொல்லியும் சொல்லாமலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளாமல் படம் தப்பி இருக்கிறது என்பதே பெரிய விடயம். அஹா எனக்கும் உனக்கும் என்ற பாடலை படம் முடிந்ததும் நாம் பாட ஆரம்பித்து விடுகிறோம்...



சாமியார், சாமி வண்டவாளங்களை சொல்லி விட்டு  கமல் ஹாசன் தசாவதாரம் படத்தில் சொல்வது போல கடவுள் இருக்கு இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை விவாதமும் தேவையில்லை. இருந்தா நல்லா இருக்கும் என்று தானே சொன்னேன் என்பதான பாணியிலான கதை, படம்....ஆனால் படம் நல்ல பொழுது போக்கும் படம். ஆர்.ஜே பாலாஜியின் துணிச்சலை நல்ல முறையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


2 comments:

  1. மிகவும் சிறப்பு வாய்ந்த திகட்டாமல் இனிக்கும் விமர்சனம். அருமை. பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. thanks for your comments on this post sir. vanakkam.please keep contact.

      Delete