எளிய மக்களுக்காக ஒளிரும் சுடர்கள் - இது காஞ்சி மக்கள் மன்றத்தின் கதை
- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்
(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் ஐந்தாவது கட்டுரை இது.)
எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கென காஞ்சிபுரத்தில் மேலாக இயங்கிவரும் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மகேஷ், பல தசாப்தங்களாக மக்கள் பிரச்னைகளில் முன்நிற்பவர். பல முறை சிறை சென்றவர்.
காஞ்சிபுரத்திலிருந்து திருப்பருத்திக்குன்றம் நோக்கிச் செல்லும் சிறிய சாலையில் தொடர்ந்து 6 கி.மீ. பயணித்தால் "காஞ்சி மக்கள் மன்றம், செங்கொடியூர்" என்ற பெயர்ப் பலகை கண்ணில் படுகிறது. அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது காஞ்சி மக்கள் மன்றம்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதானமாக காஞ்சிபுரத்திலும் பிறகு, வேலூர், திருவண்ணாமலையிலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இருளர், நரிக்குறவர், திருநங்கைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிவருகிறது காஞ்சி மக்கள் மன்றம். இதன் நிறுவனர்களில் ஒருவர்தான் மகேஷ்.
"காஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒரு பொது வாழ்வகம். ஆங்கிலத்தில் commune என்பார்கள். திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், குழந்தைகள் எல்லோரும் ஒன்றாக வசிக்கிறோம். எல்லோரும் படித்தவர்கள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உடல்நலம் குன்றினால் அரசு மருத்துவமனையில் சேர வேண்டும். யாருக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு கிடையாது. குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். இங்கிருப்பவர்கள் அனைவரும் 24 மணி நேரமும் மக்கள் பணி செய்பவர்கள். யாருக்கும் ஊதியம் கிடையாது" என தங்கள் அமைப்பு குறித்து விவரிக்க ஆரம்பிக்கிறார் மகேஷ்.
தற்போது 30 பேர் முழு நேர பணியாளர்களாக காஞ்சி மக்கள் மன்றத்தில் வசிக்கிறார்கள். இவர்கள் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 150 கிராமங்களில் பணியாற்றுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநாலூர் கிராமத்தில் பிறந்தவர் மகேஷ். அவருடைய தந்தை ஒரு விவசாயி. பத்தாம் வகுப்புவரையே படித்தார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, சில இயக்கங்களின் தொடர்பால், வட மாநிலங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அமைப்பில் இணைந்தார். இதனால் அந்த வயதிலேயே பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றிய வாய்ப்பு மகேஷிற்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
அந்தத் தருணத்தில்தான் கணிப்பொறியில் பொறியியல் முடித்துவிட்டு, என்ன செய்வது என்ற தேடலில் இருந்த ஜெஸ்ஸியைச் சந்தித்தார். "அந்தத் தருணத்திலேயே மகேஷ் ஒரு பால்வேறுபாடு பார்க்காதவர் என்பது புரிந்தது. அதனால், எல்லோருடனும் அவரால் எளிதாக பழக முடிந்தது. நிறையப் பேர் எங்கள் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு தேடிவந்தார்கள். அப்போதுதான், ஏன் ஒத்த சிந்தனை உடையவர்கள் சேர்ந்து வாழக்கூடாது எனத் தோன்றியது" என பொதுவாழ்வகம் துவங்கியதை விவரிக்கிறார் மகேஷுடன் ஆரம்ப காலத்திலிருந்து செயல்பட்டுவரும் ஜெஸ்ஸி.
1998லிருந்து மகேஷும் அவருடைய தோழி ஜெஸ்ஸியும் மக்களுக்காக பணியாற்ற ஆரம்பித்தார்கள். 2000வது ஆண்டுவாக்கில் சகாயம் மாவட்ட வருவாய் அதிகாரியாக காஞ்சிபுரத்தில் பணியாற்றினார். இவர்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்கு சகாயம் காதுகொடுத்தார். சுட்டிக்காட்டிய பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றார். இவர்கள் அழைத்துச் சென்ற கிராமங்களுக்கு வந்தார். பட்டா வழங்குதலில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்தார்.
"நாங்கள் பணிசெய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் பெயர்களை எழுதி பேனர்களை வைப்போம். அப்போதுதான் இங்கு வந்த சகாயம் எங்களுடைய பிரச்சனைகளைக் காதுகொடுத்துக் கேட்டார். அவரை இங்கிருந்து இடமாற்றம் செய்யும்போது, அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என பல போராட்டங்களை நடத்தினோம். அந்தத் தருணத்தில் இந்தப் போராட்டங்களுக்காக ஒரு கூட்டமைப்பை ஆரம்பித்தோம். அதுதான் மக்கள் மன்றம்" என்கிறார் மகேஷ்.
ஆனால், சகாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு பலரும் அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகிவிட, மகேஷும் ஜெஸ்ஸியும் மக்கள் மன்றம் என்ற பெயரிலேயே தங்கள் இயக்கத்தை நடத்த முடிவுசெய்தனர். அதற்குப் பிறகு கீதா சாருசிவமும் அவர்களோடு இணைந்துகொண்டார். ஆரம்பத்தில் அந்த இயக்கம் எந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலும் இயங்கவில்லை.
"எப்போதுமே தேசியப் பிரச்சனைகள் குறித்து பேசுவதோ, போராட்டம் நடத்துவதோ கிடையாது. பட்டா வாங்கித் தருவது, கந்து வட்டி பிரச்சனை, பாலியல் துன்புறுத்தல், கொத்தடிமை மீட்பு போன்ற விவகாரங்களில் எளிய மக்களுக்கு உதவுவது என்றுதான் இயக்கத்தை நடத்திவருகிறோம்" என்கிறார் மகேஷ்.
ஆனால், கந்து வட்டி பிரச்சனை, கொத்தடிமை மீட்பு போன்றவற்றில் பணம் கொடுத்தவர்கள் தரப்பு ஒன்றாகச் சேர்ந்துகொண்டு இவர்களை முடக்க முயற்சிப்பதுண்டு. வழக்குகளைப் போடவைத்ததும் உண்டு. இதன் காரணமாகவும் மகேஷும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் பல முறை சிறை சென்றிருக்கிறார்கள்.
கடந்த இருபதாண்டுகளில் கலப்பு மணம் செய்த பல ஜோடிகள் பாதுகாப்புத்தேடி இங்கே வரும் நிகழ்வுகள் பெரும் எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. திருமணத்தை பதிவுசெய்த பிறகு, காவல்துறை அதிகாரிகளிடம் ஆஜர் படுத்தி பாதுகாப்பு கொடுத்து வந்திருக்கிறது காஞ்சி மக்கள் மன்றம்.
ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள் இவர்களைக் கண்டுகொண்டதில்லை. பிறகு, உங்களால் தனியாக செயல்பட முடியாது எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள் என்று அழைத்ததும் உண்டு. ஆனால், தனியாக செயல்படவே மகேஷும் அவரது இயக்கத்தினரும் விரும்பினர்.
இவர்கள் நடத்திய போராட்டத்திலேயே பெரியது, களத்தூர் பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதற்காக நடத்திய போராட்டம்தான். அங்கு மணல் குவாரி அமைப்பதற்காக வந்தவர்கள், அந்தப் பகுதியிலிருந்தபடி எதிர்ப்புத் தெரிவித்த பலருக்கு பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி மணல் குவாரியை துவங்கி விட்டனர்.
அந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் இவர்களை அணுகி மணல் குவாரி அமைப்பதைத் தடுத்து நிறுத்தும்படி கோரினர். இதையடுத்து ஊர் மக்களையும் சேர்த்துக்கொண்டு மணல் குவாரியை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் துவங்கப்பட்டது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, மணல் குவாரி அமைப்பவர்கள் அளித்த லஞ்சப் பணத்தை சேகரித்து திரும்பக் கொடுக்க முடிவுசெய்தனர். ஆனால், அந்தப் பணத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட, அரசு அதிகாரிகள் யாரும் வாங்க மறுக்கவே, அதனை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டனர் மக்கள் மன்றத்தினர். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்ததும் கோபமடைந்த தமிழக அரசு இவர்கள் மீது பெரும் எண்ணிக்கையில் வழக்குகளைப் பதிவுசெய்தது.
பாய்ஸ் படத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறி நடத்திய போராட்டம், எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டம், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் அம்பேத்கர் படத்தை அகற்றிய விவகாரம் உள்ளிட்ட பல வழக்குகளில் மகேஷும் ஜெஸ்ஸியும் பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள். "எங்களுக்கு உதவிசெய்ய பல வழக்கறிஞர்கள் இருப்பதால் வழக்குகளை எளிதில் சந்திக்க முடிகிறது. ஒரு வழக்கு என்றால், பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கூடிவிடுவார்கள்" என்கிறார் மகேஷ்.
வழக்குகள் நீதிமன்றத்தில் வரும்போது, எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்களோ, அதை மகேஷோ, இயக்கத்தினரோ மறுப்பதில்லை. தங்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களிடமும் அதைச் சொல்லிவிடுவார்கள். "நாங்கள் செய்ததை, செய்தோம் என்று சொல்வோம். நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று சொல்லியோ, மன்னிப்புக் கேட்டோ விடுதலையோ, ஜாமீனோ பெறுவது எங்களுக்குப் பிடிக்காது" என்கிறார் மகேஷ்.
காஞ்சி மக்கள் மன்றத்தின் முக்கியமான பலமே, அனைவரும் இணைந்து வாழ்வதுதான். "இப்படி கம்யூனாக இருப்பது மிகப் பெரிய பலமாக இருக்கிறது. பணிகளைத் திட்டமிடுவது, பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்வது, உணர்வு ரீதியாக ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது ஆகியவற்றுக்கு இது உதவுகிறது" என்கிறார் ஜெஸ்ஸி.
"இந்தக் கம்யூன் வாழ்க்கை குறித்து பலருக்கு கேள்வி இருக்கிறது. ஆண்களும் பெண்களும் எப்படி ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதுபோல கேட்பார்கள். குறிப்பாக காவல்துறையினர்தான் இப்படிக் கேட்பார்கள். ஆனால், மக்கள் எங்களை வெகுவாக நம்பினார்கள். தவிர, இது ஏதோ ஆன்மீகவாதிகள் சொல்வது போன்று, சிலர் மட்டும் தனியாக வாழும் ஒரு கூட்டு வாழ்க்கையில்லை. இந்த இடம் திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்" என்கிறார் மகேஷ்.
கம்யூன் வாழ்க்கை முறையில் இருந்தபடி மகேஷ், ஜெஸ்ஸி போன்றவர்கள் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும், தங்கள் வாழ்வகத்தில் புதிதாக இணைபவர்கள் திருமணம் செய்துகொள்வதை இவர்கள் ஊக்குவிக்கவே செய்கிறார்கள்.
2011ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டங்களில் மக்கள் மன்றத்தினர் பங்கேற்றனர். அதில், மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி தீக்குளித்து உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் மன்றம் அமைந்திருந்த மங்களபாடி என்ற ஊரின் பெயர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி செங்கடியூர் என மாற்றப்பட்டிருக்கிறது.
"எளிய மக்களுக்காக உண்மையிலேயே போராட்டம் நடத்தினால் மக்கள் நம்மை நம்புவார்கள். கைது செய்யப்படுவதற்கு நாங்கள் அஞ்சுவதில்லை என்பதால் அரசாங்கமும் நமக்காக இறங்கிவரும். மக்களுக்கு பண உதவிகளைச் செய்வதைவிட, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவுவதையே எங்கள் அடிப்படைப் பணியாக நினைக்கிறோம்" என்று முடிக்கிறார் மகேஷ்.
thanks: BBC
Dedicated by:
Kavignar Thanigai.
No comments:
Post a Comment