Thursday, November 26, 2020

காலத்தை விஞ்சிய சிறுகதை 1: புதிய பாலம்...நா. பார்த்த சாரதி

 காலத்தை விஞ்சிய சிறுகதை 1: புதிய பாலம்...நா. பார்த்த சாரதி



சமூகத் தொண்டன் பொன்னம்பலம் நாயாக அலைந்தான். அலையாவிட்டால் முடியுமா? எடுத்துக் கொண்டிருப்பது எத்தனை பெரிய காரியம்? எவ்வளவு பெரிய பொறுப்பு? தொண்டு செய்வது, பொதுக் காரியங்களுக்காக அலைவதும் தான் அவனால் செய்ய முடிந்த சுலபமான காரியங்கள், இதை இப்படிச் சொல்வதைக் காட்டிலும், பொதுத் தொண்டுகளுக்காக அலையாமலும் பாடுபடாமலும் இருக்க முடியாத ஆட்களில் அவனும் ஒருவன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவன் சர்வ சாதாரணமாக ஏழை மனிதந்தான். பணத்தை வாரி வழங்க அவனால் முடியாது. ஆனால் உழைப்பை வழங்க முடியும். அந்த உழைப்பு என்னும் குறையாத நிதியைச் சமூகப் பணிக்கும், பொதுக் காரியங்களுக்கும் செலவளித்துக் கொண்டிருந்தான் பொன்னம்பலம்.


வடக்குக் கரையில் உள்ள ஊரையும், தெற்குக் கரையில் உள்ள ஊரையும் ஓர் ஆறு குறுக்கே பாய்ந்து பிரித்துக் கொண்டிருந்தது. சிறிய ஆறுதான். வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மணல்தான் ஓடும். எஞ்சிய நான்கு மாதங்களிலோ இரு கரையும் மீறிக் கடுமையாகத் தண்ணீர் பாயும். இந்த ஆற்றுக்குச் சரியான பாலம் இல்லாமல் அக்கரை ஊர்க்காரர்களும், இக்கரை ஊர்க்காரர்களும் துன்பப் பட்டுக் கொண்டிருந்தனர். எவனோ சோழ அரசன் காலத்தில் கட்டின பழைய கல்பாலம் ஒன்று ஊரிலிருந்து வெகு தூரத்துக்கு விலகிப் பத்தாவது மைலிலோ, பதினைந்தாவது மைலிலோ இருந்தது. கரையோரமாகவே அந்தப் பாலம் வரை போய்ச் சுற்றி வளைத்து அக்கரை அடையலாமே என்றால், சுற்று வழி காரணமாக அநாவசியமான காலதாமதம் ஆயிற்று. அந்த இரண்டு ஊர்களுக்கும் வசதியாக ஊரை ஒட்டி ஒரு பாலம் இருந்தால் எவ்வளவோ நன்மையாக இருக்குமென்று எல்லோரும் விரும்பினார்கள். சமூகத் தொண்டன் பொன்னம்பலம் இந்த விருப்பத்தை வளர்த்தான்.


ஐந்தாண்டுத் திட்டம், சமூக வளர்ச்சித் திட்டம், கிராம நலத் திட்டம் என்று என்னன்னவோ திட்டஙக்ள் போட்டிருக்கிறார்களே, அதற்கெல்லாம் இரண்டு ஊர் மக்களிடமும் கையெழுத்து வாங்கி விண்ணப்பம் அனுப்பினான் பொன்னம்பலம். பாலத்துக்கு அஸ்திவாரக்கல் போடுவதற்கு ஒரு மந்திரி, பாலம் முடிந்த பின் அதை திறந்து வைப்பதற்கு வேறொரு மந்திரி என்று வருவதைச் செய்தித் தாள்களில் நிறைய படித்திருக்கிறான் பொன்னம்பலம். தங்கள் ஊர்ப் பாலத்தையும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் எடுத்துக் கொண்டு அரசாங்கத்தார் முடித்து வைப்பார்கள் என்று பொன்னம்பலம் கருதினான். ஆனால் அரசாங்கத்தாருக்குக் குருவிப் பட்டிக்குப் பாலம் போட முயல்வதைவிடப் பெரிய வேலைகள் எல்லாம் இருந்தன. குருவிப்பட்டிக்குப் பாலம் போடாவிட்டால் இப்போது ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று பேசமல் இருந்து விட்டார்கள். எத்தனையோ உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சனைகளைச்  சமாளிக்க வேண்டிய தீவிரமான அரசியல் சூழ்நிலையில், குருவிப்பட்டியின் பாலத்தைப் பற்றி நினைவு வைத்துக் கொள்வதே கேவலமல்லவா? எனவே குருவிப்பட்டியிலும் அதன் எதிர்க்கரையிலும் உள்ள மக்களைத் தவிரக் குருவிப்பட்டிப் பாலம் பற்றி வேறெவரும் நினைவு வைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.


அதற்கென்ன செய்வது? அரசாங்கத்திலிருப்பவர்களுக்குக் கண்டதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு திரியமுடியுமா? தாங்கள் அரசாங்கத்தில் இருப்பதே சில சமயங்களில் மறந்து விடுகிறதே அவர்களுக்கு ஆகவே குருவிப் பட்டியும் அதன் பாலமும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என்று விட்டு விட்டார்கள்.


ஆனால் குருவிப்பட்டி வாசிகள் அப்படி விடுவதற்குத் தயாராயில்லை. அந்தப் பட்டிக்காடு மனிதர்களிடம் உழைப்பு இருந்தது. தன்மானம் இருந்தது. தங்களையும், தங்கள் ஊர்ப் பாலத்தையும் பற்றித் தங்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு பதவிக்குப் போனவர்களே மறந்ததை, அவர்கள் மன்னித்துத்தான் தொலைக்க வேண்டியிருந்தது. மன்னிப்பு என்கிற பரஸ்பர பலவீனம் இல்லாவிட்டால் இந்த உலகம்தான் என்றைக்கோ உருப்பட்டுத்  தேறியிருக்குமே! எத்தனையோ அயோக்கியர்களையெல்லாம் சுலபமாகப் புண்ணிய பாவங்கஆளின் பேர் சொல்லி மன்னித்துவிட்டுக் குட்டிச் சுவராய்ப் போய்க் கொண்டிருக்கிற பெருமை இந்தப் பாரத நாட்டிற்குப் புதிதா என்ன?


குருவிப் பட்டிப் பெருமக்களும், அவர்களின் அன்புக்குரிய சமூகத் தொண்டனாகிய பொன்னம்பலமும் இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். தங்கள் ஊர் ஆற்றின் குறுக்கே பாலம் போடுவதற்குத் தங்கள் ஊரைப்பற்றி அக்கறையும், நினைவும் இல்லாத அரசாங்கத்தை நம்பிப் பயன் இல்லை. ஒருவேளை அரசாங்கத்துக்குத் தங்களுடைய ஆட்சியின் கீழே குருவிப்பட்டி என்றுஒரு கிராமம் இருப்பதே மறந்து போயிருக்கலாம். எனவே தங்கள் ஊர்ப் பாலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்வது என்ற திடமான முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுக்கு வருமாறு அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தவன் பொன்னம்பலம்தான்!


ஊர்ப் பக்கத்திலிருந்த கருங்கல் குன்றிலிருந்து பாலத்துக்கான கற்கள் உடைக்கப் பட்டன.ஊர்ப்பொதுவில் ஒரு பெரிய சுண்ணாம்புக் காளவாய் போட்டுக் காரை நீற்றினார்கள்.சில அவசியமான செலவுகளுக்காக் இரண்டு ஊர்ப் பொது மக்களிடமிருந்தும் பொன்னம்பலம் ஒரு நிதி வசூல் செய்திருந்தான். அதற்காகத்தான் அவன் நாயாக அலைந்து பாடுபட்டான் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டோம். இரண்டு கிராமத்து மக்களும் தங்கள் வேலை நேரம் போக எஞ்சிய நேரமெல்லாம் பாலத்துக்காக உழைத்தனர். ஆண்,பெண், இளைஞர், முதியோர், வேறுபாடின்றி எல்லோரும் பாலத்துக்காகப் பாடுபட்டனர்.

ஏழெட்டு மாதங்களில் பாலம் முடிந்தது. மிகவும் நல்லவரான குருவிப்பட்டிப் பஞ்சாயத்துத் தலைவரைக் கொண்டு ஊரார் உழைப்பால் உருவான அந்தப் பாலத்தைத் திறந்து வைக்கச் செய்தான் தொண்டன் பொன்னம்பலம். எல்லோரும் பொன்னம்பலத்தின் உழைப்பைப் பாராட்டினார்கள்; கொண்டாடினார்கள்.


விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட இரண்டு ஊர் மக்களும் , அந்தப் பாலம் உண்டானதால் ஏற்பட்ட நன்மையை அநுபவைத்தார்கள். ஏர் பூட்டிய உழவு மாடுகள் ,கட்டை வண்டிகள், வைக்கோல் வண்டிகள் எல்லாம் பாலத்தின் வழியாக வந்து போய்க் கொண்டிருந்தன. இரு ஊர்களின் உறவும், பழக்கமும் பாலத்தால் நெருங்கிற்று. இரண்டு ஊர் மக்களும் விவசாயிகள் ஆதலால் , பாலம் வண்டிகளின் போக்கு வரவுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இன்ரியமையாததாகவும் இருந்தது.


குருவிப்பட்டிக்கு அப்பாலுள்ள பிரதேசம் வேறு மாகாணத்தைச் சேர்ந்தது. அங்கே மதுவிலக்கு இல்லை.குதிரைப் பந்தயம் உண்டு. எனவே குடிப்பதற்கும், குதிரைப் பந்தயத்துக்கும் பத்து மைல் சுற்றிச் சோழ அரசன் காலத்துக் கல்பாலம் வழியாகப் போய்க் கொண்டிருந்த பணக்காரர்கள் அது சுற்று வழி என்று கருதி இப்போதெல்லாம் குருவிப்பட்டிப் பாலம் வழியாகப் போகத் தொடங்கினார்கள். சமூகத் தொண்டன் பொன்னம்பலமும், ஊர்ப் பொதுமக்களும் கட்டின பாலம்,ஏதோ சுய தேவைக்காகச் சுருங்கிய அளவில் கட்டப்பட்டிருந்தது.


முக்கியமாக கிராம மக்களின் தேவையை உணர்ந்து உழவு மாடுகளு, கட்டை வண்டிகளும், வைக்கோல் பார வண்டிகளும், போவதற்காகக் கட்டப்பட்ட அந்தப் பாலத்தில் இப்போது கார்களும், லாரிகளும் போகத் தொடங்கிவிட்டதால் கிராம மக்கள் இடையூறு அநுபவித்தனர். கட்டை வண்டிகளும் மாடுகளும் , ஊடே நுழைய நேரமே இன்றி அந்தப் பக்கமிருந்தும், இந்தப் பக்கமிருந்தும் , லாரிகளும் கார்களும் மொய்த்தன. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான் என்பது போல் ஊர்க்காரர்கள் போட்ட பாலம், ஊர்க்காரர்களுக்குப் பயன்படாமல் கார்க்காரர்களுக்குப் பயன்படத் தொடங்கிவிட்டது. ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போய்விட்டுத் திரும்பிய பட்டினத்துப் பணக்காரர் ஒருவர் நிறையக் குடித்துவிட்டுப் போதையோடு மிகப் பெரிய ப்யூக் காரில் வந்தார். கார் குருவிப்பட்டிப் பாலத்தில் வரும்போது ஒரு கட்டை வண்டியில் மோதி,வண்டிக்காரன் கீழே கார் சக்கரத்தினடியில் விழுந்து நசுங்கி இறந்து போனான். இந்தச் சம்பவம் குருவிபட்டிக்காரர்களின் கண்களைத் திறந்தது. மறுநாள் முதல் அந்தப் பாலத்தில் கார்களையும், லாரிகளையும் விடுவதில்லை என ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து மறியல் செய்தார்கள்.


குதிரைப் பந்தயத்தையும், குடியையும் நினைத்துக் கொண்டு ஆவலோடு குருவிப்பட்டிப் பாலத்தை நோக்கி வந்த கார்கள் மறியலின் காரணமாக ஏமாற்றத்தோடு திரும்பிப் போயின.


பாலத்துக்குள் நுழைகிற இடத்தில் சமூகத் தொண்டன் பொன்னம்பலம்,இன்னும் நாலைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு நுழைய இடமின்றிக் கைகோத்து நின்றான். ஒரு பெரிய கார்க்காரர் அவர்களுடைய மறியலைப் பொருட்படுத்தாமல் இறங்கி வந்து கூப்பாடு போட்டார்.


இது உன் அப்பன் வீட்டுப் பாலமில்லை , நீ யார் மறியல் செய்வதற்கு? அத்தனை மினிஸ்டரையும் எனக்குத் தெரியும் ஒரு வரி எழுதிப் போட்டால் உங்களையெல்லாம் உள்ள தள்ளிவிடுவார்கள்.


பொன்னம்பலம் அவருடைய பேச்சைக் கேட்டுக் கோபம் அடையவில்லை. அமைதியாகவே அவருக்குப் பதில் சொன்னான்.ஐயா! இது  ஊர் மக்களின் உழைப்பால் உருவான பாலம், கட்டைவண்டிகளும், உழவு மாடுகளும் போவதற்காகத்தான்ன் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் இந்தப் பாலத்தைக் கட்டினோம். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்காக அரசாங்கம் கால்பைச எங்களுக்குத் தரவில்லை. இப்போதோ எந்நேரமும் கார்களும், லாரிகளும் இந்தப் பாலத்தை ஆக்ரமிட்துக் கொள்கின்றன. இரண்டு கிராமத்து வண்டிகளும் போகமுடிவதில்லை. நாங்கள் உழைத்ததன் பயன் வீணாவதை எங்களால் மன்னிக்க முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இந்தப் பாலத்தில் ஒரு கட்டை வண்டிக்காரன் காரில் நசுங்கி இறாந்து போனான். இனியும் குடிகாரர்களுக்கும் குதிரைப் பந்தய வெறியர்களுக்கும், இந்தப் புனிதமான பாலம் பயன்படுவடஹி நாங்கள் அனுமதிக்கத் தயாராயில்லை.


நான்சென்ஸ்! நான் யார் தெரியுமா? என்னிடம் இவ்வளவு திமிராகப் பெசுகிறாயே? நான் சுட்டு விரலை ஆட்டினால் இந்த நாட்டை ஆளும் அத்தனை மந்திரிகளும் ஓடி வந்து கைகட்டி நிற்பார்கள். தெரியுமா உனக்கு?


அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை ஐயா! இப்போது நீங்கள் இந்தப் பாலத்தின் வழியாகப் போக முடியாது. வணக்கம் . திரும்பி செல்லலாம் நீங்கள்...என்று பேச்சை முடித்தான் பொன்னம்பலம்.


அவனை முறைத்து விட்டுக் காரில் போய் ஏறிக் கொண்டுத் திரும்பினார் அவர்.


மறியல் தொடர்ந்து நடந்தது. கட்டை வண்டிகளையும் உழவு மாடுகளையும் தான் பாலத்தில் போகவிட்டார்கள்.கார்களையும்; லாரிகளையும் போகவிடவில்லை. அதற்காகக் கார்க்காரர்களையும் லாரிக்காரர்களையும் கொடுமைப்படுத்தவில்லை. இந்தச் சிறு பாலம் கிராம மக்களின் நலனுக்காக நாங்கள் போட்டது. தயவு செய்து இதை நாங்கள் உங்களுக்கு விடாமலிருப்பதற்காக மன்னியுங்கள். சிறிது தொலைவு போனால் கல்பாலம் ஒன்றிருக்கிறது. அது அரசாங்கத்துக்குச் சொந்தமான பொதுப் பாலம். அதை உபயோகப் படுத்துங்கள்.இங்கே வராதீர்கள் என்று பணிவாகச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.


கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு வேண்டியவர்கள் .கேவலம் ஒரு பட்டிக்காட்டுப் பாலத்தில் போக முடியாது என்றால், சும்மா இருப்பார்களா? அவர்களால் ஆகாததும் உண்டோ? இருந்த இடத்திலிருந்தபடியே மினிஸ்டரோடும் ஹைவேஸ் கமிஷனரோடும் டெலிபோனில் பேசினார்கள். அந்தப் பட்டிக்காட்டான்கள் செய்யும் அக்கிரமத்தை எடுத்துக் கூறினார்கள்.


அதன் விளைவு? ....மறுநாள் குருவிப்பட்டி பாலத்தில் ஹைவேஸ் அதாரிடி யோடு கூடிய விளம்பரப் பலகை ஒன்று தொங்கியது. 

இந்தப் பாலத்தின் வழியாக கார்கள், லாரிகள் தவிர கட்டைவண்டிகள் போகக் கூடாது. இது அரசாங்க உத்தரவு. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.


இப்படிக்கு

கமிஷனர்

அரசாங்க ஹைவேஸ் இலாகா

சமூகத் தொண்டன்ன் பொன்னம்பலமும், ஊர்க்காரர்களும் , மறியலை நிறுத்தவில்லை. அரசாங்க உத்தரவையும் எதிர்த்து மறியல் செய்தனர்.


சும்மா இருப்பார்களா அரசாங்கத்தார்? வண்டி வண்டியாக லாரி நிறைய ஸ்பெஷல் ரிசர்வ் போலீஸார் வந்து இறங்கினார்கள், அடிதான், உதைதான், அடி  உதைக்குப் பயந்து பெரும்பாலோர் மறியலைக் கைவிட்டு ஓடிவிட்டனர். பொன்னம்பலமும் இன்னும் இரண்டு மூன்று ஆட்களும் மறியலை நிறுத்தவே இல்லை.


இந்தப் பாலம் எங்கள் பிறப்புரிமை. இதை விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்கள் உழைப்பு எங்களுக்கே சொந்தம். என்று கோஷமிட்டான் பொன்னம்பலம்.


போடுடா அவன் மண்டையிலே ...முரட்டு போலீஸ்காரன் ஒருத்தன் அவனை அடித்தான்.


மண்டையிலிருந்து குருதி ஒழுகக் கீழே வீழ்ந்தான் பொன்னம்பலம். பிரக்ஞை தவறியது. மறுபடி அவன் தன் நினைவுற்றுக் கண்திறந்து பார்த்தபோது பாலத்தில் கார்களும், லாரிகளும் சுகமாகப் போய்க் கொண்டிருந்தன.


இந்த உருப்படாத சமூகத்துக்கு இது மாதிரிப் பாலங்கள் இன்று தேவை இல்லை. ஏழைகளுக்கும் நியாயத்துக்கும் நடுவிலிருக்கிற தூரத்தை இணைக்க முதலில் ஒரு புதிய பாலம் போடவேண்டும். அதைக் கல்லாலும், காரையாலும் போட முடியாதே! என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்து தள்ளாடி நடந்தான் அவன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment