Friday, November 13, 2020

கழுகுப் பார்வை: கவிஞர் தணிகை

 கழுகுப் பார்வை: கவிஞர் தணிகை





ஆற்றங்கரையில் நான் அமர்ந்திருப்பதைப் போல அண்ணாந்தும் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே போக வர 7 கி.மீ நடப்பதுண்டு....அப்போது ஆற்றில் அடித்துச் செல்லப் படும் பல்வகைப் பட்ட பொருட்கள் எப்படி ஆற்றங்கரை மேல் இருப்பாரை பாதிப்பதில்லையோ அது போல எனது நடைப்பயிற்சியின் போது எனைப் பாதித்தும் பாதிக்காத பல காட்சிகள்


முருகேசன் அவன் தான் அவனது அண்ணனுக்கு சமைத்து போட்டு அவரை வேலைக்கு அனுப்ப வசதியாகவே வந்து அவன் அண்ணனுடன் இருந்தானே அந்த முருகேசன் எலும்பும் தோலுமாய் அப்படியேதான் இருக்கிறான். கையில் ஒரு சிவப்பு நிற சீன நிற டப்பா செல். அடிக்கடி லாக் ஆகிக் கொண்டிருந்தது சரி செய்ய முடியுமா என்று கேட்டான்...தினமும் 300 ரூ கூலி வேலைக்குச் சென்று வருகிறான் அவரது சொந்தக் காரர் இடத்திலேயே இப்போது கட்டட வேலை நடைபெற்று வருகிறது இரு சகோதரர்களும் சேர்ந்து இரண்டு வங்கிக் கிளைகளையே காலி செய்து அந்தப் பணத்தில் கட்டுவது போல கட்டி வருகிறார்கள்...

முருகேசனது அண்ணார் அந்த வீட்டில் பெண் எடுத்தவர் ஓடிக் கொண்டிருந்த மால்கோவில் பர்ணஸ் அடுப்பு பிரிவில் அவர் பணி செய்து வந்தார். அவர்கள் எல்லாம் எப்படி எல்லாமோ உஷாராய் பிழைக்க முருகேசன் அப்படியே தான் இருக்கிறான்...


ஆனால் அவனுக்கு இரு பெண் குழந்தைகளாம். ஒன்றைக் கட்டிக் கொடுத்து விட்டானாம். மற்றொன்று இப்போதுதான் எழாவதோ எட்டாவதோ படித்து வருவதாகக் கூறினான்.அவனை முன்னேற விடாமல் ஏதோ ஒன்று பேய் பிடித்த மாதிரி வந்து தடுத்து விடுகிறதாம். அடிக்கடி காதில் வந்து சொல்வதாக அவன் உணர்கிறானாம்.


ஒன்று 8 கி.மீ அவன் சைக்கிளில்/ உந்து வண்டியில் செல்ல வேண்டும் அல்லது பேருந்தில் செல்ல வேண்டும்... வேலை முடிந்து வீட்டுக்கு...


அந்த பாதிக்கும் மேல் பூச்சி அரித்த தென்னை மரம் சாலையோரத்தில் மின் கம்பிகள் மேல் ஒரு நாள் வீழ்வது நிச்சயம் அதைப் பற்றி உரியவர்களிடம் எல்லாம் சொல்லியாகிவிட்டது. என்றாலும் அது அப்படியேதான் நாளுக்கு நாள் உள் அரிப்பை அதிகமாக்கி கடைசி வரை தொடுத்துக் கொண்டு வந்து நின்று கொண்டிருக்கிறது...கேரளத்து கள்ளிக் கோட்டை விமான ஓடுபாதை  விமான தளம் பற்றி முன்பே சொல்லி நீளப் படுத்தவும் , அகலப் படுத்தவும் பல முறை சொல்லியும் அதை செய்யாததால் விளைவு என்ன ஆயிற்றோ அதே போல ஒரு நாள் இந்த தென்னையும் மின்சார ஒயர்கள் மேல் விழுந்து விபத்து ஏற்படலாம் அப்போது சாலையில் எந்த வாகனமும் மனிதர்களும் பயணம் செய்யாதிருக்க வேண்டும்.


இந்திய பணவிடைத்தாளை செல்லாத காசாக்கி வங்கி முன் வாடிக்கையாளரை வரிசையில் நிறுத்திய தினம் நடைமுறைப் படுத்தி 3 ஆண்டுகாலம் ஆகிவிட்டதாமே. அது வரவேற்கத் தக்க சாதனை என்று நாட்டின் பிரதமர் உரையாமே...அட்டா என்ன சாதனை எப்படி எல்லாம் அதிலிருந்து நாடு மாறி விட்டது...எல்லாமே டிஜிட்டல் சேவையாக வேண்டுமாமே...இறந்து போன துரைக்கண்ணு அதாங்க தமிழக விவசாய அமைச்சர் நிறைய நிறைய 850 கோடி 3000 கோடி என்று பல இடங்களிலும் சொத்து வாங்கிப் போட்டிருப்பதாக செய்திகள் ஏனோ இப்போது நினைவு வருகிறது தடுக்க முடியவில்லை...

காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்திருக்கலாமோ... தமிழக விவசாயிகள் டில்லி தலைநகரில் என்னன்னவோ செய்து பார்த்தார்கள்...ஊஹூம் ஒன்றுமே நடக்க வில்லை. இன்று மத்தியில் ஒரே மசோதா நாடெங்கும் விவசாயம் முன்னேறி விட்டதாமே..

ஓரு உருவா விலை என்ற காரணத்தாலே வியாபாரிகளிடம் விவசாயிகள் தக்காளியை விற்காமல் ஒரு டன் தக்காளியை சாலையில் போட்டு காலில் மிதித்து சாஸே செய்து விட்டனராம்...இவர்களிடம் வாங்கி அவர்கள் 12 முதல் உருவா 30 வரை விற்கலாமாம். விவசாயிகளிடம் மிச்சமா இருக்கும் கோவணத்தை உருவாம இருந்தா சரி.  எல்லா இடத்திலுமே ஊழல் ஏழை விவசாயிகளுக்கு இரண்டாயிரம் இரண்டாயிரம் கொடுத்த பணக் கதை பற்றித் தான் நாட்டிற்கே தெரியுமே...


தீபாவளி இருக்க இருக்க ஜீரோவளியாகி வருகிறது...என்றாலும் காலை ஆறு மணி முதல் 7 மணி வரை மட்டும் இரவு 7 மணி முதல் 8 மணி வரைதான் பட்டாசு வெடிக்க சட்டமாம். மீறினால் 6 மாதம் அல்லது 1000 ரூ அபராதமாம். இதுவும் சாலையில் எச்சில் துப்புவதை, பொது இடத்தில் புகை பிடிப்பதை, முகக் கவசம் அணியாமல் பயணம் போகக் கூடாது என்பதைப் போன்றதா...நோ நோ காவல் துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும். ஒரு செவி வழி செய்தி ஒரு இளைஞர் பட்டாசு விற்பனைக்கு கடை போட உரிமம் கேட்க சென்றாராம் பல்லாயிரம் கேட்டதால் பயந்து முயற்சியை கை விட்டு விட்டாரம். 

இத்தனை எண்ணிக்கை பட்டாசு கடைதான் போட வேண்டும் அதிலும் பசுமைப் பட்டாசுதான் விற்க வேண்டும் என்பதெல்லாம் சட்டமய்யா. சட்டம். சாலமன் பாப்பய்யா குரல் தொனியில் சட்டமய்யா சட்டம் என்பதை சத்தமாக வாசித்துப் பார்க்கவும்... கடந்த சில வாரங்களுக்கு முன் கடலூர் மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் ஒருவர் பொறியில் சிக்கி அவரது வீட்டில் கட்டுகட்டாகவும் சிக்கியதாக பத்திரிகை செய்தி படித்த நினைவு...


பஞ்சாப் விவசாய நாடு என்று நிரூபிக்கிறது தீபாவளியை புறக்கணித்து விவசாயிகள் எல்லாம் வீடு வீடாக சென்று அணி சேர்கிறார்களாம்..


பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு...


கடந்த ஆய்த பூஜை, விஜய தசமியில் மட்டும் அந்த இரண்டு நாளில் மட்டும் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் வியாபாரம் 12.5 கோடிக்காம்...


தீபாவளியில் அதை விட  அதிகம் விற்று அந்த சாதனை முறியடிக்கப் பட்டு புதிய சாதனை அளவு எட்டப் படும் என்பது எங்களது இலக்கு...


எங்களுக்கு சாதனை செய்வதெல்லாம் ஜுஜுபிய்யா...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment