Saturday, November 14, 2020

சூரரைப் போற்று(வோம்): கவிஞர் தணிகை

 சூரரைப் போற்று(வோம்): கவிஞர் தணிகை



நீண்ட நாளுக்கும் பின் குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து பார்க்க ஒரு படம் 

சூரரைப் போற்று. தியேட்டர்களில் வெளி வர வாய்ப்பில்லாதாதால் நீண்ட நாள் கழித்து பார்க்க வாய்த்தது நேற்று.

சூரியா இந்த படத்தின் நெடுமாறன் ராஜாங்கம்  என வாழ்ந்து காட்டியுள்ளார். இது டெக்கான் ஏர் நிறுவனத்தின் ஜி.ஆர்.கோபிநாத் மற்றும் அவரது மனைவி கல்பனா என்பாரின் சுய‌ ச‌ரிதத்தை எடுத்துக் கொண்டு அத்துடன் சினிமா பாணியில் நிறைய கற்பனைப் புனைவை சேர்த்து வழங்கி இருப்பதாக இந்தக் கதையின் உண்மை நாயகன் ஜி.ஆர். கோபி நாத் குறிப்பிட்டுள்ளார்.


கணவன் மனைவி இருவருமே ஒரு இலட்சியத்துடன் சேர்ந்து வாழும் போதும் எவ்வளவு தடைகள் வரினும் அதை உடைத்தெறிந்து சிகரம் தொடலாம் வெற்றிப் படிகளில் ஏறி விடலாம் என்ற விதையை தூவும் படம்.சிலர் சாதித்துக் காட்டி இருக்கின்றனர். பொதுவாக பலர் வாழ்விலும் நடைமுறை எதார்த்தத்தில் இப்படி எல்லாம் சாதித்து விட முடிவதில்லை அதன் காரணம் அடர்த்தியான  ஊழல் அரசியல் மற்றும் மக்கள் நலம் சாரா ஆட்சி முறை.


ஆனால் சுதா கொங்கரா  இயக்குனர் பாலாவின் உதவியாளராக இருந்து மிக நன்றாக கற்றுக் கொண்டு மிக நன்றாக உழைத்து இந்தப் படத்தை தொய்வின்றி பார்க்கும்படி செய்திருக்கிறார். நேர்த்தியான பிசிறில்லாக் காட்சி அமைப்புகள். நல்ல படப் படிப்பும் அதற்கேற்ற பின்னணி இடத் தேர்வுகளும் மிகவும் நன்றாகவே இருக்கின்றன.


ஊர்வசி தாய், அவரது கணவராக மற்றும் நெடுமாறனின் தந்தையாக வருபவர்,நண்பர்கள், மனைவியாக வரும் அபர்ணா பாலமுரளி, கர்ணாஸ்,காளி வெங்கட் இப்படி அனைவரும் பாத்திரம் உணர்ந்து புதிய படிமங்களை நடிப்பது போல அல்லாமல் உருவாக்க உருவாக காரணமாயிருக்கின்றனர்.



ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களாக அனைவரையும் தொட்டு சிறப்பு சேர்த்திருக்கின்றன. இந்தப் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பச்சைக்கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ என்ற பாடல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றதைப் போல வெற்றி வலம் வந்து விட்டன.


மாறன் விமானப் பயணத்துக்கு பணம் போதாமல் அனைவரிடமும் கெஞ்சுவது நமது கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. ஆனால் அது போன்ற சூழல்களில் யதார்த்தமாக ஒரு நபர் ஏமாற்றுகிறாரா அல்லது உண்மையிலேயே அந்த நிலைக்கு உதவ வேண்டுமா என்று சொல்ல முடியாது ஏராளமான போலிகள் ஊடுருவிய  வாழ்வாகி விட  இந்த சூழலில் இந்திய சூழலில் ஒருவர்க்கு உதவுவது கூட பாத்திரமறிந்து பிச்சையிடுவது என்பது எல்லாம் முடியாததாக நிற்கிறது என்பது வேறு. ஆனால் இந்தப் படத்தின் ஆணி வேர் கரு அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.


மகாத்மா காந்தியின் பெட்டி இரயில் பெட்டியிலிருந்து தூக்கி வீசி எறியப்பட்டது அதன் பின் எப்படி ஒரு சரித்திரம் நடைபெற காரணமானதோ அது போல இந்த மாறன் தான் பட்ட துன்பம் இனி ஏழை மக்கள் படக் கூடாது அனைவருக்கும் விமான சேவை வழங்கி விட வேண்டும் என்பதே இலக்கு என்று தனது வாழ்வை மட்டுமல்ல மனைவி, தாய், நண்பர்கள்  நல் எண்ணம் கொண்ட ஊர்மக்கள்  என அனைவரின் வாழ்வையும் பணயம் வைத்து வசீகரித்து கடைசியில் படாத பாடு பட்டு எப்படி இலக்கில் வெற்றி பெறுகிறார் என்று சொல்லி முடித்திருக்கிறார்கள். அரசாங்கத்தில் இருக்கும் நடமுறைகள், அதில் வீற்றிருப்பார் செய்யும் போலித் தனங்கள், மாய்மாலங்கள் , எளியோரை ஏற விடாமல் அழுத்தியே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சமுதாயக் குள்ள நரிகள்...இப்படி சுழலும்போது கதையின் போக்கில்...


தொய்வின்றி விடாமுயற்சியுடன் போராட ஒவ்வொருவரும் தலைப்பட வேண்டும்...வெற்றி வரும் என்ற அடிநாதம் இரத்த நாளமாக விவரித்து படமாக்கப் பட்டு சொல்லப் பட்டிருக்கிறது. மகுடமாக அப்துல் கலாமை சந்திக்கும் காட்சி வேறு...


                                              G,R,GOBINATH .DECCAN AIR LINES.

அனைவர் ஆதரவையும் இப்போதே பெற்று விட்டது . எனவே நாமும் சூரரைப் போற்றி உள்ளோம்.


மறுபடியும் பூக்கும் வரை:

கவிஞர் தணிகை.


பி.கு: தீபாவளி, நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பவற்றை எல்லாம் எங்கள் வீட்டில் நாங்கள் குடும்பத்தோடு பார்த்த  சூரரைப் போற்று படம் விஞ்சி விட்டது...தீபாவளிக்கு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. மகிழ்வு. சிறப்பு.




3 comments: