Saturday, October 31, 2020

நீ தான் உலகம்....கவிஞர் தணிகை.

 இயற்கையை இயற்கையின் இயல்புடனே இரசிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால் இரசிக்க முடியாது. அது மட்டுமல்ல மனிதர்க்கு வேண்டுமென்ற கோணத்துடன் மட்டுமே இயற்கையை பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.



திருவண்ணாமலையின் கிரி வலம் இரத்து

தாரமங்களம் கையிலாய நாதர் ஆலயத்தில் அண்ணாபிசேகம் மக்கள் கூடத் தடை.

 சிறு சிறு கோவில்கள் எல்லாம் அண்ணாபிசேகம் செய்தன. சோறு கண்ட இடம் சொர்க்கமாமே...அதாவது சோற்று அலங்காரத்துடன் இருக்கும் சிவத்தைக் கண்டவர்க்கு சொர்க்கம் உண்டாம்.


அது அப்படி என்றால் விவிலியம், முகமதியம், புத்தம், ஜைனம்,போன்ற மதங்கள் எல்லாம் என்ன சொல்லும்? ஏன் அதே வைணவம், கௌமாரம், சௌரம், காணபத்யம், சக்தேயம் எல்லாம் என்ன சொல்லும்?



எல்லாம் இரண்டுள் அடக்கம். அதாவது உடல் உயிர். உடல் சக்தி உயிர் சிவம்.

எனவேதாம் திருமூலர் போன்றோர் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!


கட உள் கடவுள்...


புளூ மூன்  பார்க்க புறப்பட்டேன். நிலா நான் பார்க்க புறப்பட்டு கிழக்கு நோக்கி முன்னேறியதைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டதோ...

கருப்பு ரெட்டியூர் சென்று மேடு ஏறும் போது மஞ்சள் நிலா பெரு வட்டமாக கீழ் வானில்.

முழு நிலவும், சூரியனும் உதிப்பது கிழக்கில் இருந்துதானே.



துணைவியை அழைத்து அருகிருக்கும் வீட்டு மாடி ஏறி கீழ் வானில் மஞ்சள் நிலா காணச் சொன்னேன் செல்பேசியில்

துணி துவைத்துக் கொண்டிருக்கிறேன்...சிவா குடும்பம் பேசியபடி இருக்கிறார்கள்...தொந்தரவு செய்யாதீர் , நான் பார்த்துக் கொள்கிறேன்...



தங்கையை அழைத்தேன், மாடியில் நடமாடிக் கொண்டே பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். புளூமூன் என்றால் ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலாக் காட்சி வருவதுதானே...(அதில் என்ன என்பது போன்ற பதிலுடன்)



எனக்கு என்னவோ மிக அற்புதமான நாளாக நேரமாக இருந்தது. அந்த நேரத்துக்காகவே இரவில் டார்ச் விளக்கை எடுக்காமலே கூட நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தேன்.



காண்பதெல்லாம் காணும் காட்சி எல்லாம் மகிழ்வாக இருந்தது. விளக்கில் இருந்து பரவும் கதிர், மின் கம்பம் மேல் செடிகொடிகளின் நிழல்,பாலத்தின் மேல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு வீட்டில் சண்டை, வாகனங்கள் எல்லாம் அதி வேகமாக விரைந்து கொண்டிருக்க நான் சிறிது நேரம் அந்த சாலையோர பாலச்சுவர் மேல் அமர்ந்தபடி இருந்தேன்...எல்லாம் ஏன் இந்த அளவு வேகமாக இருக்கிறார்கள்...காலத்தை நேரத்தை இயற்கையை இரசிக்க சிறிது நேரம் ஒதுக்குவார்களா?

நிலா காய்கிறது நிதம் தேய்கிறது யாரும் இரசிக்க வில்லையே...என் கண்கள் மட்டும் அதைக் காணும்...

பொருளின்றி போகலாம் பொருள் செலவின்றி போகலாம் உங்களுள் இருப்பதுதானே சாந்தி, மகிழ்வு, நிம்மதி யாவுமே...

நீ தான் உலகம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.






No comments:

Post a Comment