Wednesday, October 2, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 6. வேணு பார்த்திபன்: கவிஞர் தணிகை

 என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 6. வேணு பார்த்திபன்: கவிஞர் தணிகை

Image result for everest ever rest

1987 அல்லது 1988 ஆகவும் இருக்கலாம் 30 ஆண்டுக்கும் மேலாகிவிட்டது அவன் மறைந்து.வே.பார்த்திபன் ஆங்கிலத்தில் எழுதும்போது வி.பார்த்திபன் . இவனது தந்தை பெயர் வேணுகிருஷ்ணன். இவன் ஒருவன் தான் எனது பால்ய நண்பன். இரண்டாம் வகுப்பு வரை பள்ளியின் கீழ்க்கட்டடத்தில் சேர்ந்து படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது அவர்கள் ஊர்  திருச்சி பக்கம். தந்தை மால்கோ கம்பெனியில் டைப்பிஸ்ட் பணி. எனவே அந்தக் குடும்பம் எங்களது ஊரில் குடி இருந்தது. அவனது தாய் இன்னும் இருக்கிற ஒரு உத்தம மனுஷி.

அதன் பின் அவர்களுக்கு மால்கோ குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு அவர்கள் மால்கோஅலுவலர் குடியிருப்புப் பகுதிக்கு மாறிப் போனார்கள். இடைவெளி. அதன் பின் நான் இதே ஊரில் 5 ஆம் வகுப்பு வரை படித்து 6 ஆம் வகுப்பு வைத்தீஸ்வரா பள்ளியில் சேர்ந்தேன் . அவனும் அங்கே ஏதோ ஒரு வகுப்பில் அதே பள்ளியில் இருந்திருக்கிறான் என்றாலும் பெரிய நினைவுக்குரிய பதிவுகள் எல்லாம் இல்லை.

பள்ளி இறுதி ஆண்டு அதாவது பதினோராம் வகுப்பு நான் மஞ்சள் அல்லது பச்சை நிற கபடி அணிக்கு தலைவன். பள்ளியில் வைத்த ஆரம்ப கட்ட போட்டிகளில் வென்று இறுதி ஆட்டம் மட்டுமே பாக்கி. அதை வைக்கவே மாட்டேன் என உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்ன காரணத்தாலோ அடம் பிடித்து வந்தனர். செல்வன் உடற்கல்வி ஆசிரியர் இன்னும் இளமை குன்றாமல் இருக்கிறார் அவர் அப்போது பி.ப்பி.எட்... அவர் எங்களுடைய நச்சரிப்பு தாங்காமல் ஒரு நாள் மதிய வகுப்பு முடியும் நேரம் மாலையில் கடைசி பீரியட் 3.45 மணி முதல் 4.30க்குள் இறுதி ஆட்ட கபடி போட்டியை நடத்துகிறேன் என ஒரு கட்டாந்தரையில் சிறு சிறு கற்கள் முட்டிக் கொண்டிருக்கும்  இடத்தில் கோடுகள் போட வைத்து இங்கே ஆடுங்கடா என்று சொல்லி விட்டார்.

யார் டாஸ் வின் பண்ணியது என நினைவில்லை. எங்கள் பக்கம் சைட். அவர்கள் பக்கம் ரைட் ...முதல் ரைடராக பார்த்திபன் வருகிறான் நன்றாக வளர்ந்திருக்கிறான். நான் சிறுவனாக அதிக வளர்ச்சியின்றி அப்போது வரை அகத்தியன் என்றே புனை பெயருடன் அழைக்கப்பட்டு அதை மாற்றவே எல்லா விளையாட்டுகளிலும் தோற்றாலும் ஜெயித்தாலும் பங்கு கொள்ள ஆரம்பித்து காலையில் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வரிசையில் முதலாக நிற்பவன் படிப்படியாக பின்னேறி 3வதாகவோ 4வதாகவோ நிற்குமளவு வளர்ந்திருந்தேன். அது ஒரு பக்கம் போகட்டும்.

பார்த்திபன் ரைடு வந்தானா, நல்லா ஏற விட்டு ஒரே டைவ் கேட்ச். நான் தான். அவன் மூச்சை விட்டு விட்டான் எதிர்பாராத இந்த அதிர்ச்சி அவனை வீழ்த்தி விட்டது. அதிலிருந்து எப்படியோ விளையாடி அன்று போட்டியை வென்றுவிட்டோம். எனது வலது முழங்கையில் இன்னும் அந்த கட்டாந்தரைக் கற்கள் குத்தி கிழித்த காயத்தின் தழும்பு மறையாமல் பார்த்திபன் மறைந்தாலும் அவன் நினைவு போலவே பெரிதாகவே இருக்கிறது.

அது முதல் எங்கள் நட்பின் பயணம் ஆரம்பத்திருக்கும் போலும். அந்த ஆண்டு முடிந்தது. அவன் கல்லூரியில் சென்று புகுமுக வகுப்பு எழுதி தேறத் தவறி அதன் பின் அஞ்சல் வழிக் கல்வியில் இளங்கலை  வகுப்பு படித்து வந்தான்.

நான் எனது படிக்கப்போன இடத்தின் தாக்கத்தில்  ஏற்பட்ட போராட்டமான சூழலில் எல்லாம் அவன் தான் எனக்குப் பெரும் ஆறுதல். ஏன் எனில் அவர்கள் நேரடியாக வந்து பரீட்சை எழுதினால் போதும் என நிபந்தனை விதித்து விட்டார்கள். புத்திசாலியான குடும்பம் அல்லது புத்திசாலியாக நான் இருந்திருந்தால் அப்போதே தனி வகுப்பு ஏதாவது சேர்ந்து உருப்படியாக வழி பார்த்திருக்கலாம். இப்போது தோன்றுவது அப்போது தோன்றவில்லை ஒரே சோகம்...அவன் வீடு வரை வந்து நாங்கள் இருவரும் சேர்ந்து நடைப்பயிற்சிக்கு செல்வதும் அதன் பிறகு அவன் என்னை வந்து வீட்டில் விட்டு விட்டு அவன் வீட்டுக்கு செல்வதுமாக அந்தக் காலத்தை செலுத்தினோம்.

அவனைப்பற்றி நிறைய எழுத உண்டு. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே  எழுத முடியும் ஏன் எனில் படிக்கும் உங்களுக்கு அது பாரமாக இருந்து விடக்கூடும் என்பதற்காக.
Image result for ever rest
நான் சைவம் என்றால் அவனும் அதுமுதல் அசைவ உணவை எடுத்துக் கொள்ள மாட்டேன் எனக் கடைப்பிடிப்பான்.

இருவரும் இரண்டாம் ஆட்ட சினிமாவுக்கு நிறைய சென்றதில்லை ஆனாலும் நிறைய சினிமா சேர்ந்து பார்த்ததுண்டு. பல ஊர்களிலும்.

ஒரு முறை சைக்கிளில் சேலம் வரை சென்று வந்தோம்.அப்போதுதான் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட புதுப்பழக்கம்.  ஓமலூர் அருகே அவனது ரப்பர் செருப்பின் வார் அறுந்து போக அப்போது பள்ளி சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஒரு பின்னூக்கி என்னும் பின்னூசியை  அவனது செருப்பு வாரை இணைக்க கொடுத்ததும்

ஒசூருக்கு வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு ஒரு சிறு நிறுவனத்துக்கு சென்றுவிட்டு அதுவும் கிடைக்காத நிலையில் இருவரும் நெய்வேலி ரமேஸ் என்னும் ஜுனியர் அப்போது அங்கே சைட் எஞ்சினியராக இருக்கிறான் என அவனைப் பார்க்க என சென்று அவன் இடத்தில் தங்கி விட்டு திரும்பினோம்.

கையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு எவ்வளவு ஒரெ நாளில் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என சின்ன திருப்பதி வரை சென்று அங்கே ஒரு தோட்டத்தில் நடுவில் இருந்த வீட்டில் உணவு அங்கே அமர்ந்து உண்ண முடியுமா எனக் கேட்க அவரகளோ வீட்டைத் திறந்து வைத்து தண்ணீர் முதல் கொடுத்து உபசரித்த நினவெல்லாம் புதையலாக அப்படியே கிடக்கிறது. இப்போது அப்படி எல்லாம் போய்க் கேட்டால் வீட்டுக்குள் எல்லாம் எவருமே விட மாட்டார்கள்

நான் ஒரிஸ்ஸாவில் பயிற்சியில் இருக்கும்போது எனக்கும் எங்கள் வீட்டுக்கும் கடித பாலம் போட்டு தேவையானபோது எனது பிரதிநிதியாக வீட்டுக்கு சென்று பார்த்துக் கொண்டவன்.

 அவர்கள் வீட்டு மாமரமும், வாழை இலைகளும் தேவையான போதும் காய்த்தபோதும் எனது வீட்டில் காய்த்ததாகவும் இருப்பதாகவும் வேறுபாடின்றி கொடுத்து வந்தான்.

தனக்கு கிடைக்க வேண்டிய மால்கோ வாரிசு பணியை தனது தம்பிக்கு விட்டு விட்டு, நான் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன் என உறுதியோடு இருந்தவன் என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் மிக அன்பாக பழகியவன். எல்லா அநீதிகளையும் தட்டிக் கேட்பதில் என்னுடன் ஒத்துழைத்தவன். ஒரு முறை மால்கோ புத்தாண்டு விழாவில் எங்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்த கூப்பனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உணவு மறுக்கப்பட்டு இல்லை என்றானபோது கொதித்து எழுந்தவன், அவனது குடும்பத்து நூலக சந்தாதாரர் உரிமையில் எனக்கு நூல்கள் எடுக்க அவர்கள் மால்கோ மனமகிழ் மன்ற நூலகத்தில் அனுமதி பெற்றுத் தந்தவன் இப்படி சொல்ல சொல்ல இன்னும் இன்னும்...

 அவன் எந்த பணியும் கிடைக்காமல் ஒரு நிறுவனத்துக்கு சேவையாக ஊழியம் பார்த்து வந்தான். ஊதியமின்றி. அது சரியாக வராதபோது ஒரு மதுபானக் கடையில் ஊழியம் பார்க்கச் சென்றான் அப்போது அதை நான் அனுமதிக்கவில்லை. அதை விட்டு விட்டான். இப்போதோ அப்படி இருப்பது அரசு வேலை.

நான் திட்ட அலுவலராக மலைவாழ் மக்களுக்கு சில திட்டங்கள் தீட்டி பணியாற்றி வந்தபோது அவர்கள் வீட்டில் அல்லது அவனோ அந்தப் பணிகளில் அவனுக்கு வேலை கிடைக்குமா எனக் கேட்டார்கள்...நானோ அது சரியாக வராது என ஏனோ அதைப்பற்றி நினைக்கவும் மனமின்றி இல்லை என ஒரெயடியாக மறுத்துவிட்டேன். ஒரு வேளை அப்படி கொடுத்திருந்தால் ஏதாவது நற்பயன் விளைந்து அவன் என்னுடன் இருந்து அந்தப் பணிகளில் நானும் தொடர்ந்து செய்து வந்திருக்க முடியுமோ என்னவோ காலத்தின் கணக்கை யார்தான் அறிவது?

அவன் தந்தை அனுமதி பெற்றுத் தர சில முறை வீட்டில் தாய் முதற்கொண்டு சிலரை அந்த அலுமினியத் தொழிற்சாலையின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தது முதல் காலப்போக்கில் அதன் தலமை மேலாளர்  நாகராஜராவ் வரை நான் பழக அடிப்படைக் காரணமாக அவன் நட்பே இருந்தது என்றால் அது மிகையாகாது. பீஹார் நில அதிர்வு நடைபெற்றபோது அந்த மால்கோ பகுதிகளில் மக்கள் வளமையுடன் இருப்பதால் அவர்களிடம் நேரு யுவக்கேந்திராவுடன் இணைந்து பணியாற்றி தொகை மற்றும் துணிகளையும் அனுப்பும்போது சுழற்சங்க தலைவராகவும் இருந்த அந்த மால்கோ தலமை மேலாளரை தனியாக சந்திக்கும் வாய்ப்புகளையும் அவருடன் எனக்கு மென்முகமான நட்பையும் பெற்றேன். ஆனால் நல்லவர்கள் இந்த பூம்யில் அதிக காலம் இருப்பதில்லை என்பதற்கேற்ப அவரும் கொஞ்ச காலத்தில் ஒரு குடும்பப் பிரச்சனை காரணமாக காலமானது...

அந்த அலுமினியம் தொழிற்சாலை சென்று பார்த்த நினைவும் அப்போது அவர்கள் மாதிரிக்காக கொடுத்த ஒரு அலுமினியக் கட்டியும் அப்படியே உள்ளது. அவன் இல்லை. அந்தக் கம்பெனி அலுமினிய பார்கள், அலுமினியக் கம்பிகள், தூள்கள், தகடுகள் எல்லாம் தயாரித்த கம்பெனியும் இப்போது இல்லை வெறும் மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாலமலைக்குச் சென்று பணிபுரியும்போதும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் நடுவில் ஒரு வெண் தழும்பு உருவாக ஆரம்பித்திருந்தது அது தொழு நோயின் அறிகுறியோ என பயம் கொள்ள ஆரம்பம். அவனோ அதெல்லாம் உனக்கெல்லாம் நமக்கெல்லாம் வராது என்றான். எனது சகோதரி ஒருவர் பார்த்து இது என்ன எனக் கேட்கும்போது அது ஒரு சிறிய கொள்ளு பயிரளவு இருந்தது அப்படியே சிறிது சிறிதாக பெரிதாக சிவந்த தழும்பாக ஆரம்பித்தது பாலமலையில் சுயசமையல் செய்யும்போது நெருப்பு ஏதாவது பட்டிருக்கும் என பதில் சொன்னது தப்பாக...அதற்கு மருத்துவம் ஒரு சாமியாரம்மா சொல்ல அந்த இலைகளை எனக்கு கிடைக்கச் செய்தது பார்த்திபன் அம்மாதான். அவர்கள் வீட்டுப் பக்கம் இருந்த ஆட்டுப்பட்ட்யில் ஆட்டுப்பால் வாங்கி இந்த இலைகளைப் பறித்து அரைத்து இரண்டையும் கலந்து உள்ளே குடித்து வெளியே பூசிக் குளித்தேன் மாமிச உணவும் புளியும் தவிர்த்து தனியே இருந்து அதைப் போக்கினேன். அதன் பின் தெரிந்தது அது ஒரு வண்டு கடியாகவும் இருக்கலாம் என...அதற்கான இலைகளை வண்டுகடிக்கான இலை எனச் சிலர் கேட்டதும் உண்டு. பெருமருந்துக் கொடி என்றும் சொன்னார்கள்..

மேட்டூர் கை கொடுக்காத நிலையில் திருப்பூர் வேலைக்குப் போய் நிலைக்கப் பார்த்தான். நல்ல பேரும் வாங்கினான். ஆனால் இரு சக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்கையில் மரணம் அருகு வந்து கொண்டிருப்பதாக அவனது தாயிடம் சொல்லியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

1987 தான் நினைக்கிறேன் எனது திட்டப்பணிகளுக்காக ஒரு காமிரா வாங்க இளங்கோவன் மெக்கானிக்கல் தாரமங்களம் அப்போது சென்னை அம்பத்தூரில் பெஸ்ட் அன்ட் கிராம்ப்டனில் பெக்கான் வேர்ஸ் என்ற கம்பெனியில் பணி புரிந்து வர அவனைப் பார்த்துவிட்டு அவனுடன் சேர்ந்து மூர் மார்க்கெட் சென்று ஒரு மினோல்டா காமிரா வாங்கிக் கொண்டு ஒரு நாள் தங்கி வந்தேன்.

அப்படி காமிர வாங்கக் கிளம்பும்போது வீட்டிலிருந்து அப்போது எங்கள் வீட்டுக்கு கொளத்தூரில் இருந்து வந்திருந்த பாக்கியம் சித்தி, தாய், சகோதரி எல்லாமே எனை வழியனுப்ப வந்தார்கள்...100 மீட்டர் சென்றிருப்போம் வீட்டில் இருந்து...சில குட்டிகளை உடன் அழைத்துக் கொண்டு ஒரு தாய்ப்பூனை இடமிருந்து வலம் சென்றது (இதைப்ப் பற்றி எல்லாம் கண்ணதாசன் நன்றாக சொல்வார் தனது மனவாசம் வனவாசம் வாழ்வின் சரிதத்தில்)

மறுபடியும் வீடு வந்து சிறிது நீர் பருகிவிட்டு சிறிது நேரம் கழித்துப் பயணம் ஆரம்பித்தேன்.

பயணத்தை எண்ணியபடி நடத்தி எதற்காக சென்றோனோ அதை எல்லாம் செய்து முடித்து வந்து சேர்ந்தேன். பார்த்திபன் ஹோகனக்கல் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இற்ந்தான் என்ற செய்தியை எனக்குச் சொல்ல பெரிதும் முயன்றிருக்க அது என்னை அடையாதபோதும் எனது தாயும் சகோதர் ஒருவரும் அவனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்தனர். நான் வந்தவுடன் சென்றேன்.

திருப்பூரில் இருந்து நண்பர்களுடன் ஹோகனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று குளிக்க வந்த சம்பவம் இவன் உயிரைக் குடித்துள்ளது அது அவன் தவறி விழுந்ததால் நடந்ததா, இல்லை தள்ளி விடப்பட்டதால் நடந்ததா தற்கொலையா இல்லை கொலையா என்பதெல்லாம் தெரியவே இல்லை. கதை முடிந்தது.
Image result for ever rest
சில ஆண்டுகள் முடிந்தவரை தந்தைக்கு நினைவாஞ்சலி நவம்பரில் போடுவது போன்று இவனுக்கும் தினசரிகளில் கவிதை எழுதிய சில வரிகளுடன் போட்டேன். அதன் பின் நானும் விட்டு விட்டேன். அவர்கள் வீட்டில் அவனது போட்டோ திரை வைத்து மூடப்பட்டு தம்பி திருமணம் நடந்து குடும்பம் எல்லாம் ஆகி அவனது தந்தை மறைந்து தம்பியின் இரண்டு மகன்கள் எல்லாம் படித்து பணியில் சேர்ந்து மணப்பருவத்தில் தயாராகிவிட்டார்கள் அவனது தாய் முதுமையில் தங்கை சாந்தி குடும்பமும் தாய் மாமன் வீரபத்திரனையே மணந்து அவரும் பேரன் பேத்தி எடுத்துவிட்டார்.

அவனது போட்டோ ஒன்று ஒரு நாள் எனது வீட்டில் பூனை தட்டியதால் சாய்ந்து போக மறு நாளில் அவனது தந்தை இறந்த சேதியும் வந்து சேர்ந்தது.

அவனது இறந்த உடலை நான் பார்க்கவே இல்லை. ஆனால் அவனைப் போன்ற நண்பன் ஒருவனை நான் இனி பெறப்போவதே இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment