Tuesday, July 5, 2016

புதுசாம்பள்ளியில் ஏன் சேலம் மேட்டூர் பயணிகள் ரயில் நிறுத்தக் கூடாது? கவிஞர் தணிகை

புதுசாம்பள்ளியில் ஏன் சேலம் மேட்டூர் பயணிகள் ரயில் நிறுத்தக் கூடாது? கவிஞர் தணிகை



மேட்டூர் சேலம், சேலம் மேட்டூர் பயணிகள் ரயில் இப்போது நன்கு பயன்பாட்டில் இருக்கிறது என்றாலும் காலை நேரம் நான் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசியபடியேதான் தாமதமாகவே சேலம் வருவதால் சேலம் வரும் அலுவலக பயணிகள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

ஆனால் இந்த பதிவு அதைப் பற்றி அல்ல.பெரும்பாலும் சேலம் செல்லும்போதும், மேட்டூர் வரும்போதும் ஓமலூர், மேச்சேரி ரோடு ஆகிய 2 இடங்களில் மட்டுமே இடையில் நிற்கும் இந்த ரயிலில் மாலை 5.30 மணிக்கு சேலம் சந்திப்பில் இருந்து புறப்படும்போது நிறைய கல்லூரி மாணவர்களும் மற்ற பயணிகளும் ஏறுகின்றனர். அனால் அதில் பெரும்பாலும் புதுசாம்பள்ளி என்ற ஊரில் இறங்குவோர் அதிகம்.

ரயில் இந்த இடத்தை நெருங்கும்போது மேட்டூர் ரெயில்வே நிலையத்தின் அருகே என்பதாலும் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு செல்லும் ரயில் பாதை பிரிகிறது என்பதாலும் சிவப்பு விளக்கு போடப்படுகிறது.



எனவே பொதுவாகவே மேட்டூர் சேலம் பயணீகள் ரயில் மிக மெதுவாகவே செல்லும் நிற்காத குறையாக. ஆனால் ஆபத்தை உணராமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு புதுசாம்பள்ளியில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் நபர்கள் சுமார் 50 பேராவது இருக்கும் அதில் முக்கியமாக கல்லூரி மாணவர்கள் அதிகம். சில நாட்களுக்கும் முன் மேச்சேரி ரோடு நிறுத்தத்தில் ரயில் நிற்பதற்கும் முன்பாக ( அங்கு நிறுத்தம் இருக்கிறது என அறிந்தே) ஒரு கல்லூரி மாணவர் ஓடும் ரயிலில் இருந்து ரயில் நிற்கும் முன் குதித்து முகம், கை எங்கும் காயம் என்பது குறிப்பிடத்தக்கது)

மெட்ரோ ரயில் சென்னையில் நிற்பது போல மேட்டூர் ஆர். எஸ் ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டு, புதுசாம்பள்ளி, ராமன் நகர் போன்ற நிறுத்தங்களில் நின்று சென்றால் நிறைய போக்குவரத்துக்கு பயன்படும். பேருந்தில் செல்வோர் எல்லாம் ரயில் நோக்கி திரும்பி விடுவார்கள்.

அதெல்லாம் கூட அப்புறம் செய்து கொள்ளலாம். முதலாவதாக செய்ய வேண்டியதும் முக்கியமாக செய்யவேண்டியதும் என்ன வெனில் மாலை வரும் இந்த ரயில் புதுசாம்பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு அரை நிமிடம் அல்லது 30 விநாடிகள் நிறுத்துவதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்படலாம். அனைவரும் பயமின்றி பாதுகாப்பாக இறங்க முடியும். இது வரு முன் காப்போம் என்பதற்கேற்றபடியான முன் வேண்டுதலாகும்.சிவப்பு விளக்கு போட்டுள்ள நிலையில் அதற்காகவும் இதற்காகவும் நிறுத்தி எடுக்கலாம். அதனால் ஒன்றும் பாதிப்பில்லை.ரெயில்வே துறைக்கு நஷ்டமோ கஷ்டமோ இல்லை. ஓட்டுனர் ஒருவர் கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொள்வது தவிர. ஆனால் நிறுத்தி எடுத்தால் இன்னும் நிறைய பயணிகள் இதை பயன்படுத்துவார் என்பது மட்டும் உறுதி.

இந்த வேண்டுதலை சேலம் கோட்ட மேலாளரிடமும் (‍ஹரிஸ் சங்கர் வர்மா ஐ.ஆர்.டி.எஸ் அவர்களிடமும்) அவர்கள் பரிந்துரையின் படி வழிகாட்டுதல் படி பொது மேலாளர் தெற்கு இந்திய ரெயில்வே பிரிவு சென்னை அலுவலகத்திலும் சேர்த்துள்ளேன்.

இந்த பேச்சு வார்த்தை சேலம் கோட்ட மேலாளர் தனிச் செயலரிடம் மற்றும் பொது மக்கள் நல்லுறவு அலுவலர் அவர்களிடமும் பேசும்போதும் நண்பர் வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களும் ஆர்வமாக உடன் வந்தார்.

சேலம் கோட்ட மேலாளர் அலுவலகம் சேலம் சந்திப்பில் இருந்து சிறிது தொலைவில் ரெயில்வே குடியிருப்புகள் அருகே மிகத் தள்ளி அமைந்துள்ளது. அவர்கள் ரெயிலை நிறுத்தும் அதிகாரம் எல்லாம் பொது மேலாளர் தென்னக ரெயில்வே பிரிவு அனுமதித்தால் நடக்கலாம். எங்களுக்கு அந்த அளவு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றார்கள். எனவே சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் அந்தக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன்.

இன்னும் ரயில்வே நிர்வாகம் நவீனப்படுத்தப்பட்டு, கணினி மயமாக மெயில் வழியில் எல்லாம் தொடர்பு கொள்வதில்லை. அது அலுவலக ரீதியாக அங்கீகாரமுடைய தொடர்பு வழியில்லை என அங்கு விளக்கினார்கள்.

பயணிகள் அனைவரிடமும் கை ஒப்பம் பெற்றும் தருகிறோம் என்ற எமது கோரிக்கைக்கு அதெல்லாம் கூட தேவையில்லை நீங்கள் அழகாக பிரதிநிதித்துவம் செய்துள்ளீர் இது போதுமானது என சொல்லியுள்ளார்கள். பார்ப்போம் இதன் பலன் என்னவாக இருக்கும் என.தனி மனிதராக செய்வதற்கும், இயக்க ரீதியாக செய்வதற்கும் இந்த நாட்டில் இன்னும் நிறைய எண்ணிலடங்கா பணிகள் செய்யப்படாமலே காத்திருக்க.... நாடு அழிவுப்பாதையில் மட்டும் தவறாமல் போய்க் கொண்டிருக்க நம்மால் முடிவதை நாம் செய்து கொண்டே இருப்போம் ஆக்கபூர்வமாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment