உலகை மாற்றியது கொரோனா கோவிட்..19
சொல்ல நிறைய இருக்கு,கேட்க நேரமிருக்கா?
மேலோர் கீழோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
அரசர் ஆண்டி ஆண்டார் அடிமை
எல்லோர்க்கும் ஒரே நீதி கொரானாவின் நியதி.
உலகெங்கும் ஒரே மூச்சு கொரானா என்பதே பேச்சு
அம்மா என்ற வார்த்தையை விட உச்சரிப்பில் அதிகமாச்சு!
உலகின் முதல் நாடு என்பார்
உலகின் முதலீட்டை எல்லாம் ஆளும் நாடு என்பார்
உலகின் முதல் நாடாக இன்று(ம்) இதிலும் ஆனது
மனிதர் காசு பணமெலாம் என்னத்துக்கானது?
பளிங்கு ஓடையைப் படைத்தது இயற்கை
கழிவு நீர் ஓடையாய் நஞ்சாக மாற்றியது யார் கை?
வெள்ளி மலையாய் படைத்தது இயற்கை
கொல்லி மலையாய் கொன்றது யார் கை?
மேகம் பொழிந்தது மழையாய் இயற்கை
தேகம் தணலாக அமிலமாய் மாற்றியது யார் கை?
ஆணையும் பெண்ணையும் படைத்தது இயற்கை
ஆணுக்கு ஆணும் பெண்ணுக்குப் பெண்ணும் என்றது யார் செய்கை?
மழலையரைக் கெடுத்து வன்புணர்ச்சி செய்து கொன்று வீசுவது யார் கை?
ஆடு மாடு பறப்பன ஊர்வன அனைத்தையும் உண்டவர்கள்
இன்று அசைவத்திலிருந்து சைவமாக வள்ளலார் வழியில்
காலமில்லை நேரமுமில்லை என்ற மனிதன்
வீடுகளில் மனைவியுடன் பிள்ளைகளுடன் கூடியிருக்கிறான்
வெளிச் சென்ற கணவன் ஏன் இன்னும் காணோம் என்றவள்
இவன் எப்போது வெளிச்சென்றுத் தொலைவான் என்றேங்கிக்
கிடக்கிறாள்
வைரஸும் பாக்டீரியாவும் எப்போதும் இருப்பதுவே
மனிதன் உண்டாவதற்கு முன்பே உண்டானவைதான்
மனிதன் இருக்கும் போதும் இல்லாத போதும் இறக்கும் போதும்
இறந்த பின்னும் அவையன்றி அணுவும் அசையாது
இந்த கொரானாவுக்கு டி.என்.ஏவும் கிடையாது...
படிக்காமலேயே பாஸ் செய்த மாணவர் சொல்கிறார்
கொரானாவுக்கு ஜே!
வேலைக்குச் செல்லாமலே சம்பளம் வாங்கும்
வேலைக்காரர் சொல்கிறார்
கொரானாவுக்கு ஜே!
கல்யாணம் கருமாதி என்றாலும் 30 பேருக்கு
மேல் வேண்டாம் என்கிறது அரசு
அன்று பாரதி செத்த போது 8 பேர் கூட கூடலையே
வருத்தப் படாத மனிதக்கூட்டம் மூடர் கூடம்
அரசு மதுக்கடையை இன்று மூடுகிற அரசு
நிரந்தரமாக மூடினால் வருவாயில் நட்டம் வருமென்கிறது
புகைக்காதே,குடிக்காதே என்று வெறும் வாயில் கூறும் அரசு
நிரந்தரமாகச் சொன்னால் வருவாயில் நட்டம் வருமென்கிறது
கொரானாவுக்கு இந்த இரட்டை நிலை என்பதே இல்லை
அரசு வருவாய் குறையும் என்று அடிமட்ட மனிதரை
சுரண்டும் அரசுகள் ஆலைக்கு சீல் வைக்கவில்லையே
அதற்கெல்லாம் மூடுவிழா நடத்திய கொரானா செய்தது கேடா?
நீதியை எது செய்தாலும் செவி திறந்து அதைக் கேளடா மூடா!
இரு பக்கத்து கலகமூட்டி இருப்பதை விற்பது எப்போதுமே
வெள்ளைக்கார நீதி அதுவே கொள்ளைக்கார நியதியும்
இந்தியாவை ஆண்டார் உலகெலாம் ஆண்டார்
இன்று மீட்சி தெரியாமால் உலகெலாம் மாண்டார்
கொரானாவின் கொள்கைக்கார நீதியும் நியதியும்
ஒன்றே வாளின் சட்டம் அது கூராயிருந்தால் வெட்டும்
எல்லா உயிரினங்களும் வாழ உரிமையுள்ள இந்த பூமியில்
பல கோடி ஜீவராசிகளை நீ அழித்தாய்
கொரானா இருப்பிடமான ஜீவராசிகளை ஒழித்தாய்
இன்று கொரானா உன்னைத் தஞ்சமடைய நீ ஒழிகிறாய்!.
எவர் இதிலிருந்து என்று மீண்டார்
யாவும் இயற்கையின் விதியுள்
மனித உயிர்களும் அதன் பிடியுள்
கொட்டமழிந்து ஆட்டம் ஒழிந்து
இனியேனும் இயற்கைக்குப் போடா பதரே!
திரும்பிப் போ ஆணவமழியப் போர் உனக்காகாது!
மனிதா நீ ஆக்கப் பிறந்த உயிர்
பிற உயிர்களைக் காக்கப் பிறந்த உயிர்
உயிர்களின் தலைமை நீ
வெறும் உதட்டளவில் அல்லாமல் உயிராகு
இனியாவது நல்லரசுகள் உயிராக பயிராகு.
கடலைக் கெடுத்தது யார்? காற்றைக் கெடுத்தது யார்?
நிலத்தைக் கெடுத்தது யார்? நீரைக் கெடுத்தது யார்?
மண்ணைக் கெடுத்தது யார் ?மலரைக் கெடுத்தது யார்?
பொன்னைக் கெடுத்தது யார்? பொருளைக் கெடுத்தது யார்?
ஆகாயத்தையும் கலங்க வைத்தாயே அதிரடியாய் அற்பா
இன்றுனக்குத் தெரிந்ததோ நீ இருப்பதே அற்பாயுள் என்று?
போனால் போகட்டும் போடா,இந்த பூமியில்
நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டோம்
இதற்கொரு மருந்தைக் கண்டோமா?
எபோலா என்றீர், சார்ஸ் என்றீர், பேர்ட் புளூ என்றீர்
ஸ்வைன் புளூ என்றீர் , ஸ்பானிஸ் புளூ என்றீர்,
ஜப்பானிஸ் புளூ என்றீர் நோய்க்கொரு பேர்
புயலுக்கும் ஒரு பேர் சக மனிதம் உணவின்றி
பருக நீரின்றி ஏங்கிக் கிடக்க விக்கிச் சாக
நீ மாளிகையில் மஞ்சத்தில் துயில் கொண்டாய்
இரும்புக் கிராதி கொண்ட கேட் போட்டு யாரும் புக முடியாது என்று
நீர் முதல் ஐம்பூதங்களையும் நீ பங்கிட்டு விற்றாய்
நீ படைத்தது போல பணம் படைத்தாய்...பாதகா!
தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் நேசித்தது இயற்கை
பூமரங்களும் பூஞ்செடிகளும் வடிவமாற்றியது யார் கை?
க்ளவுனிங் என்று உருவப் பிரதி செய்தது மனிதக் கொழுப்பு
கொரானா என்ற பேரில் மகுடமணிந்து வடிவமெடுத்ததும் கொழுப்பு
மணலை மலையை விட்டு வைத்தாயா நீ?
இன்னும் உன் தரித்திரம் அதிகமாக அதிகமாக
இன்று வீடில்லா மக்களே அதிகம்,தராதரம்
மாற்றியமைக்க வந்த கொரானா ஒரு சரித்திரம்
போர்த்தளவாடங்கள் எதற்கு? நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்கு?
அணுகுண்டுகள் எதற்கு ? இரசாயன ஆயுதங்கள் எதற்கு?
மனிதக் குண்டுகள் எதற்கு உயிர் ஆயுதம் எதற்கு?
ஏவுகணைகள் எதற்கு ராக்கெட் செயற்கைக் கோள் எதற்கு?
எதற்கெல்லாமோ ஆராய்ச்சி செய்வாய்
கொரோனாவை வெல்ல எங்கே உன் ஆயுதம்?
ஒரு குடும்பத்துக்கு மூன்று வீடும் நாலு காரும் தேவையாடா?
உன் குடும்ப சீரழிவுகள் சரி செய்ய உனக்கு நேரம் ஏதடா?
நடுத்தெருவில் பல குடும்பங்கள் தூங்க அது காரணம்...
காட்டை அழித்தாய்,எண்ணிலடங்கா ஜீவராசிகளை ஒழித்தாய்
அண்டிக் கிடக்கும் ஆட்டைக் கொன்றாய் கூவும் கோழியை மென்றாய்
பாம்பைத் தின்றாய் பல்லியைத் தின்றாய் பூச்சியைத் தின்றாய்
எதை நீ விட்டு வைத்தாய்? உன்னை விட்டு விடுவதற்கு?
அணுகுண்டு அரசர்கள் முயன்று பார்த்து முடியாதபோது
இயற்கையாகப் பார்த்து அனுப்பியது இந்தக் கொரானா?
இவன் உங்களை எல்லாம் சாதாரணமாக விடுவானா?
கண்ணுக்குத் தெரியா எமன் நுண்ணோக்கியில் பெரிதாக்கிப்
பார்த்தால் காட்சிக்கு மட்டுமே தெரியும் இவன்
ஆட்சி நடக்கிறது அழுது இலாபமென்ன?
.......கவிஞர் மணியம்.
நிழலற்ற பயணம் என்னும் சுஷீல் குமார் ஷிண்டேவின் (A.P ஆளுனராகவும் Maharashtrra CM and பல்லாண்டு மந்திரியாகவும் மத்திய மந்திரியாகவும் இருந்தவர்) வாழ்க்கை வரலாற்றை எழுதிய நண்பர் டாக்டர் சுபாஷ் சந்தரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கொரானா கோவிட் 19 பற்றிய வரிகளை மார்ச் 27ல் எழுதினேன் சில திருத்தங்களை அதன் பிறகு மேற்கொண்டோம். . அதை அவர் உரிய வகையில் எல்லாம் பயன்படுத்தப் போவதாகவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து போடுவதாகவும் கூறினார்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment