Friday, April 17, 2020

கவச உடைகள், உணவு, தங்குமிடம்கூட இல்லை கொரோனா சிகிச்சைப் பிரிவு பயிற்சி டாக்டர்கள் குமுறல்




கவச உடைகள், உணவு, தங்குமிடம்கூட இல்லை கொரோனா சிகிச்சைப் பிரிவு பயிற்சி டாக்டர்கள் குமுறல்

2020-04-17@ 01:00:26
சென்னை: கவச உடைகள், உணவு, தங்குமிடம் கூட இல்லை என்று மருத்துவமனைகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரைக் கொடுத்து வேலை செய்யத் தயார். அதற்காக உயிருக்கே உலை வைப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா வைரஸ், இந்தியாவுக்குள் தாக்குதலை தொடங்கியவுடன், கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரசைக் கண்டு உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 20 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்திலும் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பலர் வேலைகளை இழந்துள்ளனர். பலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர். ஆனாலும், அவர்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது டாக்டர்கள், போலீசார், உள்ளாட்சித்துறை, வருவாய் துறை பணியாளர்கள்தான். இவர்களை பாராட்டும்விதமாக கைதட்டுவது, ஒளி ஏற்றுவது போன்றவற்றை மக்கள் செய்தனர். இதற்கு அரசும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், கொரோனா தாக்குதலை முன்னின்று முறியடிப்பதில் களப்போராளிகளாக செயல்படுவது டாக்டர்கள்தான். அந்த டாக்டர்களுக்கு முறையான மருத்துவ உபகரணங்கள் இல்லை. கவச உடைகள் இல்லை. உணவு வழங்குவதில்லை என்று அவர்கள் குமுறி வருகின்றனர்.

இதுகுறித்து, பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பமானவுடன், அரசு மருத்துவமனைகளில் உள்ள இதய நோய் பிரிவு, குழந்தைகள் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டு, கொரோனா பிரிவு என்ற ஒரே பிரிவு மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து பிரிவு டாக்டர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தது ஒரு மருத்துவமனையில் ஒரு ஷிப்ட்டில் 8 டாக்டர்கள் முதல் பணியில் இருக்கும் வகையில் பணி பிரிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் போடப்பட்டன. ஒரு டாக்டர் ஒரு ஷிப்டு மட்டுமே பார்ப்பார். ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றுவார். பின்னர் டாக்டர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டன. அங்கு ஒரு வாரம் தொடர்ந்து தனிமையில் இருப்பார்கள்.

ஏனென்றால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் ஒரு வாரத்தில் தெரிந்து விடும் என்பதால் ஓட்டல் அறையில் ஒரு வாரம் தனியாக இருப்பார்கள். சாப்பாடு மட்டுமே கொண்டு சென்று கொடுக்கப்படும். அதன்பின்னர் ஒரு வாரம் வீட்டில் தனிமையில் இருப்பர். இதனால் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவருக்கு 2 வாரம் விடுமுறை கிடைக்கும். இதை நாங்கள் குறை சொல்லவில்லை. அதேநேரத்தில் முதுகலை, இளங்கலை மருத்துவ பயிற்சி டாக்டர்கள் நிலைதான் படுமோசம். நாங்கள்தான் கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக சோதனை செய்வது, சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு உத்தரவு போட்டு மேற்பார்வையிடும் பணிகளைதான் டாக்டர்கள் செய்வார்கள். நாங்கள்தான் களப்போராளிகள்.

எங்களுக்கு மட்டும் ஒருவார பணி கிடையாது. எல்லா நாட்களும் பணிக்குச் செல்ல வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எங்களுக்கு கோரண்டைன் அறைகள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்களும் கிடையாது. கொரோனா வார்டில் இருந்து நேரடியாக, நாங்கள் வழக்கம்போல தங்கும் எங்கள் விடுதியில்தான் தங்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் 70 ஆண்கள், 70 பெண் பயிற்சி டாக்டர்கள் அவரவர் விடுதியில் மொத்தமாக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அனைவருக்கும் எளிதாக பரவிவிடும்.

கோவையில் 2 டாக்டர்கள் மற்றும் 2 பயிற்சி டாக்டர்களுக்கு நோய் தாக்கியுள்ளது. எங்களுக்கு எந்த உயிர்பாதுகாப்பும் இல்லை. எங்களுக்கே இந்த நிலை என்றால், வார்டுபாய் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களின் நிலைகளை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். மேலும் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் இல்லை. இரு நாட்களுக்கு முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறும்போது, யாருக்கு உடைகள் இல்லை என்று ஒருவரை சொல்ல முடியுமா என்று கேட்கிறார். மாநிலம் முழுவதும் அனைத்து டாக்டர்களும் போராட்டம் நடத்தியதையே அரசு முறியடித்து விட்டது. பலரை பணி மாற்றம் செய்தனர். நாங்கள் ஒருவர் கேட்டால், எங்கள் நிலை என்ன?

நாங்கள் முழுக்க முழுக்க படிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் கொத்தடிமைகள். டாக்டர்கள் நினைத்தால்தான் நாங்கள் பாஸ் பண்ண முடியும். இல்லாவிட்டால், நாங்கள் ஒழுங்காக படித்து, தேர்வில் வெற்றி பெற முடியாது. எங்களுக்கு தேவையான என் 95 மாஸ்க் இல்லை. பாதுகாப்பு கவச உடைகளும் வழங்கப்படுவதில்லை. தற்போது பரிசோதனை கருவிகள் ஓரளவு கிடைத்து விட்டது. அவைகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து விட்டது. அதை வரவேற்கிறோம். பரிசோதனை கருவிகள் வந்து என்ன பயன். எங்களுக்கு கவச உடை வரவேண்டுமே. கவச உடை இல்லாமல், பரிசோதனை செய்தால், கொரோனா நோயாளிக்கு பரிசோதனை செய்யும்போது அவர் தும்மினால் அவரது முகத்தின் அருகேதான் எங்கள் முகத்தை வைத்திருப்போம். அப்போது உடனடியாக கிருமி எங்களுக்கும் பரவி விடும். இதனால்தான் முதலில் பாதுகாப்பு உடைகளை கேட்கிறோம்.

நாடு முழுவதும் தற்போது 200 டாக்டர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 8 டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு வழங்கும் கவச உடைகள் தரமானவைதானா என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அதை நாங்கள் எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை. படித்ததும் இல்லை. இப்போதுதான் புதிய நோய் வந்துள்ளது. இதனால் இப்போதுதான் உடைகளை கேள்விப்படுகிறோம். அதனால் அரசு கொடுக்கும் உடைகளை நாங்கள் நம்பித்தான் போடுகிறோம். சீனா கொடுக்கும் கருவிகள் தரமானவை இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை எல்லாம் மீறித்தான் நாங்கள் கடவுள் மீது பாரத்தைப் போட்டு பணியாற்றுகிறோம். இதனால் பயிற்சி டாக்டர்களுக்கும் தேவையான கவச உடைகள், மாஸ்க் வழங்க வேண்டும்.

மேலும் கொரோனா வார்டு சிகிச்சை அளிக்கும் பயிற்சி டாக்டர்களுக்கு சாப்பாடு சரியாக வழங்குவதில்லை. எங்களை சூபர்வைசர் செய்யும் டாக்டர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் கொடுப்பதால், அங்கே உணவு வழங்கப்படுகிறது. எங்களுக்கு உப்புமா போன்ற உணவுகள்தான் கிடைக்கிறது. நோயாளிக்கு தரமான, சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதில் 10ல் ஒரு பகுதி கூட எங்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. செங்கல் சூளையில் பணியாற்றும் கொத்தடிமைகளின் நிலைபோலத்தான் நாங்களும். கோவையில் இரவு 10.30 மணிக்கு சாப்பாடு வந்தது. ஆர்எம்ஓவிடம் கேட்டதற்கு, ஏன் தாமதமாக கொடுத்தால் சாப்பாடு இறங்காதா என்றார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்தோம். தற்போது டீன் அசோகன் மாற்றப்பட்டுள்ளார். நாங்கள் வேலை செய்யப் பயப்படவில்லை. ஆனால் நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் உயிர் இருக்கிறது. களத்தில் பணியாற்றும் நாங்கள்தான் மருத்துவமனையில் முதுகெலும்பு. ஆனால் எங்களை கவனிக்க ஆள் இல்லை.
இவ்வாறு பயிற்சி டாக்டர்கள் குமுறலை தெரிவித்தனர்.

கூண்டுதான் பெஸ்ட்...
பயிற்சி டாக்டர்கள் மேலும் கூறுகையில், ‘‘கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் டாக்டர்கள் சென்று விடலாம். பின்னர் நோயாளியை கூண்டுக்கு வெளியே உட்கார வைத்து பாதுகாப்பான கையுறை அணிந்து அவரை பரிசோதிக்கலாம். இதனால் டாக்டர்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்படும். நோயாளி தும்மினால், கண்ணாடியில்தான் படும். பின்னர் அதை சானிடைசர் போட்டு கழுவிவிடலாம். டாக்டர்களுக்கோ, ஊழியர்களுக்கோ பாதிப்பு இல்லை. இந்த திட்டம் சமீபத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த கூண்டு செய்ய 10 ஆயிரம் ரூபாய்தான்.

ஆனால், எல்லா மருத்துவமனையிலும் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அரசாணை பிறப்பித்தால் போதும் உடனடியாக செய்யலாம். ஏன் டாக்டர்களே சொந்த பணத்தில் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாணை பிறப்பிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு வாங்க வேண்டிய கவச உடைகளுக்கான கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். இதை எல்லாம் அரசு செய்யலாம். எங்களையும் அரசு முதன்மையாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களில் பலரை இந்த கொரோனா நோய் தொற்றை விரட்டுவதற்குள் நாங்கள் இழந்திருப்போம்’’ என்றனர்.
மிகவும் அவசியமான பதிவு 

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment