Wednesday, April 29, 2020

உண்மையின் கதை ஒன்று: கவிஞர் தணிகை

உண்மையின் கதை ஒன்று: கவிஞர் தணிகை

எனக்கு அப்போது திருமணமாகவில்லை. நானும் தாயும் மட்டுமே எங்களது பழைய ஓட்டு வீட்டில் இருந்தோம் இன்னும் அதில் தான் இருக்கிறேன் அது வேறு... நான் தாய்க்கு அவ்வளவு வேலைப்பளு கொடுக்கக் கூடாது என துணி துவைக்கும் எந்திரம், குளிரூட்டும் எந்திரம், பாத்திரம் கழுவும் எந்திரம், காய்கறி தேங்காய் போன்றவை சுலபமாக நறுக்க எட்டு வேலையை செய்யும் ஒரே எந்திரம் இப்படி ஓரளவு எந்திரமயமாக்கி தாயின் வேலைப் பளுவைக் குறைக்கத் தீர்மானித்திருந்தேன். ஏன் எனில் ஏற்கெனவே அவர்கள் பெரிய குடும்பத்தில் நொந்து போன வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதாலும் அவரை அப்போதே முதுமை எட்டி விட்டதாலும்.

அப்போது த.நா.மி.வ வின் மின்சாரம் போதுமான அளவு எங்களுக்கும் எங்கள் சுற்றுப் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டில் உள்ள குளிர் சாதனப் பெட்டிக்கே மின்சாரம் போதுமான அளவு கிட்டாமல் ஸ்டெபிலைசர் அடித்துக் கொண்டே இருக்க...என்னடா எந்த மின் உபகரணமுமே வேலை செய்ய மறுக்கிறதே என்று சோதித்துப் பார்த்தால் 220 வோல்ட் முதல் 230 வோல்ட் வரை வரவேண்டிய மின் அழுத்தம் 140 முதல் 160 வோல்ட் என்றே வந்து கொண்டிருந்தது. அதிகபட்சம் மீறிப் போனால் 170 வரை கிடைத்திருக்கலாம். அது 1990லிருந்து 1995 வாக்கில் அதன் பிறகுவாழ்க்கை வெகு தூரம்நடந்திருந்த காரணத்தால் என்னால் இந்த எண்ணிக்கை குறிப்புகளை தோராயமாகவே தர முடிகிறது.

உடனே அது பற்றி உதவி மின் செயற் பொறியாளர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் புகார் செய்தேன். அந்த அலுவலகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் அந்த அலுவலகத்தை எமது ஊரிலேயே போராடி தக்கவைத்து அரசிடமிருந்து 1 ரூ பெற்றுக் கொண்டு ( அதற்கு வாடகை பெறலாம் என ஊரில் ட்ரஸ்ட் போட்டு ஊர் முன்னணியாளர்கள் முயன்ற கதையும் அதை எமது நண்பர்கள் குழுவினர் உயர் நீதிமன்ற வழக்கு வரை சென்று அந்த ஊருக்குப் பொதுவான இடத்தை கட்டடத்தை ஊருக்குப் பொதுவான பணத்தில் கட்டியதை அரசுக்கும் மக்களுக்கும் பொதுவாக பயன்படுத்த முயன்று அந்த உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை எங்கள் ஊருக்குள்ளேயே தக்க வைத்த கதை அதுவும் உண்மைக் கதைதான் ஆனால் அது வேறு அதை வேறு ஒரு வாய்ப்பு ஏற்படும்போது பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்)

அந்தப் புகாரை மேலிடத்திற்கு அதாவது கண்காணிப்பு பொறியாளர் வரை கொண்டு சென்று விட்டதால் வேறு வழியின்றி எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் வீடு மட்டுமல்ல எங்கள் வீடுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அளந்து பார்த்து மின் அழுத்தம் மிகக் குறைவாக நான் முன் சொன்னது போல 140 முதல் 160 வரை வருவதாகவும் அதிக பட்சம் 170 போன்ற அளவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தி எங்கள் கையொப்பங்கள் அடங்கிய புகார் மனுவுக்கு மதிப்பளித்து உறுதியளித்து ஆவன செய்வதாக சென்றார்கள்....

ஆனால் ஊர் பெரிதாகிவிட்டது. அதற்கு இன்னும் ஒரு ட்ரான்ஸ்பார்மர் போட்டாக வேண்டும் அதை மேலிடத்தில் தெரியப்படுத்தி இருக்கிறோம். அது மெதுவாகவே நடக்கும் என்ற கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதற்கு நாங்கள் என்ன செய்வது என்ற கேள்விக்கு அந்த விடயத்தில் ஒரு முனைப்பாளராக நான் இருப்பதைக் கருதி என்னை   அழைத்து நீங்கள் வேண்டுமானல் ஒரு முனை வீட்டுக்கான மின்சாரத்தை மும்முனை மின்சார இணைப்பாக மாற்றிக் கொள்ளுங்கள் தற்போதைக்கு உடனடியாக இதுதான் தீர்வு என்றார்கள்.

நானும் வேறு வழியில்லாததால் மின்பணி தெரிந்த ஒரு உதவியாளரை வைத்து இணைப்பை எல்லாம் மும்முனைக்கு மாற்றி செலவு செய்து ஒயரிங் எல்லாம் முடித்து த.நா.மி.வா வுக்கு எனக்கு நீங்கள் அறிவுரை செய்தபடி மும்முனை இணைப்பை வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தேன்.

இதன் பின் தான் கதை ஆரம்பிக்கிறது கவனியுங்கள்: எனக்கு சில பேர் எல்லாம் மறந்து விட்டது சில பேர் நினைவில் உள்ளது ஆனால் பேர் எல்லாம் வேண்டாம் குறிப்பிடுவதால் ஒரு பயனும் இல்லை என்றே நினைக்கிறேன்

நான் அனுப்பிய ஒரு நண்பர் அவரேதான் எனக்கு ஒயரிங் செய்து முடித்தவர் அவர் அப்போது குடும்ப நண்பராகவும் இருந்தார் நான் பல்வேறுபட்ட அலுவல்களில் இருந்தேன் அப்போது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்ட அலுவலராகவும் இருந்து பல்வேறு பணிகளில் பல நூறு கிராமங்களுக்கு முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன் எனவே தேவைப்பட்டால் அவசியமானால் ஒழிய நேரடியாக எங்கும் போவதில்லை எல்லாம் கடிதம் மற்றும் தொலைபேசி வழித் தொடர்புதான்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அந்த ஒயரிங் மற்றும் எல்லாம் பார்த்து விட்டு சென்று விட்ட மின் கம்பி வடப் பணியாளர் எல்லாம் சரி என்ற பின்னே ஒரு வணிக உதவியாளர் மற்றும் வணிக ஆய்வாளர் என்று நினைக்கிறேன் இருவரும் நினைவுக்கு எட்டிய வரையில்  ரூபாய் 200 ஐ இலஞ்சமாகக் கேட்டு அந்த நபரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அவர் வந்து சொல்லியதும் எனக்கு அது பற்றி வேறுபட்ட கருத்து இருந்தது. நான் இலஞ்ச ஊழலுக்கு கடுமையான எதிரிடைப் போராட்டக்காரனாக இருந்த போதும், அவர்களே இந்த மும்முனைப்பை பெற்றுக் கொள்ளுங்கள் பிரச்சனை தீரட்டும் என்று சொல்லி விட்டு அதற்கும் கூட என்னிடமே இலஞ்சம் பெற்று விட்டார்களே என மேலிடத்துக்கு உரியவர்க்கெல்லாம் எழுதி விட்டேன் அவர்கள் பேர் நாள் விவரம் எல்லாம் உள்ளடக்கி.

விடயம் சூடு பிடித்துக் கொண்டது. அந்த உதவி இயக்க மின் பொறியாளர் ஆரம்பத்தில் என் மேல் மிக்க கோபம் கொண்டதுடன் யார் இந்த ஆள் இவர் என்ன கவுன்சிலரா இவர் என்ன இதை எல்லாம் கேட்கிறார் என்று உள்ளூர் வார்டு கவுன்சிலரை எல்லாம் கேட்டு தமது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் ஒரு பக்கத்து ஊர்க்கார மின் பணி ஒப்பந்ததாரரை அனுப்பி ஏதாவது செய்து புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்றுக் கோரினார்கள்

நான் மசியவில்லை. அதன் பின் எனக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. எனது மின்சாரப் பிரச்சினை தீர்ந்தது என்றாலும் வேறு ஒரு விசாரணை அலுவலர் நியமிக்கப் பட்டார். அவர் மற்றொரு ஊரான ஜலகண்டாபுரத்திலிருந்து உதவி மின் பொறியாளர் அந்தஸ்தில் இருந்தார். மின்வாரியத்திலிருந்து அது பற்றி கூட்டத்திற்கான அழைப்பு வரும் அவர்கள் எங்கள் பக்கம், மின்சார வாரியத்தின் பக்கம் என விசாரித்தார்கள் ஏறத்தாழ இந்த விசாரணை 2 ஆண்டு நடந்து ருசுப்பிக்கப்பட்டது.

அந்த இலஞ்சம் பெற்ற நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதா என்பது வெளித் தெரியவில்லை. ஆனால் அதற்கு பொறுப்பான அந்த உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின் தலைமை அலுவலர் என்ற முறையில் ஈசன் பெயர் கொண்ட அந்த உதவி மின் பொறியாளர் எங்கள் ஊரிலிருந்து பெரிய மணலி என்ற ஊருக்கு மாற்றப்பட்டார். அவர் இந்த செயல்பாடு முடிந்த தருவாயில் என் மேல் கோபம், வேறுபட்ட எண்ணம் கொண்டிருந்தவர் சுமூகமாகி என்னைப் பற்றி அறிந்து கொண்டு உங்களைப் போல் ஒருவராவது வேண்டும் எனப் பாராட்டி விடைபெற்றுக் கொண்டார்.

எனக்கு மணமுடிந்த ஆண்டு 1997 டிசம்பர் 4ஆம் தேதி...அந்த ஆண்டில் முதற் பருவத்தில் தாம் இந்த மின் இணைப்பும் கிடைத்திருக்கும் போலும் அதன் பின் மறு ஆண்டில் 1998 டிசம்பரில் 16 ஆம் தேதியில் எனது மகன் பிறப்பு.  எனது தாமதமான திருமணம் 36 ஆம் அகவையில் மறுபடியும் தாயின் முதுமையில் அவர்களை மேலும் மேலும் தொந்தரவு தரக்கூடாது என்றும் இதற்கு மேல் தாமதிக்கவும் முடியாது என்பதாலும் செய்த திருமணம் அது அதை எல்லாம் ஏன் பகிர்கிறேன் என நினைக்கிறீர் அல்லவா...

கதையின் இரண்டாம் பாகம் என்ன வெனில் எனது மகனை நான் படித்த அதே அருகாமையில் உள்ள ஆனால் காலமாற்றத்திற்கேற்ப மாறிய பள்ளியில் நான் படித்தது அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பெற்ற தனியார் உயர் நிலைப் பள்ளி அப்போது அதுதான் இந்த ஊர்களுக்கெ எல்லாம் பெயர் பெற்ற ஒரே பள்ளி. இப்போது எனது மகன் படிக்கும் போது நான் படித்த துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேல் நிலைப்பள்ளி ஆகி தனியாரின் மேலாண்மையில் ஆங்கிலப் பள்ளி ஆகி இருந்தது. எனக்கு ஒரு நினைவு பள்ளி எனப் படிக்க பிள்ளைகளை தொலை தூரம் அனுப்பக் கூடாது பூம்பிஞ்சுப் பருவத்தில்

எனவே அருகாமையில் பள்ளி எது இருக்கிறதோ அதற்கே அனுப்ப வேண்டும் என அனைவர்க்கும் சொல்வேன் .நானும் அதையே செய்தேன். அது ஒரு நடுத்தரமான நல்ல பள்ளிதான். மகன் என்னுடைய பயிற்சியின் மூலம் ஆரம்பமுதலே மழலையர் பள்ளி முதல் மேனிலப் பள்ளி இறுதி வரை அந்த ஒரே பள்ளியில் தாம் படித்தான். ஆரம்பம் முதலே நிறைய பரிசுகள் பெற அவனுக்கு வாய்த்தது. கடுமையாக முயற்சித்தோம்.

அதில் ஒரு சம்பவம் அவன் 6 ஆம் நிலை படித்திருக்கலாம் என அவன் நினைவுக்கு எட்டியதாக சொல்கிறான் இப்போது அவன் கல்லூரி இறுதி ஆண்டிலும் கடைசிக் கட்டத்திலும் உலகெலாம் வீட்டிலிரு தனித்திரு என்ற கட்டத்தில் இருக்கிறான். எனவெ அவனுக்கும் அது 6 ஆம் வகுப்பா 7 ஆம் வகுப்பா  5 ஆம் வகுப்பா எனத் தெளிவாக குறிப்பிட முடியவில்லை.

ஆனால் இவன் அவன் பள்ளியின் மூலம் காமராசர் மின்சார ஊழியர் நற்பணி மன்றம் என்ற ஒரு மன்றம் நடத்தும் போட்டிக்கு மேட்டூருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று போட்டியில் கலந்து கொண்டாக வேண்டும். ஆசிரியர்கள் வருவதுடன் அவரது குழந்தைகளை கூட்டிக் கொண்டு அவரது பெற்றோர் வந்து அங்கு சேர்ந்திட வேண்டும் என பள்ளியின் உத்தரவு. எனது துணைவி போக முடியாது என்ற சூழல். நான் அப்படிப் பட்ட சூழலில் சென்றே ஆகவேண்டும் உடன் அழைத்துச் செல்கிறேன்.

அங்கே சென்று விழாவில் கலந்து கொள்ள போட்டிகள் பல பள்ளி வாரியாக ஆரம்பிக்கப் பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அங்கே என்னால் அந்த மின்சார இலஞ்சப் புகாரில் சிக்கி இலஞ்சம் பெற்ற மின்சார வணிக ஆய்வாளர் அவருக்கும் என்னைத் தெரிந்து விடுகிறது. எனக்கும் அவரைத் தெரிந்து விடுகிறது. அவர் அந்த மன்றத்தில் ஒரு முக்கியப் பொறுப்பாளர் ஆக இருப்பதை அங்கே அவரது நடவடிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

நானும் என்னை எவ்வளவோ மறைத்துக் கொள்ளவும் முயன்றேன் ...உண்மை...ஏன் என்று கேட்காதீர். எனது மகனது பெயர் அழைக்கப்பட்டது...அவன் சென்று பேசுகிறான்...அவனது நேரம் மிகவும் வெகுவாக குறைக்கப்பட்டதைக் கவனிக்க முடிந்தது. அனைவர்க்கும் 5 நிமிடம் என்றால் இவனுக்கு இரண்டு மூன்று நிமிடம் மட்டுமே இருக்கும்.

இவனுக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்றிருந்ததை கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள்...நான் பயந்திருந்தது போலவே நடந்திருந்தது. எனது துணைவியாரோ அல்லது ஆசிரியரோ அழைத்து சென்றிருந்தால் அந்தப் போட்டியிலும் இவனுக்குப் பரிசு கிடைத்திருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அது நடந்த ஆண்டு தோராயமாக: 2010 இருக்கக் கூடும்... அதாவது எனது மகன் பிறந்த ஆண்டிலிருந்து கணக்கு வைத்து சொல்கிறேன். மேலும் எங்களது இலஞ்சத்துக்கு எதிரான போராட்டம் இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் நடந்த ஆண்டு தோராயமாக சுமார் 15 ஆண்டுகள் ஆகிய பின் கூட மணமாகாமல் இருந்த நான் மணமாகி பிள்ளை பெற்று அவனைப் பாதிக்கிறது என்றால் அதன் மகிமையை என்னே சொல்ல....

கொசுறு: அந்த கடிதப் போக்குவரத்து நடந்ததை என்னால் பழைய கடிதங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் மிகவும் சரியாக சொல்லி விட முடியும் ஆனால் விடயம் முக்கியம் புள்ளி விவரம் அதன் கனம் முக்கியமல்ல என்பதால் தோராயமாகவே சொல்லி இருக்கிறேன்.

கொசுறு: 2.
ஒரு கோலப் போட்டி நடந்தது...உள்ளூரில் கோலமே போடத் தெரியாமல் தான் என்னை மணம் செய்து கொள்ளும்போது எனது துணைவி வீடு வந்து சேர்ந்தார்கள் அதன் பின் கோலம் கற்றுக் கொண்டு மிகவும் தேறி அனைவர்க்கும் சொல்லிக் கொடுக்கும் நிலையிலும் மிகவும் நன்றாக கோலம் போடும் நபராகவும் மாறி இருந்தார் ஒரு பொங்கல் அல்லது தீபாவளி போன்ற திருநாளில் உள்ளூரில் வீட்டில் வாசலில் போட்ட கோலத்தைப் பார்த்து போட்டி நடத்தி பரிசளிப்பதாக நிகழ்வு.  ஒரு கட்சி சார்ந்த அமைப்பு உறுப்பினர் ஒருவர் கோலப்போட்டியில் உங்கள் கோலத்துக்கு ஒரு பரிசு என்று அறிவித்து சென்றிருந்தார்  எங்கள் வீட்டுக் கோலத்தைப் பார்த்து ஆனால் அவர் அதன் பின் பரிசுடன் வரவே இல்லை. ஏன் என்ன ஆயிற்று என்ற பதிலும் எங்களுக்கு சேரவில்லை. அது எங்கள் வீடு என்று தெரிந்ததால்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment