Friday, April 24, 2020

என் வாழ்வின் இன்பத்தின் பொழுதுகள்: கவிஞர் தணிகை

என் வாழ்வின் இன்பத்தின் பொழுதுகள்: கவிஞர் தணிகை

deivapublisher@gmail.com

See the source image
என் வாழ்வில் சிகரத்தின் உச்சி அடைந்த பொழுதுகளை அலையின் முகடுகளை வாழ்க்கையின் விழுதுகளை நேற்று உறங்காத போது நினைத்துப் பார்த்தேன்.

1. கலாமின் கடிதத்தை தபால்காரரிடம் இருந்து வாங்கிய போது (அது இலஞ்ச ஊழலுக்கு எதிரான அறிவுரை)

2. முன்னேற்பாடு ஏதுமில்லாது திடீரென உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேச வேண்டும் என அழைப்புக் கிடைத்த போது...

3. ஒவ்வொரு புத்தக வேலையும் நிறைவடைந்து அது சில பிழைகளுடன் இருந்த போதும் கையில் ஏந்தியபோது

4.கல்லூரியில் கவிதைப் போட்டியில் முதல் இடம் பிடித்து கல்லூரி மற்றும் விடுதி அறிவிப்புப் பலகைகளில் எனது பெயர் முதல் என்றிருந்ததைக் கண்டபோது..

5. கவிஞர் இன்குலாப் உடன் கவிதை செய்து கவியரங்கத்தில் பங்கேற்றபோது

6. நேரு யுவக் கேந்திரா பிராந்திய இயக்குனர் கொ.வேலாயுதத்துடன் இயக்கப் பணிகளில் பல முறை உரசிக் கொண்டு முரண் பட்ட போதும் அந்த உறவு இன்று வரை தொடர்ந்து வரும்போது

7. விடியல் குகன் என்னும் எனது கல்லூரிக் கால நண்பர் கு.கருணாநிதி 42 ஆண்டுக்கும் மேலாக என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பயணத்தை எண்ணும் போது

8. சிறு வயதில் முதல் மாணவனாய் பள்ளியில் இருந்ததை எனது மூத்த சகோதரி மல்லிகேஸ்வரி அப்போது மணம் புரிந்து வந்திருந்த தோழி தேவகியிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது படுக்கை அறை கதவின் சந்து ஓரம் சென்று ஒளிந்து கொண்ட போது...

9, ஒவ்வொரு வாரமும் தாய் சந்தைக்குச் சென்று திரும்பும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொது முச்சந்தியின் தெருவிளக்குக் கம்பத்தின் முன் சார்ந்து கொண்டு அதைப் பிடித்துக் கொண்டு வைத்த விழி மாறாமல் அவள் வருகையை எதிர்நோக்கி காத்திருந்து அவளது தலைமேல் கூடையுடன் வருவது கண்ட போது...

10. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பேசி, பரிசாக பொருளீட்டியபோது
11. 11 ஆம் வகுப்பில் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசை வென்றபோது, பேச்சுப் போட்டியில் வட்டார அளவுக்கு தேர்வு செய்யப்பட்டு மேட்டூர் கூட்டுறவு பண்டகசாலையில் முதல் பரிசை எட்டி எனது பேச்சை ஒரு ஊமை சுமைப் பணியாளர் இரசித்துப் பாராட்டிய போது

12. அரட்டை அரங்கம், அகடவிகடம்,விஜய் டி.வி சன் டி.வி, பொதிகை, திருச்சி ஆல் இண்டியா ரேடியோ ஆகியவற்றில் வாய்ப்புகளை பயன்படுத்திய போது..

13. கபாலீஸ்வரர் கோவில் கட்டும்போது அதன் பிரதானமாக இருந்த இரசாயன ஆலை முதலாளியாலும் முடியாமல் எனது வழியாகவே மூலவர், மற்றும் பிரதான சிலைகள் அமைந்த போது அவரது ஆணவமும் செருக்கும் இயற்கையாக அடித்து அழித்த போது...

14. காதலன் என்று பொழுதுகளில் மாட்டிக் கொண்டு விழித்த போதும் அதை முதன் முதலில் அறிந்த போதும்

15. திருமணம்  மற்றும் தாம்பத்யம்

16. வீட்டுக்குப் போ நல்ல செய்தி காத்திருக்கிறது என மேட்டூர் சுப்ரமண்ய சாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு சென்றவனுக்கு என்ற வார்த்தைகள் வந்த பின் வீட்டுக்கு வந்து மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியை அறிந்த போது...

17.ஒவ்வொரு முறையும் எனது மகன் தனது மழைலையர் பள்ளி முதல் மேனிலை இறுதி யாண்டு வரை பரிசுகளாய்க் கொண்டு வந்து காண்பித்த போது

18. ஏராளமான புத்தகங்கள் படித்து நெக்குருகி உணர்வழுந்த உருகி நிற்கும்போது...எடுத்துக் காட்டாக ஒரு ரஷிய நாவலை ஒரு பொது கலை அரங்கத்தில் அனைவரும் சத்தமிட்டிருக்க நான் அதைப் படித்து கண்ணீர் புரண்டு வழிய அழுது கொண்டிருந்த போது...

19. எனது சகோதரி இருவரின் மனம் நெகிழ்ந்த உதவிகள் பெற்ற போதும் உற்ற நண்பர்களின் தேவையான நேரத்தின் உதவி பெற்ற போதும்

20.எந்த வித எதிர்பார்ப்புமே இல்லாமல்  எப்போது கேட்டாலும் எப்படியும் கிடைக்காத  சிலர் என் மேல் காட்டிய நேசத்தை உணர்ந்த போது

21. எனது மறுபடியும் பூக்கும் என்ற புத்தகம் உலகின் மாபெரும் நூலகக் கூட்டமான அமெரிக்கன் லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகத்தில் இடம் பெற்றதை அறிந்த போது... அதற்கான கடித அறிவுறுத்தல் பெற்றபோது

22.எனது தியானப் பயிற்சிகளில் பிரவீன்குமார் போன்ற இளைஞரைப் பெற்றபோது...

23. நல்ல சபை வாய்த்து எனது உரைவீச்சு நிகழ்ந்து அதை  பேசுவதற்காகவே பிறந்திருக்கிறீர் என அனைவரும் பாராட்டும் போது...

23. எனது புத்தகத்தை படித்து எவரோ திடீரென பாதையில் குறுக்கிட்டு உங்கள் புத்தகத்தால் உங்களால் நான் இந்த பயன் பெற்றேன் என்று நன்றி பாராட்டும் போது...

23. நிறைய பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு பொருட் செலவின்றி அவர்கள் அந்தப் பிரச்சினைய முடித்துக் கொடுத்து விடை பெறும்போது வாழ்த்தும் போது...இறக்கும் போது கூட தமது மக்களிடம் ஒரு தந்தை எந்தப் பிரச்சனை வந்தாலும் இவரை வைத்து பேசி முடித்துக் கொள்ளுங்கள் என எழுதிக் காட்டியதாக கேள்விப்பட்ட போது...

24. எனது தங்கைக்கும் அவரது மகளுக்கும் எனது எண்ணப்படியே மணம் அமைந்த போது...

25. நல்ல புத்தகங்கள் மார்க்ஸீயம், காந்தியம், ஜி.கிருஷ்ணமூர்த்தி எல்லாம் படித்து அதில் மூழ்கி நிற்கும் போது...

26. நல்ல திரைப்படங்கள் பார்த்து விட்டு ஸிண்டலர்ஸ் லிஸ்ட் போல பேச்சு மூச்சு வராமல் திகைக்கும்போது திக்கெட்டும் பரவ் தாம் தூம் என்று குதித்துக் கொண்டு அதைப்பற்றியே பார்க்கும் நபர்களிடம் எல்லாம் பல நாட்கள் பேசும்போது...

27. நல்ல இசை, திரை இசையும் கூட கேட்டு ஆழ்ந்து அமிழ்ந்து விடும் போது..ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா சித் ஸ்ரீராம்...

28. நல்ல கவிதைகளை விட்டு விடாமல் பிடித்து வைத்து எழுதி முடித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது

29. நல்ல புத்தகங்களைப் படித்து விட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது

30. எனக்கு ஒரு நல்ல தாய் தந்தை கிடைத்து சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத சகோதர சகோதரிகளை குடும்ப உறவாக பெற்றதை எண்ணும் போது...

31. எனக்கு அன்றாடம் பத்திய உணவை செய்து கொடுக்கும் துணையைப் பெற்றதற்காகவும் நல் ஒழுக்கமுடைய மகனை இளைஞராக பார்க்க இயற்கை அருள் செய்தமை எண்ணியும்....

இன்னும் எவ்வளவோ

அவை அதன் பின் தொடரும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment