Wednesday, December 6, 2017

அண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை

அண்ணாமலை நீ நின்றெரியும் விளக்கானாய்: கவிஞர் தணிகை

Image result for triangle hills


அண்ணாமலைன்னு பேரே வைக்கக் கூடாது, அப்படி வைச்சா அவனை சீக்கிரமா அந்த சிவனே எடுத்துக்குவான் என்பதை மீறி சுப்ரமணியம் அவனுக்கு அண்ணாமலை என்று பேர் வைத்தார். பையன் ஒரு தனிப்பிறவி. படு சுட்டி. எல்லாக் கல்வி கேள்விகளிலும் படித்து திளைத்து கரை சேர்ந்தான். அதன் விளைவு: இரமண மஹரிசி போல கையில் இருக்கிற காசை எல்லாம் முடியை மழித்துக் கொண்டு தூக்கி குளத்தில் எறிந்துவிட்டு பாதாள லிங்க அறையில் அண்ணாமலையில் அமர்ந்தது போல கோவில் கண்ட இடங்களில் குன்று கண்ட இடங்களில் எல்லாம் சென்று தனியே அமர்ந்து வந்தான்.

அபிராம பட்டர் பாடிய அந்தாதியில் உள்ள கோணாத கோல் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டான். அவனுக்கு வயது 30 ஆகும்போதெல்லாம் அந்த ஊரில் அவன் புகழ் வெகுவாக பரவியது அநியாயத்துக்கு எதிரான குரலாக அவனைத் தூண்டிவிட்டு பலரும் பயனடைந்து விட்டு அவனை துன்பத்துக்கு இரையாக்கினார்கள். பகடைகாயாக பலருக்கும் பயன்பட்ட அவன் ஒரு நாள் நான் எல்லாருக்கும் நல்லது செய்ய நினைக்கிறேன். கல்யாணம் பண்ண மாட்டேன்

இந்த நாட்டை ஆள எனக்கொரு வாய்ப்பு வந்தால் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவேன், நதிகள் இணைப்பெல்லாம் செய்வேன் என்று பேசித் திரியலானான். இவன் நல்லாதானே இருந்தான் என்ன ஆயிற்று இவனுக்கு என இவன் பற்றி தெரிந்தார் எல்லாம் இவன் மேல் அனுதாபப்பட ஆரம்பிக்க இவனோ குறைந்தபட்சம் நம்ம தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு கிடைத்தாலும் மக்கள் வாழ்வை வளமாக்குவேன். அனைவர்க்கும் குடிநீர், மருத்துவம், கல்வி, உணவு, வீடு இப்படி அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கச் செய்வேன், படித்த படிக்காத அனைவர்க்கும் வேலை கொடுத்து குடும்பங்களை எலலம் வறுமைப் பிணியிலிருந்து மீட்கச் செய்வேன் என்றான் பார்க்கும் எல்லாரிடமும்,

எங்கு வேண்டுமானாலும் நீ பெரிய இவனாக இருக்கலாம் இங்க முடியாதுடா என சொந்த ஊர்க்காரர்களாலே அவமானப்படுத்தப்பட்டான்..

உனக்கு ஒரு ஆள் கூட வாக்களிக்க மாட்டான் உன்னால் ஒரு கவுன்சிலர், மெம்பராகவும் ஆக முடியாது என்றார்கள். தப்பு குற்றம் செய்தார் எல்லாம் பதவிக்கு வரலாம் ஆளலாம் என்று இருக்கும்போது தவறுகளே செய்யாத நான் ஏன் வரக் கூடாதா? அதற்கு வழியே இல்லையா என்று கேட்டான் அவன் கேள்விக்கு எவருக்குமே விடை தெரியவில்லை.

அதுக்கு எல்லாம் கட்சி வேண்டும், காசு வேண்டும் அதெல்லாம் உன்னிடம் எங்கு இருக்கு என அவன் மேல் அக்கறை உள்ளார் சொல்லியும் கூட இவன் கேட்பதாக இல்லை.

அப்படியே கேட்டுக் கொண்டே காலத்தை கழித்த அவனை அவனது நண்பன் ஒருவன் கார்த்திகை என்ற பேருடையான் வா, அண்ணாமலைக்கு சென்று கார்த்திகை தீபம் பார்த்து வரலாம் என்று கூட்டிச் சென்றான்

அந்த இரண்டாயிரம் மூவாயிரம் அடி மலைக்கு மேல் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட தீபத்தைப் பார்த்த அண்ணாமலை அடுத்த வருடம் நம் ஊரிலும் இதே போல கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கார்த்தி, பார்த்தி, பாரதி ஆகிய நண்பர்களிடம் சொல்லி வந்தான்.

அதெல்லாம் நம்மால் முடியாதுடா  என்ற அவன் நண்பர்களுக்கு ஏன்டா மனிதன் நினைத்தால் முடியாதா என்ன? என என்னால் எம் மக்களுக்கு நல்லாட்சிதான் புரிய கொடுத்து வைக்க வில்லை இது கூடவா முடியாது என அடுத்த ஆண்டில் மேட்டூரில் ஒரு மிகப் பெரும் கார்த்திகைத் திருவிழா நடக்கும் மாபெரும் மலை ஒன்றில் அண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் போல ஏற்றப்படும், ஆர்வமுள்ளார் ஒத்துழைப்பு நல்க, பொருளுதவி செய்க என கார்த்திகை வரும் முன்னே  ஒரு துண்டுப் பிரசுரத்தை நண்பர்கள் காசு கொடுக்க அடித்து பரப்பினான். அதில் எவர் பேருமே போடவில்லை.

அவன் ஒருங்கிணைத்து சுமார் இரண்டு வருடம் ஒரு கம்பெனி முதலாளியை வைத்து கட்டிய ஈஸ்வரன் கோவிலைக் கூட இவன் எட்டிப் பார்க்காதவனாகி நின்று விட்டானாகி தனித்து விடப்பட்டானாகி விட்ட போது இவன் எப்படி இதைச் செய்ய முடியும் என பல கருத்துகளை பலரும் பேசி வந்தனர். சிலர் ஏசி வந்தனர் சிலர் பழி கூறினர், சிலர் இல்லாத பொல்லாங்கை எல்லாம் இவன் மேல் ஏற்றிப் பேசினர்....


நாள் நெருங்கி வந்தது. அவனை எவருமே சட்டை செய்யவில்லை. அவனுக்கு சிறுவயதில் தாம் பள்ளிக்கூடம் படிக்கும்போது வாத்தியார்கள் துரத்தும்போது போய் விட்டு வந்த திப்பு சுல்தான் கோட்டை என்னும் கரடு நினைவுக்கு வந்தது

அங்கே மறுபடியும் ஒரு நாள் சென்று பார்த்தான். அதே குன்று அப்படியே நிலை குலையாமல். ஆனால் பயம் குலை நடுங்க வைக்குமாறு அமானுஷ்ய மௌனத்துடன் நின்று கொண்டிருந்தது. அங்கே எவரையும் கொன்று போட்டு வந்தால் கூட ஒரு ஈ காக்க எறும்புக்கும் கூடத் தெரியாது. இல்லை இல்லை ஈ காக்கா எறும்பு பறவை விலங்கைத் தவிர வேறு எவருக்குமே தெரியாமல் போய்விடும் இடம் அது.

அங்கிருந்து ஒரு சுரங்கப் பாதை செல்லும் அது காவிரி அணைபகுதியிலிருந்து மைசூருக்கு திப்பு சுல்தான் ஆண்ட அரண்மனைக்கே செல்லும் அதனால்தான் அதற்கு திப்பு சுல்தான் கோட்டை, திப்பு சுல்தான் கரடு என்ற பேர் விளங்கி வந்தது. ஒரு கல்லை எடுத்து அந்த கீழாக செல்லும் குகைக்குள் போட்டால் அது உருண்டு செல்லும் சத்தம் கேட்கும். அது பயமுறுத்தும், வௌவால் எச்சமும், பூச்சி பல்லிகளின் நடமாட்டமும் குடலை பிடுங்கும் நாற்றமாக அடிக்கும்.

மனித அரவமே, சஞ்சாரமே அற்ற பகுதி அதுதான் மேட்டூரின் எல்லை அந்தப்பக்கம் சென்றால் கர்நாடகத்துக்கே கூட சென்று விடலாம்...பல மலைகளின் நடுவே ஆற்றின் அணை அமைவிடையே இந்த திப்பு சுல்தான் கரடு , கோட்டை இருக்கும் குன்று ஒரு சரியான முக்கோண வடிவாகவே வெகு தொலைவிருந்து பார்த்தாலும் தெரியும். மேலும் அதன் உச்சியும் மிக அற்புதமாக இயற்கையாகவே செயற்கையாக செய்திருந்தால் கூட அப்படி வந்திருக்காத வண்ணத்தில் மிகவும் சரியாக இருக்கும்.

நண்பர்களை எல்லாம் அழைத்து சொல்லச் சொன்னான் முடிந்தால் அனைவரும் அந்த மலை அடிவாரத்துக்கு வருமாறு அழைத்தான் மேட்டூருக்கே மாபெரும் கார்த்திகை தீபத்தை அந்த அண்ணாமலையில் ஏற்றுவது போல ஏற்றிக் காட்டுகிறேன் என்றான்

சசிபெருமாள் என்ற மதுவிலக்குப் போராளி செல்பேசி கோபுரத்தில் ஏறும்போது இருந்தது போல மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. இவன் ஒரு பைத்தியக்காரனாயிற்றே இவன் என்ன எப்படி அப்படி செய்ய முடியும்? எந்த வசூலிலும் அவ்வளவு பணம் இவனை நம்பி எவருமே கொடுக்காத போது இவன் என்ன செய்யப் போகிறான் என நண்பர்களும் கவலை அடைந்தனர் இவன் அதற்கான ஏற்பாடு எதையுமே செய்யவில்லையே எப்படி என அடிவாரத்தில் காத்திருக்க...

சுமார்  6 மணிக்கு மேல் இருக்கும், குளிர் கால இருட்டு ,திடீரென வெளிச்சம் சுடராக இருளைக் கடத்திவிட ஒரு நெடிய நெருப்பு சுடர் விட்டு எரிந்தது ....அந்த உடல் கருகி சாம்பலாகி முடியும் வரை ஒரு சத்தமும் எவரும் கேட்டதாக இல்லை, பாஹுபலி தர்மஸ்தலாவிலும், சிரவணபெலகொலாவில் நின்ற அதே போல ஒரு எலும்புக் கூடு உடையாமல் சாயமால் நின்று இருந்தது....


கார்த்தி, பார்த்தி. பாரதி ஆகிய அவன் நண்பர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒன்றுமே விளங்கவில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஒரு சிறுகதை முயற்சி... பொறுமை இல்லா நான் என்றுமே கதை எல்லாம் எழுத முயன்றதே இல்லை. இது வேறு.

6 comments:

  1. நன்றாக இருக்கு தணிகை! எவ்வளவோ எழுதும் நீ இது போன்று கொஞ்சம் எழுதினால் உன் பெயர் சிறப்பாக நிலைக்கும்!

    ReplyDelete
  2. thanks YOUNGSUN. YOU ARE REAL FRIEND ALWAYS COME ALONG WITH ME even though we are in various planets of life.Your encouragement is makes me happy.

    ReplyDelete
  3. நன்றாக சிறப்பாக இருந்தது.
    ==========================
    நீங்கள் சொன்ன மாதிரி தான் நாக்கு சுத்தம் செய்கிறேன்.
    நன்றி! வணக்கம்!.

    ReplyDelete
    Replies
    1. thanks Suriyaa for your feedback on this post. vanakkam. keep contact

      Delete