Saturday, December 2, 2017

மத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவிஞர் தணிகை

மத்திய வீட்டு வசதித் திட்டம்: எனது பகிர்வுகள்: கவிஞர் தணிகை


Related image

வீட்டின் மேற்கூரை ரீப்பர்கள் காலம் போய்விட தொங்க ஆரம்பித்திருக்கும் ஓடுகள் வேயப்பட்ட வீடுதாம் எமதும், எப்படிப் பார்த்தாலும் அவை வேயப்பட்டு 60 ஆண்டுக்கும் மேல் இருக்கும்.


இதை சரி செய்து சீராக்கலாம் என்றால் பொருளாதாரம் மேல் நிலையில் இல்லை. இன்றைய பொழுதில் நீர்வசதி, மணல், மின்வசதி அதன் செலவு வேலையாட் கூலி அக்கம் பக்கம் தொல்லை இவை யாவற்றையும் ஆலோசித்து ஒரு வீட்டு வேலை ஆரம்பிக்கலாம் என்பதும் செய்து முடிப்பதும் சாதாரணமானதல்ல.

இந்நிலையில் தமிழகத்தின் எல்லா மணல் குவாரிகளையும் 6 மாதம் மூடி விடவும், மலேசிய மணலை இறக்குமதி செய்யவும் அரசைப் பணித்திருக்கிறது நீதிமன்றம். மேலும் புதிய மணல் குவாரிகளும் ஏதும் திறக்கவும் கூடாது என்பதும் உத்தரவு.

இதை எல்லாம் அப்புறப்படுத்திப் பார்த்து விட்டு, வீடு கட்ட‌ ஊராட்சி மன்றம் வழியே சுமார் 2 இலட்சம் இலவசமாக மானியமாகக் கொடுக்கிறார்களாம். மோடி பிரதமர் திட்டம் என்ற பேரில் சுமார் 2 இலட்சம் ஏறத் தாழ அது 2 இலட்சத்து 16 ஆயிரம் என்ற போதிலும் 4 முறையாக 4 தவணையாக அதைப் பெறுவதில் சுமார் 20,000 கைக்கு வராதாம். ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் வரை கிடைக்குமாம்.

கையில் பணம் இருந்தால் கட்டிக் கொள்ளலாம், அதை எல்லாம் எதிர்பார்த்து கட்ட முடியாது, நாங்கள் எல்லாம் ஏன் இதை ஏற்றுக் கொண்டு கட்டினோம் என இருக்கிறது என்ற தகவல்களை எல்லாம் சேகரித்து எமது வீட்டின் துணைவி இதெல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தார்.\

இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் ஊராட்சி மன்றம் விடுவதாக இல்லை வேண்டாம் என்றெல்லாம் சொல்லக் கூடாது, வாங்கிக் கொள்ளுங்கள் என தொடர்புடைய பணி செய்யும் நபர்களை வைத்து தொந்தரவு செய்யவே ஆரம்பித்துவிட , நாங்கள் வேண்டாம் வேண்டாம் என மறுக்க...சரி வேண்டாம் என்றால் ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்தைப் போட்டுக் கொடுங்கள் எனச் சொல்லி நாமும் கையெழுத்திட்டு முடித்து விட்டொம்.

சில பல மாதங்கள் சென்றிருக்கும்.

மறுபடியும் நீங்கள் உங்கள் வங்கி வரவு செலவு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, அதார் கார்ட், போன்ற அத்தியாவசிய அடையாள நகல்களை எங்களுக்கு கொடுங்கள் என வீட்டுக்கு வந்தும் சில முறை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று சொல்லி கையெழுத்திட்ட பிறகு மறுபடியும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்றால் இந்தத் திட்டத்தில் சேர்வதாக சொன்ன 300 பேரில் சுமார் 200 பேர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். விவரம் தெரிந்த நீங்களே இப்படி செய்யலாமா கொடுங்கள் விவரங்களை நாங்கள் மறுபடியும் ஒரு விண்ணப்பம் தருகிறோம் அதில் கையொப்பம் இட்டுக் கொடுங்கள் என்றார்கள்.

இதென்ன கூத்தாக இருக்கிறதே? தொகை வேண்டும் என்று சொன்னால் தான் இந்த இத்தனை விவரங்களும் தேவை...வேண்டாம் என்பதற்கு மறுபடியும் நாங்கள் இந்த விவரஙக்ள் அடங்கிய நகல்களை இணைத்து தர வேண்டும்? எதற்கு அலுவலகம் வரவேண்டும் என்று செல்லவே இல்லை.
Related image

அதன் பிறகு மறுபடியும் நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் தொலைந்து விட்டன, அதைக் கணினியில் ஏற்றி அதன் பின் நீங்கள் வேண்டாம் என்று சொல்வதைக் காட்டி அதை மறு நபர்க்கு மாற்றிக் கொடுத்து விடலாம் எனவே நிலையைப் புரிந்துகொள்ளுங்கள் அந்த விவரங்களைக் கொடுங்கள் என்று மறுபடியும் வேண்டுகோள்.

தெருவிளக்குகள் மாதக் கணக்காக எரியவில்லை அதை எரியவைப்பதாக எத்தனை முறை சொல்லியும் ஊராட்சியும் மின் வாரிய அலுவலகமும் செய்வதாக இல்லை...நள்ளிரவில் ஒரு மணிக்கு, இரண்டு மணிக்கு குடி நீர் விட்டு பெண்களை தூங்க விடாமல் செய்யும் இந்த ஊராட்சியை நம்பி நாம் எந்தத் திட்டத்தை எப்படித்தான் நம்பி செயல் பட முடியும்?

இன்று மணல் விற்கும் நிலைக்கு மணலுக்கே இவர்கள் கொடுக்கும் பணம்  சரியாகப் போனால் எப்படி ஒரு ஏழை எளியவரால் வீடு கட்ட முடியும்? இவர்களுடன் மல்லுக் கட்டி அந்த தவணை முறைகளில் பணம் பெற நம்பி இருக்கும் சுவர்களை இடித்துவிட்டால் இருக்கும் நிலைக்கே பங்கம் வந்து விடாதா ஜோக்கர் என்னும் படத்தில் கட்டுவதாக சொன்ன கழிப்பறைக் கதைகள் எனக்கு நல் நிலையை நல் அறிவை ஊட்டி விட...

ஏன் இதை எல்லாம் பதிவாக்கி விடுகிறேன் எனில் இதுதான் நாட்டுக்கு உழைத்த உழைக்கும் ஒரு நியாயமான எவரையும் ஏமாற்ற விரும்பாத நல்ல நபர்களின் நிலை. இதை இந்திய நாட்டில் எவர் தீர்க்க வருவார்? என்பதற்காகவே...

எம் போன்றோரால் தீர்க்க முடியும்தான் ஆனால் எம்மை நம்புவார் என பெரும் கூட்டம் இல்லையே... வள்ளியூரில் ஓராண்டுக்கு முன் கட்டிய பாலம் இடிந்ததாக செய்தி.

 இன்று முதல்வர் திருவாக்கவுண்டனூரில் பைபாஸில் சுமார் 22 கோடி செலவில் உருவான பாலத்தை திறந்து துவக்கி வைத்திருக்கிறார் அம்மாவின் வாரிசாக நின்று...

இந்த இரண்டு செய்திகளுக்கும் எந்த வித இணைப்பும் தொடர்பும் இல்லை அப்படி எல்லாம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நானோ மறுபடியும் பூக்கும் தளமோ பொறுப்பல்ல.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை






No comments:

Post a Comment