Thursday, December 14, 2017

நம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை

நம்பினா நம்புங்கள்: கவிஞர் தணிகை


ஒரு மனிதருக்கு 31 யானைகள் செலுத்திய அஞ்சலி! #FeelGoodStory

உன்னை அறிந்தால்
சில நினைவுகள் மறக்க முடியாதவை; எப்போது நினைத்தாலும் உயிர்ப்போடு இருப்பவை; இதயத்தைத் தொடுபவை’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேன் ஜோசப் பி வ்ரித்லின் (Joseph B. Wirthlin). அதுபோன்ற நினைவுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும். ஒரு பெரிய பிரச்னை, ‘தலை மேல் கத்தி’ என்பார்களே... அதுபோன்ற ஆபத்து... நம்மை அதிலிருந்து காப்பாற்றுகிறார் ஒருவர். அவரை, அந்த உதவியை நம்மால் மறக்க முடியுமா? அதற்காகக் காலம் பூராவும் அவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருப்போம். `நன்றி செலுத்துதல்’ குணம் நமக்கு மட்டுமானதல்ல... எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. ஒரு பேராபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய மனிதருக்கு நன்றி செலுத்த, யானைகள் கூட்டமாக நடந்துசென்ற கதை கொஞ்சம் நெகிழ்ச்சியானது. பார்க்கலாமா?
யானை
அது, 2012-ம் ஆண்டு. அந்த அபூர்வமான நிகழ்வு நடந்தது, தென்னாப்பிரிக்காவில்! ஒன்று, இரண்டல்ல... மொத்தம் 31 யானைகள். எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் நடத்தின. விஷயம் வேறு ஒன்றுமில்லை. அந்த யானைகளுக்குப் பிரியமான ஒரு மனிதர் இறந்துபோனார். அவருக்கு நன்றி செலுத்துவதாக யானைகள் எல்லாம் ஒரு பெண் யானையின் தலைமையில் ஒன்று சேர்ந்தன. சரி... அவற்றுக்கு எப்படி அவர் இறந்துபோன விவரம் தெரியும்? இதற்கு இயற்கையைக் கையைக் காட்டுவதைத் தவிர வேறு பதிலில்லை. மனிதர்களைவிட யானைகளுக்கு கூர்மையான அறிவும் புலனுணர்வும் உண்டு. தங்களையும் பல விலங்குகளையும் காப்பாற்றிய ஹீரோ அவர் என்று யானைகள் நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கைதான், லாரன்ஸ் அந்தோணி (Lawerence Anthony) என்ற பிரியத்துக்குரிய அந்த மனிதர் இறந்துபோனதை அவற்றுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
லாரன்ஸ் அந்தோணி, எழுத்தாளர், சூழலியலாளர், யாத்ரீகர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் 1950-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தாத்தா காலத்தில் அவரின் குடும்பம் இங்கிலாந்திலிருந்து சுரங்க வேலையின் பொருட்டு ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. லாரன்ஸ் அந்தோணியின் தந்தை இன்ஷூரன்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தோணி, ஜாம்பியா, மாலாவி, ஜூலுலேண்ட்... என ஆப்பிரிக்காவின் பல ஊர்களில் வளர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவைப்போலவே இன்ஷூரன்ஸ் வேலை செய்தார். கூடவே ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்துகொண்டிருந்தார்.
அவர் இருந்தது அடர்ந்த காட்டுப்பகுதி. ஒருமுறை ஒன்பது யானைகள் கொண்ட குழுவை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றி, பத்திரமாகக் காட்டுக்குள் அனுப்பிவைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அது மட்டும் நடக்கவில்லையென்றால், அவை வேட்டையாடப்பட்டு, இறந்துபோயிருக்கும். அதுதான் அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான புள்ளி. அன்றைக்கு யானைகளை காட்டுக்குள் போகச் சொல்ல, தன் உடல்மொழியையும் குரலையும் பயன்படுத்தினார். அந்த அனுபவத்தை மையமாக வைத்துத்தான் பின்னாளில் `எலிஃபென்ட் விஸ்பரர்’ (Elephant Whisperer) என்ற நூலாக எழுதினார். அது விற்பனையில் சக்கைபோடுபோட்ட `பெஸ்ட் செல்லர்’ புத்தகம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யானைகளுக்கு, மனிதர்களால் எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்க ஆரம்பித்தார். பல யானைகளையும், விலங்குகளையும் காப்பாற்றினார். யானைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தார். அவற்றில் முக்கியமான ஒரு சம்பவமும் உண்டு. 2003-ம் ஆண்டு அமெரிக்கா, ஈராக்மீது படையெடுத்தபோது, பாக்தாத் நகரில் இருந்த ஜூ-வில் இருந்த விலங்குகளைக் காப்பாற்ற ஓடினார். அந்த ஜூ, மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரியது. அங்கே சுமார் 700 விலங்குகள் இருந்தன. அமெரிக்கா குண்டு வீசியதில், 35 மட்டுமே உயிர்பிழைத்திருந்தன. கூண்டுகளில் தண்ணீரும் உணவும் இல்லாமல் கிடந்த அந்த விலங்குகளில் சிங்கம், புலி, கரடி போன்றவையும் அடக்கம். அமெரிக்க எதிர்ப்பையும் மீறி, தைரியமாக அவற்றைக் காப்பாற்றினார். 2012, மார்ச் மாதம் லாரன்ஸ் அந்தோணி இறந்துபோனார்.
லாரன்ஸ் அந்தோணி
காட்டில் இரண்டு குழுக்களாக அந்த யானைகள் பிரிந்திருந்தன. தாங்கள் நேசித்த, தங்களை நேசித்த ஒரு மனிதரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவை அமைதியாக, அந்த மனிதரின் வீடு நோக்கி நடந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்த லாரன்ஸ் அந்தோணியின் வீட்டுக்கு அவை 12 மைல் தூரம் நடந்தே சென்றன. வழியில் எந்த மனிதரையும் அவை கவனிக்கவில்லை. மனிதர்கள்தான் இவற்றைக் கவனித்தார்கள். கூட்டமாக, துளிச் சத்தமில்லாமல் இவை எங்கே போகின்றன என்று ஆச்சர்யப்பட்டார்கள்; சிலர் பின்தொடர்ந்தார்கள்.
31 யானைகளும் வரிசையாக, ஒரே சீராக நடந்தன. தங்கள் நண்பருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணம் மட்டும்தான் அவற்றுக்கு இருந்திருக்க வேண்டும். அந்தோணியின் வீட்டை அடைந்ததும், அமைதியாகச் சுற்றி நின்றுகொண்டன. அந்த யானைகள் வீட்டை ஏதாவது செய்துவிடுமோ, தங்களைத் தாக்கிவிடுமோ என்று அங்கிருந்த சிலர் பயந்தார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இரண்டு பகல், இரண்டு இரவுப் பொழுதுகள்... அந்த யானைகள் துளி புல்லைக்கூடச் சாப்பிடாமல் அங்கேயே இருந்தன. பிறகு, மிக அமைதியாக தங்கள் காடு நோக்கித் திரும்பிச் சென்றன.
அவை போன பிறகு, அந்தோணியின் மனைவி, ஃபிரான்கோய்ஸ் மால்பி (Francoilse Malby) சொன்னார்... “இதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு எந்த யானையும் வந்ததில்லை. இதுங்களுக்கு எங்க வீடு எப்படித் தெரியும்னு ஆச்சர்யமா இருக்கு.”



இன்றைய சேதி:

ராதா கிருஷ்ணன் நகர்

ஜனநாயக கேலிக்கூத்து இந்த ஆர்.கே நகர் தேர்தல். தேர்தலை நிறுங்க, அல்லது இப்படிப் பட்ட ஜனநாயகத்துக்கு மாறாக மாற்று வழி என்ன என யோசியுங்க, செயல்படுத்த...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

2 comments:

  1. நாம்மைவிட மேலானவை விலங்குகள் என்பதை, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், விலங்குகள் நிருபித்து வருகின்றன

    ReplyDelete