Sunday, January 15, 2017

பொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்: கவிஞர் தணிகை.

பொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்: கவிஞர் தணிகை.



கிரிக்கெட் மட்டையும் கைகளில் மதுப் புட்டியுமாக தமிழனமும் மாறி விட்ட சூழலில் 2017 துவங்கி இருக்க பொங்கல் பொலிவிழந்து நியாயவிலைக் கடை இலவசப் பொருட்களில் மாறி இருக்க,ஜல்லிக் கட்டு என்று சொல்லாமல் ஏறு தழுவுதல் என்று சொல்லி தடையை மீறுங்கள் என தமிழ் நாட்டின் பெரும்பாலான எண்ணக் குவியல்கள் குவிந்து கிடக்க...அறுவடை இல்லாத பொங்கலாய் இந்தப் பொங்கல்.... மழையின்றி, நீரின்றி, விளைச்சலின்றி...நிலமெல்லாம் மலடாய், காய்ந்து ,பிளந்து கிடக்க...

எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் போட்டிகள் , ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று அல்லது 4 இளைஞர்கள் இது போல சில மோட்டார் சைக்கிள்களில் ஒரு டீம் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் பல இடங்களிலும் சென்று விளையாடியபடியே சென்று கொண்டிருக்கிறது ஏதாவது பரிசு கிடைக்குமா என்று முயற்சி. கடைசியில் இரவானதும் மதுப் புட்டிகளுடன் உல்லாசம். நல்ல வியாபாரம் மதுக்கடைகள் வழக்கம் போல.

பல்லாயிரக்கணக்கான பரிசு மழைகள். எங்கோ ஒரு இடத்தில் மட்டும் கபடிப் போட்டி நடத்துவதாக விளம்பரப் போஸ்டர் இருந்ததை கவனிக்க முடிந்தது. மற்றதெல்லாம் கிரிக்கெட்தான்.

இந்நிலையில் அறுவடைத் திருநாளான பொங்கல் எப்படி எனப் பார்த்தால், நீரில்லா தமிழகத்தில் எப்படி நிலம் பூ பூக்கும்,காய் காய்க்கும், பயிர் முளைக்கும் எங்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கக் கோரி மக்களின் கோரிக்கைகள். மந்திரியை இடைமறித்தும் கேட்கப் பட,அவர் உரிய ஆவணங்கள் இருந்தால் தாமாக கிடைக்கும் என பட்டும் படாமல் பதில் சொல்லியவண்ணம் பயணத்தை தொடர்ந்தாக செய்திகள்

போகிப்பண்டிகையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆண்டு வெண்ணிற பூளைப் பூக்கள் அறவே இல்லை. வெறும் ஆவார மொட்டுகள் கொஞ்சம், மீதி எல்லாம் வேப்பிலை வைத்து ஆசையை போக்கிக் கொண்டனர் மக்கள் கிராமங்களில் கூட வீட்டின் வாயிலில் கொஞ்சம் வேப்பிலையை வைத்து ஓரிரு இடங்களில் செருகி வைத்திருந்ததோடு சரி.காலம் மாற மாற எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு போகி அன்று இந்தப் பழக்கம் மறைந்து விடும். ஒரு கட்டு இந்த இலைகள் 10 ரூபாய், நானறிந்த ஒருவர் கொஞ்சம் வைத்திருந்தார் ரூ.40க்கும், 60க்கும் வாங்கினேன் என்றார். எனக்கு வழக்கம்போல இயற்கை நன்மை செய்ய காசுக்கு வாங்காமலே நடைப்பயிற்சியின் போது அரிதாக ஓரளவு சமாளிக்கும் அளவில் கிடைத்தி விட்டது. ஆனாலும் பூளைப்பூ அரிதாகவே கிடைத்தது.

இந்த ஆண்டு நாம் தனிப்பட்ட முறையில் கிழிந்திருந்த காலணியின் உறைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, புதுக் காலுறைகளை உபயோகிக்கப் படுத்த ஆரம்பித்ததும், உடல் என்ற உறை தமது 3 ஆம் சுழற்சியை ஆரம்பித்ததை நினைவு படுத்த உப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, குடல் புண், மூலம், நிறமி அணுக் குறைபாடு எல்லாம் சேர்ந்திருக்கும் உடலை இன்னும் ஆயுள் நீட்டிப்பு செய்ய இந்த ஆண்டு முதல் பேக்கரி ஐட்டம், கேக், ஸ்வீட், விருந்து, கிழங்கு வகைகள்ஆகியவற்றை உண்பதில்லை என்ற  புதிய முடிவை அமலாக்கி விட்டேன், அதன்படி நமது பொங்கல் பொங்கலை வாயில் வைக்காமலே கரும்பு கூட கடிக்காமலே சென்று விட்டது, போகி அன்று வேகவைத்த சர்க்க்ரை வள்ளிக் கிழங்கையும் கையாலும் தொடவில்லை.  மேலும் அரிசி உணவையும் குறைத்து, உடற்பயிற்சியை மேலும் சீராக்கவும் செய்ய ஆரம்பித்தேன்.அப்போதும் எண்ண நெருடல்களும் வாக்குவாதங்களும் தொடர்ந்த படியேதான் இருக்கின்றன அதையும் சீர் படுத்த வேண்டும் என்ற அவா உள்ளது. மேலும் கடமை இருக்கிற படியால் இன்னும் இந்த உலகில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

Related image


எல்லாமே தமிழகத்துக்கு ஏறுக்கு மாறாக இந்த மத்திய பி.ஜே.பி அரசு செய்து வருவது யாவரும் அறிந்தது.காவிரியில் நீர் இல்லை என தமிழகத்துக்கு தரவேண்டிய பங்கை தராத பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஒன்றும் செய்ய முடியவில்லை அதற்கு மத்திய அரசும் எந்த வழியும் செய்ய வில்லை. இந்நிலையில் நடுவர் மன்றம் அமப்ப்பது பற்றியும் உச்ச அமைப்புகள் எதுவும் செய்யவில்லை.ஆனால் ஜல்லிக் கட்டு என்ற பேரில் பொலி எருதாட்டம், (இளமி என்ற படம் இன்று பார்க்க வேண்டிய படம் அதில் மாடு பிடித்தலின் 3 வகையும் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது) மாடு விரட்டிப் பிடிப்பது, அதை விடுத்து ஏறு தழுவி அதன் திமலைப் பிடித்து அடக்குவது என தமிழரின் வீர விளையாட்டுகள் பொங்கல் அன்று நடைபெறுவது எருது, காங்கேயம் காளை, கோயில் காளை போன்றவற்றிற்கு ஒரு அற்புத பயிற்சி.

அந்தக் காலத்தில் வீர விளையாட்டுக்கு ஒர் மரியாதை உண்டு பெரும்பரிசுகளும் உண்டு ஏன் திருமண நிகழ்வுக்கே பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பதுமுண்டு.இந்த போட்டிகளில் வெல்லும் இளைஞர்க்கு.

ஆனால் இப்போது யாவும் மறைந்து வருகிறது. மதுரை  , திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் மட்டும் இந்த அவா இன்னும் இளைஞர்களிடம் ஊறிக் கிடக்கிறது. மற்றைய தமிழகப் பிரதேசங்களில் எல்லாம் அது மறைந்து விட்டதுதான்.

ஆனால் அதற்காக மத்திய அரசு தடை செய்வதில் ஒரு அர்த்தமும் பொருளும் இல்லை . எனவேதான் கமல் முதற்கொண்டு அனைவரும் கேட்கின்றனர் மாட்டுக் கறி சாப்பிடுவது தடை செய்யப் படாத போது இதற்கு எதற்கு தடை என்று...? நியாயமான கேள்விகள்.பிரியாணையைத் தடை செய்து விட்டு இதை தடை செய்திருக்கலாம் என்பது சரிதான்.
Related image


மதுவைத் தடை செய்யாத அரசு
புகைப்பதை தடை செய்யாத அரசு
சிவப்பு விளக்கு பாலியல் தொழிலை தடை செய்யாத அரசு

தேர்தலில் பணவிளையாட்டுகளை தடை செய்து சீரான ஒழுங்கான தேர்தலை நடத்த அருகதை அற்ற அரசு,
பொது இடத்தில் சிறு நீர் கழிப்பதை,அசுத்தம் செய்வதை , குப்பை போடுவதை தடுக்க முடியாத அரசு
பாலியல் படங்களை இணையத்தில்  தடை செய்ய முடியா அரசு
புதிதாக வரும் சினிமாப் படங்களை இணையத்தில் வெளிவருவதை தடை செய்ய முடியா அரசு

தம் நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர முடியா அரசு

அறக்கட்டளை வழியே மக்களின் செல்வங்களை ஓரிடத்தில் குவித்து தனி மனிதர்களை கோடிகளில் புழங்க வைக்கும் அரசு

தமிழகத்தில் அரசியலில் கால் உன்ற முடியாது என்று அறிந்த நிலையில் கர்நாடகா அரசை வரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என அனைவரும் அறியும் வண்ணமே கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை நெருக்கியும் பல செயல்கள் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல் செய்வதும்...

மாடுகளுக்காக இவர்கள் கவலைப் பட்டால் அடிமாடுகளாக கேரளா கொண்டு செல்லப்படும் மாடுகளை சரணாலயம் கட்டி பாதுகாக்கலாம் புண்ணியம் கிடைக்கும் அதை எல்லாம் விட்டு விட்டு வருடத்தில் ஒரு முறை ஆங்காங்கே செய்து வந்த இந்த இளைஞர் விளையாட்டை தடை செய்தது சிறு துளியும் நெறியுடையதல்ல....

ஒரு வழியாக தமிழகத்தின், இந்தியாவின் மண் வள ரகங்களான கால் நடைச் செல்வங்களை முடித்து சீமை பசு, சீமைக் கோழி, இப்படி எல்லாம் வீரியமற்ற இனங்களை உண்டு பண்ணி விட்டார்கள் மனிதர்கள் உட்பட...

எல்லாமே ஆங்கிலம் ஐரோப்பிய மேனாட்டு கலாச்சார முறைகளுக்கு மாறி விட்டது, இந்தியக் கலாச்சாரம், தமிழின முறைகள் எல்லாம் மாறி கடைசித் தருவாயில் உள்ள நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது.

எங்களது தலைமுறைக்காவது கொஞ்சம் தெரியும், இனி வரும் தலைமுறைகளுக்கு எல்லாம் நமது மண்ணின் வளம்,மணம், உயிர் யாவுமே தெரியாமலே மறைந்து போகும்...

போராடும் வீரர் யாவருக்குமே நாம் நன்றிக் கடன் பட்டவர்களாவோம். ஆனாலும் அதையும் மீறிய வளர்ந்த இராமலிங்க வள்ளலின், புத்த, ஜைன மதக் கொள்கை யாவும் உயிர் ‍ஹிம்சை பற்றி பேசுவது யாவும் உயர்ந்தது. கிறித்தவம், முகமதியம், போன்றவை உயிப்பலி செய்து உண்பது தவறு எனக் கருதுவதில்லை. இந்து மதப் பிரிவுகளில் இவை பேசப்படுவதுண்டு. ஆனாலும் இந்த அரசுகளுக்கு எல்லாம் இவை பற்றி பேச எந்த அருகதையுமே இல்லை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment