Wednesday, August 2, 2017

நீரின் பேரோசை இல்லை/ /சொர்க்கமே என்றாலும் எங்க ஆடி 18 போல வருமா? கவிஞர் தணிகை.

சொர்க்கமே என்றாலும் எங்க ஆடி 18 போல வருமா? கவிஞர் தணிகை.

Related image

சாதி, மத, இன,மொழி,வேறுபாடின்றி மாபெரும் கூட்டமாக  எல்லாரும் கலந்து கருத்தொருமித்து கூடும் இந்த நீர்ப் பெருக்குத் திருவிழா தனது பொலிவை மிக வேகமாக இழந்து விட்டது காவிரியில் , தமிழகத்துக்கு நீரின்றி கர்நாடகம் செய்த செயல்பாடுகளால்.

முன் இரவு முழுதும் உறக்கமே வராது. கழுத்தின் காண்டாமணி ஆட எருது பூட்டிய மாட்டு வண்டிகளின் சத்தமும், அந்த வண்டியில் அடிப்பகுதியில் அணையாமல் ஆடிய படியே செல்லும் அந்த இராந்தல் விளக்குகளின் அணிவகுப்பும், அந்த வண்டிகளின் மேல் பாரமாய் வைக்கோலை வைத்து , தயாரித்த மண் சட்டிகளுக்கு கருஞ்சாயம் பூசி ஒன்றோடு ஒன்று மோதி உடையாமல் காத்து வண்டிகளின் பக்கவாட்டில் இருக்கும் மழுக்குச்சிகளில் எல்லாம் சட்டிகளை மாட்டிக் கொண்டு மேட்டூர் அணைப் பகுதி கரைகளிலும்
எல்லீஸ் டங்கனால் கட்டப்பட்ட அந்த அரை வடிவத்திலான 16 கண்மாய் பாலத்துக்கு செல்லும் வழிகளிலும் கடை விரித்து பாவமில்லாத விற்பனையை செய்து வரும் அந்தக் கூட்டத்தை இனி காணவே முடியாது

எத்தனை வகை தின்பண்டக் கடைகள், பேரிக்காய் முதல் வகை வகையான பழவகைகள், எத்தனை சிறு பிள்ளைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் அங்குதான் நான் முதலில் கண்டது தண்ணீர்ப் பந்து, பல வகையான பலூன்கள், பறந்து பறந்து சுழன்று சுழன்று விண்ணில் பாய்ந்து மண்ணில் ஓய்ந்து விழும் பம்பரக் காற்றாடிகள், கார்கள், ரயில்கள், விமானங்கள், ராக்கெட்டுகள்,பம்பரங்கள், கேட் வில் எனப்படும் உண்டி வில்கள், புல்லாங்குழல்கள், வண்ண வண்ண கண்ணாடிக் குடுவைக்குள் நீரின் ஜாலஙக்ள் பரம பதங்களின் அட்டைகள், தாயகரம் மற்றும் தாயக்கட்டைகள், சதுரங்க அட்டைகள்,பெண்கள் மிக விரும்பும் பல்லாங்குழிக் கட்டைகள் பல வகையான தினுசுகளில்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


Related image

எப்போதோ பார்த்த உறவுகளும், நட்பூக்களும் அன்று கண்ணில் பட்டு அன்பை பரிமாறிக் கொள்ளும்...அதற்காகவே வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்வோம் பல மைல்கள்

எத்தனை சிறப்பு வாகனங்கள் அரசு ஏற்பாடு செய்தாலும் அத்தனையும் மூட்டையில் ஓட்டை விழுந்தால் பிதுங்கி வெளிக் கொட்டும் அரிசி மணிகளைப்போல பிதுங்கியபடியும் கொட்டிவிடுவார்களோ வெளியில் எனச் சொல்லுமளவு நாம் கண்டு பயப்படுமளவு வாகனங்கள் சாய்ந்தபடியே செல்லும்...

Related image


இந்த ஆடி 18 நீர்ப் பெருக்குத் திருவிழா வரும்போது அதற்கு முன்பாகவே கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் பாலி எனப்படும் முளைப்பாரி எனச் சொல்லும் நவதானிய மணிகளை ஊறவைத்து முளைக்க வைப்பார்கள் அது அற்புதமாக பசுமையான செடிகளாக அந்தப் பாத்திரத்தின் வடிவத்தில் உயர்ந்து நிற்கும்.

அந்த பாலிகையை எடுத்துக் கொண்டு, இன்னும் பிற பூஜை சாமான்களுடன், வெற்றிலைப் பாக்கு , காதோலைக் கருகமணிகளுடன், மா இடித்து இன்னும் சர்க்கரை அரிசி, இப்படி வேறுபாடான தயாரிப்புப் பண்டங்களுடன் பொதுவாக எல்லாக் குடும்பம் சார்ந்தவர்களுமே தமது குடும்பத்துடன் காவிரியில் சென்று கால் நினைத்து, அந்தக் கரையோரம் சில கற்களைப் பொறுக்கி எடுத்து தேர்வு செய்து அதற்கு பூ, பொட்டு, இட்டு காவிரி அன்னையை கன்னிமார் என வணங்குவார்கள்....

அந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கும்போது சிறுவர்கள் நாங்கள் எங்கள் விளையாட்டில் பெற்ற முட்டிக்கால் முழுப்புண்கள், கால் கைகளில் உள்ள புண்களை எல்லாம் காவிரி நீரில் மீன்களிடம் வைப்போம் அப்போது அந்த மீன்கள் வந்து அதைக் கடித்து சுத்தம் செய்யும். புரையோடிய புண்ணாய் இருந்தாலும் அவை சிவந்து காணப்படுமளவு சுத்தம் செய்து தரும். அவை தமது சிறிய வாய் கொண்டு நமது புண்களை கடித்து இழுக்கும்போது ஒரு வலி வரும் பாருங்கள் சுருக் என வெடுக் என...அதை எப்ப்போதும் நாம் உணரமுடியும் 50 ஆண்டுகளிலும் எனக்கு மறக்காமல் இருக்கிறதே...

எப்படியாப்பட்ட திருவிழா தெரியுமா உங்களுக்கு: ஊரே கூடி விடும்..பல் வேறுபட்ட வெளியூர் ஜனங்கள் வந்து குவிந்து விடுவார்கள், குளித்து முடித்து காவிரி அன்னையை வணங்கி,அந்த கீழ் மேட்டூரில் இருக்கும் முனியப்பனை வணங்கி புதிதான சினிமா இருந்தால் கூட்டம் கொள்ளாது பார்த்து வாகனங்களில் ஏற முடியாமல் ஏறி, தொடர்ந்து காவலில் ஈடுபடும் காவலர்கள் திருடர்களுக்கும், ரௌடிப் பயல்களுக்கும் சிம்ம சொப்பனமாக மாறி ரோந்து சுற்றுவதும், எந்த வித பங்கமும் மக்களுக்கு நேராமல் காபந்து செய்வதுமாய்...எல்லாமே அல்லோகலம் கோலாகலம்...

மேட்டூர் சாலையெங்குமே விழாக்கோலமாய், வேறு எந்தவித காலத்திலும் இல்லாத விழாக்காலமாய் இருக்கும், எத்தனை இரசிகர் மன்றங்கள் எத்தனை விளம்பரங்கள் நீர் மோர், தண்ணீர் பந்தல் என்றபடி...மக்கள் எறும்புகளைப் போல சாரி சாரியாய் சென்று கொண்ட படியே இருப்பர் நீக்கித் தள்ள இடம் இருக்காது, எள் போட்டால் எண்ணெய் கூட ஆகிவிடும் என்பார்களே அது போன்ற பெரும் கூட்டம்...

Related image


ஆனால் எமது தமிழ் மண்ணர்கள் கர்நாடகம் சென்று வேண்டுமென்றே அந்த சரித்திர காலத்தில் கட்டப்பட்ட மடைகளை அணைகளை உடைத்து காவிரியை அதன் தடத்தில் ஓட விட வெற்றிக் கணை ஏந்துவாரகள் எனச் சொல்லும்  காலம் மலையேறிப் போக, ஓடுகிற நீரில் அடித்துச் சென்று விட‌

இன்று காவிரி வெறும் 35 அடிக்குள்ளான நீருடன் மேட்டூர் அணையில்...இதற்கும் மக்கள் கூட்டம் வரத்தான் செய்யும். ஆனால் அதைப்பார்க்க அந்த சோகத்தடத்தை அனுபவிக்க எனக்குத் திரானி இல்லை. அழுகை வந்து விடும்...மாலை வேளைதான் பெரும்பாலும் போவேன் உற்றார் வருவோருடன்...இந்த ஆடி 18க்கு நான் போகவே போவதில்லை..

Related image

எனது  மூத்த சகோதர சகோதரிகளுடன் குடும்பமாக கையை பிடித்துக் கொண்டு எங்கே கையை விட்டு விட்டால் தொலைந்து போய் விடுவானோ, என சிறுவர் சிறுமியரை மூத்தோர் மிக கவனமாக பிடித்தபடியே சென்றுகொண்டிருப்பர். அவ்வளவு கூட்டம். எனது சகோதரிகள் கை பிடித்து என்னைக் கூட்டிச் சென்ற அந்த தருணம் ...இன்னும் என்னுள் சுமையாக சுகமாக... அப்படியே நாட்கள் இருந்திருக்கக் கூடாதா? வளர்வதே குற்றம் என்ற ஒரு ஆங்கிலப் பழமொழி இருப்பது மிக உண்மை என உணரும் வண்ணம்  பல வருடம் ஆடி 18க்கு சென்று வந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது அழியாச் சித்திரமாக...ஆனால் ஒரு உண்மை ஓவியம் அழிந்து விட்டதே அரக்கர் கூட்டத்தினால்...

அப்போதெல்லாம் அணை மேலேயே ஏறிச் சென்று நடந்து பார்த்து விட்டு வரலாம் இப்போதுதான் அணைக்கு வெடிகுண்டு பயமுறுத்தல் என எட்டவே மக்களை நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்து விட்டார்கள். என்ன ஒரு வேலைப்பாடு...வாயால் சொல்லவே முடியாதே..அந்த 16 கண்மாய் விதானஙக்ளும், வளைவுகளும், கதவை இழுத்துப் பிடிக்கும் சங்கிலிகளும், அந்த தளவாடங்களும் அதன் அடியில் கட்டியிருக்கும் இராட்சத அளவிலான தொங்கிக் கொண்டிருக்கும் தேன்கூடுகளும்..

சுரங்க வழியில் சுழித்தபடி செல்லும் நீர்த் திரட்சியும் இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்ட அணையின் நேர்த்தியும், நீர் 120 அடிக்கும் மேல் நிரம்பும்போது இயல்பாகவே கதைவை மேல் எட்டி ததும்பி வெளியேறும் நீரின் குதியாட்டமும்...போச்சு எல்லாக் காட்சியும் போச்சு. அந்த கவர்னர் பங்களாவில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் அற்புதமான மின் சுழல் விசிறியும் பாராளுமன்றத்தில் நின்று கொண்டு திருப்பிய திசையில் இருந்து கொண்டு சுழலுமே அது போன்ற வகையிலான மின் விசிறி வடிவத்தில்...

Related image

ஏனைய கலைக்கூடப் பொருள்களும்...

வெளியூர் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் அதன் முன் இரவே வந்து அந்த புனித நதியில் விடியற்காலம் நீராடத் தங்கி விடுவார்கள்.. அந்த நிகழ்வெலாம் இனி இல்லை.

சுற்று வட்டக் கிராமங்களில் இருந்து எல்லாம் அவரவர் கோவில்களின் சாமி விக்கிரகங்களை எடுத்து வந்து புனித நீராட்டி, கத்தி, ஈட்டி, வேல்கம்பு, அரிவாள் போன்ற கருவிகளை எல்லாம் கழுவி பட்டை தீட்டி பொட்டு வைத்து எடுத்துச் செல்லும் நாளாக நினைத்ததெல்லாம் அந்தளவுக்கு இனி இருக்க வாய்ப்பில்லை...
Related image


என்றாலும் சில கோவில்களில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததை தொடர் வண்டியில் வரும்போது கவனித்தேன். எல் .ஆர்.ஈஸ்வரியின் குரல் இன்னும் ஒலித்தபடி இருந்தது...

நீரின் பேரோசை இல்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

7 comments:

  1. உண்மைதான் நண்பரே
    அந்நாள் ஆடி 18 போல்,
    இனி எக்காலத்தும் நிகழ வாய்ப்பேஇல்லை
    வேதனைதான் மிஞ்சுகிறது

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir.vanakkam

    ReplyDelete
  3. நீரின் பேரோசை இல்லை...
    - வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  4. அந்தக்கால ஆடிப்பெருக்கை திரைபடமாய் பார்ப்பதுபோல் உள்ளது! மீண்டும் அத்தகைய ஆடிப்பெருக்கைக்காண நதிகளையும் மக்களையும் மீட்க
    வேண்டும்!

    ReplyDelete
  5. thanks for your comment on this post Youngsun, vanakkam. please keep contact. best wishes and regards.

    ReplyDelete